• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,300
Reaction score
3,852
Points
113
நேரம் – 24 💜

தண்ணீர் போத்தலில் சாய்த்து வைத்திருந்த அலைபேசியை காணொளி இணைப்பில் இணைத்து தாயிடம் பேசிக் கொண்டிருந்த இசைவாணி ஒரே ரிதத்துடன் சற்று சோம்பலுடன் வெங்காயத்தை மெதுவாய் நறுக்கினாள்.

தான் ஒரு ஆளுக்கு சமைக்க வேண்டுமே என்ற சலிப்பு அவள் வேலையில் தென்பட்டது. ஆனால் சுந்தரி மகள் சரியான நேரத்திற்கு உண்கிறாளா என விசாரணை புலனாய்வு குழு போல கேள்விகளை அடுக்க, அவளால் தப்பிக்க முடியவில்லை. தனக்காக இல்லயெனினும் அந்தப் பெண்மணிக்காக நேரத்திற்கு சரியாய் சாப்பிட்டு விடுகிறாள்.

“ஃபேன் எதுவும் இருந்தா உள்ளே எடுத்து வச்சுக்கோ வாணி. ஏன் இப்படி வேர்க்குது உனக்கு?” சுந்தரி அவள் முகத்தில் வழிந்த வியர்வையைப் பார்த்து அதட்ட, புறங்கையால் அதை துடைத்துவிட்டாள் மகள்.

“ஐஞ்சு நிமிஷத்துல ஆம்லேட் போட்ருவேன்‌மா. இதுல ஃபேன் எல்லாம் எடுத்துட்டு வந்து வைக்க முடியாது!” என சலித்தாள் இசைவாணி. அவள் லண்டன் சென்று வேலையில் சேர்ந்து ஒரு மாதம் கடகடவென ஒட்டியிருந்தது. புது இடம், புது மனிதர்கள், அலுவலகத்திலும் யாரையும் தெரியாது என்பதால் நிறைய தடுமாறிப் போயிருந்தாள். திரும்பும் இடமெங்கும் பரிட்சயமில்லாத முகம் தென்படவும் ஒரு வித சோர்வு தன்னாலே ஒட்டிக்கொண்டு விட்டது.

அவள் நன்றாக ஆங்கிலம் பேசுவாள் என்றாலும் கூட இங்கே இவர்களது நுனி நாக்கு ஆங்கில உச்சரிப்பு வெகு நளினமாக இருந்தது. முதலில் புரிந்து கொள்ளத் தடுமாறி, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றிற்கும் தன்னைப் பழகிக் கொண்டிருக்கிறாள். கடந்த ஒரு மாதத்தில் ஒரு தமிழ் பேசும் ஆள் கூட இவளது கண்ணில் தென்படவேயில்லை என்பதுதான் பெரும் சோகம். அவளது அலுவலகத்தில் நிறைய இந்தியர்கள் பணிபுரகின்றனர். ஆனால் யாருக்கும் தமிழ் தெரியாது. இந்தி பேசும் மக்கள்தான் அதிகம். ஓரிரண்டு மலையாளி, தெலுங்கு மக்களை காண முடிந்தது. இங்கு வந்ததும் முதலில் ஜெட் லாக்தான் அவளுக்குப் பெரிய தலைவலியாக இருந்தது. இரவில் உறக்கம் வராமல் தவித்து, அலுவலகத்தில் சென்று உறங்கி மற்றவர்கள் முன்னே கூச்சப்பட்டு, சங்கடப்பட்டாள்.
இப்போது அவளது உறக்க சுழற்சி லண்டன் கால நேரத்திற்கு ஓரளவிற்குப் பழகிவிட்டது.

“வாணிம்மா... அங்க எல்லாரும் குட்டி குட்டியா ட்ரெஸ் போட்டிருப்பாங்களாமே. அது அங்க சகஜம். அதுக்காக நீயும் அப்படியெல்லாம் போட்டுட்டு திரியாத. அதெல்லாம் நமக்கு ஒத்து வராது. எப்பவும் போல சுடிதார் போடு. குளிர் காலம் வந்தா ஜாக்கெட் மேல போட்டுக்கோ” அவள் சென்றிறங்கிய நாள் முதல் இப்படியான பேச்சுக்களைத் தொடங்கிய சுந்தரி,

“ஆம்பளை பொம்பளை வித்யாசம் இல்லாம பசங்க கட்டிக் கட்டிப் பிடிச்சுப் பேசுவாங்களாம். நீ கொஞ்சம் தள்ளியே இருந்துக்கோ. மாப்பிள்ளை எதுவும் தப்பா நினைச்சுப்பாரு!” என அங்கிருக்கும் ஆட்கள் அப்படி இப்படி உணவு என்னவென தினமும் கேட்டு, மகளிடம் பரிதியை ஏதோவொரு வகையில் அவர்தான் நினைவுப்படுத்தினார்.

