• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,297
Reaction score
3,840
Points
113
நேரம் – 22 💜

“நானே போய்ட்டுத் தனியா வந்துடுவேன் பரிதி. நீ கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்குறதுன்னா எடு. இல்லைன்னா உன் ப்ரெண்ட்ஸை போய் பாரு!” என்ற இசைவாணி எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தின் பின்பக்க படிகளில் இறங்கி வெளியே வந்தாள். தோளில் சின்னதாய் கைப்பை ஒன்று தொங்கியது. மற்றபடி பரிதிதான் இருவரது பயணப்பொதியை சுமந்து வந்திருந்தான்.

“இவ்வளோ தூரம் வந்துட்டேன்.‌ அப்படியே உன்னை தேனாம்பேட்டைல விட்டுட்டு அங்கருந்தே பாரிஸ் போறேன்...” அவன் கூற,

“தலையை சுத்தி மூக்கைத் தொடு நீ. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கதான். நான் சுத்தாத இடமே இல்ல. அப்படியும் கூட வருவேன்னு சொன்னா உன் இஷ்டம்” எனத் தோளைக் குலுக்கியவள், அந்த நடுத்தர தங்கும் விடுதிக்குள் நுழைந்தாள்‌.

“சிங்கிள் ரூம் வேணும்!” எனக் கேட்கவும், வரவேற்பாளினி விவரங்களைப் பகிர்ந்தாள்.

பணத்தைக் கொடுத்த இசைவாணி, அந்தப் பெண் இவளது பெயரைக் கேட்க, “மிஸஸ்‌.இசைவாணி இளம்பரிதி!” என்றாள் இயல்பாக. அவள் பெயரோடு தன் பெயரை உச்சரித்ததும் படக்கென திரும்பி பார்த்தான் அவன். அவள் இவனைக் கவனிக்கவில்லை போல. சாவியைக் கையில் வாங்கிவிட்டு வேறெதுவோ கேட்டாள். நறுக்கென மிக மெல்லியதாய் அவள் கையில் கிள்ளி வைத்தான் பரிதி.

“என்ன பண்ற பரிதி. எதுக்கு கிள்ளுற?” எனக் கடிந்தவள், அறையை நோக்கி நடந்தாள்.

“என் பேரை எதுக்கு மிஸஸ் சொல்லி உன் பேரோட சேர்த்த?” என முகத்தைச் சுளித்தான் அவன்.

“இப்போ ஏன் முகத்தை தூக்குற? இந்த ரெண்டு வருஷத்துக்கு நீயே நினைச்சாலும் இதை மாத்த முடியாது‌.‌ லீகலா மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணிட்டோம். சோ, சட்டபடி நீ என் புருஷன்!” கேலியாக கூறியபடியே அறையைத் திறந்தாள். சென்ற வாரம்தான் சார் பதிவாளர் அலுவலகம் சென்று இருவரும் தங்களது திருமணத்தை பதிவு செய்து வந்தனர்.

“மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ண வேணாம் இசைவாணி. அப்புறம் அக்ரீமெண்ட் முடிஞ்சதும் டிவோர்ஸ் வாங்க கோர்ட்டுக்கு அலையணும்!” இவன் மறுத்துக் கூற,

“உனக்கு ஸ்பௌஸ் விசா எடுக்கணும்னா மேரேஜ் சர்டிஃபிகேட் முக்கியம். அப்படியும் உனக்கு ரிஜிஸ்டர் பண்ண விருப்பம் இல்லைன்னா, விசா ரிஜெக்டாகிடும். உன் இஷ்டம்!” என இவள் தோளைக் குலுக்க, அவனுக்கு வருத்தமானது.

தங்கள் இருவர் மட்டுமாக இந்த திருமண ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளலாம் என எண்ணியிருந்தான். ஆனால் இப்படியொரு விஷயம் இருக்குமென அவன் எண்ணியிருக்கவில்லை.
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டேதான் சார்பதிவாளர் அலுவலகம் சென்றான்.

“அவ்வளோ ஃபீல் பண்ற அளவுக்கெல்லாம் ஒன்னுமே இல்ல பரிதி. ஜஸ்ட் ரிஜிஸ்ட்ரேஷன் ஒன்லி. மத்தபடி உன்னோட வாழத்தான் இப்படி பண்றேன்னு பயப்படாத. அந்த ஐடியா எனக்கு ஒரு பெர்சன்ட் கூட கிடையாது. அண்ட் மைண்ட் திஸ், உன் விசாக்காகத்தான் லீகலா ரிஜிஸ்டர் பண்றோம். சோ, வேணாம்னா இப்போ கூட கிவ் அப் பண்ணிடலாம்” என்றாள் அழுத்தமாக.

