• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தவம் 4

Administrator
Staff member
Messages
536
Reaction score
800
Points
93
தவம் 4:

நடந்தாலும் முன்னே

கடந்தாலும் பின்னே
மனம் எங்கும் அவன்
ஞாபகம்…


நரேன் மற்றும் தீபாவை நோக்கி சந்தோஷ் அதே புன்னகையுடன் நடந்து வர, அதனை கண்ட தீபா,

“வாவ் நரேன். சந்தோஷ் முகத்தை பார்த்தா எல்லாம் சக்சஸ் மாதிரி தெரியிது” என்று சிரிப்புடன் ஆர்ப்பரிக்க,

“இரு கொஞ்சம் வெயிட் பண்ணு. அவன் வந்து சொல்லட்டும்” என்று தங்கையை பற்றி அறிந்த நரேன் கூற,

“இதுக்கு மேல என்ன சொல்லணும் அவர் சிரிச்சிட்டு சந்தோஷமா வர்றாரே அதுலயே தெரியலையா? பரவாயில்லைங்க இவர் உங்க தங்கச்சியைவே கவுத்திட்டார் போல” என்றவள்,

“இவ வாழ்க்கையை நினைச்சு தான் எனக்கு ரொம்ப கவலை. ஒருவழியா இவளும் கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ போறா” என்று புன்னகையுடன் குதூகலிக்க,

சந்தோஷ் இவர்களிடம் வந்து சேர்ந்தான்.

“என்ன சந்தோஷ் எல்லாம் ஓகே தான? உங்க பேஸ் பாத்தா அப்படி தான் தெரியுது” என்று ஆர்வமாக கேட்க,

“எனக்கு உங்க தங்கச்சி ஓகே தான். அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு” என்று பேசுகையிலே தீபா இடை நுழைய,

“தீபா அவரை பேசவிடு” என்று மனைவியை அதட்டி தடுத்தான்.

“அதைவிட அவங்க காதல் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு. அன்பார்ச்சுனேட்லி அவங்களுக்கு தான் என்னை பிடிக்கலை” என்று முடித்திட,

தீபாவின் முகம் புஸ்ஸென்று ஆனது.

நரேன் இதை எதிர்ப்பார்த்தேன் என்ற தோரணையிலே நின்று இருந்தான்.

காரணம் அவளது காதலையும் காதலது ஆழத்தையும் உடனிருந்து கண்டவனாயிற்றே.

“நோ சொல்லிட்டாளா?” என்று ஏமாற்றம் தாங்கிய குரலில் கேட்க,

“ஆமா” என்று சந்தோஷ் தலை அசைத்தான்.

“சந்தோஷ் நீங்க கொஞ்சம் வெயிட் பண்றீங்களா? நான் அவக்கிட்ட பேசுறேன்” என்று தீபா கூற,

“வேண்டாம். எனக்கு தெரிஞ்சு அவங்க இந்த ஜென்மத்தில வேற ஒரு காதலையோ கல்யாணத்தையோ ஏத்துக்க மாட்டாங்க. நீங்க என்னை மாதிரி ஆயிரம் பேரை அழைச்சிட்டு வந்தாலும் அவங்க பதில் நோ தான்” என்றவன்,

“மோர்ஓவர் ஐ ரெஸ்பெக்ட் ஹெர் லவ்.” என்று முடித்திட,

மற்ற இருவரிடத்திலும் மொழியில்லை.

“அவங்க காதலை பார்த்து எனக்கே காதலிச்சு கல்யாணம் பண்ணாலாம்னு தாட் வந்திடுச்சு” என்று கூறி விடைபெற,

நரேன் அவனை வழியனுப்பி வைக்க சென்றான்.

இங்கே தீபாவிற்கோ கோபம் பொங்கியது.

இவளது நல் வாழ்விற்காக தானே இத்தனையும் செய்கிறோம். இவள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறாள் என்று ஆதங்கம் பெருகியது.

