• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
601
Reaction score
836
Points
93
அத்தியாயம் 23


மும்பை செல்லும் பயணிகளுக்கான இறுதி அறிவிப்பு என்ற‌ குரலில் சுயத்தை அடைந்த ப்ரஷாந்தி தனது ட்ராவல் பேக்கை எடுத்து கொண்டு போர்ட்டிங் வேலையை முடித்து விட்டு விமானத்தினுள் நுழைந்து தனது இருக்கையை தேடி அமர்ந்தவள் விழிகளை மூடி கொண்டாள்.


விமானம் கிளம்புவதற்க்கான அறிவிப்பு வந்த போதும் சரி விமான பணிப்பெண் அறிவிப்பு கூறிய போதும் சரி அவளது சிந்தை கலையவில்லை.


எதிலும் கவனம் பதியவில்லை. மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதனை துடைக்க கூட மனமின்றி அமர்ந்திருந்தாள்.


நடந்தவை அனைத்தும் கண்முன் வந்து போனது.


'அநாதையாவோ செத்து போயிடுவேனோன்னு பயமா இருக்கு டி' என்று அவன் வேதனையுடன் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் எதிரொலித்து அவளை வதைத்து கொண்டு இருந்தது.


தன்னுடைய பார்வையிலிருந்து பார்க்கும் விடயங்களின் பிம்பம் மற்றவருடைய பார்வையிலிருந்து பார்க்கும் பொழுது மொத்தமாக மாறியிருப்பதை பார்க்கும் வரை மனம் உணர்வதில்லை.


தன்னுடைய கோணத்திலிருந்து பார்த்திருந்த ஒன்றை அவனது கோணத்தில் பார்த்த போது ஆயிரம் பாகங்களாக சிதறியிருந்தாள்.


அவன் கூறியது உண்மை தான் பல அடுக்கு மாடியில் இருந்து மழைய ரசிப்பவர்களுக்கு ஓட்டு வீட்டில் மழைய ஒழுகியதை கண்டு பாத்திரங்களை வைப்பர்களின் மனநிலை புரியவில்லை.


அவனுக்கு வேறு ஏதோ காரணங்கள் இருக்கும் நினைத்தவளால் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்த்திருக்கவில்லை.


அவனது நிலையை கொடுத்த தாக்கத்தை தாங்கவியலவில்லை.


'லைஃப் இஸ் நாட் அ பெட் ஆஃப் ரோஸஸ்' என்று எங்கோ கேள்விப்பட்டது நினைவில் வந்தது.


அவனது நிலையை கூறி அவளிடம் மன்றாடிய இறுதி நொடியில் சிதறி உடைந்து கதறியிருந்தாள் ப்ரஷாந்தி.


வாழ்நாளில் முதன் முறை. ஆம் முதன் முறை தான். குழந்தை இழந்த போது வலித்ததை விட தன்னவனின் மனப்போராட்டம் மிகவும் வலித்தது. உயிரை வதைத்தது.


உடைந்து கதறி அழ வைத்தவன் அவள் உணரும் முன்னே அங்கிருந்து புறப்பட்டிருந்தான்.


அவளை உடைய வைக்கத்தான் அங்கு வந்தானா…? இப்போது சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பியிருந்தான்.


செய்த தவறை எண்ணி ஆம் தவறு தான் மிகப்பெரிய பாவம் தீர்க்கவே முடியாத பாவத்தை அவனுக்கு இழைத்து விட்டாள்.


எல்லாமுமாக இருப்பேன் என்று வாக்களித்துவிட்டு தனிமையில் தவிக்கவிட்டேன்.


அதுவும் கொலைகாரன் என்ற பழியோடு பெயரோடு.


'அநாதை, ஏழை இதோட சேர்த்து இப்போ கொலைகாரன்ற பட்டமும் என்னை துரத்திது' அவன் கூறிய கனம் உயிரை பிடுங்கி எறிந்தது போல பிரம்மை தோன்றியது.


தான் அதீத மகிழ்ச்சியில் இருந்தாள் மற்றவரின் உணர்வுகள் நமக்கு தெரியாது என்பது உண்மை தான் போலும்.