“ப்ம்ச்... அதெல்லாம் இல்ல வாணி. ஏற்கனவே இந்தக் காலத்துல பொண்ணு கிடைக்கிறது கஷ்டம். இதுல நான் டிவோர்சின்ற பேர்ல இருந்தா யார் என்னைக் கல்யாணம் பண்ணிப்பா. என்னதான் நான் நல்ல வேலை, சம்பளம் வெளிநாடுன்னு இருந்தாலும் நான் ஒரு செகண்ட் ஹேண்டா தெரிவேன் எல்லாருக்கும். எனக்கு அது சுத்தமா பிடிக்காது. எனக்கு வரப்போற வொய்ப் எனக்கே எனக்குன்னு இருக்கணும். அதே மாதிரி அவளும் என்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணுவா இல்ல?” என வருத்தமான குரலில் கேட்டான்.

அவனைத் திரும்பிப் பார்த்து பெருமூச்சுவிட்டவள், “கவலைப்படாத பரிதி. இந்த ரெண்டு வருஷம் இல்ல அதுக்கப்பறமும் உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா என்கிட்ட கூட்டீட்டு வா. நான் நமக்குள்ள நடந்த அக்ரீமெண்ட் மேரேஜ் பத்தி சொல்லிடுறேன். சோ அந்தப் பொண்ணுக்கு உன் கூட வாழும்போது எந்த உறுத்தலும் இருக்காது. நீயே உன்னை டீக்ரேட் பண்ணிக்காத!” என்றாள் சமாதானக் குரலில்.

“நிஜமா சொல்வீயா வாணி? என் மேல இருக்க கோபத்துல ஒன்னுக்கு ரெண்டா போட்டு விட்ற மாட்டல்ல? என் வாழ்க்கைப் பிரச்சனைம்மா இது...” பாவமாய் அவளைப் பார்த்தான்.

அதில் சிரித்தவள், “அப்படிலாம் பண்ண மாட்டேன் பரிதி. எனக்குத்தான் ஃபேமிலி, மேரேஜ்னு எந்த கமிட்மெண்டும் பிடிக்கலை. பட், நீ அப்படியில்ல. உன்னை மாதிரியே அழகான பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணி அழகழாக ரெண்டு புள்ளைங்க பெத்துக்கணும்னு ஆசையா இருக்க. உன் வாழ்க்கையாவது நீ நினைச்ச மாதிரி அமைய வேணாமா?” எனக் உண்மையான அக்கறையுடன் கேட்டவளின் கையைப் பிடித்தவன்,

“தேங்க் யூ சோ மச் இசைவாணி. நீ சொல்லும்போதே கேட்க அவ்வளோ இனிப்பா இருக்கு. சீக்கிரம் கடனைக் கட்டுறேன். அப்புறம் நல்ல பொண்ணா பார்த்து தேடி மேரேஜ் பண்ணி லைஃபை என்ஜாய் பண்றேன்!” என்றான் உற்சாகத்துடன். இவள் முறுவலித்தாள். இருவரும் கையெழுத்திட்டு அந்தப் பேச்சை அப்போதே முடித்துக் கொண்டனர். அதற்கடுத்த வாரம் ஓடிவிட, சான்றிதழ் சரிபார்ப்பிற்காக சென்னை வந்துவிட்டனர்.

“ஏன் இசைவாணி, சென்னைல தானே பொறந்து வளர்ந்த. இங்க உனக்கு நிறைய சொந்தக்காரங்க இருப்பாங்கல்ல. ஏன் அங்கெல்லாம் போகாம, ரூம் எடுத்த?” தன் சந்தேகத்தைக் கேட்டான்.

“அவங்க யாரும் வேணாம்னு தான் சென்னைலருந்து பொள்ளாச்சி வந்தோம் பரிதி. யாரைப் பத்தியும் பேசாத. எனக்கு விருப்பமில்ல!” என முடித்தவள், பற்பசையை பையிலிருந்து தேடியெடுத்து பல்லைத் துலக்கினாள். பரிதி அதற்குள்ளே குளித்து வர, அவளும் குளித்து அங்கேயே உடைமாற்றி வந்தாள். இந்த ஒன்றரை மாதக் காலத்தில் இருவரும் ஒருவரையொருவர் பழகியிருந்தனர்.

ஒரே அறையைப் பகிர்வதிலிருந்த முதற்கட்ட சங்கடம் கரைந்து போயிருந்தது. பரிதி என்னதான் அவளை வம்பிழுத்தாலும், அறைக்குள் வெகு கண்ணியமாக நடந்து கொண்டான். அவள் குளிக்க சென்றாலே, கூடத்திற்கு வந்துவிடுவான். முக்கால் கால்சராய் இப்போது முழங்கால் வரை நீண்டது. அறைக்குள்ளே தூங்கும்போது கூட மேல்சட்டையோடு உறங்கினான். இசைவாணியும் உடையில் கவனமாய் இருந்தாள். படுக்கும்போது ஆடை எங்கும் விலகிவிடாதபடி போர்வையை முழுதாய் போர்த்தி தூங்கினாள். அங்கே குளிரூட்டியில் சுகமாய் உறங்கியவளுக்கு, இவர்கள் வீட்டு மின்விசிறியின் காற்று பத்தவே இல்லை. இருந்தாலும் அனைத்தையும் பழகினாள். இப்படி தங்களை அறிந்தோ, அறியாமலோ மற்றவருக்குப் பழகினர்.

