• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,205
Reaction score
3,520
Points
113
நெஞ்சம் – 48 💖

மகனைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே அவனுக்கு அருகே சாய்ந்தவாறே கட்டிலில் அமர்ந்திருந்தாள் ஆதிரை‌. அவளது கையில் புத்தகம் ஒன்றிருந்தது. தேவா வரத் தாமதமாக, அதுவரை அலைபேசியில் உலாவ அவளுக்கு விருப்பமில்லை. கூடத்தில் சென்று தொலைக்காட்சியைப் பார்க்கவும் மனம் ஒன்றவில்லை.

சரியென்று அவனது அலமாரியிலிருந்து தமிழ் புத்தகம் ஒன்றை எடுத்துப் புரட்டத் தொடங்கினாள். மனம் அதில் லயிக்கவே இல்லை. வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் தேவாதான் நினைவிற்கு வந்தான்.

வேண்டாமென தட்டிவிட முயன்றாலும் அவன் வாழ்த்தாதது பெரிய குறையாய் மனதில் தங்கிப் போனது. பெரிதாய் நகை, புடவை என எதையும் அவள் எதிர்பார்த்தது இல்லை. ஒரே ஒரு வாழ்த்தை மட்டும்தான் பெரிதாய் நினைத்தாள். அதுவே கிடைக்காத போது கோபமா? ஆற்றாமையா எனத் தெரியாது மனம் வலித்து தொலைத்தது.

உண்மையில் ஆதிரை எதையும் பெரிதாய் நினைக்க மாட்டாள். எதற்காகவும் அலட்டிக் கொள்ளவும் மாட்டாள். இத்தனை நாட்கள் தான், தனக்கு என்றிருந்த வாழ்க்கையில் உன்னை நேசிக்கிறேன் என்று பின்னோடு சுற்றி திருமணத்தை முடித்தவன் உடனிருக்கையில் அவளையும் அறியாது சின்ன எதிர்பார்ப்பு முளைத்திருக்க, அதை முளையிலே கிள்ளி எறிவதுதான் அமைதியான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என மூளை அறிவுறுத்தியது.

அவன் வந்ததும் ஏன் வாழ்த்தவில்லை எனக் கேட்டு சண்டை பிடிக்கும் ரகமில்லை அவள். மறந்துவிட்டாயா? நல்லது என்று ஒதுங்கி கொள்வாள். யாரிடமும் எதையும் கேட்டு வாங்கிப் பழக்கப்பட்டிராத மனது இதை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கச் செய்து, மனதை மாற்றியது.

இதுவரை ஏன் பிறந்த நாளை மறந்தாய் எனக் கேட்டு சண்டையிடும் அளவிற்கு கூட ஆதிரையுடன் யாரும் இருந்ததாய் நினைவில் இல்லை. அப்படி இருக்கையில் இந்த நிகழ்வு தன்னைப் பாதிக்காது என சஞ்சலப்பட்ட மனதை தேற்றி அந்தப் புத்தகத்தில் நுழைய முயன்ற போது தேவா கதவை திறந்து உள்ளே வந்தான்.

அவன் அரவத்தில் ஆதிரை நிமிர, உழைத்துக் களைத்துப் போயிருந்தது அவனது முகம். இவளைப் பார்த்ததும் மெல்லிய தலையசைப்பைக் கொடுத்தவன் அலமாரியில் மாற்றுடையைத் தேடிக் கொண்டே, “டைம் பதினொன்னு ஆச்சு ஆதி. டைபிகல் வொய்ஃபா நீ நான் வர்ற வரைக்கும் முழிச்சிருக்கணும்னு அவசியம் இல்ல. உனக்குத் தூக்கம் வந்தா சாப்ட்டு தூங்கு. சம் டைம்ஸ் எனக்கு வொர்க் அதிகமா இருக்கும். நான் மார்னிங் லேட்டா எழுவேன். பட் உனக்கு வொர்க் இருக்கு. கரெக்ட் டைம்க்கு வேலைக்குப் போகணும். சோ, டோன்ட் வெய்ட் ஃபார் மீ!” என்றான்‌. அவளிடமிருந்து பதில் வராது போக, துண்டை எடுத்து தோளில் போட்டவாறே அவளைத் திரும்பி பார்த்தான்.

அமைதியாய் இருந்தவள், “நாளைல இருந்து நான் வெய்ட் பண்ணலைங்க. நீங்க குளிச்சிட்டு வாங்க, நான் தோசை சுட்டு வைக்கிறேன்!” என சின்ன புன்னகையுடன் அவள் அகல, இவன் குளித்து வந்தான்.

அதற்குள்ளே ஆதிரை நான்கு தோசைகளை சுட்டு அடுக்கிவிட்டாள். மேலும் ஒரு தோசைக் கேட்டு வாங்கி வயிறு நிறைய உண்டவன், “தேங்க் யூ!” என்றவாறே அறைக்குள் நுழைந்தான். இவள் மாவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு அவன் சாப்பிட்ட தட்டோடு மற்ற பாத்திரங்களையும் கழுவிவிட்டே வந்து படுத்தாள்.

தேவா இரண்டு கால்களையும் அகட்டிப் படுத்தவாறே நன்று ஆழ்ந்து உறக்கிக் கொண்டிருந்தான். லேசாய் உதடுகள் பிளந்து மெல்லிய குறட்டை சப்தம் கேட்டது. இவள் அறையைப் பூட்டி விளக்கணைத்துவிட்டு அவனைத் தள்ளிப் படுக்க வைக்க முயன்றாள். முடியாது போனது. அடித்துப் போட்டாற் போல நன்றாகத் தூங்கினான்.

அபியும் அவனுமே கட்டிலை மொத்தமாய் ஆக்கிரமித்திருந்தனர். தேவாவின் கட்டில் இரண்டு பேர் வசதியாய் படுக்க கூடிய அளவில் இருந்தது. மூன்று பேர் என்கையில் ஓரளவிற்கு அனுசரித்து இடித்துக்கொண்டு தான் படுப்பார்கள். ஆனால் இன்றைக்கு அவளுக்கு கொஞ்சம் கூட இருவரும் இடம் விட்டிருக்கவில்லை.

இவள் அங்கிருந்து எடுத்து வந்த போர்வையை எடுத்து தரையில் விரித்து ஒரு தலையணையை எடுத்துப் போட்டு படுத்துக் கொண்டாள். இவளது பார்வை முழுவதும் தேவாவின் முகத்தில்தான் இருந்தது. அவனுக்கு தூக்கத்தில் கூட இவளது தொடர் பார்வை அசௌகரியத்தை கொடுத்திருக்க கூடும். முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான். ஆதிரை நேராய் படுத்து சுழலும் மின்விசிறியையே நீண்ட நேரம் பார்த்திருக்க, மெல்ல கண்கள் சொருகி தூக்கம் சுழற்றியது.