இங்கு ஜானவி அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

இத்தனை ஆண்டுகள் ஆகியும் இவர்கள் ஏன் தனக்கு திருமணம் செய்ய வேண்டும் நினைக்கிறார்கள்.

அவன் என் வாழ்வில் இல்லை என்றால் சில வருடங்களில் என் நினைவுகளிலும் இல்லாமல் போய்விடுவானா என்ன?

வருடங்கள் கடக்க அவன் மீதான எனது நேசம் பெருகுகிறதே தவிர குறையவில்லையே

வாழ்வில் ஒரு முறை தான் காதல் கல்யாணம் என்பதை யார் இவர்களுக்கு புரிய வைப்பது.

அவன் இல்லை என்றால் என்ன எனக்காக அவனது உலகத்தையே எனக்கு பரிசாக கொடுத்து சென்றிருக்கிறானே?

இந்த ஜென்மத்தில் அவன் கொடுத்த காதலின் தாக்கத்தில் இருந்து எப்படி நான் மீண்டு வருவேன்?

அவனை கடந்து வேறு ஒருவரிடத்தில் தன்னால் மையம் கொள்ள இயலுமா என்ன? அந்த நினைவே நிலவேம்பு கசாயம் போல கசந்தது.

‘ப்ச்’ என்று தலையை உலுக்கி நிகழ்வுக்கு வர,

தீபா கோபமாக ஜானவியை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

தூரத்தில் வருபவளது முக பாவனையிலே தனக்கு மண்டகப்படி உறுதி என்பதை உணர்ந்தவள் எழுந்து நிற்க,

விறுவிறுவென கோபத்துடன் வந்தவள்,

“உன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்க நீ?” என்று எகிற,

இவளிடத்தில் மௌனம். தான் எதாவது பதில் கூறினாள் அவள் கோபப்படுவாள் என்று உணர்ந்து அமைதியை கடைபிடித்தாள்.

“உன்னதான் கேட்டுட்டு இருக்கேன் பதில் சொல்லு” என்க,

மீண்டும் பதில் இல்லை.

“இப்படியே எவ்வளவு நாள் இருக்க போறதா உத்தேசம்?” என்று மீண்டும் அழுத்தி கேட்க,

“இப்படியேன்னா எப்படிண்ணி?” என்று எதிர்கேள்வி தொடுக்க,

“இப்படி தனிமரமா” என்று முறைத்தாள்.

“நான் தனியா இருக்கேன்னு எப்படி சொல்றீங்க? எனக்கு என் பொண்ணு இருக்கா. அவ ஒருத்தி போதும்” என்று அழுத்தமாவே பதில் அளித்தாள்.

“ப்ச் ஏன்டி புரியாம பேசிட்டு இருக்க?”

“நீங்கதான் ண்ணி புரியாம இதெல்லாம் பண்ணிட்டு இருக்கிங்க. என்னால அவரோட இடத்தில வேற ஒருத்தரை எப்படிண்ணி வச்சு பாக்க முடியும்” என்று தளர்ந்து போய் கேட்க,

“ஏன் வச்சா என்ன? யாருமே ரெண்டாவதா காதல் கல்யாணம் இதெல்லாம் பண்ணிக்கிறதே இல்லையா?” என்று கேள்வி எழுப்பினாள்.

“பண்ணிக்கிறாங்க தான் அதுக்காக நானும் பண்ணிக்கணுமா? அவங்களும் நானும் ஒன்னில்லை”

“இன்னும் எவ்ளோ நாள் இப்படி பேசிட்டு தனியா இருக்க போற?”

“என் உடம்புல உயிர் இருக்கவரை. நான் இந்த உலகத்தில இருக்கவரை இப்படியே தான் இருப்பேன்” என்று அழுத்தம் திருத்தமாக கூற,

“ஏன்டி இப்படி பைத்தியமா இருக்க? அவன் தான் உன்னைவிட்டு போய்ட்டான்ல இன்னும் அவனையே புடிச்சிட்டு இருக்க?” என்று வினவ அவளிடத்தில் பதில் இல்லை.

