• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,284
Reaction score
3,778
Points
113
நேரம் – 11 💜

போக்குவரத்து விளக்கு பச்சைக்கு மாற அனைவரும் காத்திருக்க, தனக்கு முன்னே செல்லும் பரிதியையே பார்த்திருந்தாள் இசைவாணி. இருவரும் ஒரே சாலையில்தான் பயணித்தனர். இவள் அவனைக் கண்டுவிட்டு மகிழுந்தை மெதுவாக இயக்க, அவன் இவளைப் பார்க்கவில்லை.

பரிதி சுற்றிலும் என்ன நடக்கிறது என்ற பிரஞை அற்று சாலையில் மட்டுமே கண்ணாயிருந்தான். இதுவே முன்பிருந்த பரிதி என்றால் கழுத்து முன்னூற்று அறுபது கோணத்திலும் சுற்றி யார் செல்கிறார்கள், வருகிறார்கள் எனத் துல்லியமாக நோட்டமிட்டு, அழகான பெண்கள் சென்றால் ஒற்றைக் கையில் சாகசம் செய்து, தலையைக் கோதி அட்டகாசம் செய்திருக்க கூடுமென அவனை அவதானித்தவளின் உதடுகளில் இளமுறுவல் படர்ந்தது.

இவள் மெதுவாய் சென்று போக்குவரத்து சமிக்ஞையில் நின்றுவிட, அவன் முன்னே சென்றுவிட்டான். அவனது வாகனம் மறையும் வரைப் பார்த்திருந்தவள், பச்சை விளக்கு ஒளிர்ந்ததும் மற்ற வாகனங்களோடு தானும் கலந்தாள்.

சிறிது தூரம் சென்றதும் இவளது நெற்றிச் சுருங்கியது‌‌. தூரத்தில் ஒரு ஓரமாய் இருசக்கர வாகனத்தைத் தள்ளிக்கொண்டு செல்லுபவன் பரிதி என்பதைக் கண்ணைச் சுருக்கி உற்றுப் பார்த்து உறுதி செய்தவள், சாலையின் இருபுறமும் பார்த்துவிட்டு மிக கவனமாக மகிழுந்தை ஓரமாய் நகர்த்தி, அவனை வழி மறிப்பது போல நிறுத்தினாள்.

பரிதி யாரென நிமிர்ந்து பார்க்க, இசைவாணி அவனைப் பார்த்திருந்தாள்‌. அவளைக் கண்டதும் சிறுபிள்ளை போல அவன் முகத்தை திருப்பிக்கொண்டு மற்றொருபுறமாய் வாகனத்தை நகர்த்தி நடக்க, அவனது செய்கையில் இவளுக்கு சிரிப்பு வந்தது. அதில் பரிதியின் முறைப்பு கூடிற்று.

ரோஷமாய் வாகனத்தை நகர்த்தி பக்கத்திலிருந்த கடை ஒன்றில் பழுது பார்க்க கொடுத்தவன், எவ்வளவு செலவாகும் என விசாரித்து அவர் கூறியத் தொகையிலிருந்து ஐநூறு ரூபாயைப் பேரம் பேசிக் குறைத்துவிட்டு அந்த திருப்தியில் சாலையில் நடக்கத் தொடங்கினான். இவ்வளவு நேரம் அவன் என்ன செய்கிறான் என ஓரமாய் மகிழுந்தில் அமர்ந்து பார்த்திருந்த வாணி, மீண்டும் அவன் முன்னே சென்று வழியை மறித்தாள்‌.

“ப்ம்ச்... என்ன வேணும் உனக்கு?” அவன் முயன்று சிடுசிடுக்க, ஆனாலும் குரலில் காரமில்லை.

“வந்து கார்ல ஏறு. நானே உன்னை ட்ராப் பண்றேன்!” மகிழுந்து கண்ணாடியை கீழிறக்கி அவள் அழைக்க,

“வேணாம், வேணாம். பத்து நிமிஷம்தானே. நானே நடந்து போய்க்கிறேன்!” அவள் முகம் பார்க்காது முணுமுணுத்தான். குற்றவுணர்வா அல்லது வீம்பா என அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அவள் முகம் பார்க்கத் தயங்கினான்.

“பரிதி...” அவள் அதட்டலிட்டதும் தன் போல இவன் கால்கள் அவளது வார்த்தைக்கு செவிசாய்த்து கால்கள் தன் நடையை நிதானப்படுத்தின போல. ஆனால் அடித்த தாயிடம் கோபம் கொண்ட குழந்தை போல முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு வேறுபுறம் பார்த்தான்.

