- Messages
- 1,104
- Reaction score
- 3,173
- Points
- 113
நெஞ்சம் – 2

அந்த வார ஞாயிற்றுக் கிழமை, காலை மணி எட்டைத் தொட்டிருக்க, இட்லியை சுட்டு பன்னீர் குருமா செய்த ஆதிரையாழ் மதியத்திற்கு தயிர் சாதத்தோடு ஊறுகாய் வைத்து எளிமையாய் உணவை முடித்திருந்தாள். இவள் சமையலறையில் வேலை பார்க்க, மகன் பதுமையாய் அறையில் துயில் கொண்டிருந்தான்.
வியர்த்து ஊற்றியது அவளுக்கு. சமைத்து முடித்து அதை சிறிய பாத்திரங்களுக்கு மாற்றியவள், அனைத்தையும் சுத்தம் செய்தப் பின்னர், அறைக்குள் நுழைந்தாள். எந்த சப்தமும் தன்னை பாதிக்கவில்லை என்பது போல அபி தூங்கிக் கொண்டிருந்தான். ஒரு தலையணையை இரண்டு காலுக்கும் இடையில் கொடுத்து தலையில் கையை வைத்து பெரிய மனிதத் தோரணையில் உறங்குபவனையே வாஞ்சையாகப் பார்த்தவள் அவசரக் குளியலுடன் ஈரத் தலையை சிறிய இழுபட்டையில் அடக்கி நெற்றியில் பொட்டிட்டு துப்பட்டாவை இரண்டு பக்கமும் குத்தி முடித்தாள்.
நேரம் எட்டறையைத் தொட்டிருக்க, “அபிமா... அபி செல்லம்!” என இவள் மகன் கன்னத்தில் தட்ட, “ப்ம்ச்... ம்மா. போம்மா!” என தாயின் கையைத் தட்டிவிட்டு மறுபுறம் திரும்பி படுத்தவனைக் கண்டு இவளுக்கு பெருமூச்சு எழுந்தது.
“அபிமா... எழுந்திரி டா தங்கம், அம்மா கிளம்பிட்டேன். உனக்கு மார்னிங்க்கும் லஞ்சுக்கும் சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். எழுந்து ப்ரஷ் பண்ணிட்டு வாடா!” என அவனை எழுந்து அமர வைத்தாள்.
கண்ணைக் கசக்கிக் கொண்டே எழுந்த சின்னவன், “மா, டு டே இஸ் சண்டே!” என்றான் முகத்தை சுருக்கி அவளைக் குற்றம்சாட்டி.
“ஆமா டா தங்கம், சண்டே தான். ஆனால், அம்மாவுக்கு வேலை இருக்குல்ல. அதனால சமத்துப் பையனா ருக்கு பாட்டி வீட்ல இருப்பீயாம்!” என அவன் முன்னெற்றி முடியைப் புறந்தள்ளி மகன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவள், அப்படியே அவனைத் தூக்கிக் கொண்டு சென்று கழிவறை முன்பு இறக்கிவிட்டாள்.
“ஃபைவ் மினிட்ஸ் டைம் அபிமாவுக்கு. ப்ரெஷாகிட்டு வருவீங்களாம்!” என இவள் ஆதுரமாய்க் கூற, “ஹம்ம்...” என்ற முனங்கலோடு ஐந்து நிமிடத்தில் முகம் கழுவி பல் துலக்கி வெளியே வந்தான் சின்னவன்.
“இன்னைக்கு அபிமாவுக்குப் பிடிச்ச பன்னீர் பட்டர் மசாலா செஞ்சு இருக்கேன் அம்மா. குட் பாயா சாப்ட்டு வீட்டைப் பூட்டி சாவியோட ருக்கு பாட்டி வீட்டுக்குப் போய்டணும் டா!” என அவனுக்கு அறிவுறுத்தியவளையும் தட்டையும் மாறி மாறிப் பார்த்தான் சின்னவன்.
“என்ன டா?” எனக் கேட்டவள் கைப்பையை எடுத்து தோளில் மாட்டினாள்.