அருகிலே தினமும் அவனுடன் வாழ்ந்தும் அவனுடைய மனப்போராட்டத்தை குற்றவுணர்ச்சியை என்னால் கண்டறிய முடியவில்லை.


என்னதான் ஒருவர் வாழ்வில் தான் சரிபாதியாக இருந்தாலும் அவராக மாறிவிட முடியாது.


உணக்கானவற்றை நீ தான் அனுபவிக்க வேண்டும். அதே போல் தான் உன் இணையும் என்று புரிந்தது.


ஆத்திரத்தில் ஏமாற்றத்தில் வார்த்தை என்னும் குத்தீட்டியால் தாக்கி ஆறாத காயத்தை பரிசளித்துவிட்டேன்.


மற்றவர்கள் கூறுவது போல ஒரு விதத்தில் இல்லையில்லை ஒரு விதத்தில் எல்லாவிதத்திலும் சுயநலவாதியாக இருந்துவிட்டேன்.


பூனை கண்ணை மூடினால் உலகம் இருட்டாகிவிடுமாம் அதை போல கண்ணை மூடி கொண்டு இத்தனை நாளும் இருந்திருக்கிறேன்.


இப்போதும் அவன் அவனது நிலையை கூறவில்லை எனில் இந்த விநாடி வரை அவன் மீதே குற்றத்தை சுமத்தியிருப்பேன்.


தூக்கு தண்டனை கைதிக்கு கூட இறுதி வாய்ப்பு உண்டு. நீ எனக்கு அதை கூட அளிக்கவில்லை என்றானே.


எத்தனை கண்மூடித்தனமாய் இருந்திருக்கிறேன்.


எவ்வளவு தூரம் மன உலைச்சலுக்கு ஆளாகியிருந்தால் குழந்தையை வேண்டாம் என்று சொல்லியிருப்பான்.


அன்றே அவன் கூறுவதை கேட்டு அவன் மனநிலையை அறிந்திருந்தால் இதனை பேசி சரிசெய்திருக்கலாம்.


எல்லாம் என்னால் தான் எதிலும் பொறுமை இல்லை. ரேஷ்மா கூறியது போல அவசர அவசரமாக ஒரு திருமணம் அதனை விட அவசரமாக ஒரு பிரிவு.


அதிலும் அவன் இறுதியாக கூறிய வார்த்தை இப்போது நினைக்கும் போதும் உள்ளம் நடுங்க சடுதியில் விழிகளை திறந்திருந்தாள்.


முகமெல்லாம் வியர்வை துளிகள் பூத்திருந்தது. கைக்குட்டையால் துடைத்தவளுக்கு கண்ணீர் பெருகியது.


எத்தனை பெரிய வார்தைகளால் காயப்படுத்தி இருக்கிறேன். அநாதை என்று கூறி அவனை உயிரோடு மரிக்க செய்திருக்கிறேன்.


ஒற்றை உறவாய் நினைத்த என்னுடைய வாயிலிருந்தே இந்த வார்த்தையை கேட்டு எவ்வளவு தூரத்தில் உடைந்திருப்பான் என்று கண்கள் கரித்து கொண்டு வந்தது.


கண்களை மூடினால் அவன் கலங்கிய தோற்றம் தோன்றி வதைத்தது.


விழிகளை நன்கு துடைத்து கொண்டவள் பார்வையை சுற்று புறம் நோக்கி திருப்பினாள்.


அருகில் ஒரு குழந்தை சேட்டை செய்து தாயிடம் திட்டு வாங்கி கொண்டு இருந்தது.


அதை பார்த்ததும் மீண்டும் மனது கலங்கியது. எங்களுக்கு குழந்தை இருந்தால் இப்படி தானே இருந்திருக்கும்.


நான் தான் குழந்தையை கொன்றுவிட்டேன். என் கவனக்குறைவால் அழித்துவிட்டு அதையும் அவன் மேல சுமத்திவிட்டேன் என்று மனதிற்குள் கேவியவளை மனசாட்சி இடித்துரைத்தது.


இத்தனை நாட்கள் கண்மூடி கிடந்தவளுக்கு மொத்தமாக‌ ஞானோதயம் கிடைத்தது போல் அனைத்தும் புரிந்தது.