இவளது உதடுகள் மலரப் பார்க்க, “பரிதி... உள்ள வந்து ஏறு. உனக்காக நான் என்ன ஒரு லிட்டர் பெட்ரோல் தனியா போடப் போறேனா என்ன? ஹம்ம்... ரெண்டு பேரும் ஒரே ஏரியா. சோ ட்ராப் பண்றேன். ரொம்ப சீன் போடாம வந்து ஏறு!” என்றாள் கேலியாக. அவளை முறைத்தவாறே முன்பக்கம் ஏறியமர்ந்தான் பரிதி. என்னவோ அவனது ஒருமை விளிப்பைக் கண்டிக்க எண்ணிய மனம் அதைக் கிடப்பிலிட்டிருந்தது. அவளும் அவனுக்கான மரியாதையை வெகுகவனமாகத் தவிர்த்திருந்தாள்.

இசைவாணி வாகனத்தை இயக்க, சில பல நிமிடங்கள் இருவரிடமும் எவ்வித பேச்சும் அற்ற மௌனம் நிரம்பி வழிந்தது. தொண்டையைச் செருமிய பரிதி, “சாரி... நான் அன்னைக்கு தேவையில்லாம உன்கிட்ட ஹார்ஷா பேசிட்டேன்!” என சின்ன குரலில் முணுமுணுத்தான்.

பக்கவாட்டில் அவனைத் திரும்பிப் பார்த்த இசைவாணியிடம் கோபமில்லை. என்னவோ அவன் நிலையை எண்ணி கரிசனமோ அன்போதான் முகிழ்த்து தொலைத்தது. அதை அவளும் உணர்ந்தே இருந்தாள். இந்தப் பையன் பரிதியிடம் மட்டும் அவளது வரையறைகள் தகர்கின்றன. ஆம், யாராவது ஒரு வார்த்தை சுள்ளென பேசினால் கூட அவர்களிடமிருந்து ஒதுங்கிக்கொள்ளும் ரகம் இசைவாணி. ஆனால் எத்தனை முறை பரிதி சுடுசொற்களை வீசியப் போதும் அவனிடம் மட்டும் மனம் கோபத்தை இழுத்துப் பிடிக்காமல் விட்டுவிடுகிறது.

அற்புதா, சரவணன் மீது இவளுக்கு அளப்பரிய அன்பிருந்தது. அத்தைப் பிள்ளைகள் என்பதைத் தாண்டி அவர்கள் இவளுடைய உற்றத் தோழர்கள். அவர்களிடம் இவள் எப்போதும் பரிவாகத்தான் நடப்பாள். பெரிதாய் சண்டை, வாக்குவாதங்கள் இல்லாமல் மூத்தவள் என்ற உணர்வில் அவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வாள். அதே போலொரு உணர்வு இவனிடம் தோன்றியதை மனம் விந்தையாக நினைத்தது. அவளொரு தனிப்பறவை. அலுவலகத்தில் கூட ஓரிரண்டு நண்பர்கள் மட்டும்தான். அப்படியிருக்கையில் இவனிடம் மட்டும் ஏன் இத்தனை எளிதில் நட்பு பாராட்டுகிறோம் என கேள்விக்கு விடை தேட முனையவில்லை அவள்.

“உன்கிட்டதான் சாரி சொன்னேன். அமைதியா வந்தா என்ன அர்த்தம்?” இப்போது கொஞ்சமாய் விழிகளை உயர்த்தி அவள் முகம் பார்த்தான் பரிதி.

“பரவாயில்லை விடு!” அவள் எளிதாக எடுத்துக் கொண்டதில் இவனிடம் ஒரு ஆசுவாசப் பெருமூச்சு எழுந்தது. இப்போது உடல் தளர்ந்து நன்றாய் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவனின் பார்வை மகிழுந்தை அளந்தது. அது என்ன பிராண்ட், தற்போதைய சந்தையில் அதன் மதிப்பு என்ன என மனம் மெதுவாய் கணக்கிட, முகப்பு பகுதியை மென்மையாய்த் தடவியவன், “எப்போ வாங்குன கார் இது?” எனக் கேட்டான்.

“செவன் இயர்ஸாச்சு வாங்கி. அப்பா இருக்கும்போது வாங்குனது!” அவள் பதிலளித்தாள்.