“ம்மா... டைமாகிடுச்சா? எனக்கு ஊட்டி விடுறீயா?” என அவள் முகம் பார்த்தவனைக் கண்டதும் ஆதிரைக்கு சட்டென மனம் உருகிப் போனது. ஞாயிறு ஒருநாள் தான் தாயும் மகனும் தங்களுக்கென ஒதுக்கிக்கொண்டு அவர்களது ஆசையைத் தீர்த்துக் கொள்வார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொள்வது, சேர்ந்து அமர்ந்து படம் பார்ப்பது, தாய்க்கு சமைக்க உதவுகிறேன் என அவன் செய்யும் அட்டூழியங்களை எல்லாம் எவ்வித முகச் சுணக்கமும் இன்றி இவள் ஏற்றுக் கொண்டாலும் மென்மையாய் கடிந்து கொள்வாள். பின்னர் மாலை மூன்று மணிக்கு அவனை நீச்சல் வகுப்பிற்கு அழைத்துச் செல்வாள்.
ஐந்து மணிக்கு வகுப்பு முடிந்ததும் அப்படியே பல் பொருள் அங்காடிக்குச் சென்று ஒரு சுற்று சுற்றி என்னென்ன தேவை என்று வாங்கிக் கொண்டு இரவு உணவை வெளியே முடித்துவிட்டு வரும் ஞாயிறு அவர்களுக்கு பொக்கிஷம்தான்.
அப்படியிருக்கையில் இன்றைக்கும் வேலைக்கு வர சொன்ன தேவநந்தனின் மீது அவளுக்கு கோபமாய் வந்தது. ஆனாலும் காண்பிக்க முடியாத இடத்தில் இருக்கிறாள். வேறு வழியில்லை, சென்று தானே ஆக வேண்டும் என தோன்ற, மகனை ஆதுரமாய்ப் பார்த்தவள், “நைட்டு அம்மா தங்கத்துக்கு ஊட்டி விடுவேனாம். ஹம்ம்... இப்போ சமத்தா சாப்டுவீங்களாம்!” என அவன் முடியைக் கலைத்தவளைப் பார்த்து அவனுமே புரிதலாய் தலையை அசைத்தான்.
“ஈவ்னிங் வரும்போது அம்மா உனக்கு பிடிச்ச மில்க் ஷேக் வித் ஹனி கேக் வாங்கிட்டு வரேன் டா!” என அவனை ஒருவாறாக சமாதானம் செய்து கீழே சென்றவள் ருக்குவிடமும் அவனைப் பார்த்துக் கொள்ள பணித்தாள்.
“சரி ஆதிரை... வரும்போது தக்காளி ஒரு கிலோவும், கோல்ட் வின்னர் எண்ணெய் ரெண்டு லிட்டரும் வாங்கிட்டு வாம்மா!” என்ற ருக்குவிடம் தலையை அசைத்தவள் வாகனத்தை எடுத்துக்கொண்டு பறந்திருந்தாள்.
விடுமுறை தினம் என்பதால் பிரதான சாலையே வெறிச்சோடி கிடந்தது. இருபது நிமிடத்திலே தொழிற்சாலையை அடைந்திருந்தாள். தேவநந்தன் வந்துவிட்டதற்கு அடையாளமாய் அவனது மகிழுந்து முகப்பை அடைத்திருந்தது.
இவள் நேரே கைப்பையை வைத்துவிட்டு அவனது அறைக்கு சென்று வருகையைப் பதிவு செய்துவிட்டு சோதனைக் கூடத்தை அடைந்தாள்.
“அக்கா... சாம்பிள் எடுத்தாச்சு!”
தர்ஷினி மட்டுமே அன்றைக்கு வந்திருந்தாள்.
