• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
நெஞ்சம் – 35 💖

“இந்த ஈடு இட்லியோட போதும்த்தை.. அவரும் மாமாவும் மட்டும்தானே சாப்பிடணும். ஹாட்பாக்ஸ்ல ஏற்கனவே நாலு இட்லி இருக்கு!” என்ற ஜனனி சாப்பிட்ட தட்டைக் கழுவி கூடையில் கவிழ்த்திவிட்டு ராகினியைத் தூக்கி அவளது வாயைத் துடைத்தாள்.

“சரி... நான் பாலை காய்ச்சி வைக்கிறேன். நீ தூங்கப் போக முன்னாடி மறக்காம குடிச்சிடு...” என்று பொன்வாணி கூறவும், இவள் தலையை அசைத்துவிட்டு கூடத்திற்கு வந்தாள்.

ஹரியும் தேவாவும் அப்போதுதான் சாப்பிட வந்தனர். எல்லோரும் இன்றைக்கு சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று திட்டத்துடனே ஹரி தமையனுடன் உண்ண அமர்ந்தான். கோபால் உண்டுமுடித்து எழ, ஜனனி இருவருக்கும் பரிமாறினாள்.

“நீ போய் உட்காரு ஜனனி... நாங்க பார்த்துக்குறோம்!” தேவா அவளை அமரப் பணித்துவிட்டு உண்ணத் துவங்க,

“தேவாப்பா.... ஃபோன்!” என ராகினி அவனது அலைபேசியை எடுத்து வந்து கொடுத்தாள். சிறிது நேரம் அதில் விளையாடுகிறேன் என சில பல நிமிடங்களுக்கு முன்னே அவனுக்கு முத்தமிட்டு கைபேசியை வாங்கிச் சென்றிருந்தாள்.

“ஆதிரையாழ்!” திரையில் அவளது பெயர் மின்ன, ஹரி எட்டிப் பார்த்தான். அருகே இருந்த ஜனனிக்கும் பெயர் தெளிவாய் தெரிய, அவள் அதிர்ந்து விழித்துக் கணவனைப் பார்த்தாள்.

‘நான் சொன்னேன் கேட்டீயா நீ?’ கணவன் கண்ணாலே அவளிடம் கூற, தேவா நிமிர்ந்து அவனை முறைத்துவிட்டு அழைப்பை ஏற்று, “ஹலோ!” என்றவாறே அறைக்குள் சென்றான்.

“ஹரி... என்னடா இது?” ஜனனி அதிர்ச்சி விலகாது கேட்டாள்.

“ஹக்கும்... காலைலயே நான் சொன்னேன்ல டீ. நீதான் நம்பளை. எப்படியும் கொஞ்ச நேரத்துல எல்லாருக்கும் தெரிஞ்சிடும்!” அவன் மெல்லிய குரலில் உரைத்தான்.

“என்ன பண்றீங்க தேவா சார்?” காலையில் துவைத்து காயப்போட்ட துணிகளை மெத்தையில் பரப்பிவிட்டு மடித்துக் கொண்டிருந்தாள் ஆதிரை.

“ஹம்ம்... சாப்பிட்டுட்டு இருக்கேன்...” என்றவன், “என்ன ஃபோன் பண்ணி இருக்க?” எனக் கேட்டான்.

“ஏன்... நான் ஃபோன் பண்ண கூடாதா?” அவள் கேட்டதும், “இல்ல... விஷயம் இல்லாம ஃபோன் பண்ண மாட்டீயே? எனிதிங்க் இம்பார்டெண்ட்?” கேள்வி எழுப்பினான்.

“ப்ம்ச்... பெருசா ஒன்னும் இல்ல தேவா சார். காலைல ஒரு மனுஷன் மிஸ் மிஸ் ஹோம்வொர்க் பண்ணலைன்னு நின்னுட்டு இருந்தாரே. இப்போ என்ன பண்றார்னு கேட்க கால் பண்ணேன்!” கேலியுடன் கூறியவள் சேலையை மடித்து அலமாரியில் சொருகினாள்.
அவள் பேச்சில் இவனுக்கு மெலிதாய் கோபம்... இல்லை, சரியாகக் கூறினால் வெட்கம், அவஸ்தை வேறு என்னவோ வந்து ஒட்டிக் கொண்டது.

தலையைக் கோதச் சென்று பின்னர் சாப்பிட்ட கை என்பதை உணர்ந்தவன், “ஆதிரை!” என்றான் அதட்டலாய். ஆனால் குரலில் காரமில்லை.

“ம்... என்கிட்டதான் உங்க அதட்டல் உருட்டல் எல்லாம். பெருசா ஐ கேன் ஹேண்டில்னு வீராப்பா சொன்னீங்க. இப்போ தம்பியைத் துணைக்கு கூப்பிட்டுட்டு இருக்கீங்க. யூ ஆர் பிஹேவிங் லைக் அ சைல்ட் தேவா சார்!” அலட்டல் இல்லாது அவனைக் கேலி செய்தவளின் உதட்டோரம் புன்னகை நெளிந்தது. வேலை முடிந்து வீட்டிற்கு வந்தப் பின்பும் கூட தேவாவின் அவஸ்தையான முகம், பதற்றமான செய்கை என அனைத்தும் இவளது மூளையை அரித்தன.

