• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,115
Reaction score
3,189
Points
113
நெஞ்சம் – 8 💖

அன்றைக்கு உழவர் துணையில் சோதனை இருந்ததால் வேலை முடிய நேரமாகிவிடுமே என ஆதிரை, கோமதி, தர்ஷினி, ஆதிலாவை அதட்டி வேலையை துரிதப்படுத்தினாள். அவளும் பாலை சோதனை செய்ய, ஓரளவிற்கு வேலை முடிந்திருந்தது. மடிக்கணினியில் அனைத்தையும் பதிந்து முடித்து நேரத்தைப் பார்க்க, அது ஐந்தே காலாகியிருந்தது.

இவள் தேவாவிடம் கூறிவிட்டு வீட்டிற்கு கிளம்பலாம் என அவனது அறைக்குள் லாக் புத்தகத்தோடு நுழைந்தாள். ஒரு கணம் அவனது அறையில் அமர்ந்திருப்பவனைப் பார்த்து இவளுக்கு நெஞ்சம் திடுக்கிட்டுப் போனது. அப்புவை அந்த நேரத்தில் அவள் எதிர்பாராது திகைத்துப் போயிருக்க, “ஹே ஆதி... ஹவ் ஆர் யூ?” என‌ உற்சாகத்துடன் எழுந்து வந்து அவளைத் தோளோடு அணைத்திருந்தான் அவன்.

“அப்பு... அப்பு நீ... நீ எங்கடா இங்க?” அவள் அதிர்ச்சி விலகாத குரலோடு அவனது கையைத் தோளிலிருந்து தள்ளிவிட, “சர்ப்ரைஸ்... எப்படி என் சர்ப்ரைஸ் விசிட்?” எனக் கண்ணை அடித்து புருவத்தை உயர்த்தியவன், “நான் வந்து ஹாஃப் அன் அவர் ஆச்சு. ப்ரோ கூடப் பேசிட்டு இருந்தேன். அப்படியே ஃபர்மையும் ப்ரோ சுத்திக் காட்டுனாரு!” என்றான்.

ஆதிரை இப்போது தேவாவின் புறம் திரும்பவே இல்லை. அவனது எதிர்வினை என்னவாக இருக்கும் எனக் கற்பனை செய்யும்‌ போதே பயம் தொண்டையைக் கவ்வியது. மூச்சை இழுத்துவிட்டவள், “இப்படித்தான் சொல்லாம கொள்ளாம வந்து நிப்பியா மேன்?” என முயன்று குரலை சரி செய்தாள்.

“ப்ம்ச்... என்ன நீ? உனக்காக நான் இந்த பர்மை கஷ்டபட்டு தேடிக் கண்டு பிடிச்சு வந்தா திட்டுற மாதிரி பேசுற? நீ ரொம்ப மாறிட்ட ஆதி. ஆனாலும் என்னை அதட்டுறதை மட்டும் விடலை!” எனக் குறைபடித்தவனை முறைக்க மட்டுமே முடிந்தது இவளால்.

“சரி... வா, வெளியே எங்கேயும் போய் பேசலாம். எனக்கு வொர்க் டைம் முடிஞ்சிடுச்சு!” என அவன் கையைப் பிடித்திழுத்தாள் ஆதிரை. எப்படியாவது அவனை இங்கிருந்து அப்புறப்படுத்திவிடும்‌ வேகம் அவளிடம். தேவா கடித்துக் குதறு விடுவானே என மனம் அதை நினைத்து அஞ்சியது.

“நோ... நோ ஆதி... எனக்கு டைம் இல்ல. டூ டேய்ஸ்ல ஃப்ளைட், உன்னைப் பார்க்காம போக மனசில்லை. இவ்வளோ நாள் கழிச்சு இப்பத்தானே உன்னைக் கண்டு பிடிச்சேன். அதான் கூகுள்ல உழவர் துணைன்னு போட்டு அட்ரஸைக் கண்டு பிடிச்சு வந்தேன்!” என்றவன் குரலில் சோர்விருந்தது.

“ரொம்ப அலைஞ்சியா டா?” எனக் கேட்டவளின் குரலில் அவனுக்கான அக்கறை கனிந்து வந்தது.

