• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,286
Reaction score
3,784
Points
113
நேரம் – 13 💜

இரண்டு கட்ட நேர்முகத் தேர்வு முடிந்து காத்திருப்போர் பட்டியலில் கடைசியிடத்தைப் பிடித்து அமர்ந்திருந்தான் இளம்பரிதி. காலையில் ஒன்பது மணிக்கு வந்தவன், இப்போது நேரம் மூன்றாகியிருக்க, பசியென காந்த தொடங்கிய வயிற்றுக்கு உணவு கூட ஈய நேரம் கிட்டவில்லை. இந்த வேலை கிடைத்தால் நல்ல சம்பளம் உறுதி. அதனாலே சாப்பாடு எல்லாம் இரண்டாம்பட்சம்தான்.

எப்படியும் வெளிநாட்டிற்கு செல்ல முடியாது எனத் தெளிவாய் புத்திக்கு உறைத்திருக்க, அடுத்து என்னவென யோசித்து சில பல பெரிய நிறுவனங்களில் இவனது படிப்பிற்குத் தகுந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தான்.

ஏற்கனவே இது போல இரண்டு நிறுவனங்களில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டான். ஆனால் வேலை கிடைத்தப்பாடில்லை. இவனது ஆங்கில புலமை ஒரு காரணம் என்றால் இன்றைய சூழலில் வேலையின்மை அதிகரித்திருப்பதும் மற்றொரு காரணம். இரண்டு பதவிகளுக்கு கிட்டத்தட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் வந்திருந்தனர். அதில் மத்திய நடுத்தர வயது ஆண்களும் பெண்களும் அடக்கம். அவர்களது வயதை வைத்தே அனுபவத்தை ஊகித்திருந்தான். எப்போதும் அனுபவமிக்கவர்களுக்கே எவ்விடத்திலும் முக்கியத்துவம் வாய்க்கப்பெறும். அப்படித்தான் அவ்விரண்டிலும் இவன் பின்னகர்த்தப்பட்டிருந்தான்.

அந்த இரண்டும் இல்லையென்றானப் பின்னே இதிலாவது எப்படியும் தேர்வாகிவிட வேண்டுமென சிரத்தையெடுத்து தன்னை தயார்படுத்திக்கொண்டு வந்திருந்தான். மூன்றாவது சுற்றுக்காக அங்கே சொற்ப ஆட்கள் காத்திருந்தனர். அதில் இவனும் அடக்கம்.

“தேர்ட் ரவுண்டுக்கு செலக்டானவங்க நேம்ஸ்!” என ஒரு பெண் வரிசையாய் பெயர்களை வாசிக்க, இவன் ஒவ்வொரு முறையும் தன் பெயர் என எண்ணி ஏமாந்திருந்தான். கடைசி பெயர் வரை இளம்பரிதி என்ற வார்த்தையை அந்தப் பெண் உச்சரிக்காது போனதில் இவனுக்கு வெறுப்பு மண்டியது.
நாகரீகமான ஒரு மன்னிப்போடு மற்றவர்கள் விடைபெறுங்கள் என்றவாறு அப்பெண் அகல, இவன் கோபத்தோடு எழுந்தான்.

கையிலிருந்த கோப்பை எங்கேனும் சென்று தூக்கிப் போட்டுவிடலாமா என்றெண்ணுமளவிற்கு சினம் பொங்கிற்று. ஒவ்வொரு முறையும் அலுவலகத்தில் இவன் விடுப்பு கேட்க, மேலாளர் தர மாட்டேன் என வம்பு செய்தார். என்னவோ அவருக்குப் பரிதி மீது ஏதோவொரு காழ்ப்புணர்ச்சி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவனை வாட்டி வதைத்தார். அப்படித்தான் மூன்று நேர்முகத் தேர்விற்கும் விடுமுறை கிடையாது என அவனைக் கெஞ்சவிட்டு, மனம் திருப்தியானப் பிறகே இவனது விடுப்பு கடிதத்திற்கு அனுமதி அளித்தார்.

