• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,115
Reaction score
3,188
Points
113
நெஞ்சம் – 1 💖

அந்த தங்க நிறத்திலான பருத்தி துப்பட்டாவை ஒரு உதறு உதறி நான்காய் மடித்து ஒரு பக்க தோளில் வைத்து ஊக்கை குத்திய ஆதிரையாழின் கவனம் முழுவதும் தனக்கு பத்தடி தொலைவில் உணவை கைகளால் அளந்து கொண்டிருந்த மகனிடம்தான் குவிந்திருந்தது.

இவள் சமைத்ததும் அவனைக் கிளப்பி உணவைத் தட்டிலிட்டு கொடுத்துவிட்டு குளித்து உண்டுமுடித்து தானும் தயாராகி முடித்த பின்னும் கூட மகன் தட்டிலிருந்த உணவு அரைவாசி கூட குறையவில்லை. இவளது முகத்தைப் பார்ப்பதும் பின்னர்‌ ஒரு விரலால் சில பருக்கைகளை மட்டும் எடுத்து வாயில் அடைப்பதுமாய் இருந்தவனைக் கண்டு இவளின் பொறுமை பறக்கத் தொடங்கியிருந்தது.

“அபி... இன்னும் ஃபைவ் மினிட்ஸ்தான் டைம். ப்ளேட்ல உள்ளதை சாப்ட்டு முடிக்கிற. இல்லைன்னா அடி வாங்குவ!” என ஆதிரை அதட்டலிடவும் அபினவ் வேகவேகமாக உணவை அள்ளி வாயில் திணித்தான். இவள் சீப்பை எங்கே வைத்தோம் எனத் தேடியெடுத்து குட்டையாய் இருந்த முடியை வாரி ஒரு இழுபட்டையில் குதிரைவாலிட்டு முடிக்க, அபியின் தட்டு காலியாகியிருந்தது.

“மம்மி..‌. அபி இஸ் குட் பாய். சாப்ட்டான்!” எனக் கண்ணடித்துப் புன்னகைத்தவனைக் கண்டவளின் முகத்திலும் முறுவல் பூத்தது.

“ஹம்ம்... குட் பாய்தான். பட் சாப்பிட்ற விஷயத்துல மட்டும் நீ பேட் பாய் டா!” என உதட்டைக் கோணியவள், அவனுடைய உணவு டப்பாவை எடுத்து பள்ளிப் பையில் அடைத்தாள். எல்லா புத்தகங்களும் சரியாய் இருக்கிறதா என மீண்டும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு அதைக் கூடத்தில் எடுத்து வைத்தாள்.

பின்னர் தன்னுடைய கைப்பையிலும் உணவை அடைத்து அதைத் தோளில் மாட்டியவள் அறை விளக்கை அணைத்துவிட்டு வெளியே வர, தனது காலணியை மாட்டிய அபினவ் பள்ளிப் பையை எடுத்து தோளில் போட்டிருந்தான்.

“ஷூ லேஸை நானே கட்டி விட்றேன் அபி!” என இவள் அவனது கையைத் தட்டிவிட்டு இரண்டு பக்க காலிலும் காலணியின் கோப்பிழையை இவளே இறுக்கமாகக் கட்டிவிட, அவன் குடுகுடுவென படிகளில் இறங்கினான்.

“மெதுவா போ அபி!” என்ற அதட்டலுடன் ஆதிரை வீட்டைப் பூட்டிவிட்டு கீழே வந்தாள். அவளது இருசக்கர வாகனத்தின் அருகே நின்று அதன் கண்ணாடியை அங்குமிங்கும் திருப்பிக் கொண்டிருந்தான் சிறியவன்.

இவள் சாவியை வாகனத்தில் பொருத்தி அதனை உயிர்ப்பிக்கவும் அபினவ் பின்னே ஏறியமர்ந்தான். ஐந்து நிமிட தொலைவில் இருந்த அந்த தனியார் பள்ளியில் மகனை இறக்கிவிட்டவள், “டேக் கேர் அபி!” எனக் கூற, “பாய் மா...” என அவன் பறந்திருந்தான்.

இவள் இருபது நிமிடத்தில் செங்கல்பட்டின் பிரதான சாலையைக் கடந்து புக்கத்துறை கூட்டு சாலையில் நுழைய, கிராமத்து வாசம் வீசத் தொடங்கியது‌. இத்தனை நேரமிருந்த வாகனத்தின் இரைச்சல், புகை என எதுவும் பாதிக்காது பச்சை பசேலென்றிருந்தது அந்தப் பகுதி. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் அமைந்திருக்க, ஆதிரை அந்த சாலையில் சற்று வேகத்தை கூட்டினாள்.

இருபக்கமும் பனை மரங்கள் ஓங்கி உயர்ந்திருக்க, இவளைத் தவிர ஒருவரும் அந்த சாலையில் இல்லை. குதிரைவாலிட்டிருந்த முடி எதிர்க்காற்றுக்கு முகத்தில் மோத, ஒற்றைக் கையை வைத்து தடுமாறியபடியே அதை பின்னே நகர்த்த சென்றவளின் வாகனம் சற்றே ஆட்டம் காண, அவளுக்கு அடுத்து வந்த மகிழுந்து பெரும் சத்தத்துடன் வந்து மிகச் சிறிய இடைவெளியில் நிற்க, இவள் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.