“சே... சே. லைட்டாதான். பட் இப்படியொரு வில்லேஜ்ல இருக்கும்னு எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை நான்...” என்றான் ஒற்றைக் கண்ணை சிமிட்டி.

“ஃபோன் பண்ணி இருக்க வேண்டியதுதானே டா?” இவள் அதட்டலாய்க் கேட்க, “லூசே... இது சர்ப்ரைஸ் விசிட் டி!” என்றான் அலுத்துக்கொண்டு. தேவா கையைக் கட்டியவாறே இருவரது பேச்சையும் அவதானித்தான். இப்போது மெதுவாய் அவன்புறம் திரும்பிய ஆதிரை தயக்கமாய்ப் பார்த்தாள். அவன் முகத்தில் எள்ளல் நிறைந்திருந்தது.

‘நான் ஏற்கனவே கூறினேனே!’ என நக்கலாய் அவன் பார்க்க, இவளுக்கு முகம் மெதுவாய் மாறத் தொடங்கியது.

“ஆதி... நான் லண்டன் கிளம்புறேன். அடுத்து எப்போ வருவேன்னு சொல்ல முடியாது. அதான் உன்னைப் பார்த்துட்டு அப்படியே ஒரு கிஃப்ட் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்!” என்றவன் தோளில் மாட்டியிருந்த பையிலிருந்து ஒரு பெரிய காகிதம் சுற்றப்பட்ட பரிசு பொருளை நீட்டினான்.

“நமக்குள்ள என்ன டா ஃபார்மாலிட்டி!” எனக் கடிந்தவள் அதை வாங்க செல்ல, “ரெண்டு பேரும் சேர்ந்தே வாங்குங்க!” என்றான். ஆதிரை அவனை முறைக்க, தேவா இவளருகே வந்து நிற்க, இருவரும் அதை வாங்கினர்.

“ஆதி... ஓபன் இட். உனக்கு பிடிக்கும்!” அவன் துள்ளலுடன் கூற, ஆதிரை அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே அந்தப் பரிசை பிரித்தாள். அதைப் பார்த்தவளின் முகம் நொடியில் பதற, நிமிர்ந்து தேவாவைப் பார்த்தாள். அவன் அவளைத் தீப்பார்வைப் பார்த்திருந்தான்.

“எப்படி என் கிஃப்ட்? ரெண்டு பேரும் செம்மையா இருக்கீங்கல்ல?” அவன் உற்சாகத்துடன் கேட்க, “ ரொம்ப நல்லா இருக்கு டா!” என்றாள் பல்லைக் கடித்து தன்னையே நொந்தபடி.

இவன் இங்கே வந்ததற்கே தேவாவிடம் என்ன மண்டகப்படி வாங்கப் போகிறோம் என அவள் எண்ண, இவன் என்னவென்றால் ஆதி காலத்தில் எடுத்த தேவாவின் புகைப்படத்தை தேடியெடுத்து இவளுடைய இளவயது புகைப்படத்தையும் இணைத்து அதைப் சட்டகமாக்கி பரிசளித்திருக்கிறான். அதில் இருவரும் அகமும் முகமும் மலரப் புன்னகைத்திருந்தனர்.

“பேஸ்புக்ல உழவர் துணைன்னு தேடும் போது ப்ரோவோட பிக்சர் அதுல இருந்துச்சு. உன்னோட ஃபோட்டோ நம்ப லண்டன்ல படிக்கும் போது எடுத்தது. ரெண்டையும் மெர்ஜ் பண்ணிட்டேன். அவசர அவசரமா பண்ணதால் இது மட்டும்தான் முடிஞ்சது. நெக்ஸ்ட் டைம் பெஸ்டா வாங்கிட்டு வரேன் டி!” என அவள் மீதான அக்கறையில் பேசுபவனிடம் அவளால் கடிந்து கொள்ள முடியவில்லை. தலையை மட்டும் வெறுமென அசைத்தாள்.

“ஆதி... சென்னைலதான் ஃப்ளைட். நீயும் ப்ரோவும் வந்து என்னை செண்ட் ஆஃப் பண்ணணும். உங்களை ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணுவேன் நான்!” என்றவன், தோளிலிருந்த பையை சரியாய் மாட்டினான்.