காலை ஏழு மணியாகிவிட, ஆதிரைக்கு விழிப்பு வரவில்லை. அபி எழுந்து கண்ணைக் கசக்கியவாறே தாயைத் தேட, அவள் தரையில் படுத்திருக்கவும் கட்டிலிலிருந்து இறங்கி அவளருகே படுத்து இறுக்கி அணைத்தான்.

அவனது தொடுதலில் ஆதிரைக்கு உறக்கம் கலைய, “என் தங்கம் எழுந்துட்டீங்களா?” என மலர்ந்த முகத்துடன் அவன் முடியைக் கோதினாள்.

“இப்போதான்மா எழுந்தேன். ஏன் கீழே படுத்திருக்கீங்க? ஐ மிஸ் யூ லாஸ்ட் நைட்!” என்றான் அவளை உரசியபடியே.

இவளுக்கு மெலிதாய் சிரிப்பு வர, கூடவே மனதோரம் சின்னதாய் இதம் பரவிற்று. அவளைத் தேடுவதற்கு அபி இருக்கிறான் என உள்ளம் உருக, “என் தங்கம், ஒருநாள் தானே டா நான் உன் கூடப் படுக்கலை. அதுக்குள்ளேயும் உனக்கு மிஸ் பண்ற அளவுக்குப் போய்டுச்சா?” என்றவாறே அவன் நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட்டாள்.

“சரி, எழுந்து பிரஷ் பண்ணு அபி கண்ணா, அம்மா பூஸ்ட் கலக்கித் தரேன்!” என்றாள்.

“ப்ம்ச்... ம்மா நேத்து ஜானு சித்தி ஒரு பூஸ்ட் குடுத்தாங்கம்மா. அது நீ குடுக்கற பூஸ்டை விட டேஸ்டா இருந்துச்சும்மா. எனக்கு அது வேணும்!” இவன் சிணுங்கலாய்க் கூறி தாயின் கழுத்தைக் கட்டிக் கொள்ள, ஆதிரைப் புன்னகைத்தாள்.

“அப்படியா? சரி, இன்னைக்கு அபி சமத்துப் பையனா எழுந்து அம்மா குடுக்குற பூஸ்டை குடிப்பியாம். அம்மா ஜானு சித்திக்கிட்டே கேட்டு அது என்ன பூஸ்ட்னு வாங்கித் தரேன்!” வாஞ்சையாய் அவன் முகத்தை தடவினாள்.

“சூப்பர்ம்மா... தேங்க் யூ ம்மா!” அவள் கன்னத்தை எச்சில் செய்தவன் குதூகலத்துடன் எழுந்து சென்றான். இருவரும் தேவாவின் தூக்கம் கலையக் கூடாது என மெல்லிய குரலில் கிசுகிசுத்தனர். ஆதிரை எழுந்து தான் படுத்த போர்வையை கட்டிலில் போட்டுவிட்டு முகம் கழுவி பல் துலக்கி சமையலறைக்குள் சென்றாள்.

ஹரி அங்கே தேநீர் தயாரிக்கத் திணறிக் கொண்டிருந்தான். “என்ன பண்றீங்க ஹரி?” எனக் கேட்டவாறே இவள் அடுப்பை சரியாய் பற்ற வைத்தாள்.

“இல்ல, டீ போடலாம்னு வந்தேன் அண்ணி. டீ தூள் எங்கேன்னு தெரியலே!” என்றான் அசட்டுச் சிரிப்புடன். பொன்வாணி மகன்களை அடுப்படிக்குள் விட மாட்டாறே என யோசித்தவள் தேநீர் தூளை எடுத்து அருகே வைத்தாள்.

“அம்மாவும் அப்பாவும் ரிலேட்டீவ் மேரேஜ்னு சீக்கிரமே கிளம்பி போய்ட்டாங்க அண்ணி!” அவள் பார்வையின் பொருளுரணர்ந்து ஹரி பதிலளித்தான்.

“நீங்க போங்க ஹரி, நான் டீ போட்டு எடுத்துட்டு வரேன்!” அவள் கூற, இவன் தயங்கினான்.

“போங்க ஹரி!” அவள் மீண்டும் அழுத்திக் கூற, அவன் அகன்றான். மற்றொரு அடுப்பில் பாலைக் காய்ச்சினாள். தேநீரை வடிகட்டி அவனுக்கும் தனக்கும் எடுத்துக் கொண்டவள் அபிக்கு சத்து மாவைக் காய்ச்சும் போதே ராகினியும் எழுந்து வர, அவளுக்கும் கொடுத்தாள்.

ராகினி அதைக் குடிக்க மாட்டேன் என முகத்தைச் சுளிக்க, இவள்தான் அதட்டி உருட்டி குடிக்க வைத்தாள். பொன்வாணி மதியத்திற்கு சமைத்து வைத்துவிட்டே சென்றிருக்க, காலை என்ன செய்யலாம் என யோசித்தாள்.

சப்பாத்தி சுட்டு பன்னீர் குருமா வைக்கலாம் என யோசனை வந்தது. சென்ற வாரம் வாங்கி வந்த பன்னீர் தொடப்படாமல் அப்படி இருந்தது. ஆனால் ஏழு பேருக்கு சப்பாத்தியை சுட்டு முடித்து குருமா செய்ய முடியுமா என சந்தேகம் எழுந்தது. நேரத் தாமதமானால் அதற்கும் தேவா எதாவது சொல்வானே என தோன்றினாலும், விரைவில் செய்து முடிக்கலாம் என மாவைப் பிசைந்தாள்.

அபியையும் ராகினியையும் குளிக்க அனுப்பிவிட்டு இவள் சாப்பாத்தியை சுட, ஜனனி அப்போதுதான் எழுந்து வந்தாள். நன்றாய் உறங்கியதில் அவளது கன்னம் உப்பி போயிருந்தது.

இவளைப் பார்த்ததும், “குட் மார்னிங் ஆதிக்கா. சாரி, இன்னைக்கு நான் லேட்!” என்றாள். ஆதிரை புன்னகைத்தாள்.

“என்ன குக்கிங்? சப்பாத்தியா? தொட்டுக்க என்ன பண்ணப் போறீங்க?” எனக் கேட்டவள் அருகே இருந்த பன்னீரைப் பார்த்துவிட்டு, “நான் கடாய் பன்னீர் செய்றேன்!” என்றாள் அதை எடுத்து நறுக்கியபடியே.

“டீயைக் குடிச்சிட்டு செய்ங்க ஜானு... அப்படியே உங்க மாமாவுக்கும் டீயைக் குடுத்துடுங்க!” இரண்டு குவளைகளில் தேநீரை நிரப்பினாள். இவள் முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கி திரும்பும் போதுதான் தேவா நீள்விருக்கையில் வந்து அமர்ந்தான். ஜானு கொடுத்த தேநீரைப் பருகிறவாறே ஹரியுடன் பேசினான்.