முகம் கடுகடுவென்றிருக்க, மகிழுந்தின் ஒரு பக்க கண்ணாடியைக் கீழே இறக்கினான் தேவநந்தன். கடுகுப் போட்டால் வெடித்துவிடும் என்றிருந்த அவன் முகத்தை இவள் சுருங்கிய நெற்றியுடன் பார்த்தாள்.

“ரோட்ல டேஸ் ஆடிட்டேதான் போவீங்களா மிஸ் ஆதிரையாழ்?” சற்றே எரிச்சலுடன் அவன் கேட்க, இவள் தனது இருசக்கர வாகனத்தைப் பின்னகர்த்தி அவனுக்கு வழியை விட, தேவநந்தன் அகன்றதும் பெருமூச்சுடன் அவனைப் பின்தொடர்ந்து இவளது இருசக்கர வாகனம் வந்து அந்த சிறிய பால் பதனிடும் தொழில்சாலை முன்பு வந்து நின்றது.

உழவர் துணை பாலகம் என்று பச்சை பசேலென்று அந்த சூழலுடன் போட்டிப் போட்டுக் கொண்டு முன்னே நின்றது அந்தப் பதாகை. அதைத் தொடர்ந்து அவன் உள்ளே நுழைந்து மகிழுந்தை நிறுத்தியதும் இவளும் அவனுக்குச் சற்று தள்ளி வாகனத்தை இருத்திவிட்டு கைப்பையோடு உள்ளே நுழைந்தாள்.

இடப்புறமிருந்தப் பகுதியை முழுதாக ஆக்கிரமித்திருந்தது பிரதான அறை. பால் கொள்முதல் செய்து, அதை வடிகட்டி பின்னர் பெரிய கலனில் சேமித்து அதன் வெப்பநிலையை சரிசெய்து (பில்லிங் செக்ஷன்) கண்ணாடி பொத்தலில் நிரப்பும் பகுதிக்குச் சென்று அதை பொத்தலில் நிரப்பி அதை முத்திரையிட்டு, தேதியை ஒட்டி, குளிரூட்டப்பட்ட அறைக்குள் வைத்துப் பின்னர் வாகனத்தில் ஏற்றும் வரை மொத்தமும் அந்த பகுதியில்தான் நடை பெறும் என்பதால் முக்கால்வாசி இடத்தை அந்தப் பகுதியே எடுத்துக் கொண்டிருந்தது.

இவர்கள் உள்ளே நுழைய, முதல்நாள் பால் விநியோகம் செய்து முடித்திருந்த அந்த குட்டி யானை வாகனம் உள்ளே வந்து நிறுத்தும் சத்ததைக் கேட்டவாறே அன்றைக்கு தன்னுடைய வருகையை நோட்டில் பதிவு செய்தாள் ஆதிரையாழ்.

இவளுக்கு முன்னே வாயிற் காவலாளி, சுத்தம் செய்வார்கள் என சிலர் வந்துவிட்டிருந்தனர். இது எப்போதும் நடக்கும் நிகழ்வுதான். இவள் சோதனைக் கூடத்தை ஒருமுறை கண்களால் சுழற்றிய பின் அது சுத்தமாக உள்ளது என உறுதி செய்துவிட்டு அந்த பெரிய அறைக்குள் நுழைந்தாள்.

“வணக்கம் மேடம்!” எனப் புன்னகைத்தவருக்கு தலையை அசைத்தாள் ஆதிரை. அந்தப் பெண்மணியோடு மேலும் மூன்று பேர் விசாலமான பகுதியை துடப்பத்தால் கூட்டி தண்ணீரை வைத்து துடைத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை மேற்பார்வை பார்த்தவள் அப்படியே பால் வடிகட்டும் பகுதிக்குள் நுழைந்தாள். இயந்திரத்தை இரண்டு நபர்கள் கிருமி நாசினியால் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். தினமும் காலை தரையிலிருந்து பால் சேமிக்கும் அறைவரை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்பது அவர்களின் எஸ் ஓ பி புத்தகத்தின் முதல் விதி. பின்னர் அப்படியே நகர்ந்து பெரிய கொள்கலன் பகுதிக்குள் நுழைந்து அதன் வெப்பநிலையை சோதித்து தனது அலைபேசியில் பதிவு செய்து கொண்டு அடுத்ததாக உள்ளே சென்றாள்.

இப்போதுதான் நேற்றைக்கு பால் விநியோகித்து‌ முடித்து நுகர்வோரிடமிருந்து பெற்றுக் கொண்ட கண்ணாடி பொத்தலை இயந்திரத்திலிட்டு ஐந்து பெண்கள் கழுவி அடுக்கிக் கொண்டிருந்தனர்.

அதைத் தொடர்ந்து வரிசையாய் குழாய்கள் இருக்க, இயந்திரத்தில் கழுவப்பட்ட பொத்தல்கள் மீண்டும் ஒருமுறை கையால் கழுவி இரண்டு பெண்கள் காய வைத்தனர்.