“ஹம்ம்... நீ நல்லா ட்ரைவ் பண்ற!” அவள் லாவகமாய் வாகனத்தை செலுத்தியதைக் கண்ணுற்றவன் பாராட்ட, இவளிடம் சின்ன புன்னகை.

“அப்பாதான் கத்துக் கொடுத்தாரு!” என்றாள் தந்தையின் நினைவில் மனம் கனத்தவளாக.

“உங்கப்பா பிஸ்னஸ் மேன்னு அற்புதா சொன்னா. பொறந்ததுல இருந்தே பணக்காரியா வாழ்ந்திருப்பல்ல நீ? ஹம்ம்... என்னை மாதிரி மிடில் க்ளாஸா பொறக்கவே கூடாது” சின்னதொரு பொறாமை அவன் உணராமலே குரலில் எட்டிப் பார்த்தது.

முகப்பு பகுதியிலிருந்த அவன் கையைத் தட்டிவிட்டவள், “பொறாமைப்பட்டு கையாலே காரை தேச்சு எடுத்துடாத!” விளையாட்டாக அவள் கூறவும், இவன் முகத்தை நொடித்து திருப்பினான்.

“இல்லையே... எனக்கென்ன பொறாமை. நான் சும்மா கேட்டேன்!” என்றான் ரோஷக் குரலில். இவள் உதட்டில் சிரிப்பு மலர்ந்தது.

“நம்பிட்டேன்!” உதட்டை வளைத்தக் குரலிலிருந்த கேலியில் அவளை ஏகமாய் முறைத்தான் பரிதி.

“ஓகே கூல்... நான் சும்மாதான் சொன்னேன்!” இவள் சரணடைந்ததும், அவன் தணிந்தான். மீண்டுமொரு மௌனம். இப்போது இசைவாணி அதை உடைத்துப் போட்டாள்.

“டேடிஸ் லிட்டில் ப்ரின்சசஸ் கேள்விப்பட்டிருக்கியா பரிதி? அந்த வார்த்தைக்கே அர்த்தம் என்கிட்டதான் கேட்கணும்!” என்றாள் தந்தையின் ஈடற்ற அன்பு கொடுத்த கனிவில். அவள் முகத்தை அமைதியாய் நோக்கினான் இளம்பரிதி. அந்தப் பார்வை அவளை மேலும் பேச என உந்திற்று போல. நீண்ட நாட்கள் கழித்து தந்தையைப் பற்றிய பேச்சு வரவும், மனம் கனிந்தது.

“என்னைத் தரையில கூட நடக்க விட மாட்டாரு. ஒரே பொண்ணுன்னு ரொம்ப செல்லம். நான் கண் காட்டுனதெல்லாம் கைமேல வந்து நிக்கும். அந்தளவுக்கு என்னைத் தாங்குன மனுஷன். பிஸ்னஸ்ல ஹெவி லாஸ். எல்லா பக்கமும் கடன் வாங்கிட்டாரு. கட்ட வழித் தெரியலை. சோ, எங்களைப் பத்தி யோசிக்காம அவர் முடிவை அவரே தேடிக்கிட்டாரு!” என்றவள் சாலையை வெறித்தாள். பரிதி அவளைக் பரிவாகப் பார்த்தான்.

தந்தையில்லாது தாயை ஒற்றை ஆளாகப் பார்த்துக்கொள்ளும் இசைவாணியின் மீது அவனுக்கு மதிப்பும் பரிதாபமும் உண்டு. ஆனால் அதைக் காண்பித்தால் அவளுக்கு அசௌகரியமாக இருக்குமோ என எண்ணி எப்போதும் இயல்பாக அவளை எதிர்கொள்ள எண்ணி வம்பிழுப்பான்.

“உனக்கு ஒன்னுன்னா உன் அப்பா, அம்மா, தம்பி, தங்கைன்னு எல்லாருமே வந்து நிப்பாங்கல்ல பரிதி?” எனக் கேட்டவளுக்கு அவன் ஆமாமென தலையை அசைத்தான்.

“அப்போ இந்த நிமிஷம் நீதான் என்னைவிட பெரிய பணக்காரன்!” என்றாள் உதட்டில் கசப்பான முறுவலோடு.

“எல்லாமே இருக்குன்னு எண்ணிக் கோபுரத்துல உக்காந்திருந்த என்னை ஒரே செகண்ட்ல எதுவுமே இல்லைன்னு ரோட்ல தூக்கிப் போட்டுட்டாங்க. அந்த சிட்சுவேஷனையெல்லாம் நான் ஃபேஸ் பண்ணிட்டுத்தான் வந்திருக்கேன். அப்போதான் பணம் முக்கியம் இல்ல. மனுஷங்கதான் முக்கியம்னு எனக்குப் புரிஞ்சது!” என்றாள் கனத்தக் குரலில்.

