• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,317
Reaction score
3,914
Points
113
நேரம் – 16 💜

காலை ஒன்பது மணியாகியிருந்தது. மார்த்தாண்டம் முகத்திலிருந்த தாடியை சவரம் செய்து கொண்டிருந்தார். இன்றைக்கு வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக கடையடைப்பு. அதனாலே அவர் வீட்டிலிருக்கிறார். இல்லையெனில் காலையிலே அரக்கப்பறக்க எழுந்து கடைக்குச் சென்றிருப்பார்.

சிந்தாமணியின் சப்தம் சமையலறைக்குள் கேட்க, வீட்டு கூடத்தின் ஓரத்தில் பாயில் சுருண்டிருந்த கீர்த்தனாவிற்கு இன்னும் விடியவில்லை போல. ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறாள் என அசைவற்ற உடல் உணர்த்தியது. அவளுக்கு அரை பரிட்சை முடிந்து விடுமுறை விட்டிருக்க, அதனாலே சிந்தாமணி அவள் தூங்கட்டும் என்றுவிட்டார். அஜித் நீட் தேர்வுக்கான சிறப்பு வகுப்பிற்கு சென்றுவிட்டான்.

வீடே அமைதியில் திளைத்திருந்தது. குளித்து அலுவலகம் செல்ல கிளம்பி வந்த பரிதி, “ம்மா....” எனக் குரல் கொடுத்துக் கொண்டே கூடத்தில் அமர்ந்தான்.

“இதோ வரேன் டா...” என்றவர் இரண்டு தோசையை தட்டிலிட்டி தேங்காய் சட்னி, சாம்பாரோடு மகனிடம் கொடுத்தார்.

“இவ என்னம்மா ஒம்போது மணி வரை தூங்குறா.எப்படிமா காலைல எனக்கு வேலைக்குப் போக தோணும் எனக்கு. என் மூடே கெடுக்குறீங்க நீங்க?” அவன் சடைத்துக் கொண்டே தட்டையாய் இருந்த தோசையை முன்னும் பின்னும் திருப்பி பார்த்தான். ஏற்கனவே அவனுக்கு இன்றைக்கு வேலைக்குப் போக விருப்பமில்லை. சேம்பேறித்தனம் முதுகிலேறி அவனைப் படுத்திற்று. ஆனால் இந்த மாதம் நிறைய விடுப்பெடுத்துவிட்டதால் ஏற்கனவே சம்பளத்தில் கால்வாசி அதற்கே போய்விட்டது. சரியாய் இந்நேரம் பார்த்து இவனது நண்பர்கள் ஊட்டிவரை சுற்றுலா சென்றிருக்க, இவனால் அதில் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற கடுப்புத்தான் தங்கை சுகமாய் உறங்கவும் பொறாமையாய் வெளிப்பட்டது.

“அவளுக்குப் பரிட்சை லீவு டா. அதனால தூங்குறா. பரிட்சைக்கு விழுந்து விழுந்து படிச்சாடா புள்ளை. இன்னைக்கு ஒருநாள் தூங்கட்டும்னு விட்டா உன் கண்ணை உறுத்துதா அது!” சிந்தாமணி மகனை முறைத்தார்.

“ஆமா... விழுந்து விழுந்து படிச்சா மட்டும் பர்ஸ்ட் மார்க் வாங்கப் போறாளா. பார்டர்ல பாஸ் பண்ண போறா. அதுக்கு இவ்வளோ வக்காலத்து!” முணுமுணுத்துக் கொண்டே தோசையை சட்னியில் தோய்த்து வாயில் வைத்தான்.

“ஏன்‌... துரை மட்டும் பர்ஸ்ட் மார்க் வாங்கி கிழிச்சுட்டாரோ. அவளை சொல்ல வந்துட்டான்!” சவரம் செய்து முடித்த தாடையில் முகப்பூச்சை மெதுவாய் பூசிய மார்த்தாண்டம் குரல் கொடுத்தார். மகன் அவரை ஓரக்கண்ணால் முறைத்தான்.

“பேசாம சாப்பிடேன் டா. உன் வாய்க்கு கொஞ்சமாச்சும் ஓய்வு குடு!” சிந்தாமணி மகனைக் கடிந்தவாறே தோசையை அவன் தட்டில் வைத்தார்.

“ம்மா... என்னம்மா நீ? முத ரெண்டு தோசைதான் இட்லி மாறி கொடுத்தன்னா இதுவும் அப்படித்தான் இருக்கு. நல்லா மொறுகலா சுட்டா இன்னொரு தோசை எடுத்துட்டு வா. இல்லைன்னா எனக்கு இதோட போதும்!” என அவன் குரலை உயர்த்திப் பேசினான்.