“அக்கா, இன்னைக்கு ப்ரேகேஜ் எத்தனை?” என ஒரு பெண்மணியிடம் கேட்டாள் இவள்.

“மூனு பாட்டில் உடைஞ்சிருக்கு மேடம்!” அவர்கள் கூறியதும் தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டு நகர்ந்தவள் குளிரூட்டும் அறையையும் சரிபார்த்துவிட்டு சோதனைக் கூட்டத்திற்குள் நுழைந்தாள்.

“அக்கா... சாம்பிள் கலெக்ட் பண்ணியாச்சு!” என வெள்ளை அங்கி அணிந்த பெண் வந்து மாதிரிக்காக சேர்க்கப்பட்ட பாலினை ஏழு சோதனைக் குழாயில் அடுக்கி இருந்தாள்.‌

“ப்ரொக்யூர்மெண்ட் ஓவரா? எவ்வளோ பால் வந்திருக்கு?” எனக் கேட்டுக் கொண்டே தனது இடத்திலிருந்த கணினியை உயிர்ப்பித்த ஆதிரை அவர்கள் மூன்று பேரின் வருகையையும் நேரத்தோடு பதிந்துவிட்டு அன்றைக்கு உடைந்த பொத்தல்களையும் எழுதிவிட்டு அதற்குப் பதில் மூன்று புதியவற்றை எடுத்துக் கொண்டதாக அந்த எக்ஸெல் தாளில் எழுதி அதை மூடினாள்.

“யெஸ் கா... மொத்தம் பதினாலு ட்ரம்கா!” என அந்தப் பெண் தர்ஷினி கூறிக் கொண்டிருக்கும் போதே நாற்பதைத் தொட்ட பெண்மணி ஒருவர் உள்ளே நுழைந்தார்.

“இந்தா மா, இன்னைக்கு சப்ளையர்ஸ் டீடெய்ல்ஸ்!” என அவர் நீட்டிய புத்தகத்தை கையில் வாங்கினாள்.

“தர்ஷினி, லஞ்சுக்குள்ள ஏழு ட்ரம் டெஸ்ட் பண்ணி இருக்கணும். க்விக்!” என கட்டளையிட்டவளுக்கு அடிபணிந்து மற்ற இருவரும் ஒவ்வொரு மாதிரிகளாக எடுத்து பாலின் கொழுப்பின் அளவையும் அதன் தரத்தையும் சோதித்துக் கொண்டிருந்தனர்.

ஆதிரை எந்தெந்த கிராமத்திலிருந்து எத்தனை லிட்டர் பால் யார் யார் கொடுத்திருக்கிறார்கள், என விற்பனையாளர் விவரங்களை கணினியில் பதிவு செய்தாள். அப்படியே தர்ஷினியும் கோமதியும் சோதனை செய்து தரும் எஸ்என்எஸ் எனப்பட்டும் பாலின் கொழுப்பின் அளவையும் பதிந்தாள்.

8.3 சதவீதத்றகு மேலிருக்கும் கொழுப்பின் அளவை எல்லாம் ஒரு தாளிலும் அதற்கு குறைவாய் இருந்தவற்றை சிகப்பு கோடிட்டு காண்பித்து மற்றொரு தாளிலும் நிரப்பினாள்.
அப்படியே பாக்டீரியா அளவுகளின்படி பாலின் தூய்மை தன்மையும் எக்ஸல் தாளில் நிரப்பினாள்.

அவர்கள் சோதனை செய்து கொண்டிருக்க, எழுந்து சென்றவள் பதப்படுத்தும் பகுதியில் தற்போதைய வெப்பநிலை எவ்வளவு, அதிகபட்ச வெப்பநிலை எவ்வளவு எனக் குறித்துக் கொண்டு வந்தாள். அதற்கே மதிய நேரத்தை தொட்டிருந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து நான்கு மாதிரிகளை மட்டுமே முடித்திருக்க, இவளுக்கு மெதுவாய் எரிச்சல் படர்ந்தது.

ஆதிரை இங்கே வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் நிறைவடையப் போகின்றன. இருபத்தைந்து வயதின் தொடக்கத்தில்தான் இந்தப் பணியில் அமர்ந்தாள். அவள் சேரும்போது அவளுடைய வேதியல் படிப்பிற்கு ஏற்றபடி சோதனை செய்யும் வேலைதான் வழங்கப்பட்டிருந்தது‌.

ஆதிரையாழுக்கு மேலே வேலை செய்யும் பெண்மணியிடம் இவள் சோதனை முடிவுகளை சமர்பிப்பாள். இவள் தற்போதைக்கு இருக்கும் பதவியில் வகித்த பெண்மணி பிரசவ கால விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றவர் வரவேயில்லை. அதற்கு முக்கிய காரணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் வேலை பளுதான். அவர் இருக்கும்போது ஆதிரைக்கு நிற்க நேரம் இருக்காது. அவள் ஒரு ஆளாகத்தான் அத்தனை மாதிரிகளையும் சோதனை செய்ய வேண்டும்.