சுந்தரிக்கு தையல் பிரித்தாகிவிட்டது. அவர் இப்போது பூரண குணமாகிவிட, அவரைக் கையில் பிடிக்க முடியவில்லை. ஒரு வாரத்திலே நான்கு நாட்கள் மருமகனுக்கென எதையாவது செய்து கொடுத்துவிட்டார்.

“ம்மா... உடம்பு சரியாகிடுச்சுத்தான். அதுக்காக வாரத்துல பாதிநாள் கிச்சனல்யே இருப்பியா? இதுல புதுசா புதுசா டிஷ் எல்லாம் செஞ்சு மருமகனுக்கு குடுக்குற‌. அங்க என் அத்தை பொசசீவாகுறாங்க. அவங்களுக்கு மகன்னா ரொம்ப இஷ்டம். நீங்க பண்றது அவங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும்மா. எப்பாவாதுன்னா பரவாயில்லை!” எனக் கண்டிப்பாய் ஆரம்பித்து மென்குரலில் முடித்தாள். சென்றமுறை அவர் செய்து கொடுத்த இறால் தொக்கை பரிதி சிலாகித்த போதே சிந்தாமணியின் முகம் பக்கத்து ஊருக்குச் சென்று வந்ததை இவள் கவனித்துவிட்டாள். அதனாலே தாயைக் கண்டித்தாள்.

“ஏன் வாணிம்மா... புள்ளையை அதே தெருவுல கட்டிக் கொடுத்திருக்கோம்னு உங்கம்மா மருமகனுக்கு ஆசையா சமைச்சுக் கொடுத்தா கூட உன் மாமியார் மூஞ்சியை தூக்குறாங்களா என்ன?” என கமலா அங்கலாய்த்தார்.

“அவங்க அப்படித்தான் கமலாம்மா. நம்மதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். இல்லைன்னா எனக்கும் என் மாமியாருக்கும் சண்டை வரும். என் புருஷன் எங்க ரெண்டு பேருக்கிடையில அல்லாடணும். அவனுக்காகத்தான் சொல்றேன்!” என பரிதியை முன்வைத்து அவள் பேச, சுந்தரி அத்தோடு அவனுக்கு செய்து கொடுப்பதை நிறுத்திவிட்டார். அவனாக இங்கு வரும் சமயங்களில் ஏதாவது எளிமையாக செய்து கொடுத்தார் இந்த இரண்டு வாரங்கள் அவர் சமைத்துக் கொடுத்தது தனக்கு உவப்பாயில்லை என மறைமுகமாக சிந்தாமணி மருமகளிடம் தெரிவித்துவிட்டார். அதை அப்படியே தன் தாயிடம் கூறினால், அவர் வருந்தக் கூடுமென எண்ணி இப்படி சொல்லி அவரை சமாளித்தாள் வாணி. இதுபோல சின்ன சின்ன விஷயங்களில் இருவீட்டினரும் விட்டுக் கொடுக்கப் பழகியிருந்தனர்.

“ஏன் இவ்ளோ ஸ்லோவா சாப்பிட்ற இசைவாணி? உனக்கு எப்போ அப்பாயின்மெண்ட். மிஸ் பண்ணிடப் போறோம். டேட் கிடைக்குறதே கஷ்டம்!” பரிதி கடிய, இவள் அவனை முறைத்துக்கொண்டே உண்டு முடித்தாள். ஒரு தானியிலேறி தேனாம்பேட்டையில் அவளை இறக்கிவிட்டவன், பாரிமுனையை நோக்கிப் பயணப்பட்டான்.

இரண்டு மணிநேரத்தில் தன் வேலையை முடித்தவள், அவனுக்கு அழைத்தாள். “என்ன வாணி, பயோமெட்ரிக் வச்சுட்டீயா? எல்லாம் கரெக்டா பண்ணியா?” அவன் விசாரிக்க, பதிலளித்தவள், “கிளம்பி வா... டீ நகர் போகலாம். கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ண வேண்டியிருக்கு!” என அவனை அழைத்தாள்.

“நீ இங்க வா வாணி. சொல்லாம கொள்ளாமல் கல்யாணம் பண்ணிட்டேன்னு இவனுங்க ஒரே ரகளை. உன்னை நேர்ல மீட் பண்ணணும்னு சொல்றானுங்க!” அவன் அழைக்க,

“அதெல்லாம் வேணாம் பரிதி. அவங்க என்னை மீட் பண்ணாம இருக்கதுதான் நல்லது. இது டெம்ரவரி ரிலேஷன்ஷிப். அவங்களை நான் ஏன் தேவையில்லாம மீட் பண்ணணும். நீ இங்க வா!” அவள் மறுத்தாள்‌.