இந்த மாதத்தில் இத்தோடு மூன்று நாட்கள் விடுப்பு எடுத்ததால் அதற்குரிய சம்பளமும் போயிற்று. அத்தோடு அலைச்சல், மன-உலைச்சல் என உடம்பு மொத்தமும் கோபம் அலையலையாய் பரவிற்று. மிளகாயை இவனருகில் வைத்தால் கூட தோற்றுப் போகுமளவு காரமாய் இருந்தவன், தெருவோர தேநீர் கடையொன்றில் சென்று நின்றான்.

“அண்ணா ஒரு டீ!” என்றவாறே தலைகவசத்தை கழற்றிவிட்டு, சித்திரை வெயிலில் வியர்த்து வழிந்த நெற்றியைத் துடைத்தான். சூடாய் இருந்த பானம் அவன் தேகத்தின் சூட்டை இன்னுமே உயர்த்தியது.

இருபுறமும் தன்னைக் கடந்து செல்லும் வாகனத்தை இலக்கில்லாமல் வெறித்தவனின் மனதில் தன்னிச்சையாக இசைவாணி வந்தமர்ந்தாள்.

என்னதான் விளையாட்டுத் தனத்துடன் பெண்களைக் கண்டதும் அந்த வயதிற்கேயுரிய அட்டகாசங்கள் செய்தாலும், இதுவரை யாரையும் பரிதி காயப்படுத்தியதில்லை. காதல், அது இதுவென யார் பின்னிலும் சுற்றியும் திரிந்ததில்லை. யாராவது அழகாய் இருந்தால் பார்ப்பான், ரசிப்பான். தெரிந்தவள் என்றால் வாய்விட்டு பாராட்டுவான். சில சமயம் கேலி செய்வான். மற்றபடி பெரிதாய் வம்பிழுக்க மாட்டான்.

ஆனால் இசைவாணி விஷயத்தில் எல்லாம் தலைகீழானது. இரண்டு நாட்கள் முன்னே அவளிடம் கத்தி தீர்த்துவிட்டு வந்திருந்தாலும், மனதிற்குள்ளே ஏக உறுத்தல். என்னவாயிற்று எனக்கு எனக் கேட்குமளவு வார்த்தையை திராவகம் போல வீசிவிட்டான்.

போதாத குறைக்கு இரண்டு நாட்களும் உறக்கம் வராமல் புரண்ட பொழுது, அவள் பேசிய ஒப்பந்த திருமண விடயம் மூளையைக் குடைந்தெடுத்தது. அவன் விருப்பு வெறுப்புகளைத் தள்ளி வைத்த மூளை, மூன்றாம் மனிதராய் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணச் சொல்லி உந்திற்று.
சொன்ன பந்தத்தில் தனக்கு கிடைக்கப் போகும் அனுகூலங்களை மூளை வரிசைப்படுத்த, அவன் இதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கை நெறியில் மொத்தமாய்க் கல்லெறிந்துவிட்டது போல சலனப்பட்டான்.

அவள் பேசும்போது அபத்தமென எண்ணியவனால் தற்போதைய தன் நிலைக்கு அதுவொன்றும் அத்தனைப் பெரிய குற்றமாகக் தெரியவில்லை. ‘ம்யூட்சுவல் பெனிஃபிட்’ என அவனுக்கு அவனே சமாதானம் சொல்ல முயன்றான். நேற்றுவரை அது எதையும் ஏற்காமல் சண்டித்தனம் செய்த மனதுதான், தற்போதைக்கு அதீத அமைதியில் திளைத்திருந்தது.