“ஹம்ம்... கடகடன்னு சாம்பிளை போடணும் தர்ஷினி. லேட் பண்ணா அப்புறம் மிட் நைட்தான் வீட்டுக்குப் போவோம். மைண்ட் இட்!” என்ற ஆதிரை இயந்திரங்களிருந்த பகுதிக்கு நகர, “சண்டே கூட விடாம வேலை வாங்குற கம்பெனில வந்து படுற கஷ்டம் போதாதுன்னு இதுல லேட் நைட் வீட்டுக்குப் போகணுமாம். எல்லாம் என் தலையெழுத்து!” என்ற முணுமுணுப்போடு
தர்ஷினி விறுவிறுவென வேலையைத் தொடங்கி இருந்தாள்.
ஆதிரை தொழிற்சாலையை ஒரு சுற்று சுற்றி எல்லாம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்துவிட்டு சோதனைக் கூடத்திற்குள் நுழைந்தாள். மாலை நான்கு மணிக்கு திருமணத்திற்கான பாலை மண்டபத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என நேற்றே தேவா வலியுறுத்தியது நினைவு வர, மடிக்கணியை உயிர்ப்பித்து அனைத்தையும் பதிந்து முடித்தவள் தர்ஷினியோடு சேர்ந்து பாலை சோதனை செய்யத் தொடங்கினாள்.
கடகடவென இருவரும் வேலை செய்து கொண்டிருந்தனர். இன்றைக்கு இரண்டு மடங்கு வேலையிருக்கும். திருமணத்தோடு சேர்த்து எப்போதும் விநியோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் காலையிலும் மாலையிலும் பாலை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும் என வேலையிலே இருவரும் மூழ்கிப் போயினர். கோமதி வந்தால் அவர்களுக்கு கொஞ்சம் வேலை சுமை குறைந்திருக்கும். ஆனால் இந்த ஞாயிறு கண்டிப்பாக வர முடியாது. நெருங்கி சொந்தத்தில் ஒரு விசேஷம் என அவர் முன்கூட்டியே விடுமுறை விண்ணப்பித்திருக்க, இவர்கள் இருவருக்கும் இன்றைக்கு பணிச்சுமை மூச்சு முட்டியது. இருந்தாலும் குறித்த நேரத்தில் அனைத்தையும் முடிக்க வேண்டுமென கண்ணும் கருத்துமாய் வேலைப் பார்த்தனர்.
***
தேவநந்தன் குனிந்து உணவை உண்டுக் கொண்டிருந்தாலும் பார்வை என்னவோ தங்கை பிரதன்யாவை அடிக்கடி தொட்டு மீண்டது. அவளும் இவனைத்தான் கலவரத்தோடு அவ்வப்போது பார்த்திருந்தாள். அந்தப் பார்வையின் பொருள் தேவாவிற்கும் புரிந்திருக்க, பெரிதாய் அலட்டிக் கொள்ளாது உண்டு முடித்துக் கிளம்பினான்.
அவன் மகிழுந்தை உயிர்ப்பிக்கவும் வீட்டின் உள்ளே இருந்து குடுகுடுவென ஓடிவந்தாள் பிரதன்யா, தேவாவின் ஒரே செல்ல தங்கை. “அண்ணா, ப்ளீஸ் ப்ராப்ளம் எதுவும் வேணாம்னா, ஜஸ்ட் பேசி அவனை சரி பண்ணு. அப்படியும் அவன் புரிஞ்சுக்கலைன்னா ப்ரின்சிகிட்டே நான் கம்ப்ளைண்ட் பண்றேன். லீகலா ஆக்ஷன் எடுக்கலாம்!” என்றாள் தவிப்புடன்.
அவள் முகத்தைப் பார்க்காது திசை மாற்றியில் கைகளை வைத்து தட்டியவன், “பிரது, நான் சண்டை போட்ற இன்டன்ஷன்ல இல்லை. பட் உன் ஃப்ரெண்ட் தினேஷ் ரூடா பிஹேப் பண்ணா, ஐ காண்ட் ஹெல்ப்!” என்றான் தோளைக் குலுக்கி.
“ப்ம்ச்... அவன் பேரு திவினேஷ் ண்ணா... அவன் பேச்சே சண்டை போடுற மாதிரித்தான் இருக்கும். அதுக்காக எடுத்ததும் கையை நீட்டிடாத தேவா!” என்றாள் இறைஞ்சலாய்.
