அத்தியாயம் 2
ஆதவனின் ஒளிக்கதிர்கள் மெல்லிய தூறலாய் சாரளத்தின் வழியே ஊடுருவி பாவையின் வதனத்தில் படர, அதில் முகம் சுருக்கியவள் விழிகளை மெல்ல மலர்த்தி பார்த்துவிட்டு மறுபுறம் திரும்பி படுத்து உறக்கத்தை தொடர தொடங்கினாள்.
அடுத்த நிமிடமே அவளது தொலைபேசியின் கனா இசைத்து தனது பணியை செவ்வனே செய்திட சிறிதாக முகத்தில் பரவிய எரிச்சலுடன் அழைப்பை ஏற்று காதில் பொருத்தினாள்.
மறுமுனையில் ரேஷ்மா, "ப்ரஷி எத்தனை டைம் உனக்கு கால் பண்றது எடுக்க மாட்டியா…?"என்று வசைபாட,
அவளது குரலில் உறக்கம் முற்றிலும் தொலைய எழுந்து அமர்ந்தவளுக்கு தலை வின்னென்று வலித்தது.
பெருவிரலால் நெற்றியை பிடித்துக் கொண்டாள்.
ரேஷ்மா, "ப்ரஷி லைன்ல இருக்கியா…?" என்று வினா தொடுக்க,
"ரேஷ் எனக்கு ரெம்ப ஹெட் ஏக்கா இருக்கு" என்று பதில் மொழிந்தாள் ப்ரஷாந்தி.
ரேஷ்மா, "ஏன் இருக்காது. ஒரு பாட்டில் பியரை ஒரே ஆளா அடிச்சா தலை வலிக்கதான் செய்யும்" என்று எள்ளலாக பதில் வர,
காதில் நுழைந்த வார்த்தைகளின் விளைவால் அதிர்ந்தவள், "வாட் ஒரு பாட்டில் பியரா…?" என்று அதிர்ச்சி விலகாத குரலில் வினவினாள்.
"எஸ் ஒரு பாட்டில் பியரே தான். அது மட்டுமா புல் போதையில நேத்து அட்டகாசம் பண்ணிட்ட" என்று பதில் அளித்தாள்.
ரேஷ்மா கூறியவற்றை கேட்டவளுக்கு தலைவலி அதிகமாகியது போல தோன்றியது. விரல்களால் நெற்றியை அழுத்தினாள்.
ரேஷ்மா, "எல்லாத்தையும் போன்லயே பேசிட்டு இருக்க முடியாது. சீக்கிரம் ரெடியாகி வெளியே வா. ப்ரேக் பாஸ்ட்க்கு போகணும்" என்று இயம்ப,
ப்ரஷாந்தி, "ஹ்ம்ம் ஒரு டென் மினிட்ஸ்ல வந்துட்றேன்" என்றாள்.
ரேஷ்மா, "சரி நான் உனக்கு லெமென் ஜூஸ் ஆர்டர் பண்ணி ரூம்க்கு கொண்டு வர சொல்றேன். அதை குடிச்சா ஹெட் ஏக் சரியாகிடும்" என்று மொழிய,
ப்ரஷாந்தி, "ஹான் நான் ரெடியாகிட்டு உன் ரூம்க்கு வர்றேன்" என்று உரையாடலை முடித்து வைத்தவள் எழுந்து குளியலறையை நோக்கி சென்றாள்.
ப்ரஷாந்தியும் அவளது நண்பர்களும் பெங்களூரின் முதன்மை பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான இன்டெர்நேஸ்னல் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் பொறியியல் பயில்கின்றனர்.
இந்தியா அளவில் நடக்கும் ஒரு கலந்தாய்வு ஒன்றில் கலந்துக் கொள்வதற்க்காக அவர்களது கல்லூரி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு கேரளாவிற்கு அழைத்து
வரப்பட்டுள்ளனர்.