காலையில் ஐந்து மாதிரிகள் மதியம் நான்கு மாதிரிகள் என ஒற்றை ஆளாய் அவள் செய்து முடித்திருக்க, இந்த இரு பெண்களும் இத்தனை சோம்பேறியாய் இருக்க வேண்டாம் என அவளுக்கு கடுப்பாய் வந்தது. முதலில் எல்லாம் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் லிட்டர் பால் மட்டுமே விநியோகம் செய்து கொண்டிருந்த நிறுவனம் தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்தப் பிறகு அசுர வளர்ச்சி கண்டிருந்தது.

இப்போதெல்லாம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஐந்தாயிரம்‌ முதல் அதிகபட்சம் எட்டாயிரம் லிட்டர் பால் வரை விநியோகம் செய்ய, வேலை பளு கழுத்தை நெறித்தது. அதனாலே இவளுக்கு கீழே இன்னும் ஒருவர் வேண்டும் என்று தேவநந்தனிடம் கேட்டு கோமதியைப் பணிக்கு அமர்த்தினாள். ஒரு சில சமயங்களில் வேலைப் பளு நெட்டி முறிக்கும் போது, இந்த வேலை வேண்டாம் எனத் தோன்றும்தான். ஆனாலும் இங்கு கிடைக்கும் சம்பளத்தையும் வேலை சுதந்திரத்தையும் இழக்க சர்வ நிச்சயமாய் மனதில்லை.

வேலைக்கு சேர்ந்த பொழுதில் வெறும் இருபத்து ஐந்தாயிரம்தான் அவளுடைய மாதச் சம்பளம். ஆனால் இப்போது நாற்பதாயிரம் வாங்கிக் கொண்டிருக்கிறாள். எல்லாவற்றையும் விட காலை ஒன்பது மணிக்கு வந்து ஐந்து மணிக்கு வீட்டிற்கு செல்லும் நேரக் கெடு அவளுக்கு மகனைத் தனியாளாக சமாளிக்க
உதவியாக இருந்தது.

நான்கு மணிக்கு பள்ளி முடிந்ததும் அபினவ் ஐந்து நிமிடத்தில் வீட்டை அடைந்துவிடுவான். ஆதிரையாழ் அந்த வீட்டிற்கு புலம் பெயர்ந்தும் ஐந்து ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. வயதான தம்பதியர் ஒருவர்தான் வீட்டின் உரிமையாளர். இவள் குழந்தையை மாலை பார்த்துக் கொள்ள ஒரு பெண்மணியை நியமிக்க, அந்த தம்பதியினர், “அட ஏம்மா சாயங்காலம் ஒரு மணி நேரம் உம்புள்ளையை நாங்கப் பார்த்துக்க மாட்டோமா?” என அவர்கள் அன்பாய் அபினவை அரவணைத்துக் கொள்ள இவளுக்கு பெரும் நிம்மதி படர்ந்தது.

தினமும் மாலை பள்ளி முடிந்ததும் அபினவ் கீழேயிருக்கும் ருக்கு பாட்டியின் வீட்டிற்கு சென்றுவிடுவான். அங்கே அவருடன் அமர்ந்து தொலைக்காட்சியில் பொம்மை படங்கள் பார்ப்பான்.

“அபி, பாட்டீயை டிஸ்டர்ப் பண்ண கூடாது. அவங்க வீட்ல இருந்து எந்தப் பொருளையும் கேட்காம எடுத்து வரக் கூடாது. தொடக் கூடாது. அது இது வேணும்னு கேட்க கூடாது. நான் வந்ததும் உனக்கு ஸ்நாக்ஸ் தருவேன். அதுவரை சேட்டை செய்யாம இருக்கணும்!” என மகனிடம் பலமுறை வற்புறுத்தியே அவர்கள் வீட்டில்விட சம்மதித்தாள். இத்தனைக்கும் அவன் எட்டு வயதைத் தொடப் போகிறான். மிகச் சிறியவன் எல்லாம் இல்லை. தாய் கூறுவதை புரிந்து கொள்ளும் பிராயத்திற்குள் நுழைந்திருந்தான்.

ஐந்து ஆறு வயதில் சேட்டை அதிகம்தான். ஆனால் இப்போதெல்லாம் தாய் சொல்லை தட்டவில்லை. ஆதிரை என்னக் கூறினாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மகனை இவள்தான் முத்தமிட்டுக் கொஞ்சுவாள். மாலை ஐந்து மணிக்கு வேலை முடிந்ததும் ஐந்தரைக்கு வீட்டை அடைந்துவிடுவாள். பின்னர் அபினவ் தாயிடம் ஓடி விடுவான்.

ருக்கு பாட்டியிடம்‌ இலவசமாக எதையும் பெற அவளுக்கு மனதில்லை. அதனாலே அவர்கள் மகனைப் பார்த்துக் கொள்வதற்கு ஈடாக தன்னால் இயன்ற உதவியை அவர்களுக்கு செய்துவிடுவாள். வார வாரம் கடைக்குச் செல்லும் போது அவர்களுக்கும் காய்கறிகள், மளிகை சாமான்கள் வாங்கி வந்து கொடுப்பாள். மின்சார கட்டணத்தை இணையத்தில் கட்ட உதவுவாள். எரிவாயுவை அலைபேசியில் பதிந்து கொடுப்பாள்‌. இப்படி சிறு சிறு உதவிகள் மூலம் அவர்களுக்கு தன்னுடைய நன்றியைப் பகிர்ந்து விடுவாள்.

