• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

நேயமுடன் நான் - 11

Ush

Well-known member
Messages
111
Reaction score
296
Points
63
11

அந்த நாள் முழுதும் மனதை கட்டுப்படுத்தி போட்ட சபதங்கள் எல்லாம் தகர ஒரு மணி நேரம் கூட எடுக்கவில்லை.

இரவு சாப்பிட்டு விட்டு அம்மா தூக்கம் வருகிறது என்று தூங்கப்போய்விட வீட்டுப்பக்கப்புறமாய் இருந்த கூடை நாற்காலிக்குள் ஆடியபடி நேயா மொபைலை நோண்டிக்கொண்டிருந்தபோது தான் அந்த காட்சி அவளது கண்ணில் பட்டது.

சமீப காலமாய் ருத்ரேஷ்வர் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்த்ததனால் இப்போதெல்லாம் அவை தான் முதலாவதாகவே கண்ணுக்கு தென்பட்டு விடுகின்றன.

ஏர்போர்ட் போன்ற பின்னணியில் மற்றும் இப்போதைய ருத்ரேஷ்வரின் உருவம் உறைந்திருந்த வீடியோவின் தலைப்பை பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

துபாய் விமானநிலையத்தில் VIP லாஞ்சுக்கு போகும் வழியில் ரசிகர்கள் தள்ளுமுள்ளு. விமான நிலைய போலீஸ் தலையீடு.

அனிச்சையாய் நேயாவின் கை வீடியோவை ப்ளே செய்ய மொத்தமாய் சுற்றிக்கொண்ட கும்பலும் சத்தங்களும் தான் பெரிதாய் கேட்டனவே தவிர ருத்ரேஷ்வரை காணோம்.. உள்ளம் பதட்டத்தில் நடுங்க கண்ணில் நீரே திரையிட்டு விட பார்த்துக்கொண்டே இருந்தவளை இன்னும் பதட்டப்படுத்துவது போல அவனது காயப்பட்ட தோளை காப்பாற்ற முயற்சிப்பது போல அவன் நெளிந்து குனிந்து வெளியேற முயல்வதோடு அந்த வீடியோ நின்று போனது..

ஐயோ அவனது தோளுக்கு இன்னும் ஏதாவது ஆகிவிட்டதா? பதறிப்போய் யூடியூப் ட்விட்டர் எல்லாவற்றிலும் வேறு வீடியோக்கள் அல்லது வேறேதும் செய்திகள் வந்திருக்கிறதா என்று தேடினால் எதையும் காணோம். இருந்த இரண்டு வீடியோக்களுமே அவன் தன்னுடைய தோளை காப்பாற்ற போராடுவது போலவே முடிந்திருக்க தவித்துப்போனவள் ஆதவனுக்கு அழைத்தாள்.

அந்தோ பரிதாபம்.. நீங்கள் அழைத்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இயந்திரக்குரல் சொன்னது..

எதையும் கிரகித்து கொள்ளாமல் அடுத்து ருத்ரேஷ்வர் மொபைலுக்கே அழைத்து விட்டாள் நேயா. அதற்கும் அதே கதி தான்..

ட்ரான்சிட்டில் இருந்தவன் இப்போது ப்ளைட்டே ஏறியிருப்பானே..இனி யூ எஸ் போய் சேர்ந்ததும் தானே அவனுடைய மொபைல் இயங்கும்?

தலையை பிய்த்துக்கொண்டவள் உடலுக்குள் ஏதோ ஆவி புகுந்தவள் போல ஆதவனுக்கு அழைத்துக்கொண்டே இருந்தாள்..

கண்ணில் கண்ணீர் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது..

முதன் முதலில் அவள் கண்ட ருத்ரேஷ்வரின் முகம் கண்ணில் வந்தது..தன் உலகத்தையே இழந்து விட்டது போல ஆவியற்று வேற்று மனிதனாய் சொந்த வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருந்தானே..

ஏற்கனவே அந்த தோள் சரியாகுமா இல்லையா என்றே ஒரு முடிவு தெரியாத நிலையில் இன்னும் ஏதாவது சேதம் ஆகிப்போனால் தாங்க மாட்டானே..

அவளின் சுய பிரக்ஞை எங்கோ போயிருக்க அவளிதயம் அவனுக்காய் துடிக்க ஆரம்பித்திருந்தது. கண்களில் கண்ணீர் அதுபாட்டுக்கு கொட்ட ஆரம்பித்திருக்க செல்பிக்காய் மொபைல்களோடு நீண்ட கைகளினதும் உடல்களினதும் தள்ளுமுள்ளுக்கு நடுவே வலக்கையால் சுற்றிக்கொண்டு தன்னுடைய காயம் கண்ட தோளினை காப்பாற்ற போராடியவனின் அந்த சில செக்கன்ட் காட்சிகளே திரும்ப திரும்ப கண்ணுக்குள் வந்து நிழலாடியது..

என்னால் எதையும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையும் சேர்ந்து கொள்ள முணுக்கென விழிகளில் கண்ணீரை கூட்டியது.

கடவுளே அவனுக்கு ஒண்ணும் ஆகியிருக்க கூடாது.. மனம் இடைவிடாமல் இறைஞ்ச என்னமோ அவன் போகும் விமானத்தை பார்ப்பவள் போல இருளில் மின்மினிகளோடு மினுங்கிய வானத்தை பார்த்துக்கொண்டே இருந்தாள் நேயா.

“நேயா கதவை பூட்டிட்டு உள்ளே வா.. பனி கொட்டுது! தூக்கம் வரலையாம்மா?” என்று கேட்டபடி வாசலருகே கண்ணை கசக்கிக்கொண்டு வந்த அம்மாவின் குரலில் சுயநினைவுக்கு வந்தவள் பட்டென்று எழுந்து அம்மா தன் முகத்தை கவனிக்காதபடி அவசரமாய் அவரை கடக்க முயன்றாள்

“என்னடி?” என்று அம்மா கேட்க

“உக்காந்தபடியே தூங்கிப்போயிட்டேன்மா” என்று சமாளித்தாள். வேறு என்ன சொல்வது அம்மாவுக்கு?

“ப்ச்..இந்த வேலையில் சேர்ந்த நாள் முதல் அலைச்சல் தான் உனக்கு. போய் தூங்கும்மா” என்று சொன்ன அம்மாவின் விழிகள் தன்னை கரிசனமாய் அளவிடுவதை உணர்ந்தவளுக்கு மீண்டும் கண்ணீர் பொங்கியது.

“குட்நைட்மா” என்று தூக்கக் கலக்கம் போல நடித்து தன்னுடைய அறைக்குள் வந்து தாளிட்டு கொண்டவளுக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை..

அவனுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தூக்கம் வராது.

இரண்டு வீடியோக்களுமே யாரோ பயணிகள் எடுத்துப்போட்ட வீடியோவாக தான் இருக்கவேண்டும்..எங்கே தேடியும் அதற்கு மேல் ருத்ரேஷ்வர் குறித்த எந்த தகவலுமில்லை..

துபாயில் இருந்து US போகும் விமானம் ஆக இருந்தால் நாளைக்கு காலையில் தான் போய் சேருவான்.

ஆதவன் அண்ணா போன் எடுக்காமல் இருப்பதால் அவரும் கூடப்போயிருப்பாரோ என்னமோ..அது கொஞ்சமே கொஞ்சம் மன ஆறுதல் கொடுத்தது அவளுக்கு.

அடிப்படை மனிதம் கூட இல்லாமல் இது என்ன ரசிக மனப்பான்மை? இல்லை இல்லை இவர்கள் ரசிகர்கள் கிடையாது.. பிரபலத்தை கண்டு விட்டால் அவர்களோடு போட்டோக்களையும் செல்பிக்களையும் போட்டு பெருமைப்பட்டுக்கொள்ளும் வெறுமனே புகழ் வெறி பிடித்தவர்கள். ஒரு மனுஷனின் நிலை பற்றி கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் தேனீக்களாய் சுற்றி தங்களின் காரியம் சாதித்துக்கொள்ளும் சுயநலவாதிகள்..

கண்டமேனிக்கு மனதில் எல்லோரையும் திட்டிக்கொண்டே விட்டத்தை பார்த்துக்கொண்டு கட்டிலின் குறுக்காய் விழுந்து கிடந்தாள் நேயா.

நேரம் நகர நகர அவனை பற்றி இனிமேல் காலை தான் தெரியும் என்பது மனதுக்கு உறைக்க ஆரம்பித்திருக்க பதட்ட மனம் இப்போது அவளிடமே திரும்பி வந்து நின்றிருந்தது.

முன்னர் இருந்த அதே ரசிகை நேயாதான் இப்போதும் இருக்கிறாள் என்று பொய் சொல்ல அவளது மனம் கூட தயாரில்லை. ஒரு ஆழிப்பேரலையாய் வந்து அவளது தடுப்புச்சுவர்களைஎல்லாம் உடைத்து போட்டுவிட்டதே அந்த செய்தி.

தன் மனம் பட்டவர்த்தனமாய் தெரிந்து போக விழிகளில் நீர் கோர்க்க ஒருக்களித்து கிடந்தாள் நேயா.. இவ்வளவு நேரமும் அவனுக்காய் பூத்த விழிநீர் இப்போது அவளுக்காய் பூத்தது. என்ன செய்யப்போகிறாள்..

ஒரு ரசிகையாய் ஒரு கண்டிப்பான சமையல் வல்லுநராய் தான் உள்ளே நுழைந்தாள். ஆனால் உப்பே இல்லாமல் சமைத்ததை ஒரு பேச்சு இல்லாமல் சாப்பிட்டு போன கணமா? செய்வதை எல்லாம் செய்து விட்டு பிறகு பொம்மையை பிடித்துக்கொண்டு அலையும் குழந்தை போன்ற அவனது சிறுபிள்ளை தனமா? அவள் கண்ணில் கண்ணீர் கண்டதும் அவன் மனம் கலங்கி இருந்த நேரமும் வந்து விசாரித்த அக்கறையா? இல்லை இழப்புகளை சகித்துக்கொள்ள முடியாமல் தன்னை தனிமைப்படுத்தி தனக்கு பிடித்த கிரிக்கட்டை முற்றாய் ஒதுக்கி என்று அவனது மீண்டெழும் போராட்டம் அவளையே அவளுக்கு நினைவு படுத்தியதா? எதுவென்றே தெரியாமல் ஏதோ ஒரு புள்ளியில் அவள் தன் மனதை அவனிடம் இழந்து விட்டிருந்தாள்.

புதிதாய் ஒரு பயம் முளைத்தது அவளைக்குறித்தே... ருத்ரனை போலத்தான் ..நேயா இழப்புக்களையும் ஏமாற்றங்களையும் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு உறுதியானவள் இல்லை.. அப்பாவின் இழப்பு அவளது பாதையை எங்கோ சுற்றி மடை மாற்றி இங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறது.. இன்னொரு அடி விழுந்தால் அதை தாங்கிக்கொள்ளும் வலு அவளது இதயத்துக்கு இல்லவே இல்லையே.

எதை எதையோ நினைத்துக்கொண்டு தூங்கிப்போனவள் அதிகாலை மொபைல் அழைக்கவும் தான் கண்விழித்து எழுந்தாள்

ருத்ரன் தான் அழைத்துக்கொண்டிருந்தான்

“ஆர் யூ ஒகே நேயா? ஏன் இத்தனை மிஸ்ட் கால்?” அவன் குரலில் பதட்டம் தெரிய அப்போது தான் தூக்கத்தை துடைத்தெறிந்து எழுந்து அமர்ந்தவள் என்ன என்னை என்னன்னு கேட்கிறான் என்று குழம்பி “என்ன சொல்றீங்க சார்? ஆர் யூ ஒகே? உங்களுக்கு ஏதும் ஆயிடுச்சு? வீ..வீடியோ பார்த்தேன்..பயந்துட்டேன்..”என்று அவசர அவசரமாய் பதட்டக்குரலில் கேள்விச்சரங்களை தொடுக்க மறுமுனையில் அவனோ என்ன வீடியோ என்று குழம்பினான்.

“ஏர்ப்போட் வீடியோ..பார்க்கவே பயமா இருந்தது”

“அட அதை யாரோ வீடியோ பண்ணிட்டாங்களா? இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை” என்று பொதுவாய் ஒரு திட்டை அந்த நபருக்கு பரிசு வழங்கி விட்டு குரலை தழைத்துக்கொண்டவன் “ஐ ஆம் ஒகே சரியா? எனக்கு ஒண்ணுமில்லை. எல்லாம் நம்ம பசங்க தான்... கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டாங்க” என்று சிறு குழந்தைக்கு சொல்வது போல சொன்னான்.

நேயாவுக்கு மனதே ஆறவில்லை.. “நம்ம பசங்களா? இப்படித்தான் நசுக்குவாங்களா? நிஜமாவே கை தோளெல்லாம் ஓகேயா.. நான் பார்த்த வரை நீங்க கையை மூடிக்கிறது வரை தான் இருந்தது?” இவள் இன்னும் பதட்டம் குறையாத குரலில் மறுபடியும் கேட்க வாய் விட்டு சிரித்தான் ருத்ரேஷ்வர்..

“இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க..” நானே பதறிப்போய் இருக்கிறேன் இவனுக்கு சிரிப்பு வேண்டியிருக்கா? நேயாவுக்கு ஒரு புறம் கோபம் வேறு!

“ஒண்ணுமில்லைன்னு சொல்றேன்ல..அடுத்த செக்கன்ட் போலீஸ் வந்து கலைச்சு விட்டுட்டாங்க.. அப்புறம் தம்பிங்களா அண்ணனுக்கு தோளில் பிரச்சனை அப்படியே உக்காந்து பேசலாம்னு ரொம்ப நேரம் உக்காந்து பேசிட்டிருந்தோம்..அதை யாரும் வீடியோ போட்டிருக்க மாட்டானுங்களே..” என்றவனின் குரலில் சிரிப்பு இருந்தது..

அடச்சே..நம்ம தான் தேவை இல்லாம பல்ப் வாங்கிட்டோம் போலயே.. இந்த சின்ன விஷயத்துக்கு இவ்வளவு அக்கப்போர் பண்ணிட்டோமேன்னு என்னை பற்றி என்ன நினைப்பான்? என்று சங்கடமாய் நினைத்துக்கொண்டவள் முகம் சிவக்க “நான் வைக்குறேன்” என்று உர்ரென்று சொல்லி விட்டு பிறகு யோசித்து “குட் லக்” என்று விட்டு வைக்க போனாள்

“நேயா..” ருத்ரேஷ்வரின் ஆழ்ந்த குரல் அவளை நிறுத்த அழைப்பை துண்டிக்க போன அவளது விரல்கள் சிவப்பு பட்டனிலேயே உறைந்தன.

“டூ யூ கேர் அபவுட் மீ?”

அலைபேசியையே விழி விரிய பார்த்துக்கொண்டு நின்றாள் நேயா! இதற்கு என்ன பதில் சொல்வது..அவனும் தான் ஏன் இதை கேட்க வேண்டும்?..அச்சோ எல்லாவற்றுக்கும் நீ தான் காரணம்.உன் மனதை நீயே தான் காட்டி கொடுத்து விட்டாய்.. சமாளி சமாளி என்று அவள் மனதோடு போராட

என்ன சத்தத்தையே காணோம்..” என்று சிரிப்போடு கேட்டான் அவன்

“கண்டிப்பா..நீங்க பாஸ்..நான் ஸ்டாப் ஒரு இடத்துல ஒண்ணா வொர்க் பண்ணும்போது உங்க நலன்ல அக்கறை தானாகவே வரத்தானே செய்யும்”..என்று எதையோ சொல்லி சமாளிப்பதற்குள் நெற்றி முழுதும் வியர்த்தே போய்விட்டது அவளுக்கு

“அப்போ ஆமாம்?”

இவன் வேற அதையே நோண்டிட்டு.. இந்த பேச்சை விட்டு தொலையேன்டா..

“ம்ஹ்ம்” என்று தலையாட்டி வைத்தாள் என்னமோ நேரில் பேசுவது போல

சரியாய் அந்த நேரம் “யார் நேயாவா? என் போனை மிஸ்ட்கால் கொடுத்தே பிளாஸ்ட் பண்ணி வச்சிருக்கா இருபது மிஸ்ட்கால்..என்னனு கேளு” என்று ஆதவன் கேட்பது கேட்டது..

முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பது என்று அவளுக்கே தெரியவில்லை. இருபது மிஸ்ட் கால் கொடுத்தோமா? என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வெறி பிடித்தவள் போல அழைத்தது மட்டும் தான் ஞாபகம் இருந்தது..

மறுபக்கம் ருத்ரனின் உல்லாச சிரிப்பும் கூடவே “அது ஒண்ணுமில்லைடா.. ஏர்போர்ட்ல லைட்டா மாப் ஆச்சுல்ல அதை யாரோ வீடியோ எடுத்து போட்டிருப்பாங்க போல..மேடம் பயந்துட்டாங்க”

“பயந்துட்டாளா? ஏன்டா ஒரு நியாயம் வேணாமா? சுத்தி பிடிச்சா நசுங்கிப்போற உருவமா இது? அநியாயத்துக்கு டென்ஷன் பண்ணிட்டிட்டு” என்று நக்கல் செய்து விட்டு ஆதவன் அகல்வது கேட்க இவளுக்கு இன்னும் முகம் சிவந்தது..

டே..டேக் கேர் என்று விட்டு படக்கென்று போனை கட் செய்தவளுக்கு முகத்தை எங்கே வைப்பது என்றே தெரியவில்லை..

வான்டட் ஆக போய் தலையை கொடுத்துவிட்டு வருவது என்பது இதுதானா?

ஆனாலும் ருத்ரேஷ்வர் நம்ம கிட்ட எதையோ ட்ரை பண்ற போலவே தெரியுதே...

நினைக்காதே எதையும் நினைக்காதே..அவன் என்ன ட்ரை பண்ணினாலும் இது வொர்க் அவுட் ஆகப்போவதில்லை..அவன் உலகம் வேறு..என் உலகம் வேறு.. எங்களிருவர் பெயர் ஒரு வாக்கியத்தில் கூட ஒன்றாய் இடம்பெற முடியாது. என்று எண்ணிக்கொண்டவள் கலைந்த தூக்கத்தை வலுக்கட்டாயமாய் தொடர முயன்றாள்

தலையணையில் முகத்தை அழுத்திக்கொண்டிருந்தது ஒன்று தான் நடந்தது. இனிமேல் இப்படியே இருக்க முடியாது என்று எழுந்து குளித்து உடை மாற்றிக்கொண்டு அவள் வெளியே போனபோது அம்மா மெல்லிய சிரிப்புடன் லாப்டாப்பின் முன்னே அமர்ந்திருந்தார்..

“என்னம்மா சிரிக்கிறீங்க?”

“ஜோக் ஒண்ணு பார்த்தேன்..அதை விடு..நல்லா தூங்கினியா?” என்று அவர் கேட்க

“ஹ்ம்ம்..” என்று நேயா சொல்லி முடிக்க முன்னர் “சர்ப்ரைஸ்” என்ற ஆண்குரலும் கைகளும் அவளை பிடித்து சுழற்றியது..

“ஜெர்!!!! வீக் என்ட் தானே வர்றேன்னு சொன்ன?” என்று உற்சாகமாய் கூவினாள் நேயா. பல நாட்களின் பின்னர் சகோதரனை நேரில் கண்டதும் கோபங்கள் இருந்த இடமே தெரியவில்லை.

அவனுக்கும் அப்படித்தான் போலும்.. “நொய் நொய்..எக்ஸாம் டேட்டை முன்னுக்கு போட்டு லீவ் விட்டுட்டானுங்க..இரண்டு வாரம் இங்கே தான் இருக்கப்போறேன்” என்றபடி இருவரும் பகிர்ந்து கொள்ளும் அந்த ஐக்கானிக் கன்னக்குழி தெரிய சிரித்தபடி அவளை இன்னொரு தடவை சுழற்றினான் அவன்.

இது தான் அம்மா புன்னகை முகமாய் இருந்ததன் காரணமா ? என்று திரும்பிப்பார்த்தால் அவர் தனக்குத்தானே தலையசைத்துக்கொண்டு எழுந்து போய்க்கொண்டிருந்தார்.

“இரு இரு” என்று அவனை பிடித்து நிறுத்தி விட்டு அவனை சுற்றி வந்து ஒரு தடவை பார்த்தாள் நேயா..

“என்னடா ஆளே மாறி போய்ட்ட! தலை முடி வளர்த்து இன்னும் கலராகி,, என்ன இன்னும் கொஞ்சம் உயரமாகிட்டியா? என்னை விட இவ்வளவு தானே உயரமா இருந்த” என்று அவள் அதிசயமாய் அவனை அளந்து பார்த்து, “பைலட் களை வந்துருச்சு” என்று சிரிக்க

அவனும் அவளை தான் உல்லாசமாய் பார்த்துக்கொண்டிருந்தான். “நீயும் ரொம்ப மாறிட்ட..கலக்கற நேயா” என்றபடி

“அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் ரீலை இன்னும் எவ்வளவு நேரத்துக்குடா ஓட்டுவீங்க..நானும் முடிக்கட்டும்னு வெளியே வெயிட் பண்ணிட்டிருந்தா நீங்க ரெண்டு பேரும் முடிக்கறதாவே காணோம்” என்று கடுகடுத்தபடி என்றபடி ஷாலு செருப்பை கழற்றி வைத்து விட்டுஉள்ளே வர

“வந்துட்டா கரடி” என்று அவளை செல்லமாய் வைதவள் அவர்கள் இருவரும் கண்களாலேயே ரொமான்ஸ் பண்ணிக்கொள்வதை ஓரக்கண்ணால் ரசித்தபடி

“ஏய் சாப்பிட்டியா, நீ சாப்பிட்டியாடி?” என்று இருவரையும் கேட்டுக்கொண்டே சமையலறைக்குள் சென்றாள் நேயா

“நேயாம்மா.. எல்லாத்தையும் எடுத்து வைக்கிறியா? அம்மா இதோ வந்துடறேன்..” என்று கெஞ்சலாய் கேட்டுக்கொண்டே போனுடன் மலர் அகல.

“நீங்க வேலையை பாருங்கம்மா..நான் பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டு சமைலயறையில் இருந்து சமைத்த உணவுகளை எடுக்கப்போனாள் நேயா.

பிள்ளைகள் இருவரினதும் படிப்புமே ஹாஸ்டலில் தங்கி இருந்து படிக்க வேண்டி நேர்ந்து விட தனிமையை போக்கிக்கொள்ள மலர் இந்த பகுதி நேர அலுவலக வேலையில் இணைந்திருந்தார். இப்போதும் காலையிலேயே சமையலை முடித்து விட்டார் என்றால் இரண்டு மூன்று மணிநேரம் வேலையிலேயே கழிந்து விடும் அவருக்கு.

சிக்கன் கிரேவியை தட்டுக்கு மாற்றிக் கொண்டிருந்தவளை தோளோடு அணைத்தது ஜெரமியின் கரங்கள்.. “சாரிடி.. இனிமே நான் அப்படி லூசு மாதிரி பேசமாட்டேன் சண்டை போடமாட்டேன். சரியா? சாரி” என்று அவன் சொல்ல ஆச்சர்யமாய் திரும்பியவளின் நெற்றியில் முட்டினான்

“என்னடா ?” என்று கேட்டாள் நேயா ஆச்சர்யத்தை அடக்க முடியாமல்..

“அது அப்படித்தான்..இந்த வாரம் முழுக்க யோசிச்சேன்..உனக்கும் எனக்கும் ஒரே வயசு..என் முடிவுகள் சரியா இருக்கும்னு நான் நம்பும்போது நீயும் அப்படித்தானே..உன்னை மட்டும் நான் அடக்க முயற்சி பண்றேனேன்னு இருந்துது.. நீ என்ன வேணா பண்ணு. எவன் வந்தாலும் நான் இருக்கேன்” என்று கட்ஸ் கான்பித்தவனை பார்த்து இதழ் மலர சிரித்தவளின் கண்ணில் அத்தனை சந்தோ”சம். கிரேவியை அப்படியே வைத்து விட்டு அவனை இறுக கட்டிக்கொண்டவள் தாங்க்ஸ் டா..இட் மீன்ஸ் ஏ லாட்” என்று சொன்னபோது கண்ணீரே துளிர்த்து விட்டது அவளுக்கு.

இது தான் அவர்கள். ஒருவருக்காய் ஒருவர் தோள் கொடுத்து நிற்பது..இது தொலைந்து போனதே என்பது தானே அவள் துயரம்..

“உனக்கு படிச்சிட்டே வேலை பார்க்கிறது கஷ்டமா இல்லையாடா.. எனக்கு சம்பளம் ரொம்ப அதிகம்..என்ன பார்க்கிற..ஹி ஹி சொல்லிக்காமிக்கலைடா..அவ்ளோவையும் வச்சு நான் என்ன பண்ணப்போறேன்..நீ எடுத்துக்கோயேன்..” என்று அவள் கேட்க

“இல்லடி..இது ஒரு மாதிரி நல்லாருக்கு எனக்கு. உள்ளே நடக்கறதை தெரிஞ்சுக்கற போலவும் இருக்கு.. அத்தோட ப்ராக்டிஸ் பண்ண இப்போல்லாம் நேரக்கட்டுப்பாடு கிடையாது..ரொம்ப சலுகை தராங்க.. தேவைன்னா உன்கிட்ட தானே கேட்பேன்..” அவன் சொன்னது புரிந்தாலுமே

நேயாவின் முகம் தெளியாமல் இருக்க..

“வந்துட்டேன் ல.. இன்னும் ஆறுமாசத்துக்கு வேண்டிய என்னோட ஷாப்பிங்குக்கு நீ தான் ஸ்பான்சர் பண்ண போற. உன் பாங்க் பாலன்சை காலி பண்ணாம விடமாட்டேன் என்று அவன் சிரிக்க லேசாய் இவள் உதட்டிலும் புன்னகை வந்தது. அவர்களுடைய வீட்டிலேயே ‘பெண்கள்’ போல ஷாப்பிங் பண்ணுவது அவன் ஒருத்தன் தான்.. ஸ்கின் கேர், ஷாம்பூ வகையறாக்கள், உடைகள் பெர்பியூம், ஷூ, இன்னும் இன்னும் எத்தனையோ..கடைக்கு போய்விட்டான் என்றால் எல்லாரும் வெறுத்துப்போய் உட்கார்ந்து விடுவார்கள்.

“இன்னும் சாப்பிட ஆரம்பிக்கலையா நீங்க..” என்றபடி வந்த மலர் “ஜெரி இதை எடுத்துட்டு போ” என்று சப்பாத்தி வைத்திருந்த தட்டை அவன் கையிலும் திணித்தவர் மேலும் இருந்த உணவுகளை கிண்ணங்களில் எடுத்துக்கொண்டு ஷாலு போனில் இருப்பதை கவனித்து ஷாலு ஓடி வா என்று அவளையும் கொண்டு வந்து எல்லாரையும் சாப்பிட உட்கார வைத்து விட்டார்.

“அப்புறம்... ருத்ரேஷ்வர் கிட்ட பக்கத்துல இருந்து வொர்க் பண்றது எப்படி இருக்கு?” சோம்பல் சிரிப்புடன் ஜெரமி கேட்க

ஹௌ டூ ஐ டெல் யூ என்று வடிவேலாய் அவள் விழிக்க

“அதையேன் கேட்கிற.. மேடம் வாயில இருந்து மேதகு கிளையன்டை பத்தி ஒரு வார்த்தை வராது” என்று இடைப்புகுந்தாள் ஷாலு

“போடி..சொல்ல என்ன இருக்கு..வழக்கமான வேலை தானே..” என்று அவசரமாய் நேயா சமாளித்து வைக்க

“ஆனா இது உன் ருத்ரேஷ்வர் டி..” என்று அவள் குறும்பாய் இமை உயர்த்த

அடிங்க என்று நேயா சொன்ன அதே நேரம் ஏய் என்று ஜெரமியும் கண்டிப்பாய் ஷாலுவிடம் கண்காட்டினான்..

“போங்கடா போரிங் குடும்பம். எனக்கென்ன?” என்று அவள் சப்பாத்தியை வாயில் திணித்துக்கொண்டாள்

இதற்கு மேலும் ஏதும் பேசாமல் இருந்தால் மாட்டிக்கொள்வோம் என்று புரிய “ருத்ரா சார் ஆரம்பத்துல கொஞ்சம் கடுகடுன்னு தான் இருந்தார்..இப்போ கொஞ்சம் கொஞ்சம் அவர் வழமைக்கு வர்றதால எனக்கு அங்கே எந்த பிரச்சனையும் இல்லை.. டிசைன் டிசைனா கேட்பார் ஆனா பாவம் கொடுக்கறதை பதில் பேசாம சாப்பிட்டு போய்டுவார். அதை தவிர அங்கே ஆட்கள் இருக்காங்க..மேற்பார்வைன்னு பெயரே தவிர எனக்கு வேறேதும் வேலை வீட்டில் இல்லை..” என்று காதை இங்கே வைத்திருந்த அம்மாவுக்கும் சேர்த்தே தான் பதில் சொன்னாள் நேயா.

ஆமாமாம்....ருத்ரேஷ்வருக்கு தான் ஷர்ட், வாட்ச், லாப்டாப் இதெல்லாம் தேடிக்கொடுக்க வேண்டும்..அவனை வாகிங் கூட்டி போகவேண்டும்.. வீட்டில் வேலை இல்லைத்தானே..இதை சொன்னால் பூரிக்கட்டை தான் வரும் என்று மௌனமாய் தனக்குள் சிரித்துக்கொண்டவள் ஆர்வமாய் சாப்பிடுவது போலவே குனிந்து கொண்டாள்

“அம்மா செமையா இருக்கு கிரேவி..”

“சாப்பிடுடி.. இவ சாப்பிடுறதே இல்லைடா.காலைல அரக்க பறக்க ஒண்ணு ரெண்டுன்னு சாப்பிட்டு ஓடிப்போனா இரவு டயர்டா வந்து நைட்டும் கொறிச்சிட்டு தூங்கிடறது” என்று ஜெரமியிடம் கம்ப்ளையின்ட் பண்ணினார் மலர்..

“மம்மி அவளே செப்.. அவ சாப்பிடலைன்னா உங்க சாப்பாடு நல்லாயில்லைன்னு மறைமுகமா சொல்றதா அர்த்தம்..முன்னேற இடமுண்டு” என்று அவன் சிரித்துக்கொண்டே ஏற்றி வைக்க

“போங்கடா நான் எதுவும் கேட்கமாட்டேன்.. அப்புறம் அனீமியா வந்துருச்சு..ஈமொக்ளோபினை காணோம்னு வந்து நில்லுங்க..இந்த தடவை நான் ஹாஸ்டலுக்கு போய்டுவேன்” என்று மலர் முறைக்க அவரின் முகபாவத்தில் எல்லாரும் சிரித்து விட்டனர்.

மாலை வரை வீட்டில் அலப்பறை செய்து விட்டு மாலுக்கு கிளம்ப “ரெண்டு பேரும் கிளம்புங்க நான் நாளைக்கு வர்றேன்..மூணாவது சில்லா உங்க பின்னாடி சுத்திட்டு இருக்க என்னால முடியாது” என்று நேயா கழன்று கொள்ளபார்த்தாள்/

“ஆனாலும் விடாமல் அது உன் கடமைடி..” என்று அவளை கட்டம் கட்டி தூக்கிப்போய்விட்டனர்.

எப்படி போனதென்றே தெரியாமல் இருளும் வந்துவிட ஷாலுவை விட்டுவிட்டு வா என்று வீட்டிலேயே இறங்கிக்கொண்டவள் உள்ளே வர ருத்ரேஷ்வர் அன்றைக்கு இரண்டாவது தடவையாய் அழைத்தான்.

அத்தனை நேரம் மறந்து போயிருந்த உணர்வுகளெல்லாம் விழித்துக்கொள்ள அறைக்குள் ஓடிப்போனவள் அவனது அழைப்பை ஏற்க “இது தான் நீ கேர் பண்ணிக்கிற அழகா? டாக்டரை பார்த்துட்டு வந்துருப்பானே என்ன ஆச்சு ஏதாச்சுன்னு கேட்கணும்னு தோணுதா?” என்று எடுத்த எடுப்பிலேயே அவன் கடுகாய் வெடிக்க மலைத்துபோனாள்..

இவ்வளவு நேரமும் விளையாடி சிரிக்கும் போது மனதின் ஓரமாய் இவனுக்கு என்ன சொல்லியிருப்பார்கள் என்ற எண்ணம் அவ்வப்போது வந்து போகவே செய்தது. ஆனால் போன் செய்து கேட்கும் அளவுக்கா எங்களுக்குள் நெருக்கம்?

“என்ன சொன்னாங்க சார்” என்று அவசரமாய் கேட்டவளை “நீ தான் கேட்கவே இல்லையே அப்புறம் என்ன அக்கறை.. தொல்லை விட்டதுன்னு ஜாலியா இருக்கியா?” என்று அவன் உர் குரலில் கேட்க

“ப்ச்..நான் எப்படி உங்களை தொல்லை பண்றது?” என்றாள் நேயா பலவீனமாய்

“கேர் பண்றேன்னு அறிக்கை விட்டல்ல,,இதெல்லாம் பண்ணணும்னு தெரியாதா?”

போச்சு அந்த ஒரு ஒப்புதலை வைத்துக்கொண்டு நம்மை வைத்து செய்யப்போகிறான் என்று அவளுக்கு புரிந்து போனது.

“ப்ச்.. சொல்லுங்க சார்..என்ன ஆச்சு..”

“அங்கே சொன்னது போலவே Rotator cuff tear தான்னு உறுதி பண்ணினாங்க.. அதே கதை தான். சர்ஜரி பண்ணலாம். ஆனால் எனக்கு திரும்ப பாட் பண்ணும் போது பழையமாதிரி சக்தி கொடுக்க முடியுமான்றது தான் கேள்வி.. இங்கேயே பண்ணிடுங்க அதிகப்பட்சமா எவ்வளவு சரிப்படுத்த முடியுமோ பண்ணிடலாம்னு நம்பிக்கையா சொல்றாங்க..”

மனதுக்குள் பெருத்த ஆறுதல் உருவானாலும் அவன் விளக்கமாக சொன்னதை காதை தேய்த்து உண்மையா என்று பரிசோதித்தவளுக்கு மெல்லிய சிரிப்பு உதடுகளில் ஓடியது. இன்றைக்கு தான் முதல் தடவையாய் அவனது சிக்கலை பற்றி சொல்றான்..ஆனா என்னமோ டெய்லி என்கிட்டே டிஸ்கஸ் பண்ற போலவே பேச்சை பாரு..

“எல்லாம் சரியாகும் சார். எப்படியும் வயசாக ஆக உங்களுக்கு எனர்ஜி குறையத்தான் செய்யும்..இப்படியே வாழ்க்கை முழுக்க இருக்க முடியாதுல்ல..இதையும் அப்படியே எடுத்துக்கோங்க..” என்று சொல்லி விட்டுத்தான் உதட்டை கடித்தாள் நேயா..ரொம்ப உரிமை எடுத்து அட்வைஸ் வேற பண்ணிட்டோம்.

“சரிங்க மேடம்..” என்ற அவனது சீண்டல் குரல் சிவக்க வைக்க

“சாரி.. நான்.. நான் சாதாரணமா சொல்ற போல சொல்லிட்டேன்” என்று சமாளித்தாள்

“சரி விடு.. என்னை போல எம்ப்ளாயர் உனக்கு எங்கே கிடைப்பாங்க..அந்த அக்கறைன்னு எடுத்துக்கிறேன்..”

நினைப்பை பாரு!

“அதெல்லாம் கிடைப்பாங்க..கடல்ல ஆயிரம் மீன் சார்”

“ஆயிரம் மீன் இருக்கலாம் என்னை போல திமிங்கிலம் இருக்குமா?”

“பார்க்கவும் அப்படித்தான் இருக்கு..” வழக்கம் போல நாவு கட்டுடைத்து கொண்டு விட்டது அவளுக்கு..

“அப்படின்னா நீ நெத்திலி!”

“சார்..” என்று அவள் கோபமாய் இடையிட

வாய் விட்டு சிரித்தவன் “நீ என்னை திமிங்கிலம்னு சொல்லலாம்.நான் நெத்தலின்னு சொன்னா தப்பா.. ஆமா நெத்தலி போரியல் பயங்கர டேஸ்டாமே..” அவன் நாவை கன்னகதுப்புக்குள் சுழற்றியபடி பேசுவது இங்கே அவளுக்கு மனக்கண்ணில் தெரிந்தது.

“தெரியாது செஞ்சதில்லை.”

நேயா..

ம்ம்ம்

நான் வந்ததும் எனக்கு வேணும்..

என்னது..

“நெத்தலி போரியல்” அவன் குரலில் அப்பட்டமான சிரிப்பு தெரிந்தது.

பார் பார் டபிள் மீனிங்க்ல பேசுறான்

பேச்சை மாற்ற எண்ணி “சார். ட்ரீட்மென்ட் எல்லாம்அங்கேயே பண்ணிடுங்க சார். நீங்க சொன்ன கதைகளை எல்லாம் கேட்டப்புறம் இங்கே யாரும் வேணும்னே விளையாடிருவாங்களோன்னு பயமாஇருக்கு” என்றாள் யோசனையாய்

நீங்க சொன்னா சரிதான் மேடம்” அதே சிரிப்புக்குரல்

மறுபடி பேச்சை மாற்றுகிறோம் என்று எல்லை மீறிவிட்டோம் என்று உதட்டை கடிக்க

It's a beautiful night, we're looking for something dumb to do
Hey, baby, I think I wanna marry you

என்று உல்லாசமாய் பாடிக்கொண்டே உள்ளே நுழைந்தான் ஜெரமி;;

மெல்ல மொபைலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள் நேயா.. காதலின் முதல் படி மூளையின் கட்டுப்பாட்டில் இருந்து அவயங்கள் சுதந்திரம் பெறுவதே..
 
New member
Messages
25
Reaction score
12
Points
3
தேவை இல்லாம பேச்சு கொடுத்து மாட்டிக்கிட்டியே நேயா😂
இதும் நல்லா இருக்கு😜
 
Active member
Messages
219
Reaction score
169
Points
43
When can we expect the update sis??
 
Top