“எனக்கு டைமாச்சு பிரது, நான் கிளம்புறேன்!” என்றவன் அகன்றுவிட, இவள் அவனையே பார்த்திருந்தாள்.
நேற்று தேவா விரைவாய் வேலைக்கு கிளம்பவும் அவனோடுதான் இவள் கல்லூரிக்குச் சென்றாள். செல்லும் வழி முழுவதும் ஆழ்ந்த சிந்தனையுடன் ஒரு வார்த்தையும் உரைக்காது வந்த தங்கையைக் கண்டு அவன் நெற்றிச் சுருங்கியது.
“பிரது, எதாவது பிராப்ளமா?” என இவன் இருமுறை கேட்டப் பின்புதான் நிகழ்காலத்திற்கு வந்திருந்தாள் தங்கை. அவனைப் பார்த்து சில நொடிகள் விழித்தவள் தயக்கத்துடன் தலையை ஆமோதிப்பாய் அசைத்தாள்.
“என்னாச்சு?” அவனிடமிருந்து ஒரு வார்த்தை கேள்வியாய் வந்து விழுந்தது.
“அது... அண்ணா, என் ஃப்ரெண்ட் திவினேஷ் இருக்கான் இல்ல, உனக்கு ஞாபகம் இருக்கா. வீட்டுக்கு கூட கூட்டீட்டு வந்து இருக்கேனே?” எனக் கேட்டாள். இவன் இல்லையென தலையை அசைத்தான்.
“சரி விடுண்ணா... அவன் முகம் ஞாபகம் இல்லைன்னா இப்போ என்ன... அது ப்ராப்ளம் இல்லல. என்னைக் கொஞ்ச நாளா லவ் பண்றேன்னு பினாத்திட்டு இருந்தான். நான் கூட சும்மா சொல்றான்னு நினைச்சேன். பட் அவன் இப்போலாம் ரொம்ப ரூடா பிஹேவ் பண்றான். என்னை எந்த பாய்ஸ் கூடவும் பேச விட மாட்றான். ப்ரொடக்ட் பண்றேன்ற பேர்ல் டார்ச்சர் பண்றான். லேட் நைட்ஸ் கால் பண்றான். நானா பேசி அவாய்ட் பண்ணலாம்னு பார்த்தேன். பட் முடியலைண்ணா!” என்றாள் சோர்வாய்.
“சரி, அவனை என்னை மீட் பண்ண வரச்சொல்லு. நான் அவனைப் பார்த்துக்கிறேன்!” தேவா கூற, இவள் யோசித்தாள்.
“அண்ணா...அவங்கப்பா எம்.எல்.ஏவா இருக்காரு. நீ எதுவும் ப்ராப்ளம் பண்ண மாட்டல்ல?” இவள் மெல்லிய பயத்தோடு கேட்க, “ப்ம்ச்... பிரது, இதெல்லாம் இந்த வயசுல வர்ற அட்ராக்ஷன்தான். நான் பேசி புரிய வைக்கிறேன்!” என தேவா வாக்குறுதி அளித்தப் பின்னரே திவினேஷிடம் தன் தமையன் அவனை சந்திக்க விரும்புவதாக பிரதன்யா கூற, “சூப்பர் பிரது, நானே உங்க வீட்ல பேசலாம்னு நினைச்சேன். இப்ப நீயே கூப்பிட்ற. நான் உங்க அண்ணன்கிட்டே நம்ப கல்யாணத்தைப் பத்திப் பேசுறேன்!” என அவன் துள்ளி குதிக்க, இவள் என்ன சொல்வது எனத் தெரியாது விழித்து நின்றாள்.