“ஜானு நான் சொல்றதை கேளுடி” என்று இறங்கி வந்து பேச,

“நீங்களும் என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்கண்ணி” என்று இவளும் கெஞ்சும் குரலில் பேசினாள்.

“உனக்குலாம் எந்த காலத்திலயும் புத்தி வராது. நீ தான் அவனை நினைச்சிட்டு இருக்க அவன் கல்யாணம் குழந்தைன்னு சந்தோஷமா தான இருக்கான். அவன் மட்டும் போதும் அவன் நினைவு போதும் அவன் வாழ்ற ஊரில வாழ்ந்திட்டு போறேன்னு உன் வாழ்கையை அழிச்சிக்கிற” என்றவள் இறுதியாக,

“அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு அடுத்தவ புருஷனை நினைக்கிறது ரொம்ப பாவம். அதை தான் நீ வாழ்க்கை முழுக்க பண்ணிட்டு இருக்க” என்றுவிட்டு விறுவிறுவென நடக்க,

அவள் இறுதியாக கூறி சென்ற வார்த்தை இவளுக்குள் பெருமலையை வெடித்து சிதற செய்திட, சடுதியில் உடைந்து போனாள்.

விழிகள் உடைப்பெடுத்தது. ‘அடுத்தவளின் கணவன்’ என்ற வார்த்தை ஜானவியை சுக்கு நூறாக உடைய செய்தது.

‘அவள் மனைவி என்றால் தான்?’ என்ற ஒற்றை கேள்வியே அவளை தாக்கி செல்ல போதுமானதாக இருந்தது.

தளர்ந்து உடைந்து அந்த நாற்காலியில் அமர்ந்தவளது விழிகள் நீரில் மின்னியது‌‌.

மற்றவளின் கணவனை நினைத்து பார்க்கும் அளவிற்கு தான் கீழிறங்கி போய்விட்டோமா?

திருமணம் முடிந்த பிறகு ஒரு முறை கூட தான் அவனை கணவன் என்ற கண்ணோட்டத்தில் பார்த்ததில்லையே?

அவன் தன்னோடு வாழ்ந்த நினைவுகளை வைத்து தானே இத்தனை வருடமாய் இந்த பாலைவன வாழ்க்கையை சோலைவனமாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

‘என்னை பார்த்து என்ன வார்த்தை கூறிவிட்டார்’ என்று எண்ணியவளது கண்ணீர் கன்னத்தினை தாண்டி கழுத்தில் மோட்சமடைந்தது.

சந்தோஷை வழியனுப்பிவிட்டு வந்த நரேன் கண்டது கோபமாக வந்த மனைவியை தான்‌ என்ன நடந்திருக்கும் என்று ஓரளவு யூகித்தவன்,

“என்னடி?” என்று வினவ,

“ஒன்னுமில்லை‌. வாங்க சொல்லிட்டு கிளம்பலாம் ஃப்ளைட்க்கு டைம் ஆச்சு” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் சொல்லிவிட்டு நகர,

இவன் தங்கையை தேடி ஓடினான்.

நரேன் கண்டது தளர்ந்து உடைந்து ஓய்ந்து போய் அமர்ந்திருந்த ஜானவியை தான்.

அதிலே உள்ளே பதறிவிட,

“ஜானு…” என்று வேகமாக ஓட,

“ண்ணா” என்று நிமிர்ந்து பார்த்தவளது விழிகள் நீரில் பளபளத்தது‌‌.