“ஓகே ப்ரோ, நான் கிளம்புறேன்...” என்றவன், “ஆதி... ஐ யம் கோயிங் டூ மிஸ் யூ!” என அவளை மென்மையாய் அணைத்தான்.

இவளும் அவன் முதுகில் தட்டியவள், “வயசானாலும் இன்னும் உனக்கு பொறுப்பே வரலை போல டா. அப்படியேதான் சுத்தீட்டு இருக்கீயா என்ன?” இவள் அதட்டலையெல்லாம் தோள் குலுக்கலில் புறந்தள்ளியவன், “மெச்சூரிட்டி வர்றதுன்னா எப்படி டி? உன்னை மாதிரி உம்முன்னா மூஞ்சியா இருக்க சொல்றீயா? நான் இப்படித்தான் இருப்பேன், போ...” என முறைத்தவனோடு அவளும் நடந்தாள். இருசக்கர வாகனத்தில்தான் வந்திருப்பான் போல. வெளியே நிறுத்தியிருந்தான்.

இவள் அவனுக்கு அருகே செல்ல, தேவாவும் மெல்ல நடந்து வந்தான். கொஞ்சம் தூரத்திலே அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி நின்றுவிட்டான்.

“ஐ மிஸ்ட் யூ சோ மச் டா!” என அவன் தோள் தட்டிய கரத்தை தன் கைகளில் பொதிந்தவன், “நானும்தான்... ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன் ஆதி. இருந்தாலும் சிக்ஸ் இயர்ஸா நீ என்னைத் தேடலைன்னு கோபம்தான். உன் முகத்தைப் பார்த்ததும் என்னால அதைப் பிடிச்சு வைக்க முடியலை பிசாசே!” என்றான் அவள் தலையில் வலிக்காது கொட்டி.

“பத்திரமா போங்க... ரீச்சாகிட்டு மெசேஜ் போடு டா!” என இவள் கூற, தலைக்கவசத்தை எடுத்து மாட்டியவன், “அப்போ செண்ட் ஆஃப் பண்ண வர மாட்டீயா நீ?” என முறைப்புடன் கேட்டான்.

“லீவ் கிடைக்காது டா...” ஆதிரை தயங்கினாள்.

“ப்ரோ...” என தேவாவை நோக்கி மெலிதாய்க் கத்தியவன், “ஒரு நாள் மட்டும் உங்க வொய்ப்க்கு லீவ் கொடுங்க. நீங்களும் அவளும் என்னை செண்ட் ஆஃப் பண்ண வரணும்!” என்றான்.

தேவா ஆதிரையை ஒரு நொடி பார்த்துவிட்டு, “ஷ்யூர்...” என்றான்.

“ஹம்ம்...‌பாரு, உன் ஆளே பெர்மிஷன் கொடுத்துட்டாரு. சோ கண்டிப்பா வர்ற டி...” என அவன் வாகனத்தை உயிர்ப்பித்து அகல, “நோ...” என்றாள் ஆதிரை.

“யெஸ்... நீ வருவ. எனக்காக வருவ ஆதி...” என்றவன் பறந்துவிட, இவள் அவனை மென்மையாய் முறைத்து வைத்தாள். அங்கேயே சில நிமிடங்கள் நின்றவளுக்கு யாருடைய பார்வையோ ஊசியாய்த் தன்னைத் துளைப்பதை உணர்ந்து, அது நிச்சயமாக தேவாவாகத்தான் இருக்க கூடுமென உறைத்தது. எப்படி அவனை சமாளிக்க போகிறோம் என மனதில் மெதுவாய் பயம் மேலெழுந்தது.

அவள் திரும்பி தயக்கத்துடன் அவனைப் பார்க்க, “கம் டூ மை ரூம் ஆதிரையாழ்!” என அவளை உறுத்து விழித்தவன் அறைக்குள்ளே செல்ல, இவளும் பின்னே நுழைந்தாள்.

