• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
நெஞ்சம் – 37 💖

இரண்டு மாதங்கள் கடந்து போயிருந்தது. பொன்வாணி இடைப்பட்ட நாட்களில் மகனின் மனதை மாற்ற எவ்வளவோ முயன்று தோல்வியைத் தழுவியிருந்தார்.

தரகரிடம் பேசி அடுத்தடுத்து நான்கைந்து பெண்களின் புகைப்படங்கள் மற்றும் சுயவிவரங்களை அவர் மகனிடம் காண்பிக்க, அவன் பெரிதாய் எதிர்வினை எதுவும் ஆற்றவில்லை. நீங்கள் எத்தனை பெண்களைப் பார்த்தாலும் நான் ஆதிரையைத்தான் திருமணம் செய்வேன் என உறுதியாய் தன் பிடியிலே தேவா நின்றுவிட, இவருக்கு திக்கற்ற நிலை.

இறுதியில் மகனின் மனதை தன்னால் மாற்ற முடியாது என்று எண்ணி அவருடைய அண்ணன், தம்பி, பெரியப்பா மக்கள் என அனைவரையும் வீட்டில் அழைத்து பஞ்சாயத்து ஒன்றை வைத்துவிட, தேவா தன் பொறுமையை இழுத்துப் பிடித்தான். அத்தனை பேரின் முன்பும் இவன் ஏதோ பெரிய குற்றம் இழைத்தவிட்டது போல அவர் பேச, இவனுக்கு கடுப்பானது. உறவுகள் அனைவரும் வயதில் மூத்தவர்கள் என்ற எண்ணத்தில் அவனால் எடுத்தெறிந்து பேச முடியவில்லை. அவன் தந்தையைப் பார்க்க, அவர்தான் மொத்தக் கூட்டத்தையும் சரிகட்டி பேசி அனுப்பி வைத்தார்.

கோபால் மகனின்புறம் தான் நின்றார். அவனைத் தனியே அழைத்துப் பேசினார். தேவாவின் மனதில் என்ன உள்ளது என அறிந்து கொண்டார். அவன் பேசும் போதே ஆதிரையின் மீதான அன்பும் இந்த திருமண விஷயத்தில் அவனின் தீவிரமும் அவருக்குப் புரிந்து போயிற்று. அவருக்கும் தன் மகனுக்குப் போய் ஏற்கனவே விவாகரத்து வாங்கிய பெண்ணா மனைவியாக வர வேண்டும்? என மனதில் ஆதங்கம் இல்லாமல் இல்லை. வாழப் போகும் அவனே எதையும் பெரிதுபடுத்தாத போது இவர் மூக்கை நுழைப்பது அத்தனை உசிதமாய் படவில்லை.

அவன் மனைவி, குழந்தைகள் என நன்றாய் வாழ்ந்தால் போதுமென்று அவர் தன்னுடைய சம்மதத்தை தெரிவித்தார். வீட்டில் அனைவருக்குமே தேவாவின் முடிவு மகிழ்ச்சியைப் பெருக்கிற்று. ஆனால் பொன்வாணி மட்டும் வாய் ஓயாது புலம்பிக் கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் கோபாலுக்கே மனைவியின் செயல் சலித்துப் போனது. கடுமையாய் திட்டிவிட்டார். அதிலிருந்து கணவன் மனைவிக்கு இடையில் பேச்சு வார்த்தைக் குறைந்து போயிருந்தது.

“ண்ணா... நீ அம்மா சம்மதிக்கும்னு நம்பிட்டே இரு. அப்புறம் உனக்கும் அண்ணிக்கும் அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும். பேசாம அப்பாகிட்ட பேசு ப்ரோ. கல்யாணம் முடிஞ்சா வேற வழியில்லாம அம்மா அண்ணியை அக்செப்ட் பண்ணிப்பாங்க!” ஹரி தேவாவிடம் பலமுறை வற்புறுத்த, அவன் மறுத்துவிட்டான்.

அவனுக்குத் தாய் தந்தையின் சம்மதம் முக்கியமாகத் தோன்றிற்று. அவர்கள் சம்மதத்தோடு எளிமையாய் திருமணம் செய்தால் கூடப் போதும் என்பது அவனது சித்தாந்தம். கோபால் கூட மகனை கொஞ்சம் பொறுமையாய் இருக்க கூறினார். மனைவியை தான் சம்மதிக்க வைப்பதாக அவர் வாக்குறுதி கொடுத்திருக்க, தேவாவிற்கு பிரச்சனையின் பெரும்பகுதி நீர்த்துவிட்டதை போல ஆசுவாசமான உணர்வு தோன்றியது.

எப்போதும் போல உழவர் துணை, வீடு வேலை என அதிலே கவனமாய் இருந்தான். அன்றைய பேச்சிற்கு பின்னே ஆதிரை தேவாவிடம் திருமணம் பற்றி ஒரு வார்த்தைக் கூடக் கேட்கவில்லை.

அவனாக அதைப் பற்றி பேசினால் கூட, “ப்ம்ச்... பர்சனல் விஷயத்தை இங்க பேக் கூடாது தேவா சார்!” எனக் கேலியாய் அவன் முறைப்பைப் பெற்றுக் கொண்டாள்.