ஒற்றை ஆளாய் மகனை வளர்க்கிறோம் என என்றைக்கும் ஆதிரையாழ் துவண்டது இல்லை. அவன் வயிற்றில் உருவான நாள் முதல் இதோ எட்டு வயது முடிவடையப் போகிறது. இந்த எட்டு வருடங்களும் அவளின் நிழல் மட்டும்தானே அபினவ்க்கு. தன்னால் முடியும் என்ற எண்ணம் இருந்ததால்தான் துணிந்து அவனைப் பெற்றுக் கொண்டாள். பெரிதாய் யாரிடமும் தன்னுடைய வேலையையும் கடமையும் சுமத்த மாட்டாள். உதவி கேட்டு கூட யாரையும் சங்கடப்படுத்த விரும்ப மாட்டாள். தன் வேலையுண்டு தான் உண்டு என்றொரு ரகம் அவள்.

சிறு வயதிலே தாய் தந்தை இன்றி தன்னைத் தானே பார்த்துக் கொண்டதாலோ என்னவோ யாரும் இல்லை என்று தனிமை அவளை அச்சுறுத்தவில்லை. ம்ஹூம் அவள் தனிமைக்குப் பயந்த காலங்கள் எல்லாம் கரைந்து இப்போது தனிமையை விரும்பி தோழனாய் ஏற்றுக் கொண்டிருக்கிறாள். பதினெட்டு வயதில் ஏற்றிருந்த தனிமை முப்பது வயது வரை அவளைக் கைவிடாது பற்றிக் கொண்டிருக்கிறது.

“லஞ்ச் முடிச்சிட்டு வந்து ரெண்டு பேரும் நாலு நாலு சாம்பிள் போட்டு முடிக்கணும். ஐ வில் டூ ரெஸ்ட் ஆஃப் தி சாம்பிள்
சீக்கிரம் சாப்ட்டு வாங்க!” என அவள் கோபத்தில் இரைய, இருவரும் தலையை அசைத்து அகன்றதும் இவள் எழுந்து சென்று குளிர்ந்த நீரில் முகத்தை அடித்துக் கழுவினாள். மே மாத வெயில் கபகபவென வியர்த்து வழிய செய்தது. இத்தனைக்கும் இவள் மின்விசிறிக்கு கீழேதான் அமர்ந்திருந்தாள். இருந்தும் வெக்கை தாங்க முடியவில்லை.

முகத்தை கழுவியவள் அதை துப்பட்டாவால் துடைத்துவிட்டு வந்து தன்னிடத்தில் அமர்ந்தாள். மூப்பது வயதைக் கடந்தாலும் முகம் இன்னும் இருபத்து ஐந்திலே தங்கிவிட்டிருந்தது. வேலைக்கு சேரும்போது குழந்தை பெற்றிருந்த உடல் சற்றே எடை கூடியிருந்தது. இந்த ஐந்து வருடங்களில் எந்த மெனக்கெடலும் இன்றி தானாகவே எடை குறைந்து மெலிந்து போய்விட்டாள். அமெரிக்க மகாணத்தின் குளிரில் பளீரென வெண்மை நிறத்தில் இருந்த முகம் கூட சென்னை வெயிலில் கருத்துப் போயிருந்தது. இருந்தும் ஆதிரை ஆழகாய் இருந்தாள். தன்னம்பிக்கையும் விடாத உழைப்பும் எப்போதும் அவளை மிளிரச் செய்பவன.

பத்து நிமிடத்தில் டப்பாவில் என்ன உணவுகொண்டு வந்தோம் என்பதைக் கூட மறந்து படபடவென வாயில் அடைத்தவள், கையை கழுவிவிட்டு வெள்ளை அங்கியையும் கையுறையும் மாட்டிக் கொண்டு பாலின் தரத்தை சோதிக்கத் தொடங்கினாள். அவள் ஒரு சோதனை முடிவுகளை எழுதி முடிக்கும் போதுதான் தர்ஷினியும் கோமதியும் உள்ளே நுழைந்தனர். முகத்தைக் கடுமையைக் கூட்டி அவள் பார்த்த பார்வையிலே இருவரும் விறுவிறுவென அடுத்தடுத்த வேலையை செய்யத் தொடங்கினர்.

இவர்கள் தாமதித்தால் ஆதிரைக்குத் திட்டு விழுவதோடு வீட்டிற்கு செல்லவும் நேரமெடுக்கும். மகன் ருக்குவை தொல்லை செய்து விடுவானோ என மனம் பதறிவிடுவாள். அதனாலே அவர்களது வேலையையும் இவளே எடுத்து செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருந்தாள். மாலை நான்கு மணிக்குள்ளே சோதனை முடிவுகளை கணினியில் பதிந்து அவள் தேவாவிற்கு அனுப்ப வேண்டும். அவன் அனைத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளை அழைத்தான்.

“சார், எஸ்என்எப் வேல்யூ ஒரு சப்ளையருக்கு ஸ்டாண்டர் வேல்யூ விட ரொம்ப கம்மியா இருக்கு அண்ட் பாக்டீரியா கண்டாமினேஷனும் அதிகமா இருக்கு!” என்றாள் அவன் முகம் பார்த்து.