மேஜையின் மீது சாய்ந்து நின்றவன், “வெல்... மிஸ் ஆதிரை, இன்னும் எத்தனை நாள் நான் உங்களுக்கு ஹஸ்பண்டா ஆக்ட் பண்ணணும்னு சொல்லிட்டீங்கன்னா, நல்லா இருக்கும்...” என்றான் ஏளனக் குரலில். ஆதிரை தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

“உங்ககிட்டே தான் கேட்குறேன். இஸ் திஸ் ஃபேர்? ஹம்ம், நான் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்டே உங்களை என் வொய்ப்னு சொன்னா, ஹவ் வில் யூ ரியாக்ட்? டெல் மீ? அப்போ நீங்க என்ன செஞ்சு இருப்பீங்க? என்னைக் க்ரிமினல் போல ட்ரீட் பண்ணி இருப்பீங்க தானே?” என சூடாய்க் கேட்டான். ஆதிரையின் முகம் அவனது பேச்சில் குன்றியது.

தேவாவின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. அவன் இப்படி நடந்து கொண்டிருந்தால் இவள் என்ன செய்திருப்பாள் என யோசிக்கும் போது அவன் கூறிய வார்த்தைகள் சரியென்றே தோன்றியது. அன்றைக்கு ஒருநாள் ஏதோ அவசரத்திற்கு என்று பொய்யை உரைத்துவிட்டாள். ஆனால் அது வேலை செய்யும் இடம் வரை வந்து அவளை இன்னல்படுத்தும் என எண்ணி இருக்கவில்லையே. அப்புவைக் குறை சொல்ல மனம் வரவில்லை. தன்னுடைய மௌனம் தானே அன்றைக்கு அவனுக்கு சம்மதமாக போய்விட்டது. அன்றே மறுத்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. ஆனால் அதைவிட வேறு பெரிய பிரச்சினைகள் வந்திருக்கும். அதை சமாளிக்க பயந்ததுதானே மௌனமாய் இருந்து தொலைத்தாள்.

எப்போதும் எதிலும் நேர்மையாய் இருக்கும் ஆதிரைக்கு இது ஏனோ வருத்தத்தைக் கொடுத்தது. அதுவும் அந்தப் பொய்யினால் அவள் மட்டும் அல்லாது மற்றொருவன் பாதிக்கப்படுகிறான் என நினைக்கும் போதுதான் தன் செயலின் வீரியம் உறைத்தது.

“அமைதியா இருந்தா எல்லாம் ஓகே ஆகிடுமா ஆதிரையாழ். ஸ்பீக் அவுட்... ஒரு பொய் சொல்லிட்டு அதை மெயிண்டெய்ன் பண்ணுறது அவ்வளோ ஈஸின்னு நினைச்சீங்களா? தப்பே செஞ்சாலும் தைரியமா நான்தான்னு ஒத்துக்கும் போது இப்படி அடுத்தவங்க முன்னாடி கைக்கட்டி நிக்க அவசியம் வராது. தண்டனையை அனுபவிச்சிட்டுப் போய்டலாம். இதுதான் லாஸ்ட். இனிமே உங்க ஃப்ரெண்ட் என் முன்னாடி வந்தா கண்டிப்பா நான் உண்மையை சொல்லிடுவேன். என்னையும் உங்கப் பொய்யில கூட்டு சேர்க்காதீங்க. நான் எல்லாத்தலயும் உண்மையா இருக்கணும்னு நினைக்கிற ஆள். இந்த மாதிரி சீட்டிங், போர்ஜரி எல்லாம் எனக்கு ஒத்து வராது!” என்றான் எரிச்சலான குரலில்.

உண்மையில் தேவாவிற்கு பொய் சொல்வது, உண்மையை மறைப்பது, புரட்டு என எதுவுமே அறவே பிடிக்காது. அனைத்திலும் உண்மையையும் நேர்மையையும் எதிர்பார்ப்பான். அப்படி இருக்கையில் இந்தப் பெண் அவளது பொய்யில் இவனையும் இணைத்ததில் கட்டுக் கடங்காமல் கோபம் வந்தது. அலுவலகத்தில் அவள் சரியாய் இருக்கிறாள். ஆனால் சொந்த வாழ்க்கையில் இப்படித்தான் போல என அவள் மீதான பிம்பம் தகர்ந்து போனது.