“நாளைக்கு சண்டே தானே பிரது, உங்க அண்ணன் ஃப்ரியா இருப்பாரா? வீட்டுக்கு வரவா? என் அண்ணாவையும் கூட கூட்டீட்டு வரவா?” என அவன் கேட்க, “வீட்டுக்கு எல்லாம் வந்துடாத டா. அண்ணாவை உழவர் துணையிலயே போய் மீட் பண்ணு. கூட யாரையும் கூட்டீட்டு போகாத. நீ மட்டும் போ. உன்னை மாப்பிள்ளை பார்க்க யாரும் கூப்பிடலை. அங்கேயும் போய் கிறுக்குத் தனமா பேசாத. என் அண்ணன் என்னை மாதிரி சாஃப்ட் எல்லாம் கிடையாது. டேரக்டா மேன் ஹேண்டில் பண்ணிடுவான்!” என அவள் எச்சரித்ததை அவன் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை என பிரதன்யாதான் நொந்து போனாள். தேவநந்தன் யோசனையோடு தொழிற்சாலையை அடைந்திருந்தான். அவன் வந்த சிறிது நேரத்திலே ஆதிரையாழ், தேவதர்ஷி வந்து வேலையைத் தொடங்கிவிட்டனர்.
தேவா உழவர் துணை பாலை இன்னும் மக்களிடையே எவ்வாறு கொண்டு சேர்ப்பது என விளம்பரங்கள் சிலவற்றை பார்த்துக் கொண்டிருந்தான். தற்போதைய வழக்கமாய் நாடகத்தில் நடிக்கும் பிரபல நடிகையை வைத்து ஒரு விளம்பரம் எடுக்கலாம் என எண்ணியவன், விளம்பரங்கள் எடுக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டிருந்தான். இன்றைக்குத்தான் அதற்கான ஆட்கள் வருதாய் உரைத்திருந்தனர். தேவாவுடைய கல்லூரி நண்பன்தான் அங்கே துணை இயக்குநராகப் பணிபுரிய, அவன் மூலமாகத்தான் இந்த யோசனையும் இவனுக்கு கிடைத்திருந்தது.
கணினியில் அன்றைக்கு எவ்வளவு பால் வந்தது, காலையில் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் பால் சரியாய் சென்று விட்டதா எனப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படியே எழுந்தவன் தொழிற்சாலைக்குள்ளே நுழைந்து வேலை நடக்கும் பகுதியை அடைந்தான்.
“இந்த ஏரியாவை யார் க்ளீன் பண்ணது?” என அவன் ஒரு பகுதியைச் சுட்டிக் காண்பிக்க, “சார், நான்தான் துடைச்சேன்!” என ஒரு பெண்மணி வந்து நின்றார்.
“என்டயர் ஏரியா க்ளீனா இருக்கணும்னு எத்தனை தடவை சொல்றது கா. அங்கப் பாருங்க, சுவரோரத்துல அழுக்கா இருக்கு. டிஸ்இன்பெக்டண்ட் வச்சு நல்லா க்ளீன் பண்ணுங்க!” அவன் கடிய, அந்தப் பெண்மணி மீண்டும் அந்த இடத்தை அழுக்குப் போக சுத்தமாய் துடைத்தார். அங்கே நின்று அவர் செய்வதை பார்த்து திருப்திப்பட்டவன் சேமிப்புகலன் இருந்த உட்பகுதிக்குள் நுழைந்தான்.
ஆதிரை தர்ஷினி கொடுத்த சோதனை முடிவுகளை கணினியில் ஏற்றிவிட்டு திரும்பி ஏழு சோதனைக் குழாயில் மாதிரி பாலை நிரப்பி அதில் கந்தக அமிலத்தை ஊற்றி ஒவ்வொன்றாய் ஓரமாய் வைக்க, “நந்தா... டேய் நந்தா!” என திடுமென அவளுக்குப் பின்னே கேட்ட பெயரிலும் குரலிலும் இவளது கையிலிருந்த சோதனைக் குழாய் கீழே விழுந்து நொறுங்கி இருந்தது.