காலையில் நடந்ததை போல இப்போதும் அவன் அப்படித்தான் தவித்துக் கொண்டிருப்பானோ என எண்ணத்திலே உழன்றவள் ஒரு முடிவாய் அழைத்துவிட்டாள். அவர்களுக்கு இடையேயான மோதல் தற்காலிக விடுப்பில் சென்றுவிட்டது.

ஆதிரையின் பேச்சில் ரோஷம் வரப்பெற்றவன், “லைன்லே இருடீ!” என்றுவிட்டு விறுவிறுவென வெளியே சென்றான்.

சிறகடிக்க ஆசை நாடகத்தைப் பார்த்துக் கொண்டே ஆவி பறக்கும் இட்லியை தட்டில் எடுத்துக்கொண்டு வந்தார் பொன்வாணி.

“ம்மா...” தேவா அவரை அழைக்க, பெரியவரின் கவனம் தொலைக்காட்சி தொடரில் இருந்தது.

“ம்மா... உங்களைத்தான் கூப்பிட்றேன்!” இவன் சற்று கடுப்புடன் அழைக்க, “என்ன டா... சாப்பிட்டு போய் ஃபோன் பேச வேண்டியது தானே... இட்லி வைக்கவா?” எனக் கேட்டு அவன் தட்டில் இட்லியை வைத்தவர் மீண்டும் தொடரில் கவனமானார்.

“அம்மா...!” கடுகடுத்தவன், “அப்பாவை எங்க?” எனக் கேட்டான். ஹரியும் ஜனனியும் அவனைத்தான் பார்த்திருந்தனர்.

“பிரஷர் மாத்திரை போட போனேன் டா!” அறைக்குள்ளிருந்து வெளியே வந்தார் கோபால்.

“ம்மா... அப்பா, எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு. நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்!” கடகடவென அவன் போட்டு உடைத்து விட, ஆதிரை அதிர்ந்தாள்.

“தேவா சார்... தேவா சார்! பொறுமைன்னாலே உங்களுக்கு என்னென்னு தெரியாதா?” அவள் இரைய, அலைபேசியைக் காதுக்கு கொடுத்தவன், “சும்மா இருந்தவனை நீதானே டி உசுப்பேத்திவிட்ட!” என மெல்லிய குரலில் கூறியவாறே அகன்றான்.

“ஏங்க... என்ன சொல்லிட்டு போறான் இவன்?” பொன்வாணி காதில் கேட்டது உண்மையா எனத் தெரியாது திகைத்துப் போயிருந்தார். கோபால் மகன் செல்லும் திசையைப் பார்த்தான்.

“ஏய்... அந்த டீவியை ஆஃப் பண்ணு டி!” தாய் அதட்டவும், “ம்மா... அண்ணன் பேசுனது எனக்கு ராங்கா கன்வே ஆகியிடுச்சும்மா!” எனத் தலையை சொரிந்தவாறே படக்கென்று தொலைக்காட்சியை அணைத்துப் போட்டாள் பிரதன்யா. கண்டிப்பாய் தன் காதில் கேட்டது பிரம்மையாகத்தான் இருக்கும். நிச்சயமாய் அது உண்மையாக இருக்காது என சின்னவள் உறுதியாய் நம்பினாள்.

“ஏங்க... நீங்க என்ன சிலை மாதிரி நிக்குறீங்க? உங்க மகனைக் கூப்பிட்டு என்ன சொன்னான்னு கேளுங்க!” வாணி கணவர் தோளில் தட்டினார்.

“ஹரி... அவன் என்னமோ உளறீட்டுப் போறான்!” அடுத்ததாக இளைய மகனிடம் திரும்பினார்.

“ப்ம்ச்... அவன் உளறீட்டு எல்லாம் இல்லை மா. தெளிவா சொல்லீட்டுப் போறான். இந்த வீட்டுக்கு மருமகளை செலக்ட் பண்ணிட்டான். உங்ககிட்ட சொல்ல கூச்சப்பட்டுட்டு காலைல என்கிட்ட சொன்னான். அதான் நைட் பேசலாம்னு இருந்தோம். இப்போ அவனே பட்டுன்னு போட்டு உடைச்சிட்டான்!” இவன் கடகடவென ஒப்பித்தான்.

“டேய்... தேவா அப்படிலாம் பண்ணவே மாட்டான். நீதான் சும்மா எதாவது விளையாடீட்டு இருப்ப!” பொன்வாணி மகனை முறைத்தார்.

“ஏம்மா... நீங்க நினைக்கிற அளவுக்கு எல்லாம் அவன் நல்லவன் இல்லைம்மா... நானா இப்படி உன்கிட்ட சொன்னேன். அவன் சொன்னது உன் காதுல விழலையா?” இவன் சத்தம் போட்டான். பிரதன்யா இவனருகே ஓடி வந்தாள்.

“ஹரிண்ணா... எனக்கு ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி இருக்கு. இதெல்லாம் நிஜமா? நம்ம தேவாண்ணா லவ் பண்ணுதா?” அவள் குரல் அதிசயித்தது.