இந்த இரண்டு மாதத்தில் ஒரு முறை கூட அவளாக தேவாவிடம் திருமணத்திற்கு சம்மதம் கிடைத்து விட்டதா என ஆர்வமாய்க், கவலையாய் ஏன் தகவலாய்க் கூட கேட்கவில்லை.
நீதான் வந்து பிடித்திருக்கிறது என்றாய். உன் வீட்டில் சம்மதம் வாங்குவது உன்னுடைய கடமை என நடந்து கொண்டாள்.

உண்மையில் தேவாவின் மீது அவளுக்கு ஈர்ப்போ பிடிப்போ ஏற்படவில்லை. அவன் மீது முன்பு மரியாதை இருந்தது. இப்போது நல்ல தோழனாய் என அவனை தன் வாழ்க்கையில் ஏற்றிருந்தாள். அவன் முகம் வாடினால், குழப்பத்தில் இருந்தால் நண்பன் என்ற முறையில் அவன் மீது கரினம் எழுந்தது. மற்றபடி இந்த திருமணம் முழுவதும் தேவாவின் விருப்பத்தை மட்டுமே அடிப்படைடாகக் கொண்டுதான் நடக்கும் ஒழிய, ஆதிரை எவ்வித முன்னெடுப்புகளையும் எடுக்கவில்லை. இப்போது வந்து அவன் முடியாது என்று கூனினால் கூட இவள் வருந்தப் போவது இல்லை.

முதலில் மறுத்தாலும் ஆதிரை சம்மதம் கூறியதற்கு முக்கிய காரணம் தேவாவின் குடும்பம். கண்டிப்பாக தன்னைப் பற்றித் தெரிந்தால் எள் அளவு கூட அவர்கள் அவனது விருப்பத்திற்கு செவிசாய்க்க மாட்டார்கள் என திடமாய் நம்பினாள்.

அவன் எல்லாவற்றிலும் சரியானவன், நேர்மையானவன். அப்படி இருப்பவனுக்கு முறையில்லாமல் குழந்தையைப் பெற்று வளர்த்து கொண்டிருக்கும் நான் எந்த வகையில் சரியாய் இருப்பேன் என கொதித்துப் போய் விடுவார்கள், எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றே அவள் எண்ணினாள். அவளது மனதை போலவே நடப்பது அனைத்தும் அமைந்து போயிற்று.

ஒருவேளை இவன் வற்புறுத்தி சம்மதிக்க வைத்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என மற்றொரு மனம் முந்தியது. என்னவோ விதியென தனியே வாழ்க்கையை வாழ்கிறாள். அவளாக சுயமாய் எடுத்த முடிவு எனினும் எத்தனையோ நாட்கள் தனிமையின் கொடுமை அவளை வாட்டியிருக்கிறது. வெளியே சிரித்து தன்னை அரிதாரம் பூசிக் காண்பித்தாலும் உள்ளே அவளுக்கென்று குட்டியாய் இதயம் ஒன்று இன்னும் உணர்வுடன் துடித்துக் கொண்டிருந்ததே.


எல்லோருடைய உதாசீனத்தை மட்டுமே இதுவரைக் கண்டு துவண்டு போன மனதின் எதிர்ப்பு தேவாவிடம் மட்டும் வலுவிழந்து போயிருந்தது. சரி, நானாக தேடிச் சென்ற வாழ்க்கை சுகிக்கவில்லை. எவ்வித முகாந்திரமும் இன்றி தன்னுடைய கடந்தக் காலத்தை கிளறாது அப்படியே தன்னை ஏற்றுக் கொள்ளும் தேவா கண்டிப்பாய் அவளை காயப்படுத்த மாட்டான் என அவனுடன் பழகிய சொற்ப நாட்களிலே மனம் உணர்ந்தது.

சரி இந்த திருமண வாழ்க்கையில் என்னதான் இருக்கிறது எனப் பார்த்துவிடலாம் என்று இறுதியாய் முடிவெடுத்தாள். இருவரும் அவ்வப்போது பார்த்துப் புன்னகைத்தனர். வேலை நிமித்தமாக பேசினர். வெகு அரிதாக தேவாவின் பார்வை இவளைத் தொட்டு தடவிப் போகும். இவளுக்கு அந்நேரத்தில் மெல்லிய சங்கடம் உருவாகும். ஆனால் அதற்கு மேல் வேலை இடத்தில் வேறு எதற்கும் அவன் இடம் கொடுப்பதில்லை. தேவாவைப் பற்றி ஆதிரைக்குத் தெரியும் என்பதால் அவளும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.

அது சனிக்கிழமையின் பின்மாலை பொழுது. நாளை விடுமுறை என்பதால் இப்போதே சோம்பேறித்தனம் ஓட்டிக் கொண்டதை போல எல்லோரும் பேசிக் கொண்டு, விச்ராந்தையாய் வேலை பார்த்தனர். இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பிவிடலாம் என தர்ஷினி அப்போதே பையில் பொருட்களை அடைத்து ஓரமாய் வைத்துவிட்டாள். ஆதிரை அவளை ஓரக்கண்ணால் முறைத்தாலும் அவள் பெரிதாய் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

“ஆதிரை, கம் டூ மை ரூம்!” என தேவா அழைக்கவும், அவன் குரலில் பதற்றம் இருப்பதாய் இவளுக்குத் தோன்றியது. யோசனையுடனே அவனது அறைக்குச் சென்றாள்.