அவன் கேலியாக நகைத்தான். “நீ எல்லாமே அனுபவிச்சிட்ட. சோ, ஞானி மாதிரி பேசுறதுல ஒரு நியாயம் இருக்கும்மா. ஆனால் நான் அப்படியில்லையே. பொறந்ததுல இருந்தே ஆசைப்பட்ட எதுவும் கிடைக்காம ஏங்கி ஏங்கி வீங்கிப் போயிருக்கேன். சோ பணம்தான் எல்லாம். பணம் இருந்தா மனுஷங்க தானா வருவாங்க!” என்றான் தன்பிடியிலே. அவள் ஒன்றும் பதில் பேசவில்லை. நீ இப்படித்தான் என்றால் உன் சிந்தனையை மாற்ற நான் முயல மாட்டேன் என எண்ணித் தோளைக் குலுக்கினாள் இவள்.

“ரொம்ப பயமா இருக்கு இசைவாணி!” முன்முடியைக் கோதியபடியே பரிதி அவள் முன்னே தன் மனக்கலக்கத்தை இறக்கி வைக்க முனைந்தான்.

அவனை சில நொடிகள் பார்த்தவள், “விசா கிடைக்கலைன்னா? இல்லை வீட்டு மேல லோன் இருக்குன்னா?” எனக் கேட்டாள்.

“ரெண்டுமேதான். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கிச்சுன்னு பழமொழி சொல்வாங்க. அது மாதிரித்தான் நான் இப்போ எனக்கு நானே சூடு வச்சுக்கிட்டேன். எந்த தைரியத்துல கடனைக் கட்டிடலாம்னு ட்வென்டி ஃபைவ் லேக்ஸ் கடன் வாங்குனேன்னு எனக்கே தெரியலை. இப்போ விசா கிடைக்காதுன்னு உறுதியா தெரிஞ்சு போச்சு.”

“கடனை அடைச்சாத்தான் வீட்டை மீட்க முடியும். தம்பி, தங்கச்சியை நல்லபடியா படிக்க வச்சு அவங்க வாழ்க்கையை சிறப்பா அமைச்சுக் குடுக்க முடியும். எங்கம்மாவுக்கு என் மேல மலை மாதிரி நம்பிக்கை. எங்கப்பா வீட்டு மேல கடன் வாங்க கூடாதுன்னு மறுத்தப்போ, என்னை நம்பி அம்மா பேசி எல்லாத்தையும் சரி பண்ணாங்க. ஆனால் இப்போ அதுக்கெல்லாம் தகுதியில்லாதவனா போய்ட்டேன் நான்!” என்றான் இரண்டு கையையும் விரித்து வேதனையானக் குரலில்.

இசைவாணிக்கு அவனைப் பார்க்கும்போது ஒருமாதிரி மனம் கனத்தது. அவன் முகத்திலிருந்த விரக்தி, கண்களில் தெரிந்த வேதனை என இவளை நிரம்ப பாதித்தது. அவனைத் தேற்று என மனதின் கட்டளைக்கு கீழ்படிந்த மூளை, வார்த்தைகளைக் கோர்த்தது.

“எல்லாருமே இந்த உலகத்துல ஏதோ ஒரு பிரச்சனையோடத்தான் இருக்கோம் பரிதி. என்ன அதோட வடிவம் வேற. சோ, கஷ்டம் இல்லாத மனுஷங்க உலகத்திலயே இல்ல.‌ உன் ப்ராப்ளத்துக்கு சொல்யூஷன் உன்கிட்டேதான் இருக்கும். நீதான் அதை சரியா தேடலை!” என்றாள் நம்பிக்கையூட்டும் விதமாக.

“ஹக்கும்... எல்லா வழியும் அடைச்சு கிடக்கும்மா. நானும் சந்து பொந்தெல்லாம் தேடிட்டேன்!” விரக்தியாக முணுமுணுத்துவிட்டு,

“எப்படியாவது என் அப்பாவுக்கு ரிடையர்மெண்ட் கொடுக்கணும்னுதான் என்னோட பெரிய ஆசை இசைவாணி. பாவம் அந்த மனுஷன், முப்பது வருஷமா காலைல நாலு மணிக்கு எழுந்து ஓடுறாரு. நான் தலையெடுத்தப் பிறகாவது அவருக்கு ரெஸ்ட் கிடைக்கும்னு அம்மா எதிர்பார்க்குறாங்க. ஆனால் இப்போதைக்கு என்னால அவருக்கு ரெஸ்ட் கொடுக்க முடியலை!” என்றான் கையைக் கோர்த்து மடக்கி தன் இயலாமையை எண்ணி வேதனையுற்றவனாக.

