• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

நளிர் 2

New member
Messages
2
Reaction score
1
Points
3
அத்தியாயம் 2

பெண்கள் மூவரும் ஹாலில் அமர்ந்து கலகலத்து சிரித்தவாறே ஒருவருக்கொருவர் மருதாணி வைத்துக்கொண்டார்கள்.

“அக்கா எனக்கும் அது மாதிரியே வைக்கா. அவளுக்கு மட்டும் அழகா வச்சிவிட்டிருக்க?” ஆர்த்தி நளிராவின் கையை எட்டி எட்டிப் பார்த்தாள். நளிராவின் உள்ளங்கையில் மயில் உருவம் அழகாய் பொருந்தியிருக்க, ஆர்த்தியின் விழிகள் அகல மறுத்தது.

“மூணு பேருக்குமே ஒரே டிசைன் வச்சா நல்லாருக்காது ஆர்த்தி. உனக்கு வேற டிசைன் யோசிச்சு வச்சிருக்கேன். அப்ப பாரு நீயே அசந்து போவ” சைத்ரா சொல்லிவிட்டு நளிரா பாதத்துக்கும் நெளி நெளியாக வைத்து ஒவ்வொரு வளைவுக்கும் சின்ன சின்ன புள்ளிகளை வைத்தாள்.

“செல்ல அக்கா. எனக்கு மட்டும் கியூட்டா யோசிக்கறா எப்பவும். நான்னாதான் அக்காவுக்கு உருசு தெரியுமா?” தன் பாதத்தை பிடித்திருக்கும் சைத்ரா கன்னத்தில் எட்டி முத்தம் வைத்தவள் நாக்கை துருத்தி கண்சிமிட்டி ஆர்த்தியின் பொறாமைத் தீயை இன்னும் விசிறி விட்டாள்.

“நெளிரா நெளிரா நெளிநெளியா போன நொளிரா. வாய மூடுடி ரத்தக் காட்டேரி. அக்காக்கு நானும்தான் உசுரு. உன்னைத்தான் பிடிக்கவே பிடிக்காதுடி குள்ள கத்திரிக்கா” தன்னை விட கொஞ்சம் உயரம் கம்மியாக இருப்பதால், கோபம் வரும் போதெல்லாம் இதை சொன்னால் நளிராவுக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும்.

பொதுவாய் அவர்கள் வீட்டில் எல்லோருமே ஓரளவு நார்மலான உயரம்தான். ஆனால் நளிரா மட்டும்தான் கொஞ்சம் உயரம் கம்மியாக இருப்பாள் மற்றவர்களை காட்டிலும். அதுவும் கொஞ்சம்தான். ஆனால் அதுவே அவளை சீண்டிவிட ஒரு வாய்ப்பாக போனது ஆர்த்திக்கும் அவ்வப்போது சைத்ராவுக்குமே.

ஆர்த்தியின் பேச்சில் முட்டிக்கிட்டு வரும் சிரிப்பை உதட்டை மென்று சைத்ரா அடக்கினாள் இல்லாவிட்டால் நளிரா கையை இப்பவே ரோசம் வந்து கழுவிவிடுவாள். இத்தனை நேரம் முதுகு வலிக்க வச்சுவிட்டான்னு கூட பாவம் பார்க்க மாட்டாள்.

“அதெப்படி அந்தப் பிசாசு பேசுனத்துக்கு நீ சிரிக்கலாம்ன்னு” மூஞ்சை தூக்கி வைச்சுக்குவாள்.

அதுக்குப் பிறகு சமாதானப்படுத்தி திரும்ப அதே டிசைன் மேல மருதாணி வரைவது பெரிய வேலையாக போகும் சைத்ராவுக்கு.