தேவா மடிக்கணினியை அணைத்துவிட்டு மேஜையிலிருந்த பொருட்களை எல்லாம்
அப்புறப்படுத்தியவாறே எழுந்து நின்றான்.
 
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
இவளைப் பார்த்தவன், “ஆதிரை, எனக்கொரு எமர்ஜென்சி. நீ இருந்து யூனிட்டைக் க்ளோஸ் பண்ணி, வாட்ச்மேன்கிட்டே கீயைக் கொடுத்துட்டு கிளம்பு. சுபாஷ் லீவ், அதான் நீ பொறுப்பா பார்த்துக்கோ. நான் வரேன்!” அவள் முகம் பார்க்காது தேவா விறுவிறுவென நடக்க, “தேவா சார், என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?” என தன்னைத் தாண்டி சென்றவனின் கையை சட்டென்று தடுத்துப் பிடித்துவிட்டாள்.

தேவா நிதானித்து திரும்பவும், அதிக உரிமை எடுத்து விட்டோமோ என்ற எண்ணத்தில் அவன் முகம் பார்த்து தயங்கி கையைப் பின்னிழுத்தாள். அலுவலகத்தில் வைத்து சொந்த விஷயத்தைப் பற்றி பேசவே கூடாது என்ற கொள்கை உடையவன் தேவா.

அதனாலே ஏதோ தவறு செய்துவிட்டதாய் எண்ணி அவனைக் காண, பின்னே சென்ற கையை முன்னிழுத்து தன் கரங்களுக்குள் அழுத்தியவன், “அம்மாவுக்கு உடம்பு சரியில்லை ஆதி. அதான் அவசரமா கிளம்புறேன். நீ பார்த்துக்கோ இங்க!” விரைவாய் கிளம்பும் போது கூட அவள் முகம் பார்த்து காரணத்தை உரைத்தான்.

“ப்ம்ச்...‌ சாரி, சாரி. நீங்க கிளம்புங்க தேவா சார். நான் பார்த்துக்குறேன்!” என கையை அவனிடமிருந்து உருவிக் கொண்டாள். தேவா தலையை அசைத்துவிட்டு அகல, இவள் ருக்குவிற்கு அழைத்து தான் வரத் தாமதமாகும், அதனால் அபியைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு ஏழு மணிவரை இருந்து உழவர் துணையைப் பூட்டிவிட்டே கிளம்பினாள்.

இரவு படுக்கையில் விழுந்ததும் தேவாவின் தாய் நினைவிற்கு வந்தார். அவனுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினாள்.

பொன்வாணி நன்றாய் இருப்பதாகவும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்லப் போகிறோம் என பதிலளித்தான் தேவா.

“ஓகே தேவா சார், டேக் கேர்!” என பேச்சை முடித்துக் கொண்டாள். அவனுக்கு அங்கே வேலை இருக்கிறது என அவனது ஒற்றை வரி பதிலிலே புரிந்து போனது.

மறுநாள் காலை ஏழு மணிக்கே ஆதிரை எழுந்துவிட்டாள். விடுமுறை நாளில் இத்தனை சீக்கிரம் ஏன் உறக்கம் கலைந்தது எனக் கடுப்புடனே தேநீரைத் தயாரித்துப் பருகினாள். நேற்றிலிருந்து தேவாவின் தாய் மூளையைக் குடைந்து கொண்டே இருந்தார்.

அவருக்கு என்னவானது என இவளுக்குத் தெரிய வேண்டி இருந்தது. ஒருவேளை தேவா தங்கள் திருமணத்தைப் பற்றி பேசி, அதனால்தான் அவருக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டிருக்குமோ எனத் தோன்றிக் கொண்டே இருக்க, அதை எப்படி தெளிவு படுத்துவது எனத் தெரியவில்லை. தேவாவிடம் கேட்டால் நிச்சயம் உண்மையைக் கூற மாட்டான்.

சரி நேரில் சென்று பார்த்துவிட்டு வரலாமா என யோசித்தாள். அவளுக்கும் தேவாவின் குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்றொரு எண்ணம் இருந்தது. செல்லலாமா? வேண்டாமா? என பத்து நிமிடங்கள் குழம்பி இறுதியாய் தேவாவையும் அப்படியே பார்த்துவிட்டு வரலாம் என குளித்துக் கிளம்பினாள். அபியையும் தயார் செய்தாள்.

ஏனோ தானோவென கையில் கிடைத்த சுரிதாரை அணியச் சென்று பின்னர் கொஞ்சம் பளிச்சென கண்ணைப் பறிக்கும்‌ ரோஜா நிற சுரிதாரை அணிந்தாள். முதன்முதலில் தேவாவின் குடும்பத்து ஆட்களை சந்திக்கப் போகிறாள். நேர்த்தியாய் செல்ல வேண்டும் என மூளை அறிவுறுத்தியது.

அவன் வீடு இருக்கும் பகுதிவரை அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் வீட்டு முகவரி தெளிவாய் தெரியாது. அங்கே சென்று விசாரித்துக் கொள்ளலாம் என வழியில் ஒரு கடையில் நிறுத்திப் பழங்களை வாங்கிக் கொண்டாள்.