“இங்கேயே வேற நல்ல வேலை தேடலாம் இல்ல பரிதி?” அவள் பரிவாகக் கேட்டாள்.

“ப்ம்ச்... தேடாம இருப்பேன்னு நினைக்குறீயா? எல்லாரும் இன்ஜினியரிங் டிகிரி எக்ஸ்பெக்ட் பண்றாங்க. பி.இ முடிச்சு பல வருஷம் எக்ஸ்பீரியன்ஸிருக்கவனையே ஏ.ஐ தூக்கிப் போடுது. நான்லாம் எந்த மூலைக்குச் சொல்லு!’ என்றான் பெருமூச்சுடன்.

“நான் என் சைட் ஏதும் கிடைக்குமான்னு பார்க்குறேன்!” அவள் கூற்றிற்கு தலையை அசைத்தவன்,

“பேசாம உன்னை மாதிரி ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியா பொறந்திருக்கலாம். அட்லீஸ்ட் கொஞ்சமாச்சும்‌ மனசு ஆறியிருக்கும்!” என்றவனை ஏற இறங்கப் பார்த்தவள்,

“உன்னைவிட டபுள் மடங்கு என் மேல கடனிருக்கு பரிதி...” என்றாள்.

“பொய் சொல்லாத... என்னை சமாதானம் பண்ண நீ ஏமாத்துற!” அவன் நம்பாது தோளைக் குலுக்கினான்.

“ம்ப்ச்... இதுல பொய் சொல்ல என்ன இருக்கு மேன்? ஒரு கோடி கடன் இருந்துச்சு. நாலு வருஷத்துல் அதை சிக்ஸ்டீ லேக்ஸ்க்கு குறைச்சிருக்கேன். ரெஸ்ட் அமௌண்ட் ரீபே பண்ண எனக்கு அட்லீஸ்ட் ஃபைவ் இயர்ஸாகும்!” என்றாள் பெருமூச்சுடன். அவன் முகத்தில் அதிர்ச்சி படர்ந்தது.

“அவ்வளோ கடனா?” என கண்ணை விரித்தான்.

“ஹம்ம்... ஆமா. என் அப்பா எனக்காக விட்டுப்போனது. இருக்க எல்லா அசர்டையும் வித்துட்டோம். அதை வாங்குனவங்க எல்லாம் என் அப்பா ஃப்ரெண்ட்ஸ்தான். அவரே இல்லைன்னதும் அடிமாட்டு விலைக்கு வாங்கிட்டாங்க. கடைசியா ஒருத்தருக்கு ஒரு கோடி கடன் மிச்சம் இருந்துச்சு. அவர் கொஞ்சம் நல்ல மனுஷன். வட்டி வேணாம், கடனை மட்டும் மாசம் மாசம் ஒரு அமௌண்ட் கொடுத்து அடைச்சிடுங்கன்னு என் நிலைமையைப் பார்த்து பாவம்னு சொன்னாரு. இப்போ அதைதான் ரீபே பண்ணிட்டு இருக்கேன்!” என்றாள்.

“அது சரி... என்னைவிட உன் பஞ்சாயத்து பெருசுதான் போல.‌ பட், அவங்கவங்க நிலைமைக்குத் தக்கன கடன் இருக்கு!” என்றான் கேலியாக.

“ஆமா...” என்றவள், “இஃப் யூ திங்க், யூ ஆர் நாட் மெச்சூர்ட் எனாஃப் டூ ஹேண்டில் திஸ் ப்ராப்ளம், கோ அண்ட் டெல் திஸ் டூ யுவர் டேடி. ஹீ கேன் ஹேண்டில் பரிதி!” என்றாள் ஆங்கிலத்தில் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால்.

இதையே தமிழில் கூறி அவன் தன்முன்னைப்பை தூண்டிவிடக் கூடாது என மிக கவனமாகப் பேசினாள். ஆங்கில வார்த்தையில் பொருளின் அர்த்தம் வெகுநாகரீகமாக அவனைச் சென்றடைந்தது. அவன் வேண்டாமென தலையை அசைத்தான்.