ஜனனி பன்னீரை சமைக்க, ஆதிரை சப்பாத்தியை சுட்டு முடித்ததும், “டைமாச்சு ஜானு, நான் போய் ரெடியாகுறேன்!” என் அவளிடம் கூறிவிட்டு கூடத்திலிருந்த தேவாவை ஒரு நொடி பார்த்தவள், அறைக்குள் நுழைந்தாள். அபி குளித்து உடை மாற்றினான். இவளைக் கண்டதும் அவன் வெட்கப்பட்டு கால் சராயை அணிய, மெல்லிய சிரிப்பு உதட்டில் ஒட்டியது.

அவன் தலையை துவட்டியவள், “ஜானு சித்தி இருக்காங்க, ராகினியோட நீயும் சமத்தா சாப்பிடு அபி!” என அவனை அனுப்பியவள், கட்டிலில் கலைந்து கிடந்த போர்வையை மடிக்கத் தொடங்க, தேவா உள்ளே வந்தான்.

அவளைக் கண்டதும்தான் நேற்று அவளுடைய பிறந்தநாள் என்றே மனம் நினைவுபடுத்தியது. வாழ்த்து சொல்லலாமா? வேண்டாமா? என்ற யோசனை படர்ந்தது. தாமதமாய் கூறுவது அபத்தமாய் தோன்ற, ஆனாலும் அவளை அழைத்தான்.

“ஆதி!” அவன் குரலுக்கு, “என்னங்க, சொல்லுங்க!” என கேட்டவள் தலையணையை அதனதன் இடத்தில் வைத்தாள்.

“பிலேடட் ஹேப்பி பெர்த் டே ஆதிரை. நேத்து எனக்கு உன் பிறந்த நாள்னு தெரியாது, சாரி!”
ஏதோ கூற வேண்டும் என்ற கடமைக்காய் ஒரு வாழ்த்தைப் பகிர்ந்தான்.

ஆதிரை சில நொடிகள் அமைதியாய் இருந்தவள், அவன் முகம் பார்த்து முறுவலித்து, “தேங்க்ஸ்ங்க... இட்ஸ் ஓகே!” என்றாள் கண்களை எட்டா புன்னகையுடன்.

“உனக்கு கோபம் எதுவும் இல்லையே! சாரி, எனக்கு இந்த மாதிரி பெர்த் டே ஞாபகம் வச்சு விஷ் பண்றது, கிஃப்ட் பண்றது எல்லாம் வராத விஷயம். அண்ட் ஐ க்நோ யூ வெரி வெல். யூ ஆர் மெச்சூர்ட் கேர்ள். நீ என்ன கிட்-ஆ என்னோட விஷ்ஷை எக்ஸ்பெக்ட் பண்ண?” கேள்வியும் அவனே கேட்டு பதிலும் அவனே உரைத்தான். ஆதிரை சின்னதாய் புன்னகைத்தாள்.

“எனக்கே என் பெர்த் டே ஞாபகம் இல்லைங்க. நீங்க அதை ஞாபகம் வச்சுக்கணும்னு அவசியம் இல்ல. நான் எதுவும் எக்ஸ்பெக்ட் பண்ணலைங்க!” என்ற போது லேசாய் தொண்டையில் ஏதோ ஒன்று சிக்கிக் கொண்டது. அவன் முகம் பார்க்காது அலமாரியிலிருந்து ஒரு புடவையை உருவச் சென்றவள், அதைவிடுத்து கையில் கிடைத்த சுரிதார் ஒன்றை எடுத்தாள்.

“ஆர் யூ ஷ்யூர்?” அவன் அவள் முகத்தை தான் பார்த்தான். அதில் வருத்தம், எதிர்பார்ப்பு என எதையும் கண்டறியவில்லை. எப்போதும் போல அமைதியான பாவனை. அதனாலே தேவாவிற்கு அவளது மனம் புரியாது போனது. ஆதிரை முயன்று முகத்தில் எதையும் காண்பிக்காதிருக்க சிரமப்பட்டாள்.

“டூ ஹண்ட்ரட் பெர்சன்ட் ஷ்யூர்ங்க!” உதடுகள் வளைய அவனறியாது கேலியாய் புன்னகை பூத்தது. தேவா அவள் முகத்தைப் பார்த்தவன் அருகே வர, ஆதிரை என்னவெனப் பார்த்தாள்.

“சாப்பாத்தி மாவு ஒட்டி இருக்கு!” அவன் கையை உயர்த்தி அவளது கன்னத்தைத் தொட முயல, நாசூக்காய் நகர்ந்தவள், “ஆமாங்க... நைட்டியெல்லாம் கூட மாவு. ரொம்ப அழுக்கா இருக்கேன். நான் ஃபர்ஸ்ட் குளிச்சிட்டு வரேன். நீங்க அடுத்துக் குளிங்க!” என்றவாறே கழிவறைக்குள் புகுந்தாள்.

குளித்து முடித்ததும் ஏனோ தானவேன்று தலையைப் பின்னலிட்டவள் முகத்திற்கு அறைகுறையாய் முகப்பூச்சிட்டு தேவா குளித்து வரும் முன்னே கைப்பையுடன் வெளியே சென்றாள். ஜனனி அபியையும் ராகினியையும் பள்ளிக்கு கிளப்பி தயாராக வைத்திருக்க, அவரவர் உரிய வாகனம் வந்ததும் இருவரும் விடை பெற்றனர். ஆதிரை பெயருக்கு இரண்டு சப்பாத்திகளை உண்டு எழுந்தவள், “ஜானு, உங்க மாமா வந்ததும் நீங்க அவரைப் பார்த்துக்குறீங்களா? எனக்கு டைமாகிடுச்சு?” எனக் கேட்டவள் வானகச் சாவியைக் கையில் எடுத்தாள்.

“ஹக்கும்... உங்களுக்கு புருஷனாக முன்னாடியே அவர் என்னோட மாமாக்கா. நான் பார்த்துக்க மாட்டேனா?” அவள் கேலியாய்க் கேட்க, ஆதிரை சின்ன சிரிப்புடன் அகன்றாள். தேவா உண்ண வந்தவன் மனைவியைத் தேடினான்.

அவன் பார்வையை உணர்ந்த ஜனனி, “அக்கா டைமாச்சுன்னு கிளம்பிட்டாங்க மாமா!” என்றவாறே அவனுக்கு உணவு பரிமாறினாள்.

பிரதன்யா அப்போதுதான் கொட்டாவி விட்டவாறே வெளியே வந்தாள். “அண்ணி, காஃபி!” அவள் கேட்க, தேவா நிமிர்ந்தான்.

“இன்னைக்கு காலேஜ் இல்லையா பிரது உனக்கு? வீக் டேய்ஸ்ல என்ன லீவ்?” என யோசனையுடன் கேட்டான்.