பாரதியார் தெரு எனப் பெயரிடப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைந்து தேவநந்தன் என விசாரிக்க, யாருக்கும் சட்டென தெரியவில்லை. அங்கே சிறிய தள்ளு வண்டியில் ஒரு வயதானவர் இருக்கவும் உழவர் துணையை அடையாளம் காண்பித்துக் கேட்டதும், “கோபால் மகனைக் கேட்குறீயாம்மா... நேரா போய் இடது பக்கம் ரெண்டாவது சந்துல முத வீடும்மா!” என அவர் கூற, நன்றியுரைத்துவிட்டு தேவாவின் வீட்டை அடைந்தாள்.

அவனிடம் சொல்லாமல் வந்துவிட்டோம்‌. திட்டப் போகிறானோ என மனதிற்குள் மெல்லிய பயம் படர்ந்தது. அபி ஆர்வத்துடன் வீட்டைப் பார்த்தான்.

“ம்மா... இதான் தேவா அங்கிள் வீடாம்மா? நம்ப எப்போ இங்க வருவோம்?” என அவன் கேட்க, “தெரியலை அபிமா... அங்கிள் சொன்னதும் வரலாம். இப்போ உள்ள போனதும் எதையும் எடுக்க கூடாது. சமத்தா அம்மா கூட உக்கார்ந்து இருக்கணும்!” என்ற கண்டிப்புடனே காலணியை அகற்றிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

சிறிய வரண்டா அதைத் தொடர்ந்து மரக்கதவோடு பெரிய கூடம் வீற்றிருந்தது. இவள் எட்டிப் பார்க்க, யாரையும் காணவில்லை. வீடே அமைதியாய் இருந்தது. ஆனால் தொலைக்காட்சி சப்தம் மட்டும் மெலிதாய்க் கேட்க, தயங்கியபடியே உள்ளே நுழைந்தாள்.

ராகினி தட்டில் தோசையுடன் நீள்விருக்கையில் பெரிய மனிதரைப் போல அமர்ந்து உண்டு கொண்டிருந்தாள். இவளைப் பார்த்ததும் அவள் விழித்துவிட்டு, “ம்மா... யாரோ வந்திருக்காங்க!” என்றவாறே சமையல் கூடத்திற்குள் நுழைந்தாள்.

பிரதன்யாவும் ஜனனியும் காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்தனர். பொன்வாணி இரண்டு நாட்களாக இரத்த அழுத்ததிற்கான மாத்திரையை உட் கொள்ளாமல் வேண்டுமென்றே விட்டுவிட, இரத்த அழுத்தம் கடகடவென உயர்ந்து அவரை மயக்க நிலைக்கு அழைத்துச் சென்றிருந்தது.

அவர் மயங்கி விழுந்து கையிலும் நெற்றியிலும் சிராய்ப்பு ஏற்பட, மருத்துவ மனையில் அனுமதித்து இரத்த அழுத்தத்தைக் குறைக்க ஊசி செலுத்தி, குளுக்கோஸ் ஏற்றி இரவு வீடு வர பதினொன்றைத் தொட்டிருந்தது. ஆண்கள் மூவரும்தான் அவரை உடனிருந்து பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஜனனியும் பிரதன்யாவும் இவர்களுக்காக காத்திருக்க, அன்றைக்கு இரவு யாருமே சரியாய் உறங்கவில்லை.

அதுவும் இன்றி பொன்வாணியின் உடல்நிலை வேறு வருத்த, எந்த சலசலப்புகளும் அற்று வீடே அமைதியாய் இருந்தது. தாமதமாய் உறங்கியதால் ஹரியும் தேவாவும் அறையிலிருந்து வெளியே வரவில்லை. இவர்கள் பொன்வாணிக்கு உணவைக் கொடுத்து மாத்திரையை விழுங்க செய்தனர். கோபால் மனைவியுடன் இருந்தார்.

“யாரு ராகி?” எனக் கேட்ட பிரதன்யா வெளியே வர, ஆதிரை அவளைப் பார்த்து தயங்கி புன்னகைத்தாள்.

அவளை இங்கே எதிர்பாராத பிரது முதலில் அதிர்ந்து பின்னர், “அண்ணி... வாங்க, சொல்லாம கொள்ளாம வந்துருக்கீங்க? அண்ணாவைப் பார்க்க வந்தீங்களா? சர்ப்ரைஸா?” எனக் கேட்டு அருகே வந்து ஆதிரைக் கையைப் பிடித்தாள்.

“ஹாய் குட்டி!” அவளைப் பார்த்ததும் தாயிடம் ஒண்டிய அபியின் கன்னத்தை மெதுவாய் நிமிண்டினாள்.

“இல்ல பிரது, உங்கம்மாவுக்கு ஹெல்த் இஷ்ஷூன்னு தேவா சார் சொனார். சோ, பார்க்கலாம்னு வந்தேன்!” என்றாள்.

“ஓ... வாங்க, உக்காருங்க அண்ணி” என ஆதிரையை அமர வைத்தாள். ஜனனி யாரை இவள் அண்ணி என அழைக்கிறாள் என யோசித்துக் கொண்டே சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தாள்.

