• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,273
Reaction score
3,731
Points
113
இரண்டு வருடங்கள் கழித்து,

தன் முட்டைக் கண்களைத் திறந்து கொட்ட கொட்ட விழித்தவாறே படுத்திருந்தாள் சுபிக்ஷா, தனஞ்செயன் மற்றும் மலர்விழியின் புதல்வி. அவளுக்கு இப்போதுதான் ஒரு வயது முடிந்திருந்தது.

கட்டிலில் குழந்தைக்கு இரண்டுபுறமும் தலையணையை வைத்துவிட்டு மலர் குளிக்கச் சென்றிருக்க, தனா அருகே அமர்ந்திருந்தான். இவனைப் பார்த்துக் குழந்தை லேசாய் சிணுங்கி, பின் உதட்டைப் பிதுக்கினாள். பின் அவளது பார்வைத் தாயைத் தேடி அலைந்தது. மலர் கழிவறைக்குள் செல்வதை சின்னவளும் பார்த்திருந்தாள்.

“என்ன வேணும் சுபி குட்டிக்கு? அம்மா வேணுமா?” என்ற தனா குழந்தையின் கன்னத்தைத் தன் ஒற்றை விரலால் தொட்டான். பட்டென அவன் கையைத் தட்டிவிட்ட குழந்தை அவனை முறைத்தாள். இவனுக்கு அதரங்களில் மென்னகை படர்ந்தது.

“ஹக்கும்... பார்க்கதான் உங்க அம்மா மாதிரி இருக்கன்னு நினைச்சா, அவளை மாதிரியே என்னை முறைச்சுப் பார்க்குறீங்களே சுபி குட்டி!” என இவன் சிரிக்க, குழந்தையும் தன் இரண்டு பற்களையும் காட்டி புன்னகைத்தாள். சில நிமிடங்கள் கழிய, மீண்டும் தாயைத் தேடி குழந்தையின் கண்கள் சுழன்றது.

“அம்மா கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க டா! அதுவரைக்கும் அப்பா உங்களுக்கு கதை சொல்றேன்!” என்ற தனா, குழந்தைத் தலையைத் தடவிக் கொடுத்தான்.

“தனா, தனான்னு ஒரு அழகான பையன் இருந்தானாம். மலர்விழின்னு ஒரு சுமாரான பொண்ணு அவனை ஆறு வருஷமா உருகி உருகி லவ் பண்ணாளாம். ஆனால் பாரு, அந்த விழி தனாகிட்டே காதலை சொல்லவே இல்லையாம். கடவுள் அவங்க ரெண்டு பேரையும் விதின்னு சேர்த்து வச்சுட்டாராம். அப்புறம்தான் அந்தப் பையனுக்கு அவளோட காதல் தெரிஞ்சு, ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்தாங்களாம். அதுக்கு அடையாளமாய் அவங்களுக்கு ஒரு குட்டி ஏஞ்சல் பொறந்தாளாம் அவ பேரு சுபிக்ஷாவாம்!” என்றவன் முகம் தங்களது திருமண வாழ்வை நினைத்துக் கனிந்து போயிருந்தது. எத்தனை போராட்டம், பிரச்சனை என அனைத்தையும் கடந்து அவர்களது வாழ்க்கை சிறந்திருக்க, இதோ அதற்கான பரிசாய் அழகாய் ஒரு குட்டி தேவதை இருவரின் வாழ்க்கையை அலங்கரித்து அர்த்தமுள்ளதாய் மாற்றியிருக்கிறாள்‌.

தனஞ்செயன் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மலர்விழி, சேலையை பாதிக் கட்டிவிட்டு, முந்தானையை மடிப்பெடுக்காது தோளில் போட்டுக்கொண்டு வெளியே வந்து நின்றாள். தனக்கு முன்னே நிழலாடுவதைக் கண்ட தனாவின் உதட்டில் புன்னகை விரவியது.

கைகளைக் கட்டிக்கொண்டு அவனை முறைத்தாள் விழி. சாவகாசமாய்த் திரும்பியவன், “என்னடி?” என்றான்.