“எல்லாரும் காதை தீட்டி வச்சு நல்லா கேளுங்க. நம்ப ஆஃபிஸ்ல வொர்க் பண்ற ஆதிரையைத்தான் தேவா லவ் பண்றான். நீங்க அவங்களை பார்த்திருக்க மாட்டீங்க!” என்றான்.

“இல்லங்க... கோவிலுக்கு வந்தப்போ பார்த்தோமே!” ஜனனி கூற, பொன்வாணிக்கு நினைவில் இல்லை. அவர் யாரொன யோசித்தார்‌. நியாபகத்திற்கு வரவில்லை. எல்லோருடைய பார்வையும் அறைக்குள்ளே நுழைந்தவனின் பின்னே சென்றது.

“தேவா சார், எதை எப்படி சொல்லணும்னு ஒரு வரைமுறை இருக்கு. இப்படியா பட்டாசு மாதிரி பொரியுறது? இது நல்லா இருக்கா?” ஆதிரைக் கடிந்தாள்.

“ஆதிரை, இதைத்தானே நீ எக்ஸ்பெக்ட் பண்ண. தைரியமா சொல்லிட்டேன் நான்!” அவன் கேலியாய் கூறியதும் அவளிடம் வெகுவாய் தடுமாற்றம் படர்ந்தது.

“அது...நான்!” எனத் திணறினாள். உண்மையில் அவனுக்காகத்தானே அவளும் யோசித்தாள். அதை ஒப்புக் கொள்ள மனம் வரவில்லை.

“ஆதிரை!” அவன் மென்மையாய் அழைத்ததும் அலைபேசியை தூர நகர்த்தி காதைத் தேய்த்துக் கொண்டு அருகில் இழுத்தாள். இதோடு இரண்டாவது முறை காதின் மென்னரம்புகள் அதிர்ந்து அவஸ்தையைக் கூட்டின. அன்றைக்கு அவன் மன்னிப்பு கேட்ட போதும் கூட இப்படித்தான் சொல்ல முடியாத உணர்வொன்று அவளைத் தழுவிச் சென்றது.

“ஹம்ம்...” ஆதிரைக்கு என்னப் பேசுவது எனத் தெரியாது வார்த்தை வரவில்லை.

“இங்க என்ன நடக்கும்னு நினைச்சு நீ கன்ப்யூஸ் பண்ணிக்காத ஆதி. நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்!” அவன் அமைதியாய் கூறினான்.

“சரி... சரி. முதல்ல போய் உங்க அப்பா, அம்மாகிட்டே பேசுங்க தேவா சார். நீங்க கொடுத்த ஷாக்ல மிரண்டுப் போய்ருப்பாங்க. மறக்காம காலைக் கட் பண்ணிடுங்க. இல்லைன்னா அவங்க என்னைப் பத்தி பேசுறதை நானே கேட்ருவேன். அப்புறம் என் டிசிஷன்ல இருந்து பேக்கடிச்சாலும் அடிச்சிடுவேன்!” சிரிப்புடன் உரைத்தாள்.

“ப்ம்ச்... நீயா எதையாவது உளறாத ஆதிரை. அப்படியெல்லாம் யாரும் பேச மாட்டாங்க. அம்மாவை மட்டும்தான் கன்வின்ஸ் பண்ணணும். மத்தபடி எல்லாரும் ஓகே சொல்லிடுவாங்க!” இவன் அதட்ட, “நல்லது... நீங்க என்னென்னு பாருங்க” என அவள் அழைப்பைத் துண்டிக்க, வெளியே சென்றான் தேவநந்தன்.

மொத்தக் குடும்பமும் இவன் வருகைக்காகத்தான் காத்திருந்தனர். நேரே சென்று உணவு மேஜையில் அமர்ந்து பாதியில் விட்ட உணவைத் தொடர்ந்தான். அவன் இட்லியைப் பிய்த்து சட்னியில் தோய்த்து வாயில் வைக்க, “தேவா...” என கோபால் மகனை அழைத்தார்.

“என்னப்பா?” நிமிர்ந்து தந்தை முகம் பார்த்தான்.

“ஹரி என்னமோ சொல்றான். அதெல்லாம் உண்மையா?”

“ஆமாப்பா... ஹரி சொல்றது உண்மைதான். எனக்கு ஆதிரையைப் பிடிச்சிருக்கு. உங்க சம்மதத்தோட அவளை மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்!” என்றவன் உண்டுவிட்டு எழுந்து சென்றான்.

“டேய் தேவா... பொண்ணு எந்த ஊரு டா. நம்ப‌ ஆளுங்களா?” பொன்வாணி கேட்டதும், அவன் தாயை அழுத்தமாய்ப் பார்த்தான்.

“வாணி!” கணவர் அதட்டலிட்டார்.

“சரி... சரி, விடுங்க. என்ன ஆளுங்களா இருந்தா என்ன? எம்மகன் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சதே எனக்கு சந்தோஷம் ‌ இப்போலாம் எல்லாரும் லவ் மேரேஜ் தானே பாண்றாங்க. என்ன புள்ளை நம்ப மதமா? இல்லை வேத்து மதமான்னு தெரிஞ்சுக்க கேட்டேன்!” அவர் முகத்தை தோளில் இடித்தார்.