தேவாவின் பேச்சில் ஆதிரைக்கு விழிகள் கலங்கப் பார்த்தன. இமை சிமிட்டி அதை தடுத்து நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவள், “சாரி சார், இட்ஸ் ப்யூர்லி மை மிஸ்டேக். என்னோட பொய்ல உங்களையும் சேர்த்தது தப்புதான். இதுதான் லாஸ்ட். இனிமே அப்புவை நீங்க மீட் பண்ற சிட்சுவேஷன் வராது. நெக்ஸ்ட் டைம் நானே அவன்கிட்ட உண்மையை சொல்லிட்றேன். இன்னைக்கு அவனை நீங்க நல்லவிதமாக ட்ரீட் பண்ணதுக்கு
தேங்க் யூ சார்!” என்றவள் சில நொடிகள் நிறுத்தி, “எனக்கும் இந்த போர்ஜரி எல்லாம் ரொம்ப புதுசுதான் சார். இல்லைன்னா இப்படி உங்ககிட்டே திட்டு வாங்கியிருக்க மாட்டேன்!” என கசப்பாய் முறுவலித்தவள் அவனைத் தாண்டிச் சென்று மேஜை மீதிருந்த புகைப்படத்தைக் கையிலெடுத்தாள்.

“ஒன் மினிட் ஆதிரையாழ்!” என அவள் கையிலிருந்த புகைப்பட சட்டகத்தை வாங்கி மேஜையில் ஓங்கி குத்தி அதிலிருந்த கண்ணாடித் துகளை அருகேயுள்ள குப்பைத் தொட்டியில் கொட்டியவன் உள்ளிருந்த புகைப்படத்தை வெளியே எடுத்தான்‌.

சரியாய் இருவர் உருவத்திற்கும் இடையே கிழித்தவன் அவளுடைய புகைப்படத்தை, “டேக் இட்...” என நீட்டினான்.
ஆதிரை அதை வாங்கி அந்தக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு விறுவிறுவென வெளியேறினாள். நேரம் ஆறைத் தொட்டிருந்தது. தேவா அவளது செய்கைத் தன்னைப் பாதிக்கவில்லை என்பது போல தன் புகைப்படத்தை மட்டும் மேஜைக்குள் வைத்துப் பூட்டினான்.

ஆதிரை வீட்டிற்குள் நுழைய, “ஏன் மா லேட்டு? சேடா இருக்கீங்க மா? காய்ச்சலா அம்மாவுக்கு?” என அபினவ் அவள் நெற்றியில் கை வைக்கவும், அந்த செய்கையில் நொடியில் அவள் கண்களிலிருந்து பொல பொலவென கண்ணீர் வடிந்தது.

“ம்மா... என்னாச்சு மா? ஏன் அழற?” என அவன் இவள் கண்ணீரைத் துடைத்துவிட, “ஒன்னும்மில்ல அபி, அம்மாவுக்கு ஹெட் ஏக். ஃபீவர் வர மாதிரி இருக்கு. வொர்க் அதிகம், அதான் டா!” என அவனை சமாதானம் செய்து உணவை உண்டு முடித்து ஒரு பாராசிட்டமாலைப் போட்டுக்கொண்டு உறங்கிப் போனாள்.

மறுநாள் வேலைக்குச் சென்ற ஆதிரை தேவாவின் முகத்தைப் பார்க்கவில்லை. அவன் அதையெல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. அவள் வேலையில் சரியாய் இருந்தால் அவனுக்குப் போதும். மற்றபடி அவளது தனிப்பட்ட வாழ்க்கையை அலசி ஆராய்வதில் அவனுக்கு துளியும் விருப்பமில்லை.‌

ஆதிரை அலைபேசியில் ஓரிரண்டு முறை எடுத்துக் கூறியும் அப்பு இவளை விமான நிலையத்தில் எதிர்பார்ப்பேன் என அழுத்திக் கூற, ஒரு கட்டத்திற்கு மேலே அவளாலும் மறுக்க முடியவில்லை. வருகிறேன் என ஒப்புக் கொண்டுவிட்டாள். ஆனால் இதற்காகவென தேவாவிடம்
சென்று விடுமுறைக்குக் கேட்டு நிற்பதில் அவளுக்கு உடன்பாடில்லை. ஆனால் வேறு வழியும் புலப்படவில்லை.

அன்றைக்கு வேலை முடிந்ததும் தயங்கியபடியே அவனிடம், “சார், எனக்கு நாளைக்கு லீவ் வேணும்!” எனக் கேட்டாள்.