அரைகுறை சேலையோடு தன்னிடம் சண்டைக்கு நிற்கும் மனைவி கூட அவனை வசீகரித்தாள். குழந்தைப் பிறந்த பிறகு உப்பிய கன்னமும் லேசாய் படர்ந்த செல்லத் தொப்பையும் அவளை இன்னும் மெருகூட்டி, கணவனை சுண்டியிழுத்தது. மூக்கில் மின்னிய மூக்குத்தியும் சிவந்திருந்த நாசியும் அவனை அழைத்தன. இன்னும் இன்னும் மனைவி அவனை வாரிச் சுருட்டிக் கொண்டிருந்தாள். இந்த வாழ்க்கையில் அவள் மீதான மயக்கமும் கிறக்கமும் நேசமும் காதலும் தீராது என ஆடவன் மனம் தீர்மானமாய்க் கூறியது. இந்நொடி அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டால், இருக்கும் கோபத்திற்கு அடித்தாலும் அடித்துவிடுவாள் என எண்ணியவனுக்கு உதட்டில் சிரிப்பு மின்னியது.

அதைப் பார்த்து மேலும் முறைத்தவள், “பேம்பர்ஸ் மாத்திவிடுங்க குழந்தைக்கு!” எனக் கடுப்பில் அணையாடையை அவன் மீதெறிந்தாள். தனா அதை அழகாய்க் கையில் பிடித்திருந்தான்.

சிரிப்புடன் சுபிகுட்டிக்கு அணையாடையை மாற்றிவிட்டவனின் பார்வை புடவையை சரிசெய்யும் மனைவியிடம்தான். இவன் பார்வை உணர்ந்தவள், மறுபுறம் திரும்பிக் கொள்ள, “ஹக்கும்... ம்க்கும்!” என கரகரத்தத் தொண்டையை சரி செய்தவனை மீறி மீசைக்கு அடியில் பெரியதாய் ஒரு புன்னகை. நீண்ட காலங்கள் கழித்து அவனுக்கும் மனைவிக்குமான ஊடல்.

வெறும் கெஞ்சலும் கொஞ்சலும் கூட சற்றே சலித்துப் போய்விட, இந்த சண்டை கூட நன்றாய் இருக்கிறது என தனஞ்செயன் மனைவியை சமாதானம் செய்யாது விட்டுவிட, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிக்கொண்டது. ஒரு வாரமாய் அவனைக் கண்டால் முறைப்பதும், உதட்டைச் சுழிப்பதுமாய் இருந்தாள். படுக்கையில் கூட, குழந்தையைத் தன்னருகே போட்டுக்கொண்டு கணவன் கைகவளைவுக்குச் செல்லவே இல்லை. தனஞ்செயனுக்கு இன்னுமே சுவாரஸ்யம்தான். எப்படி இந்தப் பெண்ணால் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடிகிறதென?

“விழி, தனா... கிளம்பிட்டீங்களா? முகூர்த்தத்துக்கு டைமாச்சு!” லீலாவதி கூடத்திலிருந்த கத்த, “அத்தை, பத்து நிமிஷம்...” என்ற விழி தலையை வாரி பூவைச் சூட்டி தன்னை அலங்கரித்து நிமிர, தனாவின் பார்வை முழுவதும் அவளிடம்தான். அந்தப் பார்வையில் லேசாய் உடல் சிலிர்த்தாலும் ஊடல் கொண்ட மனம் அவனை முறைத்துத் தொலைத்தது.

“பாப்பாவைத் தூக்கிட்டு வாங்க!” கட்டளைப் பிறப்பித்தவள், வெளியே செல்ல, தனாவும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்றான். ராமலிங்கமும் லீலாவதியும் தயாராகியிருக்க, நால்வரும் மகிழுந்தில் ஏறி திருமண மண்டபத்தை நோக்கி நகர்ந்தனர்.

இன்று ஊர்மிளாவிற்கும் மாறனுக்கும் திருமணம். மாறன் ஒரு வழியாய் ஊர்மியிடம் மனதைக் கூறி அவளை சம்மதிக்க வைத்திருந்தான். இருவீட்டுப் பெற்றவர்களிடம் விஷயம் பகிரப்பட, எந்தவித எதிர்ப்பும் இல்லை. ஊர்மி படித்து முடிக்க, மாறனும் வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்திருக்க, சுபமான நாளாய்ப் பார்த்து திருமணம் செய்வதாய் முடிவு செய்திருந்தனர் பெரியவர்கள்.

இன்றுதான் அவர்களுக்கான திருமணம். அதனால்தான் அதிகாலையிலே எழுந்து தனாவும் மற்றவர்களும் மண்டபத்தை நோக்கி நகர்ந்தனர். இரவு மண்டபத்திலே தங்கலாம் என்றால், குழந்தையை வைத்துக்கொண்டு அது சிரமம் எண்ணி, வீட்டிற்கு வந்துவிட்டனர் இவர்கள். அதனாலே இங்கிருந்து செல்கின்றனர்.

