• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93
இன்னைக்கு அப்டேட் கொஞ்சம் பெருசு. அதான் டைம் ஆகிடுச்சு டியர்ஸ். ரெண்டு அத்தியாயத்தில் கதை முடிந்திடும். ரெண்டும் சேர்த்து நாளைக்கு கொடுத்துட்றேன். அப்புறம் ஃப்ளாஷ் பேக் எமோஷனலா சொல்லலை. ஏன்னா, இந்தக் கதையை முழுசும் பாசிட்டீவா எழுத தான் ஆசை. அதான் பட்டூஸ், என்ஜாய் ரீடிங் ❤️😍


நெஞ்சம் – 23 ❤️


குளித்து முடித்து பிரபஞ்சன் தலையைத் துவட்டியவாறே வெளியே வர, கட்டிலில் காலைக் கட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்த உமையாளின் விழிகள் கணவனைத்தான் பார்த்திருந்தன. தலையை சாய்த்துப் பார்த்திருந்தாள்.

அவளது பார்வையை உணர்ந்தவனும் மெல்லிய புன்னகையுடன் மேல் சட்டையை அணிந்து தலையை வாரினான். கண்ணாடி முன்பு நின்றவன் தொண்டையை லேசாய்க் கணைத்தான். பெண்ணிடம் பதிலில்லை‌. அதே மென்னகைதான். அவன் ஆடைத் தயாரிப்பகம் கிளம்பும் வரை அதே புன்னகைதான்.

தயாராகி முடித்தவன், அவளருகே சென்று அமர்ந்தான். “என்னவாம்? எதுக்கு இத்தனை பார்வை?” சின்ன சிரிப்புடன் கேட்டான் பிரபஞ்சன். ஒன்றும் இல்லை என்பது போல உதட்டைப் பிதுக்கியவள் முகத்தில் புன்னகை மட்டும் வாடவே இல்லை.

“ஏன்ங்க... ஏன்?” என்றான் கணவன். பாடாய் படுத்தினாள் இந்தப் பெண். இப்பொழுது எல்லாம் அவனை விழிகளுக்குள் விழுங்குவது போலொரு பார்வையும் மென்னகையும் அவளது அடையாளமாகிப் போனது. சில நேரங்களில் அந்தப் பார்வையில் ஆடவன் கிறுகிறுத்துப் போவான்.

“ஏங்க?” மீண்டும் கோபமாய்க் கேட்க முயன்றவனின் கரங்கள் படிய வாரிய தலையை கலைத்துவிட்டது. உதட்டோரம் மென்னகை வேறு.

“இப்படியெல்லாம் பார்த்தா நான் வேலைக்குப் போக மாட்டேன். பார்த்துக்கோங்க!” முறைப்பாய் கூறியவனின் சட்டையைப் பிடித்திழுத்தாள் உமையாள். அவளது முகத்தோடு மோதியவனின் முகம் அப்படியே பெண்ணின் கழுத்தடியில் புதைந்தது. லேசாய் இவனுக்கு வெட்கப்புன்னகை‌. அவளது மணத்தை மனதில் சேமித்தான் ஆடவன். அவனை தினம் தினம் பித்தாக்கினாள் இந்தப் பெண் உமையாள்.

மெதுவாய் கலைந்த தலையை வாரியவள், அவனை தன்னிடமிருந்து பிரித்தவள், “இப்போ கிளம்புங்க!” என்றாள்.

“நோ...” என்றான் பிரபஞ்சன். மனைவியே மனம் நிறைந்து போயிருந்தாள். அவளது மணம் மனம் முழுவதும் வீசியது.

“என்ன நோ, கிளம்புங்க!” அதட்டிலிட்டவள் முகம் முழுவதும் புன்னகை. எதிரிலிருப்பவன் கொடுத்தது. உமையாளுக்கு நேற்று மாலை மாதவிடாய்க் நாட்கள் துவங்கியிருந்தது. அதை அறிந்த பிரபஞ்சன் அவளை கட்டிலைவிட்டு கீழே இறங்க கூட விடவில்லை. அவனே எல்லாவற்றையும் அவளுக்காககப் பார்த்துப் பார்த்து செய்திருந்தான்.

கண்மூடி அசதியாய் சாய்ந்து கால்களை நீட்டியிருந்த உமையாளுக்கு இரண்டு காலிலும் வலியெடுத்தது. மெல்லிய முகச்சுணக்கத்துடன் படுத்திருந்தவளின் அருகே வந்து அவளது காலை மென்மையாய் பிடித்துவிட்டான் பிரபஞ்சன். அதில் உமையாள் பதறி விலக, “ம்ப்ச்.‌‌.‌. காலை நீட்டுங்க. எதுவும் பேசக் கூடாது!” என்ற அன்பான அதட்டலிட்டு அவளைத் தூங்க வைத்தவன், இரண்டு நாட்கள் கட்டாய விடுமுறை அளித்திருந்தான்.

இன்னுமின்னும் இந்தப் பிரபஞ்சன் பெண்ணை நிறைத்தான். அவளுள் நிறைந்து போனான். அதனாலே மனைவி அத்தனை பார்வைப் பார்த்து கணவனைப்
பாடாய்படுத்துகிறாள்.


“இன்னைக்கு நான் லீவ்!” பிரபஞ்சன் கரங்கள் கழுத்துப் பட்டையை சற்றே இறக்க, “ஆமா! ஆமா! நாங்க இன்னைக்கு லீவ்!” என்ற குரல் அவனைத் தொடர்ந்து வந்தது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி ஒருபக்கத் தலையை பின்னியும் மற்றொரு புறம் தலை பின்னாமல் நின்றாள். இருவருக்கும் புன்னகை மிளிர்ந்தது. எப்படியாவது தந்தையுடன் சேர்ந்து விடுமுறை எடுத்து விடலாம் என்று ஆராதனாவும் அறைக்குள் ஓடி வந்திருந்தாள்.

“அம்மு, ஒரு பக்கத் தலையோட ஏன்டி ஓட்ற?” என்ற சாரதா மூச்சு வாங்க குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியேற, இப்போது கணவன் மனைவியைப் பாவமாய் பார்த்தான்.

எழுந்து நின்று கணவனின் கழுத்துப் பட்டையை புன்னகையுடன் சரிசெய்தவள், அவனது இரண்டு கன்னத்தையும் கிள்ளி உதட்டில் ஒட்டிக்கொண்டாள்.