“ஏன்?” இவள் பார்வையால் கேட்டாள்.

“வேணாமே... எவ்வளோதான் அவரைக் கஷ்டப்படுத்த. அவருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம்தான். பட், என் அப்பான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். சோ, அவரைக் கஷ்டப்படுத்த மனசு வரலை. வேற ஏதாவது செய்யணும்!” என்றவனுக்கு மனம் லேசானது போலொரு உணர்வு.

இத்தனை நாட்கள் யாரிடமும் பகிர முடியாது அரிதாரத்தைப் பூசிக்கொண்டு திரிந்தவன், நான் இப்படித்தான் என தன் முகமூடியை இவளிடம் கழற்றி காண்பித்திருந்தான். இத்தனைக்கும் இவளை சந்தித்து சொற்ப காலங்களே. ஆனாலும் மனதுக்கு நெருக்கமாக ஏதோவொரு உணர்வு அவனை அவளிடம் பிணைக்க முயன்றது. அதனால்தான் யோசிக்காமல் அவளைக் கேலி செய்தது முதல் தோழியாய் பாவித்து மனதிலிருந்த பாரத்தை இறக்கி வைத்தது வரை அனிச்சையாய் நிகழ்ந்தது.

“உன்னைப் புரிஞ்சுக்கவே முடியல பரிதி. சம்டைம்ஸ் ரொம்ப சைல்டிஷ்ஷா பிஹேவ் பண்ற‌. பட் இப்போ பக்குவமா பேசுற. நீ இப்படித்தான்னு என்னால ஒரு கன்க்ளூஷனுக்கு வர முடியலை!” என்றவளைக் குறும்பாகப் பார்த்தவன்,

“நான்லாம் எல்லாரோட கணிப்புக்கும் அப்பாற்பட்டவன் இசைவாணி!” என்றான் இயல்பான கேலிக் குரலில். அவள் அவனை மென்மையாய் முறைத்தாள்.

“ஹம்ம்...” என இழுத்தவன், “தேங்க்ஸ்!” என்றான் மனதார.

உதட்டைப் பிதுக்கி புருவத்தை உயர்த்திய இசைவாணி, “நீயே வச்சுக்கோ. அடிக்கடி நீ எல்லார்கிட்டயும் சாரி கேட்குற மாதிரி வரும். ஏன்னா மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுறது உனக்கு கை வந்த கலையாச்சே. பேசுறதையும் பேசிட்டு நீயே வந்து சாரியும் கேட்ப!” அவள் கூற்றில் இவனிடம் அசட்டுச் சிரிப்பொன்று உதிர்ந்தது.

அவள் முறைப்பில் இரண்டு விரல்களை உதட்டிற்குக்கொண்டு சென்று சிரிப்பை மறைத்தவன், “பெர்த் டிபெக்ட்மா அது. இப்போ என்னோட மைண்ட் ரொம்ப அன்ஸ்டேபிளா இருக்கவும் அப்படி பேசிட்டேன்‌. பட், ட்ரஸ்ட் மீ இனிமே பேசாம இருக்க ட்ரை பண்றேன்!” என்றவாறே அவள் முன்னே கையை நீட்டினான் பரிதி. இசைவாணி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்‌.

தொண்டையை லேசாகக் கனைத்தவன், “ஃப்ரெண்ட்ஸ்?” என அவள் முகத்தைப் பார்த்தான்.

அவனையும் கையையும் குறுகுறுவென நோக்கிய இசைவாணி, “ஹம்ம்... இருந்துட்டு போ!” என போனால் போகிறதென அவன் நட்பழைப்பை ஏற்றாள்.

அவர்களது மகிழுந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. பத்து நிமிடத் தொலைவை இசைவாணி இருபது நிமிடமாக நீட்டித்து அவனை அழைத்து வந்திருந்தாள்.

“ஆன்ட்டி எப்படி இருக்காங்க?” இவன் கேட்டதும், “ஃபைன்... நீயே வந்து நேர்ல பார்த்துக் கேளேன். உன்னைப் பார்த்தா அவங்க கொஞ்சம் ரிலாக்ஸாவாங்க. பேச்சுத் துணைக்கு ஆளில்லாம கஷ்டப்படுறாங்க. கமலாம்மா வர ஒன் வீக்காகும்!” என அவன் முகம் பார்த்தவள், கீழே இறங்கி வெளிக்கதவைத் திறந்து மகிழுந்தை உள்ளே எடுத்துச் சென்றாள்.