மலர்வழி இப்போது பேராசிரியராக ஒரு பொறியியல் கல்லூரியில் பணியாற்றுகிறாள். குழந்தைக்கு ஒரு வயது முடிந்துவிட, பகலில் அவளை லீலாவதி பொறுப்பில் விட்டுவிட்டாள். அவரும் எந்த வித எதிர்ப்புமின்றி மருமகளை வேலைக்கு செல்ல அனுமதித்தார். ராமலிங்கம் முதலில் தயங்க, மனைவி அவரை அதட்டி சரி சொல்ல வைத்திருந்தார். மலர்விழி படித்த படிப்பு என்றும் வீணாகக் கூடாது என லீலா கணவரிடம் எடுத்துக்கூற, ராமுவும் சரியென்றுவிட்டார்.

இரவு வேலை முடிந்து வந்து தனாவும் விழியும் குழந்தையைக் கவனித்துக்கொண்டனர். குழந்தையின் மீதான பொறுப்பு என்பது இரண்டு பேருக்கும் பொதுவானது என்பதை இருவரும் உணர்ந்திருந்ததால், அவர்களுக்கு இடையில் எந்தவித மனக்கசப்பும் ஏற்படவில்லை. முடிந்தளவு தனா விட்டுக்கொடுத்துப் போனான். விழி கூட கணவனுக்காக என வெகு அரிதாக தன்னிலையிலிருந்து இறங்கி வந்தாள். அதனாலே வாழ்க்கை இருவருக்கும் சுமூகமாகச் செல்ல, இப்போது சின்ன சண்டை முளைத்திருந்தது.

தனஞ்செயனுக்குத் தெரியும் எப்படியும் மனைவி இறங்கி வரமாட்டாள் என்று. சரி எத்தனை நாட்கள் அவளது கோபம் நீடிக்கும் என இவன் காத்திருக்க, விழி அசையவே இல்லை.

‘அழுத்தக்காரி‌‌... ராங்கி. ராங்கி!’ என மனதிற்குள் அவளைத் திட்டித் தீர்த்துவிட்டான்.

சிறிது நேரத்திலே மண்டபம் வந்துவிட்டது. இன்னும் யாருமே வந்திருக்கவில்லை. இவர்கள் உள்ளே நுழைய, “வா டி... ஏன் லேட்டு. உன் அண்ணன் கல்யாணம் இது. ஞாபகம் இருக்கா? இல்லையா?” என்ற லேசான அதட்டலோடு லோகு மகளை அழைத்துக்கொண்டு போனார். குழந்தையை வைத்திருந்த தனா, அவளை லீலாவதியிடம் கொடுத்துவிட்டு சாரதிக்கு உதவி செய்ய சென்றுவிட்டான்.

மலர்விழியும் தாயுடன் சேர்ந்து தாம்பூலத் தட்டை எடுத்து வைப்பது, ஐயர் கேட்பவற்றை எடுத்துக்கொடுப்பது என சுழன்று கொண்டிருந்தாள். உறவினர்கள் வருகைத் தர ஆரம்பிக்க, மண்டபம் விழாக்கோலம் பூண்டது.

மாப்பிள்ளையும் பொண்ணும் மேடையில் அமர வைக்கப்பட்டனர். நல்ல நேரத்தில் ஐயர் தாலியை எடுத்துக் கொடுக்க, மாறன் ஊர்மிளாவின் கழுத்தில் இரு முடிச்சிட, விழி மூன்றாவது முடிச்சை இட்டு நிமிர்ந்தாள். இரண்டு பெற்றவர்களும் மணமக்களை ஆசிர்வதிக்க, அடுத்தடுத்து சடங்குகள் நடை பெற்றன.

புகைப்பட கலைஞர் அனைத்தையும் அழகாய் படமெடுத்தார். உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் வந்து வாழ்த்தி முடிய, மாலையாகிவிட்டது.

பெரும்பாலான சொந்தங்கள் விடை பெற்றிருக்க, மணமக்களோடு நெருங்கிய சொந்தங்கள் மட்டும் சாரதியின் வீட்டை அடைந்தனர். பாலும் பழமும் கொடுத்து இருவரும் இருக்கையில் அமர வைக்கப்பட்டனர்.