“சமத்துப் பிள்ளையா வேலைக்கு கிளம்புவீங்களாம்” என்றவளின் புன்னகையில் முழுவதும் தொலைந்து போனான் பிரபஞ்சன். இப்போதும் அவன் தலை இடம் வலமாக மாட்டேன் என்பது போல ஆட, கதவை எட்டிப் பார்த்து கணவன் கன்னத்தில் முத்தமிட்டவள், “போங்க...” என்று அறையைவிட்டு அவனை வெளியே தள்ளினாள். சிரிப்புடன் உண்டு முடித்தவன், கோகுலுடன் ஆடைத் தயாரிப்பகம் சென்றான். வழியில் குழந்தையை அப்படியே பள்ளியில் இறக்கிவிட்டான்.

“பாய் ப்பா...” என அவனின் கன்னத்தில் முத்தமிட்டு, அவனிடம் ஒரு இனிப்பைப் பெற்றவள், “மாமா...” என கோகுல் கன்னத்திலும் முத்தமிட்டு இன்னொரு மிட்டாயைப் பெற்றுக்கொண்டு பள்ளிக்குள் ஓடினாள் ஆராதனா.

ஓடும் குழந்தையை இருவரும் சிரிப்புடன் பார்த்தனர். கோகுல்தான் பிரபஞ்சனைப் பார்த்தான். அவன் முகத்திலிருந்த புன்னகை அப்படியொரு அழகை கொடுத்தது அந்த ஆடவனுக்கு.

நண்பன் பார்வை உணர்ந்த பிரபஞ்சன், “என்ன டா?” என வினவினான்.

“இல்லை மச்சான், புருஷனும் பொண்டாட்டியும் உங்க புள்ளைக்கு என் மடியில வச்சு காது குத்தணும்னு வாய்க்கு வாய் சொல்றீங்களே! நம்மக் கூடவே இருந்தவன், இன்னும் சிங்கிளாவே இருக்கானேன்னு ஒரு கவலையும் இல்லை உங்களுக்கு?” குறும்பாய்க் கேட்டான் கோகுல்.

பிரபஞ்சன் முகத்தில் சிரிப்பு படர்ந்தது. “அதுக்கென்ன டா மச்சான், நீ சொல்லு, இப்பவே ஒரு பொண்ணைப் பார்க்க சொல்லலாம் அம்மாகிட்டே” என்றான்.

“நோ... நோ. நீ மட்டும் லவ் மேரேஜ் பண்ணுவ. நான் அரேஞ்ச் மேரேஜ் பண்ணுணுமா? நோவே டா. நானும் லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணுவே!” என்று சிலிர்த்தான் கோகுல். அவனுக்கும் அத்தனை ஆசையாய் இருந்தது பிரபஞ்சனைக் காணும்போது. அன்பான மனைவி, அழகான குழந்தை, அவனைப் புரிந்து கொண்ட தாய் என நண்பன் வரம் வாங்கி வந்தவன் என அந்நொடி தோன்றியது அவனுக்கு.

பிரப்ஞசனைப் புரிந்துகொண்டு அவன் துவளும் நேரங்களில் தோள் கொடுக்கும் உமையாளைப் பார்த்து, தனக்கும் அப்படியொரு துணை வேண்டும் என மனம் முதன்முதலில் கூறியதென்னவோ உண்மை. அதனால்தான் காதல் திருமணம் செய்யலாம் என முடிவெத்துவிட்டான்.

“பார்ரா...” எனச் சிரிப்புடன் கூறிய பிரபஞ்சன், “ஆல் தி பெஸ்ட் டா மச்சான்!” என்றான்.

அன்றிரவும் உண்டுவிட்டு கட்டிலில் கால்நீட்டி அமர்ந்த உமையாள், வயிற்றில் ஒரு தலையணை வைத்துக் கட்டிக்கொண்டு வாயிலைப் பார்க்க உள்ளே நுழைந்த பிரபஞ்சன் இதழ்களில் புன்னகை. கதவை லேசாய் சாற்றிவிட்டு உள்ளே நுழைந்தவன், மனைவி காலுக்கு அருகில் அமர்ந்து அவளது காலை எடுத்து தன் மடிமீது வைத்து மெதுவாய்ப் பிடித்துவிட்டான். அத்தனை சுகமாய் இருந்தது காலுக்கு மட்டுமல்ல மனதிற்கும்தான்.

சில நிமிடங்கள் அவனை ஆசையாய் பார்த்திருந்தவள், “பிரபா!” என அழைத்தாள். அது செவியைத் தீண்டியதும் ஆச்சர்யமாய் மனைவியைப் பார்த்தான் பிரபஞ்சன். அப்படியொரு ஆச்சர்யம் அவனிடம்.

“ஏன்ங்க, என்ன சொல்லி கூப்ட்டீங்க?” ஆர்வத்தில் அது தந்த இன்ப குறுகுறுப்பில் காலை விட்டுவிட்டு மனைவி அருகில் சென்றிருந்தான்.

“நான் என்ன கூப்ட்டேன்?” உதட்டோரம் குறும்பாய் புன்னகை இப்போது பெண்ணிடம்.

“பொய் சொல்லத கேர்ள். ஐ க்நோ!” முகத்தைச் சுருக்கியவன், அவளுக்கு அருகே அமரவும், அவனது தோளில் தலையை உரிமையாய் சாய்த்தாள் உமையாள்.

“உங்ககிட்ட நிறைய சொல்லணும், பேசணும்!” என்று அப்படியே நிமிர்ந்து பார்த்தவளைப் புன்னகையுடன் நோக்கியவன், “பேசலாமே! சொல்லலாமே!” என அவளது முடியைக் காதோரம் ஒதுக்கிவிட்டான்.

“நம்ப வீட்டுக்கு முதல்முதலா நான் வந்தப்போ அத்தை என்கிட்ட என்ன பேசுனாங்கன்னு நீங்க கேட்கவே இல்லை?” எனக் கேட்ட மனைவி நெற்றியில் முத்தமிட்டவன், “உங்களால சொல்ல முடிஞ்சா சொல்லி இருப்பீங்களே. சொல்ல முடியாத காரணம் எதுவும் இருக்கும்” மென்னகையுடன் தோளைக் குலுக்கிய பிரபஞ்சன் தோளில் தன் இதழை ஒற்றி எடுத்தாள் பெண். கணவனுக்கு புன்னகை அரும்பியது.

“என்னோட கடந்த காலத்தைப் பத்திக் கேட்டாங்க. அவங்ககிட்ட சொன்னேன். ஆனால், அவங்கககிட்ட கூட என்னால சில விஷயத்தை ஷேர் பண்ண முடியலை” என்றவள் முகத்தையே பார்த்திருந்தான் பிரபஞ்சன். இன்று அவனிடம் தன் பாரங்களை இறக்கி வைப்பதென்ற முடிவில் இருந்தாள் பெண். தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை விளக்கத் தொடங்கி இருந்தாள்.

மதுரையின் தெற்குப் பகுதியிலிருந்த திருமங்கலத்தை கடந்ததும், அதற்கு அடுத்தப் பகுதி முழுவதும் பல கிராமங்களும், கிராமத்து மக்களும்தான் வசிக்கின்றனர்.

அந்தக் கிராமத்தில் ஒரு பகுதிதான் கரிசப்பட்டி. அதில்தான் உமையாளின் சொந்த ஊர். அதாவது அவளது தந்தை மருதுவிற்கு பிறந்த ஊர். மருது மற்றுமா வள்ளி தம்பதியர்களுக்கு மூன்று பெண்பிள்ளைகளும், ஒரு ஆண்பிள்ளையும் உண்டு.


“ஜான் பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை” என்ற பல மொழிக்கு இலக்கணமாகத்தான் அவர்களது வாழ்க்கை முறை இருந்தது. ஆண்கள் தான் அவ்வீட்டை முழுமையாய் ஆட்சி செய்தது. பெண்கள் எப்போதும் வீட்டைப் பராமரிக்கவும், குழந்தைகளைப் பெற்றெடுக்கும் ஒரு இயந்திரம் போலதான் நடத்தப்பட்டனர்.

பெண்களுக்கு எதிரான ஒரு பொதுப்புத்தியை உருவாக்கியிருந்தனர். பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கொள்கை பிடிப்புடைய மக்கள்.
அது அங்குள்ள மக்களால் உண்மையென நம்பியதன் விளைவே, பெண்களுக்கு எதிரான அநீதி நிலை தொடர்ந்தது. தனக்கு இழைக்கப்படுவது அநீதிதான் என்ற எண்ணம் அவர்களிடம் அண்டவிடவில்லை. காரணம், மனிதனுக்கென்று தனிக்குணங்கள் எதுவுமில்லை, அவன் எவ்வாறு தகவமைக்கப்படுகிறானோ அவ்வாறே ஆகிறான். அது போலத்தான் அவர்களுக்குப் போதித்த வழியில் அவர்களது வாழ்க்கை முறை அமைந்தது.

அரசு எத்தனையோ முன்னேற்றங்களை கொண்டுவந்தும் இன்றும் எந்தவிதமான முற்போக்கும் பழங்கால சிந்தனைகளும் சிந்தையை ஆக்கிரமிக்காத மக்கள் அங்கு அதிகம்.


மருதுவும் அப்படித்தான். அவரைப் பொறுத்தவரை பெண்கள் என்றால் செலவு. அவர்களைப் படிக்க அனுப்பக் கூடாது. பதினெட்டு வயது நிரம்பியதும் ஒரு ஆண்மகனைப் பார்த்து பெண்ணுக்கு மணம் முடித்து தனது கடமை முடிந்ததென ஒதுங்கி கொள்ளும் மனப்பான்மை உடையவர். அப்படித்தான் மூத்த பெண்கள் இருவருக்கும் பதினெட்டு வயதிலே மணம் முடித்துவைத்துவிட்டார். ஆனால், ஆண்பிள்ளை வேலனை மட்டும் கல்லூரி வரை படிக்க வைத்தார். அவனுக்கும் படிப்பிற்கும் எட்டாக்கனியாகி விட, தந்தையுடன் சேர்ந்து அவரது தொழிலை கவனிக்கத் தொடங்கினான்.

வேலனுக்கும் அடுத்ததாய் அருகிலிருந்த கிராமத்தில் ஒரு பொண்ணைப் பார்த்து மனம் முடித்து வைத்தார். வேலனின் மனைவியின் அண்ணன் வீரமணியைத்தான் உமையாளுக்கு மணம் முடிக்க மருது பேசி முடித்திருந்தார். கரிசல்பட்டியை விட வீரா வசிக்கும் ஊர் மிகவும் கிராமம். அதாவது அத்தியாவசிய தேவைக் கூட எதுவுமின்றி இருந்த ஊர் அது. அரசு தருமு சலுகைகள் எதுவும் அவர்களுக்கு சென்றடையவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.
அதைக் கேட்டதுமே உமையாள் பயந்து தாயிடம் அடைக்கலம் புக, அவர் கணவர் பேச்சை மீறாதவர்.


“ஏன் உமா, அங்க மனுஷங்களே வாழ்றது இல்லையா என்ன? போகப் போகப் பழகிடும். நிச்சியம் முடிஞ்ச பிறகு இதென்ன பேச்சு. உங்க அக்கா ரெண்டு பேருக்கும் அப்பாதான் கல்யாணம் பண்ணி வச்சார். அவங்க நல்லா வாழலையா என்ன?” என்று வள்ளி அவளது வாயை அடைத்துவிட்டார்.

ஒருமுறை வீராவை நேரில் பார்த்த உமையாளுக்கு விழிகளே கலங்கிவிட்டது. அவனது நடை சற்றே ஆண்களிடமிருந்து வேறுபட்டு பெண்களிடம் இருக்கும் நலினம் இருந்தது. அதை கவனித்தவள், தாயிடம் அழுதாள்.

“லூசா டி? நம்மளை விட அவங்க ரொம்ப கிராமம். கிராமத்து மனுஷங்க அப்படித்தான் இருப்பாங்க. உனக்குத் தெரியாதா?” என வள்ளி மீண்டும் மகள் வாயை அடைத்துவிட்டார். அவர் அன்றே அவள் கூறியதை செவி கொடுத்து கேட்டு உண்மைத் தன்மையை ஆராய்ந்து இருந்தால், உமையாளின் வாழ்க்கை கண்டிப்பாக மடை மாறியிருக்காதோ என்னவோ?