“வொய் நாட்?” எனக் கேட்டவன் அவளுக்கு முன்னே உள்ளே சென்று சுந்தரியிடம் பேசத் தொடங்கினான். இதே தெருவில் வசிப்பவனுக்கு என்னிடம் பேச நேரமில்லையா என பெரியவர் உரிமையுடன் கேட்க, இவன் அவரிடம் ஏதோ சமாளித்துப் பேசி சிரிக்க வைப்பதை புன்னகையுடன் கண்டவாறே அறைக்குச் சென்ற இசைவாணி உடை மாற்றி முகம் கழுவி வந்தாள்.

அப்போது சுந்தரி தன் அலைபேசியில் ஏதோ சந்தேகமென அவனிடம் கேட்க, “இது ரொம்ப சிம்பிள் ஆன்ட்டி!” என அவன் அழகாய் அவருக்குப் புரியும்படி விளக்க, இவள் அவர்களிருவரையும் ஒருவித ரசிப்புடன் பார்த்தவாறே சமையலறைக்குள் நுழைந்தாள்.

பத்து நிமிடத்தில் மூவருக்கும் சூடான தேநீரும் உப்பு ரொட்டியுமாக வந்தவள், “வொய்ட் கலர் கப்பை டச் பண்ணாத பரிதி!” எனக் கூறவும், வேண்டுமென்றே அவன் வெள்ளைக் கோப்பையின் கைப்பிடியில் இரண்டு விரல்களை கோர்க்க முயன்றான்.

“அது வித்தவுட் சுகர் அம்மாவுக்கு!” அவள் அதட்டலில் உதட்டை வளைத்துவிட்டு அருகேயிருந்த மற்றொரு குவளையை எடுத்தான் அவன். சுந்தரிக்கும் தேநீரைக் கொடுத்தவள், இரண்டு ரொட்டித் துண்டோடு தனியாய் இருந்த இருக்கையில் கால்களை மடக்கி அமர்ந்து ஒரு வாய் தேநீரைக் குடித்தாள். பின்னர் ரொட்டியை தேநீரில் நனைத்து சுவைத்து உண்டாள். பரிதி அவளை ஓரக்கண்ணால் சிரிப்புடன் பார்த்தவாறே பெரியவரிடம் பேசினான்.

இசைவாணியின் அலைபேசி ஒலிக்க, எழுந்து சென்றாள். வினோத் என்ற பெயர் திரையில் மின்னவும், இவளிடம் ஒரு புன்னகை உதிர்ந்தது. அதை ஏற்றவள், “உயிரோடதான் இருக்கியா டா?” எனக் கேட்டாள்.

“நான் செத்தா கூட நானேதான் உனக்கு கால் பண்ணி சொல்லணும். அப்போ கூட நீ கால் பண்ண மாட்ட!” அவன் சடைத்துக்கொள்ள, நண்பனை சமாதானம் செய்தாள் இசைவாணி. பின்னர் இருவரும் பரஸ்பரமாய் அன்பை பகிர்ந்து, சமீபகாலமாக இருவரது வாழ்விலும் என்னென்ன நடந்தது எனக் கேட்டறிந்தனர். வினோத் தான் அழைத்த விஷயத்திற்கு வந்தான்.

“ஆன்சைட் போற ஆப்ஷன் வந்திருக்கு. பட் நீ அதை வேண்டாம்னு சொல்லிட்டு வந்திருக்க பக்கி. ஏன்?” அவன் ஆதங்கத்துடன் கேட்டான்.

“அம்மாவை இப்படியொரு நிலைமைல எப்படிடா நான் தனியா விடுவேன். லூசு மாதிரி பேசாத!” என்றாள் இவள்.

“யாரு டீ லூசு. கால் பண்ணி கடனைக் கட்ட முடியல. இ.எம்.ஐ மாசமான கழுத்தை நெறிக்குது. அம்மா ஆப்ரேஷனுக்கு காசு வேணும்னு புலம்புறது யாரு?” அவன் அதட்டலிட, இவளிடம் சட்டென மௌனம்.

“பம்ச்... வாணி... உன்னை என்ன அங்கயே போய் செட்டிலாக சொல்றாங்களா? ஹம்ம். ரெண்டு வருஷம் தானே? போய்ட்டு வந்தா கடனை செட்டில் பண்ணிடலாம். வீடு லோனும் ஓவராகிடும். அம்மாவோட ஆப்ரேஷன் பத்திக் கவலைப்படத் தேவையில்லை!” என அவன் எடுத்துச் சொல்ல, இவளுக்கு அனைத்தும் புரிந்தாலும் சுந்தரியை தனியே விட்டுச்செல்ல மனம் வரவில்லை.