“அண்ணி, வாங்க இங்க. இவங்கதான் நம்ப தேவா அண்ணா ஆளு!” என்றாள் உற்சாகமாய். ஆதிரை அவளை மென்மையாய் முறைத்தாள்.

“வாங்க...” என ஜனனி அவளை எவ்வாறு உறவு வைத்து அழைப்பது எனத் தெரியாது கூற, ஆதிரை புன்னகைத்தாள்.

“நீங்க வந்து உக்காருங்க!” ஆதிரை எழுந்து நின்றாள். ஜனனியின் ஏழு மாத மேடிட்ட வயிறு அப்போதுதான் இவளது கண்களில் அகப்பட்டது.

“இல்ல, பரவாயில்லை.. என்ன குடிக்குறீங்க? டீ ஆர் காஃபி?” ஜனனி உபசரிக்க, “தண்ணி குடுங்க போதும். காலைல டிபன் சாப்ட்டுதான் வந்தேன்!” என மற்றவள் மறுத்தாள்.

“ஜானு... பசிக்குது டீ. டிபனை எடுத்து வை!” எனக் கத்திக் கொண்டே ஈரமாய் இருந்த முகத்தை துடைத்தவாறு வந்த ஹரி, ஆதிரையை எதிர்பாராது திகைத்தான்.

“வாங்க ஆதிரையாழ்... வாங்க!” வேறு என்ன சொல்வது எனத் தெரியாது அவன் சிரித்து வைத்தான்.‌

“எப்படி இருக்கீங்க ஹரி சார்?” அவள் கேட்க, “ஆங்... நல்லா இருக்கேன் ஆதிரை. நீங்க, பையன் எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டுக் கொண்டே ஒரு இருக்கையில் அமர்ந்தவன், “ஜூஸ் எடுத்துட்டு வா ஜானு...” என்றான் மனைவியிடம்.

“இல்ல ஹரி சார், நான்தான் வேண்டாம்னு சொன்னேன்!” இவள் இடைபுக, ஜனனி சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.

“வொர்க்லாம் எப்படி போகுது சார்? இந்த பிராஞ்ச் பக்கமே நீங்க வர்றது இல்லையே?” இவள் இயல்பாய் பேச, அவன் பதிலளித்தான்.

தேவாதான் ஆதிரையை வரச் சொல்லி இருக்க கூடுமென மனம் கூறியது. கண்டிப்பாக தாய், தந்தையிடம் பேச இவளை அழைத்திருப்பான் என எண்ணி தமையனின் அறைக்கதவை பார்த்தான். சரியாய் அதே நேரம் கோபால் வர, அடுத்ததாய் தேவா வேலைக்குச் செல்ல கிளம்பி வந்தான். அவன் ஆதிரையை எதிர்பாராது புருவத்தை சுருக்கினான்.

“தேவா அங்கிள்! ஹவ் ஆர் யூ?” இத்தனை நேரம் புது மனிதர்களக் கண்டு விழித்த அபினவ் இவனிடம் ஓடிச் சென்றான். தேவா அவனைக் கைகளில் தூக்கினான்.

“பைன் அபி, நீ எப்படி இருக்க?” என அவன் சின்னவனிடம் பேச, கோபால் ஆதிரையை யாரெனப் பார்த்தார்.

“ப்பா... இவங்க ஆதிரையாழ், நம்ப லேப்ல வொர்க் பண்றாங்க. அப்புறம் தேவா பிடிச்சிருக்குன்னு சொன்னான்ல...” ஹரி குறிப்பாய் உணர்த்த, அதைப் புரிந்து கொண்ட பெரியவர், “ஓ... சரிப்பா... சரிப்பா!” ஆதிரையிடம் திரும்பினார். அனைவரது பார்வையும் அவளிடம் குவிய, சற்றே சங்கடப்பட்டுப் போனாள்.

அவளை சில நொடிகள் ஆராய்ச்சியாய் பார்த்தார். தேவா உரைத்ததும் அவர் ஆதிரையை முப்பது வயதிற்குரிய தோற்றத்தில் ஒருவாறு கற்பனை செய்திருந்தார்.

ஆனால், ஆதிரை அவர் கணிப்பிற்கு அப்பாற்பட்டிருந்தாள். நல்ல பளீரென பால் நிறம், திருத்தமான முகம், உயரத்திற்கு ஏற்ற எடை, நேர்த்தியாய் அணிந்த உடை முகத்திலிருந்த மெல்லிய முகப்பூச்ச அனைத்தையும் அவளது வயதை இருபதின் தொடக்கத்தில் காண்பித்தன. மொத்தத்தில் ஆதிரையின் தோற்றம் அவருக்கு வெகு திருப்தி. ஆதிரை அவர் வந்ததும் எழுந்து நின்றாள். அதில் பெரியவரின் முகத்தில் சிநேகமான புன்னகை படர்ந்தது.

“உக்காரும்மா... மரியாதை மனசுல இருந்தா போதும். நீ வர்றன்னு தேவா சொல்லவே இல்ல!” என அவர் பேச்சைத் தொடங்கினார்.

“அவர்கிட்ட சொல்லாமதான் நான் வந்தேன் சார். மேடம்க்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாரு. அதான் நான் பார்த்துட்டுப் போகலாம் வந்தேன்!” எனக் கூறிவிட்டு ஆதிரை தேவாவைப் பார்க்க, அவன் இவளுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அபியை உணவு மேஜையில் அமர்த்தி அவனோடு
தோசையை உண்டு கொண்டிருந்தான்.