“இதுக்கு முன்னாடி அந்த சப்ளையர்கிட்டே இந்த மாதிரி கம்ப்ளைண்ட்ஸ் வந்ததில்லையே ஆதிரையாழ்?” அவன் யோசனையுடன் கேட்க, “யெஸ் சார், மே பீ மாட்டுக்கு எதுவும் இன்ஃபெக்ஷனாகி இருக்கலாம் சார்!” என்றாள் தனக்குத் தோன்றியவற்றை. அவனுமே அதைத்தான் யோசித்திருந்தான்.

“ஓகே, நாளைக்கு அந்த சப்ளையர் கிட்ட பாலை வாங்க வேணாம். என்னைப் பார்க்க சொல்லுங்க. அண்ட் அந்த ட்ரம்‌ பாலை டிஸ்பேட்ச் பண்ண வேணாம். அதை டிஸ்கார்ட் பண்ணிட்டு ரெகார்ட்ஸ்ல போடுங்க. நான் இன்னொரு ப்ராஞ்ச்ல இருந்து இதை ஈக்வல் பண்ண சொல்றேன். எல்லாத்தையும் எக்ஸல் ஷீட்ல மறக்காம நோட் பண்ணிடுங்க!” என அவன் மேலும் கூறியவற்றை தலையை அசைத்துக் கேட்டவள் அனைத்தையும் கணினியில் பதிந்தாள்.

குளிரூட்டும் அறைக்குச் சென்று அந்த குறிப்பிட்ட பாலை கழிவு தொட்டியில் ஊற்றி விட்டதை கண்ணால் பார்த்துவிட்டு வந்தாள். மற்றவற்றின் வெப்பநிலையை மறக்காது சோதித்துவிட்டே சோதனைக் கூடத்திற்கு வந்தாள்.

தர்ஷினியும் கோமதியும் தங்களது பையை தயாராய் எடுத்து வைத்துவிட்டு ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அறையில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டிருக்க, இவள் பெரிதாய் அவர்களைப் பார்த்து அலட்டிக் கொள்ளவில்லை. நீண்ட நேரம் பேச்சு சென்றாலோ வேலை பார்க்காமல் அவர்கள் நேரத்தை ஓட்டினாலோ தேவா அழைத்து திட்டி தீர்த்து விடுவான். அதனாலே ஆதிரை வேலை நேரத்தில் அநாவசியமாக எதையும் செய்ய மாட்டாள். அன்றைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வேலையை நேரத்திற்குள் முடித்துக் கொடுத்தால்தான் அவளுக்கு மூச்சுவிட நேரம் கிடைக்கும்.

மீண்டும் கணினியை உயிர்ப்பித்து அந்த தினத்திற்கான வேலைகள் எல்லாம் சரியாய் செய்து முடித்து விட்டோமா என ஒரு முறை சரிபார்த்து அதை அணைத்து தன்னுடைய மேஜையில் வைத்து பூட்டி சாவியை கைப்பையில் பத்திரப்படுத்திக் கொண்டாள்.

வேலைக்கு சேர்ந்த புதிதில் இதுபோல பாலின் தரம் குறைவாக பாக்டீரியா தொற்று அதிகமாகி விட்ட பாலை தேவா கழிவு தொட்டிலில் ஊற்றிவிட இவளைப் பணிக்க, “ஓகே சார்!” என அவனிடம் தலையை அசைத்துக் கேட்டவள், “அண்ணா, அந்த ட்ரம் பாலை டிஸ்கார்ட் பண்ணிட்டீங்களா?” என அமர்ந்த இடத்திலிருந்தே கேட்டுவிட்டு அவனிடமும் பாலை அகற்றிவிட்டோம் என உரைத்து விட்டாள்.

ஆனால் தவறுதலாக நல்ல ட்ரம் பால் கீழே ஊற்றப்பட்டு அசுத்தமான பால் விநியோகத்திற்குச் சென்றுவிட, இரண்டு மூன்று பயனாளர்களுக்கு வாந்தி வயிற்றுப் போக்கு ஏற்ப்பட்டது விட்டது. அன்றைக்குத்தான் ஆதிரைக்கு தேவாவின் உண்மையான கோபமுகம் தெரிந்திருந்தது.

“அறிவில்லை உங்களுக்கு? கொடுத்த ஒரு வேலையை சரியா செய்யலை. அவங்க டிஸ்கார்ட் பண்ணதை கண்ணால செக் பண்ணீங்களா நீங்க?” என அவன் கத்த, இவள் அவமானத்தில் சிவந்து கன்றிய முகத்துடன் இல்லையென தலையை அசைத்தாள்.