மற்றபடி அவன் நினைவை முற்றிலும் மனத்திலிருந்து துடைத்தெடுத்தெறிந்துவிட்டாள் இசைவாணி. அவன் குரலைக்
கூட கேட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. என்னவோ இப்போதுதான் நிம்மதியாய் அவளால் மூச்சு விட முடிந்தது. அங்கே அவன் வீட்டிலிருக்கும்போது எப்போதும் இவள் என்ன செய்கிறாள் என சந்தேகக் கண்ணோடு பார்த்து ஏதாவது காயப்படுத்திக் கொண்டே இருப்பான். அங்கே இருக்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. வேறு வழியில்லாமல் நாட்களை நெட்டித் தள்ளியவள், இங்கு வந்ததும் ஆசுவாசப் பெருமூச்சுவிட்டாள். தினமும் காலை மாலை தாயிடம் பேசிவிடுவாள். அப்படியே மாமியாருக்கும் அழைத்துப் பேசுவதை வழக்கப்படுத்தினாள். இல்லையில்லை, சுந்தரிதான் அவளைப் பழகச் செய்தார்.

லண்டன் சென்றதும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறைதான் சிந்தாமணிக்கு அழைத்துப் பேசினாள். இதையறிந்த சுந்தரி, “என் காலத்துக்குப் பிறகு மாமியார் வீடுதான் உனக்கு எல்லாம் வாணிம்மா. ஒழுங்கா தம்பிக்கிட்டே பேசும்போது உன் மாமியார்கிட்டேயும் நாலு வார்த்தைப் பேசு. அவங்க மூத்தவங்க, நீதான் என்ன ஏதுன்னு பேசணும். தள்ளி தள்ளிப் போகாத!” என மகளை அதட்டினார். அதனால் அவள் சிந்தாமணிக்கும் அழைத்துப் பேச வேண்டியதாகப் போயிற்று.

“ஏன் வாணி... கடைசியா எப்போ வீட்டுக்குத் தள்ளியிருந்த? இதை கேட்கணும் நினைச்சு மறந்துட்டேன். நீ வேற தனியா போய்ட்ட. நாள் தள்ளி கிள்ளிப் போயிருந்தா எப்படி தனியாளா அங்க சமாளிப்ப?” சிந்தாமணி அவள் அழைத்ததும் இப்படி கேட்டுவிட, இசைவாணி ஒரு நிமிடம் வாயடைத்துப் போனாள். பின்னர் தன்னை சமாளித்தவள், அது போல எதுவும் இல்லையென சங்கடத்துடன் கூறினாள்.

“கல்யாணமாகி‌ மூனு மாசம் ஆச்சே ஆத்தா. எனக்கெல்லாம் ரெண்டாம் மாசமே உன் புருஷன் நின்னுட்டான்!” என்றவர், “குழந்தை பெத்துக்குறதை தள்ளியெதுவும் போட்டிருக்கீங்களா என்ன?” என விசாரித்தார்.

அதற்கு என்ன பதில் கூறவது எனத் தெரியாமல் இவள் விழிக்க, “குழந்தைன்றது கடவுள் கொடுக்குற வரம் வாணி. நம்மளா அதை தள்ளிப் போட கூடாது. புள்ளை தங்கிடுச்சுன்னா பெத்து என்கிட்டே கொடு. பேரப் புள்ளையை வளர்க்குறதைவிட பெரிய வேலை என்ன கிடக்கு எனக்கு? சம்பாத்தியம் முக்கியம்தான். ஆனால் வயசு இருக்கப்பவே புள்ளை பெத்துக்குறதும் முக்கியம்!” முடிந்தளவு சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொடு என அவர் மறைமுகமாக அழுத்திக் கூற, இவளுக்கு அந்தப் பேச்சே பிடிக்கவில்லை. பல்லைக் கடித்துப் பொறுத்தவள், பின்னர் எல்லாவற்றிற்கும் சரியென தலையை அசைத்து அழைப்பைத் துண்டித்தாள்.
மீண்டும் ஒருமுறை சிந்தாமணி அந்தப் பேச்சை எடுத்தப் போது வெகுலாவகமாக அதை தவிர்த்துவிட்டாள். அவரும் இந்த விஷயத்தை ஆறப்போட்டு விட்டார்.

“வாணி... மாப்பிள்ளை எப்போ அங்க வருவாரு? நீ போய் ஒரு மாசம் ஆச்சே. பாவம் அவரும் நீ இல்லாம இங்க தனியா கஷ்டப்படுறாரு!” பேச்சினூடே சுந்தரிக் கேட்டதும்,

“ஹம்ம்... அவனுக்கு விசா அப்பளை பண்ணிட்டேன்மா. பயோமெட்ரிக்ஸ் முடிஞ்சாதான் விசா வரும். கொஞ்சம் டைமாகும்!” என்றாள் அசட்டையாய்.

“சரி.. சரி. நீ போய் சாப்பிட்டு தூங்கு. ரொம்ப சோர்வா தெரியுற!” இவர் கனிவுடன் கூற, அலைபேசியைக் கையிலெடுத்தவள்,

“அதெல்லாம் இருக்கட்டும். நீ ஏன்மா ரெண்டு நாளா ஒருமாதிரி டல்லா இருக்க. உடம்புக்கு என்ன பண்ணுது. நெக்ஸ்ட் வீக் சுகர் டெஸ்ட் எடுக்கணும் இல்ல. நான் கொடுத்த நம்பருக்கு கால் பண்ணா ஒரு அண்ணா கார்ல வருவாரு. அவரே ஹாஸ்பிடல்ல பிக்கப் அண்ட் ட்ராப் பண்ணிடுவாரும்மா. போய் சுகர், பீபி செக் பண்ணும்மா. சர்க்கரை எதுவும் சாப்பிடலை தானே?” எனக் கவலையாய் கேட்டாள் இசைவாணி. சுந்தரியை அங்கு தனியே விட்டுட்டு வந்ததில் இவளுக்கு மனதிற்குள் ஏக வருத்தம்.