“ரைட்டு...‌ அம்மா வில்லி வேலை ஆரம்பம்!” ஹரி முணுமுணுத்தான். தேவா வந்து நீள்விருக்கையில் அமர்ந்தான்.


“தேவா, அந்தப் பொண்ணு எந்த ஊரு. அப்பா, அம்மா எங்க இருக்காங்கன்னு சொல்லு‌. நாங்க போய் நேர்ல பார்த்துப் பேசிட்டு வர்றோம்!” கோபால் மகனிடம் கேட்க,

“ப்பா... அவளுக்கு அம்மா, அப்பா இல்லை. அவ தனியாதான் இருக்கா!” என்றவன், “இல்லை... அவ அவளோட மகன் கூட இருக்கா!” எனத் திருத்தினான்.
பெற்றவர்கள் புரியாது விழித்தனர்.

“தம்பியோட இருக்காளா டா? சரியா சொல்லு!” பொன்வாணி மகனது பேச்சைத் திருத்தினார்.

“சரியாதான் சொல்றேன். அவளுக்கு ஆல்ரெடி
ஒரு வாழ்க்கை சரியா அமையலை. சோ, பையனும் அவளுமா இருக்காங்க!” என்றான் அழுத்தமாய். பொன்வாணி அதிர்ந்து போனார்.
 
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
“டேய்... என்ன பேசுறன்னு தெரிஞ்சுதான் பேசுறீயா... புத்தி கித்தி கெட்டுப் போச்சா இவனுக்கு. ஏற்கனவே கல்யாணம் ஆனவளைப் போய் கட்டிக்கிறேன்னு சொல்றான். என்னென்னு கேளுங்கங்க!” அவர் குரலை உயர்த்தினார்.

“தேவா... என்னடா சொல்ற. ஏற்கனவே குழந்தையோட இருக்க பொண்ணு நம்ப வீட்டுக்கு சரிபட்டு வராது டா!” கோபாலுக்கும் உடன்பாடில்லை என அவர் குரல் உணர்த்தியது.

“எனக்கு அந்தப் பொண்ணைத்தான்பா பிடிச்சிருக்கு. அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன். நீங்க ரெண்டு பேரும்தான் என் மேரேஜை நல்லபடியா நடத்தி வைக்கணும் பா!” இவன் உறுதியாய் உரைத்தான்.

“தேவா... ஏதோ கல்யாணம் தள்ளிப் போய்ட்டே இருக்குன்றதுக்காக நீ இப்படியொரு முடிவை எடுக்கலாமா டா? பெத்த அம்மா, அப்பா எதுக்காக இருக்கோம்? ஹம்ம்... ஏற்கனவே அத்துவிட்டவளைப் போய் எம்புள்ளைக்கு கல்யாணம் பண்றதா? கேட்கவே நாரசமா இருக்கு டா. என் புள்ளையோட இருப்பென்ன. நான் நல்ல பொண்ணா பார்க்குறேன் டா. அடுத்த முகூர்த்ததுலயே கல்யாணம் பண்ணிடலாம். நீ உன் மனசை மாத்தப் பாரு டா!” பொன்வாணிக்கு மனதே ஆறவில்லை. ஒரு பேச்சுக்கு கூட மகனுக்கு விவாகரத்தான பெண்ணைத் திருமணம் செய்வதில் துளியும் விருப்பமில்லை. அவரது முகமே அஷ்டக் கோணலானது.

“ம்மா... உங்கப் புள்ளையோட வொர்த் என்னென்னு தெரிஞ்சுதான் நீங்க பார்த்த ரெண்டு பொண்ணுங்களும் வேணாம்னு உதறிட்டுப் போனாங்க!” அமைதியாய் அழுத்தமாய் உரைத்தான்.

“டேய்... அந்த ரெண்டு சிறுக்கிகளுக்கும் என் புள்ளையைக் கட்ட குடுத்து வைக்கலை டா. அவங்களை விட இன்னும் அழகா நல்ல பொண்ணா பார்த்து உனக்கு அம்மா கல்யாணம் பண்ணி வைக்கிறேன் டா!” என்றார் படபடவென.

“ப்ம்ச்... ம்மா, ரெண்டு தடவையுமே எந்த ஒரு கேள்வியும் கேட்காம நீங்க சொல்ற பொண்ணுக்கு ஓகே சொன்னேன். பட், அவங்க ரெண்டு பேருக்கும் என்னைப் பிடிக்கலை. இப்போ நான் என் வாழ்க்கைக்கு ஒத்து வருவான்னு ஒரு பொண்ணைப் பார்த்திருக்கேன். உங்க விருப்பத்தை நான் மதிச்ச மாதிரி, என்னோட ஆசையும் கன்சிடர் பண்ணுங்க. நீங்க எத்தனை பொண்ணைக் கூட்டீட்டு வந்து நிறுத்தினாலும் சரி. எனக்கு ஆதிரையைத்தான் பிடிச்சிருக்கு. அவளைத்தவிர யாரையும் நான் அக்செப்ட் பண்ண மாட்டேன்!” அத்தனை உறுதியாய் கூறிவிட்டான்.