ப்ரஷாந்தி பத்து நிமிடங்களில் குளித்து வெளியே வர கதவை தட்டும் ஓசை கேட்டது.
திறந்து பார்க்க சிப்பந்தி கையில் லெமென் ஜீஸுடன் நின்றிருக்க நன்றி நவிழ்ந்து ஜூஸை பெற்று கொண்டவள், அதனை பருகிவிட்டு தயாராக தொடங்கினாள்.
கூந்தலின் மெஸ்ஸி போனி டெயிலை சிறிய பேன்ட்டுக்குள் அடக்கி ஒரு முறை வலது புறமும் இடது புறமும் ஆட்டிக் கொண்டவள் சிறிய வொயிட் ஸ்டோன் பொட்டை நெற்றியில் வைத்துவிட்டு கண்ணாடியில் ஒரு முறை தன்னை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தாள்.
வொயிட் ஸ்லீவ்லெஸ் டீ சர்ட்டும் அதற்கு மேல ப்ளைன் ப்ளாக் ஜாக்கெட்டும் அணிந்திருந்தவள் காலுக்கு நேவி ப்ளூ டெனிம்ஸ் அணிந்திருந்தாள். காதில் எப்போதும் அணியும் ப்ளாட்டினம் தோடு கழுத்தில் சிறிய செயின் சகிதம் இருந்த தன் தோற்றத்தில் திருப்தியடைந்தவள் தனது தொலைபேசியை எடுத்து கொண்டு ரேஷ்மாவின் அறைக்கு சென்றாள்.
அங்கே ஏற்கனவே அவளது நண்பர்கள் அனைவரும் குழுமியிருந்தனர்.
ப்ரஷாந்தி உள்ளே நுழைந்த கணமே, "ரேஷ் நேத்து நைட் என்ன நடந்துச்சு…?" என்று வினவ,
ரேஷ்மா பதில் கூறாது அவளை முறைத்தாள்.
ப்ரஷி, "ப்ளீஸ் ரேஷ் எனக்கு எஸ்டர்டே நடந்த எதுவுமே ஞாபகம் இல்லை" என்று கெஞ்ச,
சஞ்சய், "புல் போதையில இருந்தா யாருக்குமே நைட் நடந்தது ஞாபகம் இருக்காது" என்று கூறி நகைக்க, மொத்த கூட்டமும் நகைத்தது.
ப்ரஷாந்தி மட்டுமே தான் அதீத போதைக்கு சென்றது. மற்ற அனைவரும் சற்று தெளிவுடன் தான் இருந்தனர்.
ஆதலால் அவர்களுக்கு நடந்தவை ஓரளவு நினைவடுக்கில் இருந்தது.
ரேஷ்மா முறைப்புடன் நேற்று நடந்நதவற்றை கூறிவிட்டு, "பாலன்ஸ நீ தான் சொல்லணும். நான் காரிடோர்ல உன்னை விட்டுட்டு போனதுக்கு பிறகு என்ன நடந்துச்சு. நீ எப்படி ரூம்க்கு போன…?" என்று வினவ,
ப்ரஷாந்தி தன் மூளையை கசக்கி சிந்தித்தும் எதுவும் நினைவிற்கு வரவில்லை.
"நான் எப்படி என்னோட ரூம்க்கு கரெக்டா போனேன்…?" என்று நாடியில் ஒற்றை விரலை வைத்து யோசிக்கும் பாவனையில் வினா எழுப்ப,
கிரண், "அது உனக்கு தான் தெரியும். நாங்க எல்லாரும் அப்போ ரூம்ல இருந்தோம். ரேஷ் ஒரு டென் மினிட்ஸ்ல உனக்கு கால் பண்ணப்ப நீ எடுத்து பேசி ரூம்ல தூங்குறேன்னு சொல்லிட்டு வச்சுட்ட"
"..."
"ரேஷ் நம்பாம அவகிட்ட இருக்க கார்ட் வச்சு உன் ரூம்க்கு வந்து பார்த்துட்டு வந்துதான் கன்பார்ம் பண்ணா" என்று கூறினான்.