“வாணிம்மா... சர்க்கரையை ஒரு பேச்சுக்கு கூட அம்மா கண்ல காட்டுறது இல்ல நான். ஒரு மாசத்துக்கே ஒரு லிட்டர் எண்ணெய்தான் சமையலுக்கு வாங்குனேன். நீ அம்மாவைப் பத்திக் கவலைப்படாத டா!” சுந்தரி கட்டிலுக்கு கீழே கால் நீட்டி அமர்ந்து தைலத்தை உள்ளங்கையில் ஊற்றி தன் முழங்காலில் தேய்த்தபடியே கமலா பதிலளித்தார்.

“என்னாச்சு கமலாம்மா... முட்டி வலி அதிகமாகிடுச்சா உங்களுக்கு? அம்மாவுக்கும் பார்க்கும்போது நீங்களும் டாக்டரைப் பாருங்க!” அவர் முகத்தைச் சுளித்ததும் இவள் அனிச்சையாய் அவரது காலைப் பார்த்துவிட்டுக் கூறினாள்.

“கால் வலி இப்போ பரவாயில்லை டா. பரிதி தம்பிதான் நான் தாங்கி தாங்கி நடக்குறதைப் பார்த்துட்டு ஏதோ நாட்டு மருந்து வாங்கிட்டு வந்தாரு. மூனு நாளா தேய்ச்சேன். வலியே தெரியலை, சுகமா இருக்கு!” என்றவர்,

“நீ இல்லாத குறையைத் தம்பிதான் தீர்த்து வைக்கிறாருடா. டெய்லி அரைமணி நேரமாவது வந்து பேசிட்டுத்தான் போவாரு. என்னமோ இந்த வீட்ல ஆம்பளை புள்ளை இல்லாத மாதிரியே தெரியலை. முதல்ல நான் கூட ரொம்ப விளையாட்டுத்தனமா இருக்காரேன்னு நினைச்சேன். ஆனால் பொறுப்பான புள்ளை. என்ன கொஞ்சமா அப்பப்போ என்கிட்டே வம்பிழுக்குறாரு. ஆனால் எனக்கு கால் வலின்னதும் உடனே போய் தைலம் வாங்கிட்டு வந்தாரு!” என்றவர் பரிதி புராணம் பாட, இவள் கடமைக்கு கேட்டு வைத்தாள்.

“அம்மாக்கு சுகர் டெஸ்ட் எப்போ எடுக்கணும்னு கேட்டாரு. அவரே ஆஸ்பத்திரி கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்காரு. நீ போனதும் நான் கூட அம்மாவை எப்படி தனியா ஆஸ்பத்திரி கூட்டிடுட்டு போவேன்னு பயந்தேன். ஆனால் தம்பி வரேன்னு சொல்லிட்டாரு!” விடாமல் அவன் துதி பாடினார் பெண்மணி.

“ஆமா வாணி.‌.. உன்னைப் பத்தி ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டே கிடப்பேன் நான். அதுக்குத்தான் நல்ல பையனை மருமகனா கொடுத்துட்டாரு கடவுளு. என்னையே இந்தளவுக்குப் பார்த்துக்கிறாரு. உன்னை அப்போ எப்படி தாங்குவாரு? இப்போலாம் உன்னைப் பத்தி நான் பெருசா யோசிக்கிறதே இல்ல டீ!” சுந்தரி முகம் மலர கூறினார். இசைவாணி சென்ற மறுநாளிலிருந்து பரிதி தினமும் மாமியாரைப் பார்க்க வந்தான். அவரிடம் சிரித்துப் பேசி இயல்பாக்கினான். இசைவாணியின் இடத்தை நிரப்ப முயன்றான். அவனுக்கும் அவளுக்கும் தனிப்பட்ட பிரச்சனைக்குள் பெரியவர்களை அவன் கொண்டுவரவில்லை.
சுந்தரியில் உடல்நிலை குறித்து வெகுவாக அக்கறை காண்பித்தான்‌, கண்டித்தான். கமலாவைக் கேலி செய்து வம்பிழுத்தான்‌. இப்படி அவனது இருப்பை அவர்களுக்கு வழங்கப்படுத்தினான்.

இனிப்பு மற்றும் எண்ணெயில் பொரிக்காத சத்து மிகுந்த நொறுக்குத் தீனிகளாகப் பார்த்து சுந்தரிக்கு வாங்கி வந்து கொடுத்தான். அவன் வாங்கி வந்த இனிப்பு குறைந்த சத்து மாவு லட்டு அவரது விருப்பப்பட்டியலில் இணைந்திருந்தது. அதை அறிந்தவன், இரண்டு மூன்று முறை வாங்கி வந்துவிட்டான்.

“என்ன தம்பி... சின்ன குழந்தைக்கு வாங்கித் தர மாதிரி வாங்கிட்டு வர்றீங்க?” சுந்தரி சங்கோஜத்துடன் மறுக்க,

“உங்கப் பொண்ணு வாங்கிட்டு வந்தா இப்படி கேட்பீங்களா? நான்னதும் வேணாம்னு சொல்றீங்க!” என அவன் உரிமையாகக் கோபம்கொள்ள, இவருக்கு மனம் நிறைந்தது. இடையே ஒரு ஞாயிற்றுக் கிழமை சரவணாவும் அற்புதாவும் வந்து சென்றனர். இசைவாணி இல்லாது அத்தை வருந்துவார் என்றெண்ணி அவர்கள் வந்து தங்கினர். பரிதியும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.