“அண்ணா, நெக்ஸ்ட் வீக் செமஸ்டர். சோ, ஸ்டடி ஹாலிடேய்ஸ் விட்டிருக்காங்கண்ணா!” அவள் பதிலளிக்க, “ஸ்டடி ஹாலிடேய்ஸ் எக்ஸாம்க்குப் படிக்கத் தானே? இப்போ டைம் என்ன? ஏன் லேட்டா எழுந்து வர்ற? இயர்லி மார்னிங் படிக்க வேண்டியது தானே?” அவன் கண்டிப்புடன் கேட்க,

‘ப்மச்...தூக்கம் கலைஞ்சது கலைஞ்ச, ஒரு பத்து நிமிஷம் இவன் போன பின்னாடி முழிப்பு வந்திருக்க கூடாதா?’ என நொந்தவள், “நாளைல இருந்து மார்னிங் எழுந்து படிக்க ட்ரை பண்றேன் ப்ரோ!” என்றவாறே அகன்றுவிட்டாள்.

***

“என்னக்கா? புது சுடிதாரா? கலர் காம்பினேஷன் செம்ம?” தர்ஷினி ஆதிரை ஆய்வகத்திற்குள்
நுழைந்ததுமே கேட்க, அவள் குனிந்து என்ன உடுத்தியிருக்கிறோம் எனத் தன்னுடைய உடையைப் பார்த்தாள்.

காலையில் எதை உடுத்தினோம் என்ற நினைவே அவளிடம் இல்லை. மஞ்சளும் பச்சையும் கலந்த சுரிதார் அது. இரண்டு முறை வெளியே செல்லும்போது அணிந்து இருக்கிறாள். இங்கே வேலைக்கு வரும்போது ஒருமுறை கூட அணிந்து வராததால் தர்ஷினிக்கு இது புது உடையாகத் தோன்றி இருக்கலாம் என அவள் யோசிக்க, “அச்சோ...சாரிக்கா. சாரிகா, நேத்து உங்களுக்கு பெர்த்டே இல்லை. லாஸ்ட் இயரும் நான் மறந்துட்டேன். சோ, இந்த வருஷமாவது கரெக்டா விஷ் பண்ணணும்னு நினைச்சேன். பட், இப்பவும் மறந்துட்டேன்!” என்றாள் துள்ளல் குறைந்து கைகளைத் தலைக்கு மேலே தூக்கி.

“அட, விடு தர்ஷினி!” என்ற ஆதிரை மடிக்கணினியை உயிர்ப்பிக்க, “ஆ... க்கா, எனக்கு இப்போதான் தோணுது. இது உங்க ஆள் வாங்கிக் கொடுத்த ட்ரெஸ்ஸா? அப்படியே மின்னுதே!” என்றாள் ஆர்வமாய். ஆதிரையின் முகம் மெல்ல மாறினாலும் அதை மற்றவளுக்கு காண்பிக்காது புன்னகைத்தாள்.

“ப்ம்ச்... சிரிச்சு மழுப்பக் கூடாது! உண்மையை சொல்லுங்க. என்ன கிஃப்ட் வாங்கி குடுத்தாரு? டின்னருக்கு எங்க போனீங்க? நம்ப சாரோட டேஸ்ட் எப்படி? ஹவ் ரொமான்டிக் ஹீ இஸ்?” தர்ஷினி கேள்விகளால் துளைக்க, ஆதிரைக்கு மறந்து போன நிகழ்வை மீண்டும் கிளற வேண்டுமா என தோன்றிற்று. தேவாவின் மீதிருக்கும் ஆற்றாமையை இவர்களிடம் கோபமாய்க் காண்பித்து விடக் கூடாதே என மனம் பதறியது. அவள் கேள்விக்குப் பதிலளிக்காது மழுப்பினாள்.

சுபாஷ் இடையில் வந்து இவளைக் காப்பாற்ற, தர்ஷினி தற்காலிகமாக அந்தப் பேச்சை விட்டிருந்தாள். ஆதிரைக்கு ஆசுவாசம் பிறந்தது. கோமதி வரவும் மீண்டும் பிறந்தநாள் வாழ்த்து தொடங்க, நாசூக்காய் அவர்களது கேள்விளைத் தவிர்த்துவிட்டாள்.

தேவா காலையில் வரவில்லை. ஹரியுடன் அந்தக் கிளைக்குச் சென்று மதியத்திற்கு மேல்தான் வந்தான். ஆதிரை அவனில்லாத நேரத்தில் வேலையை சரியாய் முடித்து சமர்ப்பித்தாள். அவன் சிறு தலையாட்டலோடு கேட்டுக் கொள்ள, அலுவலகப் பேச்சைத் தவிர்த்து வேறொன்றும் பெரிதாய் இல்லை.

அந்த வாரம் அப்படியே கழிந்திருக்க, தேவாவிற்கு அப்போதுதான் நின்று நிதானமாக மூச்சுவிட நேரம் கிடைத்தது. கடந்த சில நாட்களாக அந்தக் கிளைக்கும் இந்தக் கிளைக்கும் அலைந்து சோர்ந்து போயிருந்தான். வேலையெல்லாம் முடிந்து அனைத்தும் சரியாகிவிடவே அன்றைக்கு விரைவாய் வீட்டிற்கு வந்தான்.

அறைக்குள் கலகலவென சிரிப்பு சப்தம் கேட்டது. இவன் உள்ளே செல்ல, ஆதிரையின் மேலே படுத்துக் கொண்டு ராகினி சிரிக்க, அபியும் அவளுக்கு அருகே இருந்தான். மூவரும் ஏதோ சிரித்து விளையாடிக் கொண்டிருந்தனர். இவனுக்கும் அவர்களைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது. ஆதிரை அவன் வந்ததும் எழுந்து அமர்ந்து முடியைக் கொண்டையிட்டாள்.

“தேவாப்பா!” ராகினியும், “அங்கிள்!” என அபியும் அவனைப் பிடித்துக் கொண்டனர்.

“ப்பா... எனக்கு ஹாட் சாக்லேட் வேணும்!” ராகி கேட்க, “எனக்கு ஓரியோ மில்க் ஷேக் வேணும் அங்கிள்!” அபியும் அடம்பிடித்தான். கடந்த வாரம் அவர்களை வெளியே அழைத்துச் சென்று வாங்கித் தருகிறேன் எனக் கூறி இருந்தான். ஆனால் எதிர்பாராத விதமாக வேலை கழுத்தை நெறிக்க, அவனால் அவர்களுடன் நேரத்தை செலவழிக்க முடியாமல் போயிற்று.

“சரி, பட் ஒன்னே ஒன்னுதான். நோ ஐஸ் க்ரீம்!” கண்டிப்புடன் கூறியவன், “ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. நான் ப்ரெஷ்ஷாகிட்டு வரேன்!” என்றான். குழந்தைகள் இருவரும் குஷியாகினர்.

தேவா சில நொடிகள் யோசித்தான். திருமணம் முடிந்ததிலிருந்தே ஆதிரையையும் எங்கேயும் அழைத்துச் செல்லவில்லை என நினைத்தவன், “ஆதிரை, கெட் ரெடி. சேர்ந்து போய்ட்டு வரலாம்!” என அவளையும் அழைத்தான்.