“மூனு தோசையே போதும்னு விடு சிந்தா. போகட்டும்... பசியில கிடக்கட்டும்!” மார்த்தாண்டம் கூற, ‘சை... எது சொன்னாலும் இடையில வர்றாரு இந்த மனுஷன். இன்னைக்குன்னுப் பார்த்து எதுக்கு ஸ்ட்ரைக் வச்சு கடையெல்லாம் அடைக்கச் சொன்னாங்கன்னு தெரியலை!’ என்ற கடுப்போடு அவன் உண்ண, அவர்கள் உரையாடலைக் கேட்டவாறே வாயிலில் வந்து நின்றார் காமராஜ் மனைவி, தமக்கை சகிதமாக.

“தம்பி...” என்ற குரலில் நிமிர்ந்த பரிதியிடம் சின்னதாய் ஒரு திகைப்பு. சட்டென தன்னை மீட்டவன், தட்டோடு எழுந்துவிட்டான்.

“வாங்க ஆன்ட்டி... வாங்க அங்கிள், உள்ளே வாங்க!” என்றவன், “ம்மா...” என பரபரப்பாய் குரல் கொடுத்துக்கொண்டே சமையலறைக்குள்ளே நுழைந்தான்.

“டேய்... மொறுகலான தோசைதான் டா சுட்றேன். ஏன் இப்படி அவசரப்படுற. அப்படியே வேகாம எடுத்து உன் தட்டுல வைக்கவா?” என அவர் மகனை முறைத்தார்.

“ப்ம்ச்... இசைவாணியோட அம்மா, மாமா, அத்தையெல்லாம் வந்திருக்காங்க. போ... போய் பேசு!” என இவரை விரட்டியவன், அரைகுறையாக உண்ட உணவோடு கையை கழுவிவிட்டு வெளியே வந்தான். அதற்குள்ளே மார்த்தாண்டம் யார் என்னவெனக் கேட்டு நாற்காலியை எடுத்துப் போட்டிருந்தார்.

“தம்பி உங்ககிட்டே சொல்லிருப்பாரு. இருந்தாலும் நம்ப முறையா பேசுறதுதானே சரியா இருக்கும். அதான் நேர்ல வந்தோம்!” சுந்தரி கூற, மார்த்தாண்டம் மகனை ஒருமுறை திரும்பி பார்த்தார். இவனுக்கு பயபந்து அடிவயிற்றில் சுழன்றது. அதை முகத்தில் காட்டாதிருக்க சிரமேற்கொண்டவன், அவரைப் பார்க்காமலே அறைக்குள்ளே நுழைந்து தன் பையை எடுத்தான்.

‘வீட்டுக்கு அவளோட அம்மா, மாமா எல்லாம் வர்றாங்கன்னு ஒரு சிக்னல் கொடுத்தாளா? திடுதிப்புன்னு வந்து நிக்கிறாங்க. நான் என்ன பேசணும், பண்ணணும்னு கூட ப்ரிபேர் பண்ணலை!’ என முனங்கியவன், வெளியே சென்றான். மார்த்தாண்டம் ஏதோ பேச, காமராஜ் பதிலளித்தார். அம்சவல்லியின் விழிகள் இவனை ஒருமுறை ஆராய்ந்தன. அவன் தோற்றத்தில் அவருக்கு சற்றே திருப்தி ஏற்பட்டிருந்தது.

வீட்டைப் பார்த்த போதே அவருக்கும் கணவருக்கும் பிடித்தமில்லை. இசைவாணி இப்படியொரு வீட்டில் எப்படி பொருந்திப் போவாள் என கேள்வி முன்னின்றது. பரிதி வீட்டினரின் பொருளாதார நிலை சற்று திருப்பியின்மை கொடுத்திருந்தாலும், தனியார் டிடெக்டிவ் நிறுவனம் மூலம் இவர்கள் குடும்பத்தைப் பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல்தான் இங்கு வரை சுந்தரி, காமராஜை அனுமதித்தது. டிடெக்டிவ் நிறுவனம் கொடுத்த தரவில் பரிதிக்கு நற்சான்றிதழ் கிடைத்திருக்க, வேறு எதையும் யோசிக்க வேண்டாமென நேரில் பேசலாம் என்று வந்துவிட்டனர்.