எல்லாம் தெரிந்தது. எல்லாவற்றிற்க்கும் முதல் புள்ளி தான் தான் என்று புத்திக்கு உரைத்த நொடி சிதைந்திருந்தாள்.


அவனிடம் மன்னிப்பை யாசிக்க தான் இப்போது சென்று கொண்டிருக்கிறாள்.


மனதை முயன்று திசைதிருப்பினாலும் இறுதியில் தொடங்கிய இடத்திற்க்கே வந்து சேர ஒரு வழியாக விமானம் தரையிறங்கும் நேரமும் வந்தது.


மும்பை விமான நிலையத்தை வந்தடைந்தவள் அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு வெளியேறி வந்து தன்னிடமிருந்த கார்டில் முகவரியை பார்த்தாள்.


அவனை எங்கு தேடுவது எங்கே போய் பார்ப்பது என்று பரிதவித்த போது ரேஷ்மா அவனுடைய விசிட்டிங் கார்ட்டை கொடுத்திருந்தாள்.


கொடுத்தோடு மட்டுமின்றி, "அவன் எங்க இருக்கான்னு கூட உனக்கு தெரியலை. ஆனால் இந்த நாலு வருஷத்துல எத்தனை முறை உன்னை பார்க்க அவன் வந்திருப்பான்னு தெரியுமா உனக்கு…? இப்ப கூட உனக்காக நாங்க எல்லாரும் தான் அவனை இங்க வர வச்சோம்.‌ இப்போ வரை நீ சொன்ன வார்த்தைக்காக அவன் உன் முன்னாடி வர முயற்சி பண்ணலை…" என்று கூறிய போது வெட்கி நின்றாள்.


அனைவரும் அவன் மீது எந்த தவறும் இல்லை என்று உணர்ந்து எங்களை சேர்த்து வைக்க எண்ணியிருக்கின்றனர். ஆனால் அவனுடைய நேசத்திற்குரிய நானே அவனை நம்பவில்லை. ஏன் நம்ப தயராக கூட இல்லை என்று நெஞ்சில் சுருக்கென்றது.


"இப்போவாது உனக்கு எல்லாம் புரிஞ்சுதே. இனிமேலாவது அவன் கூட சேர்ந்து வாழ பாரு" என்று அறிவுரை கூறிய போது பதிலளிக்க இயலாது துக்கம் தொண்டையை அடைத்தது.


தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தாள். ஒரு டாக்ஸியில் ஏறி செல்ல வேண்டிய முகவரியை கூறி அமர்ந்தாள்.


மும்பை விமான நிலையத்திலிருந்து அரை மணி நேரம் பயணம் தேவைப்படும் அவனுடைய இருப்பிடத்தை அடைவதற்கு.


ப்ரஷாந்தி டெக்னாலஜிஸ் என்று பெயரிட்ட கார்டை அவளது விரல்கள் வருடியது. அவளுடைய பெயரை தான் வைத்திருந்தான்.



"மேம் நீங்க சொன்ன அட்ரெஸ் வந்திடுச்சு" வாகன ஓட்டியின் குரலில் எண்ணங்களில் இருந்து விடுபட்டவள் பணத்தை கொடுத்து விட்டு இறங்கினாள்.


அவள் முன்னே பெரிதாக எழுந்து நின்றிருந்தது சிறிய அளவில் இருந்த அந்த பங்களா.


அதன் அமைப்பே ஹரியின் தற்போதைய நிலையையும் வளர்ச்சியையும் கூறியது.


ப்ரஷாந்தியை பிரிந்த பிறகு இழப்பினால் சிதைந்து போகாமல் கடின உழைப்பால் முன்னேறி இருந்தான்.


இழப்புகள் எல்லோருக்கும் ஏற்ப்படலாம். ஆனால் நல்வழியில் போதிக்கப்பட்டவர்கள் சாதாரண மனிதர்களை போல இழப்பினால் சிதைந்து வாழ்க்கையை அழித்து கொள்வதில்லை. இனி வரும் நாட்களில் அது போன்ற இழப்பு மீண்டும் வராதவாறு வாழ்க்கையை மெருகேற்றி கொள்கின்றனர்.