“யாருடி கத்திரிக்கா. நாயே நெளிரான்னு சொல்ற வேலை வச்சுக்காத சொல்லிட்டேன்” அவளிடம் எகிறியவள்,

“ம்மா எதுக்குமா நளிரான்னு பேரை வச்ச. இந்த குட்டி நாயி என்னை அசிங்கமா பேசிட்டு இருக்குது. நா நெளியா இருக்கனாம்” கூப்பாடு போட்டவளை கண்டுகொள்ளாமல் ராஜனும் மலரும் நாளைக்கு வரும் மாப்பிள்ளை வீட்டார் பத்தி பேசிக்கொண்டிருந்தனர்.

“போடி கத்திரிக்கா. பாத்தியா அம்மா கூட கண்டுக்களை” ஆர்த்தி இன்னும் சீண்ட.

“பாருக்கா அவளை. அக்கான்னு சொல்லச் சொல்லு. வாடிப்போடின்னு சொல்லி கூப்பிடுறா. இல்லைன்னா நான் கையை கழுவிக்குவேன் பாத்துக்கோ” நளிரா மிரட்டினாள் அக்காவை.

“மலரப்பா நாமளும் ஹாலுக்கே போயிக்கலாம். பிள்ளைங்களோட பேசிக்கிட்டே செஞ்சா அலுப்பு தெரியாது பாருங்க” மலர்விழி சொல்ல.

அடுத்த நிமிடம் அடுப்பும் சமையல் பொருட்களும் ஹாலுக்கே வந்தது. மலர்விழி பலகாரம் செய்ய, ராஜன் லட்டுவை உருட்டி தட்டில் வைக்க ஆரம்பித்தார்.

பொண்ணு பார்க்க வராங்கன்னு மலர்விழி இதையெல்லாம் செய்ய நினைக்கலை. இதோ இன்னும் இரண்டு நாளில் தீபாவளி பண்டிகை வருது. மூணு பொண்ணுங்க இருக்காங்க. அவங்க ப்ரண்ட்ஸ், அக்கம் பக்கம் கொடுக்க. ஏன் பிள்ளைங்களே வீட்டில் சாப்பிடுறதுக்கும் ஏதாவது செஞ்சாகணுமே.

வாணி படியில் ஏற முடியாமல் மெதுவாய் படியில் ஏறி வீட்டுக்குள் வந்தார்.

“ஏய் நாட்டாமை வருதுடி” சைத்ரா சொல்லிச் சிரிக்க. அதைக்கேட்ட பெண்கள் வாணியைப் பார்த்து நகைத்தனர்.

வாணி நல்லவர்தான். என்ன பொண்ணுங்களை அதட்டி உருட்டிகிட்டே இருப்பதால் அவரைக் கண்டால் மூவருக்கும் கொஞ்சம் அலர்ஜி அவ்வளவுதான்.

“என்னடி பொண்ணுங்களா மருதாணி வைக்கறீங்களா?” கேட்டவாறே உள்ளே வந்தார்.

“உங்களுக்கும் வைக்கட்டுமா வாணிக்கா” நளிரா எதார்த்தமாய் கேட்டாள்.

“நளிரா பேசாம இரு. உனக்கெதுக்கு வம்பு. அந்தம்மா தேவையில்லாம் ஏதாவது சொல்லுவாங்க” சைத்ரா தடுத்தாள்.

“ஆமாக்கா. அட்வைஸ் குயின்” ஆர்த்தி சிரித்தாள்.

“எனக்கெதுக்கும்மா. சின்னப் பொண்ணுங்க நீங்களே வைங்க” சொல்லிவிட்டு மலரை பார்த்து

“என்ன மலரு தீபாவளி வந்துருச்சா இப்பவே?” கேட்டார்.

“அது ஒரு சாக்குக்கா. இத்தனையும் வெளியே போய் வாங்கணும்னா ஏகப்பட்ட பணம் வேணுமே. அட பணத்தை விடுங்க. நம்ம கையால செஞ்சு புள்ளைகளுக்கு தந்தா சந்தோசமா சாப்பிடுவாங்க. கடையில காசு கொடுத்து வாங்கினா அவன் விக்கற விலைக்கு பத்தியும் பத்தாமையும் பிள்ளைகளுக்கு திங்க தரணும். அதான் இன்னைக்கு ஆரம்பிச்சுட்டேன்” மலர்விழி அடுப்பை அணைத்துவிட்டு, துண்டால் முகத்தை துடைத்தவாறே வந்து அமர்ந்தார் மகள்கள் அருகில்.