“அடடே... போஸ்ட் மாஸ்டர் பழனியா? அவரு எங்கண்ணனோட மச்சான். அவர் வீட்டுப் பக்கத்துலதான் நீங்க இருக்கீங்களா?” சிந்தாமணி கேட்டதும்,

“ஆமாங்க... அங்கதான் இருபது வருஷமா குடியிருக்கோம். அவரும் எங்களுக்கு நல்ல பழக்கம்!” என இருவரும் எங்கேயாவது தூரத்து உறவு முறை தென்படுமா என ஆராய, பரிதி சற்றே நெளிந்தவாறே நின்றான். அவனுக்கு அலுவலகத்திற்கு நேரமானது. ஆனால் அவர்கள் பேச்சு முழுவதும் தன்னைக்கொண்டு என்பதால் சட்டென வெளியேற முடியாது திணறினான்.

“நீ ஏன்டா நிக்கிற பரிதி... ஆஃபிஸ்க்கு டைமாகலையா? பெரியவங்க நாங்க பேசிக்கிறோம். நீ கிளம்பு!” சிந்தாமணி கூற்றில் அவரை நன்றியாகப் பார்த்தவன், “சரிம்மா...” என்றுவிட்டு, “நான் வரேன் ஆன்ட்டி. ஆஃபிஸ்க்கு நேரமாச்சு!” என அவர்களிடமும் சம்பிரதாயத்திற்காகப் கூறினான்.

“சரிப்பா... நீங்க‌ போங்க!” சுந்தரிக்குத் தன்னால் ஒரு மரியாதைபன்மை பேச்சில் புகுந்திருந்தது. எப்படியும் தங்கள் வீட்டு மருமகனாகப் போகிறானே என்ற எண்ணம்தான் காரணம்.

வெளியே சென்றவன், தன் இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்து வீட்டைக் கடந்ததும் இசைவாணிக்கு அழைத்து அலைபேசியை தோளுக்கும் காதிற்கும் இடையே பிடித்தான். இரண்டு முறை அழைப்புச்‌ சென்று துண்டானது. மூன்றாவது முறை ஏற்றவள், “ரெண்டு டைம் அட்டென் பண்ணலைன்னா விட மாட்டீயா பரிதி. நான் ட்ரைவிங்க்ல இருக்கேன்!” அவள் அதட்டினாள்.

“அது ரொம்ப முக்கியம்... உன் அம்மா, மாமாலாம் என் வீட்டுக்குப் பேச வராங்கன்னு நீ‌ ஏன் முன்னாடியே சொல்லலை?” அவன் கடுப்புடன் கேட்டான்.

“என்ன... என்ன சொல்ற? என் வீட்ல இருந்து வந்திருக்காங்களா?” எனக் கேட்டவளுக்கும் அந்த செய்தி புதிது.

“ப்ம்ச்... உனக்கே தெரியலையா? இல்ல பொய் சொல்றீயா?” இவன் எரிச்சலாக கேட்டான்.

“பொய் சொல்ல என்ன இருக்கு பரிதி? அவங்க என்கிட்டே இதைப் பத்தி எதுவுமே பேசலை. இன்பேஃக்ட் அம்மா ஒரு வாரமா என்கிட்ட இதைப் பத்தி கேட்கலை. நானும் அவங்களுக்கு யோசிக்க டைம் வேணும்னு விட்டுட்டுட்டேன். திடுதிப்புன்னு வந்ததெல்லாம் நின்றிருக்க மாட்டாங்க. முன்னாடியே யோசிச்சுத்தான் வந்திருப்பாங்க!” எனறவள் ஏதோ நினைவு வந்தவளாக,

“இன்னைக்கு ப்ரைடே. சோ நல்ல நாள்னு பேச வந்திருப்பாங்களா இருக்கும்!” என்றாள் தாயைப் பற்றி அறிந்தவளாக.

“சரி... சரி!” அவன் சலித்தான்.

“நீ ஏன் இவ்வளோ ஹைப்பராகுற? நீ சொன்னா வீட்ல நம்ப மாட்றாங்கன்னு புலம்புன. அதான் என் அம்மா வந்து பேசுறாங்களே. உன் பேரண்ட்ஸ்க்கும் யோசிக்க டைம் வேணாமா? அவங்க உன் மேரேஜ் பத்தி யோசிக்கவே இல்லைன்னு சொல்ற? சோ, என் அம்மா பேசுனதாதானே அவங்களுக்கும் தோணும்?”

“எல்லாம் சரிதான். பட் அவங்க வந்ததும் எனக்கு என்ன பேசுறதுன்னே தெரியலை இசைவாணி. எதுவுமே ப்ரிபேர் பண்ணலை நான். ப்ளாங்கா நின்னுட்டேன். பட், ரெண்டு வார்த்தை பேசிருக்கணும். எதுவும் பேசாம கிளம்பி வந்துட்டேன்!”