“அவங்க எல்லாரும் அன் எஜூகேடட். அதனாலதான் நான் உங்களை செக் பண்ண சொன்னேன். உங்களோட கேர்லஸ்னெஸ்னால எத்தனை பேரோட ஹெல்த் ஸ்பாயிலாகி இருக்கு. யூ டோன்ட் ஹேவ் எனி சென்ஸ்? ஹம்ம்... இதுல யூ எஸ்ல படிச்சிருக்கீங்கன்னு பேர் வேற. அங்கப் போய் என்னத்தை படிச்சுக் கிழிச்சீங்க? வேலையோட சீரியஸ்னெஸ் புரியலையா உங்களுக்கு? நம்பளோட பாலை எத்தனையோ குழந்தைங்க குடிக்குறாங்க. உயிர் போயிருந்தா யார் பதில் சொல்றது?” என அவன் அன்றைக்கு அவளிடம் திட்டியது இன்றைக்கும் மறக்காது. அவன் திட்டியதை விட தன்னுடைய கவனக்குறைவால் ஏதேனும் குழந்தையின் உயிர் போயிருந்தால் என்ற நினைப்பே அவளுக்கு பயத்தை உண்டு பண்ணியிருந்தது. அதிலிருந்துதான் தான் பார்க்கும் வேலையின் பொறுப்பு புரிந்திருக்க, அவனிடம் மன்னிப்பை வேண்டியவள் இன்று வரைக்கும் அதீத கவனமாய் வேலை செய்தாள்.

காலையில் வந்ததும் மற்ற ஊழியர்கள் செய்யும் வேலையை கண்ணாரப் பார்த்து சோதித்துவிட்டே அடுத்த வேலைக்கு நகர்வாள். அதற்கடுத்ததாய் இது போல சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. ஆதிரையின் பொறுப்புணர்வும் அதற்கு முக்கிய காரணம்.

நேரம் ஐந்தை தொட்டதும்‌ தர்ஷினியும் கோமதியும் தேவநந்தனின் அறைக்குள் நுழைந்தனர். இவர்கள் சோதனைக் கூடத்தை ஒட்டி மத்திய அளவிலான அலுவலக அறை ஒன்றிருக்கும். தேவநந்தனின் அறை அது. அந்த அறையின் ஜன்னல் வழியே பார்த்தால் இங்கே நடக்கும் அனைத்தையும் கவனிக்க முடியும்.

இவர்கள் உள்ளே நுழைய, “வேலை நேரத்துல என்ன வெட்டிக் கதை உங்களுக்கு?” அவன் அவர்கள் இருவரையும் திட்ட, “சார், நாங்க டெஸ்ட் ரிப்போர்ட் சப்மிட் பண்ணிட்டுத்தான் பேசுனோம்!” என தர்ஷினி முந்தினாள்.

“வாட்! கம் அகைன். எத்தனை டெஸ்ட் ரிப்போர்ட் நீங்க சப்மிட் பண்ணீங்க?” எனத் தன் முன்னிருந்த கணினியை பார்த்தவாறு அவன் வினவ, அவள் தயங்கினாள்.
 
Last edited:
Administrator
Staff member
Messages
1,115
Reaction score
3,188
Points
113
.

“மார்னிங் டூ, ஈவ்னிங் ஃபோர். டோட்டலி சிக்ஸ். அண்ட் மிஸஸ் கோமதி நீங்களும் சிக்ஸ் ரிப்போர்ட் சப்மிட் பண்ணி இருக்கீங்க. இன்னைக்கு மொத்தம் பதினாறு ரிப்போர்ட் பண்ணணும். ஆதிரையாழ் நாலு பண்ணி இருக்காங்க. இது அவங்களோட வேலையே இல்லை. உங்களை சூப்பர்வைஸ் பண்றதுதானே அவங்க ட்யூட்டி?” அவன் கடுமையாய்க் கேட்டதும் பெண்களின் முகம் விழுந்து போனது.

“சாரி சார்!” கோமதி தயக்கத்துடன் கூறினார்.

“ஐ டோன்ட் வாண்ட் யுவர் சாரி. ஐ நீட் பெர்பெக்ஷன் அண்ட் டெடிகேஷன் இன் வொர்க். வேலையை முடிச்சிட்டு நீங்க சிரிச்சு பேசுனா ஐ டோன்ட் கேர். அதர்வைஸ் உங்களுக்கு வார்னிங் கொடுக்க வேண்டியது வரும். காட் இட்!” என்றவன், “டோன்ட் பார்கெட் தட் நீங்க வர்றதுக்கு முன்னாடி ரெண்டு பேரோட வேலையும் ஆதிரையாழ் தான் பார்த்தாங்க. ஐ டோல்ட் யூ திஸ் செவரல் டைம். சோ, பீ கேர் ஃபுல் இன் யுவர் வொர்க்!” என அவன் கடித்து துப்பியதைக் கேட்டு தலையை அசைத்துவிட்டு வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு அவர்கள் வெளியே வர, அதற்குள்ளே ஆதிரைக்கு பொறுமை பறந்தது.

நேரம் ஐந்து பத்தை தொட்டுவிட்டது. இப்போது சென்றாலே சென்னையின் போக்குவரத்து அவளை இழுத்துக் கொள்ளும். இன்னும் தாமதித்தால் அவ்வளவுதான். அதனாலே முடிந்தளவு வேகமாய் செல்ல முயல்வாள்.