திருமணத்திற்கு ஒருவாரம் முன்பிலிருந்து தீப்பெட்டி தொழில்சாலை வேலைக்கு செல்வதை நிறுத்தியிருந்தாள். வள்ளி அப்படி கூறியதும், அவர் கூறியதை யோசித்துப் பார்த்தாள். பின், தான் தான் தவறாக எண்ணி விட்டோம் என மனசை மாற்றிக்கொண்டாள். முழுமனதாக நடக்கவிருக்கும் திருமணத்திற்கு தன்னைத் தயார்படுத்தினாள். கண்டிப்பாக தாய் தந்தை தனக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டார் என அந்தப் பேதை மனது நம்பியது.

வீராவுடனான உமையாளின் திருமணம் நடந்து முடிந்திருந்தது. முதல்நாள் இரவே வீரா வீட்டிற்கு வரவில்லை. தாமதமாகத்தான் வீடு வந்து சேர்ந்தான். உமையாள் அவனுக்காக விழித்திருக்க, அவளை பொருட்படுத்தாதவன், தலையணை எடுத்துக்கொண்டு கூடத்தில் சென்று படுத்துவிட, அவள் என்ன செய்வது எனத் தெரியாது விழித்தே கிடந்தாள். அன்றுதான் அவளுக்கான வீராவுடனான வாழ்க்கை துவங்க ஆரம்பித்தது. அவர்களது வீடு ஒரு அறை, கூடம், அதிலே பின்புறம் சமையல் என பிரிக்கப்பட்டிருந்தது. பின்படிக்கட்டு வழியாக பின்புற கதவும் இருந்தது. அருகில் இதே போல அளவிருந்த வீட்டில் அவனின் தாய் திலகவதி குடியிருந்தார்.

இவள் காலையில் எழுந்து குளித்து முடித்து கணவனைப் பார்க்க, அவன் எழுந்து கடையைத் திறந்திருந்தான். ஆம், வீட்டிற்கு அருகே ஒரு தேநீர் விடுதி ஒன்றை நடத்தி வந்தான் வீரமணி.

திலகவதி உமையாளிடம் வந்தவர், “இந்த அரிசியை ஊற வச்சு ஆட்டிடு. துணியை கொல்லப் புறத்துல துவைச்சு போடு!” என வேலைகளை அடுக்கிக்கொண்டே போக, அமைதியாய் தலையை ஆட்டிக் கேட்டுக்கொண்டாள். இது அவளது தாயின் உத்தரவு.
(தொடர்ந்து கீழே படிக்க)
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93

“உமா, நம்ப வீட்ல மாதிரி அங்க இருக்க முடியாது. அங்க நிறைய வேலை பார்க்கணும். அதுவுமில்லாம அந்தத் தம்பி டீகடை வேற வச்சிருக்காரு. அந்த வேலையும் நீதான் பார்க்கணும். மாமியார் எதுவும் சொன்னா, தட்டாம செய்யணும்!” என்று வள்ளி ஏற்கனவே மகளுக்குப் போதித்து இருந்தார். இது இப்போது மட்டுமல்ல, சிறு வயதிலிருந்தேதான்.

பெண்கள் எனப்பட்டவர்கள் ஆண்களுக்கு அடங்கிப் போக வேண்டும். அவர்கள் சொல்லை வேத வாக்காக எடுத்துக்கொண்டு நடக்க வேண்டும் என்றுதான் போதிப்பார். எங்கேனும் உமையாள் கீழே விழுந்து வந்தால் கூட, அவளுக்கான காயம் பெரியதா? சிறியதா? எனக் கூட ஆராய மாட்டார்கள்.

“ஏன்டி அறிவு கெட்டவளே! கீழ விழுந்து வாரீட்டு வந்து இருக்க? நாளைக்கு வேற வீட்டுக்கு வாழப் போறவ!” என்றுதான் அவர்களதுப் பேச்சு இருக்கும். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஒரு பத்து முறையேனும் வள்ளி இந்த வார்த்தைகளை கூறிவிடுவார். அதுவுமின்றி பெண்கள் கணவன் வீட்டிலிருந்தால்தான் மதிப்பு. அங்கு என்ன நடந்தாலும், தாய் வீட்டிற்கு வரக் கூடாது. அது தந்தையை அசிங்கப்படுத்துவது, அவமானப்படுத்துவது போல என்ற எண்ணத்தை மூன்று பெண்கள் மனதிலும் அழுத்தமாய் பதிய வைத்திருந்தார்‌.

உமையாள் திலகவதி கூறிய வேலைகளை முடிக்கவே மாலையாகிவிட்டது. அதன்பின்னே கடையை எடுத்துவைக்க, இரவுக்கு சமைக்க என்று பொழுது கழிந்தது. இது அன்று மட்டுமல்ல அதுவே தொடர்கதையாகிப் போனது. இது தான் திருமண வாழ்க்கை, இப்படித்தான் இருக்குமோ? என உமையாள் எண்ணும் அளவிற்கு அவளது வாழ்க்கை வேலை என்றாகியிருந்தது.

மாதவிடாய் காலங்களில் கூட திலகவதி உமையாளுக்கு உதவ முன்வரமாட்டார். வேலை ஏவுவது மட்டும்தான் அவர். மற்றபடி இவள்தான் பணியாள் போல அனைத்தையும் செய்வாள். வீரா அதற்கு ஒருபடி மேல். அவளிடம் பேச மாட்டான். அவனைப் பொறுத்தவரை அங்கிருக்கும் உயிரில்லாத பொருளும் அவளும் ஒன்று என்பதைப் போலத்தான் இருப்பான்.

மாதங்கள் கடக்க, திலகவதி மருமகளை நச்சரிக்க ஆரம்பித்தார். “என்னடி இவ, ஊர்ல இருக்கவ எல்லாம் மொத மாசத்துலயே வயித்தை தள்ளிட்டு நிப்பாளுக. இவ என்னென்னா நாலு மாசமாகியும், ஒன்னும் இல்லை!” என்று வருவோர் போவோர் அனைவரிடமும் கூற, உமையாளுக்கு அழுகை வரும். யாரிடமும் அவளால் கூற முடியவில்லை, கணவனின் நிழல்!கூட அவள் மீது படவில்லையே.