“பரிதி... இந்தக் கல்யாணத்துல நீ எனக்கு செய்ற பெரிய ஹெல்ப் என்ன தெரியுமா?” அவள் சிரத்தையாகக் கேட்க,

“சொல்லு... பட் ரொம்ப கஷ்டமான வேலையெல்லாம் என்னால பார்க்க முடியாது. பிஞ்சு உடம்பு என்னோடது!” ஆரம்பத்திலே அவன் முறுக்கினான்.

“யப்பா ராசா... நீ ஒன்றுமே செய்ய தேவையில்லை. அதான் நீ செய்ய போற பெரிய ஹெல்ப்பே. கல்யாணம் முடியுற வரை உன் வாயை ஜிப் போட்டு மூடு. சாப்பிடுறதுக்கும் மட்டும் யூஸ் பண்ணு. போதும்!” அவள் கூற்றில் இவனுக்கு சினமேறியது.

“டூ மச்சா பேசற இசைவாணி!” அவன் சிடுசிடுத்தான்.

“நான் கிண்டல் எல்லாம் பண்ணலை. சீரியஸா சொல்றேன். நீ எதுவுமே பண்ணாத. எல்லாமே என் வீட்ல பார்த்துப்பாங்க. பெரியவங்க ஹேண்டில் பண்ணிக்குவாங்க. உன்கிட்டே அங்கிளும் ஆன்ட்டியும் ஏதாவது கேட்டா மட்டும் பதில் சொல்லு. அதையும் கொஞ்சம் யோசிச்சு சொல்லு. சொதப்பிடாத!” என்றாள் பொறுமையாக.

“அந்த ஈர வெங்காயத்தை நான் பார்த்துக்கிறேன். ஒருவேளை எங்கப்பா மேரேஜ் இப்போதைக்கு வேணாம்னு சொல்லிட்டா?” எனக் கேட்டான் அவன்.

“லிசன் பரிதி... எங்கம்மாவுக்கு நான் கல்யாணமே வேணாம்னு தனியா இருந்துடுவேனோன்னு பயம். அப்படி இருக்கப்போ நானே வந்து ஒரு பையனைப் பிடிச்சிருக்குன்னு சொன்னா அவங்க சும்மா இருப்பாங்களா? ஒன் வீக் உன் பேக்ரவுண்ட் செக் பண்ணிருப்பாங்க. குட் கன்டக்டிவிட்டி சர்டிஃபிகேட் கிடைச்சிருக்கும். அதான் விஷயத்தை ஆறப் போடாம எல்லாத்தையும் டக்குன்னு செய்யலாம்னு நினைக்குறாங்க. சோ உங்க வீட்ல வேணாம்னு சொன்னா கூட ஷீ கேன் ஹேண்டில் தி சிட்சுவேஷன். சோ, டோன்ட் திங்க் எனிதிங் பேட்!” என்றாள்.

ஆனால் பரிதிக்கு நம்பிக்கை வரவில்லை. ஏனென்றால் ஒருவாரம் விதவிதமாக சிந்தாமணியிடம் அவன் காதல் கதையைக் கூறக் கேட்டும், “எந்தப் படத்துலருந்து டா சுட்டுட்டு வந்த?” என அவர் கேலி செய்ய, சுவரில் அடித்த பந்தாய் சோர்ந்து போனான். சரி அவள் என்ன செய்கிறாள் எனப்‌ பார்ப்போம் என்றெண்ணி அமைதியாகிவிட்டான்.

“சரி... என்னமோ சொல்ற. நம்பித் தொலைக்கிறேன்!” அவன் கூற, பேருந்து இரைச்சலும் அவன் குரலோடு போட்டிப் போட்டு இசைவாணியை அடைந்தது.

“அறிவில்லையா பரிதி உனக்கு. இப்போதானே கீழ விழுந்து வாருன? அப்புறமும் அடங்காம ஃபோன் பேசிட்டே பைக் ஓட்ற? ஒழுங்கா ஆஃபிஸ் போய் சேரு!” என அதட்டலுடன் அவள் அழைப்பைத் துண்டித்தாள்.

சொந்த ஊர் தொடங்கி, குல தெய்வம் வரைப் பேசி தெரிந்து தொழில் பற்றி பகிர்ந்து சிந்தாமணி கொடுத்த தேநீரையும் முறுக்கையும் உண்டு முதற்கட்ட பேச்சு வார்த்தை முடிந்திருக்க, சுந்தரிதான் தங்கள் வந்த நோக்கத்திற்கு வந்தார்.