“ம்கூம்... நான் வரலைங்க. நீங்க பிள்ளைங்களோட போய்ட்டு வாங்க!” என்றாள் மறுப்பாய் தலையை அசைத்து.

“ப்ம்ச்... ஏன் வரலை? போ, போய் ரெடியாகு. பக்கத்துல எதாவது ரெஸ்டாரண்ட்க்குப் போய்ட்டு வரலாம்!” அவன் மறுபடியும் வற்புறுத்த, “இல்ல, அது எனக்கு ஸ்டமக் பெய்ன்ங்க. நான் வரலை!” என்றாள் பொய்யான காரணத்தை காண்பித்து.

“ஓ... ஓகே, நீ ரெஸ்ட் எடு!” என்றவன் பிள்ளைகளோடு கிளம்பினாலும் அவளை ஒருமுறை பார்த்துவிட்டே அகன்றான். ஆதிரை அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

இரவுக்கு என்ன சமைக்க வேண்டும் என யோசித்தாள். உண்மையில் அவளும் அபியுமாக இருக்கும் பொழுதுகளில் சமையல் பெரும் வேலையாக இருந்தது இல்லை. மகனுக்கு என்னப் பிடிக்குமோ அதையே தனக்கும் சமைத்து உண்பாள். அதனாலே என்ன சமைக்க என பெரிதாய் மெனக்கெட வேண்டியது இல்லை.

ஆனால், இங்கே அப்படியில்லை. கிட்டத்தட்ட பத்து பேருக்கு சமைக்க வேண்டும். மூன்று வேளையும் புதிதாய் எதாவது செய்ய வேண்டும். சமைத்ததையே மீண்டும் மீண்டும் செய்ய முடியாது. அதனாலே சற்று சலிப்பு தட்டியது. அவள் இந்த வீட்டிற்கு வந்த சில நாட்கள் வாணி இவளை சமைக்க விடக் கூடாது என எண்ணினார்தான். ஆனால் இப்போதெல்லாம் மொத்த சமையலும் அவள் தலையில்தான் விழுந்தது.

அவர் சமையல் பக்கமே வருவதை மெதுவாய் குறைத்தார். மூன்று வேளை சமைத்தவர் இப்போதெல்லாம் ஒரு வேளைக்கு சமைப்பதே பெரிதாய் இருந்தது. ஜனனிக்கு பேறுகாலம் வெகு அருகில் இருந்தது. அதனால் அவளையும் வேலை வாங்க முடியாது. இவள் தனியாளாக வீட்டில் காலைக்கும் இரவுக்கும் சமைத்து அலுவலக வேலையும் செய்வதில் உடல் அலண்டது.

பிரதன்யா கல்லூரி நேரம் போக இவளுக்கு உதவலாம். இப்போதைக்கு அவளால் மட்டுமே சமையலை பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் இவளாகச் சென்று பிரதுவிடம் உதவி கேட்க மனமில்லை. படிக்கும் பிள்ளையை வேலை வாங்குகிறாள் என அதற்கும் வாணி எதாவது பேசுவார். அதானலே என்ன செய்வது என அலைபேசியை துழாவி காய்கறிகள் கலந்து செய்யும் நெய் சோறும் பட்டானி குருமாவும் செய்யலாம் என சமையலறை நோக்கிச் சென்றாள்.
 
Administrator
Staff member
Messages
1,205
Reaction score
3,520
Points
113

கூடத்தில் அமர்ந்திருந்த கோபாலைப் பார்த்து சின்ன புன்னகையை உதிர்த்தவள் சமையலைத் தொடங்க, வாணி அவளையே திருப்தியாய்‌ப் பார்த்தார். முதலில் அவள் என் வீட்டு சமையலில் நாட்டாமை செய்வாளா எனக் கோபம் வந்தாலும் அவள் அத்தனைப் பேருக்கும் ஒற்றை ஆளாய் கடினப்பட்டு சமைப்பதை பார்த்தவருக்கு கொஞ்சம் மனம் அமைதியடைந்தது. எது பேசினாலும் பதிலுக்கு ஆதிரை முகத்தில் அடித்தாற் போல பேசுவதும் முகத்தை திருப்புவதுமாய் இருக்க, அதில் இவருக்கு கடுப்புதான்.

அதானலே இப்போதெல்லாம் அவளிடம் பேச்சு வார்த்தையைக் குறைத்து அவளின் வேலைச் சுமையைக் கூட்டினார். கோபால் கூட மனைவியைக் கவனித்து இதைக் கேட்க, “ம்ப்ச்... எனக்கு முட்டி வலிக்குதுங்க. ரொம்ப நேரம் கிச்சன்லயே நின்னு சமைக்க முடியலை. ப்ரஷர் கூடுது குறையுது, அதனாலே தலையெல்லாம் சுத்துது. ஏன் இத்தனை வருஷம் மொத்தக் குடும்பத்துக்கும் ஒரே ஆளா நான்தானே சமைச்சேன். அப்போ எல்லாம் யார் எனக்கு உதவி பண்ணா. வீட்டுக்கு வாழ வந்தா, சமையல் வீட்டு வேலையெல்லாம் செஞ்சுத்தானங்க ஆகணும். இதுக்குன்னு தனி ஆளா வைக்க முடியும்?” என அவர் நொடித்தார். கோபாலால் எதுவும் பேச முடியவில்லை.

மகளை அழைத்த மனிதர், “பிரது, என்ன பண்ற நீ? ஃபோன் பார்த்துட்டே இருக்க? அண்ணிக்கு போய் சமையல்ல கொஞ்சம் உதவி செய். தனியாளா அந்தப் பொண்ணு சமைக்குது. ஜானுவுக்கும் முடியாது!” என அவளை அதட்ட,
“ப்ம்ச்... இப்போ எதுக்கு என் புள்ளையை அதட்டுறீங்க? படிக்குற புள்ளையை வேலை செய்ய சொல்வீங்களா? அவ பரிட்சைக்குப் படிக்க வேணாமா?” எனக் காய்ந்த வாணி, “என்னடி பார்த்துட்டே இருக்க? போ, போய் ஒழுங்கா படி...” என மகளை விரட்டியிருந்தார்.

பிரதன்யாவுமே ஆதிரையை அவ்வப்போது கவனித்தாள். மொத்த வீட்டையும் சுத்தம் செய்து துணியை இயந்திரத்தில் போட்டு எடுத்து வைத்துவிட்டு அவள் சமைக்க செல்ல, இவளுக்கு சற்றே குற்றவுணர்வு மேலோங்கியது.

ஆதிரைக்கு வாணியின் பேச்சும் கோபால் குரலும் செவியில் விழத்தான் செய்தது. அவள் அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. என்னால் முடிந்தவரை செய்கிறேன். இல்லையென்றால் முடியாது என முகத்தில் அடித்தாற் போல கூறி விடுவேன் என இயன்ற அளவிற்கு வேலையைப் பார்த்தாள்.