கேட் அருகில் இருந்த காவலாளி இவளை பார்த்துவிட்டு யாரென்று விசாரிக்க, ஹரியை பார்க்க வந்திருப்பதாக கூறினாள்.


"ஐயா வெளியே போயிருக்காங்க. நீங்க உள்ள வெயிட் பண்ணுங்க மா" என்று கூறி கதவை திறந்து விட்டார்.


உள்ளே நுழைந்தவளின் பார்வை பச்சை பசேலென இருந்த தோட்டத்தை அளவிட்டது. இருபுறமும் தோட்டம் நடுவில் சிமெண்ட் பாதை அதன் இறுதியில் வீடு. வீட்டின் ஒரு புறம் வாகனம் நிறுத்துமிடம்.


இதெல்லாம் அவர்கள் காதலித்த நாட்களில் இப்படி ஒரு அமைப்பில் வீடு கட்ட வேண்டும் கூறியிருந்தாள். அதனை நினைவில் வைத்து கட்டியிருக்கிறான் என்று தெரிந்தது.


அவனது ஒவ்வொரு அசைவிலும் செயலிலும் தன்னுடைய பிம்பம் பிரதிபலிப்பதை கண்டு உள்ளம் கலங்கியது.


அவளை கண்டு அவளருகில் ஓடி வந்த‌ ஒரு வயதான பெண்மணி, "ப்ரஷாந்தி அம்மா வந்துட்டிங்களா நீங்க. இனிமேல் தம்பி வாழ்க்கை சரியாகிடும்" என்று மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க,


ப்ரஷாந்தி தான் அவருக்கு தன்னை எப்படி தெரியும் என்று புரியாமல் விழித்தாள்.


"உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சினைனு எனக்கு தெரியலைம்மா. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கோங்க மா. இனி ஒரு தடவை தம்பிய விட்டு போயிடாதிங்கம்மா. தம்பி மாதிரி ஒருத்தர் புருஷனா கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும்" என்று மகிழ்ச்சியில் பேசிய படி இருந்தார்.


அவர் யாரென்று தெரியவில்லை என்றாலும் அவர் கூறுவதில்லை இருந்த உண்மையை உணர்ந்தாள்.


அவளது நிலைமையை உணர்ந்நதவர், "என்னம்மா எனக்கு எப்படி உங்களை தெரியும்னு பாக்குறிங்களா…? ஐயா உங்க போட்டோவை பெரிசா எடுத்து மாட்டி வச்சிருக்கு தம்பி. அதுவுமில்லாம உங்களை பத்தி நிறைய சொல்லியிருக்கு வாங்க காட்டுறேன்" என்று கையை பிடித்து அழைத்து சென்று புகைப்படத்தை காண்பித்தார்.


அது ஹரியும் அவளும் கேரளாவில் எடுத்த புகைப்படம் பெரிதாக ஹாலில் மாட்டப்பட்டிருந்தது.


எவ்வளவு அழகான புன்னகை இருவர் முகத்திலும். மனது அன்றைய நாளுக்கு சென்று வந்தது.


"தம்பி ஊருக்கு போய்ட்டு வந்ததில இருந்து ரொம்ப சோகமா அமைதியா இருந்துச்சு. நான் ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனால் இப்போ நீங்க வந்துட்டிங்க இல்லை எல்லாமே சரியாகிடும்னு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு"


"..."


"தம்பி சொல்லுச்சும்மா தம்பி மேல தான் எதோ தப்புன்னு வாழ்க்கைல தப்பு பண்ணாதவங்க யாரு இருக்கா. தம்பிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கம்மா அவர் உங்களை நல்லா பார்த்துக்கும்" என்று கூறிவிட்டு பதிலுக்காக ஆவலாய் அவள் முகம் பார்த்தார்.


எல்லோரும் அவனை தெரிந்திருக்கிறது.‌ ஆனால் எனக்கு தெரியவில்லை. இப்போது வரை தவறு அவனுடையது என்று கூறுகிறானே என்று சுணங்கியவள் ஏதும் கூறாமல் சம்மதமாக தலையசைத்தாள்.


"உட்காருங்கம்மா வந்தவங்களை நிக்க வச்சே பேசிட்டு இருக்கேன். என்ன சாப்பிட்றிங்க. உங்களுக்கு சாக்லேட் மில்க் ரொம்ப பிடிக்கும்னு தம்பி சொல்லியிருக்கு. அதையே கொண்டு வரவா…?" என்று வினவியவர் பின்னர் தலையில் தட்டி,


"நான் ஒரு கிறுக்கி உங்க வீட்ல இருந்திட்டு உங்களவே வரவேத்து பேசிட்டு இருக்கேன்" என்றாவாறு சமையலறைக்குள் செல்ல அவரது செய்கையில் அவளது இதழ்களே மெலிதாக வளைந்தது.


சென்றே இரண்டே நிமிடத்தில் சாக்லேட் மில்க்குடன் வந்தவர், "அம்மா நீங்க வந்திருக்க விஷயம் தம்பிக்கு தெரியுமா…? இன்னும் வர காணோம்…?" என்று வினவ,


இல்லை என்று தலையை இடது வலமாக ஆட்டினாள்.


"தெரியாதா…? அதான் தம்பிய காணோம். தெரிஞ்சிருந்தா இந்நேரம் ஓடி வந்திருக்கும். இப்பவே போன் பண்ணி வர சொல்றேன். தம்பி எப்பவும் வர்ற நேரம் தான். அநேகமாக வந்திட்டிருந்தாலும் இருக்கும்" என்றபடி அலைபேசியை எடுக்க,


"இல்லை வேணாம். அவர் வர்றப்போ வரட்டும் நீங்க சொல்லாதிங்க" என்றவளுக்கு அவனை எதிர்கொள்ளும் துணிவில்லை.


ஏன் எதற்கென்று கேள்வியை கேட்காமல் உடனே, "சரிம்மா உங்க சௌகரியம் தான். தம்பி வந்தததுமே பார்த்துகோங்க" என்றவரின் மேல் ப்ரஷாந்திக்கு மரியாதை பெருகியது.


"எப்படியும் பயணம் செஞ்சு தான் வந்திருப்பிங்க கொஞ்சம் ஓய்வெடுங்க மா. தம்பியோட ரூம் மேல போனா முதல் ரூம்மா…" என்றவர்,


"நீங்களும் தம்பியும் சமாதானம் ஆனதை கொண்டாட பெரிய விருந்தே செய்ய போறேன் நான். எதாவது வேணும்னா என்னை கூப்பிடுங்க.‌ என் பேர் சுமதி. தம்பி சுமதிம்மான்னு தான் கூப்பிடும். நீங்களும் அப்படியே கூப்பிட்டுக்கோங்க" என்று கூறினார்.


சம்மதமாக மேலும் கீழும் தலையசைத்தாள்.


"தம்பியும் உங்களை மாதிரி அமைதி தான் கேட்க கேள்விக்கு தான் பதில் சொல்லும். ஆனால் உங்க விஷயம்னு வந்துட்டா மட்டும் அப்படி பேசும்மா. ரெண்டு பேரும் எப்படி தான் ஜோடி சேர்த்திங்களோ…" என்று ஆச்சர்யப்பட்டவர்,


"நான் ஒருத்தி பேசிக்கிட்டு இருந்தா வேலை வெட்டி செய்யாம பேசிக்கிட்டே இருப்பேன். போய் சமையல் வேலையை பார்க்குறேன்" என்று சமையலறைக்குள் நுழைந்தார்.


அவர் சென்றதும் புயலடித்து ஓய்ந்தது போல அமைதி. எழுந்து வீட்டை விழிகளால் அளந்தாள்.


அவர்களது கனவு இல்லத்திற்காக அவள் வரைந்து வைத்திருந்த ஓவியம் உயிர்பெற்று எழுந்திருந்தது.


அவள் கூறிய ஒவ்வொரு விடயமும் அங்கு மிளிர்ந்து அவனது நேசத்தை பரைசாற்றி அவளை குற்றவுணர்வின் உச்சத்திற்கு தள்ளி கொண்டு இருந்தது.