அவளைப் போலவே இவன் மனமும் என்னத்தான் வந்துவிடப் போகிறது என்ற மேம்போக்கான எண்ணத்தைக் கையிலெடுத்தது.‌ ஒரே ஒரு பொய்தானே? அதனால் தன் வாழ்க்கைத் தரம் மேம்படும். அப்பாவின் மளிகை கடையை சற்றே பெரிதுபடுத்தி, அவருக்கு கீழே ஆட்களை வேலைக்கு நியமித்து அந்த மனிதருக்கு ஓய்வு கொடுக்கலாம். தம்பி தங்கைகளின் வாழ்க்கையை அவர்களுக்குப் பிடித்த மாதிரி அமைத்துக் கொடுக்கலாம் என எத்தனையோ நன்மைகள் கிட்டும் பட்சத்தில் ஒரு பொய் ஒன்றும் என்னைத் தரம் தாழ்த்தி விடாது என மூச்சை இழுத்துவிட்டான். நேற்றைய சிந்தனைக்கும் இன்றைக்கும் தன்னிடம் இத்தனை வேறுபடுகளா என எண்ணியவன், தலையை உலுக்கினான். மனம் மெதுவாய் சமன்பட, வயிறு தன்னிருப்பை உணர்த்தியது.

நேரே ஒரு நல்ல உணவகத்திற்குச் சென்று தனக்கு வேண்டியவற்றை வயிறும் மனதும் நிரம்பும் வரை உண்டு கொண்டே ஒப்பந்த திருமணத்தின் சாராம்சத்தை யோசித்தான். பிரியமானவளே படத்தை தவிர்த்து இது போலொரு கதைக்கருவில் வேறு என்னென்ன திரைப்படம் பார்த்திருக்கிறோம் என்ற சிந்தனை வேறு. இன்றைக்கு அந்தப் படத்தை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு நிறைய நாடகங்கள் வந்துவிட்டன எனக் கேலியாக எண்ணியவன், நேரத்தைப் பார்த்தான்.

முடிவெடுத்தப் பின்னர் காலத்தாமதம் ஏன் என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு, சரியாய் இசைவாணியின் அலுவலகத்திற்கு அருகே சென்று உலாத்த தொடங்கினான். ஐந்து மணிக்கு இன்னும் அரைமணி நேரமிருந்தது. இத்தனை நாட்கள் பழக்கத்தில் அவள் வேலையிடம் முதல் வேலை நேரம் வரை தெரிந்து வைத்தது நல்லதாகப் போயிற்று என அந்த தெருவை அளந்தான். டி‌.சி.எஸ் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்பதை அந்த தெருவின் செழிப்பே காண்பித்தது.

இவன் வாகனத்தில் சாய்ந்து நின்று அலைபேசியில் கவனத்தை வைக்க முயன்றான். ஆனால் முடியாது போனது. இரண்டு நாட்கள் முன்னே அவளைத் தான் வசைபொழிந்த அத்தனை சொற்களும் மீண்டும் மீண்டும் அவனது செவியில் ஒலித்தன. சுவரில் அடித்த பந்தாக மீண்டும் அவளிடமே சென்று நிற்க கூடுமென தெரிந்திருந்தால், அன்றைக்கு அவளிடம் அத்தனைக் கடுமை காண்பித்திருக்க மாட்டான். இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளிடம் சென்று நிற்பது எனத் தயக்கம், வெட்கம், ரோஷம் என எல்லாமே போட்டி போட்டு முன்னே வர, எல்லாவற்றிற்கும் மேல் காரியம்தான் பெரிது என அதையெல்லாம் தூசியாய்த் தட்டினான்.