ஊர்மி சோர்ந்து தெரிய, “ஊர்மி, ரெஸ்ட் எடுக்குறீயா?” என விழி அவளை அறைக்குள் அழைத்துச் சென்றாள். மாறன் அருகே தனா அமர்ந்திருந்தான். போகும்போது விழி தன்னைப் பார்த்து கண்ணை சிமிட்டிய கணவனை ஏகத்துக்கும் முறைத்துவிட்டுச் சென்றாள்.

அதைக் கவனித்த மாறன், “என் தங்கச்சி முகமே சரியில்லை. உன்னை அந்த முறை முறைச்சுட்டுப் போறா!” குரலில் சந்தேகத்துடன் வினவினான்.

“ஹக்கும்... மாறா!” என்ற தனா அவன் கசங்கியிருந்த பட்டுச் சண்டையை நீவி விட்டவாறே,

“மச்சான், இப்பவும் உனக்குப் புரியலையா டா? நீதான் எங்க ரெண்டு பேருக்கும் இடையில பெரிய கரடி!” என்றான் அவனுக்குப் புரிய வைத்திடும் நோக்கோடு.

“மீ கரடி... வொய் டா?” மாறன் அதிர, “ஷாக்கை கொற டா. ஆரம்பத்துல இருந்தே நீ கரடிதான். இப்போ உனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. இன்னும் தங்கச்சி மூஞ்சியைப் பார்த்து என்னை முறைச்சுட்டே சுத்தாம, ஒழுங்கா குடும்பம் நடத்துற வழியைப் பாரு டா!” என்றான் கண்டிப்பாய். மாறன் விழித்தான். அதற்குள் தனாவை யாரோ அழைக்க, அவன் சென்றுவிட்டான்.

‘கடைசியில நான்தான் கரடியா?’ என்றதில் மாறன் திகைத்துப் போய், மனதிலே தனாவைத் திட்டிக்கொண்டான்.

இரவு சடங்கிற்குத் தயார்செய்து மணமக்களை அறைக்குள் அனுப்பி வைத்ததும், தனா குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்குக் கிளம்பினர்.‌ அங்கே தங்கலாம் என்றால், அத்தனை பேருக்கு மலர்விழியின் வீட்டில் இடம் போதாது.

சாரதியும் லோகுவும் சங்கடமாய் அவர்களைப் பார்க்க, விழி பேசும் முன்னே தனா, “அத்தை, மாமா. இதுல என்ன இருக்கு. இப்போ போய்ட்டு, காலைல வந்துட்றோம்!” என அவர்களது சங்கடத்தைப் போக்கியிருந்தான்.

இவர்கள் வீடு வந்து சேர, சுபிக்ஷா காலையிலிருந்து அலைந்ததில் அழுது, சிணுங்கி, விழியைப் பாடாய்ப்படுத்தி, ஒரு வழியாய் உறங்கியிருந்தாள். தனா உறங்கும் மகளைத் தோளில் போட்டுக் கொண்டான். வீடு வந்ததும் மலர்விழி குழந்தையைத் தனாவிடமிருந்து வாங்கி தொட்டிலிட்டு நிமிர, கழுத்தோரம் வெப்பமான மூச்சுக்காற்று அவளை சுட்டது. தனாதான் மலர்விழியின் பின்னே நெருங்கி நின்றான்.

கோபமாய் விழி திரும்புவதற்குள் தனா அவளை அணைத்து கழுத்தில் மென்முத்தமிட்டான். அவள் சூடியிருந்த பூ இவனைக் கிறங்கடித்தது. மனைவியும் சேர்த்துதான்.

“ப்ம்ச்...” என்ற விழி கணவனை உதறி தீயாய் முறைத்தாள். ஆனால், ஒரு வார்த்தை அவளிடம் வாங்க முடியவில்லை இவனால்.

அவளது கோபமான முகத்தைக் கண்டதும் இவனுக்குப் மென்னகை படர்ந்தது. “சாரி டி, நான் பேசுனது தப்புதான்!” என்று தனா ஒருவழியாய்த் தன்னிலையிலிருந்து இறங்கி வந்து மன்னிப்பை யாசித்தான். அவன் கூறுவதை அலட்சியம் செய்தவள், அலமாரியைத் திறந்து, இரவு உடையை எடுத்தாள்.

“விழி... சாரி!” என தனா மீண்டும் கூற, கழிவறைக்குள் சென்று மறைந்தாள் மலர். இவனும் அணிந்திருந்த உடையை அகற்றி இலகு உடைக்கு மாறிவிட்டு கட்டிலில் அமர்ந்தான். மனைவியை எப்படி சமாதானம் செய்வது என கணவன் மூளை ஆராய்ச்சி நடத்த, விழி கழிவறையிலிருந்து வெளியே வந்தாள்.