அவசரமாகத் திரும்பி விழிகளை வாயிலில் பதிக்க, மத்திம வயதில் இருந்த இளைஞன் ஒருவன், “சிஸ்டர், நந்தா இல்லையா?” என அவளையும் தர்ஷினியையும் பார்த்து வினவ, இருவரும் ஒரு நொடி பதிலுரைக்காது அவனைப் பார்த்து விழிக்க, “ராக்கி...” என உள்ளிருந்து கையை அசைத்துக் கொண்டே தேவா வந்துவிட்டான்.
“வாடா... ஆபிஸ் ரூம்க்கு போனா உன்னைக் காணும். அதான் இங்க வந்தேன்!” என்ற ராகேஷோடு மற்றொரு வாலிபனும் நின்றிருந்தான்.
“ஹம்ம்... கோல்ட் ரூம்ல இருந்தேன் டா!” என நீண்ட நாட்கள் கழித்துப் பார்த்த நண்பனை தோளணைத்து தேவா புன்னகைக்க, பெண்கள் இருவரும் ஒரு நொடி அவனை அதிசயமாய் பார்த்தனர். அதுவும் ஆதிரைக்கு சிரிப்பது தன் முதலாளியா என்ற சந்தேகம் வேறு முளைத்து தொலைத்தது.
“யூ கைய்ஸ் கேரி ஆன் யுவர் வொர்க்!” என தேவா அவர்கள் புறம் திரும்பி உரைக்கவும், ஆதிரை நொடியில் அவன் முகத்திலிருந்த பார்வையை விலக்கிக் கொண்டாள்.
அவனுடைய விழிகள் கீழே விழுந்து உடைந்த சோதனைக் குழாயில் பதிய, “சாரி சார், இட்ஸ் மை மிஸ்டேக்!” என்றவள் விறுவிறுவென குனிந்து உடைந்த கண்ணாடித் துண்டுகளை கையைக் கிழித்து விடாதவாறு எடுத்து குப்பைத் தொட்டியிலிட்டாள்.
தேவா அதைக் கண்டும் காணாமல் நண்பனின் தோள் தட்டி, “ஆஃபிஸ் ரூம்ல பேசலாம் வாடா!” என அழைத்துச் சென்றான்.
“நந்தா... பிஸ்னஸை செம்மையா மெயின்டெய்ன் பண்ற போல டா. லாஸ்ட் ப்யூ இயர்ஸ்ல நல்ல ரீச்சாகியிருக்குல்ல?” என ராகேஷ் குரல் ஆதிரையின் செவியிலும் விழ, ஒரு நொடி நிமிர்ந்து தேவாவைப் பார்த்தாள். அறையை விட்டு வெளியேற சென்றவனின் கண்களும் அவளை உரசிவிட்டுச் செல்ல, இவள் குனிந்து வேலையைக் கவனித்தாள்.
ஆனால் மனம் மட்டும் நந்தா என்ற பெயரிலே அந்த விளிப்பிலே தேங்கி நின்றுவிட, ஏனோ உடலில் சோர்வு வந்து சொல்லாமல் கொள்ளாமல் ஒட்டிக் கொண்டது. முன்பு போல விறுவிறுவென அவளால் வேலையை செய்ய முடியவில்லை. இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தவள் தண்ணீரை எடுத்து மடமடவென வாயில் சரித்து தொண்டையை நனைத்து துக்கத்தோடு நினைவுகளையும் சேர்த்து நீரோடு விழுங்கியிருந்தாள்.
“அக்கா... இதோட வேல்யூ!” என தர்ஷினி சோதனை முடிவுகளை நீட்ட, அதைக் குறித்துக் கொண்டவள் விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடர்ந்தாள். முன்பு போல சுறுசுறுப்பு இல்லையெனினும் நேரத்திற்குள் முடித்தால்தான் விரைவாய் வீடு சேர முடியும் என புத்தி இடிந்துரைத்தது. மெல்லிய மூச்சோடு வேலையில் ஆழ்ந்தாள்.