மீண்டும் ப்ரஷாந்தி தன்னால் இயன்ற அளவு நடந்தவற்றை நினைவிற்கு கொண்டு வர முயற்சிக்க அதன் விளைவு சுழியம் தான்.
"ரியல்லி நான் நல்லா திங்க் பண்ணி பார்த்துட்டேன். எனக்கு எதுவுமே ஞாபகம் வரலை" என்று இதழ்களை பிதுக்கி பாவமாக கூற,
வருண், "சரி உனக்கு எப்போ நினைவு வருதோ அப்போ சொல்லு. இப்போ சாப்பிட போகலாம். ஐ ஆம் ஹங்க்ரி" என்று பதில் அளிக்க, எல்லோரும் காலை உணவை உண்ண சென்றனர்.
எல்லோரும் முன்னே செல்ல ப்ரஷாந்தி மட்டும் 'நேற்று என்ன நடந்திருக்கும். யார் என்னை எனது அறைக்கு அழைத்து வந்திருப்பா…?' என்ற சிந்தனையுடன் அவர்கள் பின்னே சென்றாள்.
அந்த மல்டி க்யூசின் ரெஸ்டாரன்ட் மிகவும் விஸ்தாரமாக இருந்தது.
கண்ணாடி தடுப்புகளால் சூழப்பட்டுள்ள உணவகத்தில் மேலே இருந்து பார்த்தால் ரெஸ்டாரன்டின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூந்தோட்டம் அத்தனை அழகாய் காட்சியளித்தது.
வட்டமாக போடப்பட்டுள்ள மேசைகளில் ஆங்காங்கே ஆட்கள் குழுவாக அமர்ந்து உணவருந்திய படி இருந்தனர்.
ஒவ்வொரு மேசைக்கும் இடையில் சீரான சிக் சாக் இடைவெளியில் வெள்ளையும் கருப்பும் மாறி மாறி போடப்பட்டு வித்யாசமாக தோற்றமளித்தது.
அங்கு செல்ப் செர்விங் முறை தான் பின்பற்றப்பட்டது. அதாவது தங்களுக்கு தேவையான உணவை தாங்களே சென்று வாங்கி வந்து அமர்ந்து உண்ண வேண்டும்.
ப்ரஷாந்தியின் தனது குழுவுடன் ஒரு வட்டத்தில் அமர்ந்தாள்.
சஞ்சய், "யார் யாருக்கு என்ன வேணுமோ சொல்லுங்க நானும் ப்ரஷியும் போய் வாங்கிட்டு வர்றோம்" என்று கூற, அனைவரும் மெனு கார்டை ஐந்து நிமிடம் அலச ஆரம்பித்தனர்.
எல்லோரும் மெனு கார்டில் பார்வையை பதித்திருக்க மேனகா மட்டும் பின்புறம் திரும்பி பார்த்திருந்தாள்.
ரேஷ்மா அவளது தலையில் தட்டி, "மெனு கார்டை பார்க்காம அங்க என்ன பாக்கிற…?" என்று வினவ,
மேனகா, "ஹே அந்த பர்ஸ்ட் டேபிள்ள இருக்கவனை பாருங்களேன். செம்ம ஸ்மார்ட்டா இருக்கான் பாலிவுட் ஹீரோ மாதிரி. சிரிக்கும் போது கன்னத்துல விழுகுற குழி செம்ம க்யூட்" என்று வர்ணிக்க,
எல்லோருடைய ஒட்டுமொத்த பார்வையும் அவன் மேல் குவிந்தது.
ப்ரஷாந்தியும் அவனை ஆராய்ந்தாள்.