அவளது கோபத்தைக் குறைத்து எப்படி சமாதானம் செய்வது என யோசித்தான். இருவருக்கும் அத்தனை நெருக்கம் இல்லாததால் அவளைப் பற்றி இவனால் கணிக்க முடியவில்லை. என்ன செய்து அவள் கோபத்தை மலையிறக்குவது என சிந்தித்தவனுக்கு தலை வலித்தது. சற்று தூரம் சென்று ஒரு கடையில் புகையிலை ஒன்றை வாங்கி ஊதினான்.‌

நிக்கோட்டின் சென்று டோபமைனை உசுப்பி விட்டதில் சற்றே உடல் ஆசுவாசமடைய, தலைவலி போன இடம் தெரியவில்லை. வாயில் சுவிங்கம்‌ ஒன்றைப் போட்டு மென்றான். நேரம் ஐந்தானதும் வயிலையே பார்த்திருந்தான். அவள் மகிழுந்தில் சென்றாளா, இல்லை இருசக்கர வாகனத்தில் சென்றாளா என இவனுக்குத் தெரியாது. இரண்டையும் மாற்றி மாற்றி உபயோகிப்பாள் என்பதுவரை கவனித்திருந்தான்.

ஐந்தே காலுக்கு முகக்கவசம் மறைத்த முகத்தோடு இசைவாணி தன் இருசக்கர வாகனத்தில் வெளியே வர, அவளுக்கருகே ஒரு ஆடவனும் வாகனத்தில் வந்தான். பரிதி உதட்டைக் குவித்து மூச்சை வெளியேற்றி, நேரே சென்று அவளை வழிமறித்தான்.

இசைவாணி அவனை எதிர்பாராது திகைத்தாலும் நொடியில் அந்நிய பாவனையைத் தருவித்தவள், சுருங்கிய புருவத்துடன் முகக்கவசத்தைக் கழற்றினாள்.

“இசைவாணி... அது... சாரி!” அவன் மென்று விழுங்க, “யார் நீங்க?” ஒற்றை வார்த்தையில் அவன் தயக்கத்தை உடைத்துப் போட்டிருந்தாள்.

“ம்ப்ச்... நான் பேசுனது ரொம்ப தப்பு. நான் அப்படி பிஹேவ் பண்ணிருக்க கூடாதுதான். ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி சாரி இசைவாணி!” பரிதி இறங்கிய குரலில் பேச,

“வாணி... ஹூ இஸ் திஸ்?” அவள் நின்றதும் அருகேயிருந்தவனும் தோழியின் பாதுகாப்பு கருதி பின்தங்கிவிட்டான்.

“ஹம்ம்... தெரியலையே பிரவீன். வேற யாரோன்னு நினைச்சு என்கிட்ட பேசிட்டு இருக்காரோ என்னவோ? பாவம் பார்த்தா மெண்ட்லி இல் மாதிரி தெரியுது!” நக்கலாக கூறி இவனைப் பார்த்தாள் இசைவாணி.

அதில் கடுப்பானவன், “இசைவாணி... நான் பேசுனது தப்புதான்‌. அதுக்காக நீ இப்படி பேசுறது சரியில்ல!” என்றான் கண்டிப்பான குரலில்.

“யார் நீ? உன்கிட்டே எனக்கென்ன பேச்சு. முதல்ல வழியை விடு” இவள் எரிச்சலாக கூறியும், அவன் அழுத்தமாக நின்றான்.

“ஹே மிஸ்டர்... யார் நீ? அவப் பேர் உனக்கு எப்படித் தெரியும்? எதுக்கு வம்பு பண்ணிட்டு இருக்க நீ?” இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த பிரவீன் இப்போது இடைபுகுந்தான்.

“ப்ம்ச்... நீ யாரு டா கோமாளி?” பரிதி கடுப்பாய்க் கேட்டதும், “பரிதி...” எனக் கோபமாக அழைத்தாள் இசைவாணி.

“இதோ... உங்க ப்ரெண்ட் மேடம் இசைவாணி என் பேரை சொல்லிக் கூப்பிட்டுட்டாங்க. சோ, இப்போ அவளுக்கு என்னைத் தெரியும்னு ஒத்துக்கிட்டு மூடிட்டு கிளம்புங்க கோமாளி!” பிரவீனை இவன் கேலி செய்யவும், அவன் மூக்கிற்கு மேல் கோபம் வந்தது போல.