முதலில் தன் கணவர் தொழிலில் சறுக்கியது முதல் மகள் திருமணம் அதனால் தடைப்பட்டது என சுருக்கமாக கூறியவர், பின்னர் இசைவாணி, பரிதியின் பிடித்தம் பற்றிப் பகிர்ந்தார்.

காமராஜ் தன் தமக்கையின் உடல்நிலைப் பற்றி கூறியவர், “எங்க சைட் நாங்க எல்லாத்தையும் சொல்லிட்டோம். நீங்கதான் யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லணும்!” என மார்த்தாண்டம் முகம் பார்த்தார்.

அவருக்கு சட்டென என்ன பேசுவது எனத் தெரியவில்லை. அவர் மகன் திருமணம்‌ பற்றி யோசிக்கவில்லை. அன்றைக்கு கூறியது போல வீட்டுக் கடனை அவன் அடைத்ததும், அவன் திருமணத்தை நடத்தலாம் என யோசித்திருந்தார். ஆனால் பரிதி அனைத்தையும் தலை கீழாக மாற்றிப் போட்டுவிட்டான்.
மனதிலிருந்ததை மறையாது அவர் கூறினார். அவர் கூற்றில் காமராஜ், அம்சவல்லியின் முகம் மாறிற்று. இவர்கள் இருக்கும் வீடே எலிக்கூண்டு போல சின்னதாக இருக்கிறது. இதில் கடன் வேறா என அவர்கள் அதிர்ந்தனர். அதனாலே அவர்களுக்கு அடுத்துப் பேச்சு வரவில்லை.

“அட... என்னங்க நீங்க? கடன் இல்லாமதான் கல்யாணம் பண்ணணும்னா பாதி பேருக்கு இந்தக் காலத்துல கல்யாணமே நடக்காதுங்க. எல்லாரும் கடனோடத்தானே சுத்துறோம். கடனை இன்னும் ஐஞ்சு வருஷம் கழிச்சுக் கூடக் கட்டலாம். ஆனால் இளமை போனா திரும்பி வருமா? நீங்களே யோசிச்சுப் பாருங்க. சின்ன புள்ளைங்க ஆசைப்படுறாங்க!” சுந்தரி முந்திக்கொண்டு பதில் சொன்னார்.

“ஏங்க... அவுக சொல்றதும் சரிதானே. உடனே வேணாம்னு சொல்லாதீங்க!” சிந்தாமணி கணவரிடம் கூற, அவர் யோசித்தார்.

“பையன் வெளிநாடு போகப் போறான். கல்யாணம் பண்ணிட்டு உங்க மகளை இங்க விட்டுட்டுப் போய்டுவான். ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கமா இருக்க எதுக்கு சீக்கிரம் கல்யாணம்னு யோசிக்கிறேன்!” அவர் இழுத்தார்.

“பரிதி தம்பி போற அதே நாட்டுக்குத்தான் இன்னும் ரெண்டு மாசத்துல என் மகளும் வேலைக்குப் போக போறா. கல்யாணம் முடிஞ்சதும் ரெண்டு பேரும் கொஞ்ச நாள் அங்க இருந்துட்டு வரட்டும். உங்க பையனும் கடனை அடைச்சிடுவாரு. எங்களுக்கு கூட என் வீட்டுக்காரர் விட்டுட்டுப் போன கடன் மிச்சம் இருக்கு. இவளும் அடைச்சிடுவா. அதெல்லாம் பிரச்சனையாகாது!” என்ற தமக்கையைப் பார்த்து காமராஜிற்கு கோபம் வந்தது. ஆனாலும் சூழ்நிலை கருதி அமைதியாக இருந்தார்.

என்னவோ அவர்கள் செல்வ செழிப்பானவர்கள் போலவும், தாங்கள் மகளை அவர் மகன் திருமண செய்துகொள்ள கெஞ்சிக்கொண்டு நிற்பது போலவும் தோன்றிற்று அவருக்கு. நிரந்தரமில்லாத வேலை, இருக்கும் வீட்டின்‌ மேல் பல லட்சங்கள் கடன், மூத்த மகனாகிவிட்ட காரணத்தால் வீட்டுப் பொறுப்பு என பரிதியை அவர் நிராகரிக்க வரிசையாய் ஆயிரம் காரணங்கள் வந்து விழுந்தன.

மார்த்தாண்டம் மேலும் யோசிக்க, “ஒன்னும் அவசரமில்லங்க. நீங்க யோசிச்சுட்டு சொல்லுங்க. நம்ப அப்புறம் பார்க்கலாம்!” என்ற காமராஜ் மற்ற இருவரையும் கூட்டிக்கொண்டு அகன்றார்.
வீட்டிற்குள் நுழைந்ததும் தமக்கையை பிடிபிடியெனப் பிடித்துவிட்டார்.

“ஏன்கா... நம்ப பொண்ணுக்கு என்னமோ கல்யாணம் பண்ண வழியே இல்லாத மாதிரி அவுங்ககிட்டே கெஞ்சிட்டு நிக்கிற நீ? அவங்க வீட்டைப் பார்த்ததுமே எனக்குப் பக்குன்னு ஆகிடுச்சு. பிறந்ததுல இருந்தே தங்கத் தொட்டில போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்த புள்ளைக்கா வாணி. அவளுக்குப் போய் இப்படியொரு வீட்டுப் பையனான்னு எனக்கு மனசு ஆறவே இல்ல. இதுல என்னமோ அவங்க ரொம்ப யோசிக்கிறாங்க. தம்மாதூண்டு வீட்ல போய் உன் பொண்ணு எப்படி நல்லா வாழுவா. அவளுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்க்கணும்னு நான் யோசிச்சா, நீ இப்படி போய் அவளைத் தள்ள பார்க்குற? ஏன் இப்படி செய்ற நீ? எனக்கொன்னும் புரியலை. அவளுக்கு என்ன வயசாச்சுன்னு நீ கவலைப்படுற. என்ன இருபத்தெட்டுதானே? இப்போ எல்லாருமே இந்த வயசுலதானே கல்யாணம் பண்றாங்க!” மன ஆதங்கத்தைக் கொட்டினார் காமராஜ்.

“அண்ணி... அவர் சொல்றதுல நியாயம் இருக்கு. பாருங்க எலி கூண்டு கணக்கா ஒரு வீடு. அதுவும் கடன்ல இருக்காம். பையன் பார்க்க நல்லா இருக்கான். அதுக்காக அழகா நாளைக்கு வந்து சோறு போடும்? நம்ப வாணி அளவுக்கு கூட அந்தப் பையன் சம்பாரிக்கலை. ஒரு கவர்மெண்ட் வேலைன்னா கூட நீங்க மெனக்கெடுறதுல ஒரு நியாயம் இருக்கு. அந்தாளு என்னமோ ரொம்ப பண்றாரு. இந்த சம்பந்தம் வேணாம். நீங்க பயப்புட்ற மாதிரி அவளை நாங்க தனியா விட்டுட மாட்டோம். என் மகளுக்கு எப்படி மாப்பிள்ளை பார்த்தோமோ, அதே மாதிரியே தங்கமான பையனா, நம்ப வசதிக்கேத்தவனா பார்ப்போம்.
கொஞ்சம் பொறுமையா இருங்க!” என அம்சவல்லியும் பொரிந்தார்.

இவர்கள் அவ்வளவு தூரம் எடுத்துக் கூறியும் மார்த்தாண்டம் முகமே அவரது எண்ணத்தைக் கூறிற்று. அப்படியென்ன அவர் வீட்டுப் பையனை விட வாணி குறைத்துவிட்டாள் என மனதில் கோபம் பெருகிற்று. அவள் வளர்ந்த விதமென்ன? இவர்கள் வாழும் வாழ்க்கை என்ன? தற்போதைக்கு சுந்தரியின் சூழ்நிலை சரியில்லைதான். அதற்காக பாராட்டி சீராட்டி வளர்த்தப் பெண்ணை இப்படியொரு வீட்டிலா திருமணம்‌ செய்து கொடுக்க வேண்டுமென மனம் குமைந்தது.

“என் பொண்ணுக்கு அந்தப் பையனை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா காமராசு!” என்ற சுந்தரியை இருவரும் திகைப்புடன் பார்த்தனர்.

“என்னக்கா சொல்ற? நம்ப வாணி சொன்னாளா அவனைப் பிடிச்சிருக்குன்னு!” இவர் ஆச்சர்யத்துடன் கேட்டார்.

“ஆமா டா... அவதான் அந்தப் பையனைக் கல்யாணம் பண்ண விருப்பம்னு சொன்னா. அவங்க வீட்ல பேசுங்கன்னு சொன்னதும் அவதான்!” என்றவர் நடந்ததை விவரிக்க, மற்ற இருவருக்கும் என்ன பேசுவதென
தெரியவில்லை.

“அண்ணி... வாணி சின்ன புள்ளை. அவளுக்கு என்ன தெரியும்?‌ இப்போ பணம் காசு பெருசா தெரியாம இருக்கலாம். அதுக்காக இருக்க ஒரு வீட்டைக் கூட கடன்ல தள்ளிருக்க குடும்பத்துல போய் அவளைக் குடுக்க எனக்கு சம்மதம் இல்ல. அற்புதாவை இப்படியொரு இடத்துல குடுப்போமா நாங்க? சொல்லுங்க?” அம்சவல்லி கேட்டதும், சுந்தரி முறுவலித்தார்.

“நானும் என் பொண்ணுகிட்டே இந்தக் கேள்வியை கேட்டேன் அம்சா. அவ என்ன சொன்னா தெரியுமா? வீடு சின்னதா இருந்தாலும் அவங்க வீட்ல இருக்க எல்லாரோட மனசும் பெருசாம். அங்க போனா அவ சந்தோஷமா வாழ்வாளாம். பணம் காசு இன்னைக்கு வரும், நாளைக்கு போகும். ஆனால் பரிதி மாற மாட்டான். எப்பவுமே எனக்காக அவன் இருப்பான்னு சொல்லிட்டா!”

“எனக்கும் முதல்ல மனசே வரலை. அதான் உன்கிட்ட சொல்லி அவுங்க குடும்பத்தைப் பத்தி விசாரிக்க சொன்னேன். கிடைச்ச தகவல் எல்லாம் நல்லா இருக்கவும், சரின்னு மனசை மாத்திக்கிட்டேன். வீட்டைப் பத்திக் கவலைப்படாத டா. இந்த வீடு அவ பேர்லதானே இருக்கு. என் காலத்துக்குப் பின்னாடி மாப்பிள்ளையும் அவளும் இங்கே இருந்துக்கட்டும்!” என அவர் மகளின் விருப்பத்தை முன்னிறுத்திப் பேச, மற்ற இருவரும் அரைகுறையாக சம்மதம் தெரிவித்தனர். வாணி நன்றாக வாழ்வதைப் பார்த்தால் இவர்கள் மனம் மாறக் கூடுமென சுந்தரி மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

***

“ஏங்க... அவுங்க எல்லாரும் வந்து போனதுலருந்தே இப்படி தனியா உக்கார்ந்து என்ன யோசனை? என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?” எனக் கேட்ட சிந்தாமணி மார்த்தாண்டத்திற்கு ஒரு குவளையில் மோரைக் கொடுத்தார்‌.

“இல்ல, இவனுக்கு பொறுப்பு வந்தப் பிறகு கல்யாணம் பண்ணலாம்னு தோணுது சிந்தா. ஒரு பொண்ணோட வாழ்க்கை இது. எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவு செய்ய முடியாது. அதுவும் இல்லாம வீட்டுக்கு மூத்த மருமகளா வரப் போற பொண்ணு உனக்கடுத்து வீட்டை பார்த்துக்கணும். அதனால பொறுப்பான பொண்ணா தேடித்தான்‌ இவனுக்கு கட்டி வைக்கணும்‌. நாலையும் யோசிக்க வேண்டியதா கிடக்கு. இவனோட கல்யாணத்தைப் பத்தியெல்லாம் இப்போ நான் நினைக்கவே இல்ல!” என்றார்.

“ஏங்க... ஆம்பளை பசங்களுக்கு கல்யாணம் பண்ணாதான் பொறுப்பே வரும்னு சொல்லுவாங்க. என் பையன் என்ன பொறுப்பில்லாம இருக்கான்னு பார்த்தீக. கொஞ்சம் விளையாட்டுப் பையன். மத்தபடி அவன் தங்கம்ங்க. நீங்க நினைக்கிற மாதிரி பொறுப்பில்லாதவனா இருந்தா கூட, கல்யாணம் பண்ணி பொண்டாட்டின்னு வந்துட்டா அவனும் நல்லபடியா நடந்துப்பான்!” என்ற சிந்தாமணி கணவர் அமைதியாய் இருக்கவும் தொடர்ந்தார்.

“அந்த புள்ளையை நீங்களும் பார்த்திருக்கீங்க தானே? அமைதியான புள்ளையா தெரியுறா. பொறுப்பாவும் அம்மாவைப் பார்த்துக்குறா. இவனோட விளையாட்டுத் தனத்துக்கு இந்த மாதிரி பொண்ணுதான்ங்க ஒத்து வருவா!” என்றார் அழுத்தி.

“உன் மகன் வெளிநாட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு இருக்கான். கடன் வேற, இருக்க ஒரே வீட்டையும் அவனை நம்பி அடமானம் வச்சுட்டோம். முதல்ல அதை அடைக்கட்டும்‌ அப்போதான். அவன் மேல எனக்கு நம்பிக்கை வரும்!”

