• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,285
Reaction score
3,781
Points
113
நேரம் – 12 💜

இரவு கவிழத் தொடங்கிய இரவு பொழுது. அடர் கருமை அன்றைக்கு முழு நிலா வெளிச்சத்தில் நிறமிழந்தது போல ஆங்காங்கே வெளிச்சம் படர்ந்திருந்தது. இசைவாணி தோழியுடன் வீட்டின் வாயிலுக்கு வந்திறங்கினாள்.

“பாய் வாணி...” அவள் கையசைத்து அகல, இவள் நேரே சிந்தாமணி கடைக்குச் சென்றாள். மார்த்தாண்டம் அமர்ந்திருந்தார். இவளைப் பார்த்ததும் புன்னகைத்தார்.

இசைவாணி வேலை பார்க்குமிடத்தில் ஒரு பெண்ணிற்கு இன்றைக்குத் திருமணம். அதற்குத்தான் சென்றிருந்தாள். மாலை விரைவில் வீட்டிற்கு வந்துவிடலாம் என அவள் எண்ண, உடன் வந்த சகபணியாளர்கள் பிடித்துக் கொண்டனர். அதனாலே தாமதமாகிவிட்டது.

திருமணத்திற்கு செல்கிறோம் என்பதால் அடர் ஆகாய நீல நிறத்தில் கிளிப்பச்சை கலந்த புடவை ஒன்றை உடுத்திச் சென்றிருந்தாள். நாள்முழுவதும் அலைந்ததில் உடல் சோர்ந்து போயிருக்க, முகத்தில் அதை பிரதிபலித்தவாறே இரவிற்கு சமைப்பதற்கு என்ன காய்கறியை வாங்கலாம் என ஆராய்ந்தாள். சப்பாத்தி சுட்டு, காலிபிளவர் உருளைக்கிழங்கு குருமா வைக்கலாம் என்றெண்ணி உருளைக் கிழங்கை கூடையிலிட்டாள்.

இசைவாணி அன்றைக்குப் பரிதியை சந்தித்ததோடு சரி. அதன்பின் நான்கு நாட்களாக அவனைக் கடையில் பார்க்க முடியவில்லை. ஏதேனும் அலுவலாக இருக்குமென அவன் நினைப்பை புறந்தள்ளி, வெங்காயத்தையும் சேர்த்தெடுத்துக் கூடையை நிரப்பினாள்.

“ப்பா... அம்மா ரெடியாகிட்டாங்க. உங்களைக் கூப்பிட்டாங்க. இப்போ கிளம்புனாதான் ரிசப்ஷனுக்கு கரெக்ட் டைம்க்குப் போக முடியுமாம்!” என்றவாறே வந்து நின்ற பரிதியின் ஒரு பக்க செவியைக் காதொலிப்பான் நிறைத்திருக்க, வலக்கரத்தில் அலைபேசி இருந்தது.

“சரி... நேரத்துக்கு கடையை அடச்சிட்டு வீட்டுக்குப் போ. புள்ளைங்க தனியா இருப்பாங்க!” என்றவாறே பெரியவர் நடக்க, இவனது குரல் கேட்டு நிமிர்ந்து புன்னகைத்தாள் இசைவாணி.

அவள் சேலையில் நின்றிருக்கவும் யாரோ ஒருவள் என்றெண்ணியவன், அவள் முகத்தைப் பார்த்ததும் திகைத்தான். எப்போதும் நவநாகரீகமாக உடை உடுத்துபவள் இன்றைக்கு சேலையை பாந்தமாக அணிந்திருக்கவும், இவனது புருவங்கள் ஒரு நொடி வியப்பில் ஏறியிறங்கின.

“வாவ்! இசைவாணி. நான் ஏதோ ஏரியா ஆன்ட்டின்னு நினைச்சேன். பட் நீயா இது!” போலியாய் ஆச்சரியப்பட்டவனை முறைத்தாள் இவள்.

“ஹே நிஜமா... எப்பவும் சுடிதார், ஷார்ட் டாப், ஜீன்ஸ்னு உன்னை மாடர்னா பார்த்திட்டு இன்னைக்கு சேலைலப் பார்க்கவும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்மா!” உற்சாகத்துடன் கடைக்குள்ளே நுழைந்தான்.

“ச்சு... என்னைப் பார்த்தா மட்டும் இல்ல பரிதி... பொண்ணுங்களைப் பார்த்தாலே உன் கண்ணுக்கு மனசுக்கு எல்லாம் குளிரிச்சியா இருக்குமே!” அவன் கேள்விக்கு இடக்காகப் பதிலளித்தவள், “இது ரெண்டுக்கும் விலையை சொல்லு!” என வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் அவனிடம் நீட்டினாள்.

அவளை முறைத்துக் கொண்டே வாங்கியவன், “ஆமா... அந்தக் கைல என்ன கவர்ல?” எனக் கேட்டவாறே காய்கறியின் எடையைப் பார்த்து விலையை மனதிற்குள் கணக்கிட்டான்.

“அது... ஷாப்பிங் போய்ட்டு வரேன்!” அவள் பதிலளிக்க,

“ஓஹோ... அப்போ வெளிய ஏதோ ஒரு கடையில ஷாப்பிங் பண்ணிட்டுத்தான் எங்கூட்டு கடைக்கு வந்திருக்க நீ? ஹம்ம்... அப்போ இதையும் அங்கேயே வாங்கி இருக்க வேண்டியுதுதானே? ஏன் இங்க வந்த?” என சடைத்தான் பரிதி.

“ப்ம்ச்... சே, உங்க கடையில காஸ்மெட்டிக்ஸ், ஆக்ஸஸரீஸ், ப்ரெஷ் க்ரீம், கப் நூடுல்ஸ், சீஸ், டார்க் சாக்லேட், சாக்கோ சிப்ஸ் எல்லாம் இருக்குன்னு எனக்குத் தெரியாம போச்சே!” நக்கலாய் உச்சுக் கொட்டினாள் இவள்.

அதில் அசடு வழிந்த பரிதி தொண்டையைக் கனைத்து, “நெக்ஸ்ட் டைம் இதெல்லாத்தையும் வாங்கி வைக்கிறேன். இப்போ கிளம்பு காத்து வரட்டும்!” என்றவனைக் கேலியாகப் பார்த்துவிட்டு அவள் திரும்ப, “ஹே இசைவாணி... ஒன் மினிட். உன்கிட்டே ஒரு டவுட் கேட்கணும்!” என்றான் சின்னதாய் குரலிலேறிய போலி பரபரப்புடன்.

அவள் என்னவென்பதாய் திரும்பி பார்த்தாள். சோர்ந்து கிடந்த முகத்திலிருக்கும் கோதுமை நிற விழிகள் இவனை வசீகரித்தன போல. இமையை சிமிட்டியவன், “இல்ல... டார்க் ஷேட்ல இருக்கவங்களுக்கு டார்க் கலர் சேரி சூட்டாகாதாம். பட்‌ உனக்கு மட்டும் இந்த கலர் நல்லா எடுக்குது. பார்க்கறப்ப அப்படியே அள்ளுறீயே!” கேலியாய் கேட்டாலும் அவன் மனத்திலிருந்தைதான் உரைத்தான்.

“ஆ... உங்கப்பா இருக்கும்போது இதே கேள்வியைக் கேளேன் பரிதி. ஆற அமர நான் ஆன்சர் பண்றேன்!” என மென்மையாய் அவனை முறைத்தவள், ‘கொஞ்சம் இடம் கொடுத்தா மடத்தைப் புடுக்கிறான் ராஸ்கல்!’ என மனதிற்குள்ளே அவனை வறுத்தெடுத்தபடியே நடந்தாள்.

வீட்டிற்கு வெளியே காமராஜின் இருசக்கர வாகனம் நிற்க, “மாமா வந்திருக்காரா? சொல்லவே இல்லையே!” என முணுமுணுப்புடன் இவள் உள்ளே செல்ல, அவர்கள் பேச்சு சப்தம் சுந்தரியின் அறையில் கேட்டது. இவள் அங்கே சென்றாள்.

“அக்கா... என்ன பேச்சு இது? ஹம்ம்... நாங்க எல்லாரும் இருக்கோமே. அப்படியெப்படி உன் மவளைத் தனியா விட்ருவோம்னு நினைக்கிற நீ?” காமராஜ் தன் கணீர் குரலை உயர்த்திப் பேச, வாணி அப்படியே நின்றுவிட்டாள்.

“இல்ல டா... ஆயிரம் இருந்தாலும் நான் இருந்து அவளுக்கு நல்லது கெட்டது பார்க்குற மாதிரி வருமா? என் கண்ணு முன்னாடியே அவளுக்கொரு நல்லது நடக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனால் கடவுள் வேற ஏதோ யோசிச்சு வச்சிருக்காரு போல!” என்றவர் குரலில் வேதனை மிகச்சரியாய் இசைவாணியைத் தாக்கிற்று. கலங்கிய விழிகளை சிமிட்டிக் கொண்டாள்.

“க்கா... உனக்கு எதுவும் ஆகாது.
டாக்டர்கிட்டே நாங்க பேசுனோம். ஆப்ரேஷன் முடிஞ்சதும் நீ நல்லாகிடுவ!” இவர் பொறுமையாய் கூறினார்.

“எனக்கு அந்த நம்பிக்கை இல்ல காமராசு. நாளுக்கு நாள் என் உடம்பு மோசமாகிட்டே போகுது. ரோஷத்துக்காக உயிரைக் கைல பிடிச்சு வச்சிருக்கேன். வாணியோட அப்பா வீட்டு சொந்தங்களுக்கு முன்னாடி என்‌ புள்ளையை நல்ல இடத்துல கட்டிக் கொடுக்கணும். அப்பன் இல்லாம இவ எப்படி மகளைக் கட்டிக் கொடுக்குறான்னு என் காதுபடவே நாக்குல நரம்பில்லாம பேசுனாங்க.‌ எனக்கு ஆப்ரேஷன் நினைச்சுப் பயமா இருக்கு. என்னதான் டாக்டர் உறுதியா சொன்னாலும் என்னோட விதி முடிஞ்சதுன்னா யாரலையும் என் உயிரைப் பிடிச்சு நிறுத்த முடியாது!” என்றவர் குரல் கலங்கிப் போயிற்று.

அவரது கையை அழுத்திப் பிடித்த காமராஜ், “இப்போ நான் என்ன பண்ணணும்னு சொல்லுக்கா!” எனக் கேட்டார்.

“அடுத்த மாசம் ஆப்ரேஷன். அதுக்கு முன்னாடி உன்கிட்டே பேசலாம்னுதான் கூப்பிட்டேன். சொத்துன்னு சொல்லிக்க எதுவும் மிச்சமில்லாம எல்லாத்தையும் வித்துட்டோம். என்னோட லாக்கர்ல ஐம்பது பவன் நகை இருக்கு. வாணியோட அப்பா அவளுக்குன்னு ஆசையாசையா வாங்குனது. பொண்ணுக்கு நூறு பவன் போட்டுக் கல்யாணம் பண்ணுவேன்னு வாய்க்கு வாய் சொல்லுவார். இருந்த நகைல பாதியை கடனை அடைக்க வித்துட்டோம். கொஞ்சமாவது இவளுக்கு வேணும்னு பத்திரப்படுத்தி இருக்கேன். ஆப்ரேஷன் செலவுக்குப் பத்தலைன்னு இதுல கை வச்சுடுவா என் மக. அதனால நீயும் நானும் போய் ஒருநாள் நகையை எடுத்துட்டு வரலாம். நீ அதை பத்திரமா வச்சிக்கோ. என் காலத்துக்கு பின்னாடி நீதான் அவளுக்கு கார்டியனா இருக்கணும். நல்ல பையனா பார்த்துக் கல்யாணம் பண்ணி வை. வீடு அவ பேர்லதான் இருக்கு. நகையும் வீடும்தான் இப்போதைக்கு அவளுக்கிருக்கு. நம்ப வசதிக்கு தக்கன அவளுக்குப் பாரு!” என்றார் பெருமூச்சுடன்.

“ப்ம்ச்... நீ இப்படி பேசுறதை உம்மவ கேட்டா கஷ்டப்படுவாக்கா!” இவர் ஆதங்கத்துடன் கூறினார்.

“அதான் நானும் அவ முன்னாடி என் கஷ்டத்தை சொல்றதுல்ல டா. அவளா தேடுன பையனும் சரியில்ல. நம்ப பார்த்தவனும் கழுத்தறுத்துட்டான். எங்க கல்யாணமே வேணாம்னு சொல்லிடுவாளோன்னு நெஞ்சு அடிச்சுக்குது. நீங்க எல்லாம் இருக்க தைரியத்துலதான் நான் இருக்கேன்!” சுந்தரி கூற,

“பேரன் பேத்தியெல்லாம் பார்த்து நூறு வயசு வரை இருப்ப நீ. எதையும் போட்டு குழப்பிக்காத. ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சு நீ வந்ததும் உன் பொண்ணுக்கு ஜாம்ஜாம்னு கல்யாணம் பண்ணலாம். அது என் பொறுப்பு!” காமராஜ் அறுதியொன்று கூற, பெரியவரின் கண்கள் பனித்தன.

அதற்கு மேலும் அங்கே நிற்காமல் விறுவிறுவென தன்
அறைக்குள் நுழைந்த இசைவாணிக்கு மனத்தில் பாரமேறியது போல. உடுத்தியிருந்த சேலையை அவிழ்த்துப் போட்டாள். நான்கு நாட்களுக்கு முன்னே அபஸ்வரமாய் தோன்றிய எண்ணம் இப்போது அபத்தமெல்லாம் இல்லை என்ற நிலைக்கு வர, பரிதி மெல்ல மெல்ல நினைவில் மேலெழுந்தான்.

‘அக்ரீமெண்ட் மேரேஜ்!’ அந்த வார்த்தையை சொல்லும்போதே முகம் கசங்கியது. அவளுக்கு சர்வநிச்சயமாக அதில் விருப்பம் இல்லை. இரண்டு குடும்பங்களின் உணர்வுகளோடு விளையாட வேண்டுமா என மனம் முட்டைக்கட்டைப் போட முயல, மூளை அவளைத் தடுத்து நிறுத்தியது.

தன் திருமணம் முடிந்தால்தான் சுந்தரி முழு மனதோடு சிகிச்சைக்கு ஒத்துழைப்பார். சிகிச்சை முடிந்தப் பின்னும் அவரது உடல்நிலை தேறி வர வேண்டும் என எல்லாமே இவளைச் சுற்றியே வந்தன.
தவறு என மனம் கூச்சலிட்டதைக் கிடப்பிலிட்டவள், மூளையின் அறிவுறுத்தல்படி, அதன் சாதகப் பாதகங்களை ஆராய வேண்டும் என எண்ணினாள்.

உடை மாற்றி முகம் கழுவி வெளியே சென்றவள், “என்ன மாமா... வரேன்னு சொல்லவே இல்ல. எங்க உங்க துடுப்புகளைக் காணோம்?” எனக் கேலியாக கேட்டாள்.

“இந்தப் பக்கமா ஒரு வேலை டா. அதான் அப்படியே அக்காவைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்...” என்றவர், “சரி நேரமாச்சு... நான் கிளம்புறேன்!” என உரைத்தார்.

“மாமா... இருங்க. சப்பாத்தி போட போறேன்‌. சாப்பிட்டு போவீங்க!” அவரைத் தடுத்தாள் இசைவாணி.

“இல்லடா... உன் அத்தை எனக்காக சாப்பிடாம காத்திருப்பா. இன்னொரு நாள் வரேன்!” என தலையசைப்புடன் அகன்றார் அவர்.

“என்னவாம்... அக்காவுக்கும் தம்பிக்கும் இடையில சீக்ரெட். என்னைப் பார்த்ததும் நிறுத்திட்ட?” என கேலியாக கேட்டாள் இவள்.

“எனக்கும் அவனுக்கும் இடையில ஆயிரம் இருக்கும். உனக்கெதுக்கு டீ அந்த சங்கதி!” சடைத்துக் கொண்டவரையே சில நொடிகள் பார்த்தாள் மகள். இவர் முகத்திலிருக்கும் அரிதாரம் தனக்காக என்றுணர்ந்து வேதனையை மெல்ல விழுங்கினாள்.

மேலும் அங்கிருந்தால் ஏதேனும் கேட்டு சுந்தரியை கஷ்டப்படுத்திவிடுவோமோ என எண்ணியவள், “சப்பாத்தி போட்டு காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு குருமா வைக்கிறேன் மா. உனக்கு ஓகேவா?” எனக் கேட்டாள்.

“சரி நீ சப்பாத்தி போடு... நான் குருமா வைக்கிறேன். வேலை சீக்கிரம் முடிஞ்சிடும்!” என அவர் கூற, இருவரும் சமைத்து உண்டனர்.

“ம்மா... நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன். வேலை இருக்கு எனக்கு. நீ தூங்கு!” என அவரது அறைக் கதவை திறந்து வைத்துவிட்டே தன்னறைக்கு வந்தாள். கமலா இருந்தால் சுந்தரியோடு அவர் உறங்குவார். அவர் இல்லாததால் மகள் தாயுடன் தூங்குகிறாள்.

மேஜையை இழுத்துப் போட்டு அமர்ந்து ஒரு காதிதத்தை கையிலெடுத்து, ‘பாசிட்டீவ் அண்ட் நெகட்டீவ்ஸ் ஆஃப் அக்ரீமெண்ட் மேரேஜ்!’ என எழுதி இரண்டாய் காகிதத்தைப் பிரித்தாள்.

‘பாசிட்டீவ்’ என்ற பகுதியில் ஒப்பந்த திருமணத்தால் என்னென்ன லாபங்கள் என யோசித்து எழுதினாள்.

அம்மாவின் நிம்மதி மீட்டெடுக்கப்படும். உடலளவில், மனதளவில் அவர் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார். சிகிச்சை முடிந்த பின்னரும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் காணலாம். அறுபது லட்சம் கடனோடு வீட்டிற்கான பணத்தையும் கொடுத்துவிடலாம். அவரது சிகிச்சைக்குப் பணம் கடன் வாங்கத் தேவையில்லை. முக்கியமான ஒன்று இரண்டு வருடங்களுக்கு திருமணம் செய்து கொள் என்ற பேச்சை யாரும் தொட மாட்டார்கள்.

பரிதி அளவில் பார்த்தால், அவனுக்கு நுழைவு இசைவு கிடைக்கும். அவன் லண்டனில் வேலைத் தேடி அதில் அமர்ந்ததும், கடனை அடைத்து முன்னேறுவான் என சாதகங்களை வரிசைப்படுத்தியவள், நெகட்டீவ் பகுதிக்கு வந்தாள்.

இருவீட்டு குடும்பங்களையும் ஏமாற்றுகிறோம் என்ற குற்றவுணர்வு அவளைப் பாடாய்ப்படுத்தும். இதுவரை அவள் வாழ்ந்து வந்த ஒழுக்க நெறி கேள்விக்குள்ளாகும் என்ற இடத்தில் கையில் மெல்லிய நடுக்கம் படர்ந்தது. இரண்டு வருடங்கள் கழித்து இந்த ஒப்பந்த திருமணத்தைப் பற்றித் தெரிய வந்தால் கண்டிப்பாக பெரும் பிரச்சனை வெடிக்கும் என்றெண்ணியவள், தெரிய வந்தால்தானே? என ஒரு கேள்விக்குறியை இட்டாள்.

தங்கள் இருவருக்கு மட்டும்தானே இதைப் பற்றித் தெரியும். மூன்றாம் மனிதர்களிடம் பகிரக் கூடாது. இருவருட முடிவில் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து விட்டோம் எனப் பெற்றவர்களை சமாளிப்பது மட்டும்தான் பெரிய பிரச்சனையாக இருக்கும். மற்றபடி என்னவென யோசித்தாலும் முழுமனதாக அவளால் இதை ஏற்க முடியவில்லை. இத்தனை வருடங்கள் இப்படித்தான் என போதிக்கப்பட்ட நெறிகளைத் தன் சுயநலத்திற்காக மீற வேண்டுமா என மனம் முரண்டியது.

உடனடியாக இதை செயல்படுத்த விரும்பாதவள், ஆறப்போட்டாள். மேலும் நான்கு நாட்கள் நேரமெடுத்து மீண்டும் மீண்டும் சாதகப் பாதகங்களை அலசி ஆராய்ந்து திருப்திப்பட்ட பின்னரே ஒருமனதாக தாயின் நலனை எண்ணி இம்முடிவை ஏற்றாள்.

இதை சம்பந்தப்பட்ட பரிதியிடம் முதலில் பகிர வேண்டும். அவனுடைய கருத்தை வைத்தே இந்த திட்டத்தை மேற்கொண்டு எடுத்துச் செல்வதா? இல்லை வேண்டாமா? என இறுதி முடிவு அவன் கையில்தான் என்றெண்ணி பெருமூச்சுவிட்டவள், மறுநாள் காலை அலுவலகம் சென்றதும் அற்புதாவிடம் பேசி இவனது இலக்கத்தைப் பெற்றாள்.

அன்றைக்குப் பெரிதாய் வேலையில்லை என்பதால் உடனடியாக அவன் புலனத்திற்கு குறுஞ்செய்தி ஒற்றைத் தட்டிவிட்டாள். அவன் அலுவலாக இருந்தப் போதும் புது எண் யாராக இருக்குமென யோசிக்க வேண்டிய அவசியம் இராமல் இசை வாணி அவளது தாய் தந்தையுடன் முகப்பு படத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“ஹே இசைவாணி... என்ன? என் நம்பர் ஏது உன்கிட்ட. எதுக்கு மெசேஜ் போட்ட?” படபடவென செய்தியைத் தட்டிவிட்டான் இவன்.

“நத்திங் பரிதி. வாட் அபவுட் யூவர் விசா? டூ யூ கெட் எனி ஆல்டெர்நேட்டீவ் வேய்ஸ்?” அவள் கேட்டதும்,

“நோ... விசாவுக்கு மூடு விழா நடத்தியாச்சு இசைவாணி...” சோக பொம்மையை அனுப்பினான். அவன் செய்தியைப் படித்ததும் இவளிடம் ஓர் ஆசுவாசம்.

‘செல்பிஷ்’ மனம் முணுமுணுக்க, அதைக் கண்டுக்கொள்ளாதவள்,
“ஐ ஹேவ் அன் ஐடியா டூ கெட் அ விசா ஃபார் யூ!” அவள் கூறியதும் மறுநொடி யோசிக்காமல் அழைப்பை விடுத்திருந்தான் பரிதி.

அவள் ஒரு நொடி அதிர்ந்தாலும் அப்படியே எழுந்து சிற்றுண்டிச் சாலையை நோக்கி நடந்துகொண்டே அழைப்பை ஏற்றாள்.

“ஹே இசைவாணி! நிஜமா ஐடியா வச்சிருக்கீயா நீ? பொய் சொல்லி என்கிட்டே பிராங்க் எதுவும் பண்ணலைல. அப்படியிருந்தா நான் செம்ம டென்ஷனாகிடுவேன்!” என்றான் கண்டிப்பான குரலில்.

“ப்ம்ச்...‌ எனக்கு இருக்க ஆயிரம் வேலைல உன்கிட்ட பிராங்க் பண்ணத்தான் கால் பண்ணேனா?” அவள் பதிலுக்கு இரைந்தாள்.

“சரி... சரி. கோபப்படாத இசைவாணி. என்ன ஐடியா அதை முதல்ல சொல்லு!” பரபரத்தான் அவன்.

“ஃபோன்ல பேசுற விஷயம் இல்ல பரிதி. நேர்ல சொல்றேனே!” அவள் தயங்கினாள்.

“ஹே... விசாவுக்குத்தானே ஐடியா கொடுக்குற? இதுல என்ன நேர்ல? ஃபோன்ல? இப்பவே சொல்லு!” அவன் அடமாய்க் கேட்டான்.

“உனக்கு ஐடியா வேணும்னா ஈவ்னிங் சிக்னல்கிட்டே இருக்க நசீர் காபி ஷாப்க்கு வா. ஷார்ப் ஃபைவ் தேர்ட்டி. நான் வெயிட் பண்ணுவேன்!” அழைப்பை அவள் பட்டென துண்டித்தாள்.

“சீ... இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான். ஃபோன்ல ரெண்டு வார்த்தையில முடிக்க வேண்டியதை கடை வரை இழுத்து செலவைக் கூட்டுவாளுங்க. மாசக் கடைசி, பர்ஸ் வேற காலி என்கிட்டே!” என முனங்கியவன், மாலை அவளுக்கு முன்னே சென்று தேநீர் விடுதியில் காத்திருந்தான்.

“ஃபைவ் தேர்ட்டிக்குத்தானே வரச் சொன்னேன். ஏன் சீக்கிரம் வந்து வெயிட் பண்ற பரிதி!” அவள் மென்மையாய் கடிந்தாள்.

“ஹக்கும்... என் கஷ்டம் எனக்கும்மா. நீ ஐடியாவை சொல்லு!” அவன் அவசரப்படுத்த, இவளுக்குத் தன்னால் ஒரு பதற்றம் அப்பியது.

மூச்சை இழுத்துவிட்டவள், “சொல்றேன். பசிக்குது, ஏதாவது சாப்பிட்டுட்டு பேசலாம்...” என தனக்கும், அவனுக்கும் என்ன வேண்டுமெனக் கேட்டு வரவழைத்தாள். பொறுமையற்று பரபரவென உண்டு முடித்தவன், அவள் சாப்பிடுவதை வேடிக்கைப் பார்க்கலானான்.

என்னதான் ஒப்பந்த திருமணம் என முடிவெடுத்து வந்துவிட்டாலும் இசைவாணிக்குத் தயக்கமாய் இருந்தது. தன்னளவில் சரியென்று நினைக்கிறாள். ஆனால் பரிதியின் எதிர்வினை என்னவாக இருக்குமோ என மனம் சஞ்சலம் கொண்டது. அவன் வேறு முகதாட்சண்யம் எல்லாம் பார்க்காது முகத்தில் அடித்தாற் போல பேசிவிடுவானே என யோசித்தபடியே தயங்கினாள்.

“பசிக்குதுன்னு சொன்ன... ஆர்டர்‌ பண்ணி வேணுங்குறதை சாப்பிடுட்ட. அப்புறமும் என்னதான் யோசனை உனக்கு. உண்மையிலயே உன்கிட்ட ஐடியா இருக்கா? இல்லை காபி ஷாப்ல கம்பெனிக்கு ஆள் இல்லைன்னு என்னைக் கூப்பிட்டீயா?” அவன் பொறுமைக் கரைந்தது போல. குரலை உயர்த்தினான்.

“ப்ம்ச்... பரிதி. கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதைக் கேட்கணும். எனக்கும் வாழ்க்கைல பிராப்ளம்ஸ் உண்டு. உனக்கும் இருக்கு. ம்யூட்சுவலா நம்ப ஒரு முடிவுக்கு வந்தா உனக்கு உன்னோட ப்ராப்ளம் தீரும். எனக்கும் அப்படியே. சோ, நான் சொல்றதைக் கேட்டுட்டு பொறுமையா யோசிச்சு உன் முடிவை நீ சொல்லலாம். ஒருவேளை பிடிக்கலைன்னா நோ சொல்லக் கூட உனக்கு உரிமை இருக்கு. பட், மூஞ்சில அடிச்ச மாதிரி பேசி என்னை நீ ஹேர்ட் பண்ணக் கூடாது. இது ஓகேன்னா சொல்லு. நான் என் ஐடியாவை ஷேர் பண்றேன்!” மென்குரலில் கூறி முடித்து அவன் முகம் பார்த்தாள்.

“நான் எதுக்கு உன்னை ஹர்ட் பண்ண போறேன்? தலையும் இல்லாம வாலும் இல்லாம பேசாத நீ. என்னென்னு விஷயத்துக்கு வா. அப்புறம் நான் யெஸ் சொல்றதா, நோ சொல்றதான்னு முடிவு பண்றேன்!” அவன் குரலில் சின்னதாய் எரிச்சல் எட்டிப் பார்த்தது. பரிதிக்கும் பொறுமைக்கும் காத தூரமாகிற்றே.

“ஹம்ம்... நீ பிரியமானவளே படம் பார்த்திருக்கீயா?” அவள் கேட்டதும்,

“நீயென்ன லூசா? இப்போ எதுக்கு இந்தப் படத்தைப் பத்திப் பேசுற?” என எரிந்து விழுந்தான் அவன்.

“ச்சு... அதுல வர்ற மாதிரி அக்ரீமெண்ட் மேரேஜ் பண்ணிக்கலாமா நம்ப?” அவள் கேட்டதும், இவன் புரியாது விழித்து சற்றே முன்னே நகர்ந்தான்.

“என்ன கிறுக்குத்தனமா பேசுற இசைவாணி? அதுக்கும் என் விசாக்கும் என்ன சம்பந்தம்?” எனப் புரியாது கேட்டான்.

“சம்பந்தம் இருக்கு பரிதி‌.‌ எனக்கு யூ.கே போக ஆன்சைட் ஆஃபர் வந்திருக்கு. மேரேஜ் பண்ணிட்டுப் போனா ப்பௌஸ் விசா ஸ்பான்ஷர்ஷிப் உனக்கு கிடைக்கும். சோ, நீயும் என்கூட வரலாம். அங்கேயே ஜாப் தேடிக்கலாம்!” என்றாள் இவள்.

“விசாவுக்காக யாராவது கல்யாணம் பண்ணுவாங்களா?” இவன் சீறினான்.

“இது ஒரிஜினல் மேரேஜ் இல்ல. ஜஸ்ட் அக்ரீமெண்ட். எனக்கு டூ இயர்ஸ்தான் ஆன்சைட். அந்த டைம்க்குள்ள நீ அங்க வந்து வேலைத் தேடி செட்டிலாகிடலாம்!” இசைவாணி பொறுமையாக விளக்கினாள்.

“சோ... உனக்கு இதுல என்ன பெனிபிட்?” அவளை உறுத்துப் பார்த்தபடி கேட்டான்.

சில நொடிகள் தயங்கி உதட்டைக் கடித்தவள், “இந்த மேரேஜ்தான் என்னோட பெனிபிட்!” என்றுவிட்டு, சின்னக் குரலில் அனைத்தையும் கூறி முடித்து அவன் முகம் பார்த்தாள். அவனிடம் அப்பட்டமான எரிச்சல்.

“அறிவேயில்லையா டீ உனக்கு? எதெதுல விளையாடணும்னு உனக்கு விவஸ்தை கிடையாது? கண்ட கண்ட படத்தைப் பார்த்துட்டு வந்து கிறுக்கு மாதிரி உளறிட்டு கிடக்க?” என சீறினான்.

“பரிதி லிசன்... நான் உன்னைக் கட்டாயப்படுத்தலை. ஜஸ்ட் என்னோட ஐடியாவை ஷேர் பண்ணேன். நீ ஒரு டைம் நல்லா திங்க் பண்ணு. டேக் யுவர் டைம். இட்ஸ் அப் டூ யூ!” என்றவளை முறைத்து வெடுக்கென எழுந்தவன்,

“லுக் இசைவாணி... பார்க்கும்போதெல்லாம் சின்ன பையன் மாதிரி உன்னை வம்பிழுத்தேன்றதுக்காக எனக்கு மூளை எதுவும் கழண்டு போச்சுன்னு நினைச்சியா? என்னதான் எனக்கு பிரச்சனை கழுத்தை நெறிச்சாலும் இந்த கேவலமான ஐடியாவுக்கு ஒருநாளும் நான் ஒத்துக்கப் போறது இல்ல. கல்யாணம்னா உனக்கு அவ்ளோ ஈஸியா போச்சா? ரெண்டு குடும்பத்தை ஏமாத்தி போர்ஜரி பண்ண சொல்ற? வெட்கமா இல்ல உனக்கு? உங்கம்மா இதைத்தான் உனக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்தாங்களா?” அவன் பேசப் பேச இவள் முகம் கன்றியது.

“எனாஃப் பரிதி. இதுக்கு மேல எதுவும் பேசாத. கிளம்பிடு!” என்றாள் ஆத்திரம் மிகுந்த குரலில்.

“ஓஹோ... கோபம் வருதோ மேடம்க்கு. இந்த மாதிரி ஜோக்கர் ஐடியா எப்படி உனக்குத் தோணுச்சு. சென்ஸ் இருக்கா இல்லையா? கொஞ்சமாவது ரியாலிட்டிக்கு ஒத்து வருமான்னு திங்க் பண்ணாம அக்ரீமெண்ட் மேரேஜ் மைரு மேரேஜ்னு வந்துட்டா!” என சன்னக் குரலில் முனங்கியவன்,

“உனக்கு மேரேஜ்னா எப்படின்னு எனக்குத் தெரியாது. பட், நான் அந்த ரிலேஷன்ஷிப்பை மதிக்கிறேன். ஒரு பொண்ணைப் பிடிச்சு கல்யாணம் பண்ணி அவளோட ஆத்மார்த்தமா வாழணும்னு ஆசைப்படுற ஆள் நான். பட் நீ இந்த மாதிரி பினாத்திட்டு வந்து நிக்கிற. இதுதான் லாஸ்ட். இதுக்கப்புறம் இந்த மாதிரி கோமாளித்தனம் பண்ண, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். மைண்ட் இட்!” என அவன் சினந்துவிட்டு அகல, இவள் அவனை வெறித்தாள்.

சுற்றியிருந்த அனைவரும் தன்னையே கவனிப்பதை உணர்ந்தவள், சாப்பிட்டதற்கான பணத்தை வைத்துவிட்டு விறுவிறுவென வெளியேறினாள். பரிதி அவளுக்கு முன்னே இருசக்கர வாகனத்தில் செல்ல, இவள் அவன் சொற்களின் கனத்தை தாங்காது சுருண்டு போன மனதோடு வீட்டிற்குச் சென்றாள்.
என்னவோ இவளுக்கு மட்டும் ஒழுக்க நெறி இல்லாதது போல அவன் வீசிய வார்த்தைகளில் அழுகை வரப் பார்த்தது.

‘சீ... அவன் ஒரு ஆள்னு போய் பேசுன இல்ல. செருப்பால அடிச்சு அனுப்பிட்டான்‌. இது உனக்குத் தேவையா?’ எனத் தன்னைத் தானே திட்டி மனதிற்குள் குமைந்து போனாள். வேண்டாமென அவன் தன்மையாய் மறுத்திருந்தால் அத்தோடு மறந்து போயிருப்பாள். ஆனால் தன் தாயின் வளர்ப்பை எப்படி அவன் குறை கூறலாம் என கோபம் கனன்றது. இனி என்னவானாலும் அவனோடு முகம் கொடுத்துப் பேசக் கூடாது என்றொரு தீர்க்கமான முடிவெடுத்தப் பி
றகுதான் மனம் சமன்பட்டது.

இரண்டு நாட்கள் கழித்து அவளுடனான ஒப்பந்த திருமணத்திற்கு சம்மதம் என வந்தவனை, வார்த்தையால் அடித்து துவைத்து துரத்தியிருந்தாள் இசைவாணி.

தொடரும்...

 

Lak

New member
Messages
12
Reaction score
4
Points
3
இரண்டு பேரும் வார்த்தையால் அடித்து துரத்திக்கொண்டு இருந்தால் கல்யாணம் செய்வது எப்போது.
 
Well-known member
Messages
502
Reaction score
361
Points
63
Yen vani suppose unnoda edathula Parithi yum avan edathula ne irundhu parithi indha mathiri vandhu ketu irundha ne ithu vida mosam ah than pesi irupu ah athu than fact ippo avan pesunan udanae unnaku kobam varuthu ah enna .

Avan again thirumbi vandhu ok nu sonnathuku vachi seiyuthu ta polayae avan thitunathuku
 
Top