“ரொம்ப திட்டிட்டாளா?” என்று வருந்தி கேட்க,

“என்னோட நல்லதுக்கு தான திட்டுனாங்க” என்றவளது இதழ் புன்னகைக்க முயற்சிக்க,

“சாரிமா. எனக்கு தெரியும் நீ அவனை தவிர வேற யாரையும் எப்பவும் ஏத்துக்க மாட்டேன்னு. நான் அவக்கிட்ட சொன்னேன் அவ தான் புரிஞ்சுக்கலை” என்று மன்னிப்பை வேண்ட,

“அண்ணா எதுக்கு மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு இருக்கிங்க. எனக்கு அண்ணியை நல்லா தெரியும்” என்று சமாதானம் கூறினாள்.

இதற்குள் தீபாவிடமிருந்து அழைப்பு வந்தது.

அதனை கண்டவள்,

“அண்ணி ரொம்ப கோவமா போனாங்க. போய் அவங்களை சமாதானம் பண்ணுங்க” என்று கூற,

“உன்னைவிட்டு எப்படி போவேன். வா ட்ராப் பண்ணிட்டு போறேன்” என்றான்.

“இல்லை, அண்ணி என்னை பாத்தா மறுபடியும் கோவப்படுவாங்க. நீங்க கிளம்புங்க ப்ளைட்க்கு வேற டைம் ஆச்சு” என்று மறுக்க,

“இல்லைடா” என்று நரேன் ஏதோ கூற வர,

“ரொம்ப வருஷமா தனியா தான் வாழ்ந்துட்டு இருக்கேன். வீட்டுக்கு தனியா போய்டுவேன். நீங்க பாத்து போய்ட்டு வாங்க” என்றுவிட்டாள்.

“சரி‌டா பாத்து போ” என்றவன் மனைவியை சரிசெய்ய கிளம்பினாள்.

இங்கு ஜானவி கண்ணீரை துடைத்து விட்டு எழுந்தவள் நேரத்தை பார்க்க அது ஒன்பதாகியிருந்தது‌.

மகள் தன்னை தேடுவாள் என்று பதறியவள் கைப்பையை எடுத்து கொண்டு புறப்பட்டாள்.

இங்கு தீபாவின் மூலம் விடயம் அறிந்த லாவண்யாவும் ஜானவிக்காக வருந்தி கொண்டிருந்தாள்.

நரேனும் தீபாவும் கூறிவிட்டு விடைபெற,

ஜானவி முகத்தை நன்றாக துடைத்துவிட்டு அழுத தடயமின்றி அந்த தோட்டத்தில் இருந்து வெளியே வந்தாள்.

ஜானவியை கண்டதும் லாவண்யா எதையும் காண்பிக்காது,

“கிளம்பிட்டிங்களா ஜானவி” என்று வினவ,

“ஆமா டைம் ஆச்சு” என்று புன்னகைத்தவளது விழிகள் சிவந்து இருந்தது. அது அவளது சிவந்த நிறத்திற்கு நன்றாக தெரிந்தது.

இந்த பெண் ஏன் இன்னும் போனவனை எண்ணி துன்பப்படுகிறாள் அவளுக்காக வருந்தியவள்,

“பாத்து போய்ட்டு வாங்க” என்று வழியனுப்ப,

அருகில் இருந்த ஜீவாவும் ஆராய்ச்சி பார்வையுடன் தலைசைத்தான்.

அவள் இரண்டடி நகர லாவண்யா அவளது மனநிலையில் தனியாக செல்வது நல்லதல்ல என்று எண்ணி,

“மாமா ஜானவியை அவங்க வீட்டுல ட்ராப் பண்றீங்களா?” என்று வினவ,

“நானா?” என்றவன் திகைப்புடன் கேட்டுவிட்டு,

“இங்க நிறைய வேலை இருக்குடி” என்று விளக்க,

“வேலையெல்லாம் வந்து பாத்துக்கலாம் போய் அவங்களை ட்ராப் பண்ணுங்க” என்றுவிட,

அந்த குரலை மறுக்க இயலாது,

“சரி அம்மா அப்பா கேட்டா எதாவது சொல்லு” என்றபடி தனது மகிழுந்தை எடுக்க விரைந்தான்.