“சார், இதெல்லாம் இதுக்கு முன்னாடி நம்ப கம்பெனி பண்ணிக் கொடுத்த ப்ராஜெக்ட். எல்லாத்தையும் ஒன் டைம் பாருங்க சார். உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதுபடியே பண்ணலாம். இல்ல நீங்க எதுவும் ஐடியா வச்சிருந்தா கூட பண்ணலாம் சார்!” அந்த வாலிபன் தேவாவின் முன்னே மடிக்கணினியை நகர்த்த, அவனும் ஒவ்வொரு விளம்பரமாக தள்ளிவிட்டுப் பார்த்தான்.
“மச்சான், ஐடி வேலையை விட்டுட்டு மில்க் பாய்சரிசேஷன் பண்ணப் போறேன்னு நீ சொன்னப்ப எனக்கே ஷாக்காதான் இருந்துச்சு. பட், உன்னோட வளர்ச்சியைப் பார்க்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு டா!” என ராகேஷ் பிரம்மிப்புடன் கூற, தேவா புன்னகைத்தான். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு தற்போதைய வளர்ச்சியும் சொழுமையும் மட்டுமே தெரியும். ஆனால் இது அவனுடைய எட்டு வருட கடின உழைப்பின் பலன்.
பால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஆரம்பித்த புதிதில் வெறும் ஐம்பது குடும்பங்களுக்கு மட்டுமே பால் விநியோகம் செய்தான். அப்போது மூலதனமாக செலவிட்ட பணம் கூட கையில் நிற்கவில்லை. ஆனாலும் ஆறு மாதம் தொடர்ந்து விடாமல் உழைத்த உழைப்பின் பலனாக மெதுமெதுவாய் மக்களிடையே இவனது பால் பிரசித்துப் பெறத் தொடங்கிய. ஐம்பது ஐநூறாகி இன்றைக்கு ஐந்தாயிரத்தைத் தொட்டிருந்தது. இடையில் எத்தனையோ தடைகள், தோல்விகள் என அனைத்தையும் தாண்டித்தான் இத்தனை தூரம் தொழிலை தூக்கி அசைக்க முடியாத இடத்தில் நிறுத்தியிருக்கிறான்.
“மச்சான், உனக்கு எந்த ஆட் பிடிச்சிருக்கு?” ராகேஷ் கேட்க, தேவா எதுவும் பிடிக்கவில்லை என தலையை அசைத்தான்.
“எனக்கு இதுல இருக்க எதுவும் பிடிக்கலை ராக்கி. ஐ நீட் இன்னோவேட்டீவ் ஒன். வெறும் மாடு, வயலு, பால்னு ரொம்ப ஓல்ட் ட்ரெண்டா இருக்க கூடாது டா!” என்றான்.
“சரி, நீ ஏதோ யோசிச்சு வச்சிருக்க போல. அதை சொல்லு!” ராகேஷ் மடிக்கணினியை அணைத்துவிட்டு தோழனின் முகம் பார்த்தான்.
“நம்பளோட தீம் ப்ரெஷ் மில்க் வில்லேஜ்ல மட்டும்தான் கிடைக்கும்னற எண்ணம் பரவலா இருக்கு. எப்போ பார்த்தாலும் மாடு, வயல்னு காட்டுவோம். பட் ஒரு சேஞ்ச்க்கு கிராமத்துல இருந்து சிட்டிக்கு மைக்ரேட் பண்றவங்க ப்ரெஷ் மில்க் இல்லாம கஷ்டப்படுற மாதிரியும் அந்த டைம் உழவர் துணை பத்தி ஏற்கனவே யூஸ் பண்றவங்க ரெகமண்ட் பண்ற மாதிரியும் இருக்கணும் டா. அதோட கண்டிப்பாக பேக்ரவுண்ட்ல ஒரு ம்யூசிக் ப்ளஸ் நம்மளோட மெஷினரிஸ்ல இருந்து கோல்ட் ரூம் வரைக்கும் ஒரு டென் செகண்ட்ஸ் கவர் பண்ற மாதிரி இருக்கணும்!” என்றான். அவன் கூறுவதை இருவரும் அமைதியாய்க் கேட்டனர்.