அவள் கூற்றிற்று உடன்பட்டவன், “எல்லாம் சரித்தான். மேரேஜ்க்கு இன்வைட் பண்ணலை. பேச்சிலர்ஸ் பார்ட்டி கொடுக்கலைன்னு தொல்லைப் பண்றானுங்க பசங்க!” அவன் இழுக்க,

“ஏய்... குடிச்சிட்டு எதுவும் வந்து தொலைஞ்சிடாத பரிதி. உன்னைப் பார்த்துட்டே என்னால இருக்க முடியாது. குடிச்சா அவனுங்களோடவே இருந்துக்கோ. நான் கிளம்புறேன்!” என்றாள் கடுப்புடன்.

“ப்ம்ச்... நான் குடிக்க மாட்டேன் வாணி. இவனுங்களுக்கு குடிக்க காசு வேணுமாம். இல்லைன்னா என் டவுசரை உருவிட்டு விட்ருவானுங்க. நீ ஒரு டென் தௌசண்ட் கடனா கொடுத்தா, லண்டன் போனதும் திருப்பிக் கொடுத்துடுவேன்!” என்றான் சங்கடத்துடன்.

“காசை அனுப்பிட்டேன். நீ என் கூட வர்றீயா? இல்ல, வேணாம். நான் தனியா பர்சேஸ் பண்ணிக்கிறேன். ட்ரிங் பண்ணாம மட்டும் இரு போதும். நைட் ரூம்க்கு வா. அப்படியே வெக்கேட் பண்ணிட்டு ட்ரைன் ஏறிடலாம்!” என அவள் அழைப்பைத் துண்டிக்க, அவளுக்கு முன்னே தியாகராய நகர் வந்து நின்றான் பரிதி.

“வர மாட்டேன்னு நினைச்சேன்?” அவனைக் கேள்வியாகப் பார்த்தாள் இவள்.

“நீ வேற வாணி... சும்மா வேடிக்கை பாருன்னு உக்கார வச்சு எனக்கும் ஊத்திக் கொடுத்துடுவானுங்க. அப்புறம் எங்கப்பா என்னைப் பொளந்து விட்ருவாரு!” என்றான் அவன்.

“ஓ... இனிமே எதுனாலும் உங்கப்பா வச்சுத்தான் டீல் பண்ணணும் போல பரிதி!” என அவனை வம்பிழுத்துக் கொண்டே விதவிதமான ஜிமிக்கிகள், வளையல், கழுத்தணி, கவ்விகள் என வாங்கினாள்.

“எதுக்கு இவ்வளோ வாங்குற நீ? எப்பவும் ஒரே மாதிரி சில்வர் தோடு, செயின் ஒன்னு, பிராண்டட் வாட்ச். இதை தவிர வேற ஏதாவது யூஸ் பண்ணிருக்கீயா? காஸை கரியாக்குற...” அவன் முனங்கிக் கொண்டே வர,

“நீ பே பண்ணா இதெல்லாம் பேசலாம் பரிதி. என் காசு, நான் கரியாக்குவேன், கறிக்குழம்பாக்குவேன். கொஞ்ச நேரம் உன் வாய்க்கு ரெஸ்ட் கொடு...” அவள் சிடுசிடுக்கவும் அமைதியானான். அடுத்ததாய் உடைகள் சில எடுத்தாள்.

“இது உன் சைஸ் இல்லையே!” அவள் கையிலிருந்ததைப் பார்த்து பரிதி கூறவும், படக்கென அவனைத் திரும்பிப் பார்த்து தீயாய் முறைத்தாள்.

“ஏய் சீ... சின்ன ட்ரெஸ்ஸா இருக்குன்னு சொன்னேன். மத்தபடி வேற எந்த எண்ணமும் இல்ல!” என்று உடனடியாக மறுத்தான்.

“எனக்கில்ல, கீர்த்தனாவுக்கு!” என விலையுயர்ந்த உடைகளை எடுத்தாள்‌.

“அவளுக்கு எதுக்கு நீ எடுத்து தரணும் இசைவாணி. தேவையில்லாத வேலை பார்க்காத. அவளுக்கு வேணும்னா நான் வாங்கி கொடுத்துப்பேன்!” அவன் பற்களை நறநறத்ததை இசைவாணி தூசியாய் தட்டிவிட்டாள். சிந்தாமணிக்கு, கமலாவிற்கு, தன் அம்மாவிற்கு, மாமனாருக்கு என ஏதோ ஒன்றை வாங்கினாள். கடைசியாய் புத்தகங்கள் இருந்த பகுதிக்குள் நுழைந்தாள்.