‘என்ன மேக்டா இந்த மனுஷன். புரிஞ்சுக்கவே முடியலை!’ இவளிடம் திகைப்பு. கோபால் அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நோக்கில் சொந்த ஊர், அவளது உறவுகள் எங்கே இருக்கிறார்கள் என விசாரிக்க, முதலில் ஆதிரை தயங்கினாலும் எப்படியும் தேவா தன்னைப் பற்றி கூறியிருப்பான் என்பதை உணர்ந்து தாய் தந்தை விவாகரத்துப் பெற்றது பின்னர் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து அவர்களது இழப்பிற்கு பின்னே தனியாய் படித்தது என வெகு சுருக்கமாய் கூறி முடித்தாள். கோபால் அனைத்தையும் கேட்டு தலையை அசைத்தார்.

தாய், தந்தை அற்றப் பெண். திருமண வாழ்க்கையும் சரியில்லாது போய் குழந்தையோடு தனியாய் வாழ்கிறாள் என அவளின் மீது அவருக்கு கரிசனம் உதிர்ந்தது.

“சாரிம்மா...நீ ஜூஸைக் குடி. நான் பேசிட்டே இருக்கேன்!” அவர் கூற, “பரவாயில்லை சார்!” எனப் புன்னகைத்து பழச்சாறை சம்பிரதாயத்திற்காக இரண்டு மிடறு அருந்தினாள்.

“சரிம்மா... வாணி ரூம்லதான் ரெஸ்ட் எடுக்குறா. நீ போய் பாரும்மா!” அவர் கூற, “மேடம் தூங்குறாங்களா சார்? இன்னொரு நாள் பார்த்துக்கிறேன். டிஸ்டர்ப் பண்ண வேணாம்!” இவள் மறுத்தாள்.

“இல்லம்மா... தூங்கலை. டேப்லெட் போட்டுட்டு சும்மா படுத்திருக்கா. போய் ரெண்டு வார்த்தை பேசு!” கோபால் கூற, இவள் அறை நோக்கிச் செல்ல பிரதன்யா பின்னே சென்றாள்.

‘அம்மா ஆதிரையை ஏதேனும் காயப்படுத்தி விடுவார்களோ?’ என எண்ணி ஹரியும் அவர்களோடு இணைந்தான்.

பொன்வாணி கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தார். உள்ளே நுழைந்த ஆதிரையை அவர் கேள்வியாகப் பார்த்தார். பிரதன்யாவின் கல்லூரி தோழியாக இருக்க கூடுமென எண்ணி புன்னகைத்தார்.

“எப்படி இருக்கீங்க மேடம், இப்போ பரவாயில்லையா?” இவள் கேட்கவும், “நல்லா இருக்கேன் மா!” என்றவருக்கு அவளை எங்கேயோ பார்த்தாய் நினைவு. ஆனால் எங்கே என்று சரியாய் கணிக்க முடியவில்லை. அவர் மகள் முகத்தைப் பார்த்தார்.

“ம்மா... ஆதிரை அண்ணி, நம்ப அண்ணன் லவ் பண்ற பொண்ணு!” பிரதன்யா கூறவும், “ம்மா...” என அபி ஆதிரையை அழைத்து அறைக்குள்ளே நுழைந்தான்.

“அபி, அங்கிளோட இரு. அம்மா ஃபைவ் மினிட்ஸ்ல வரேன், கிளம்பலாம்!” என அவனை அனுப்பி வைத்தாள். இத்தனை நேரம் புன்னகை முகமாக இருந்த பொன்வாணியின் முகம் வேண்டாத விருந்தாளியை வரவேற்கும் வகையில் மாறியது.

“உம் பையனா அது?” அவர் கேட்டதும், “ஆமா மேடம்...” என இவள் தலையை அசைத்தாள்.

“ஏம்மா... இன்னும் நாலு வருஷத்துல அவனுக்கு விவரமே தெரிஞ்சுடும். இவ்வளோ பெரிய பையனை வச்சுட்டு உனக்கு இன்னொரு கல்யாணம் அவசியமா? அவன்தான் ஏதோ புரியாம உன் பின்னாடி சுத்துறான். நீயாவது அவனுக்குப் புத்தி சொல்லக் கூடாதா? என் பையன் இருக்க இருப்புக்கு உன்னைப் போய் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்தக் கால்ல நிக்கிறான்? நீயே சொல்லு!” இத்தனை நாட்கள் கண்காணாது இருந்த ஆதிரை நேரில் வரவும், வார்த்தையை சாட்டைப் போல சுழற்றி அடித்தார் பொன்வாணி. ஆதிரை அவர் வேறு ஏதோ பேசப் போகிறார் என நினைத்திருந்தவள், திராவகம் வீசுவதைப் போல பேசவும், இவளுக்கு சட்டென முகம் மாறியது.

இதே இடத்தில் பொன்வாணி இல்லாது வேறு யாராவது இருந்திருந்தால் பதில் எப்படி கூறியிருப்பாள் எனத் தெரியாது. ஆனால், தேவாவின் தாய் இந்தப் பெண்மணி என அறிவு நினைவூட்ட, முகம் மாறாதிருக்க பிரயத்தனப்பட்டாள்.

