• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,115
Reaction score
3,188
Points
113
நெஞ்சம் – 5 💖

“அம்மா... இந்த ட்ரெஸ் போடுங்கம்மா.. இது நல்லா இருக்கும்!” என நிலை
பேழையிலிருந்து அபினவ் ஒரு புடவையை உருவி தாயின் கையில் கொடுத்ததும் சின்ன முறுவலுடன் அதை வாங்கினாள்.

“ஏன் டா... நான் போட்டிருக்க சுடிதார்க்கு என்ன குறை?” இவள் வேண்டுமென்றே அவனை வம்பிழுக்க, மேவாயில் கையை வைத்து தாயை முறைத்தான் அவன்.

“போம்மா... என் நியூ ஃப்ரெண்டை இன்ட்ரோ பண்றேன். சோ, எனக்குப் பிடிச்ச‌ ட்ரெஸ் போடுங்கன்னு நேத்தே சொன்னேன் இல்ல. இப்போ ஏன்னு கேட்குற?” அவன் சடைத்தான். பேசும் போதே பன்மையும் ஒருமையும் மாறி மாறி வந்தன.

“உன் ஃப்ரெண்ட்ஸை தானேடா பார்க்கப் போறோம்?” எனக் குறும்பாய்க் கேட்டவள், “எல்லாம் பசங்க தானே டா? நான் எப்படி இருந்தா என்ன?” என்றாள் கேலியாக.

“ம்மா... என் ஃப்ரெண்ட் நிக்கியை இன்ட்ரோ பண்றேன்னு நேத்தே சொன்னேன் இல்ல?” அவன் சிணுங்க, இவளுக்கு சிரிப்பு பொங்கியது.

“யாருடா அது நிக்கி? ஹம்ம்... நேத்துல இருந்து ஒரே நிக்கிப் புராணம் தானா டா?” என அவள் மகனின் கன்னத்தை மெதுவாய் நிமிண்டினாள்.

“நீங்க நேர்ல பாருங்க மா. ஷி இஸ் மை நியூ ஃப்ரெண்ட்!” என பளிச்சென புன்னகைத்தான் அபினவ். இவள் தலையை அசைத்து அவன் எடுத்துக் கொடுத்த அயிரை நிறப்புடவையை உடுத்தினாள். சின்னவனும் தாயின் நிறத்திற்கேற்ப உடையை அணிந்தான். இன்றைக்கு அவனது பள்ளியில் ஆசிரியர் பெற்றோர் கலந்துரையாடல். அதற்குத்தான் இருவரும் அங்கே கிளம்பிக் கொண்டிருந்தனர்.

“ம்மா... நிக்கியை ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ண போற. சாக்லேட் வாங்கிட்டு போகலாமா மா?” என கூடத்திலிருந்தே எட்டித் தாயின் முகத்தைப் பார்த்த அபி, அவள் பதிலுரைக்காது போய்விட, “இட்ஸ் ஓகே அம்மா!” என்றான் உள்ளே சென்ற குரலில். ஆதிரைக்கு முறுவல் பிறந்தது.

“வொய் நாட்? வாங்கிட்டுப் போகலாம். என்ன சாக்லேட் வாங்கலாம்?” எனக் கேட்டாள்.

“டார்க் சாக்லேட் நிக்கிக்குப் பிடிக்கும்னு சொன்னா மா!” என அவன் கண்கள் மின்னக் கூற, இவளது புருவங்கள் உயர்ந்தன. இருவரும் பள்ளிச் செல்லும் வழியிலே ஒரு கடையில் அவன் குறிப்பிட்ட இன்னெட்டுகளை வாங்கிக்கொண்டு சென்றனர்.

அனைத்துக் குழந்தைகளும் பெற்றோர்களுடன் வந்திருந்தனர். அபி வெகு உற்சாகத்துடன் தாயின் கைப்பிடித்து உள்ளே நுழைந்தான். இன்னும் கலந்துரையாடல் தொடங்கவில்லை. பாதி நாற்காலிகள் காலியாகக் கிடந்தன.‌

“ம்மா... இங்க வாங்க, ஷீ இஸ் நிக்கி!” என அவன் ஆதிரையின் கையைப் பிடித்திழுத்து ஒரு சிறுமி முன்னே நிறுத்தினான். கன்னம் இரண்டும் புசுபசுவென வீங்கியிருக்க, வெண்ணெயில் குழைத்தெடுத்து போல இருந்தாள் அவனின் தோழி நிக்கி. இவள் அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“நிக்கி, என் மாம்!” அபி நிக்கியின் அருகே சென்று நிற்க, “ஹாய் ஆன்ட்டி, நான் நிகிலா!” என அவள் புன்னகைத்தாள். இருவருக்குமான அறிமுகப் படலம் முடிய, நிகிலாவின் தாயும் அவர்களருகே வர, நால்வரும் சில பல நிமிடங்கள் பேசின.