குறிப்பிட்ட ஒரு நீட் தேர்வு புத்தகத்தின் பெயரை சொல்லி, அது கிடைக்கவும் வாங்கி வைத்தாள். பரிதி அவளை முறைக்க, “சும்மா முறைக்காத. உன் தம்பி உங்கம்மாகிட்டே இந்த புக் ஆன்லைன்ல ஸ்டாக் இல்லன்னு சொன்னான். அதான் நான் வாங்கி கொடுக்குறேன்...” என்றவள், “ஆமா...‌ உனக்கும் அவனுக்கும் என்ன சண்டை. ரெண்டு பேரும் பார்த்தா முகத்தை திருப்பிட்டு போறீங்க. அவன் என்கிட்டேயும்‌ சரியா பேச மாட்டுறான்!” என யோசனையுடன் கேட்டாள்.

“எங்களுக்குள்ள ஒரு பஞ்சாயத்து!” என அவன் சுருக்கமாக முடித்துவிட, இவள் அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை. அண்ணன் தம்பிக்கு இடையே அவள் நுழையாது தன் எல்லையில் நின்று கொண்டாள். அப்படியே மதிய உணவை மாலை போல உண்டு அன்றிரவே பொள்ளாச்சியை நோக்கிப் பயணப்பட்டனர்.

முதலில் சுந்தரியைப் பார்த்து அவருக்கும் கமலாவிற்கும் வாங்கியதைக் கொடுத்த இசைவாணி வந்ததும் வராததுமாய் கீர்த்தனாவிற்காக வாங்கிய தோடு, ஜிமிக்கி எல்லாவற்றையும் அவளுக்கு கொடுத்தாள். சின்னவளுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. ஒவ்வொன்றையும் எடுத்து காதில் வைத்து அழகு பார்த்தாள்.

“அண்ணா... இந்த ஜிமிக்கி எப்படி இருக்கு? இந்த வளையலுக்கு மேட்சா இருக்குல்ல?” எனக் கேட்டு பூரித்துப் போனாள். ஒற்றை மகளென்றாலும் கூட சிந்தாமணி அவள் கேட்ட அனைத்தும் வாங்கித் தர மாட்டார். எல்லாமே ஒரு அளவுதான். வருடத்திற்கு ஒருமுறை மட்டும்தான் புதிய உடை, அணிமணிகள் எல்லாம். இப்போது அவள் எதிர்பாராத நேரம் கிடைத்திருக்க, மனமகிழ்ந்து போனாள்.

“இவளுக்கு எதுக்குமா இத்தனை வாங்கிட்டு வந்த? கொஞ்சம் நீயும் எடுத்துக்கோ!” சிந்தாமணி கூறியதில் கீர்த்தனா அண்ணியைப் பார்த்தாள்.

“அண்ணி... உங்களுக்கும் எடுத்துக்கோங்க!” என்றாள் மனமே இல்லாமல்.

“எனக்குத் தனியா வாங்கிட்டேன் கீர்த்தனா. இது உனக்குத்தான்!” என அவள் வயிற்றில் பால் வார்த்தவள், சிந்தாமணிக்கு வாங்கி வந்த சேலையும் மார்த்தாண்டத்திற்கு வாங்கிய வேஷ்டி சட்டையும் கொடுத்தாள்.

“எனக்கெதுக்கும்மா இதெல்லாம்?” அவர் சங்கடத்துடன் மறுக்க,

“நீங்க இந்த மாதிரித்தான் சேலை கட்டுவீங்க. உங்களுக்குப் பிடிக்கும்னு உங்க மகன்தான் அத்தை எடுத்தாரு!” என்றாள். அவள் கூற்றில் முகம் மலர, அதை வாங்கினார் பெரியவர். பரிதி இதுவரை தாயிற்கென்று சேலையெல்லாம் எடுத்துக் கொடுத்தது இல்லை. இன்றைக்கு அவர் முகத்திலிருந்த சந்தோஷத்தைப் பார்த்ததும், இனிமேல் தாய், தந்தைக்கு ஏதாவது வாங்கித் தர வேண்டுமென எண்ணிக் கொண்டான்.

அஜித் அப்போதுதான் காலை நேர வகுப்பு முடிந்து வந்தான்.
“அஜித்... நீ கேட்ட நீட் புக். ஆன்லைன்ல ஸ்டாக் அவுட்னு சொன்னல்ல. சோ, நான் புக் ஷாப்ல கேட்டு வாங்குனேன்!” என அவனிடம் புத்தகத்தைக் கொடுத்தாள். அவனிடம் சின்னதாய் அதிர்ச்சி, பின்னர்‌
சங்கடம்.