வாணி வெளியே சென்ற சமயம், “அண்ணி, உங்களுக்கு எதுவும் ஹெல்ப் வேணுமா? நான் காய்கறி கட் பண்ணவா?” என பிதன்யா கேட்க, இவள் சின்ன புன்னகையுடன் வேண்டாம் என மறுத்தாள்.

“உனக்கு எக்ஸாம் இருக்குல்ல பிரது? போ, போய் படி. நல்ல பெர்சன்டேஜ் வாங்கணும்!” என அவளை அனுப்பிவிட்டாள். இந்த நிகழ்வு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் நடந்திருந்தது.

ஆதிரை வியர்த்து வடிய சமைத்துக் கொண்டிருக்க, தேவா குழந்தைகளோடு வெளியே சென்றுவிட்டு உள்ளே வந்தான். வந்தவன் பார்வை மனைவியை ஒருமுறை தொட்டு மீண்டது. அவன் பார்க்கும் சமயம் எல்லாம் ஆதிரை சமைத்துக் கொண்டிருப்பதாக தோன்றியதும் யோசனையுடன் தாயைப் பார்க்க, அவர் தொலைக்காட்சி தொடரில் ஆழ்ந்திருந்தார்.

ஆதிரை சமைத்து முடித்துவிட்டு அறைக்குள் வந்தவள் முகத்தை கழுவிவிட்டு மின்விசிறிக்கு கீழே நின்று மூச்சை இழுத்துவிட்டபடியே முகத்தை காய வைத்தாள். தேவா அறைக்குள் வந்தான்.

“நான் பார்க்குற நேரமெல்லாம் நீ கிச்சன்லயே இருக்குற மாதிரி இருக்கே ஆதிரை?” எனக் கேட்டான் அவன்.

அவள் உதடுகளில் கேலி புன்னகை தவழ்ந்தது. “மூனு வேளை சாப்பிட மூனு வேளையும் சமைக்கணுமேங்க. அப்போ எனிடைம் கிச்சன்லதானே நிக்க முடியும்!” என்றாள் முகத்தை துடைத்து.

“அம்மாதானே குக் பண்ணுவாங்க? அவங்க இப்போ கிச்சன் பக்கமே வர்றது இல்லையா?” யோசனையுடன் மனைவியைப் பார்த்தான்.

“இல்ல, வர்றது இல்லை!” ஒற்றை வார்த்தையோடு முடித்தாள். தேவா அவளையும் அவளது பேச்சையும் கூர்ந்து கவனித்தான். வார்த்தைக்கு முன்னூறு தேவா போடும் உதடுகள் இப்போதெல்லாம் அவனுக்கு வெகுவாய் மரியாதையைக் கொடுத்தன. அவ்வப்போது தன்னை வம்பிழுத்து சிரிக்க வைக்கும் ஆதிரையின் புன்னகைத்த முகத்தின் இந்த அமைதிக்குப் பின்னே என்ன இருக்கும் என அவன் மனம் கேள்வி கேட்டது.

கட்டிலில் அமைதியாய் அவளை அவதானித்தவாறே அமர்ந்தான். “பசிக்குதாங்க உங்களுக்கு? சாப்பாடு எடுத்து வைக்கவா?” என அவன் பார்வை உணர்ந்து கேட்டாள்.

இல்லையென தேவா தலையை அசைக்க, “சரி, நான் அபிக்கும் ராகினிக்கும் சாப்படு கொடுக்கணும். அவங்களுக்குப் பசிக்கும்!” என்றவாறே அவனருகே தன்னிருப்பை குறைக்க எண்ணி ஆதிரை அகலப் பார்க்க, தேவா அவளது கையை எட்டி இறுகப் பிடித்தான்.

அவனைக் கேள்வியாகப் பார்த்தவள், “என்னங்க, என்ன வேணும்?” எனக் கேட்டவாறே கையை உருவ முயன்றாள். ஆனால் தேவா விடாது இன்னும் அவளை பக்கத்தில் இழுத்தான்.

“பசங்க பசியோட இருப்பாங்கங்க!” ஆதிரை கையை இழுத்தாள்‌.

“அவங்க இப்போதான் ஸ்னாக்ஸ் சாப்ட்டு வயித்தை நிரப்பி இருக்காங்க. கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுவாங்க. நீ இங்க வந்து உக்காரு!” என அருகே கைக் காண்பித்தான். ஆதிரை என்னவென அவன் முகத்தை கேள்வியாய் நோக்கினாள்.

“உன்கிட்ட பேசணும். கம் அண்ட் சிட்!” அவன் அழுத்திக் கூறவும் ஆதிரை மூலையில் கிடந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள். தேவாவின் மனம் அதைக் குறித்துக் கொண்டது.

“ஆர் யூ ஓகே ஆதிரை? உன் முகத்துல ஏதோ குறையுது? என்னாச்சு?” அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கேட்டான். அவள் அதிரவெல்லாம் இல்லை. அமைதியாய் புன்னகைத்தவள், “இல்லையே... நான் எப்பவும் போலதான் இருக்கேன்ங்க!” என்றாள் தன்னை இயல்பாய்க் காண்பித்து.

“பொய் சொல்லாத ஆதி. நீ இப்படி கிடையாது. ரொம்ப சைலண்டா இருக்க. சம்திங் உன்கிட்ட குறையுது!” அவன் அழுத்திக் கேட்க, இவளது உதட்டோரம் மெல்லிய முறுவல்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்களா எதாவது நினைச்சா நான் என்ன பண்றது?” எனக் கேட்டு எழ முயன்றாள்.

“பேசிட்டு இருக்கேன்ல. என்ன எழுந்துப் போற பழக்கம்!” தேவா சுள்ளென்று கூற, இவளது முகம் மாறியது.

“எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க. பாத்திரம் எல்லாம் அப்படியே சிங்க் ஃபுல்லா இருக்கு. இப்போ கழுவி வச்சாதான் காலைல குக் பண்ண டைம் கரெக்டா இருக்கும். அப்பறம் வேலைக்கு லேட்டானா என் பாஸ் திட்டுவாரு!” என்றாள் கேலியாய்.

அவளை முறைத்துப் பார்த்தவன், “நான் உன்கிட்ட சீரியஸா பேசுறேன். உன்னோட ப்ராப்ளம் என்ன? உன் முகத்தை பார்த்து மனசுல என்ன இருக்குன்னு எல்லாம் என்னால கண்டு பிடிக்க முடியாது. வீட்ல வேலை அதிகமா இருக்கா ஆதி? மெய்ட் வைக்கலாமா?” எனக் கேட்டான்.

“இல்ல... இல்ல, அதெல்லாம் வேணாம். ஐ கேன் மேனேஜ். இப்போ திடீர்னு மெய்ட் வச்சா அதுக்கும் உங்க அம்மா எதாவது சொல்லுவாங்க. இத்தனை வருஷமா அவங்க தனியாதானே குக் பண்ணி ஹவுஸ் ஹோல்ட் எல்லாம் மேனேஜ் பண்ணாங்க. சோ, பார்த்துக்கலாம்!” வேலை செய்வது பெரிதாய் இல்லை என்பது போல கூறினாள்.