“கையை தாடி உனக்கு நான் வச்சுவிடறேன். சைத்ராவுக்கு கையே வலிக்கும் உனக்கும் அவளுக்கும் வைக்கப் போயி” ஆர்த்தியின் கையை இழுத்து அவளுக்கு மருதாணி வைக்க ஆரம்பித்தார் மலர்விழி.

“மாப்பிள்ளை வீட்டுல இருந்து எத்தனை மணிக்கு வராங்கன்னு சொன்னாங்களா மலரு?” வாணி விசாரித்தார்.

“காலைல பத்து மணிக்கு கிளம்பறேன்னு சொன்னாங்க. ஆனா தடம் வழின்னு பார்த்து வரதுக்கு எப்படியும் பதினொன்னு ஆகும்னாங்க” மலர் சொல்ல.

“நளிராவை நாளைக்கு எங்க வீட்டுக்கு அனுப்பி வை மலரு. மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்துட்டு போற வரைக்கும் அங்கயே இருக்கட்டும்” வாணி சொன்னார்.

“எதுக்குன்னேன் வாணிக்கா. பொண்ணுங்க மூணு பேரையும் வர்றவங்க பார்த்தா என்னங்கறேன். வர்றவன் யோக்கியனா இருந்தா யாரை பாக்க வரோம்னு தெளிவா இருப்பான். அதில்லாம மனசை அலைபாய விட்டுட்டு இளைய பொண்ணை கேட்டா அவன் யோக்கியம் அங்கயே அடிபட்டுப் போகுதே”

“அதில்லடி” வாணி கவலையாக இடைபுகுந்தார்.

“வேணாக்கா. அம்மா சொன்னது சரிதான். நளிரா இங்கயே இருக்கட்டும். வர்றவன் எனக்காக வரட்டும். அதைவிட்டுட்டு இவளை அங்கேயும் இங்கேயும் அனுப்பி அவ மனசை காயப்படுத்த வேண்டாம்” சைத்ரா சொல்லிவிட்டாள்.

“அக்கா லவ் யூ” சைத்ரா கன்னத்தில் முத்தமிட்டாள் நளிரா.

“அக்கா நானும் லவ் யூ” ஆர்த்தி இருவருக்கும் முத்தம் கொடுக்க.

“என்னமோ நல்லாருக்கணும்டியம்மா மூணு பேரும்” வாணி சொன்னார்.

“நளிரா இன்னைக்கு ஸ்டோர் போகணுமாம்மா. மருதாணி வச்சிருக்கியே நா வேணும்னா சிவதானுகிட்ட சொல்லிரட்டா உன்னால இன்னைக்கு வரமுடியாதுன்னு” ராஜன் கேட்டார்.

“அப்பா இது மூணு மணிநேரத்துல காய்ஞ்சிடுப்பா. கழுவிட்டு போயிக்கறேன். நான் போகலைன்னா அங்க கஷ்டம்ப்பா. அங்கிள் யாரையும் நம்பி விடமாட்டேங்குறார். நீங்க சொன்னாலும் அவர் கேக்கவே மாட்டார் வந்தே ஆகணும்னு நிப்பார். அப்புறம் நீ போம்மான்னு சொல்லுவீங்க. எதுக்கு இத்தனை வேலை. அதுக்கு நானே போயிக்கறேன்” நளிரா சிரிப்போடு சொன்னாள்.

“நளிரா சொல்ல மறந்தே போயிட்டேன். சிவன் கோவில் குருக்கள் உன்னை நாளைக்கு கோவிலுக்கு வரச் சொன்னார். தேவாரம் பாடணும்னு. அதுக்குத்தான் காலைல வந்தேன். எண்ணத்தையோ பேசிட்டு மறந்துட்டே போய்ட்டேன்” வாணி சொன்னார்.