“உங்க அண்ணனுக்கும் உனக்கும் ஆயிரம் இருக்கும். அதுக்காக என்கிட்ட பேசாம இருக்க கூடாது‌. நான் இந்த வீட்டுக்கு வாழ வந்திருக்கேன். இப்படியே எத்தனை நாள் பேசாம இருப்ப?” எனக் கண்டிப்புடன் கேட்டாள்.

“அதெல்லாம் இல்லண்ணி. உங்ககிட்டே பேசுறேனே” அவன் சங்கடத்துடன் மறுத்தான். இவள் தலையசைத்து சிரித்தாள்.

“சரி வாணி... போ, போய் குளிச்சிட்டு ரெஸ்ட் எடு...” மாமியார் கூற, அவள் அறைக்குள் நுழைந்ததும்,

“என்னம்மா... எப்படி உன் மருமக? காசை தண்ணியா செலவு பண்ணி எல்லாம் வாங்கிருக்கா?” எனப் புருவத்தை உயர்த்தினான்.

“ஹக்கும்... அவ அவுக அம்மா வீட்டுல போய் வாங்கிட்டு வந்ததைக் கொடுத்தது போக மிச்சத்தை நமக்கு கொடுக்குறா. இதை மெச்சிக்கணுமா நான்? நேரா இங்க வராம ஏன் அங்கப் போனான்னு கேட்க வாய் இல்ல உனக்கு?” அவர் முகத்தை தோளில் இடிக்க, இவனுக்கு கடுப்பானது.

“உங்களையெல்லாம் எந்தக் காலத்துலயும் திருப்திப்படுத்த முடியாது!” எனத் தலையில் அடித்துக் கொண்டவன், இசைவாணி பின்னே சென்றான்.

“நிஜமா நான் ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிருந்தா கூட அவ இவ்வளோ பெர்பாமென்ஸ் பண்ணிருப்பாளான்னு தெரியலை வாணி. நீ ஏன் எல்லாரையும் இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ற?” என கண்கள் இடுங்க சந்தேகத்தோடு கேட்டான்.

“உன் வீட்டு ஆளுங்களை இம்ப்ரெஸ் பண்ணி நான் என்ன பண்ண போறேன் பரிதி. இது என் அப்பா பழக்கம். எங்க போனாலும் எங்களுக்காக ஏதாவது வாங்கிட்டு வருவார். சோ, எனக்கும் அது பழகிடுச்சு!” என்றாள் தோளைக் குலுக்கி.

கட்டிலில் சாய்ந்தமர்ந்து காலை ஆட்டியபடியே அவளது சான்றிதழ்கள் நிறைந்த கோப்பை எடுத்து பார்வையை அதில் ஓட்டினான். அவன் விழிகள் விரிந்தன.

“ஏய்...வாணி, டென்த்ல நீ ஃபோர் நைன்டியா?” என வாயைப் பிளந்தான்‌. சிரிப்புடன் அவள் தலையை அசைத்தாள்.

“அப்போ ட்வெல்த்ல?” எனக் கேட்டு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணையும் பார்த்து அதிசயித்தான்.

“ஸ்கூல் டாப்பரா நீ? உர்ருன்னு இருக்கும்போதே நினைச்சேன். இருந்தாலும் நீ இவ்வளோ படிப்ஸா இருக்க வேணாம்!” என அவன் சலிக்க, அவள் முறுவலித்தாள். அவளுடைய சான்றிதழ்களை ஒவ்வொன்றாய்‌ பார்த்து வந்தவன், படக்கென எழுந்தான்.

“ஏய் வாணி... நீ நைன்டி எய்ட்டா?” என அதிர்வுடன் கேட்டான். அவன் முகத்தை யோசனையுடன் பார்த்தவள், ஆமாமென தலையை அசைத்தாள். அவனிடம் ஒரு திடுக்கிடல்.

“அப்போ உனக்கு என்னைவிட ரெண்டு வயசு கூடவா? நீ எனக்கு அக்காவா?” என சினம்‌ மிகுந்த குரலில் கேட்டான்.

“கத்தாத பரிதி. ரெண்டு வயசு மூத்தவன்னா அக்காவாகிடுவேனா?” அவள் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை போல. கைகள் தன் போல வேலையைப் பார்த்தன.

அந்த அலட்சியத்தால் உசுப்பப்பட்டவன், “வயசுக்கு மூத்தவளை அக்கான்னு சொல்லாம வேற என்ன சொல்லணும்னு எதிர்பார்க்குற? ஏன் நீ இந்த விஷத்தை முன்னாடியே என்கிட்ட சொல்லலை?” அழுத்திக் கேட்டான்.

“ஏன் சொன்னா மேரேஜ் வேணாம்னு சொல்லிருப்பீயா என்ன?” எனக் கேட்டு நேற்று தங்கள் உடுத்திய உடையை தனியே துவைக்க எடுத்து வைத்தாள்.