“ஷ்யூரா? நீ ரொம்ப டயர்டா தெரியுற?” அவன் மீண்டும் அவள் முகம் பார்த்துக் கேட்க, “எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லங்க!” போலியாய் சலித்தாள்.

“ஹம்ம்... வார்த்தைக்கு வார்த்தை நூறு தேவா போட்ற ஆதிரையைக் காணோம். இப்போலாம் ரொம்ப மரியாதையா பேசுறீயே?” குறுகுறுவென அவளைப் பார்த்தான் கணவன். ஆதிரையிடம் மெல்லிய சங்கடம்.

“அம்மா எதுவும் சொன்னாங்களா?” அவனாகவே கேட்க, ஆதிரை ஆமாம் என தலையை அசைத்தாள். உண்மையில் அவர் கூறியதற்காக எல்லாம் ஆதிரை தேவாவை மரியாதையாய் விளிக்கவில்லை. அவளுக்காய் தோன்றவில்லை என மரியாதையை வார்த்தைகளில் உட்புகுத்தி இருந்தாள்.

“ப்ம்ச்... அவங்களுக்காக நான் சாரி கேட்குறேன் ஆதி. ஆல்ரெடி நான் அவங்களை வார்ன் பண்ணித்தான் விட்டேன். ஆனாலும் உன்னைத் திட்றதை விட மாட்றாங்களா? அவங்களாலதான் நீ ரொம்ப அப்செட்டா இருக்கீயா? சாரி... சாரி!” என சரியான காரணத்தைக் கண்டு பிடித்து விட்டதாய் நினைத்து அவன் மன்னிப்பை வேண்ட, ஆதிரை இல்லையென்பதாய் தலையை அசைத்தாள்.

“ப்மச்... உங்கம்மா இப்போலாம் என் பக்கமே வரற்து இல்லைங்க. அவங்க உண்டு அவங்க வேலை உண்டுன்னு இருக்காங்க. அது ஏதோ அவங்க முன்னாடி உங்களை தேவான்னு ஒரு டைம் சொல்லிட்டேன். சோ, பேரை சொல்லாதன்னு வெடுக்குன்னுட்டாங்க!” என்றாள்.

“சரி, சாரி ஆதிரை. நான் இப்போ இதைக் கேட்டா‌ மறுபடியும் வேணும்னே எதாவது சண்டை போடுவாங்க. நான் டெய்லி இப்படி அவங்ககிட்டே அதட்டிக் கேட்டா , அப்புறம் என் பேச்சுக்கு மதிப்பில்லாம போய்டும். அடிக்கடி உன்னைப் பேச ஆரம்பிச்சிடுவாங்க. நான் அப்புறமா ஒரு தடவை அவங்ககிட்ட பேசுறேன். இப்போ இருக்க நல்ல மூடை ஸ்பாயில் பண்ண விரும்பலை நான்!” அவன் கூற, ஆதிரை தலையை அசைத்து ஏற்றாள்.

“அப்புறம் இந்த என்னங்க, ஏங்கவை விட்டுத் தொலை டீ. நல்லாவே இல்லை. எனக்கு நீ பேர் சொல்லித்தான் கூப்பிட்றதுதான் பிடிச்சிருக்கு!” என அவள் கைகளைப் பிடித்து மீசை முடி உரச மெலிதாய் முத்தமிட்டான். ஆதிரை அவனை சலனமில்லாமல் பார்த்தாள். பின்னர் சின்னதாய் தலையை அசைத்து மாட்டேன் என்பதாக கூறினாள்.

“ஏன்... அம்மா எதுவும் சொல்லாம நான் பார்த்துக்கிறேன். இது... ஐ மீன் மரியாதை கொடுத்து நீ பேசுறது டிஸ்டன்ஸா இருக்க மாதிரி இருக்கு டீ!” என்றான் மென்மையான குரலில். ஆதிரையிடம் பெரிதாய் பிரதிபலிப்பில்லை.

“நான் இப்படித்தான் கூப்பிடுவேன். எனக்கு மரியாதை கொடுத்துப் பேசுறது பிடிச்சிருக்கு!” என்றாள். தேவா அவளை முறைத்தான்.

“நான் போகவா?” அவள் கேட்க, “ஹம்ம்... அம்மாவை பெருசா எடுத்துக்காத ஆதிரை. நீ நார்மலா இரு. எனக்கு பழைய ஆதியை மிஸ் பண்ற ஃபீல்!” அவன் கூற, அவள் பதிலளிக்கும் முன்னே, “நான் நார்மலா இருக்கேன்னு பொய் சொல்லாத. எனக்கு கோபம் வரும்!” என்றான் கண்டிப்பான குரலில்.

“ட்ரை பண்றேன்ங்க!” புன்னகைத்தவள் வேறு எதுவும் கூறாது வெளியே சென்றாள். அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்க, இவர்கள் இணைந்து கொண்டனர்.

ஆதிரை நெய்யை தாராளமாய் ஊற்றி நெய் சாதம் செய்திருக்க, “ஏன்டா... நாங்க எல்லாம் சாப்பிடணும்னு நினைச்சாளா இல்லையா உன் பொண்டாட்டி? எதுக்கு இவ்வளோ நெய் சோத்துல ஊத்தி இருக்கா? வயசானவங்க இருக்காங்கன்னு கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா அவளுக்கு? எனக்கு ஏற்கனவே பிரஷர் ஏறி கிடக்கு!” வாணி ஒரு வாய் சோற்றை வாயில் வைத்ததும் கூற, ஆதிரை அவரை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள்.

பின்னர் அதை பொருட்படுத்தாமல், “அபிம்மா, ராகி செல்லம். நானே ஊட்டி விட்றேன். நீங்க சமத்தா சாப்பிடணும்!” என குழந்தைகளுக்கு உணவை ஊட்டிவிடத் தொடங்க, வாணிக்கு கடுப்பானது.

“ம்மா... இது கீ ரைஸ். அப்படித்தான் இருக்கும்!” பிரதன்யா கூற, “நீ வாயை மூடு பிரது!” என மகளை அதட்டினார் வாணி.

“ம்மா... இப்போ எதுக்கு கத்துறீங்க?” தேவா கடுப்பாய்க் கேட்க, “ஏன்டா... நான் என்ன கத்துறேன். உன் பொண்டாட்டி என்ன சமைச்சு வச்சிருக்கா?” என அவர் காய்ந்தார்.

“ப்ம்ச்... வேலைக்கும் போய்ட்டு வீட்ல இத்தனை பேருக்கும் சமைச்சு வைக்கிறா அவ. குறை சொல்லாம உங்களால சாப்பிட முடியாதாம்மா?” இவன் சினத்தோடு கேட்டான்.