வீடே கலகலவென்றிருக்க, பெரியவர்களுக்கும் நேரம் போனது. இப்படி ஏதோ ஒரு வகையில் அவர்களிடம் அவன் அக்கறையும் பரிவும் காண்பிக்க, இரண்டு பெரியவர்களுக்கும் அவன் மீதான பிம்பம் மொத்தமும் மாறிப் போனது. மரியாதையுடனும் அன்புடனும் அவனை நடத்தினர். ஆனால் அவன் அதையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. வெகு இயல்பாக அவர்களுடன் ஒன்றிப் போனான். இதெல்லாம் சுந்தரியின் வாய்வழியாக இசைவாணி கேட்டுக் கொண்டாள். மற்றபடி தோண்டித் துருவி விசாரிக்கவில்லை. தாயிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள், சிந்தாமணியிடமும் பேசினாள்.

வயிறு கபகபவென பசிக்க, ஆம்லேட் ஆறிப் போயிருந்தது. மதியம் வைத்த சாதத்தில் ரசத்தை ஊற்றிக்கொண்டு வந்து கூடத்தில் அமர்ந்தாள. அது இருபடுக்கையறைக் கொண்ட வீடு. இவளும் பெங்காலி பெண் ஒருத்தியும் இந்த வீட்டைப் பகிர்ந்திருக்கின்றனர். அந்தப் பெண் மருந்தியலில் முதுகலை இங்கேயே படித்துவிட்டு, ஒரு தொழில்சாலையில் பணிபுரிகிறாள். அவளது காதலனும் அங்குதான் வேலை செய்கிறான். ஒரிரு முறை இங்கு வந்ததும் சென்றிருக்கிறான். இந்தியா போல அங்கு யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் மூன்றாவது நபர் நுழைய முடியாது. அவன் இங்கு வந்து தங்கி
ச் சென்றதைக் கண்டும் காணாமலும் கடந்துவிட்டாள் இசைவாணி.
 
Administrator
Staff member
Messages
1,300
Reaction score
3,852
Points
113
தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள். அங்கே பெரிதாய் ஒலியலை வரிசை எதுவும் இல்லை. இருந்த ஒன்றிரண்டு சர்வதேச தமிழ் ஒலியலையிலும் பரபரப்பாய் மாமியார் மருமகள் சண்டையோடு தொலைக்காட்சி தொடர்கள் ஒலிபரப்பாக, இவள் சலித்துவிட்டு அலைபேசியை இணைத்துப் பாடலை போட்டுவிட்டு உண்டாள். இவள் சாப்பிட்டு முடித்ததும், அறைத் தோழி நம்ருதா உள்ளே வந்தாள். மெல்லிய தடுமாற்றம் அவள் நடையில் தெரிந்தது. அவள் குடித்திருக்கிறாள் என்பதை உணர்ந்த இசைவாணி படக்கென எழுந்து சென்றுவிட்டாள். என்னவோ அவளுக்கு குடிப்பவர்களை, புகையிலை பிடிப்பவர்களைக் கண்டாலே இயல்பாகவே ஒருமாதிரி வெறுப்பு உண்டானது. அதனாலே அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

என்னதான் ஒரே வீட்டைப் பயன்படுத்தினாலும் இருவரும் தேவைக்கு மட்டுமே பேசினர். அந்தப் பெண்ணும் இவள், தன் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடாதவரை நன்று என்றெண்ணி ஒதுங்கி கொண்டாள். அறையைத் தவிர்த்து, சமையலறை, கூடம், துவைக்கும் இயந்திரம் என எல்லாமே பொதுவானதுதான்.

ஆனால் நம்ருதா ஒருநாள் கூட சமையல் கூடத்தை எட்டிப் பார்த்தது இல்லை. பெரும்பாலும் வெளி உணவுகள்தான். இல்லையென்றால் இன்ஸ்டன்ட் மேகி, பாஸ்தா, ரொட்டி, இறைச்சி வகைகள் என எதையாவது அவ்வப்போது துரித கதியில் சமைத்து உண்பாள். இசைவாணிக்கு அவள் பயன்படுத்திய சமையலறைக்குள்ளே நுழையவே பிடிக்காது.

சுத்தம் என்ன விலையெனக் கேட்கும் பெண்ணோடு தங்க நேர்ந்ததை எண்ணி அவளுக்கு கடுப்புதான். ஆனால் அவள் அலுவலகத்திலிருந்து குடியிருப்பு பத்து நிமிடத் தொலைவு என்பதால் பொறுத்துப் போகிறாள். இவள்தான் கூடத்தையும், சமையலறையையும் பளபளவென துடைத்து வைப்பாள்.

இசைவாணி குடிவரும்போது வீடே அசுத்தமாய் கிடந்தது. இவள் வந்தப் பிறகுதான் ஓரளவிற்கு எல்லாம் சரியாய் இருக்கிறது. வேறு நல்ல வீடு அருகே எங்கேயும் கிடைக்குமா எனத் தேடிக்கொண்டுதான் இருக்கிறாள். அப்படி கிடைத்துவிட்டால் மாறிக் கொள்ளலாம் என்றெண்ணமும் இருந்தது.

ஓரளவுக்கு வயிறு நிரம்பும் அளவிற்கு உண்டதும் வாணிக்கு கண்கள் சொக்கின. உடல் உழைப்பை உறுஞ்சும் வேலையில் அவளது அலுவல் சேராது. மூளையே சோர்ந்து போகுமளவிற்கு வேலை நெட்டி முறித்தது. அதுவும் இந்த ஏ.ஐ யுகத்தில் மனிதனோடு மட்டும் அல்லாது இயந்திரங்களோடு போட்டிப் போட வேண்டியதாயிருக்க, சோர்ந்து போனாள். படுத்ததும் உறங்கிப் போனாள்.

***

மகளிடம் பேசிவிட்டு அன்றைய பொழுதை நெட்டி முறித்த சுந்தரிக்கு இரண்டு நாட்களாக சத்திர சிகிச்சை செய்த இடத்தில் வலியும் வீக்கமும் கண்டிருந்தது. லேசாய் நீர் கோர்த்தது போல தெரிய, முக்கால்வாசி ஆறிப் போன புண்ணில் குளிக்கும்போது நீர் பட்டு அப்படியாகியிருக்க கூடுமென எண்ணி, மருத்துவமனைக்கு அழைத்த கமலாவிடம் மறுத்துவிட்டார் பெண்மணி.

“எதுக்கெடுத்தாலும் ஆஸ்பத்திரிக்கு கூப்பிடாத கமலா. வர வர நீயும் வாணி மாதிரியே மாறிட்டு வர்ற. இப்போதானே அங்கருந்து வந்திருக்கோம். மறுபடியும் அங்கேயே போகணுமா?” இவர் முகத்தைச் சுளித்து அதட்டினார். அவரும் அதற்குப் பின்னே மருத்துவமனை அழைக்கவில்லை. ஆனால் சுந்தரிக்கு அவ்வப்போது லேசாக மூச்சு வாங்கியது, உணவு உண்ண முடியவில்லை. வீக்கம் இப்போது நன்றாய் வெளியே தெரியுமளவிற்கு பெரிதாகியிருந்தது‌.

இரவுணவை முடித்துவிட்டு காலாற நடிந்தவர், வலி மட்டுப்படவில்லை எனில் காலை மருத்துவரை சந்திக்கலாம் எனப் படுக்கச் சென்றார். மெத்தையில் படுத்த சில நிமிடங்களிலே அவருக்கு மூச்சு விடுவது வெகுசிரமமாக இருந்தது. நெஞ்சுக்குள்ளே சுறுக்கு சுறுக்கென வலி தோன்ற, உடல் வெப்பநிலை மெல்ல உயர்ந்தது போல. இதற்கு மேலும் தாமதிக்க கூடாது என்றெண்ணியவர், கமலா என அழைத்தார்.

கமலா கையில் பால் குவளையோடு நுழைந்தார். “பாலைக் குடிங்கம்மா... நான் ஜக்குல தண்ணி புடிச்சிட்டு வரேன்!” என அவர் தன் போல கூற, மெதுவாய் எழுந்தமர்ந்தார் சுந்தரி.

“கமலா... நெஞ்சு வலி அதிகமாகிடுச்சு. வீக்கம் கூட பெருசாகிட்டே போகுது. டாக்ரைப் போய் பார்த்துட்டு வரலாமா?” என்றார் திணறலாய்.

கமலா பதறி அவரருகில் வந்தவர், “ரொம்ப வீங்கிடுச்சாம்மா?” எனக் கேட்டு சேலையை விலக்கிப்‌ பார்த்தவர் அதிர்ந்து போனார்.

“என்னமா இப்படி வீங்கிருக்கு? எப்படி இதோட நீங்க இருந்தீங்க? ரொம்ப வலிக்குதா? நான் போய் பரிதி தம்பிக்கு கால் பண்றேன். அவர் வந்ததும் ஆஸ்பத்திரி போகலாம்!” என்ற கமலா பேச்சோடு பரிதி இலக்கத்திற்கு அழைத்துவிட்டார்.

அறையின் புழுக்கம் தாளாமல் ஜன்னல் கதவை திறந்து விட்டான் பரிதி. தூறல் வருவதற்கு அறிகுறியுடன் வானம் கருத்துப் போயிருக்க, குளுகுளுவென்றிருந்தது காலநிலை. இவன் வெறுமனே ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்து நிற்க, அலைபேசி இவனை அழைத்தது.

“என்ன கமலாக்கா... எதுவும் ப்ராப்ளம் இல்லையே!” இந்நேரத்தில் அவர் கூப்பிட்டதும், இவனது புலன்கள் கூர்மை பெற்றன.

“தம்பி... அம்மாவுக்கு நெஞ்சு வலிக்குதுன்னு சொல்றாங்க. ஆப்ரேஷன் பண்ணி தையல் போட்ட இடம் வீங்கி போச்சு. உடம்பு வேற சுடுது. நீங்க வந்தீங்கன்னா ஆஸ்பத்திரி போகலாம்!” அவர் படபடவென கூற,

“டூ மினிட்ஸ் கா. இதோ வரேன்!” என்றவன் கால்சராயை மாற்றிவிட்டு விறுவிறுவென வெளியே சென்றான்.

மற்றவர்கள் படுத்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் வெளியே செல்ல, “இந்த நேரத்துல எங்கடா போற?” என மார்த்தாண்டம் கேட்க, சிந்தாமணி மகனைக் கேள்வியாகப் பார்த்தார்.

“ப்பா... அத்தைக்கு நெஞ்சு வலிக்குதாம். நான் என்னென்னு பார்த்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன். நீங்க எனக்காக வெயிட் பண்ண வேணாம்!” என்றவன் விரைந்து காலணியை மாட்டினான்.

“நானும் வரவா டா?” மார்த்தாண்டம் கேட்டு எழ முயன்றார்.

“அப்பாவை கூட கூட்டிட்டு போடா!” சிந்தாமணி கூற, அவன் மறுத்துக் கிளம்பினான். நடந்து கொண்டே தனக்குத் தெரிந்த மகிழுந்து ஓட்டுநருக்கு அழைத்து வரப் பணித்தான்.

இவன் செல்ல, சுந்தரி மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். கமலா என்ன செய்வது எனத் தெரியாமல் கையைப் பிசைய, “ஆன்ட்டி... என்னாச்சு?” என்றவாறே சென்றவன்,

“கமலாக்கா... கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாங்க!” என அவரை அனுப்பிவிட்டு பெரியவரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து கூடத்தில் அமர்த்தினான். அவருக்கு நீரைப் புகட்டி ஆசுவாசம் செய்தான்.

“ஆன்ட்டி... மெதுவா மூச்சை இழுத்து விடுங்க. ரொம்ப கஷ்டப்படாதீங்க. ஜஸ்ட் சீசனல் ஃபீவர் ஆர் இன்ஃபெக்ஷனா கூட இருக்கலாம். பயப்படாதீங்க. நான் காரை வரச் சொல்லிருக்கேன். பத்து நிமிஷத்துல ஹாஸ்பிடல் போய்டலாம்!” என அவரது வெளுத்த முகத்தைப் பார்த்து தைரியம் கூறியவன்,

“அக்கா... நீங்க போய் ஆன்ட்டியோட ஸ்கேன் ரிப்போர்ட்ஸ், சர்ஜரி பண்ண டீடெயில்ஸ், முன்னாடி பண்ண டெஸ்ட் ரிசல்ட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வாங்க. எப்படியும் டாக்டர் கேட்பாங்க!” என்றவன், எல்லா விளக்கையும் அணைத்துவிட்டு வீட்டுச் சாவியைக் கையில் எடுத்தான். மறக்காமல் சுந்தரியின் அலைபேசியையும் எடுத்துக் கொண்டான்.

மகிழுந்து சப்தம் கேட்டது. “ஆன்ட்டி... உங்களால நடக்க முடியுமா? வாங்க, என் கையை சப்போர்டுக்குப் பிடிச்சுக்கோங்க...” என நடத்திக் கூட்டிச் சென்றான். கமலா வீட்டைப் பூட்டிவிட்டு வர, மூவரும் மருத்துவமனை சென்றனர். மழை அடித்துப் பெய்தது. பத்து நிமிட பயணம், இருபது நிமிடங்களானது.

சுந்தரி எப்போதும் பார்க்கும் மருத்துவர் இல்லை. வேறொரு ஆண் மருத்துவர் இருந்தார். பரிதி விவரங்களை கூறி சுந்தரியின் மருத்துவ அறிக்கை மொத்ததையும் கொடுத்தான். உடனே சுந்தரி உள்நோயாளி பிரிவில் அனுமதிக்கப்பட, சிகிச்சைத் தொடங்கியது.

“நான் முந்தா நேத்தே சொன்னேன் தம்பி... அம்மா கேட்கவே இல்ல. இப்போ பாருங்க... தையல் போட்ட இடம் ரொம்ப வீங்கிப் போச்சு...” கமலா புலம்ப, இவனுக்கு திக்கென்றானது.

“ஏன்கா... நான் வந்தப்போ என்கிட்ட சொல்லிருக்கலாம் இல்ல. நான் அவங்களை கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு போய்ருப்பேனே...” என அவரைக் கடிந்தான்.

“இல்ல தம்பி... அம்மா அதைப் பெருசா எடுத்துக்கலை. நானும் சரியாகிடும்னு விட்டுட்டேன்...” என்றவர் குரலில் கலக்கம் தெரிந்தது. அவரை சமாதானம் செய்து தேநீர் வாங்கிக் கொடுத்தான். இரண்டு மூன்று மணி நேரம் கடந்துவிட, இடையில் இருமுறை அவன் வீட்டிலிருந்து அழைப்பு வந்துவிட்டது. அவர்களிடம் பேசிவிட்டு வைத்தான்.

நள்ளிரவில்தான் மருத்துவர் வந்தார். “பேஷண்ட் சுந்தரிக்கு வந்திருக்கது பெரிகார்டியல் எஃப்யூஷன், அதாவது இதயத்தை சுத்தி நீர் கோர்க்குறது. ரொம்ப ரேர் இது. சர்ஜரி முடிஞ்சதும் ஆயிரத்துல ஒருத்தவங்களுக்குத்தான் வரப் வாய்ப்பிருக்கு. அவங்களுக்கும் அதே கம்ப்ளைண்ட்தான்!” என அவர் கூறியதும், இவர்கள் இருவரும் பதற்றத்துடன் மருத்துவரைப் பார்த்தனர்.

“டோன்ட் வொர்ரீ... ஷீ இஸ் அவுட் ஆஃப் டேஞ்சரஸ். அந்த தண்ணியை கெத்தீட்டர் மூலமா உறுஞ்சி எடுத்தாச்சு. ஆன்ட்டி இன்ப்ளமேட்டரி மெடிசின் கொடுத்திருக்கோம். டூ த்ரீ டேய்ஸ் அப்சர்வேஷன்ல இருக்கட்டும். மறுபடியும் நீர் கோர்க்குதான்னு பார்க்கணும். நீர் இல்லைன்னா அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். பட் இனிமே கேர்லெஸ்ஸா இருக்காதீங்க. வேற ஏதாவது சிம்ப்டம்ஸ் தெரிஞ்சா உடனே ஹாஸ்பிடல் வந்துடுங்க. ஏன்னா அவங்க ஏஜூக்கு காம்ப்ளிகேஷன்ஸ் அதிகம் வரலாம். கேர் ஃபுல்லா பார்த்துக்கோங்க!” நம்பிக்கையும் அளித்து கண்டிப்போடு பேசினார்.

“டாக்டர்... இப்போ போய் அவங்களை நாங்க பார்க்கலாமா?” கமலா கேட்க,

“ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்திருக்கோம். நீங்க போய் பார்த்தா இன்ஃபெக்ஷன் வர வாய்ப்பிருக்கு. சோ மார்னிங் பார்த்துப் பேசுங்க...” என அவர் அகல, இவர்கள் இருவரும் நிம்மதியுடன் அமர்ந்துவிட்டனர்.

“அக்கா... நீங்க தூங்குங்க. நான் முழிச்சிருக்கேன். எமர்ஜென்சின்னா பார்த்துக்கிறேன்!” என அவரை உறங்கச் சொல்லியவன் அலைபேசியை சிறிது நேரம் பார்த்திருந்தான். பின்னே வராந்தாவில் நடந்தான். காலை ஆறு மணியானதும் அவன் கால்சராயிலிருந்த சுந்தரியின் அலைபேசி இசைத்தது.

வாணிதான் அழைத்திருந்தாள். இரவே ஒருமுறை சுந்தரிக்கு அழைத்து அழைப்பு ஏற்கவில்லை என்றதும் அவர் உறங்கியிருப்பார் என விட்டுவிட்டாள். ஆனால் மனத்தில் என்னவோ சொல்ல முடியாத ஒரு தவிப்பு. அதனாலே ஆறு மணிக்கு மீண்டும் அழைத்துவிட்டாள்.

“ஹலோ...” பரிதியின் குரல் கேட்டதும் திடுக்கிட்டுப் போனவள்,

“அம்மா எங்க... இந்த டைம்ல அவங்க ஃபோன்லருந்து நீ ஏன் பேசுற?” என படபடத்தாள்.

“ஆங்... உங்கம்மாவைக் கடத்திட்டுப் போய்ருக்கேன்!” இவன் எரிச்சலாக பேச, கமலா விழித்துவிட்டார்.

“விளையாடத பரிதி. அம்மா எங்க, என்னாச்சு அவங்களுக்கு?” பதற்றம் மேவ கேட்டாள் அவள்.

“அக்கா... இந்தாங்க.. உங்க செல்ல பொண்ணுத்தான் பேசுறா. பேசுங்க, நான் போய் டீ வாங்கிட்டு வரேன். தலை வலிக்குது!” மெல்லிய குரலில் கூறி அவன் அகல, அதற்குள்ளே கமலாம்மா என இருமுறை அழைத்துவிட்டாள் அவள்.

“வாணிமா...‌பதறாதா டா. அம்மா நல்லா இருக்காங்க...” என்றவர் இரண்டு நாட்களாக அவருக்கு சின்னதாய் தொந்தரவு இருந்தது முதல் நேற்றிரவு மருத்துவர் கூறியதுவரை அனைத்தையும் விளக்கி, சுந்தரி தற்போது நலமாக இருக்கிறார் என அழுத்திக் கூறியும், இசை வாணியின் கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது.

“பொய் சொல்லலை தானே கமலாம்மா... அம்மா நல்லா இருக்காங்க தானே?” அவள் சிறு கேவலுடன் கேட்க,

“அட... பாப்பா அழாத டா. நிஜமா அம்மா நல்லாருக்காங்க...” இவர் அவளை சமாதானம் செய்ய,

‘அழறதை தவிர வேறென்ன தெரியும் உங்க வீட்டுப் பொண்ணுக்கு!’ என நினைத்த பரிதி, “நீங்க டீ குடிங்க கமலாக்கா. நான் அவகிட்டே பேசிக்கிறேன்...” என அலைபேசியோடு வெளியே சென்றான்.

“எதுக்கு இப்போ ஒப்பாரி வைக்கிற நீ?” இவன் எரிச்சலாக,

“அவங்க என் அம்மா!” என்றாள் அடைத்தக் குரலை சரிசெய்து.

“ச்சு... நான் மட்டும் என் அம்மான்னா சொன்னேன். அவங்க நல்லாருக்காங்க. இது போஸ்ட் சர்ஜரி காம்ப்ளிகேஷன். ரேரா வரலாம். பட் ஷீ இஸ் ஃபைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அவங்க கண் முழிச்சதும் நானே கால் பண்ணித் தரேன்!” என்றவன், அவள் பதிலை எதிர்பாராது துண்டித்துவிட்டான். அடுத்த அரைமணி நேரத்திற்கு ஒருமுறை இசைவாணி அழைக்க, கடுப்பானவன் அவள் அழைப்பை ஏற்கவில்லை.

பத்து மணி போல சுந்தரி எழுந்ததும் அவளிடம் பேச வைத்தான். தாயைக் காணொளி அழைப்பில் பார்த்து அவரது நலத்தை தன் புலன்களால் உறுதி செய்தவள், பின்னர்தான் அமைதியானாள். பரிதி வீட்டிற்குச் சென்று குளித்து உடை மாற்றி அவர்களுக்கு உணவோடு செல்ல, சிந்தாமணியும் அவனுடன் வந்தார்.

“ஏன்டா.. உன் மாமியாருக்கு என்ன அடிக்கடி உடம்பு முடியாம போகுது. சரியான சீக்காழி பொம்பளையா இருக்கும் போல. நீ லண்டன் போய்ட்டேனா எப்படிடா அந்தம்மா தனியா சமாளிக்கும்!” மருத்துவமனை செல்லும் வழியில் சிந்தாமணி கேட்க,

“ஏன்மா... நாளைக்கு உனக்கு ஒன்னுன்னா என் பொண்டாட்டி பார்க்க மாட்டாளா? அவதானே உங்களைப் பார்ப்பா. நாங்க இல்லாதப்போ நீ அவங்கம்மாவைப் பார்த்துக்கோ!” என இவன் கூற, அவர் அங்கலாய்த்தார். சுந்தரியை நலம் விசாரித்து உணவுகொண்டு வந்தப் பாத்திரங்களை எடுத்துச் சென்றார் சிந்தாமணி.

இசைவாணி சரவணனுக்கு அழைத்து விஷயத்தைப் பகிர, காமராஜ் தமக்கையை பார்க்க வந்து கடிந்து கொண்டார். இரண்டு நாட்கள் மருத்துவ கண்காணிப்பு முடிந்து சுந்தரி வீட்டிற்கு அழைத்து வர, “ஒரு ரெண்டு மாசம் வீக்லி செக்கப் வாங்க. பாலோ அப் பண்ணிக்கலாம்!” என்று மருத்துவர் அறிவுறுத்தியிருக்க, சரியென விடை பெற்றனர். பரிதிதான் வேலைக்கு இருநாட்கள் விடுப்பெடுத்து மாமியாரைப் பார்த்துக் கொண்டான்.

மருத்துவமனைக்கு பணம் கட்ட அவன் சிரமப்பட, “அவர்கிட்டே காசு இருக்காது சரோ. என்கிட்டே கேட்க சங்கடப்படுவாரு‌. நான் பணம் அனுப்புறேன். நீ ஹாஸ்பிடல் பில் பே பண்ணிடு!” என சின்னவனிடம் பணம் கொடுத்து வேலையை முடித்தாள் இசைவாணி.

பரிதியும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. அவனாலுமே அவ்வளவு பணத்தை குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்ய முடியவில்லை. அதனாலே சரியென்றுவிட்டான். சுந்தரி நலமுடன் வீடு திரும்ப, அடுத்த ஒரு மாதத்திற்கு இவன்தான் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்று பார்த்துக் கொண்டான்‌. சுந்தரியும் கமலாவும் இவனைப் பற்றிய ஒவ்வொன்றையும் மகளிடம் பகிர, இசைவாணியால் முன்பு போல அதை அசட்டை செய்ய முடியவில்லை.

தனக்கும் அவனுக்கும் பிணக்கிருப்பினும், தன் தாயை அவன் அக்கறையுடன் கவனித்துக் கொண்டதில் கொஞ்சம் மனம்‌ இளகி புலனத்தில் அவனுக்கு நன்றியை செய்தியாக அனுப்ப, அவன் பார்த்துவிட்டு பதிலளிக்கவில்லை.

இரண்டு நாட்கள் கடந்ததும் அழைத்துவிட்டான். இசைவாணி ஒரே அழைப்பில் ஏற்றுவிட்டாள். “சொல்லு பரிதி... அம்மா ஓகே தானே?” அவள் கேட்டதும்,

“இது ஆன்ட்டியைப் பத்தி இல்ல. அவங்க நல்லாருக்காங்க. எனக்கு எப்போ வி.எப்.எஸ் வரும். விசா வந்தாதான் நான் அங்க வர முடியும். நான் வாங்குற சம்பளத்துல லோன் வட்டிக்கே பாதி போய்டுது!” என்றான் சலிப்பாக.

“நெக்ஸ்ட் மந்த் போலத்தான் டேட் அவைளபிலா இருந்தது. நான் ரெண்டு மூணு டேட் எடுத்திருக்கேன். எப்படியும் ஏதாவது ஒரு டேட் வந்துடும். உன் மெயில் செக் பண்ணிட்டே இரு!” என்றாள் அவள்.

“ஹம்ம்...” அவன் கூற, “வேற எதுவும் இல்லை தானே? நான் கட் பண்றேன்!” என அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவள் படக்கென அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

சுந்தரிக்கு உதவி செய்தான் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும்தான் பரிதியிடம் முகம் கொடுத்துப் பேசுகிறாள் இசைவாணி. அவனுக்கு நுழைவு இசைவு வந்ததும் விவாகரத்திற்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டுமென மனத்தில் உருப்போட்டாள். அவன் அலைபேசியை முறைத்துப் பார்த்தா
ன். எப்படியும் இன்னும் இரண்டு மூன்று மாதங்களை நெட்டித் தள்ள வேண்டுமே என்ற சலிப்புடன் அலுவலகம் கிளம்பினான்.

தொடரும்


 
Top