சரியாக ஜீவா வண்டியை வெளியே எடுத்து வர ஜானவி சாலையை கடந்து சென்றாள்.

வேகமாக அவளருகே சென்று காரை நிறுத்தினான்‌.

யோசனையுடன் சென்ற ஜானவி திடுக்கிட்டு விலகி நிற்க,

மகிழுந்தின் கதவை திறந்தவன்,

“கெட் இன் ஜானவி நான் உங்களை ட்ராப் பண்றேன்” ஜீவா கூற,

“என்ன?” என்று ஒரு கணம் திகைத்தவள் பின்னர் சமாளித்து,

“நோ தாங்க்ஸ் சார்‌. நானே போய்க்கிறேன்” என்று மறுத்தாள்.

“லேட் ஆகிடுச்சு ஜானவி. எப்படி போவீங்க வாங்க” என்று மீண்டும் அழைத்தவனுக்கு புரிந்தது இதற்கு முன்பு இது போல உதவி எதுவும் செய்ததில்லை ஆதலால் தயங்குகிறாள் என்று.

“என் வொய்ஃப் ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டுட்டா‌. நீங்க தனியா போறதால ட்ராப் பண்ணிட்டு வர சொல்லி” என்று விளக்கம் கூற,

அமைதியாக ஏறி அமர்ந்து கொண்டாள்.

அப்போதே மணி ஒன்பதே கால் ஆகியிருந்தது. எப்படியும் பேருந்தோ ஆட்டோவோ பிடித்து சென்றால் அரைமணி நேரமாவது ஆகும் என்று எண்ணி தான் வாகனத்தில் அமர்ந்தாள்.

இது தான் முதல் முறையாக அவனுடைய வாகனத்தில் பயணம் செய்வது. என்னதான் வருட கணக்கில் ஜீவாவிடம் பணி செய்தாலும் தேவைக்கு மீறி ஒரு வார்த்தை கூட இதுவரை பேசியதில்லை.

ஏன் லாவண்யாவிடமும் இவளாக பேசியதில்லை. அவள் தான் வந்து அவ்வபோது பேசுவாள்.

இத்தனை வருடங்களில் ஜானவியை கவனித்தவனுக்கு அவள் மீது நல்ல எண்ணம் வந்திருந்தது.

அதுவும் இன்று அவளது காதலை கண்ட பிறகு ஒரு வித மரியாதை தோன்றியிருந்தது.

இருப்பினும் அவனுக்கு இவளை வீட்டில் விட்டுவர எண்ணம் வரவில்லை. காரணம் அவன் இதற்கு முன்பு ஜானவிக்கு உதவி செய்ததில்லை.

ஜானவி தன்னிடம் பணிபுரியும் பெண் அவ்வளவு தான். என்ன நரேனுடைய தங்கை என்ற முறையில் சிறிது கரிசனம் இருந்தது.

அதுவும் நரேன் கேட்டு கொண்டதற்கு இணங்க.

பயணம் அமைதியாக சென்றது. ஜானவி யாரின் முன்பும் உடைந்திட கூடாது என்று உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டு அமர்ந்திருந்தாள்.

அமைதியை கலைக்கும் வண்ணம் ஜானவியின் அலைபேசி இசைத்தது.

எடுத்து பார்க்க சௌம்யாவின் பெயர் திரையில் மின்னியது.