“அடேங்கப்பா... ஊர்ல இல்லாத பொண்டாட்டி இவனுக்கு. வேலைக்குப் போய்ட்டு வந்து சமைக்கிறாளாம். இத்தனை வருஷமா ஒத்த ஆளா நான் உங்க எல்லாருக்கும் ஆக்கிப் போட்டிருக்கேன் டா!” அவர் கூற, கோபால் மனைவியை கண்டனமாய்ப் பார்த்தார்‌.

“ப்ம்ச்... இப்போ நான் சாப்பிடவா? இல்லை எழுந்து போகவா?” தேவா கையை உதறி எழ முயல, ஆதிரை எட்டி அவன் கரத்தைப் பிடித்தாள்.

“நீங்க சாப்பிடுங்க, நான் பார்த்துக்கிறேன்!” என்றாள். தேவா இன்னுமே முகத்தை உர்ரென வைத்திருந்தான்.

“சாப்பிடுங்கன்னு சொன்னேன்!” அவள் அழுத்தமாய்க் கூற, அவன் தளர்ந்து அமர்ந்தான். இவள் எழுந்து சென்று ஐந்து நிமிடத்தில் எண்ணையே ஊற்றாமல் வரட்டி போன்று இரண்டு தோசைகளை சுட்டு எடுத்து வந்தாள்.

“சாப்பிடுங்க!” என வாணியிடம் கொடுத்தாள். அவர் ஒரு வாய் வைத்தார். எண்ணெய் இல்லாமல் தோசை நன்றாய் இல்லை. ஆதிரை உதட்டோடு கேலி சிரிப்பு ஒட்டியிருந்தது. வாணியால் எதுவும் கூற முடியவில்லை. இப்போது அவர் ஏதும் பேசினால் மகனும் கணவரும் பாய்ந்து விடுவார்கள் என எண்ணி கடனே என சாப்பிட்டார். ஆதிரைதான் கடைசியாய் சாப்பிட்டு எழுந்தாள்.

அனைத்தையும் எடுத்து வைத்து பாத்திரங்களை கழுவிவிட்டு அவள் அறைக்குள்ளே வர, ராகினியும் அபியுடன் உறங்குவதாக அவள் உடையைப் பிடித்தபடியே வர, இவளிடம் சின்ன புன்னகை.

அபிக்கு அருகிலே இவளையும் படுக்க வைத்தாள். தேவா வெளியே சென்றுவிட்டு வந்தான். ஆதிரை கீழே படுக்கையை விரித்திருக்க, அவன் கேள்வியாகப் பார்த்தான். அப்போதுதான் ராகினியும் அபியும் கட்டிலை ஆக்கிரமித்திருந்தனர் எனக் கவனித்தான். இன்னொரு கட்டில் வாங்கிப் போட வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால், அறை அவனுடைய பெரியது அல்ல. அளவாய் இருந்தது. அதனாலே இன்னொரு கட்டில் சாத்தியமில்லை.

தேவா வர, “ப்பா... இங்க எனக்குப் பக்கத்துல படுங்க!” என ராகினி அழைக்க, “அங்கிள், என் பக்கம்!” என அபியும் அழைத்தான். இவன் சிரிப்புடன் அவர்களுக்கு நடுவே படுத்துக் கொண்டான். சிறிது நேரம் சின்னவர்கள் சிரித்துப் பேசி விளையாடியவர்கள் உறங்கிவிட, தேவா விளக்கணைத்தான். ஆதிரையைப் பார்க்க, அவள் உறங்கியிருந்தாள்.

இவன் இன்னொரு போர்வையை அவளுக்கு அருகே விரித்துக் கீழே படுத்தான். அவளுக்கும் அவன் அரவம் கேட்டது. விழித்திருந்தால் எதாவது கேட்பான் என்றுதான் அவள் கண்ணை மூடித் தூங்குவது போல பாவனை செய்தாள்.

தேவா அவளை ஒட்டி உரசிப் படுத்தவன் பின்னிருந்து அணைத்துக் கொண்டான். ஆதிரை அமைதியாய் படுத்திருந்தாள். அவன் ஸ்பரிசம் பட்டதும், அவன் உடல் வெப்பத்தை இவள் உணர்ந்ததும் கண்கள் கலங்குவது போலொரு எண்ணம்.

“ஆதி, நீ தூங்கலைன்னு எனக்குத் தெரியும்!” செவியோரம் அவன் முணுமுணுக்க, ஆதிரை அசையவில்லை.

“சாரி டீ... அம்மா பேசுனதுக்கு ரொம்ப சாரி. என்ன செஞ்சு அவங்க வாயை அடைக்குறதுன்னு எனக்குத் தெரியலை!” அவன் வருத்தத்துடன் கூற, உடலை திருப்பாமல் தலையை மட்டும் நிமிர்த்தி அவன் முகத்தைப் பார்த்தவள், “எதையும் யோசிக்காம தூங்குங்க!” என்றுவிட்டு கண்ணை மூடினாள். அவன் சிறிது நேரத்திலே உறங்கிவிட, இவள் மெதுவாய் நகர்ந்து தனியாய் படுத்து போர்வையை சுருட்டிக் கண்ணை மூடி உருண்டிருந்த உவர் நீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.

தொடரும்...

சாரி, சாரி.
.. பெர்சனல் வேலை தலைக்கு மேல. அதான் அப்டேட் ரொம்ப டிலே ஆகுது. நெக்ஸ்ட் அப்டேட் சீக்கிரம் வரும் 🫶💖









 
Well-known member
Messages
1,010
Reaction score
745
Points
113
Intha Deva va enna solrathu nu theriyalaye, epdi iruntha aadhirai ya ipdi feel panna vachitte irukkaane

Ivan ithukkellam sari pattu varave maattan😆😆😆😆😆😆😆

Waiting for next ud maa, evlo seekirama varum
 
Active member
Messages
209
Reaction score
163
Points
43
Thanakana urimaiyana uravu kitta expect pannalam thappae illa
Nadakalanu ra apo yemattaram kandippa irukkum.
Aadhirai 😍😍😍😍😍
 
New member
Messages
9
Reaction score
5
Points
3
அருமை 👌👌👌👌👌👌👌தேவா ஆதியை புரிந்துகொள்ளவில்லை எப்போது அவள் மன உணர்வு கோபமாக வெளிப்பட போகுதோ 🤔🤔🤔🤔🌺🌺🤔🌺
 
Well-known member
Messages
461
Reaction score
333
Points
63
Adei deva ne ivolo tubelight ah Iruku ah vendam avaluku prachanai unga amma illa da ne than aana ithula avan ah mattum korai sollamudiyathu avan kita ava Unnoda presence enna endha vithathula yum bathikathu nu ava azhuthuma pathiya vachita yen na iva kalyanathuku yae Apadi than sonna so athu na la than avan oda wishes illa na kooda ava varutha pada mata nu nenachitan pola
 
Active member
Messages
125
Reaction score
101
Points
43
Nice super interesting super 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌
 
Top