இதுவே தொடர, திலகவதியின் பேச்சை தாங்க முடியாது தாய்க்கு அழைத்து கதறி இருந்தாள். ஆனால், அவரிடம் கூட இதைப் பேச கூட வெட்கமாய் இருந்தது. வேறு வழியின்றி அவரிடம் பகிர, “இதெல்லாம என்கிட்ட சொல்லுவ. புருஷன் மனசை புரிஞ்சு நடந்துக்கோ. அவரைக் கைக்குள்ள போட்றது உன்னோட திறமை. உங்க அக்காங்க எல்லாம் முத கல்யாண நாளுக்கு கையில் குழந்தையோட இருந்தாங்க. அதனால அந்தம்மா ஆதங்கத்துல பேசி இருப்பாங்க. மாமியார்னா அப்படித்தான். என் மாமியார் எல்லாம் ரெண்டு மாசத்துலயே என்னைப் போட்டு படுத்துனாங்க. அதனாலே சீக்கிரம் ஒரு புள்ளையை பெத்துடு டி!” என்று வள்ளி மகளை லேசாய்க் கடிய, விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள் உமையாள். வேறு யாரிடமும் யோசனைக் கேட்க கூட அசிங்கமாய் அதைவிட அவமானமாய் இருந்தது.

அமைதியாக இருந்துவிட்டாள். திருமணம் முடிந்து ஆறுமாதம் கடந்துவிட, திலகவதியின் குத்தல் பேச்சுகளால் இப்போது அதிகமாக அவளைக் காயப்படுத்த ஆரம்பித்து இருந்தார்.

அந்த மாதமும் உமையாள் மாதவிலக்காகிவிட, அவரது பேச்சுகள் எல்லை மீறியது. உடல் வலியோடு சேர்ந்து மனவலியும் அவளை கொன்றது. எதுவும் பேசாது அறையிலே முடங்கிப் போனாள். இதில் காய்ச்சல் வேறு இலவச இணைப்பாகத் தொற்றிக்கொள்ள, இரண்டு நாட்கள் அவளால் வேலை செய்ய முடியவில்லை. இத்தனை நாட்கள் அவளை ஒரு பொருட்டாக மதிக்காத வீரா, வேலை செய்யவில்லை என்று முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு அவளிடம் பேசினான்.

‘வேலை செய்வது என்றால் இங்கே இருக்கலாம். இல்லயென்றால் உன் அப்பன் வீட்டுக்கே சென்றுவிடலாம்!’ என்றவன், அத்தோடு மட்டுமல்லாது அதை தனது சகோதரியிடம் கூறிவிட்டான். அப்படியே இந்த விஷயம் மருது காதிற்கு சென்றுவிட, மனைவியைக் கண்டனமாகப் பார்த்தார் அவர்.

உடனே வள்ளி மகளுக்கு அழைத்துவிட்டார். “ஏன் உமா, வீடுன்னா ஆயிரம் வேலை இருக்கும். படுத்தே கிடந்தால், யாரு பார்ப்பா? புகுந்த வீட்ல குறை சொல்ற மாதிரி வச்சுக்காத டி. உங்கப்பா என்னைப் போட்டு திட்றாரு” என்றவரின் குரலில் கணவர் மீதான பயமே இருந்தது. தவிர மகள் கூறுவதை அவள் காது கொடுத்துக்கூட கேட்கவில்லை.

எதுவுமே பேசாது அழைப்பைத் துண்டித்தவளுக்கு வாழ்வே வெறுத்துப் போனது. ஆனால், அவள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்பதை பாவை அறியவில்லை. காய்ச்சலோடு எழுந்து சென்று அனைத்து வேலையும் பார்த்தாள். இதுவே தொடர்கதையாகிப் போனது. யார் எப்படி போனாலும், வீரா அதைப் பற்றி துளிகூட கண்டுகொள்ள மாட்டான். இவனுக்கெல்லாம் மனசாட்சியே இருக்காதா? என எண்ணுமளவிற்கு அவனது செய்லகள் இருக்கும்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த உமையாள், “என்னை மட்டும் குழந்தை இல்லைன்னு கேட்குறீங்களே! உங்க மகனைக் கேட்க வேண்டியதுதானே?” என ஆற்றாமையில் கேட்டுவிட்டாள்.

“ஏன் டி, ஆம்பிளை பிள்ளையைப் போய் எவனாவது புள்ளை இல்லைன்னு கேட்க முடியுமா? உனக்கெல்லாம் அறிவு இருக்கா?” என அதற்கும் திலகவதி வசைபாட, இவரிடம் பேசுவதெல்லாம் விழலுக்கு இரைத்த நீரென நகர்ந்துவிட்டாள்.

திலகவதி நடந்ததை மகனிடம் கூறிவிட, இரவு வீட்டிற்குள் நுழைந்தவன், அவளது அறைக்குள் புகுந்தான். “என்ன டி, புள்ளை பொறக்கலைன்னு என்னைக் கேட்க சொன்னீயாம்?” என நக்கலாகக் கேட்டவன் அவளது புடவையை உருவ, மிரண்டு விழித்தவள், அவனிடமிருந்து போராட முயன்றாள். ஆனால், பலன் என்னவோ சுழியம்தான். அவளது வாழ்க்கையைப் போல பெண்ணையும் சிதைத்திருந்தான்.

எத்தனை அழகாய் தொடங்க வேண்டிய தாம்பத்தியம், உமையாளின் கண்ணீரோடு தொடங்கி, அதிலே முடிந்தது. அதற்குப்பின் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை வீரா. அடுத்த மாத்ததிலே உமையாள் கருவுற்றிருக்க, திலகவதியின் பேச்சு ஓரளவிற்கு நின்றிருந்தது.

வள்ளி மகளுக்கு அழைத்து அன்பாய் பேச, அவளது இதழ்களில் கசந்த முறுவல். வயிற்றில் கையை வைத்தவள், தன்னைப் போல குழந்தையும் இங்கு அடிமையாக வாழ வேண்டும் என்ற நினைப்பே கசந்தது. ஆனால், அவளுக்கு குழந்தையை கலைக்க மனம் வரவில்லை. தன்னால் குழந்தையை வளர்க்க முடியும் என்ற எண்ணத்தோடு ஆராதனாவைப் பெற்றெடுத்தாள்.