தாமதமாகிவிட்டதால் அழைக்கிறாள் என்று எண்ணியவள் அழைப்பை ஏற்று காதில் பொறுத்த,

“என்னடி வீட்டுக்கு வர்ற ஐடியா இருக்கா இல்லை அண்ணன் அண்ணியோட செட்டில் ஆகுற ஐடியாவா?” என்று கிண்டலாக கேட்க,

“வந்துட்டு இருக்கேன். இன்னும் டென் மினிட்ஸ்ல வந்திடுவேன்” என்றவள்,

“ஜீவி சாப்பிட்டாளா?” என்று வினவ,

“ஹ்ம்ம் அவ நான் வர்றதுக்கு முன்னாடியே சாப்பிட்டா” என்றவள்,

“உன் மக பேசணுமாம்” என்று அலைபேசியை கொடுக்க,

“அம்மா…” என்ற மகளின் குரலில் சட்டென்று உள்ளுக்குள் ஏதோ உடைய விழிகள் உடைப்பெடுத்தது‌.

தொண்டையில் ஏதோ அடைத்து கொள்ள வார்த்தைகள் வரவில்லை.

மிகவும் சிரமப்பட்டு, “ஜீவி” என்று அழைத்திட,

அடுத்த கணம், “ஏன் மா வாய்ஸ் டல்லா இருக்கு?” என்றிட,

மொத்தமாக உடைந்திட்டாள். சடுதியில் அலைபேசி கையில் இருந்த நழுவ,

கரங்களால் வாயை மூடி கொண்டவளுக்கு அழுகையை அடக்க முடியவில்லை.

கண்ணீர் துடைக்க துடைக்க பெருகியது.

எனக்காக இவ்வுலகில் இருக்கும் ஒரே ஒரு உயிர் என்னை தாங்கி கொள்ள வந்த உயிர் என்று நினைக்க நினைக்க அழுகை அதிகரித்தது.

அவளது நிலையை கண்டவன் அதிர்ந்து வாகனத்தை நிறுத்திவிட்டு,

“ஜானவி வாட் ஹேப்பண்ட்?” என்று அதிர்ச்சி விலகாது வினவிட,

அவளிடத்தில் பதிலில்லை. அவனது கேள்வியில் அவளது அழுகை பெரிதாகியது போலிருந்தது.

அவளும் கட்டுப்படுத்த நினைக்கிறாள் ஆனால் முடியவில்லை.

வாழ்வின் இறுதிவரை வருவேன் என்றுவிட்டு பாதியில் நிற்கதியாக விட்டு சென்றவனை எண்ணி அழுகை பொங்கியது.

தற்போது அவன் வொறொருத்தியின் கணவன் அவளது பிள்ளைக்கு தகப்பன். இனி இந்த ஜென்மத்தில் அவன் தன்னிடம் வரமாட்டான் என்ற உண்மை வெகு வருடங்களுக்கு பிறகு தீயாய் சுட்டது.

இத்தனை வருடம் அவன் நினைவுகளில் வாழ்ந்திடுவேன் என்று இறுமாப்புடன் இருந்தவளை தீபாவின் ஒற்றை கேள்வி தூள் தூளாய் உடைத்திருந்தது.

அவள் வேறொருத்தியின் கணவன். அவனை நினைத்து பார்க்க கூட எனக்கு உரிமையில்லையா?

அவன் மகிழ்ச்சியில் தான் என்னுடைய மகிழ்ச்சி இருக்கிறது என்று எண்ணியிருந்தேனே அது உண்மை இல்லையா?

அவன் அவனது மனைவியுடன் மகிழ்வுடன் வாழ்வதை எண்ணி என்னால் மகிழ முடியவில்லையா?

இறுதியில் அவனுக்கு நான் யாருமே இல்லையா? என்று பிரபஞ்சத்தின் பெருவெடிப்பு பூதாகரமாய் நிகழ கரங்களால் முகத்தை மூடி கொண்டாள்‌.

நொடி நேரத்தில் தன்னுடைய வாழ்வில் வந்து மின்னலென மறைந்து போனவனது சுவடுகளை மனது மீட்டிவிட்டு சென்றிருக்க வருடக்கணக்கில் புரையோடியிருந்த காயம் ரணமாகியது.

ஜீவி என்ற ஒற்றை ஜீவன் இல்லை என்றால் தான் வெந்து மடிந்து இறந்திருப்போம்.

வாழ காரணமும் கொடுத்து அவ்வாழ்வை கொடூரமாக வதைக்கும் விதி மீது பெருங்கோபம் எழுந்தது‌.

இத்தனை நிமிட நேரத்தில் அவளுக்குள் ஓடியவை‌.

ஜீவா அமைதியாக அவளை அவதானித்திருந்தான்.

தான் அழைத்தும் அவள் உணராததிலே தன்னிலை இழந்து உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாள் என்று புரிந்தவன் அவள் அழுவதற்கு சில நிமிடங்கள் கொடுத்து அமைதியாக இருந்தான்.

அந்த கணம் எங்கோ படித்த வரிகள் இவனுக்கு நினைவில் வந்தது.

நாம் உண்மையில் அழும்போது தான் ஒருவரை எவ்வளவு நேசித்திருக்கிறோம் என்று புரியும்.

அவளது அழுகை அவளது காதலின் ஆழத்தை அவனுக்கு உணர்த்தியது.

நிமிடங்கள் கடந்தும் அவளது அழுகை நிற்காததை உணர்ந்தவன்,

“ஜானவி போதும் அழுதது” என்று அழுத்தமாக அதட்டியதும் ஓரளவு வேலை செய்தது.

அவளுக்கு சடுதியில் தான் செய்து கொண்டிருக்கும் வேலை புரிந்தது.

அதுவும் ஜீவாவின் முன் என்று புரிய சட்டென்று தன்னை மீட்டு கொண்டு நிமிர்ந்து அமர்ந்தவள்,

“சாரி கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்” என்று புன்னகைக்க முயன்றாள்.

இப்படி பட்டென தன்னை மீட்டு கொண்டு அழுகையில் தக்காளியாய் சிவந்த முகமும் கலைந்த கூந்தலுமாக வேதனையை அடக்கிய குரலில் புன்னகைத்தவளை கண்டு ஒரு கணம் அசந்து தான் போனான்.

இந்த ஜானவி அவனுக்கு முற்றிலும் புதிது. அதுவும் இந்த அழுகை கோலம் அவன் எதிர்பாராதது‌.

“ஹ்ம்ம்” புரிந்தது எனும் விதமாக தலையசைத்தவன் தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அந்த கணம் தண்ணீர் தனக்கு தேவை என்பதால் நன்றி கூறி அதனை பெற்று கொண்டவள் இறங்கி சென்று முகம் கழுவினாள்.

முகத்தை நன்றாக சேலை தலைப்பில் துடைத்து கொண்டு வந்து உள்ளே அமர்ந்ததும்,

“சாரி சார் என்னால உங்க டைம் வேஸ்டாகுது” என்று ஒரு வித சங்கடத்துடன் கூற,

“நோ இஸ்ஸூஸ்” என்றவன் வாகனத்தை இயக்கினான்.

விழிகள் சாலையில் இருந்தாலும் மனம் என்னவோ அருகில் இருந்தவளது அழுகையிலும் அது உணர்த்திய நேசத்திலும் சுற்றி வந்தது.

ஜானவிக்கு அப்போது தான் அலைபேசியை தவறவிட்டது நினைவில் வந்தது.

எடுத்து பார்க்க அது ஆஃப் ஆகியிருந்தது‌. சௌம்யா பதறிவிடுவாள் என்று எண்ணியவள் அது இயக்க முயற்சிக்க முடியவில்லை.

தான் செல்வதற்குள் அவள் பயந்துவிடுவாள் என்று எண்ணியவள் தயக்கத்துடன்,

“உங்க மொபைல் தர்றீங்களா சார் ஒரு கால் பண்ணிட்டு தர்றேன்” என்று கேட்க,

ஜீவா தனது அலைபேசியை எடுத்து லாக்கை நீக்கிவிட்டு கொடுத்தான்.