சில பல நிமிடங்கள் அவளைக் காக்க வைத்தவன், மடிக்கணினியிலிருந்து தலையை நிமிர்த்தி, “ஓகே, எடுத்துக்கோங்க...” என்றான்.

“தேங்க் யூ சார்!” என சம்பிரதாய புன்னகையுடன் ஆதிரை வெளியேறி இருந்தாள். மறுநாள் அபினவையும் பள்ளிக்கு விடுமுறை எடுக்க வைத்து அவனையும் உடனழைத்துக்
கொண்டு சென்னை விமான நிலையத்திற்குச் சென்றாள்.

அப்புவிற்கு மூன்று மணிக்கு விமானம். இவள் சென்று சேரவே ஒன்றாகியிருந்தது. அவளுக்காகத்தான் காத்திருப்பான் போல.

“எவ்வளோ நேரம் ஆதி? கிளம்பும்போது தான் வருவீயா டி?” அவன் பொய்க் கோபத்துடன் கேட்க, “சாரி டா... சாரி. ட்ராஃபிக் ஜாம்ல மாட்டிக்கிட்டேன்!” என முகத்தை சுருக்கி மன்னிப்பை வேண்டியவள், கையிலிருந்த இரண்டு பையில் ஒன்றை அவனுடைய மகளிடம் நீட்டினாள்.

“இது உங்களுக்காக...” என அப்பு மற்றும் அவனது மனைவியிடம் மற்றொரு நெகிழிப் பையை நீட்டினாள்.

“இதை வாங்கத்தான் லேட்டாகிடுச்சா?” சரியாய் அவன் கேட்டு முறைக்கவும், இவள் அசட்டுச் சிரிப்புடன் தலையை அசைத்தாள்.

“ஓகே, பாய் ஆதி... பாய் சேம்ப்!” என்றவன் தாய், தந்தை, தங்கை குடும்பத்திடமும் விடை பெற்றுக் கிளம்பினான். ஆதிரை புன்னகையுடன் அவனை அனுப்பி வைத்தாள். அவன் உள்ளே சென்று மறையும் வரைப் பார்த்திருந்தாள்.

“அப்புவோட ப்ரெண்டா மா நீ?” என அருகே குரல் கேட்டதும் இவள் திரும்பிப் பார்க்க, அவனது தாய்தான் கேட்டார்.

“ஆமா ஆன்ட்டி...” என அவள் தலையை அசைக்க, “உம் பையனா மா... சென்னைல தான் இருக்கீயா?” என அவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தவாறே வெளியே வந்தாள் ஆதிரை. அவர்கள் குடும்பத்தோடு விடை பெற, இவள் அபினவோடு கோல்டன் கடற்கரைக்குச் சென்றுவிட்டு அப்படியே சென்னையை ஒரு சுற்று சுற்றிவிட்டு இரவு ஒன்பது மணிக்குத்தான் இருவரும் வீட்டிற்கு வந்தனர்.

அடுத்தடுத்த நாட்கள் வேகமாய் ஓடின. ஆதிரை நடந்த நிகழ்விலிருந்து மீண்டிருந்தாள். அவள் தேவாவின் முகம் பார்த்துப் பேசத் தொடங்கியிருக்க, அவனிடம் எவ்வித வேறுபாடும் இல்லை. நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள், வேலையில் சரியாய் இருத்தல் நலம் என அகன்றிடுவான். ஆதிரை அவனிடம் பெரிதாய் பேச்சுவார்த்தைகள் வைத்துக் கொள்ளவில்லை. தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருந்து கொண்டாள்.

***

தேவா வேலைக்கு கிளம்பி அறையைவிட்டு வெளியே வர, கண்டும் காணாமலும் அனைவரது பார்வையும் அவனிடம்தான் இருந்தது. அவனுக்குமே அது புரிந்து இருந்தது.

“சாப்பிட வாங்க மாமா...” ஜனனி அவனுக்கொரு தட்டை நகர்த்தி அதில் ஆப்பத்தையும் தேங்காய்ப் பாலையும் ஊற்றினாள். தேவா அமர்ந்து உண்ண, பிரதன்யாவும் அவனுடன் அமர்ந்தாள்.

பூஜையறையில் மணியடிக்கும் சப்தம் கேட்டது. தேவாவின் தாய் பொன்வாணிதான் குளித்துவிட்டு பூஜை செய்து கொண்டிருந்தார்.