“சரிக்கா நான் போயிக்கறேன்” நளிரா எழுந்து மின்விசிறிக்கு அடியில் போய் காற்று படும்படி அமர்ந்தாள். மற்ற பெண்களும் அவள் கூடவே சென்றுவிட்டார்கள்.

கொஞ்ச நேரம் போய் கையை கழுவிய பெண்கள் என் கைதான் சிவப்பா இருக்கு என ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட, ராஜன்தான் இடையில் புகுந்து “மூணு பேர் கையுமே அழகா இருக்கு கண்ணம்மா” என்று சமாதானம் செய்து வைத்தார்.

வாணி அவர் வீட்டுக்கு போய்விட, மூவரும் வெளியே செல்லப் பிளான் பண்ணினார்கள்.

“அம்மா நாங்க பார்க்குக்கு போயிட்டு வரோம்மா. வாக்கிங் மாதிரி போனா கொஞ்சம் நல்லாருக்கும்னு தோணுது நீயும் அப்பாவும் வரதுன்னா வாங்க” அழைத்தார்கள்.

“இல்லம்மா. நீங்களே போங்க. அப்பாவுக்கும் எனக்கும் வேலை இருக்கு. செஞ்சதெல்லாம் பாங்கா எடுத்து வைக்கணும் டப்பாவுல. இல்லன்னா எறும்பு தின்னுடும். காஞ்சு வர வரன்னு திங்க முடியாம கெட்டியா போயிடும்” அவர்களை அனுப்பி வைத்தார் மலர்விழி.

பார்க் சென்ற பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே நடக்க,

நான்கு இளைஞர்கள் ஒருவருக்கொருவர் பேசி சிரித்தபடி கலாட்டாவோடும் அவ்வப்போது ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டபடி எதிரில் வந்தனர்.

“டேய் கட்டை நல்லாருக்குடா. நீ வேணா தொட்டுப் பாரேன். வாசனை கையிலேயே நிக்கும்” கையில் இருக்கும் சிறிய சந்தனக்கட்டையை துருவ் கையில் கொடுக்க முயன்றான் ஆத்மா.

“டேய் எனக்கு அந்த ஸ்மெல் பிடிக்காதுடா வேண்டாம்” துருவ் அவனை மறுத்து மொபைலை பார்த்தவாறே நடந்தான்.

“டேய் பிடிடான்னா” துருவ் கைவசம் கட்டாயப்படுத்தி தந்தான் ஆத்மா.

“டேய் அவனை விடுடா” ரவி ஆத்மாவை தடுத்தான்.

அதற்குள் துருவ் கையில் கட்டை வந்துவிட, “நாயே என்ன கட்டடைடா இது?” துருவ் கையில் இருந்ததை ஆராச்சி பண்ண.

அவன் கன்னத்தில் செருப்படி விழுந்தது பளாரென.

அதுவரை அவர்கள் உரையாடலை கவனித்தவாறே வந்த நளிராவுக்கு அவன் மீது தப்பில்லை என்பது புரிய அக்காவை இழுத்தாள் வேறு பக்கம்.

துருவ் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு நிமிர்ந்து பார்க்கையில் சரியாக நளிரா கையில் செருப்போடு நின்று கொண்டிருந்தாள்.

ஆர்த்தி சைத்ராவை இழுத்துக்கொண்டு போய்விட்டாள் வேறு பக்கம்.

துருவ் அவளையும் அவள் கையில் இருக்கும் செருப்பையும் ஆத்திரமாய் பார்த்தான்.

அவன் பார்வையை உணர்ந்தவள் கையில் இருக்கும் செருப்பை கிழே போட்டாள்.

“சாரி நான்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன். உங்க மேல எந்த தப்பும் இல்லை. அடிச்சதுக்கு மன்னிச்சுடுங்க” இரு கைகளையும் கூப்பி மன்னிப்பு கேட்டாள்.
 
Top