அதைப் பார்த்து பதறிய இசைவாணி, “ப்ரவீன், ப்ளீஸ்... அவனுக்காக நான் சாரி கேட்குறேன். எங்க ஏரியா பையன்தான். கொஞ்ச நாளா இவனுக்கு மரக்கழண்டு போச்சு. அதான் இப்படி பேசுறான். நீ சீரியஸா எடுத்துக்காம கிளம்பு. நான் அவங்கப்பாகிட்டே சொல்லி கண்டிச்சு கட்டிப் போட சொல்றேன்!” என அவள் படபடவென கூறவும், பரிதி ருத்ரமூர்த்தியாக மாறிப் போயிருந்தான்.

“ஓ... இந்த மரக்கழண்டைவனைத்தான் ரெண்டு நாளைக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டியாடீ?” என அவன் இவளை உறுத்து விழிக்க, பிரவீன் இசைவாணியை அதிர்ந்து நோக்கினான்.

“ப்ரவீன் ப்ளீஸ் நீ கிளம்பு. நான் நாளைக்கு எல்லாம் சொல்றேன்!” இவள் அவனைக் கிளப்புவதில் குறியாய் இருந்தாள். இந்த பரிதி வேறு ஏதாவது உளறி வைப்பானோ என்ற கடுப்பு அவளிடம்.

“ஆமா மிஸ்டர் ப்ரவீன். எனக்கும் என் ஆளுக்கும் ஆயிரம் ரெண்டாயிரம் இருக்கும். நீங்க உள்ள வராதீங்க. அதான் உங்களுக்கு நல்லது!” பரிதி நக்கலாக கூற,

இசைவாணியைப் பார்த்த ப்ரவீன், “லவ்வர்ஸ்குள்ள சண்டைன்னு முதல்லயே சொல்ல வேண்டியதுதானே இசைவாணி. என்னை ஏன் நடுவுல ஜோக்கராக்குன?” என்ற முனங்கலுடன் அவன் அகன்றான்.

“அறிவில்ல உனக்கு? ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல எப்படி பிஹேவ் பண்ணணும் கூடத் தெரியாதா? ஹம்ம்... நீயும் நானும் லவ் பண்றோம், கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு ஏதோ பினாத்திட்டு இருக்க? என்ன கேனத்தனம் இது? இப்படித்தான் உங்கம்மாப்பா உன்னை வளர்த்தாங்களா? ஒழுக்கம்னா என்னென்னு தெரியாதா. அவங்க வளர்ப்பு அப்படி போல?” அவள் வார்த்தைகளை சாட்டையாய் சுழற்ற, அவன் இவளை கோபத்தில் உறுத்துப் பார்த்தான். அவன் பார்வையே தீ கங்காய் கனன்றன.

“வாயை மூடு இசைவாணி. கோபத்துல அறைஞ்சுடப் போறேன். என் அம்மாப்பா பத்திப் பேசுன, நான் மனுஷனா இருக்க மாட்டேன்!” எனப் பல்லைக் கடித்தான் இவன்.

“ஓஹோ... கோபம் வருதோ மிஸ்டர் இளம்பரிதிக்கு. உன் அம்மாப்பான்னா உசத்தி. என் அம்மா மட்டும் என்னை ஒழுக்கமா வளர்க்க தவறிட்டாங்க. அப்படித்தானே?” அவனை அழுத்தமாய்ப் பார்த்தாள் இவள்.

அந்தக் கேள்வியில் அவள் முகம் பார்க்க முடியாமல் குனிந்தவன், “சாரி... நான் அன்னைக்கு கோபத்துல என்ன பேசுறேன்னு தெரியாம பேசிட்டேன்...” என்றான் குற்றவுணர்வு மேலிட.