“தேவா... தோளுக்கு மேல வளர்ந்தப் புள்ளைன்னு பார்க்குறேன். என்னை கை நீட்ட வச்சுடாத டா. ஏற்கனவே கல்யாணமாகி தீர்த்துவிட்டவளைப் போய் பிடிச்சிருக்குன்னு சொல்ற? ஏதோ நம்ப சாதி சனம் இல்லைனாலும் பரவாயில்லைன்னு நினைச்சா நீ என்ன சொல்லிட்டு இருக்க?” கோபத்தோடு கூறியவர், “ஏன் நீங்க எதுவும் சொல்லாம அமைதியா இருக்கீங்க?” என கணவரிடம் காய்ந்தார்.

“வாணி, எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு பேச முடியாது. கொஞ்சம் பொறுமையா இரு. எதுனாலும் யோசிச்சு முடிவு பண்ணுவோம்!” என்றார்.

“ஏங்க, இதுல யோசிக்க என்ன இருக்கு? பொறுமையா இருஇருன்னு சொல்லித்தான் அவன் இப்படியொரு விஷயத்தை பேசுற அளவுக்கு வந்துடுச்சு. இன்னைக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்றவன், நாளைக்கு அவளை கல்யாணம் பண்ணிக் கூட்டீட்டு வந்தா என்ன பண்றது? நம்பதான் தப்பு பண்ணிட்டோம். பேசாம என் அண்ணன் பொண்ணு மலரை இவனுக்கு கல்யாணம் பண்ண கேட்டப்பவே சரி சொல்லி இருந்தா, இந்நேரம் கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மூனு மாசமாகிருக்கும்!” அவர் குரல் ஏகத்திற்கு பொறுமை இழந்து வந்தது. மகன் சொன்னதை திரும்ப திரும்ப கூறியதும் இவருக்கு இரத்த அழுத்தம் உயர்ந்தது.

“ம்மா... நான் சொல்றதை உடனே உங்களால அக்செப்ட் பண்ண முடியாதுதான். பட், பொறுமையா யோசிங்க. நான் என்னோட முடிவுல ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கேன். என் மனசை மாத்தலாம்னு நினைக்காதீங்க. தட்ஸ் இம்பாசிபிள்!” என்றவன் படக்கென எழுந்து அறைக்குள் நுழைந்தான்.

“என்ன பேசிட்டு போறான் பாருங்க... ஏன் டா ஹரி, அவன்தான் சொன்னானா உனக்குமா அறிவில்லை. அவனுக்கு சொல்லி புரிய வைக்க மாட்டீயா? ரெண்டு பேரும் புத்தி கெட்டுப் போய் திரியுறீங்களா டா?” மகனிடம் பாய்ந்தார்.

“ப்ம்ச்... ம்மா, அண்ணன் என்ன சின்ன குழந்தையா? நான் சொல்லி புரிய வைக்க. அவன் வாழ்க்கைக்கு எது நல்லது கெட்டதுன்னு அவனுக்கே நல்லா தெரியும். எனக்கு அவனோட முடிவுல அப்ஜெக்சன் இல்ல. வாழப்போறது அவங்ங. அவங்க ரெண்டு பேருக்குமே ப்ராப்ளம் இல்ல, நீ கோபப்படாம நிதானமா யோசி. உன் மகன் ஆதிரையோட வாழ்ந்தாதான் சந்தோஷமா இருப்பான். நீ ஊர்ல இல்லாத அழகியைக் கூட்டீட்டு வந்தாலும் அவன் அசைய மாட்டான். அவன் முடிவுல ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கான். அதை நீ முதல்ல புரிஞ்சுக்கோ!” இவன் கத்திவிட்டு கோபத்துடன் அறைக்குச் சென்றான். பொன்வாணியின் பேச்சு அவனுக்கு உவப்பாய் இல்லை. அவனுடைய திருமணத்தின் போதும் கூட இப்படி சண்டை வந்ததுதான். ஆனால் ஜனனி சொந்தப் பெண் என்பதால் சமாளிக்க முடிந்தது. ஆனால் ஆதிரை விஷயத்தில் தாயை சரிக்கட்ட முடியும் என்று துளியளவும் அவனுக்கு நம்பிக்கையற்றுப் போனது.

“நான் பெத்த ரெண்டு பேரும் என் கையை மீறிப் போய்ட்டாங்க. பெத்த அம்மா சொல்றேனே... அது நல்லதுக்குன்னு புரியுதா பாருங்க. எல்லாம் தனியா தொழில் செஞ்சு சம்பாரிக்க ஆரம்பிச்சுட்டோம்னு திமிருல என் பேச்சை காது குடுத்துக் கேட்க மாட்டேன்றானுங்க. ஊர்ல உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்க. கல்யாணாமாகாதப் பையன்னதும் வளைச்சுப் போடன்னே வந்துடுவாளுங்க சிறுக்கீங்க” பொன்வாணி புலம்பத் தொடங்க, கோபால் மனைவியை அதட்டி உறங்க அழைத்துப் போனார்.