“மச்சான்... இது ஒத்து வருமா டா. எப்பவும் நல்லா க்ரீனரியா இருக்க மாதிரிதானே பால் விளம்பரம் எல்லாம் இருக்கும். கூடவே மாடு, ஒரு தோப்பு வீடு, விவசாய நிலம்னு காட்டுனா நல்லா இருக்கும் டா!” ராகேஷ் கூற, தேவா தலையை மறுத்து அசைத்தான்.
“மாட்டுல இருந்து பால் கிடைக்குதுன்னு குழந்தைக்கு கூடத் தெரியும் டா. ஏற்கனவே தெரிஞ்ச விஷயத்தை சொல்றதுல என்ன யூஸ் சொல்லு. ப்ரெஷ் மில்க் கிராமத்துல இருக்கவங்க மட்டும்தான் ஆக்ஸஸ் பண்ண முடியும்னு சிட்டில இருக்க மக்கள் நம்புறாங்க. நம்ப அதை உடைக்கணும். ப்ரெஷ் மில்க் சிட்டில நம்ப ஈஸியா ஆக்ஸஸ் பண்ண வச்சிருக்கோம். பட், அது யாருக்கும் தெரியலைன்னா என்ன யூஸ்? நம்பதான் தெரியப்படுத்தணும் டா. வீ ஷூட் நோ தெம் தட் வீ ஆர் ஈஸிலி ஆக்ஸஸிபிள். தென் விளம்பத்தோட லாஸ்டா உழவர் துணை, எங்கள் பண்ணை, உழவர் துணையிருக்க பயம் இனியேதுன்ற மாதிரி கோரஸா கோட்ஸ் எதுவும் சொல்லணும் டா லைக் பாட்டு மாதிரி!” என்றான். அவனுடைய விளக்கங்கள் இருவருக்கும் ஏற்புடையதாக இருந்தது.
“லாஸ்ட் கோரஸா சொல்றது பாட்டு பாட்ற மாதிரி இருக்கணும். ஏன்னா நர்மலா எதாவது விளம்பரத்துல டயலாக் வந்தா நம்ப அதை இக்னோர் பண்ணிடுவோம். பட் பாட்டு மாதிரி வந்தா நம்ப மனசே அதை ஹம் பண்ணும். எக்ஸாம்பிள் சத்யாவின் ஆஃபர் என்றென்றும் சூப்பர்னு நான் சொல்லும் போதே அந்த டோனோட உங்க மைண்ட் ட்யூன் பண்ணுது தானே?” என அவன் கேட்க, இருவரும் ஒன்று போல தலையை அசைத்தனர்.
“தட்ஸ் இட், விளம்பரத்தோட லென்த் எவ்வளோ வரலாம்? எந்த ஆக்டரை வச்சு எடுக்கலாம்னு நீங்களே டிசைட் பண்ணுங்க. என் ஐடியாவை பக்காவா இம்ப்ளிமெண்ட் பண்ணா போதும்!” தேவா கூறி முடிக்க, “மச்சான், நீ மூளைக்காரன் டா, அப்பப்போ நிரூபிக்கிற. இப்போ வரலட்சுமின்னு ஒரு சீரியல் பரபரப்பா போய்ட்டு இருக்கு. அந்தம்மாவை வச்சு ஆட் எடுக்கலாம். நல்லா வரும் டா. பொதுவா லோகல் சேனல்ல போட்ற ஆட்னா நம்ப ரெண்டு நிமிஷம் வரைக்கும் இழுக்கலாம். பட் ப்ரைம் சேனல்ஸ்ல தேர்டி செகண்ட்ஸ்தான். அதுக்கும் மேலனா ஒரு ஃபைவ் செகண்ட்ஸ் அதிகமா வைக்கலாம். அதுக்குள்ளயே இத்தனையும் கவர் பண்ணிடணும் டா.
எடிட்டிங்ல பார்த்துக்கலாம்!” என ராகேஷ் கூற, மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு அவர்கள் இருவரும் விடை பெற்றனர்.
தொடரும்...
Last edited: