• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காவியம் 3

Active member
Messages
137
Reaction score
92
Points
28
தனக்குக் கிடைத்த தவணைப் பணத்தைப் பெரியப்பாவிடம் கொடுத்தாள் பிரஹாசினி.

அதை வாங்கிச் சாமிப் படத்தின் முன்னால் வைத்துப் பிரார்த்தனை செய்து விட்டு,”இதே மாதிரி நீ இன்னும் நிறைய சம்பாதிக்கனும்” என்று அவளிடமே தந்து விட்டார் விருச்சிகன்.

“இந்த ஒரு தடவையாவது இந்தப் பணத்தை நீங்க வச்சுக்கோங்களேன் பெரியப்பா” என்று அவரிடம் கெஞ்சினாள்.

“ஊஹூம், இது உன்னோட உழைப்பினால் வந்தப் பணம். அதனால் உன்கிட்டே இருக்கிறது தான் நியாயம்” என்றவர்,

“நீ மதுரைக்குப் போயிட்டு வந்ததும், பெரியம்மா, நீரஜ் கூடக் கடைக்கு வந்து உனக்குப் பிடிச்ச மாதிரி தீபாவளிக்குத் துணி எடுத்துக்கோ. நிறைய கலெக்ஷன்ஸ் வந்திருக்கு” என்று கூறி விட்டுச் சென்றார் விருச்சிகன்.

அந்தப் பணத்தை வழக்கம் போலத் தன்னுடைய கைப்பையில் பத்திரப்படுத்தி வைத்தாள் பிரஹாசினி.

முழுப் பணம் வந்ததும் அதை அவளது வங்கிக் கணக்கில் போட்டு விடச் சொல்லி விடுவார்கள் வீட்டினர்.

தன் கைப்பேசியில் தோழிக்கு அழைத்து,”ஹலோ வினோ” என்கவும்,

“ஹாய் பிரஹா, எப்படி இருக்கே?” என்று நலம் விசாரிக்க,

“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?” என்றாள் பிரஹாசினி.

“ம்ம். சூப்பரா இருக்கேன். அப்பறம், உன்னோட ஸ்டேட்டஸ் எல்லாம் பார்த்துட்டுத் தான் இருக்கேன். ப்ரைடல் மேக்கப்பில் கலக்கிட்டு இருக்கிற போல!” என்று தோழியைப் பாராட்டினாள் வினோதா.

“ஹேய்! தாங்க்ஸ்டி! அந்த விஷயமாகப் பேசத் தான் உனக்குக் கால் பண்ணேன்”

“என்னன்னு சொல்லு?”

“அது வந்து… நான் வர்ற வியாழக்கிழமை ஒரு பொண்ணுக்கு மேக்கப் போட்டு விடனும். அவங்களோட கல்யாணம் மதுரையில் தான் நடக்கப் போகுது. அதனால் அன்னைக்கு மட்டும் நான் உங்க வீட்டில் வந்து தங்க அனுமதி கிடைக்குமா வினோ?” என்று தயக்கத்துடன் வினவினாள் பிரஹாசினி.

“அப்படியா சூப்பர்! நீ எப்பவும் மதுரைக்கு வந்தால் நம்ம வீட்டில் தங்குறது தானே வழக்கம்? அப்பறம் என்ன? நான் அம்மாகிட்டே சொல்லிட்றேன்” என்று அவளுக்கு உறுதி அளித்தாள் வினோதா.

“ரொம்ப தேங்க்ஸ்டி”

“தாங்க்ஸ் வேண்டாம். அதுக்குப் பதிலாக எனக்கு மெஹந்திப் போட்டு விட்ரு”என்று கூறிச் சிரிக்கவும்,

பிரஹாசினி,“அதுக்கென்னப் ‘பேஷா’ போட்டு விட்றலாம்”

“சரி. நீ மட்டும் தனியாக வருவியா?” எனக் கேட்டாள் வினோதா.

“இல்லை. பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் நீரஜ் அண்ணா துணைக்கு வருவார்”

“ஓஹோ… எப்பவுமே இப்படித் தான் நடக்குது. இந்த தடவை அவரை வீட்டுக்குக் கூட்டிட்டு வா. லன்ச் சாப்பிட்டு ஈவ்னிங் போகட்டும்”

“அப்படியெல்லாம் வர்றது சரியா இருக்காதுன்னு முதல்லயே அண்ணா சொல்லிட்டார்” என்று அவளிடம் கூறினாள் பிரஹாசினி.

“ஓகே. அண்ணாவுக்குச் சங்கடமாக இருந்தால் நான் கட்டாயப்படுத்தலை” என்றவள், சில உரையாடல்களுக்குப் பிறகு அழைப்பைத் துண்டித்தாள் வினோதா.

தன்னுடைய மதுரைப் பயணத்தை நினைத்து இப்போதே உள்ளுக்குள் மகிழ்ச்சியின் தூறல் தொடங்கி விட்டிருந்தது.

அதே ஊரில் தான் அவனும் இருக்கிறான்! அப்படியென்றால், அவனைப் பார்க்கும் சந்தர்ப்பங்களும் அமைய வாய்ப்புகள் அதிகம் தானே?

அந்தப் பெண் ஆரவிக்குத் திருமணமாகி விட்டது என்ற செய்தியைக் கேட்டதில் இருந்து அடுத்தது அவனுடைய திருமணம் தானே? அப்படியென்றால், அவனுக்குப் பெண் பார்க்கத் தொடங்கி இருப்பார்கள் தானே?

தான் அவனிடம் காதலை உரைத்து விட்டு வந்திருந்தால் கூட அவன் இன்னும் தன்னையே நினைத்து உருகிக் கொண்டு இருப்பான் என்று இவள் நம்பிக்கையோடு இருக்கலாம். ஆனால், இறுதி வரைக்கும் அதற்கு வழி வகுத்து வைக்காமலேயே மூன்று வருடங்களுக்கு முன் தன் ஊருக்கு வந்து சேர்ந்திருந்தாள்.

அதேபோல், தன்னுடைய தொழில் சம்பந்தமாகத் தானே அவ்வூருக்குச் செல்கிறோம்? அப்படியிருக்க, அதை மட்டும் செய்து முடித்து விட்டு வருவோம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்து விட்டாள் பிரஹாசினி.

தீபாவளிக்கு முந்தைய சில நாட்களில் தான், பிரஹாசினி மணப்பெண்ணிற்கு அலங்காரம் செய்யும் வேலை இருந்தது.

”இவங்க ரெண்டு பேரையும் அனுப்பிட்டு நான் கடைக்கு வர்றேன்ங்க” என்று கணவனிடம் தெரிவித்தார் உமாராணி.

“சரிம்மா” என்றவர்,

“தங்கச்சியைப் பத்திரமாக கூட்டிட்டுப் போ. அங்கே வேலை முடிஞ்சதும் நீயே போய் அழைச்சிட்டு வந்துரு” என மகனிடம் சொன்னார் விருச்சிகன்.

“ம்ம். சரிப்பா” என்றான் நீரஜ்.

“பஸ்ஸூக்குத் தேவையான பணம் இருக்குல்லம்மா? ஏதாவது வேணும்னா அண்ணன்கிட்டே கேளு” என்றதும்,

“காசெல்லாம் இருக்குப் பெரியப்பா”

“நாங்கப் போயிட்டு வர்றோம் பெரியம்மா” என்று அவரிடமும், உமாராணியிடமும் விடைபெற்றுக் கொண்டுத் தன் அண்ணனுடன் பேருந்தில் ஏறிப் பயணமானாள் பிரஹாசினி.

“நீ இங்கே இரும்மா. நான் பின்னால் இருக்கிற சீட்டில் உட்கார்ந்துக்கிறேன்” எனத் தங்கையைப் பெண்கள் அமரும் இடத்தில் அமர்த்தி விட்டுப் பேருந்தின் கடைசி இருக்கையில் உட்கார்ந்து கொண்டான் நீரஜ்.

அப்போது, தன் செல்பேசியில் வினோதாவிற்கு அழைத்து தங்களது வருகையை உறுதி செய்தாள் பிரஹாசினி.

இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நிமிடமும் அவனது ஞாபகங்களைத் தான் அவளுக்கு ஏற்படுத்தியது.

அதனால், ஊரின் எல்லையை அடைந்த நேரத்தில் இருந்து காணும் இடங்களில் எல்லாம் அவனது பிம்பத்தைத் தேடிக் களைத்து விட்டாள்.

ஆனால், தன்னைப் பற்றிய எந்த விவரமும் அவனுக்குத் தெரியாத போது ஞானக்கண் மூலமாக அறிந்து கொண்டு வரப் போகிறானா என்ன? என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு அந்த ஊருக்குச் செல்லும் நோக்கத்தை மட்டுமே மனதில் பதிய வைத்துப் பயணத்தை மேற்கொண்டாள் பிரஹாசினி.

சில மணி நேரங்கள் கடந்த பின்னர், பேருந்து நிலையத்தை அடைந்து விட்டதை நடத்துனரின் வாயிலாக அறிந்ததும், தன் எண்ணச் சுழலில் இருந்து விடுபட்டுப் பேருந்து நிற்கவும் அதிலிருந்து இறங்கினார்கள் அண்ணனும், தங்கையும்.

தோழிக்கு அழைத்து,”ஹாய் வினோ, நானும், அண்ணாவும் இப்போ தான் பஸ்ஸை விட்டு இறங்கினோம்” என்றாள் பிரஹாசினி.

“ஓகேடி. நான் ஒரு பத்து நிமிஷத்தில் ஸ்கூட்டியில் அங்கே வந்துடுவேன்” என்று கூறி வைத்தவுடன்,

அதைத் தமையனிடம் தெரிவிக்க,”அப்போ நான் திரும்பி ஊருக்குப் போறப்போ பஸ்ஸில் கொறிக்க ஸ்நாக்ஸ் வாங்கிக்கிறேன்ம்மா. மதியம் லேட் ஆகத் தான் சாப்பிட முடியும். இங்கே கடையில் எதுவும் நல்லா இருக்காது” என்று அவளிடம் கூறினான் நீரஜ்.

“சரிங்க அண்ணா”எனவும்,

தாங்கள் இருவரும் பேக்கரி ஒன்றில் நுழைந்து இரண்டு காபியை ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தார்கள்.

அதே சமயம், பேருந்து நிலையத்திற்குத் தனது இருசக்கர வாகனத்தில் வந்து அடைந்த வினோதா,

தோழிக்குக் கால் செய்து,”எங்கே இருக்கீங்க?” என்று கேட்கவும்,

“நாங்கப் பேக்கரியில் இருக்கோம்டி”என அதன் பெயரைச் சொன்னாள் பிரஹாசினி.

அதைத் தேடிக் கண்டுபிடித்து, அந்த அண்ணன், தங்கையிடம் சென்று,“ஹாய் பிரஹா, ஹாய் அண்ணா” என்றாள் வினோதா.

“ஹாய் வினோ” என்று அவளிடம் கோரஸாக கூறினார்கள் அவ்விருவரும்.

அப்போது, அவர்கள் ஆர்டர் செய்த பானம் வந்து விட,

“ஹேய்! நீ இங்கேயே காஃபி குடிச்சிட்டா வீட்டுக்கு வந்து என்னச் சாப்பிடுவ?” என்று தோழியிடம் குறைபட்டுக் கொண்டாள் வினோதா.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக,”ஒரே ஒரு காஃபி குடிக்கிறேன்டி. வேற எதுவும் சாப்பிடலை” என்று கூறிப் புன்னகைத்தாள் பிரஹாசினி.

“அப்போ ஓகே” என்க,

தனது பானத்தைக் குடித்து முடித்து விட்டு, வினோதாவிற்கு ஒரு பத்து ரூபாய் சாக்லேட்டை வாங்கிக் கொடுத்தான் நீரஜ்.

“தாங்க்யூ அண்ணா” என்றவளிடம்,

“பரவாயில்லைம்மா. நான் இப்படியே பஸ் ஏறிக்கிறேன். நான் அம்மாகிட்டே சொல்லிட்றேன். பை”என்று அவர்களை அனுப்பி வைத்து விட்டுத் தன் ஊருக்கான பேருந்தில் ஏறிக் கொண்டான் பிரஹாசினியின் தமையன்.

அதன் பின்னர், தோழியைத் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் வினோதா.

அவளது அம்மா குறிஞ்சி,”வாம்மா. முதல்ல ஏதாவது சாப்பிட்றியா? இல்லை, முகம், கை கால் கழுவிட்டு வர்றியா?” எனப் பிரஹாசினியிடம் கேட்டார்.

“அவ பேக்கரியிலேயே காபி குடிச்சிட்டாம்மா. வாஷ்ரூம் போயிட்டு வரட்டும். அதுக்கப்புறம் மத்ததைப் பார்த்துக்கலாம்” என்றாள் அவரது மகள்.

அதன்படி, குளியலறைக்குப் போய்த் தன்னைச் சுத்தம் செய்து கொண்டு வந்தவளிடம்,

குறிஞ்சி,“நாளைக்குக் காலையில் எத்தனை மணிக்கு மேக்கப் போடப் போகனும்மா?”

“காலையில் ஆறு மணிக்கும்மா” என்றுரைத்தாள் பிரஹாசினி.

“அவ்வளவு சீக்கிரமாகவா?”

“ஆமாம்மா. ஒன்பதரைக்கு முகூர்த்தம். அதனால் சீக்கிரம் போய் மேக்கப் போட்டு விடனும்ல? அதான்”

“அப்போ இவ கூட வண்டியில் போயிட்டு வந்துரு” என்று தன் மகளைக் காட்டிக் கூறினார் குறிஞ்சி.

வினோதா,“எஸ் பிரஹா. அம்மா சொன்னது நல்ல ஐடியாவா இருக்கு”

“ஓகேடி. நான் இன்னைக்கு நைட் உனக்கு மெஹந்தி போட்டு விடவா?” என்ற பிரஹாசினியிடம்,

“அதெல்லாம் வேணாம். நான் சும்மா தான் கேட்டேன்” என்று கூறி அவளை ஓய்வெடுக்க அனுப்பி வைத்து விட்டுத், தாயுடன் சேர்ந்து மதிய உணவைத் தயாரிக்கச் சென்று விட்டாள் வினோதா.

அதே நேரத்தில், தனது இல்லத்திற்குத் திரும்பியவுடன், தந்தைக்கும், தாய்க்கும் அழைத்து தன் வருகையை அறிவித்து விட்டான் நீரஜ்.

“நான் சீக்கிரம் வந்து சமைக்கிறேன்” என மகனிடம் உரைத்தார் உமாராணி.

அவரும், விருச்சிகனும் தங்களது கடைகளில் மிகவும் பரபரப்பாக வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இரவு வரைக்கும் கூட்டம் அலைமோதும் என்பது உறுதி. ஆனால், வீட்டையும் பார்க்க வேண்டும் அல்லவா? அதனால், மகனுக்குச் சமைக்கப் போய் விட்டு வந்து விடுவதாக கணவனிடம் தெரிவித்து விட்டுக் குறிப்பிட்ட நேரத்தில் இல்லம் திரும்பி உணவைத் தயாரித்து அவனுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டுக் கணவனுக்கும் சாப்பாட்டைக் கொடுத்து அனுப்பினார் உமாராணி.

திவ்யனின் தங்கை ஆரவிக்குத் திருமணமாகிச் சில மாதங்கள் தான் கடந்து இருந்தது.

அவளும், அவளது கணவன் ரஞ்சித்தும் தங்களது தலை தீபாவளியை ஆரவியின் பிறந்த வீட்டில் தான் கொண்டாட வேண்டும் என்பதால், அவர்கள் இருவருக்கும் புதுத்துணிகளை எடுக்க வேண்டும்.

எனவே, அதற்காக ஜவுளிக்கடைக்குச் சென்றனர் மகுடபதி, சோமசுந்தரி மற்றும் திவ்யன்.

“முதல்ல ஆரவிக்குத் துணி எடுப்போம்” எனப் புடவைகள் பிரிவிற்குப் போய் மகளின் நிறத்திற்குத் தகுந்த சேலையைத் தேடி எடுத்துக் கொண்டு, ரஞ்சித்திற்கு உடை எடுக்கச் சென்றனர்.

“மாப்பிள்ளையோட டிரஸ் அளவு தெரியுமாடா?” என மகனிடம் கேட்டார் மகுடபதி.

“தெரியும் ப்பா. ஆரவி சொல்லிட்டா” என்றவன், தங்கள் வீட்டு மாப்பிள்ளைக்கான உடையைத் தேர்வு செய்து விட்டு இரண்டிற்கும் பணம் செலுத்தி வாங்கிக் கொண்டு,

“அப்படியே பாக்கு, வெத்தலை, மத்தப் பொருளை எல்லாம் ஊருக்குப் போகும் போது வாங்கிக்கலாம்” என்று முடிவெடுத்து விட்டு வீட்டிற்குச் சென்றார்கள்.

“உங்க ரெண்டு பேருக்கும் டிரெஸ் எடுத்தாச்சு ஆரு. தீபாவளிக்கு முந்தைய நாள் நாங்க வந்து உன்னையும், மாப்பிள்ளையையும் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டுப் போவோம். அது வரைக்கும் பொறுமையாக இருக்க மாட்டியா?” என்று மகளைக் கடிந்து கொண்டார் சோமசுந்தரி.

தன்னுடைய திருமணம் முடிந்து சில மாதங்களே ஆகி போதும் கூட, மறு வீட்டிற்கு வந்து சென்ற போதிலும் தன்னுடைய பிறந்தகத்தைப் பிரிந்து இருப்பது ஏனோ தவிப்பைக் கொடுத்தது ஆரவிக்கு.

அதனால் தான், தனக்குத் தாய் செல்பேசி அழைப்பு விடுக்கும் போதெல்லாம், ஏதாவது விசேஷம் வருகிறதா? என்னை எப்போது வந்து அழைத்துப் போவீர்கள்? என்றெல்லாம் அவரிடம் கேட்டுக் கொண்டே இருப்பாள்.

அதைப் பொறுத்துப், பொறுத்துப் பார்த்து விட்டு, அவளைச் சமாதானம் செய்ய முடியாமல், போனதால் தான், இப்பொழுது அவளைத் திட்டி விட்டார் சோமசுந்தரி.

“ம்மா…“ என்ற மகளின் ஏக்கமிகு வார்த்தையைக் கேட்டதும்,

“அச்சோ என்னை மன்னிச்சிருடி. இப்போ தான் கல்யாணம் செஞ்சி போயிருக்கிற. அதனால் அதுக்குத் தக்க அங்கே உன்னைப் பொருத்திக்கப் பார்க்கனுமே தவிர, எதுக்கு எடுத்தாலும் அம்மா வீட்டுக்கு வரனும்னு நினைக்கக் கூடாது ஆரு!” என்று அவளுக்கு அறிவுறுத்தினார்.

அதில் ஒருவாறு சமாதானமாகி,”சரிம்மா. நீங்க வரும் போது வாங்க” என்று கூறி விட்டாள் ஆரவி.

“அப்பறம் உங்க அண்ணா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டான்டி!” என்று வீட்டின் மாடியில் ஒரு அறை கட்ட வேண்டும் என்ற மகனின் யோசனையைப் பற்றி அவளிடம் தெரிவித்தார் சோமசுந்தரி.

“என்னம்மா சொல்றீங்க? ஏன் அண்ணா திடீர்னு இப்படி ஒரு முடிவு எடுக்கிறார்?” என்றவளுக்கும் அந்தச் செய்தி அதிர்ச்சியைத் தான் தந்தது.

“அதான் எனக்கும் தெரியலைடி. எத்தனை தடவை கேட்டாலும் பதில் சொல்ல மாட்றான்”

“அந்தப் பச்சைக் குத்தினதைப் பத்தியும் நிறைய தரம் கேட்டோமே அம்மா? அப்போவும் அவர் இப்படித் தான் பதில் சொல்லாமல் விட்டாரு. இப்போவும் இப்படியே இருந்தால் என்னம்மா நியாயம்?”

“அந்த விஷயத்தைச் சொல்லவே மாட்டேன்னு விடாப்பிடியாக இருக்கானே! ஆனால் இந்த விஷயத்தை நீ வீட்டுக்கு வந்ததும் உன்னையும் வச்சிட்டுச் சொல்வதாக இருக்கான்” என்றார் சோமசுந்தரி.

ஆரவி,“ஓஹ்! என்னக் காரணத்துக்காக வேணும்னாலும் இருந்துட்டுப் போகுதும்மா. இதனால் அண்ணனுக்குத் தானே செலவு? அதை அவர் யோசிக்கலையா?”

“ஆமாம். அவன் அதைப் பத்திக் கவலைப்பட்டா மாதிரியே தெரியலையே! என்னக் காரணம்ன்னுத் தெரியாமல் உங்க அத்தைங்க கிட்டே இதைப் பத்தி எப்படி பேசுறதுன்னுத் தெரியாமல் முழிச்சிட்டு இருக்கேன்” என்று புலம்பினார் அவளது அன்னை.

“ஐயோ அம்மா! அவங்க கிட்ட எதையும் உளறி வைக்காதீங்க! அப்பறம் நான் அங்கே வர்ற நேரம் அவங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டுக்குக் குடும்பத்தோட படை எடுத்து வந்துருவாங்க” என்று அவரை எச்சரித்தாள் ஆரவி.

“அதுவும் சரி தான்டி. இனிமேல் இங்கே என்ன நடந்தாலும் அதை உங்கிட்ட மட்டும் சொல்றேன்” என்றார் சோமசுந்தரி.

“இனிமேல் அதைப் பண்ணுங்க” என்றவளோ,

“உங்க மாப்பிள்ளை வந்துட்டார் போல அவரோட வாய்ஸ் தான் கேட்குது. நான் அப்பறம் பேசுறேன்” என்று தாயிடம் கூறி விட்டு அழைப்பை வைத்தாள் அவரது மகள்.

தன் தாய் மற்றும் தங்கையின் எண்ணவோட்டங்கள் என்னவென்று அறியாமல் தன் மனப்போக்கில் சுற்றிக் கொண்டிருக்கும் திவ்யனுக்கு அவனது பிரஹாசினி காட்சியளிக்கப் போகும் தருணமும் வந்தது.

- தொடரும்
 
Top