“ம்மா... என்ன பேசுறீங்க நீங்க?” ஹரி அதட்ட, “ஆதிரை!” என அந்த தேவாவின் கோபமான குரலில் அனைவரும் திரும்பினர்.

“நீ வீட்டுக்கு கிளம்பு!” அவளது மணிக்கட்டைப் பிடித்து அவன் இழுக்க, பொன்வாணியிடம் திரும்பியவள், “இத்தனை வருஷமா பெத்து வளர்த்த உங்கப் பேச்சையே கேட்காதவர், நேத்து வந்த என் பேச்சை கேப்பாருன்னு நினைக்குறீங்களா மேடம்?” என வெகு நிதானமாகக் கேட்டாள். குரல் அழுத்தமாய் வந்து விழுந்தது. உங்கள் பேச்சு என்னை எந்த வகையிலும் காயப்படுத்தாது என திடமாய் நின்றாள். ஆனாலும் விழிகள் மெல்ல கலங்கப் பார்த்தன.

“உன்னைக் கிளம்புன்னு சொன்னேன் நான்!” தேவா அதட்ட, அவனிடமிருந்து தன் கையை உருவியவள் அனைவரும் தன்னையே பாவமாய் பார்ப்பது பிடிக்காது விறுவிறுவென தன் கைப்பையை எடுத்து மாட்டினாள். பின்னர் ஏதோ யோசித்துவிட்டு அதை திறந்து ஒரு இன்னெட்டை எடுத்து ராகினியிடம் நீட்டினாள். அவள் அதை வாங்கிக் கொண்டதும் சின்னவளின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள்.

“ஆதிரை, சாரி. அம்மா ஏதோ கோபத்துல பேசிட்டாங்க!” ஹரி மன்னிப்பை கேட்க, “அம்மாவுக்கு உடம்பு சரியில்லைல அண்ணி! அதான் இப்படி ஏதோ உளர்றாங்க. நீங்க பெருசா எடுத்துக்காதீங்க!” என பிரதன்யா தவிப்புடன் இவள் கையைப் பிடித்தாள்.

“பரவாயில்லை பிரதன்யா, நான் எதுவும் நினைச்சுக்கலை!” என இருவரையும் பார்த்துப் புன்னகைத்தவள், “அபி, அங்கிள்கிட்டே சொல்லிட்டு வா... நம்ப கிளம்பலாம்!” என்றாள். ஏனோ அங்கே இருக்க பிடிக்கவில்லை. அவர் முகத்தில் அடித்தது போல பேசவும், மனம் தனக்குள்ளே சுருண்டு போனது. ஆதிரை யாரையும் நெருங்கிப் பழக விடாததற்கு இதுவும் ஒரு காரணம். அவள், அவள் இஷ்டம் என்று வாழும் வாழ்க்கையில் அவவளைப் பற்றி மூன்றாவது மனிதர் கருத்துக் கூறுவதை அவள் விரும்பமாட்டாள். அவளும் அடுத்தவர்களின் விஷயத்தில் பெரிதாய் தலையிட மாட்டாள். இன்றைக்கு பொன்வாணியின் பேச்சு எதிர்பாராமல் மனம் அதிர்ந்து போனது. முகத்திற்கு நேரே இப்படி மனம் நோக பேசுவார்களா என இவளுக்கு கோபமும் ஆதங்கமும் பொங்கியது. பெற்ற மகனிடம் காண்பிக்க முடியாத கோபத்தை தன்னிடம் காட்டுகிறாரா என எண்ணி மனம் பொங்கியது.

“நான் வரேன் சார்!” கோபாலிடம் சம்பிரதாயத்திற்காக கூறியவள், அபி வரவும், விறுவிறுவென வெளியே சென்று வாகனத்திலேறி அதில் சாவியைப் பொருத்தினாள்.

“உன்னை யார் இங்க வர சொன்னது?” அடிக்குரலில் கடுப்புடன் கேட்டவாறே தேவா அவளுக்கு அருகே வந்து நின்றான். ஆதிரை அவன் முகத்தைப் பார்க்கவில்லை. ஏனோ இத்தனை நேரம் நன்றாய் இருப்பது போல நடிக்க முடிந்தது. ஆனால், தேவாவின் முகத்தைப் பார்த்தால் கண்ணீர் கன்னத்தை தாண்டிவிடும் என பயமாய் இருந்தது.

சாவியை திருப்பி வாகனத்தை முடுக்கியவள், “அபி, பார்த்து ஏறு...” என்றாள். அபினவ் அவள் பின்னே ஏறி அமர்ந்தான்.

“நான் உன்கிட்ட கேட்குறேன் ஆதி. ஆன்சர் மீ!” கடுப்போடு அவளது வாகனச் சாவியை கையிலெடுத்தான் தேவா.

பொறுமையாய் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “நேத்து நீங்க கிளம்பும் போது உங்களோட முகம் ஒருமாதிரி இருந்துச்சு. நைட்டெல்லாம் அதே நினைப்பா இருந்துச்சு. அதான் காலைல எழுந்ததும் உங்களை நேர்ல பார்த்துட்டு மேடம்கிட்டேயும் ரெண்டு வார்த்தைப் பேசலாம்னு வந்தேன்!” என்றாள். அவளது வார்த்தையில் தேவாவின் கோபம் நீர்த்துப் போனது. ஆனாலும் அவள் முகத்தை வைத்தே அகத்தை அறிந்தவனுக்கு தாயின் பேச்சில் ஆற்றாமை அரித்தது.