சாக்லேட் ப்ரவுன் நிறத்தில் ப்ளைன் ஸ்கூப் நெக் டீ சர்ட். ப்ளூ ஜீன்ஸ். இடது கையில் ப்ளாக் வாட்ச்சுடன் கன்னதில் குழி விழும் புன்னகையுடன் பேசிக் கொண்டு இருந்தான். இடையிடையே நெற்றியில் புரண்ட சிகையை இடக்கரம் கோதிவிட்டுக் கொள்ள அந்த மேனரிஸம் அவளை அழகாய் ஈர்த்தது.
தன்னையும் மீறி அவளது விழிகள் அவனை ரசித்தது. ப்ரஷாந்திக்கு இந்த சைட் அடிப்பது புதிதல்ல.
அழகாக இருந்தால் அனைத்தையும் ரசிப்பாள். மழைத்துளியை தாங்கி நிற்கும் இலை நுனி முதல் மனிதர்கள் வரை பாகுபாடு பார்ப்பதில்லை.
இவர்கள் குழு எப்போதும் இப்படித்தான். யாராவது அழகாக இவர் கண்களுக்கு தென்பட்டால் எல்லோரும் சேர்ந்து பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இது தியேட்டரில் இருந்து பஸ் ஸ்டாப் வரை பொருந்தும்.
பெண்கள் அனைவரும் அவனையே பார்ப்பதை கவனித்த கிரண், "இது இப்போ ரொம்ப முக்கியம். முதல் புட்டை ஆர்டர் பண்ணுங்க" என்று முறைப்புடன் கூற,
பெண்களின் கவனம் அவன் மீதிருந்து உணவிற்கு தாவியது.
ஆனால் ப்ரஷாந்தி மட்டும் அவனது கன்னக்குழியை அந்த முகத்தை எங்கேயோ பார்த்த உணர்வு தோன்ற அவனையே சிறிது நொடி அவதானிக்க,
அவளை நோக்கி திரும்பியவன் என்னவென்று ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி வினா எழுப்பினான்.
சட்டென்று தலையை திருப்பிக் கொண்டவள் பின் அவன் புறம் திரும்பவேயில்லை.
எல்லோரும் தங்களுக்கு தேவையான உணவை கூற ப்ரஷாந்தியும் சஞ்சயும் அதனை வாங்கி வருவதற்க்காக எழுந்து சென்றனர்.
உணவு வாங்குமிடத்தில் ஓரிரவர் வரிசையில் நின்றிருக்க அவர்கள் இருவரும் வரிசையில் காத்திருக்கலானர்.
ப்ரஷாந்தியின் வலப்புறம் ஒருவர் உணவை வாங்கிவிட்டு இருக்கைக்கு திரும்ப அவரை இடித்துவிடாமல் இருப்பதற்க்காக சற்று பின்னே நகர்ந்தவள் தனக்கு பின்புறம் நின்றிருந்தவனை இடித்துவிட்டாள்.
யாரையோ இடித்துவிட்டோம் என்று உணர்ந்து மன்னிப்பு கோருவதற்க்காக திரும்பி, "சாரி தெரியாம…" என்றவளின் வார்த்தை எதிரிலிருந்தவனை கண்டதும் தொண்டைக் குழியில் சிக்குண்டது.
அதிர்ந்த படி அவன் முகம் நோக்கினாள்.
அவள் சிறிது முன்பு உற்று நோக்கியவன் தான் அவளெதிரில் நின்றிருந்தான்.
'தான் அவனை அப்படி உற்றுப் பார்த்ததற்க்கு தான் என்னிடம் கேள்வி எழுப்ப வந்துள்ளானோ…?'
'அப்படி கேட்டுவிட்டால் தான் என்ன பதில் மொழிவது. தான் அவனை உற்று நோக்கியதற்க்கான காரணத்தை கூறினால் நம்புவானா…?' மனதில் எழும் கற்பனைகளுடன் அவன் முகத்தையே சமீபித்திருந்தாள் ப்ரஷாந்தி.