“ஆமா... எவ்ளோ பிரச்சனை வந்தாலும் வயசுக்கு மூத்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிருக்க மாட்டேன்!” அவன் பதிலில் புரியாது நிமிர்ந்தாள்.

“அறிவில்லையா இசை வாணி உனக்கு? தம்பி மாதிரி பார்க்க வேண்டியவன் கையால தாலி வாங்கிட்டு என் வீட்டுல வந்து உக்கார்ந்திருக்க? உனக்கே இது கூசலையா? தப்பா தெரியலையா?” அவன் அருவருப்புடன் முகத்தை சுளித்ததும், இவள் முகம் அவமானத்தில் சிவந்தது.

“ஷட் அப் பரிதி. வார்த்தையை விடாத. இது ஒன்னும் ரியல் மேரேஜ் இல்ல. ஜஸ்ட் அக்ரீமெண்ட்தான்!” அழுத்தி அவனுக்குப் புரிய வைக்க முயன்றாலும் அவன் பேச்சில் நிறைய காயம்பட்டிருந்தாள் இசைவாணி.

“உன்னோட மோட்டீவ் என்ன இசைவாணி?” அழுத்திக் கேட்டவன், “நமக்கு வயசாகிட்டே‌ போகுது. கல்யாணமே ஆகாதுன்னு சின்ன பையனை வளைச்சு போட்டுடீயா?” எனக் கேட்டவன், கன்னத்தில் அவளது ஐந்து விரல்களும் பதிந்தன.

ஒற்றை விரலை நீட்டியவள் கண்கள் சிவந்திருக்க, அணைக்கட்டி நீர் நின்றது. “இதுக்கு மேல ஒரு வார்த்தைப் பேசுன, நான் மனுஷியா இருக்க மாட்டேன்!” என்றாள் இடறிய குரலை சரிசெய்து. வேண்டாமென தடுத்தும் கன்னத்தில் குபுகுபுவென நீர் இறங்கிற்று.

“சீ... அழுது சீன் போடாத. நீ செஞ்ச தப்பை கேட்டதும் என்னை கை நீட்டி அடிக்கிற? என்ன பொண்ணு டீ நீ? நான் உன்னை வேற மாதிரி நினைச்சேன். ஆனால் நீ ப்ளான் பண்ணித்தான் இந்த வீட்டுக்குள் வந்துருக்க.‌ யார், யாரை எப்படி எப்படி கவர் பண்றதுன்னு கரெக்டா தெரிஞ்சு வச்சிருக்க? பட் இந்த பரிதி அவ்வளோ ஈசி கிடையாது. உன்கிட்ட மயங்க மாட்டான்!” என வலித்த கன்னத்தை தேய்த்தவன்,

“நீயா வந்து அக்ரீமெண்ட் அது இதுன்னு கதை உடும்போதே நினைச்சிருக்கணும். சைக்... நான் ஒரு ஏமாளி‌. எவளோ என்னவோ சொல்றான்னு என் வாழ்க்கையை பாழாக்கிட்டேன். இந்த விஷயம் மட்டும் வெளிய தெரிஞ்சா எனக்குத்தானே அசிங்கம். அக்கா மாதிரி பார்க்க வேண்டியவளைக் கரெக்ட் பண்ணிக் கல்யாணம் பண்ணிட்டான்னு என்னைத்தான் டீ அசிங்கமா பேசுவாங்க. உனக்கு ஒன்னும் இல்ல?” என்றவன் பார்வையில் வெறுப்பு மண்டிக் கிடக்க, இசைவாணி அவனை வெறித்தாள். பதிலேதும் உரைக்கவில்லை.

அவளருகே சென்று நின்றவன், “விசா வந்த கையோட உனக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப்பைக் கட் பண்ணிடுவேன். ஏதாவது அழுது ட்ராமா போட்டு என் கூடவே இருக்கலாம்னு நினைக்காத. சும்மா விளையாட்டுத்தனமா இருக்கேன்னு என்னைப் பத்தி தப்பு கணக்கு போட்டுட்ட நீ. கோபம் வந்தா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!” என்றான் அவளை உறுத்துப் பார்த்து.

கண்களில் வழிந்த நீரை சுண்டிவிட்டு அவனை சில நொடிகள் உற்றுப் பார்த்தவள், “என்ன பண்ணுவ?” என எள்ளலாகக் கேட்டாள். அவள் குரலிலிருந்த அலட்சியத்தில் இவனுக்கு கோபம் உச்சி மண்டைக்கு ஏறியது‌.

அவள் கழுத்திலிருந்த தாலியை வெளியே இழுத்தவன், “தரதரன்னு உன்னை இழுத்துட்டு போய் உங்கம்மா கண்ணு முன்னாடியே இந்த தாலியை அத்து எறிஞ்சுடுவேன்!” என்றான் குரூரமாக. அவன் கூற்றில் இவள் தேகம் அதிர, மீண்டும் கண்ணில் நீர் துளிர்த்தது.