ஆராதனா பிறக்கும் போதே கால் சற்றே வளைந்து பிறந்துவிட, திலகவதியின் பேச்சு மீண்டும் தொடங்கியது. “பொம்பளைப் பிள்ளையைப் பெத்ததும் இல்லாம, ஒச்சமாப் பெத்து வச்சிருக்கா. பேசாம, இதை தூக்கிட்டுப் போய் சாவடியில போட்ருவோம் டா வீரா” என ஈவு இரக்கமின்றி பேசியவர்களை அதிர்ந்து பார்த்தாள் உமையாள். அவர்களை எதிர்த்துப் பேச முடியாத தன்னிலையை எண்ணி கழிவிரக்கம் தோன்றியது. எதாவது பேசினால், உடனே அது தன் தாய் வீட்டிற்கு சென்றுவிடும். வள்ளி இவளுக்கு அழைத்து ஒன்று அதட்டுவார். இல்லையென்றால், இயலாமையில் கண்ணீர் வடிப்பார். இரண்டையும் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது.

மாமியார் பேசியதை தாயிடம் பகிர, “குழந்தை ஊனமா பொறந்ததுல அவங்களுக்கும் வருத்தம் இருக்கும். அதனால அப்படி பேசி இருப்பாங்க‌. ஒன்னும் நினைச்சுக்காத நீ!” என்று அப்போதும் அவர்களுக்கு ஆதரவாகப் பேசிய தாயை உணர்ச்சியற்று நோக்கினாள்.

வள்ளி உமையாளை சில நாட்கள் தங்கள் வீட்டில் வைத்து கவனித்துக்கொள்ள, உடனே வேலனின் மனைவி முகத்தைத் தூக்கிவிட்டாள்.

“சரி உமா, மூனு மாசம் ஆச்சுல்ல? நீயும் குழந்தையும் உங்க வீட்டுக்கு கிளம்புங்க” என்று வள்ளி கூற, மூன்று மாதங்கள் கிடைத்த நிம்மதி அன்று அவளுக்குப் பறிக்கப்பட்டது. குழந்தை பிறந்த அன்று அவளைப் பார்த்துச் சென்ற வீரா, அதற்கடுத்து குழந்தை எப்படி இருக்கிறாள்? உமையாள் எப்படி இருக்கிறாள் என ஒரு வார்த்தை கூட வீராவும், திலகவதியும் கேட்கவில்லை. அவர்கள் கேட்பார்கள் என உமையாள் எதிர்பார்க்கவும் இல்லை.

மீண்டும் அவளது இயந்திரதனமான வாழ்க்கைத் தொடங்கியது. குழந்தையும் வைத்துக்கொண்டு வேலையும் செய்வது அத்தனை சிரமமாக இருந்தது உமையாளுக்கு. உடல்வலி, உபாதைகள் என அத்தனையும் அவளைப் போட்டு பாடாய்ப் படுத்தினாலும், ஒருவரிடமும் அதை பகிர முடியவில்லை. அதைவிட, பகிர ஆட்களும் இல்லை என்பதே உண்மை.

ஒருநாள் வீராவை தேநீர் கடையில் காணாது திலகவதி வீட்டை நோக்கிச் சென்றாள் பெண். கதவு உள்புறம் பூட்டப்பட்டு இருக்க, ஏதோ சத்தம் கேட்கவும், ஜன்னல் வழியே பார்த்தவளுக்கு நெஞ்சடைத்துப் போனது. விழிகளிலிருந்து சரசரவென கண்ணீர் வழிய, கைகால் எல்லாம் நடுங்கியது. வீராதான் வேறொரு ஆணுடன் பாலுறவுகொண்டிருந்தான்.

அப்படியே வீட்டிற்குள் ஓடி கதவை அடைத்துக் கொண்டவளுக்கு அழுகை தொண்டையை அடைத்தது. விம்மி வரும் அழுகையைத் தடை செய்தாள். இருந்தும் கண்ணால் கண்டதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் ஓரினச்சேர்க்கையாளன் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதனால்தான் அவன் உமையாளை நெருங்கவில்லை என்ற உண்மை சுட, நெஞ்சடைத்துப் போனது.

சிறிது நேரத்திலே அவன் வீட்டிற்குள் நுழைய, “நீங்க... நீங்க!” என்றவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தான்.

தன் கண்டதை வாய் வழி கூறாது சைகையில் திக்கித் திணறி பக்கத்து வீட்டைக் கை காண்பித்தவளை அற்பமாகப் பார்த்தவன், “ஆமா டி! நான் அப்படித்தான். என்னன்ற?” என்று கேட்க, இவளுக்கு அழுகை முட்டியது.

“என்ன, எல்லார்கிட்டயும் போய் சொல்லுவீயா? எவனும் நம்ப மாட்டான். இதோ ஒன்னு பெத்துப் போட்டு இருக்கீயே! அதுக்கு நான்தானே அப்பன்? இல்லை வேற எவனுக்கும் பெத்தீயா?” என காதிலே கேட்க முடியாத கொச்சையான வார்த்தைகளை அவன் பேச, உமையாள் முழுவதும் மறித்துப் போனாள்.

எப்போதும் போல தாய்க்கு அழைத்துக் கூற, வள்ளிக்கு ஏக அதிர்ச்சி. சில நிமிடங்களில் அழுகையில் கரைந்தவர், பின் மகளுக்கு சமாதானம் கூறினார். ஆனால், அது முழுவதும் அவள் அங்குதான் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை அன்பு, அழுகை என்ற பெயரில் திணித்துக்கொண்டிருந்தார். வீட்டிற்கு வந்தால் தன் தந்தையின் மானம் போய்விடும். வேலனின் வாழ்வு பாதிக்கப்படும் என அவர்களைப் பற்றியே பேசிய தாயின் வார்த்தைகளை கேட்டு ஏற்கனவே மறித்துப் போயிருந்த இதயம் கல்லாய் சமைந்தது.

கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு எங்கே செல்வது? யாரையும் அவளுக்குத் தெரியாது. வேலைக்குச் செல்லலாம் என்றால், படிப்பும் இல்லை. எதுவுமே அவளிடம் இல்லை. பெற்ற வீட்டிலும் அவளுக்கு இடமில்லை என்ற உண்மை நெற்றியில் அறைந்த போது, அவளது கையறு நிலையை எண்ணி கழிவிரக்கத்தில் மாய்ந்து போனாள்.

முதலிலாவது உமையாளுக்குத் தெரியாது என்றிருந்த வீரா, இப்போது தெரிந்ததில் இன்னுமே வெளிப்படையாய் பிற ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதை அவளிடம் கொச்சையாகக் கூற, அருவருத்துப் போனாள் உமையாள். அடித்துக் கொடுமை படுத்துவது ஒரு வகையான வன்முறை என்றால், இது ஒரு வகையாய் இருந்தது. தினமும் இது போல பேசி அவளை நோகடிப்பான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள், அவனிடம் எதிர்த்துப் பேச தொடங்க, அன்றிலிருந்து வீட்டு செலவுக்கு காசு கொடுப்பதை நிறுத்திவிட்டான். குழந்தைக்குக் கூட பால் வாங்க, பிற பொருட்கள் வாங்க என அத்தியாவசிய தேவைக்கு கூட அவளிடம் சுத்தமாய் பணமிருக்கவில்லை. குழந்தையை வைத்துக்கொண்டு வேலைக்கும் சென்று வர முடியாது. வீட்டிலும் அழைத்து காசு கொடுக்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை. கழுத்திலிருந்த கழுத்தணியை விற்று ஒரு தையல் இயந்திரம் வாங்கிப் போட்டு தைக்கப் பழகினாள். பின்னர் ஊருலிருக்கும் அனைவருக்கும் துணிகள் தைத்துக் கொடுக்க ஆரம்பித்து இருந்தாள். பண பிரச்சினை ஒரு வழியாய் தீர்ந்து போக, மற்றொரு பிரச்சனை ஆரம்பமானது.

வீரா இப்படி இருப்பதால், தேநீர் விடுதிக்கு வரும் பலரும் உமையாளிடம் தவறாக நடக்க பல வழிகளில் முயற்சிக்க, முதலில் அழுதாள். பின்னர் தன்னைத் தானே பாதுகாக்க வேண்டும். வேறு வழியே இல்லையென எதிர்த்து நின்று போராட ஆரம்பித்தாள். வாழ்க்கையே போராட்டமாய் ஆனது.

ஆராதனாவும் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தாள். வீராவைப் பார்த்து பயப்படுவாள். அவனும் குழந்தையிடம் ஒருநாள் கூட சிரித்துப் பேசியோ, கொஞ்சியதோ கிடையாது. பல முறை உமையாளிடம் சண்டை போட்டதை பார்த்தே பழகி விட்டவள், அவனைக் கண்டு பயந்து நடுங்கினாள். அவன் இருக்கும்போது உமையாளிடம் எதையாவது கேட்டு அடம் பிடித்தால், கோபத்தில் குழந்தையை அடிக்க கூட தயங்க மாட்டான்.

உமையாள்தான் குழந்தையைப் பொத்தி பாதுகாத்தாள். அவளை விளையாடக் கூட வெளியே அனுப்ப மாட்டாள். அவள் ஒருநாள் ஆராதனாவை வீட்டில் விட்டுவிட்டு கடைக்குச் சென்றிருக்க, இவள் திலகவதியைப் பாட்டி என அழைத்து கட்டிக்கொள்ள போக, அவர் இவளை கீழே தள்ளிவிட்டார்.

அதில் ஆராதனாவிற்கு அடிபட, தேம்பிக்கொண்டே தாயிடம் கூற, குழந்தைக்கு ஆறுதல் கூட திராணியின்றி தானும் அழுது கரைந்தாள் உமையாள். அதன்பின்னே குழந்தையை எங்கேயும் தனியாய்விட மாட்டாள். தன் கைக்குள்ளே வைத்துக் கொள்வாள். அதே போல தன்னைச் சுற்றும் கழுகுகளிடமிருந்தும் தன்னைக் காத்துக்கொள்ள போராடினாள். தினம் தினம் வாழ்க்கையே போராட்டமாய் மாறிப்போனது அந்தப் பெண்ணுக்கு.

அப்படியொரு நாள் உமையாள் அறையில் அமர்ந்து தைத்துக்கொண்டிருக்க, பின்கதவு திறந்திருந்ததை அவள் அறியவில்லை. அதன் வழியே உள்ளே புகுந்திருந்தான் ஒருவன். எப்போதும் வாடிக்கையாக தேநீர் குடிக்க கடைக்கு வருபவன் அவன். மெதுவாய் உள்ளே நுழைந்தவன், கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு, உமையாள் அறைக்குள் நுழைந்தான்.

அவனை எதிர்பாராது அதிர்ந்த உமையாள், “ஏய், யாரு நீங்க? எதுக்கு உள்ளே வந்தீங்க?” என எழ,

“என்ன உமா, என்னைத் தெரியலையா? உன் புருஷனைக் கேளு தெரியும்...” என்றவன், “அதான் உன் புருஷன் உன் பக்கத்துலயே வர்றது இல்லையே? அப்புறம் என்ன? நல்லா பார்க்க அம்சமா இருக்க?” என்றவனின் வக்கிரப் பார்வை அவளைத் துகிலுருக்க, அதில் அருவருத்துப் போனவள், “ஏய்! சீ... வெளியே போடா நாயே!” என கையில் கிடந்ததை எடுத்து அவனைத் தாக்க முயல, அவன் உமையாள் கரங்களை அழுத்தமாகப் பற்றினான். அந்நேரம் உள்ளே நுழைந்த திலகவதி கண்டது இணைந்திருக்கும் கைகளையும், அவர்கள் இருவரையும் தான்.

“சீ! கருமம்... பட்ட பகல்ல நடு வீட்ல கண்டவனோட கூத்தடிச்சுட்டு இருக்கீயே டி? உனக்கு வெட்கமாக இல்லை. கட்டுன புருஷன் உயிரோடதானே இருக்கான். அப்புறம் ஏன்டி இப்படி அலையுற?” வேறு என்னென்ன அவர் பேசினாரோ, உமையாள் சமைந்து போனாள். அவளால், அவர் பேசியதற்கு பதில் கூடக் கூற முடியவில்லை. அந்த அளவிற்கு அதிர்ச்சியும் அழுகையும் போட்டிப் போட்டது.