ஹரி அப்போதுதான் தூங்கி எழுந்து வந்தான். தேவா அவனை முறைக்க, “சாரி ப்ரோ, கொஞ்சம் அசந்துட்டேன்!” என்றவாறே பற்பசையை எடுத்து பல்துலக்கியில் வைத்தான்.

ராகினி குளித்து வந்ததும் கோபால் பேத்திக்கு உடையை அணிவித்துக் கொண்டிருந்தார்.
அவள் அவரிடம் தாயை ஏதோ புகார் கூற, ஜனனி இங்கிருந்தே மகளை முறைத்தாள். அனைத்தையும் மௌனமாய் கவனித்தவாறே உண்டான்.

தேவாவின் தட்டில் ஆப்பம் காலியானதும் ஜனனி மற்றொன்று வைக்க, “போதும் ஜனனி...” என்றவன் அவள் வைத்துவிட்டாள் என அதையும் உண்டு முடித்திருந்தான்.

பொன்வானி சாமி கும்பிட்டுவிட்டு நெற்றியில் விபூயை பட்டைப் போல மூன்று விரல்களால் தேய்த்தவர் வெளியே வந்தார். தேவா கையை கழுவி முடித்து ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த மகிழுந்தின் திறப்பை எடுக்க, “தம்பி, அந்தப் பொண்ணு வீட்ல இருந்து ரெண்டு தடவை ஃபோன் பண்ணிட்டாங்க பா. என்ன சொல்லட்டும்?” என்ற தாயின் குரலில் ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்தான் தேவா. அவனைத்தான் அனைவரும் எதிர்பார்ப்புடன் ஏறிட்டனர்.

என்றோ ஒருநாள் நடந்த விரும்பத்தகாத நிகழ்வொன்றை இன்றைக்கு வரை இழுத்துப் பிடிப்பதில் எவ்வித நியாயமும் இல்லை என அவனுக்கே புரிந்தது. முதல் திருமணம் மேடை வரை வந்து நின்று போனதில் அடுத்து திருமணமே வேண்டாம் என்றுவிட்ட மகனை பேசி கரைத்து சம்மதம் வாங்கவே அந்தப் பெரியவர்களுக்கு மூன்று வருடங்கள் ஓடியிருக்க, தேவாவும் முப்பதைத் தொட்டிருந்தான்.

அவன் சம்மதம் கிடைத்ததும் பெண் பார்க்கத் தொடங்கினர். ஒன்று இவர்களுக்கு பிடித்தால், பெண் வீட்டில் மறுத்தனர். அவர்களுக்கு சம்மதம் என்றால் இவர்களுக்கு ஒப்பவில்லை‌. ஜாதகம், படிப்பு, நிறம், குணம் என இரண்டு வருடங்கள் எத்தனையோ பெண்களைப் பார்த்து இப்போதுதான் அனைத்தும் கூடி வந்திருந்தது. இன்றைய நிலைக்கு இந்த திருமணச் சந்தையில் ஆணும் பெண்ணும் இணைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகள் உருவாகியிருந்தன.

பெற்றோர்கள் பார்த்துவிட்டு சம்மதம் சொல்லித் திருமண மேடையில் மணமக்கள் ஒருவரை ஒருவர் முதல்முறையாக பார்த்தக் காலம் எல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே கரையேறியிருந்தது.

இந்தக் காலத்தில் அனைத்தும் தலைகீழாக நடந்து கொண்டிருக்கிறது. முதலில் ஆணும் பெண்ணும் பேசி பழகி பிடித்திருந்தால் அதைத் திருமணம் வரை கொண்டு வந்தனர். இல்லையென்றால் ப்ரேக் அப் என்ற வார்த்தைகளோடு நாகரீகமாக விலகிக் கொண்டிருக்க, பொன்வானியும் கோபாலும் மகனுக்கு பெண் தேடி களைத்துப் போயிருந்தனர்.