உள்ளே நுழைந்தவள், “சார், ரிசெப்ஷன் லாக், க்ளீனிங் ரெக்கார்டர், பாஸ்டரிசேஷன் லாக், டிஸ்பேட்ச் லாக்!” என லாக் புத்தகங்களை அவன் முன்னே அடுக்கிவிட்டு வருகை பதிவேட்டில் நேரத்தோடு கையெழுத்தைப் பதிந்தாள்.

காலை வரும்போது வருகை பதிவேடு அவர்களது சோதனைக் கூடத்தில் இருக்கும். மாலை செல்லும்போது தேவாவைப் பார்த்துவிட்டு அவனது அறையில்தான் கையெழுத்திட்டு செல்ல வேண்டும். ஏனென்றால் அவன் காலை வரும் நேரத்தை சரியாக கணிக்க முடியாது. இது போல இன்னொரு கிளையும் தாம்பரத்தின் புறநகர் பகுதியில் உள்ளது. தேவநந்தனின் தம்பிதான் பார்த்துக் கொள்கிறான். இவன் அவ்வப்போது சென்று மேற்பார்வை பார்ப்பான். தேவையான இடங்களில் அறிவுரை கூறுவான். அதனால் சில பல நாட்கள் இங்கு வரத் தாமதமாகும்.‌

ஆதிரை அவன் முகத்தையே பார்த்திருக்க, “ஆதிரையாழ், சண்டே மேரேஜ் ஆர்டர்க்கு பால் டிஸ்பேட்ச் பண்ணணும். நீங்க இருந்தா பெட்டர். நான் அந்த பிராஞ்ச்ல ஒரு ஆர்டரைப் பார்க்கணும். சோ மண்டே லீவை சேஞ்ச் பண்ணிக்கோங்க!” என அவன் கூறவும் இவளுக்கு நொடியில் முகம் மாறியது.

“சாரி டா செல்லம். என் தங்கம் இல்ல, அபி கண்ணா, இந்த சண்டே ப்ராமிஸா நம்ப ஸ்விம்மிங் க்ளாஸ் போகலாம்!” என சென்ற வாரம்‌ உடல்நிலை சரியில்லாது செல்ல முடியாமல் போய்விட்ட காரணத்தால் மகனை சத்தியம் செய்யாத குறையாக சமாதானம் செய்தது நினைவு வர, மனம் சுணங்கியது. தேவா தன் முகத்தையே பார்த்திருப்பது அவளுக்கும் புரிந்தது. திருமணம், காதுகுத்து போன்ற விசேஷங்களுக்கு பால் வேண்டும் என கேட்பவர்களுக்கு குறித்த நேரத்தில் பாலை விநியோகம் செய்ய வேண்டும். அப்படி சூழ்நிலைகளில் விடுமுறை தினத்தை தியாகம் செய்ய வேண்டி வரும் என விதிமுறை புத்தகத்தில் படித்துப் பார்த்து தானே வேலைக்கு சேர்ந்தாள். அதனாலே இதையெல்லாம் ஒருபோதும் அவளால் தட்டிக் கழிக்க முடியாது.

“ஓகே சார்!” என அவள் சோர்வுடன் தலையை அசைக்க, அவனும் அதை ஏற்றுக் கொண்டதாய் மெலிதாய் உதடுகளை விரித்தான். அதையெல்லாம் புன்னகை என்ற வார்த்தைக்குள் அடக்க முடியாது.

மேலும் தாமதித்தால் வீடு செல்ல இருட்டிவிடும். அதுவும் இந்தப் பாதை இரவுகளில் சில சமயம் அச்சுறுத்தும். அதனாலே வாகனத்தை உயிர்ப்பித்தவள், “வீட்ல அவனை வேற சமாளிக்கணுமே!” என்ற முணுமுணுப்போடு வேகமாய் நகர்ந்தாள். தேவா வேலையை முடித்துவிட்டு ஏழு மணிக்கு தொழில்சாலையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றான்.

தொடரும்...

சர்வம் வேணுமா பூங்காற்று வேணுமான்னு கேட்டேன் மக்களே. பட் மதியம்‌ பிரியாணி சாப்ட்டு அக்கடான்னு படுத்தா, நெஞ்சுக்குள்ளே கேட்குதே என் காதல் ரிங்டோனான்னு இந்த கதையும் டைட்டிலும் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடுச்சு. எழுதியே ஆகணும்ன்னு முன்னாடி வந்து நிக்கும்போது ஞான்‌ என்ன செய்யும். ஹேப்பி ரீடிங். அப்டேட்ஸ் எப்போ வரும்னு சொல்ல மாட்டேன். டைம் கிடைக்கும்போது எல்லாம் கடகடன்னு போட்றேன். முக்கியமாய் கமெண்ட் வந்தா பாஸ்டா போடுவேன்‌. அப்புறம் உங்க இஷ்டம். தென் என்னோட
சர்ப்ரைஸ் எப்படி? 💖🫶🫣
 
Last edited:
Well-known member
Messages
385
Reaction score
270
Points
63
Surprise super than indha story kooda vae athuvum pota kanna moonu laddu thinga aasai ah apadi nu jolly ah irupom.

Deva rombha strict pa adei yappa ellarum ah yum partapachamae pakka ma thituran ah ya
Yazh pavam ava leave la vera abi ah kootitu poran nu promise panna athu ippo illa nu aagiduthu so sad
 
Top