“நிக்கி, அம்மா உனக்குப் பிடிச்ச டார்க் சாக்லேட் வாங்கிட்டு வந்திருக்காங்க!” என அவன் கூறித் தாயைப் பார்க்க, ஆதிரை தன் கைப்பையிலிருந்து இன்னெட்டை எடுத்து அவளிடம் கொடுத்தாள். நிகிலா தாயை நிமிர்ந்து பார்க்க, அவர் தலையை அசைத்ததும் பெற்றுக் கொண்டாள். அடுத்தடுத்து பெற்றோர்கள் வந்துவிட, கலந்துரையாடல் தொடங்கியது.

நான்கு ஆசிரியர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு முன்னே மேஜையும் இரண்டு இருக்கைகளும் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு பெற்றவர்களாக ஆசிரியரிடம் சென்று பேசினர். அபியின் முறை வந்தப்போது இவள் மகனையும் அழைத்துக்கொண்டு சென்று ஆசிரியையிடம் அமர்ந்தாள்.

“ஹேப்பி டூ மீட் யூ அபிம்மா... உங்கப் பையன் நல்ல பையன்தான். பட் படிப்புல தான் கொஞ்சம் மந்தமா இருக்கான். ஃபர்ஸ்ட் ரேங்க் வரணும்ன்ற எண்ணமே இல்ல. டென்த் ட்வெல்த் ரேங்க்தான் வாங்குறான். கொஞ்சம் பிக்கப் பண்ண கஷ்டப்படுறான். நீங்களே ரேங்க் கார்டைப் பாருங்க!” என்ற ஆசிரியை ஆதிரையிடம் அபியின் மதிப்பெண் அட்டையைக் கொடுத்தார். பெயர் என்ற இடத்தில் அபினவ் தேவநந்தன் என எழுதியிருப்பதை ஒரு நொடிக் கூர்ந்து பார்த்தவள் பின்னே நிமிர்ந்து அமர்ந்தாள்.

அவளுக்கு அருகே அமர்ந்திருந்த அபியின் முகத்தில் அத்தனை நேரமிருந்த மகிழ்ச்சி வடிந்திருந்தது. ஆசிரியை இவன் ஒழுங்காக படிக்கவில்லை என்று கூறவுமே தாயை சோகம் அப்பிய முகத்துடன் பார்த்தான். அவனை அப்படிப் பார்க்க ஆதிரைக்கு பொறுக்க முடியவில்லை.

“ஏன் மிஸ், டென்த் ரேங்க் எடுத்தா தப்பா என்ன?” எனக் கேட்டாள்.

அந்தக் கேள்வியில் ஒரு நொடி விழித்தவர், “இல்ல மேடம், உங்கப் பையன் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்க வேணாமா? அது உங்களுக்குத் தானே பெருமை?” எனக் கேட்டார்.

“வேணாம் மிஸ். என் பையன் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கணும்னு நான் எதிர்பார்க்கலை. அவனால் என்ன முடியுதோ அந்த எஃபர்ட் போட்டுத்தான் படிக்கிறான். எல்லாரும் ஃபர்ஸ்ட் வரணும்னு எந்த அவசியமும் இல்ல. நீங்க எல்லா குழந்தைகளையும் ஒரே மாதிரி ட்ரீட் பண்ண பழகுங்க. படிப்பு வாழ்க்கைக்குத் தேவைதான். அதுக்காக மார்க் கம்மியா எடுத்ததும் மக்குன்னு பட்டம் கொடுத்து டிஸ்கரேஜ் பண்ணாதீங்க. தட்ஸ் நாட் ஃபேர்!” என்றாள் அழுத்தமாய். சென்ற வாரமே ஆசிரியர் ஒருவர் இவன் மதிப்பெண் குறைவு, மக்குதான் இப்படி குறைந்த மதிப்பெண் எடுப்பார்கள் என்பது போல கூறிவிட, மாலை வீட்டிற்கு வந்ததும் தாயிடம் மனசோர்வுடன் தான் மக்கா என்பது போல கேட்டிருந்தான் மகன். இவள்தான் அவனிடம் பேசி சமாதானம்
செய்திருந்தாள்.

“மேடம்.. நாலு புள்ளைங்க இருக்க இடத்துல உங்க மகன் மட்டும் கம்மியா மார்க் எடுத்தா நல்லா இருக்குமா? எப்படியாவது அவனை நல்ல மார்க் எடுக்க வச்சு அவனோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னுதான் நாங்க முயற்சி பண்ணுவோம். எல்லா புள்ளைங்களும் எங்களுக்கு ஒன்னுதான் மேடம்!” அந்த ஆசிரியை தடுமாறியபடி பேசினார்.

“அதான் வேணாம்னு சொல்றேன் மேடம். என் பையன் என்ன படிக்கிறானோ அதுவே போதும். மத்த பசங்களோட கம்பேர் பண்ணாதீங்க. அது அவனை ரொம்ப லோவா ஃபீல் பண்ண வைக்குது. படிப்பும் முக்கியம்தான். அதுக்காகத்தானே ஸ்கூலுக்கு அனுப்புறோம். அது மட்டுமில்லாம நாலு பசங்களோட பேசணும், சோஷியலைஸா இருக்கணும். இந்த சொசைட்டியை ஃபேஸ் பண்ணணும்னுதான் அனுப்புறோம். அப்படி இருக்கும்போது நீங்க அவனை ஸ்லோ லெனர்னு முத்திரைக் குத்தி பின்னாடி தள்ளாதீங்க. என் பையன் கண்டிப்பா நல்லா வருவான். எனக்கு நம்பிக்கை இருக்கு. அவன் டென்த் ரேங்க் எடுத்ததுல எனக்கு எந்தக் கவலையும் இல்ல. ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கணும்னு அவனுக்குத் தோணுனா, அவன் படிச்சு வாங்கட்டும்!” என்றவள், “ஒரு டீச்சரா நீங்கதான் வெற்றி தோல்வியை ஒரே மாதிரி பார்க்க சொல்லித் தரணும். நீங்களே மட்டம் தட்டி‌ பேசலாமா?” அவள் அழுத்தமாய் அவரைப் பார்த்துக் கேட்க, அந்த ஆசிரியை சில நொடிகள் விழித்தார்.

“மேடம், எங்க ஸ்கூல் ரூல்ஸ் அதுதான் மேடம். நாங்க இங்க வேலைதான் பார்க்குறோம். எங்க ஹையர் அபிஷியல் சொல்றதைதானே எங்களால் கேட்க முடியும்!” அவர் சற்றே கடுப்புடன் பேசினார்.

“வெல், நான் ஹெட் மாஸ்டர் கிட்டே பேசிக்கிறேன்!” என அவள் எழ, “ஐயோ மேடம், அவங்ககிட்டலாம் பேச வேணாம். எனக்குத்தான் பிராப்ளம் ஆகிடும்!” என அவர் பதறினார்.

ஆதிரை பெருமூச்சோடு அவரைப் பார்த்தவள், “என் பையனோட வாழ்க்கைல ஒரு டீச்சரா உங்களோட அக்கறை எனக்குப் புரியுது மிஸ். பட் ஒரு கடத்துக்கு மேல போனா படிப்பே பிரஷரா மாறிடும். நீங்க அவனுக்குப் பாடத்தோட சேர்த்து டிசிப்ளின், மாரல் வேல்யூஸ் எல்லாம் சொல்லிக் கொடுங்க. புத்தகம் மட்டும்தான் வாழ்க்கையை உயர்த்தும், நல்லா படிக்கிற புள்ளைங்கதான் முன்னுக்கு வருவாங்கன்னு மார்க் கம்மியா எடுத்த புள்ளைங்களோட மனசுல பதிய வைக்காதீங்க. அது அவங்களை மனசளவுல பலவீனப்படுத்தும். எல்லாரும் ஏதோ ஒரு வகையில திறமையானவங்கதான். என் மகனுக்கு ஸ்விம்மிங்ல ரொம்ப இன்ட்ரெஸ்ட். மூனு மெடல் வாங்கி இருக்கான். எதுக்காக இதை சொல்றேன்னா, அவன்கிட்ட எந்த திறமையும் இல்லைன்னு நீங்க சொல்லக் கூடாது. தட்டிக் குடுக்க வேண்டிய நீங்களே தட்டி விடாதீங்க. அவன் ப்யூச்சர் மேல உங்களைவிட எனக்கு அக்கறை இருக்கு. எல்லாத்தையும் விட அவனோட மெண்டல் ஃபீஸ் ரொம்ப முக்கியம். உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்!” என அவள் நிதானமாக கேட்க, தெளியாத முகத்துடன் தலையை அசைத்தார் அவர்‌.

“ஒரு டீச்சரா பார்க்காம ஒரு குழந்தையோட அம்மாவா நான் சொன்னதை யோசிச்சு பாருங்க மிஸ். என்னோட ஆதங்கம் உங்களுக்குப்‌ புரியும்!” என்றவள் அவனுடைய மதிப்பெண் அட்டையில் கையெழுத்திட்டு விடை பெற்றாள்.

இருவரும் வகுப்பறையை விட்டு வராண்டாவிற்கு வந்ததும், “ம்மா... தேங்க்யூ மா. அபி ரொம்ப ஹெப்பி!” என தாயை வயிற்றோடு கட்டிக் கொண்டான் சின்னவன். இவளது முகத்தில் புன்னகை அரும்பியது.

“அபி ஹேப்பின்னா அம்மாவும் ஹேப்பி!” என்றாள் மலர்ந்து.

“இனிமே டீச்சர் என்னை ஸ்லோ லெனர்னு சொல்ல மாட்டாங்கதானே மா?” எனத் தலையை நிமிர்த்தி கேட்டான்.

அவன் முன் முடியைக் கோதியவள், “நிச்சயமாக சொல்ல மாட்டாங்க. அப்படி சொன்னா ஹெச்.எம் கிட்டே சொல்லி அவங்களுக்கு பனிஷ்மெண்ட் வாங்கிக் கொடுத்துடலாம்!” என அவள் குறும்பாய் ஒற்றைக் கண்ணை சிமிட்ட, இவன் பற்கள் தெரிய புன்னகைத்து தலையை அசைத்தான். இருவரும் அப்படியே மெதுவாக நடந்தனர்.

“ஏம்மா, மிஸ்க்கு என்ன பனிஷ்மெண்ட் தருவாங்க மா. நீல் டவுன் போட சொல்லுவாங்களா? கிளாஸ்க்கு வெளிய நிக்க சொல்வாங்களா மா?” என ஆர்வத்துடன் கேட்டவனை மென்மையாய் முறைத்தாள் தாய்.

“ம்மா... சொல்லும்மா!” என அவன் அடம்பிடிக்க, “வேலை இல்லைன்னு வீட்டுக்கு அனுப்பிடுவாங்க டா!” என்றாள் வாகனத்தை உயிர்ப்பித்து.

“ஓ... அப்போ நீல்டவுன் போட சொல்ல மாட்டாங்களா?” சோகமாய் அவன் கேட்க, இவள் பக்கென்று சிரித்திருந்தாள்.

“ஏன் டா?” எனக் கேட்டவளின் உதட்டில் சிரிப்பு மிச்சமிருந்தது.

“ப்ம்ச்... பின்ன என்னம்மா, எப்போ பார்த்தாலும் சைலன்ஸ், சைலன்ஸ்னு மிஸ் சொல்றாங்க. நிக்கிக்கிட்டே எரேசர் வாங்குனேன். அதுக்குப் போய் என்னை நீல்டவுன் போட வச்சுட்டாங்க. அவங்களுக்கு மட்டும் டிப்ரெண்ட் பனிஷ்மெண்டா மா?” என அவன் சிணுங்க, இவள் கண்ணாடியூடு அவனது பாவனைகளைக் கண்டு முறுவலித்தாள். இருவரும் பேசி சிரித்துக் கொண்டே ஒரு நல்ல உணவகத்தைத் தேடிப் பிடித்து மதிய உணவை முடித்துக்கொண்டு வீடு நோக்கிச்‌ சென்றனர்.

பகல் நேரம் என்பதால் சாலை ஓரளவிற்கு வெறிச்சோடி கிடந்தது. அதனாலே ஆதிரை சற்றே வேகத்தைக் கூட்டி அந்த பிரதான சாலையைக் கடந்தாள். வலதுபுறம் வந்த திருப்பத்தில் அவள் வாகனத்தை ஒடித்து திருப்பவும் எதிரே வேகமாய் ஒரு மகிழுந்து வந்தது. இருவரும் நெருங்கி விட்டபடியால் நொடியில் இடித்திருந்தனர்.

ஆதிரை எத்தனை முயன்றும் வாகனத்தை பிடிக்க முடியாது நிலை தடுமாறி கீழே விழுந்துவிட, அபியும், “அம்மா...” என்ற அலறலுடன் விழுந்திருந்தான்.

மகனின் அலறல் கேட்டதும் படக்கென வண்டியை நகர்த்தி ஆதிரை அவனைத் தூக்கி நிற்க வைத்திருக்க, அதற்குள்ளே மகிழுந்தை ஓட்டிய வயதானவரும் அவரது மனைவியும் இறங்கி வந்திருந்தனர். மதிய நேரம் என்பதால் ஒன்றிரண்டு பேர் மட்டுமே ஆங்காங்கு இருந்தனர்.

“ம்மா... என்னாச்சு மா? அடி எதுவும் படலையே?” என அப்பெரியவர் பதற, அபி தாயை இறுக கட்டிப்பிடித்திருந்தான்‌. அவனது கைக்காலைத் தடவி அவனுக்கு அடியேதும் படவில்லை என்றுணர்ந்தவள், அந்தப் பெரியவரை நிமிர்ந்து பார்த்தாள்.

“சாரி மா... நானும் உன்னைக் கவனிக்கலை. நீயூம் ஹார்ன் அடிக்காம வந்துட்ட. தெரியாம நடந்து போச்சு!” என்றவர் தூக்க முடியாது அவளது இருசக்கர வாகனத்தை தூக்கி நிறுத்தினார்.

ஆதிரைக்கும் தவறு இருபக்கமும் என்பது புரிய, “பரவாயில்லை சார்!” என வாகனத்தை சரியாய் நிறுத்தினாள்.

“இந்த தண்ணியை குடிங்கம்மா...” அந்த முதிய பெண்மணி தரவும் ஆதிரை நீரைப் பருகித் தன்னை சமன் செய்ய, அவளுக்கு ஒன்றும் இல்லை என்றுணர்ந்த சுற்றியிருந்த ஒரு சிலர் அகன்றனர். ஆனாலும் பக்கவாட்டில் ஒருவனின் நிழல் தெரிந்தது.

அந்த முதியவர்கள் இவள் முகத்தையே பார்ப்பது தெரிய, “எனக்கு ஒன்னும் இல்ல சார். நீங்க கிளம்புங்க!” என்றாள்.

“போய்டுவீயா மா? நான் ட்ராப்‌ பண்ணவா மா? வேற எதுவும் ஹெல்ப் வேணுமா?” என அவர்கள் கேட்கவும் மறுத்தவள் சின்ன புன்னகையுடன் அவர்களை அனுப்பி வைத்தாள்.

ஆதிரை வாகனத்தை உயிர்பித்து மகனைத் திரும்பி பார்க்க, அவன் ஏறி அமர்ந்தான். இருமுறை முயன்றும் இரண்டு அடிகள் சென்று வாகனம் நின்றுவிட, நெற்றி சுருங்கியது. எரிபொருள் நேற்றுதான் நிரப்பினாள். கீழே விழுந்ததில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் எனப் புரிய, இங்கு எங்கே வாகனப் பழுது பார்க்கும் இடம் இருக்கிறது எனத் தெரியவில்லை.

கீழே இறங்கியவள் வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு அலைபேசியில் ஓலா செயலியில் தானியை பதிவு செய்ய முயல, ஏனோ அந்த இடத்தில் இணையத் தொடர்பு வெகுவாய் குறைந்திருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டம் இல்லை. யாரிடம் உதவி கேட்பது எனத் தெரியாது தவித்தவளுக்கு அந்த இடம் மெதுவாய் பயத்தை உண்டு பண்ணியது.

“ம்மா... ப்ளட் வருது!” அதிரையின் முழங்கையைப் பற்றி அபி கூறவும் கரத்தைத் தூக்கிப் பார்த்தாள். கீழே விழுந்ததில் நன்றாய் சிராய்ப்பு ஏற்ப்பட்டிருக்க, ரத்தம் கசிந்தது.

இவர்களுக்கு பின்னே யாரோ ஒருவர் நீண்ட நேரம் நிற்பது போலத் தோன்றவும் திரும்பிப் பார்த்தாள். தேவநந்தன் தான் நின்றிருந்தான். அவனை எதிர்பாராது திகைத்தவள் என்ன எதிர்வினையாற்றுவது எனத் தெரியாது தயங்கி பின்னர் வலுக்கட்டாயமாக புன்னகைக்க முயல, அவன் உதட்டில் மருந்துக்கும் புன்னகை இல்லை. அதில் அவமானமாய் போய்விட, முகத்தைத் திருப்பினாள்.

இவ்வளவு நேரம் தனக்குப் பின்னே தானே நின்று கொண்டிருக்கிறான். ஏன் உதவி செய்ய முன்வந்தால் தலையிலிருக்கும் கிரீடம் இறங்கி விடுமோ என மனம் வெப்பத்தில் புழுங்கியது.

தேவநந்தன் மகிழுந்தை உயிர்ப்பித்து அவளுக்கு அருகே சென்றவன், “மிஸ்...” எனக் கூற வந்தவன் அதை நிறுத்திவிட்டு, “ஆதிரையாழ், டூ யூ வாண்ட் எனி ஹெல்ப்?” எனக் கேட்டான்.

“நோ தேங்க்ஸ் மிஸ்டர் தேவா!” என்றாள் இவளும் வெடுக்கென. ஆதிரை எப்போதும் நிதானமாக இருந்தாலும் நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்திருக்கலாம். ஆனால் இத்தனை நேரம் வேடிக்கைப் பார்த்துவிட்டு வாய் வார்த்தைக்காக கேட்பவனிடம் உதவி பெறுவதில் அவளுக்கு சுத்தமாய் உடன்பாடில்லை.
அதனாலே வெடுக்கென முகத்தைத் திருப்பினாள்.

“ஃபைன்...” என்றவன் தோள் குலுக்கலோடு சர்ரென்று வண்டியை நகர்த்திச் சென்றுவிட, ஆதிரை மீண்டும் அலைபேசியில் வாகனத்தை பதிவு செய்ய முயன்று தோற்றாள். சாலையில் ஏதேனும் தானி வருகிறதா எனப் பார்க்க, மதிய உணவு நேரம் என்பதால் யாருமற்று வெறிச்சோடி கிடந்தது சாலை‌.

இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் அருகே வந்து என்னவெனக் கேட்க, இவள் எதுவும் பேசவில்லை. அடுத்து இரண்டு வாகனங்கள் இவளைப் பார்த்துவிட்டு கடக்க, கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தவள், “ஆட்டோ கிடைக்கலை. மெயின் ரோட்டுக்கு நடந்துடுவோமா அபி?” என மகனைப் பார்த்தாள்.

அவள் கையைப் பிடித்திருந்த கரம் பிசுபிசுத்துப் போயிருக்க, வெயிலின் உஷ்ணத்தில் அவனுக்கு வியர்த்து வடிந்தது.
“என்ன அபி, ரொம்ப வேர்த்துடுச்சா?” என தன் துப்பட்டாவால் அவனது முகத்தை துடைக்க, “ஹே ப்யூட்டி புல் கேர்ள். எதாவது ஹெல்ப் வேணுமா?” ஆண் குரல் ஒன்று வெகு அருகில் கேட்கவும் இவள் பதற்றத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.

பான்பராக் கறை படிந்த பற்களுடன் வண்ணம் தீட்டப்பட்ட முடியை சீரற்று வெட்டிவிட்டிருந்த இருவரும் சர்வ நிச்சயமாக ஈராயிரக் குழவிகள்தான். அவர்கள் பார்வையிலும் பேச்சிலும் ஆதிரை முகத்தில் முறைப்பு கூடியது‌. உதவிக்கு யாரையும் அழைக்கலாம் என்றால் ஒருவரும் இல்லாது போக, தொண்டைக் குழி வரை பயம் கவ்வியது.

“என்னம்மா... உன் தம்பியா? அவனை முன்னுக்க வச்சுப்போம். ட்ரிபிள்ஸ் போகலாமா?” என அபினவை அவர்கள் தொட வந்ததும், இவள் படக்கென்று மகனை தன்னருகே இழுத்துக் கொண்டாள்.‌

“ஹே கேர்ள்... ஹெல்ப் வேணாமா?” என அவன் பல்லிளித்தவாறே வரவும், புகையைக் கிளப்பிக்கொண்டு அவர்கள் முன்னே மகிழுந்து ஒன்று நிற்க, ஆதிரை நெஞ்சு முழுவதும் விரவிய பயத்துடன் யாரெனப் பார்க்க, தேவநந்தன் அவளை அழுத்தமாக பார்த்திருந்தான். சட்டென முகத்திலிருந்த பயம் அகன்று தானாய் நிம்மதி படர்ந்தது.

அந்த இரண்டு வாலிபர்களும் இவனைப் பார்த்துவிட்டு அப்படியே நிற்க, “ஆதிரை, கெட் இன்!” என்றான் அழுத்தமாய். ஆதிரை எதையும் யோசிக்காது மகனுடன் முன்னே ஏறியமர, வாகனத்தை கிளப்பினான் தேவா.

சில பல நிமிடங்கள் கடக்க,
“அறிவில்லை உங்களுக்கு? இந்த டைம்ல இந்த ரோட்ல யாருமே வர மாட்டாங்க. எது எதுல ரோஷம் பார்க்கணும்னு இவ்லையா? தனியா பையனோட இங்க, அதுவும் கழுத்துல காதுல எல்லாம் கோல்ட் வேற. ரிஸ்க் என்னென்னு யோசிக்க மாட்டீங்களா?” திடும்மென அவன் குரலை உயர்த்தவும் நெஞ்சு பதறினாலும் அவனை திரும்பி அழுத்தமாய்ப் பார்த்தாள். அவனது பார்வை முழுதாய் இங்கில்லை. திரும்பி பார்த்து பேசிவிட்டு சாலையில் கவனமானான்.

“கண்ணை என்ன புடணில வச்சுருந்தீங்களா? ரோட் க்ராஸ் பண்ணும்போது,‌ டர்ன் பண்ணும்போது ஹார்ன் அடிக்கணும்னு தெரியாதா? எதிர்ல இருக்கவங்க கார்ல வந்தாங்க. அவங்களுக்கு பாதிப்பில்லை. உங்களுக்குத்தானே அறிவு இருக்கணும்!” அவளைக் கடித்து துப்பியவனின் கரங்கள் முகப்பிலிருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்து நீட்டினான்.

அவன் பேசிய வார்த்தைகளுக்கு ரோஷப்பட்டு ஏதோ பேச வந்தவள், “காயத்துக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணுங்க!” என அவன் கூறவும், தொண்டை வரை வந்த வார்த்தையை விழுங்கியிருந்தாள்.

“ம்மா...குடும்மா... நான் தடவுறேன்!” என அபி அவளிடமிருந்த பஞ்சை வாங்கி ரத்ததத்தை துடைத்து மருந்தை வைத்துவிட்டு, “ரொம்ப வலிக்குதாம்மா...” என காயத்தில் ஊதிவிட, தேவநந்தன் பார்வை ஒருமுறை அபினவைத் தொட்டு மீண்டது. தண்ணீரை அவர்கள் புறம் நகர்த்தி வைத்தான்.

வெயிலில் நின்றதால் தொண்டை வறண்டு போயிருக்க, மடமடவென தண்ணீரைக் குடித்து தன்னை நிதானப்படுத்தினாள் ஆதிரை. தேவாவும் அவளைத் திரும்பி திரும்பி பார்த்தான்.

“ஆர் யூ ஓகே மிஸ்...” என்றவன், “சாரி, மிஸஸ் ஆதிரையாழ்!” என்றான் மாற்றி. கனிவும் கரிசனமுமாய் கேட்க வேண்டிய வார்த்தைகள். கடுகளவும் உணர்வுகளற்றிருக்க, எப்போதும் முகத்தைக் கடுகடுவென இவனால்தான் வைத்திருக்க முடியும் என ஆதிரையால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

“மிஸ் ஆதிரையாழ்!” அவனைப் பார்த்து அவள் அழுத்தமாய்க் கூற, திரும்பி சில நொடிகள் அவள் முகத்தைப் பார்த்துவிட்டு சாலையில் விழிகளை மேயவிட்டான் தேவா.

சிறிது நேரம் கடக்க ஆதிரை, “தேங்க் யூ மிஸ்டர் தேவா!” எனவும் படக்கென அவளைப் பார்த்தவனின் முகத்தில் இப்போது முறைப்பிருந்தது. இத்தோடு இரண்டு முறை அவனது பேரை அழைத்துவிட்டாள்.

‘என்னமோ இவதான் என்னைப் பெத்து பேர் வச்ச மாதிரி பேரை ஏலம் விட்றா!’ மனதிற்குள் அவன் கடுகடுகவென்றிருப்பது முகத்திலே தெரிய, “நான் இப்போ உங்க எம்ப்ளாயூம் இல்ல, நீங்க என்னோட எம்ப்ளாயரும் இல்ல. சோ, பேர் சொல்லிக் கூப்பிட்றதுல தப்பில்லைல மிஸ்டர் தேவா?” என அவள் கேட்கவும் இவன் முகம் மாறியது.

“ஃபைன்... புது எம்ப்ளாயர் கிடைச்சுட்டாங்க போல ஆதிரையாழ்?” அவன் நக்கலாய்க் கேட்டதும் இவளுக்கு சுறுசுறுவென கோபம் வந்தது.

“யெஸ்... யெஸ், ரெண்டு இடத்துல இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி ரெண்டு கால் லெட்டர் வந்திருக்கு மிஸ்டர் தேவா. நான்தான் ரெண்டுல ஒன்னை சூஸ் பண்ணணும். இந்த முதலாளிங்க ரெண்டு பேரும் என்னை ஆட்ல எல்லாம் நடிக்க கூப்பிட மாட்டாங்க!” என அவனைக் குத்திக் காட்டுமாறு பேசியவளை அழுத்தமாகப் பார்த்தவன் புக்கத்துறை கூட்டு சாலைக்கு வந்திருந்தான். இந்தப் பகுதியில்தான் அவளது வீடு என்று தெரிந்தாலும் எந்த இடம் என தெளிவாய் தெரியாது.

“ரைட் சைட் அங்கிள்!” அபினவ் குறுக்கே நுழையவும் இருவரது பேச்சும் தடைபட்டிருந்தது.

“என்னோட ப்ளேஸ்க்கு ரெண்டு பேரை ரெக்யூர்ட் பண்ணிட்டீங்கன்னு தர்ஷினி சொன்னா மிஸ்டர் தேவா? எப்படி அவங்க ரெண்டு பேரும் வொர்க் பண்றாங்க?” அவள் குரலில் கேலி இருந்ததோ என அவன் திரும்பி பார்க்க, முகம் சாதரணமாக இருந்தது.

பெருமூச்சை இழுத்துவிட்டவன், “ஐ ரெக்ரெட் இட் ஆதிரையாழ்!” என்றான்.

இவள் புரியாது அவன் முகம் நோக்க, தொண்டையை செருமியவன், “நோ ஒன் இஸ் சின்சியர் தென் மிஸ் ஆதிரையாழ். ரெண்டு பேரை வேலைக்கு வச்சும் என்னோட ப்ரசன்ஸ் அங்க தேவைப்படுது. ஐ டிட் மிஸ்டேக்!” தன்னகங்காரத்திற்கும் தன்முனைப்பிற்கும் இடையே சிக்கித் தவித்து தொண்டைக் குழி வரை போராட்டம் நடத்திய வார்த்தகளை ஒரு வழியாய் அவன் கூறிவிட, ஆதிரை முகத்தில் போலி ஆச்சரியம்.

“அடடா... தர்ஷினி சொன்னது உண்மைதான் போல மிஸ்டர் தேவா. என்னதான் சம்பளம் கொடுத்தாலும் எல்லாரும் ஆதிரையாக முடியாதுன்னு அவ சொன்னா. பாருங்க, அந்த சின்சியர் சிகாமணியைத்தான் நீங்க வேணாம்னு சொன்னது!” என வஞ்சப் புகழ்ச்சியுடன் உரைத்தவளை சில நொடிகள் வெறித்தான்.

ஏனோ ஆதிரைக்கு இப்போதுதான் மனம் சமன்பட்டது. ஐந்து வருடங்களாக நாள் தவறாமல் இவனுடைய பண்ணைக்கு உழைத்துக் களைத்தவளை ஒரு நொடியில் எந்தவித முகாந்திரம் இன்றி அற்ப காரணங்களுக்காக வேலையைவிட்டு நிறுத்தியதை அவளால் கிஞ்சிற்றும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.‌ மனதில் வைத்துப் புழுங்கியவளுக்கு இப்போதுதான் வெம்மை தணிந்திருந்தது. அவர்கள் வீட்டிற்கு முன்னே தேவா வாகனத்தை நிறுத்தவும் இருவரும் இறங்கினர்.

“தேங்க் யூ சோ மச் ஃபார் யூவர் டைம்லி ஹெல்ப்!” அவன் முகம் பார்த்து இத்தனை நேர சண்டைகளை தகர்த்திவிட்டு முறுவலிக்க முயன்றாள் பெண்.

“வாட் அபவுட்‌ ரீஜாய்னிங் இன் அவர் கம்பெனி?” அவன் திடும்மென கேட்டதும் ஆதிரை முகம் மாறாதிருக்க பிரயத்தனப்பட்டாள்.

“சாரி சார், ஐ காண்ட். இது திமிரா இல்ல ஆட்டிட்யூடா கூடத் தெரியலாம். பட் இது என்னோட செல்ஃப் ரெஸ்பெக்ட். நீங்க என்னோட வொர்க்ல மிஸ்டேக் இருந்துச்சுன்னு சொல்லி பயர் பண்ணி இருந்தா கூட நான் ரீஜாய்ன் பண்ணி இருப்பேன். பட் நீங்க ஆட்ல நடிக்கலைன்னு சில்லி ரீசனுக்காக என்னை ஃபயர் பண்ணி இருக்கீங்க. என்னால அதை அக்செப்ட் பண்ண முடியலை. இப்போ மறுபடியும் ஜாய்ன் பண்ண பிறகு, ஆட்ல நடி, சீரியல்ல கேரக்டர் ரோல் பண்ணுன்னு சொல்ல மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? அதானல என்னால வேலைக்கு வர முடியாது. என்னைவிட பெட்டா யாரையும்!” என அவள் கூறும் போதே, “எனாஃப் மிஸ் ஆதிரையாழ்!” எனக் கோபத்தில் சிவந்த முகத்தொடு புழுதி பறக்க வாகனத்தை வேகமாக எடுத்துச் சென்றவனைப் பார்த்தவள் தோளைக்
குலுக்கிக் கொண்டாள். அவன் முகத்தில் எப்போதும் போல எள்ளு போட்டால் கடுகும் சேர்த்து வெடித்துவிடும் என மனம் கேலி செய்ய, அதை தட்டி அடக்கினாள்.

தொடரும்...



 
Well-known member
Messages
385
Reaction score
270
Points
63
Abinav devanandhan ah appo ivanga rendu perum husband and wife ah aana nambhamudiyala yae ivanga rendu per ah yum nega lover nu sonna kooda namba rombhavae yosikanum pola athuvum deva mugatha partha than ennaku andha doubt rombavae varuthu aanalum avan mrs nu koopitathuku iva ms nu sonnathum pathathuku avan ah varthai ku varthai deva nu solli koopidrathu ah partha doubt padama lum iruka mudiyala aniya thuku confuse panraga pa ivanga
 
Well-known member
Messages
473
Reaction score
351
Points
63
தேவா தான் அபி அப்பாவா? ஆனா இவனுக்கு அவன் தன் பிள்ளை ன்னு தெரியாதா? ஒரு எக்ஸ்பிரஷனும் இல்ல
 
Top