“ஏங்க.. அந்தம்மா சொன்ன மாதிரித்தான். கடன் இல்லாதவன்தான் கல்யாணம் பண்ணணும்னா யாருக்குமே கல்யாணம் நடக்காது. ஏன் நீங்களே என்னைக் கட்டும்போது மாடு வாங்குன காசு ஏழாயிரம் கடனிருக்குன்னு சொல்லித்தானே கட்டுனீங்க. ரெண்டு வருஷத்துல அடைச்சுட்டோம். நீங்க கூடத்தான் அப்போ பொறுப்பில்லாம இருந்தீங்க. பரிதி பொறந்த பிறகுதானே கடை ஆரம்பிச்சீங்க.
அதுக்கு முன்னாடி விவசாயம் பண்றேன், மாடு வளர்க்குறேன்னு திரியலையா?” என்ற மனைவியை அவர் முறைத்தார்.

“முறைக்காதீக. நல்ல சம்பந்தம், அவனுக்கும் இஷ்டம்னு சொல்றான். இப்போ நம்ப வேணாம்னு தட்டிவிட்டு அந்தப் பொண்ணுக்கு வேற இடத்துலே முடிஞ்சிப் போச்சுன்னா, நம்ம மகன் காலத்துக்கும் மனக்கஷ்டத்தோட இருப்பானுங்க. கொஞ்சம் நல்லா யோசிங்க!” சிந்தாமணி நயமாகப் பேசினார்.

“அவுங்களைப் பத்தி எதுவுமே தெரியாது சிந்தா. நாலஞ்சு மாசமாத்தானே இங்க இருக்காங்க. அதுவும் இல்லாம அவுங்க வீடு கொஞ்சம் வசதி மாதிரி தெரியுது. நமக்கேத்த இடத்துல பொண்ணெடுத்தாதான் நமக்கு மரியாதை கிடைக்கும். கல்யாணம் வரை தகைஞ்சு போறவக, அடுத்து ஆம்பளை இல்லாத வீடுன்னு உன் பையனை வீட்டோட வச்சுகிட்டா என்ன பண்றது? எத்தனை வீட்ல பார்க்குறோம். இப்போ குனியுறவக, நாளைக்கு நிமிந்துட்டா?” எனக் கேள்வியாக மனைவியைப் பார்த்தார். கணவன் பேச்சில் அவருக்கும் இப்படியொரு கோணம் இருக்கிறதா என எண்ணம் தோன்றிற்று.

இருந்தாலும் மகனின் விருப்பம் முன்வந்து நிற்க, “நீங்களா போட்டு குழப்பிக்காதீங்க. அதெல்லாம் எம்புள்ளை என்னை விட்டுட்டு நேத்து வந்தவளுக்காகப் போக மாட்டான். வசதியான குடும்பத்தை நம்ப தேடிப் போகலை. அவுங்களா வர்றாங்க. இப்பவே சரின்னு சொல்ல சொல்லலை நான். நீங்க பழனிகிட்டே பேசுங்க. விசாரிச்சுட்டு முடிவெடுக்கலாம். வேணாம்னு உடனே தட்டிவிடாதீங்க!” என்ற சிந்தாமணி,

“ஜோசியர் வேற இவனுக்கு வியாழ நோக்கம் வந்துடுச்சுன்னு சொல்லிருக்காரு. நம்ப பொண்ணு ஜாதகத்தை வாங்கி பொருத்தமும் பார்ப்போம். இந்த புள்ளைதான் பரிதிக்குன்னுனு கடவுள் முடிச்சுப் போட்டிருந்தா யாராலையும் மாத்த முடியாதுங்க. அதனால் மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க!” என்றார்.

மார்த்தாண்டத்திற்கு ஜாதகம், ஜோசியம்,
கடவுள் என இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. முதலில் அவர்களைப் பற்றி விசாரித்துவிட்டு மற்றவற்றை பார்க்கலாம் என இதைக் கிடப்பிலிட்டார்.

தொடரும்..‌.



 
Well-known member
Messages
525
Reaction score
380
Points
63
Parithi isai sollurathu pola ne marriage mudiyura varaikum silent ah irukirathu than best yenna unga veetula ne enna sonnalum atha comedy ah than nenaikira ga ah and moreover unnoda vai yum lollu pidicha vai ah than iruku
 
Well-known member
Messages
602
Reaction score
412
Points
63
சுந்தரி மடமடன்னு யோசிச்சு ஸ்டெப் எடுத்துட்டாங்க, இவங்க யோசிக்கட்டும்
 

Lak

New member
Messages
28
Reaction score
10
Points
3
Nice
 
Top