அவனிடமிருந்து விலகியவள், “இன்னும் மூனு மாசத்துல உனக்கு விசா வந்துடும். அதுக்கு முன்னாடி இந்த மாதிரி ஏதாவது பண்ணித் தொலைஞ்சுடாத. என் அம்மாவுக்காகத்தான் நான் எல்லாம் பண்ணேன். நீ என்ன நினைச்சாலும் எனக்கு கவலை இல்ல. உன்கிட்ட என்னை ப்ரூஃப் பண்ணணும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது. இப்போ கூட நீ பேசுன பேச்சுக்கு தாலியை கழட்டி உன் மூஞ்சில தூக்கியெறிஞ்சுட்டு நீ ஒன்னும் அவ்வளோ பெரிய மன்மதன் இல்ல, உன்னை ப்ளான் போட்டு கல்யாணம் பண்ணன்னு என்னால கத்த முடியும். ஆனால் நான் உன்னை மாதிரி செல்பிஷ் கிடையாது. என் அம்மா மாதிரித்தானே உன் ஃபேமிலியும். அவங்களுக்காகத்தான் நான் அமைதியா போறேன்!” என அழுத்தம் திருத்தமாக கூறியவள், தன் கோப்பிலிருந்த ஏதோ ஒரு தாளை உருவினாள். அதில் கையெழுத்திட்டு அவன் முன்னே தூக்கிப் போட்டாள்.

“டைவர்ஸ் பேப்பர். மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ண அடுத்த நாளே ரெடி பண்ணி வச்சுட்டேன். சிக்ஸ் மந்த்ஸ் கழிச்சு நீயும் இதுல சைன் போட்டு கோர்ட்ல சப்மிட் பண்ணிடு. அத்தோட உனக்கும் எனக்கும் எல்லாம் முடிஞ்சது!” என்றவள் ஒரு விரலை நீட்டினாள்.

“என் கேரக்டரைப் பத்தி தப்பா பேச உனக்கு எந்த ரைட்ஸூம் கிடையாது. நீ பேசுன பேச்சுக்கு உன் மூஞ்சிலயே முழிக்க கூடாதுன்ற அளவுக்கு கோபம் வருது!” என்றவள் புறங்கையால் கண்ணீரைத் துடைத்துவிட்டு, “என் விதி... உன்கிட்டலாம் பேச்சு வாங்க வேண்டியதிருக்கு. மைண்ட் இட், அன்னைக்கு சொன்னதுதான். இந்த உலகத்துல நீதான் கடைசி ஆம்பளைன்னா கூட உன் பக்கம் என் பார்வைத் திரும்பாது!” என்றாள் அழுத்தமான குரலில். அவள் கண்ணீர் அவனை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை போல.

அந்த விவாகரத்துப் பத்திரம் உண்மையானதா என ஒருமுறை உறுதிப்படுத்தி, அதை பத்திரமாய் எடுத்து வைத்தான். அவனேயே வெறித்திருந்தாள் இசைவாணி. சத்தம்போட்டு அழ வேண்டுமென தோன்ற, சின்ன கேவலில் அடக்கினாள்.

‘தப்பு பண்ணிட்டேன். அம்மாகிட்டே பேசி புரிய வச்சு ஆப்ரேஷன் பண்ணியிருக்கலாம். இவன்கிட்டே வந்து ஹெல்ப் கேட்டு எல்லாத்தையும் நானே காம்பளிகேட் பண்ணிட்டேன். சாரிப்பா... சாரிம்மா!” என்றவள் அவன் முன்னே அழப் பிடிக்காமல் குளியலறைக்குள் சென்று கேவினாள். அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவனது அருவருப்பான பார்வை, அவளைக் கீழ்த்தரமாய் பேசியவை என எல்லாம் மீண்டும் மீண்டும் நினைவு வந்து தனக்குள் ஒடுங்கிப் போனாள். இதுவரை யாருமே இப்படி அவள் ஒழுக்கத்தை வைத்துக் குறைக் கூறியதில்லை. இரண்டாம் முறையாக அவள் வாழ்ந்து வந்த ஒழுக்க நெறியை கேலிக்குள்ளாக்கிவிட்டான். அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை
.

இரண்டு வருட ஒப்பந்தத்தை ஒரு வருடமாக சுருக்கியிருந்தவர்கள், ஆறு மாதத்திலே விவாகரத்துப் பெற்று பந்தத்தை முடித்துக்கொள்ளும் முடிவிற்கு வந்திருந்தனர்.

தொடரும்...

 
Well-known member
Messages
512
Reaction score
370
Points
63
Parithi ippo ava two years periya ponnu ah irundha enna actually ungalodathu agreement marriage than ah athu ku ipadi ah pesuva ah ne
 
Active member
Messages
152
Reaction score
119
Points
43
Nice super interesting super 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌
 
Top