அலைபேசியின் முகப்பில் அவள் நேற்று எடுத்து கொடுத்த புகைப்படம் மின்னியது.

சௌம்யாவின் எண் தெரியுமாதலால் வேகமாக அதற்கு அழைக்க,

“ஹலோ” என்று சௌம்யாவின் குரல் கேட்டதும்,

“சௌமி நான் ஜானு பேசுறேன்” என்று கூற,

அடுத்த கணம்,

“பேசிட்டு இருக்கும் போது எங்கடி போய் தொலைஞ்ச நான் பயந்துட்டேன்” என்று பொரிந்தாள்.

“சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆஃப் ஆகிடுச்சு” என்று ஜானு மொழிய,

“சேஃபா வர்றதான?” என்று வினவ,

“ஹ்ம்ம் இன்னும் பைவ் மினிட்ஸ்ல வந்திடுவேன்” என்றாள்.

“இது யார் போன். இதுல இருந்து கூப்பிட்ற?” என்று வினவ,

“எம்.டி சார் மொபைல் இது‌. சார் கூட தான் வந்திட்டு இருக்கேன்”

“என்னது ஜீவா சார் கூடவா? இந்த நேரத்தில அவர் ரிசப்ஷன் வேலைய விட்டுட்டு உன்னை ட்ராப் பண்ண வர்றாரா? இது லாவண்யா மேம்க்கு தெரியுமா?” என்று அடுக்கடுக்காக கேள்வியை கேட்க,

அருகில் இருந்தவனுக்கும் குரல் கேட்டிருக்க வேண்டும் என்பதை அறிந்து அவனை நோக்கி தயக்கமாக பார்த்தவள்,

“தெரியும் லேட் ஆகிடுச்சுனு அவங்க தான் ட்ராப் பண்ண சொல்லி அனுப்புனாங்க” என்றாள்.

“ஓ… சரி சரி பாத்து வா” என்று அலைபேசியை வைத்துவிட,

இவள் அலைபேசியை அவனிடத்தில் கொடுத்த இரண்டாவது நிமிடம் அவளது குடியிருப்பு வந்திருந்தது.

அவன் முகம் பார்த்து, “தாங்க் யூ சோ மச் பார் யுவர் ஹெல்ப் சார்” என்றபடி இறங்க முற்பட,

“ஜானவி ஷால் ஐ ஆஸ்க் யூ ஒன்திங்க்?” என்று வின தொடுத்தான் ஜீவா‌.


ஜானவி திரும்பி, ‘என்ன?’ எனும் விதமாக நோக்க,

“நடந்ததை நானும் பார்த்தேன்” என்றவன்,

“வாட் அபௌட் யுவர் ஹஸ்பண்ட்?” என்று கேட்க,

“அவருக்கு மேரேஜ் ஆகிடுச்சு சார்” என்றவள் அதற்கு மேல் எதையும் கேட்டுவிடாதே என்று இறங்கி விறுவிறுவென இறங்கி சென்றிட,

அவளது பதிலில் அதிர்ந்து நடந்து சென்றவளை பார்த்திருந்தான் ஜீவா.

காரணம் விட்டு சென்று வேறு ஒரு திருமணம் செய்து கொண்டவன் மீதா இத்தகைய நேசம்?




 
Well-known member
Messages
416
Reaction score
300
Points
63
Indha jeevan than janvi oda husband ah appo avan eppudi ipadi normal ah pesa mudiyum first of all avan ival ah third person ah than ah treat panra n ah athuvum iva annan naren jeeva oda friend aachae over confuse aaguthu yae nama moolai 🤯🤯
 
Well-known member
Messages
964
Reaction score
712
Points
93
Oru Vela apdi irukkumo🤔🤔🤔🤔
Illa oru Vela ipdi irukkumo 🤔 🤔 🤔
 
Top