ராகினி இந்த சண்டையைப் பார்க்க வேண்டாம் என்று ஜனனி அவளைத் தூங்க வைக்கத் தூக்கிச் சென்றுவிட, இவர்களுடைய உரையாடல் மட்டும் செவியில் விழுந்தது.

பிரதன்யா நடந்த சண்டையைப் பார்த்தாலும் அது அவளது சிந்தையில் பதியவில்லை. அவளுக்கு ஆதிரையின் பெயர் மட்டும் மனதில் ஆழப்பதிந்தது. ஆதிரை எப்படி இருப்பாள்? ஒல்லியா? குண்டா? வெள்ளையா? கருப்பா? என மனம் ஆராய்ச்சியைத் தொடங்கியது. தன் அண்ணன் விசுவாமித்திரனை மயக்கிய அந்த மேனகையைப் பார்க்க வேண்டும் என்று அவளுக்கு ஆர்வம் ஊற்றுப் பொங்கிற்று. நாளைக்கே சென்று ஆதிரையை சந்திக்கலாம் என்றெண்ணியவாறே உறங்கச் சென்றாள்.

மறுநாள் காலை தேவா குளித்துக் கிளம்பி வந்து சாப்பிட அமர்ந்தான். அவரவர் வேலையில் அனைவரும் கவனமாய் இருந்தனர். ராகினிக்கு தலையைப் பின்னிக் கொண்டிருந்தாள் ஜனனி. ஹரி அவசர அவசரமாய் குளித்து முடித்து வந்தான்.

“சாப்பிடு தேவா... பூரி சுட்டுருக்கேன்!” நேற்றைக்கு எதுவுமே நடவாதது போல பொன்வாணி மகனுக்கு உணவைப் பரிமாற, அவன் மனதிற்குள் மணியடித்தது. கண்டிப்பாக தாய் எதையாவது யோசித்து அதை செயல்படுத்த துணிவார் என எண்ணியவாறே உண்டான்.

“ஏன்யா தேவா, அம்மா உன் நல்லதுக்குத்தானே சொல்வேன்!” அவனுக்கு அருகே அமர்ந்து மகன் கையைப் பிடித்தார். அவனால் எதுவும் பதில் பேச முடியவில்லை. ஏனென்றால் மற்ற பிள்ளைகளை விடவும் தேவாவின் மீது பொன்வாணிக்கு அதீத அன்பிருந்தது. சிறுவயதிலிருந்தே அவன் கேட்காமலே அனைத்தையும் செய்வார். பாசத்தையும் அள்ள அள்ளக் குறையாது காண்பித்தவர். அவரிடம் அவனால் முகத்தில் அடித்தாற் போல எதிர்த்துப் பேச முடியவில்லை.

“சொல்லுங்க மா!” என்றான் பெருமூச்சுடன்.

“வாணி, அவன் சாப்ட்டு முடிக்கட்டும். அப்புறம் நீ பேசு!” கோபால் மனைவியை அதட்டியபடியே உணவு உண்ண வந்தார்.

“ஏங்க... இதெல்லாம் நீங்க பேச வேண்டியது. வாய்ல கொழுக்கட்டை வச்ச மாதிரி இருக்கீங்க. ஏதோ புள்ளை புரியாம நடந்துக்குறான். நான் அவனுக்கு நல்லது எதுன்னு சொல்லிப் புரிய வைக்கிறேன். இப்போ அவன் கையைப் புடிச்சு சாப்பிட விடாம தடுக்குறேனா என்ன, பேச தானே செய்றேன்?” கணவரிடம் கடுகடுத்தவர், அவருக்குத் தட்டில் உணவைப் பரிமாறினார்.

“ப்ம்ச்... இப்போ அவன் வேலைக்கு போறான். காலைல எழுந்திரிச்சதும் இப்படி புடிச்சு வச்சு பேசணுமா. ஆற ஆமர சாயங்காலம் வந்ததும் எதுனாலும் பேசு வாணி!” கோபால் குரலை உயர்த்தி மனைவியை அடக்க நினைத்தார்.

“ஏங்க, நான் என்ன கொலைக்குத்தமா பண்றேன். நான் பெத்த புள்ளைக்கிட்டே பேச எனக்கு உரிமை இல்லையா. அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னுதான் நான் நினைக்கிறேன்!” அவர் சிடுசிடுத்தார்‌.

“உம்புள்ளைதான் நான் இல்லைன்னு சொல்லலை வாணி. ஆனால் பாரு, அவன் ஒன்னும் பச்ச குழந்தை இல்லை. இந்த சட்டை நல்லா இருக்கும்னு அழகுப் பார்க்குற மாதிரி அவன் வாழ்க்கைல யாரைக் கல்யாணம் பண்றதுன்னு நீயே முடிவெடுக்காத. அவன் வளர்ந்துட்டான். அவன் வாழ்க்கைக்கு எது சரியா இருக்கும்னு முடிவெடுக்குற உரிமை அவனுக்கு இருக்கு!” கோபால் அதீத கோபத்தில் பேசினார்.