கடைசியாய் இந்தப் பெண் அவர்களுக்கு பரம திருப்தி. பெண் வீட்டாருக்கும் இவர்களது குடும்பத்தைப் பிடித்துவிட, எப்படியாவது மகனை திருமண சந்தையில் விற்றுவிடும் முனைப்பில் இருந்தனர் பெற்றோர்கள். தங்கள் காலத்திற்குப் பின்னே மகன் தனித்து நின்றுவிடக் கூடாது என பெற்றவர்களாக அவர்களது மனம் அரித்தது. மூன்று பிள்ளைகளுக்கும் கடமையை சரியாய் செய்துவிட்டு உலகை விட்டு நீங்க வேண்டும் என எல்லா பெற்றவர்களின்‌ முன்மாதிரிதான் இவர்களும்.

இருபத்து ஏழு வயதில் திருமணம் என்றதும் தேவாவிற்கும் சில பல கனவுகள் இருந்தன. ஆனால் அவனுக்கு மனைவியாய் வரப் போகிறவள் திருமணத்தன்று வேறொருவரைக் காதலிப்பதாக கூறி ஓடிவிட, அந்த நிகழ்விலிருந்து இவனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்பதும் அருகிப் போயிருந்தது. திருமணமே வேண்டாம் என ஒரு மனம் கூறினாலும், எத்தனை நாட்கள் இப்படியே தனியாக இருந்துவிட முடியும் என்ற நிதர்சனம் அவனுக்கும் உறைத்தது.

தாய் தந்தை இருக்கும் வரை அவர்களோடு இருக்கலாம். பிரதன்யாவிற்கு எப்படியும் இரண்டு வருடங்களில் திருமணம் முடித்து விடுவார்கள். தம்பியும் அவன் மனைவியும் அவர்கள் குடும்பத்தைப் பார்க்க வேண்டும். அப்போது இவன் மட்டும் தனித்துப் போய் விடுவானே என எண்ணம் தோன்றிற்று.

உடல் தேவைக்கு மட்டுமல்ல, மனத் தேவைக்கும் ஒரு துணை அவசியம் என உணர்ந்திருந்தான். அலைந்து திரிந்து வீடு நுழைகையில் மனைவி, மகள், மகன் என அவனுக்கென ஒரு குடும்பம் இருந்தால் எப்படியிருக்கும் என எண்ணிப் பார்க்கையிலே தித்தித்தது. நேற்றுத் தங்கை அலைபேசியில் அனுப்பிய புகைப்படத்தை ஒருமுறை திறந்து பார்த்தான். ஆனால் அந்தப் பெண்ணின் முகம் அத்தனை நினைவில்லை. பார்க்க இந்தக் காலத்து நவீன யுவதியாய் அழகாய் இருந்ததாய் ஒரு நினைவு.

“ஓகே சொல்லிடுங்க மா!” என தேவா கூறியதும், “ரொம்ப சந்தோஷம் பா... பொண்ணு நம்ப பண்ணைக்கு வந்து உன்னைப் பார்க்கணும்னு சொன்னதா அவங்க அம்மா சொன்னாங்க. வர சொல்லட்டா டா?” பொன்வானி மகனின் முகத்தைக் கேள்வியாகப் பார்த்தார்.

அவனுக்குமே பெண்ணை நேரில் சந்தித்து பேசினால் நல்லது எனத் தோன்ற, “வர சொல்லுங்கம்மா...” என்றுவிட்டு கிளம்பினான்.‌

“ப்பா...‌ஒரு வழியா அண்ணன் ஓகே சொல்லிடுச்சு. சீக்கிரமா அண்ணியை வீட்டுக்கு கூட்டீட்டு வந்துடுங்க!” என பிரதன்யா மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பில் கூவ, அனைவரது முகத்திலும்
புன்னகை படர்ந்தது. அந்தப் புன்னகையுடனே திருமணத்தை நடத்தி முடித்துக் கொடு இறைவா என பெற்றவர்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டனர்.

தொடரும்...


 
Well-known member
Messages
385
Reaction score
270
Points
63
Deva yazh kita kobapattathu la thappu illa yae ithae mathiri avan poi solli irundha ava accept panni iruku ah mata la ah .
Oh ho appo deva single than but innumae andha abinav devanandhan than rombhavae idikuthu
 
Well-known member
Messages
473
Reaction score
351
Points
63
தேவா இப்போ தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்றான், ஆனா ஆதி பையன் பேர் அபினவ் தேவ நந்தன், இது எப்படி? ❤‍🤔🤔🤔🤔🤔🤔
 
Top