************************************************
தனக்கு முன்னால் இருந்த கணினியை ஷட் டவுன் செய்தவள் கைகளை தூக்கி சோம்பல் முறித்த படி அமர்ந்திருந்த மெஸ் சேரை ஒரு சுற்று சுற்றி இருந்தவர்களை ஆராய ஒரு சிலர் மட்டுமே எஞ்சி இருந்தனர்.
மற்றவர்கள் பணியை முடித்துவிட்டு கிளம்பியிருந்தனர்.
தனது டெஸ்கில் இருந்த பென்ட்ரைவ், பென், பர்ஸ் , மொபைல் என அனைத்தையும் ஹான்ட் பேக்கிற்க்கு இடம் பெயர்த்தவள் எழுந்து திவாகர் அறையை நோக்கி சென்றாள்.
அவள் வருவதை சிசிடிவி மூலம் கவனித்தவன் அவள் அனுமதி கேட்கும் முன், "கம்மின் ப்ரஷி" என்றிருந்தான்.
ப்ரஷாந்தி உள்ளே நுழைந்து, "சார் கரண்ட் பிராஜெக்டோட பேமெண்ட் ரிப்போர்ட்ஸ் இதுல இருக்கு" என்று ஒரு பைலை அவனிடம் நீட்டினாள்.
"ஹ்ம்ம் செக் பண்ணிக்கிறேன்" என்று திவாகர் வாங்கி டேபிள் மீது வைத்தான்.
ப்ரஷாந்தி, "ஓகே சார். நான் கிளம்புறேன். என் வொர்க் ஓவர்" என்று கூற,
அதற்கு பதில் மொழியாமல்
"அம்மாவ பார்க்க போறியா…?" என்று வினவினான் திவாகர்.
"ஹ்ம்ம் ஆமா. மார்னிங் கால் பேசும் போது வர சொன்னாங்க" என்று பதில் வந்து விழுந்தது.
"ப்ரஷி அது உன்னோட வீடு. யாரும் கூப்பிட்டாதான் அங்க போவியா நீ…?" என்று கேள்வி பிறந்தது திவாகரிடம்.
ப்ரஷாந்தி பதிலுக்கு ஒரு சோம்பலான புன்னகையை உதிர்த்தவள், "நான் அப்படி சொல்லவே இல்லையே…" என்க,
"சொன்னாதான் உண்டா. உன் பிகேவியர் அப்படிதான் இருக்கு" என்று குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான்.
அந்த பார்வைக்கு எந்த வித பதிலும் கொடுக்காதவள் அவன் முகத்தை உற்று நோக்கினாள்.
அந்த பார்வையின் அர்த்தம் உணர்ந்தவன்,
இதற்கு மேல் தான் என்ன வினவினாலும் அவளிடமிருந்து எந்த பதிலும் வராது என்று எண்ணி, "ஓகே யூ கேன் லீவ்" என்று மொழிந்தான்.
ஒரு தலையசைப்புடன் அவனிடம் விடைபெற்றவள் தனது வெஸ்பாவில் தாய் வீடு நோக்கி சென்றாள்.
பனாஷங்கரியில் இருக்கும் அவளது அலுவலகத்திலிருந்து இந்திரா நகருக்கு அரை மணி நேர பயணத்தை கடந்தவளின் கார் ஜெயா பவனம் என்ற வீட்டின் முன் நின்றது.
அதனை வீடு என்று சொல்வதை விட சிறிய பங்களா என்று கூறினால் தகும்.
இந்திரா நகர் பெங்களூரின் சற்று வசதி படைத்தவர்கள் வாழும் பகுதி.
வீடுகள் சற்று இடைவெளி விட்டு இருக்கும்.
தனது காரினை காரேஜில் விட்டவள் நடந்து வீட்டிற்குள் சென்றாள்.
ப்ரஷாந்தி வருவதை பால்கனியில் இருந்து பார்த்துவிட்டு அவளது தாய் சுபத்ராவும் மூன்று வயது திக்ஷியும் வாசலுக்கு விரைந்திருந்தனர்.