அலட்சியமாக உதட்டை வளைத்தவள், “சே... சே. நீ எனக்கு எக்ஸ்ப்ளனேஷன் எல்லாம் தரவே தேவையில்லை. உன் கேரக்டரே இப்படித்தான்னு நான் முடிவு பண்ணிட்டேன். ஆப்போசிட்ல இருக்கவங்க என்ன ஆனா நமக்கென்னன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி பேசி விடுறது. அப்புறம் எதுவுமே நடக்காத மாதிரி சாரி கேட்குறது. சீ... என்ன மனுஷன் டா நீ? அன்னைக்கு நீ பேசுன வார்த்தையெல்லாம் திருப்பி எடுக்க முடியுமா சொல்லு.”

“எவ்வளோ பெரிய வார்த்தையை அவ்வளோ அசால்ட்டா சொல்ற. ஹம்ம்... ரெண்டு நாளா கண்ணை மூடுனா நீ கத்திட்டுப் போனதுதான்டா ஞாபகம் வந்துச்சு. நான் பேச ஆரம்பிக்கும் முன்னாடியே என்ன சொன்னேன்? உனக்குப் பிடிக்கலைன்னா டீசன்டா நோ சொல்லிட்டு கிளம்புன்னுதானே? பட், நீ என்ன பண்ண? நீ பேசுற வார்த்தை என்னைப் பாதிக்கும்னு கொஞ்சமாச்சு மனுஷத் தன்மையோட யோசிச்சிருந்தா அப்படி பேசிருப்பியா” என ஆத்திரத்துடன் கேட்டாள்.

இவள் முகத்தைப் பார்க்காது, “சாரி...” என முணுமுணுத்தவன், “தப்புதான்... அதான் ரியலைஸ் பண்ணி வந்தேன்!” என்றான்.

“யாருக்கு வேணும் உன் சாரி. குப்பைலத் தூக்கிப் போடு. முதல்ல வழியைவிடு. உன் முகத்தைப் பார்த்தாலே இர்ரிடேட் ஆவுது!” என்றவள் வாகனத்தை முடுக்க, அவள் பேசியதில் இவனுக்கு ரோஷம், கோபமெல்லாம் பொத்துக்கொண்டு வந்தது.

ஆனாலும் காட்ட முடியாத நிலையை எண்ணிப் பல்லைக் கடித்தவன், “எனக்கு சம்மதம்தான்” என்றான் அழுத்தமாய்.

அவனை மேலிருந்து கீழாகப் பார்த்தவள், “என்ன சம்மதம்? எதுக்கு சம்மதம்?” என்றாள் இளக்காரம் தெறிக்க.

பல்லைக் கடித்தவன், “எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம். அதைச் சொல்லத்தான் வந்தேன்!” என்றான் ரோஷக் குரலில்.

“யார்ரா நீ? என்கிட்டே எதுக்கு நீ மேரேஜ்க்கு சம்மதம் சொல்லணும்? உனக்கும் எனக்கும் நடுவுல என்ன இருக்கு? உங்கப்பா கடை வச்சிருக்காரு. அங்க நாங்க கஸ்டமர்ஸ். அவ்வளோதானே? எந்த தைரியத்துல ஒரு பொண்ணை இப்படி ரோட்டை மறைச்சுப் பேசிட்டு இருக்க? நான் ஒரு சத்தம் போட்டா போதும், சுத்தி இருக்கவங்க உன் எலும்பை எண்ணிடுவாங்க!” என்றாள் கோபம் குறையாத குரலில்.

இவன் முகம் அவமானத்தில் சிவந்தது. படக்கென வழியைவிட்டு நின்றான். அவள் கோபத்தோடு அகல, இவன் தன் காலைத் தரையில் ஆத்திரத்தோடு உதைத்தவன், வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றான். இருவரும் சரியாய் போக்குவரத்து சமிக்ஞையில் சந்தித்துக்கொள்ள, ஆளுக்கொருபுறமாக முகத்தை திருப்பினர்.