காலையில் எழுந்ததுமே அலைபேசியை எடுத்து ஒன்றுவிட்ட அண்ணனுக்கு அழைத்து அவரது மகளைத் தன் மகனுக்குத் தர விருப்பமா என பேசியிருந்தார். அதில் இவருக்கு நிறைய அதிருப்தி படர்ந்தது. ஏன் இந்த விஷயத்தில் மனைவி கொஞ்சம் கூட சிந்திக்க மாட்டேன் என்கிறாள். அப்படி கட்டாயப்படுத்தி தேவாவிற்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்க முடியுமா என்ன? அதில் அவருக்கு உடன்பாடில்லை.

நேற்று மகன் கேட்ட கேள்வியே அவரை சாட்டையால் அடித்ததை போன்று வலித்தது. உண்மைதானே! அவனது வாழ்க்கையை முடிவெடுக்கும் உரிமையை பெற்றவர்களிடம்தானே கொடுத்தான். தாங்கள் பார்த்த பெண்ணால் திருமணம் நின்று அவன் பட்ட துயரங்களை எல்லாம் கண்ணுற்றவர்ளாகிற்றே. அப்படி இருக்கும் போது இப்போது அவனின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுப்பது தான் சரியென அவர் மனமும் தேவாவின் முடிவை வழிமொழிந்தது.

“எவ்ளோ பெருசா வளர்ந்தாலும் அவனுக்கு நான்தானே அம்மா. அதை உங்களால மாத்த முடியாது தானே. அப்போ கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க...” என்ற பொன்வாணி தேவாவின் கையை அழுத்திப் பிடித்தார்.

“என்னமோ பண்ணு!” அவர் வேண்டா வெறுப்பாய் வார்த்தையை உமிழ்ந்தார்.

“ப்பா... விடுங்க, அம்மா என்கிட்ட ஏதோ பேசணும்னு நினைக்கிறாங்க...” தேவா தந்தையை அமைதிப்படுத்தினான்.

“என்னோட பெரியப்பா மகன் சூடாமணி அண்ணன் இருக்காருல்ல தேவா. அவர் மக மலரை உனக்கு ரெண்டு மாசம் முன்னாடி கேட்டாங்க டா. நீதான் அப்போ வேணாம்னு வேணாம்னு சொல்லிட்டே இருந்த. நான் ஃபோன் பண்ணி அவுங்ககிட்டே காலைல பேசுனேன். இன்னும் மலருக்கு எந்த சம்பந்தமும் சரியா அமையலையாம். நல்ல லட்சணமான அழகான பொண்ணு டா. இந்த வருஷத்தோட காலேஜை முடிக்கப் போறா. நான் அவங்களை வீட்டுக்கு வர சொல்றேன். நீ நேர்ல பாரு!” தேவாவின் கையை விடாது பிடித்தபடியே பேசினார்.

“ம்மா... மலருக்கு இருபது வயசுமா. எனக்கும் அவளுக்கும் பன்னெண்டு வயசு வித்யாசம். நான் பிரதுவைப் பார்க்குற மாதிரித்தான் அவளைப் பார்க்குறேன். இதோட இந்தப் பேச்சை விடுங்க!” என்றான் மேற்கொண்டு இந்த விஷயத்தைப் பற்றி உரையாட விருப்பம் இல்லாதவனாக.

“சரி மலரை விடு... உனக்கு எப்படி பொண்ணு வேணும். அழகான லட்சணமா உனக்குப் பிடிச்ச மாதிரி அம்மா பொண்ணைப் பார்க்குறேன் டா!”

“ஏன்மா... ஏன் கஷ்டபட்டு நீங்க எனக்குப் பிடிச்ச மாதிரி பொண்ணைத் தேடுறீங்க. ஏற்கனவே எனக்குப் பிடிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணி வைங்க. ஆதிரையைத் தவிர வேற யாரையும் மேரேஜ் பண்ண இன்ட்ரெஸ்ட் இல்ல!” என்றான் பட்டென்று.

“ஏன் தேவா புரிஞ்சுக்க மாட்ற. ஏற்கனவே கல்யாணம் பண்ணிப் புள்ளையோட இருக்கவளைக் கூட்டீட்டு வந்து பிடிச்சிருக்குன்னு சொல்ற. ஏற்கனவே அவ என்ன பண்ணாளோ... புருஷன் தொரத்திவிட்டிருக்கான். ஏன் வேற யாருமே கிடைக்கலையா அவளுக்கு. என் புள்ளையை வளைச்சுப் போட பார்க்குறா!” அவர் பேச்சில் பாதி சாப்பாட்டிலே எழுந்தவன்,

“போதும்மா... வேற எதுவும் பேசாதீங்க. நான்தான் அவளைப் பிடிச்சிருக்குன்னு கல்யாணம் பண்ண கேட்டது. திட்றதுன்னா என்னைத்தான் திட்டணும். அவளைப் பத்தி தப்பா எதுவும் பேசக் கூடாது நீங்க!” என்றான் அழுத்தமாய்.