ப்ரஷி உள்ளே நுழைந்த நொடியே, "சித்தி…" என்ற மழலை மொழியுடன் தன் வென்பஞ்சு பாதங்களை எட்டு வைத்து ஓடி வந்து ப்ரஷாந்தியின் கால்களை கட்டிக்கொண்டாள்.
மெழுகில் செய்த பொம்மை போல கொழு கொழு கன்னங்களுடனும் கோழிகுண்டு விழிகளுடனும் பால் பற்கள் தெரியும் படி சிரிப்புடன் தன்னைப் பார்க்கும் பிஞ்சினை பார்த்ததும் தனது கவலைகள் எல்லாம் மாயமாகிவிடும் என்று தோன்றும் ப்ரஷிக்கு.
ஆசையாக கைகளில் அவளை அள்ளிக் கொண்டவள் திக்ஷியின் குண்டு கன்னங்களில் ஈர முத்தம் பதித்தாள்.
சித்தி, "நானு நானு…" என்று மழலை மொழியில் ஆர்ப்பரிக்க,
ப்ரஷி புன்னகையுடன் தனது கன்னத்தை காண்பிக்க முத்தமிடுகிறேன் என்று ப்ரஷியின் கன்னங்களை எச்சில் படுத்தினாள்.
ப்ரஷாந்தி அவளை தூக்கியபடியே நடந்து வந்து கேப்ரியோல் சோபாவில் அமர அது அழகாக அவர்களை உள்வாங்கி கொண்டது.
தீக்ஷி, "சித்தி சாக்கி சாக்கி…" என்று கேட்க,
ப்ரஷி, "வாங்கிட்டு வந்துருக்கேன். உனக்கு வாங்காமலா…?" என்று வினவியவள், தனது ஹாண்ட் பாக்கிலிருந்து தீக்ஷிக்கு மிகவும் பிடித்த பெர்ரோச்சர் சாக்லேட்டை கொடுக்க,
அத்தனை அழகாய் அவளது விழிகள் விரிந்து மகிழ்ச்சியை கொட்டிட, ஆசையாய் அதனை வாங்கி தனது கையில் கெட்டியாக பிடித்து கொண்டாள்.
அவளது இந்த சந்தோஷத்திற்க்காகவே எத்தனை பெர்ரோச்சர் வேண்டுமானாலும் வாங்கி கொடுக்கலாம்.
ஆனால் நிஷா வந்தால், "எதுக்கு அவளுக்கு அடிக்கடி சாக்லேட் வாங்கி தர நீ. ஏற்கனவே அவளுக்கு கேவிட்டி இருக்கு" என்று அதட்டுவாள் என்று தோன்ற இதழ்கள் புன்னகையில் விரிந்தது.
இவர்களது இந்த பாசப் பிணைப்பை இதழில் ஜனித்த மென்னகையுடன் பார்த்திருந்தார் சுபத்ரா.
ப்ரஷாந்தி வந்தவுடன் அவளை திட்ட வேண்டும் என்று தான் நினைத்திருந்தார். ஆனால் தீக்ஷியுனான அவளது தருணம் அதை கலைக்க மனம் வரவில்லை.
தீக்ஷியிடம் மட்டும் தான் இவள் தன்னிலை மாறாமல் இருக்கிறாள்.
இருவரும் தங்கள் உலகத்திற்க்குள் அழகாக பொருந்தி செல்கின்றனர் என்று எண்ணியவாறே அவர்கள் மேல் விழிகளை பதித்திருந்தார்.
ப்ரஷாந்திக்கு இப்போது தான் சுபத்ரா அருகில் இருப்பது நினைவு வந்தது போல அவர் புறம் திரும்பி, "வீட்ல மத்தவங்க எல்லாரும் எங்கம்மா…?" என்று வினா தொடுத்தாள்.