“ப்ம்ச்... ஃபோன் பண்ணி பேச வேண்டிய தானே டீ. இப்போ அவசியம் நேர்ல வந்து பார்க்கணுமா?” என ஆதங்கத்துடன் முணுமுணுத்தவன், “சாரி, அம்மா அப்படித்தான். பிடிக்கலைன்னா முகத்துல அடிச்ச மாதிரி பேசிடுவாங்க!” என்றான்.

“ப்ம்ச்... நீங்க எதுக்கு சாரி கேட்கணும் தேவா சார்? உங்க அம்மா பேசுனதுல தப்பு இருக்கதா எனக்குத் தெரியலை!” என வெற்றுப் புன்னகையை உதிர்த்தவளை தேவா புரியாது பார்த்தான்.

“உங்கம்மா சொன்ன மாதிரி இன்னும் ஐஞ்சாறு வருஷத்துல அபி காலேஜே போய்டுவான். அப்படி இருக்கப்போ எனக்கு இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசியம் இருக்கு. அவங்க கோபம், கேள்வி ரெண்டுமே நியாயமானது சார். அதான் நான் அமைதியா வந்துட்டேன்!” என்றாள். உனக்காகப் பார்க்கிறேன் என அவளது பார்வை சொன்னது. ஆனாலும் வார்த்தையில் அதை புகுத்த மனம் முரண்டியது. இவர்களுக்கு இடையில் நானென்ன பந்தா, தூக்கி அடிக்க என தேவாவின் மீது கோபமாய் வந்தது.

அவனுக்கு எரிச்சல் மூண்டது. “கடுப்பைக் கிளப்பாம கிளம்பு ஆதிரை!” என்றான் சினத்தோடு.

“ப்ம்ச்... எதுக்கு உங்களுக்கு இவ்வளோ கோபம் சார். உங்க ஒருத்தர் பிடிவாதத்துக்காக அத்தனை பேரையும் கஷ்டப்படுத்தாதீங்க. உங்க அம்மாவை இப்படி பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கு. பெத்தவங்க கூடவே இருக்கதால உங்களுக்கு அருமை தெரியலை போல!” என்றாள்.

“இப்போ என்னை என்ன செய்யணும்ன்ற?” அவன் கேட்க, “அது... உங்க அம்மா, அப்பா பார்க்குற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்க தேவா சார். அவங்களுக்கும் அதான் சந்தோஷம். அரேஞ்ச் மேரேஜ் பண்ணி யாருமே நல்லா வாழலையா என்ன? போகப் போக உங்களுக்கும் பிடிச்சுடும்!” என்றாள் தயங்கியபடியே.

“காலேஜ் படிக்கும்போதுதான் லாஸ்டா கெட்ட வார்த்தைப் பேசுனது!” என்றான் சீறலாக. ஆதிரை அவனைப் புரியாது பார்த்தாள்.

“அப்போ பேசுனது. மறுபடியும் இன்னைக்கு பேச வச்சுடாத டீ. ஒழுங்கா கிளம்பிடு!” என சாவியை வாகனத்தில் பொருத்தினான்.

ஆதிரை அவனை முறைத்து வண்டியை முறுக்கினாள். “இப்போ கூட ஒன்னும் டைமாகலை தேவா சார். நீங்க உங்க பேரண்ட்ஸ் பேச்சை கேட்கலாம். என்னைப் பத்தி கவலைப்படாதீங்க. உங்களோட நோ, யெஸ் ரெண்டுமே என்னை அபெக்ட் பண்ணாது. ஐ யம் ஓகே டு பி அ சிங்கிள் பேரண்ட் ஃபார் எவர்!” என்றுவிட்டு போனவளை தேவா தீயாய் முறைத்தான்.

‘யெஸ்... நான் இவளை எந்த வகையிலயும் பாதிக்கலை. இவளுக்கு நான் வேணா. நான் மட்டும்தான் இவ வேணும்னு போராடுறேன். நோ, யெஸ் ரெண்டுமே அபெக்ட் பண்ணாதாம். ஹவ் க்ரூயல் ஷீ இஸ்
!’ மூளை வரைக் கோபம் குபுகுபுவென உயர்ந்து எழ, மண்டை சூடாகிப் போயிருந்தான் தேவா.

தொடரும்...

ஆயா சத்தியமா நெக்ஸ்ட் அப்டேட்ல மேரேஜ்ங்க 😂😌😉



 
Well-known member
Messages
445
Reaction score
323
Points
63
Yaruku janu ma ippo varaikkum deva oda love yazh ku yae oru porutu ah theriyala ithula kalyanam panna vachi legal ah avan ah adi vanga vaika pora ah amma pondati kita athu than ah unkitta hero ah va avan mattuna avan ah punching bag ah aakita ah it's too bad janu ma
 
Well-known member
Messages
510
Reaction score
383
Points
63
தேவா அம்மா இவ்ளோ கடுமையா பேசி இருக்க வேண்டாம், பாவம் ஆதிரை
 
Top