‘சீ... இந்த அவமானம் உனக்குத் தேவைதான் டா. போயும் போயும் இவகிட்டே அசிங்கப்பட்டிருக்க? எவ்வளோ திமிர் இருந்தா கத்தி ஆளுங்களைக் கூப்பிட்டு அடிவாங்க வைப்பேன்னு சொல்லி இருப்பா!’ இவனுக்குள் கோபம் கனன்றது. இவன் செய்தது தவறுதான். அதற்காக அவள் செய்கைகளை நியாயப்படுத்துவாளா? மனம் ஆற மறுத்தது.

பச்சை விழுந்ததும் படக்கென இருவரும் அகல, அவளை முந்திச் செல்ல வேண்டுமென பரிதி அதீத வேகத்தில் சென்றான். இசைவாணி நிதானமாகத்தான் வாகனத்தை இயக்கினாள். அவனுக்குத்தான் கோபத்தில் கண்மண் தெரியவில்லை.

இவனைப் போலவே அருகே ஒரு மகிழுந்து வேகமாய் வர, சட்டென இவன் வாகனத்தை உரசி அது கடக்க, பரிதி நிலைத்தடுமாறி கீழே விழுந்து உருண்டிருந்தான். தடுப்பில்லாத சாலை என்பதால் அவனுக்கு எதிர்புறமாக வந்த இருசக்கர வாகனம் சரியாய் இவன் தலையை நோக்கி வந்து கடைசி நொடியில் சடாரென கிறீச்சிட்டு நின்றது.
அவன் வந்த வேகத்திற்கு
ஏற்றியிருந்தால், பரிதியின் தலை சிதைந்து போயிருக்கும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

பரிதிக்குப் பின்னே வந்து கொண்டிருந்த இசைவாணிக்கு ஒரு நொடி தலைச்சுற்றிப் போனது. அவன் விழுந்து மறுபுறம் சென்றதுமே இவளது இதயம் துடிப்பை அதிகப்படுத்தியிருக்க, உடனே வாகனத்தை ஓரமாய் நிறுத்திவிட்டு அவனருகே ஓடினாள்.

“ஏய்... என்னாச்சு பா? என்ன?” நான்கு பேர் கூடி நின்று அவனை தூக்கி நிறுத்தினர். அதீத வேகத்தில் வந்ததால் கை தரையில் உரசி முட்டிப் பெயர்ந்திருந்தது. நெற்றியோரமும் சிராய்த்திருக்க, சட்டைக் கை கிழிந்து போனது.

“ஏய்... அறிவில்லையா உனக்கு? நீ சாகுறதுக்கு என் வண்டித்தான் கிடைச்சுதாடா? போய் கவர்மெண்ட் பஸ்ல விழ வேண்டியதுதானே? உன்னைப் பெத்த கடமைக்கு உங்கப்பன் ஆத்தாளுக்கு காசாவது கிடைக்கும்!” இருசக்கர வாகனத்தில் வந்தவர் கத்த தொடங்க, கையிலிருந்த காயத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பரிதி பல்லைக் கடித்து நிமிர்ந்தான்.

“ஏய்!” என இவன் எகிறிக்கொண்டு செல்ல, இசைவாணி இருவருக்கும் இடையே புகுந்திருந்தாள்.

“பரிதி... என்ன பண்ற? தப்பு உன் மேலதான்!” என்றவாறே கவனிக்காமல் அவன் அடிப்பட்ட கையை அழுத்திப் பிடித்துவிட்டாள் போல.

அதில் முகத்தைச் சுருக்கியவன்,
“கையை விடு டீ முதல்ல!” என அவளைத் உதறித் தள்ளினான். இசைவாணி அவனை முறைத்தபடியே தன் கரத்தைப் பார்க்க, அவனது குருதி இவள் மேனியில். வலியில்தான் அவன் கத்தினான் என உணர்ந்தவள், அந்த மனிதரிடம் திரும்பினாள்.

“சாரி சார்... தெரியாம விழுந்துட்டான். இதைப் பெருசு பண்ணாம கிளம்பிடுங்க!” என அவரை ஆசுவாசம் செய்து அனுப்பி வைத்தவள், இவனிடம் திருப்பினாள்.