"அப்பா பிஸ்னஸ் விஷயமா யாரையோ மீட் பண்ணப் போயிருக்காங்க. மத்தவங்க ஷாப்பிங் போயிருக்காங்க" என்றவர்,
சற்று கோபத்துடன், "இப்போ தான் உனக்கு வீட்டுக்கு வரணும்னு தோணுச்சா. அதுவும் நானா கால் பண்ணி அழைச்ச பிறகு வர. இது உன் வீடு ப்ரஷி. யாரோ ரிலேடிவ் வீட்டுக்கு வர்ற மாதிரி வர்ற" என்று சற்று ஆதங்கத்துடன் கேட்டார்.
"வொர்க் டென்சன்மா அதான் வரமுடியலை" என்று காலையில கூறிய அதே பதிலை கூறினாள்.
"என்ன பெரிய வொர்க் எப்போ பார்த்தாலும் இதையே ரீசனா சொல்லிட்டு இருக்க" என்று குரலை உயர்த்த,
"ரியல்லி வொர்க் லோடு ஓவர் தான். இல்லைன்னா என் தீக்ஷி குட்டியை பார்க்க வராம இருப்பேனா…?" என்று வினவியவாறு அவளை பார்த்து,
"அப்டிதானடா செல்லம்" என்றாள்.
தீக்ஷிக்கு என்ன புரிந்ததோ, "ஹ்ம்ம் ஆமா ஆமா" என்று மழலையில் மிழற்றினாள்.
"பார்த்தீங்களா…" என்று அவரை பார்த்து சிரிக்க, தீக்ஷியும் அவளுடன் இணைந்து சிரித்தாள்.
இவர்களது செயலில் சுபத்ராவிற்கும் சிரிப்பு வர, "திவாருக்கு கால் பண்ணி திட்டிவிடணும்" என்க,
"அச்சச்சோ ஏன் மா…" என்று சிரிப்பு மறைந்து வினவினாள் ப்ரஷாந்தி.
"ஹ்ம்ம் நீதானா உனக்கு ஓர்க் லோட் ஓவரா இருக்குன்னு சொன்ன. அதான் ஏன் என் பொண்ணுக்கு நிறைய வொர்க் குடுக்குறன்னு திட்டப்போறேன்" என்று சிரிப்பு மாறாமல் கூறினார்.
"ஏன் என் வேலைக்கு உலை வைக்கிற…" என்று அவளது கிண்டல் புரிந்தும் வினவ,
"ஹ்ம்ம்…இனிமே நீ வீட்டுக்கு ஒழுங்கா வரலைன்னா… அதை தான் பண்ணவேன்" என்றவர்,
"என்ன சாப்பிட்ற ஜூஸ் எடுத்திட்டு வரவா…?" என்று வினா தொடுக்க,
அவரது கேள்வியில் மிதமாக புன்னகைத்தவள் சரியென்பதாய் தலையசைத்தாள்.
சுபத்ரா, 'மகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறாள்' என்றெண்ணியவாறு சமையலறை நோக்கி சென்றார்.
சுபத்ரா அகன்றவுடன் ப்ரஷாந்தி தீக்ஷியுடன் இணைந்து கொண்டாள்.
தீக்ஷி அந்த பெர்ரோச்சரை பிரிக்க தெரியாமல் தன் பலமனைத்தையும் உபயோகப்படுத்தியும் தோல்வியை தழுவி தனது சித்தியை உதடு பிதுக்கி பாவ
மாக பார்க்க,
அவளது பாவனையில் மொத்தமாக உருகியது ப்ரஷாந்திக்கு.
"அச்சச்சோ குட்டிம்மாவால பிரிக்க முடியலையா. நான் பிரிச்சு தர்றேன்" என்றவாறு அதனை திறந்து கொடுக்க,
சுபத்ரா கையில் ஜூஸ் கிளாஸுடன் வந்தவர், ப்ராஷந்தியிடம் ஜூஸை கொடுத்துவிட்டு ஒரு போட்டோவையும் நீட்டினார்.
ப்ரஷாந்தி அதனை கவனித்துவிட்டு சுபத்ராவை கேள்வியாக நோக்கினாள்.