“இல்லடா... அம்மாவை நினைச்சுத்தான்டா கவலை எனக்கு...” என்றாள் இறங்கிய குரலில்.

“கமலாம்மா இருக்காங்க. அவங்க ஆட்டியைப் பார்த்துப்பாங்க. ஆன்ட்டியோட ஆப்ரேஷன் முடிஞ்சதும் நீ கிளம்புற மாதிரி பார்த்துக்கோ. இடையில ஒன் இயர் லீவு கிடைக்கும், நீ வந்துட்டுப் போகலாம். தென் அப்புறம் ஒரு வருஷம் மட்டும்தான். சீக்கிரம் போய்டும். நீ இதைப் பத்தி நல்லா திங்க் பண்ணி முடிவெடு!” என்றான் அழுத்தம் திருத்தமாக. அவள் சரியென்றாள் யோசனையுடன்.

“ஆன்ட்டிகிட்டே ஃபோனைக் குடு. நான் பேசணும்!” வினோத் கூற,

“இங்க ஒரு ஃப்ரெண்ட் புதுசா கிடைச்சிருக்கான். அவன்கிட்ட அம்மா பேசிட்டு இருக்காங்க!” இவள் பதிலளித்தாள்.

“ப்ம்ச்... ரெண்டு நிமிஷம் பேசிட்டு வச்சுட்றேன் வாணி. நீ அவங்ககிட்ட ஃபோனைக் குடு...” என்றான் அடமாக.

“ம்மா... வினோத் உன்கிட்டே பேசணுமாம்...” சுந்தரியிடம் அலைபேசியைக் கொடுத்தவள், “என் ப்ரெண்ட்” என இவனிடம் கூறினாள். பரிதி தலையை அசைத்தான்.

தொலைவியக்கியை அவனிடம் கொடுத்தாள், “ஏதாவது பாரு. அம்மா வந்துடுவாங்க...” என்றுவிட்டு இரண்டு நாட்களாக துவைக்காமல் இருந்த தன்னுடைய உடையையும் தாயினுடையதையும் எடுத்துச் சென்று இயந்திரத்தில் இட்டாள். செவியில் பிரியமானவளே திரைப்படத்தில் விஜய் ஒப்பந்தமிடும் காட்சி வர, புன்னகைத்தாள்.

இந்தப் படத்தை பத்து முறைக்கும் மேல் கல்லூரி படிக்கும்போது பார்த்திருப்பாள். ஆனால் இப்போது என்னவோ விஜயின் ஒப்பந்தம் ஒருவித ஒவ்வாமையைக் கொடுத்தது. வயது முதிரத் தொடங்கும்போது ஒவ்வொன்றின் மீதான பார்வையும் கோணமும் மாறிவிடுகிறது என எண்ணிக் கொண்டே வேலை பார்த்தாள்.

சுந்தரி வினோத்திடம் பேசி முடித்ததும் பரிதியிடம் சில நிமிடங்கள் பேச, அவன் விடை பெற்றான். இவள் தலையை அசைத்தாள். கண்கள் மீண்டும் தொலைக்காட்சியில் பதிய, அந்த திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கினாள். ஒவ்வொரு காட்சிக்கும் அவளது சிந்தனை மாறுபட்டிருப்பதை கவனித்தவாறே படத்தை ஆராய்ந்தாள்.

துணி துவைத்து முடிந்துவிட்டதை இயந்திரம் ஒலியெழுப்பி அவளிடம் உரக்க கூற, அவற்றை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றாள். பரிதி, வெளிநாட்டு வாய்ப்பு, அவனின் கடன் பிரச்சனை, தன்னுடைய சொந்தப் பிரச்சனை தற்போது பார்த்த பிரியமானவளே படம் என வரிசையாக சிந்தையை ஆக்கிரமிக்க, அவளுள் ஒரு விபரீதமான யோசனை தோன்றிற்று.

உடனே தலையை உலுக்கியவள், ‘சே... தப்பு. என்ன வாணி நீ? இப்படியெல்லாம் யோசிக்கிற? ரொம்ப தப்பு!’ என தன்னைத்தானே அதட்டி அந்த சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள். ஆனால் அந்த வாரத்திலே அதற்கருகே காற்புள்ளி இட்டுத் தொடர விதி வழிவகை செய்திருந்தது.

தொடரும்...






 
Top