“எவளோ ஒருத்திக்காக இத்தனை வருஷமா பெத்து வளர்த்த அம்மாவையே எதிர்த்துப் பேசுற அளவுக்கு வந்துட்டீயா தேவா?” எனக் கேட்ட பொன்வாணியின் கண்களில் கண்ணீர் பெருகிற்று.

தேவா கையைக் கழுவிவிட்டு விறுவிறுவென வெளியேறினான். எதிர்த்துப் பேசினால் சண்டையிடலாம். ஆனால் பொன்வாணி அழுது காரியம் சாதிக்கும் வகையில் சேர்த்தி. இவனுக்கு அவர் பேச்சில் மனநிலை சீரற்றுப் அற்றுப் போனது.

உழவர் துணைக்குள்ளே செல்லும் போது வீட்டில் நடந்த பிரச்சனையின் சாட்சியாக அவன் முகம் கடுப்புடன்தான் இருந்தது. தனது அறைக்குச் செல்லாமல் இயந்திரப் பகுதிக்குள் நுழைந்தான். காலையில் வந்திறங்கிய பாலை இப்போதுதான் வடிக்கட்டியில் ஊற்றிக் கொண்டிருந்தனர்.

மூடப்படாமல் திறந்து வைத்திருந்த பால் கேன் ஒன்றில ஈ மொய்க்க, “ப்ளோரை யார் க்ளீன் பண்ணா? டிஸ் இன்பெக்டட்ன் யூஸ் பண்ணீங்களா இல்லையா? வாட் இஸ் திஸ்? ஈ மொய்க்குது?” என அவன் சிடுசிடுக்க, ஆய்வகத்தில் அமர்ந்திருந்த ஆதிரைக்குத் தெளிவாய்க் கேட்டது‌.

‘ரைட்டு... நேற்று அவன் வீட்டில் பெரிய பிரச்சனையாகிவிட்டது போல!’ என இவளுக்குப் புரிந்து போயிற்று.

“ஏன் கோமுக்கா... இந்த மனுஷனுக்குத்தான் கல்யாணம் கூட ஆகலையே. அப்புறம் ஏன் நம்மகிட்ட வந்து இந்த கத்து கத்துறாரு?” எனக் கோமதியிடம் கேட்டாள் தர்ஷினி. ஆதிரைக்கும் அவளுக்கும் ஏற்கனேவே தேவாவைப் பற்றி பேசி சிறிய மனக்கசப்பு உண்டாகியிருக்க, அன்றிலிருந்து அவனைப் பற்றி இவளிடம் மறந்தும் பேசவில்லை.

“ஏன்... கல்யாணத்துக்கும் இதுக்கும் என்ன கனெக்ஷன் தர்ஷூ? எனக்குப் புரியலையே?” அவர் புரியாது பார்த்தார்.

“இல்லை... கல்யாணம் பண்ணவங்கதான் பொண்டாட்டிகிட்டே காட்ட முடியாத கோபத்தை ஆஃபிஸ்ல காட்டுவாங்க. இவருக்கு அப்படியெதுவும் பிரச்சனை கூட இல்லையே. சுகவாசியா இருக்காரு‌. அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஆளுக்கொரு மில்க் ப்ராசசிங் யூனிட்டை ரன் பண்ணி ராஜாவா இருக்காங்களே!” என நொடித்தாள். ஆதிரை அவளை நிமிர்ந்து பார்த்தாலும் பதிலுரைக்கவில்லை‌.

“காசு பணம் இருந்தா பிரச்சனை இருக்காதுன்னு நினைக்குறீங்களா தர்ஷினி? அவங்க அவங்களோட நிலைமைக்கு ஏத்த மாதிரி பிரச்சனை வரிசையில வந்து நிக்கும். சோ, அவர் வீட்ல என்ன பஞ்சாயத்துன்னு நமக்குத் தெரியாதுல்ல!” ஆதிலா கூறியதும் ஆதிரை அவளை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். அவள் இப்படியெல்லாம் யாருடைய விஷயத்திலும் மூக்கை நுழைத்துக் கருத்தும் சொல்லும் ரகமில்லையே என இவளுக்கு வியப்பாய் போயிற்று.

“ஏய் ஆதிலா... உங்களுக்குப் பேச கூட வருமா என்ன?” தர்ஷினி போலியான அதிர்ச்சியுடன் நெஞ்சில் கை வைக்க, மற்ற இருவரும் சிரித்துவிட்டனர். ஆதிலா இவளை முறைத்தாள். ஆய்வகத்தின் வாயிலி
ல் தேவாவின் காலடி கேட்டதும் அனைவரது உதடுகளும் பசை போட்டு ஒட்டிக் கொண்டன.

தொடரும்...

 
Well-known member
Messages
445
Reaction score
323
Points
63
Deva unnoda love ku neyum athirai yum yae villan velai pakkuriga ithula innum extra fitting ah indha janu ponvani ah vera joint panraga unnaku arupatham kalyanam yae doubt list la poidum polayae
 
Well-known member
Messages
510
Reaction score
383
Points
63
ஐயோ பாவம் தேவா சாமி(ஆதிரை) வரம் கொடுத்தாலும் பூசாரி(அம்மா) வரம் கொடுக்காத கதையாயிடுச்சே
 
Top