வலித்த கையோடு தன் வாகனத்தை இயக்க முயன்றான். ஆனால் தரையில் உராய்ந்ததில் அதில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கும் போல. அது இவன் உதைத்த உதைக்கு எவ்வித எதிர்வினையும் காட்டவில்லை. அவனையே பார்த்திருந்த இசைவாணி அருகே உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் நபரை அழைத்து வரப் பணித்தாள். பின்னர் தண்ணீர் போத்தலோடு அவனருகே சென்றாள்.

“மூஞ்சி கைகால் கழுவிக்கோ. கைல ரத்தத்தை துடைச்சுக்கோ!” என அவனிடம் தண்ணீரை நீட்டினாள். அவளை முறைத்தவன், அதை வாங்கவில்லை. அவன் முழங்கையைத் திருப்பி நீரை ஊற்றி மணலைத் தட்டிவிட்டாள். இரத்தமும் கசிந்தது போல. அவன் முகத்தைச் சுளித்தான்.

“இதுதான் நீ பரிதி. உனக்கு எதுலயும் பொறுமை இல்ல. எல்லாத்துலயும் அவசரப்படுற. கண்மண்ணு தெரியாம கோபப்படுற. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ய நினைக்கிற. பட் லைஃப் அவ்வளோ ஈஸி கிடையாது!” என்றவாறே அவனது குருதியைத் துடைத்தவளிடமிருந்து கையை உருவியவன், அவள் முகம் பார்க்காமல் வேறுபுறம் திரும்பினான்.


ஐந்து நிமிடத்தில் ஒரு வாலிபர் வாகனத்தை எடுத்துச் செல்ல வந்துவிட, “அண்ணா... இந்த பைக்கை ரிப்பேர் பண்ணி எங்க வீட்டு ஆப்போசிட்ல இருக்க மளிகை கடைல விட்ருங்கண்ணா. இதை வச்சுக்கோங்க. எவ்ளோ ஆச்சுன்னு சொல்லுங்க!” என்றவாறே அவரிடம் சில ஐநூறு ரூபாய் தாள்களைத் திணித்தவள், பரிதியைப் பார்த்தாள்.

“என் ஸ்கூட்டில வந்து ஏறு!” எனக் கண்டிப்புடன் கூறிவிட்டு, அவள் சென்று தன் வாகனத்தை எடுத்து வந்து அவனருகே நிறுத்த, அவன் முகத்தை தூக்கினான். வரமாட்டேன் என்ற பாவனை அதிலிருந்தது.

“இப்போ ஸ்கூட்டில ஏறுனா, நீ சொன்ன சம்மதத்தைக் கன்சிடர் பண்ணுவேன். இல்லைன்னா ஆஃபர் எக்ஸ்பயர்ட் ஆகிடும். இங்கேயே எல்லாத்தையும் முடிச்சுக்கலாம். சோ, சாய்ஸ் இஸ் யுவர்ஸ்!” அழுத்தமாகக் கூறியவளைக் கடுப்போடு பார்த்தவன் சில நொடிகள் யோசித்தான். ரோஷத்தை விட காரியம்தான் பெரிதாய்ப்பட்டது. அவளை மு
றைத்தவாறே வாகனத்தில் ஏறியமர்ந்தான் பரிதி.

அந்நொடியிலிருந்து இளம்பரிதி இசைவாணியின் வாழ்க்கைப் பயணம் தொடங்கிற்று.

தொடரும்...

சண்டே எபிசோட் வேணுமா மக்களே 😉
 
Well-known member
Messages
583
Reaction score
396
Points
63
சண்டைல ஆரம்பிச்சு, கல்யாணம் பண்ணப்போவதை பார்க்க சன்டே எபி வேணும்
 
Well-known member
Messages
503
Reaction score
361
Points
63
Ivanga sandai la mathavanga mandai ah odaiyama irundha seri
 
Top