கால்களை மெதுவாக நகர்த்தி மாடி படிகளில் ஏறியவள் ஹரியின் அறை வாசலுக்கு சென்றிருந்தாள்.


உள்ளே நுழைய‌‌ ஏதோ தயக்கம் கதவில் கைவைக்க தானாக திறந்து கொண்டது.


உள்ளே நுழைய படுக்கைக்கு எதிராக சுவற்றில் அவர்களது திருமண புகைப்படம் மின்னியது. விழிகள் அறையை நோட்டமிட்டது.

நான்கு பேர் படுக்ககூடிய பெரிய பெட் அதனருகே சிறிய டேபிளில் நைட் லேம்ப் அதனருகே சிறிய அளவில் அவளது புகைப்படம் தான்.


அவளது பிறந்தநாளில் எடுக்கப்பட்ட புகைப்படம்

எங்கும் அவள் எதிலும் அவள்.‌ அவள் மட்டுமே என்று வாழ்ந்திருக்கிறான் என்று புரிந்தது.


புரிந்த விநாடி மனது மேலும் மேலும் கனத்து போனது. ஜன்னல் கம்பியை இறுக பிடித்த படி நின்று தோட்டத்தை வெறித்தாள்.


சில நிமிடங்களில் காவலாளி கதவை திறக்க வெள்ளை நிற கார் உள்ளே நுழைந்தது.


அவனுடைய கார் தான் என்று புரிந்த கனம் மனம் பரிதவிக்க தோன்றியது. எப்படி அவனை எதிர்கொள்ள போகிறாய் என்று துடிக்க துவங்கியது.


காரை கேரேஜில் விட்டுவிட்டு நடந்து வந்து வீட்டிற்குள் நுழைய அவனது வாகன ஓசையை கேட்டு வெளியே வந்த சுமதியின் முகத்தில் அத்தனை பிரகாசம்.


"வாப்பா…" என்று புன்னகையுடன் வரவேற்றார். அது அவனது கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை.


அவனே நேரடியாக அவளை பார்த்து தெரிந்து கொள்ளட்டும் தான் எதற்கு நடுவில் என்று நினைத்து கொண்டவர்,

"காஃபி கொண்டு வரட்டுமா தம்பி" என்று புன்னகை மாறாமலே கேட்க,

"ரூம்க்கு கொண்டு வாங்க சுமதிம்மா" என்றவன் அறையை நோக்கி சென்று விட்டான்.

அவளை சந்தித்துவிட்டு வந்ததிலிருந்து மிகவும் இறுக்கத்துடன் எந்நேரமும் சிந்தனை வயப்பட்ட படி தான் சுற்றி கொண்டு இருக்கிறான்.


அவளை விட்டு வர மனதை கட்டுப்படுத்த முடியாது போராடி கொண்டு இருந்தான்.


அறைக்கு வெளியே அவனது காலடி சத்தம் கேட்க இவளுக்கு இதயம் தடதடத்தது. கம்பியை மேலும் இறுக பிடித்து கொண்டாள்.


அறைக்குள் நுழைந்தவன் பக்கவாட்டில் நின்றிருந்த அவளை கவனிக்கவில்லை.


உடையை எடுத்து கொண்டு குளியலறைக்குள் நுழைந்துவிட்டான்.


அவனிடம் என்ன பேசுவது என்ன கூறுவது என தெரியாமல் கலங்கிய இதயத்துடன் நின்றிருந்தாள்.


ப்ரெஷ் ஆகிவிட்டு துண்டால் முகத்தை துடைத்த படி வெளியே வந்தவன் ஜன்னலின் அருகே நின்றிருந்தவளை
கண்டு அதிர்ந்து நின்றுவிட்டான்.


அவனால் அங்கு அவளது வரவை நம்பமுடியவில்லை. அவனை நேருக்கு நேர் கண்ட நொடி உள்ளம் உடைய விழிநீர் கன்னத்தை தாண்டியிருந்தது.


அவளது நிலையை கண்டவனுக்கு உண்மை உரைக்க அவனது விழிகளும் கலங்க இருவரும் பேச மொழியின்றி பார்த்த படி நின்றுவிட்டனர்…


தொடரும்…

இவள் மீரா க்ரிஷ் ♥️♥️











 
Top