அவள் தன் பக்க நியாயத்தை எடுத்துக்கூற விழைய, “சீ! வாயை மூட்றி நடத்தைக் கெட்டவளே!” என்ற திலகவதியின் பேச்சுக்கு ஊர் மொத்தமும் அங்கே கூடிவிட, செய்யாத தப்புக்கு குற்றவாளி கூண்டில் ஏற்கப்பட்டதை எண்ணி ஆற்றாமையில், கண்ணீர் பொல பொலவென வடிந்தது.

“அதான் கையும் களவுமாய் பிடிச்சாச்சே! அந்தப் பொண்ணு வீட்ல இருந்து ஆளை வரச் சொல்லுங்க!” என்று ஒருவர் கூற, உடனே மருதுவிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

குழந்தை நடந்த களோபரத்தில் அழ, அவளைத் தூக்கிக்கொண்டு நின்றாள் உமையாள். மனம் மட்டும் தன் தாய் வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். அவர் தன்னை நம்புவார் என ஜெபித்துக்கொண்டிருந்தது. சுற்றியிருந்தவர்களின் பேச்சில் உமையாள் அருவருத்துப் போய் உடல் கூசினாள். ‘இத்தனை பேரில் ஒருத்தருக்கு கூடவா, என் பக்க நியாயத்தைக் கேட்க மனம் வரவில்லை?’ என மனது அழுகையில் விம்மியது.

மருது வீட்டிலிருந்து அனைவரும் வர, வள்ளி முகத்தை முந்தானையால் மூடி அழுதவாறே வந்தார். தாயைக் கண்டதும் விழிகள் மின்ன, “அம்மா, நான் எந்தத் தப்பும் செய்யலை” என அவள் கூறும் முன்னே, அவர் கேட்ட கேள்வியில் ஆதியும் அந்தமும் மறித்துப் போனாள் பெண்.

“ஏன் டி இப்படி பண்ண? குடும்ப மானத்தையே வாங்கிட்ட!” என அவளை அடித்தார். அவர் கேட்ட கேள்வியிலே உணர்வுகள் எல்லாம் மறித்துப் போயிருக்க, அந்த அடி அவளை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மருது வந்து மகள் கன்னத்திலே அறைந்தார்.

அவர் தன் மகள் மீதுதான் தவறு என தலைகுனிந்து நிற்க, “ஏன் உமா, நம்ம அப்பாவை இப்படி அசிங்கப்பட வச்சுட்டீயே!” என இரண்டு தமைக்களும் வினவ, அவளது இதழ்களில் விரக்திப் புன்னகை. வேலன் ஏதோ அருவருக்கத்தக்க பொருட்களைப் பார்ப்பது போல பார்த்தான்.

உமையாள் நடப்பதை மட்டும் வேடிக்கைப் பார்த்தாள். திலகவதியுடன் சேர்ந்து இன்னும் நான்கு பேர் அவள் செய்தது பெரிய தவறு என வாதாட, மருதுவும் அவரது சொந்தக்காரர்களும் சமாதானம் பேசினர். அரைமணி நேரம் சலசலத்துக்கொண்டே இருந்தனர். ஆக மொத்தத்தில் அவளது குரல் ஒருவரது செவியையும் அடையவில்லை என்பதே உண்மை.

ஒருவழியாய் சமாதானம் பேசி, உமையாள் செய்த தப்பை பகீரங்கமாக ஒப்புக்கொண்டு வீரா மற்றும் திலகவதி காலில் அனைவர் முன்பும் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற அவர்கள் இறங்கி வர, உமையாள் இதழ்கள் இறுகிப் போயின.

தான் செய்யாத தவறுக்கு ஊரறிய மன்னிப்பு? என நினைத்ததும் விழியோரம் ஈரம் கசிந்தது‌. அதை துடைத்தவள், குழந்தையை இறுக அணைத்துக்கொண்டாள். இனிமேல் இங்கிருக்கும் ஒருவரும் தனக்கும் தன் குழந்தைக்கும் தேவையில்லை என முடிவெடுத்தவள், “நிறுத்துங்க!” என கத்த, அது நான்கு புறமும் எதிரொலித்தது.

வீராவின் முன்பு சென்று நின்றவள், அவன் கட்டிய தாலியை கழற்றி அவன் மூஞ்சியில் எறிந்தாள்‌. யாரோ கூட்டத்தில் கத்த, அனைவரையும் தீர்க்கமாகப் பார்த்தவள், “இனிமே இந்த ஆளுக்கும் எனக்கும், என் குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!” என்றாள் அழுத்தமாக.

“அப்போ இதையும் கேட்டுக்கோ. எனக்கு உமையாள்னு ஒரு மக இன்னைக்கு இறந்துட்டான்னு தலைக்கு முழுகிறேன்!” என்று மருது கர்ஜிக்கவும், அது அவளைப் பாதிக்கவில்லை. எதிர்பார்த்த ஒன்றுதானே?

“தேவையில்லை. எனக்கு ஒருத்தரும் தேவையில்லை!” என்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்று இரயில் நிலையம் சென்ற போதுதான் அமுதாவை சந்தித்து விழுப்புரம் வந்தாள்.

நடந்த அனைத்தையும் ஒரு சொட்டு உணர்வுகளும் சலனமும் இன்றி கூறிவிட்டு பிரபஞ்சனைப் பார்த்தாள் உமையாள். அவள் கூறுவதைக் கேட்ட பிரபஞ்சனுக்கு நெஞ்சடைத்துப் போனது. அவன் விழியோரம் ஈரம் கசிந்தது இந்தப் பெண் கடந்து வந்த பாதையை நினைத்து.

தொடரும்...
கடைசி இரண்டு அத்தியாயங்கள் நாளை பதியப்படும்








 
Well-known member
Messages
409
Reaction score
303
Points
63
அடப்பாவமே, கேடுகெட்ட ஜென்மங்கள். பாவம் உமா. கடவுள் கை விட மாட்டார். அதான் பிரபா கிடைச்சிருக்கான்
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
என்ன society இது இவகளுக்கு மனசாட்சி ஒன்னு இல்ல இப்படி லா பேசுறங்க இப்போ நீ வந்தது 💯 நல்ல முடிவு இனி பிரபா இருக்கான்
 
Active member
Messages
131
Reaction score
89
Points
28
அடப்பாவிகளா!!! இதையெல்லாம் செய்துட்டு நாட்டாமை வேற!! உமையாள் முதல்லயே இதை செய்திருக்கலாம்! .. செய்ய விட்டிருந்தால் தான?! ❤️
 
Top