அவனைக் கண்டு கொள்ளாது குழந்தையின் உடையை அலுங்காது அகற்றினாள். பின்னர் படுக்கை விரிப்பை அவள் சரிசெய்ய, “ஹே... அதான் சாரி சொல்றேனே டி... அப்புறம் என்ன?” அவன் குரலை உயர்த்த, விழி அவனைத் திரும்பிப் பார்த்ததும் அடங்கிப் போனான்.

“சாரி விழி, நான் உனக்கு வாழ்க்கைக் கொடுத்தேன்னு சொன்னது தப்புதான். அது ஏதோ ஃப்ளோல வந்துடுச்சு!” முகத்தைப் பாவமாய் வைத்தான் தனஞ்செயன். ஒருவாரத்திற்கு முன்பு இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது, தனஞ்செயன் மலர்விழிக்கு வாழ்க்கைக் கொடுத்துவிட்டேன் என்பது போல கிண்டலாகத்தான் கூறினான். இருந்தும் மனைவி அவனிடம் சண்டையில் இறங்கிவிட்டிருந்தாள்.

தனா முன்னே வந்து நின்றவள், “அதெப்படி ஃப்ளோல வரும். நீங்க எனக்கு வாழ்க்கை கொடுத்தீங்களா?” காட்டமாய்க் கேட்டாள். அது அவன் பேசியதற்காக மட்டுமல்ல, தன்னை சமாதானம் செய்ய ஒருவார அவகாசம் இவனுக்கு வேண்டுமோ? என்ற கடுப்பும் குரலில் இருந்தது.

“இல்லையே! என் பொண்டாட்டி தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தா!” என்று குறும்பாய்க் கூறியவன் அவளது கரத்தை இழுத்து தன் கன்னத்தில் அழுத்தினான்.

அப்படியே அவன் கன்னத்தை வலிக்க வலிக்க கிள்ளிய விழி, “நீங்க எனக்கு வாழ்க்கை கொடுக்கலை. நானும் உங்களுக்கு கொடுக்கலை. ரெண்டு பேரும் வாழ்க்கையைப் பகிர்ந்துட்டு இருக்கோம். அதை மனசுல வைங்க!” என்றாள் கோபமாய், அதட்டலாய்.

“ஆ...வலிக்குது டி ராங்கி!” என்ற தனா பதறி கன்னத்தைத் தேய்த்து அவளை முறைத்தான்.

“என்ன முறைப்பு?” என விழி முகத்தைப் பக்கவாட்டில் திருப்ப, அவளது கன்னத்தில் தனாவின் இதழீரம். அந்த முத்தத்தில் கணவனின் ஸ்பரிசத்தில் விழியின் கோபம் மொத்தமும் தணிந்து போயிருக்க, அவனறியாது இதழோரத்தில் புன்னகை துளிர்த்தது இவளுக்கு.

அதைக் கண்டு கொண்டவன், துள்ளி எழுந்து மனைவியை அணைக்க வர, “என்ன... என்ன?” என எட்ட தள்ளி நின்றவள் முகத்தில் மீண்டும் கோபம்.

“ஏய்! என்னடி... அதான் சமாதானம் ஆகிட்டீயே!” தனா அவள் தள்ளிப் போனக் கடுப்பில் வினவினான்.

“அந்த சமாதானம்தான் ஆகியிருக்கேன். இது இல்லை!” என விழி இருவரையும் கைக் காண்பித்து கூற, அவளைப் பார்த்து முறைத்த தனஞ்செயன், “ச்சு... போடி!” எனக் கோபத்துடன் படுக்கையில் படுத்து தலையணையில் முகம் புதைத்தான்.

அவன் செயலில் இவளுக்கு அப்படியொரு சிரிப்பு. அதைக் கடினப்பட்டு அடக்கியவள், விளக்கை அணைத்துவிட்டு அவனருகே படுத்தாள். தனாவிடம் அசைவில்லை.

இவள் மெதுவாய் அவனுக்கு அருகில் நெருங்கிப்படுக்க, தலையைத் தூக்கியவன், “என்னடி?” எனக் காட்டமாய்க் கேட்டான். இவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவனது கையை எடுத்து அதை தன் வயிற்றில் போட்டு, கணவனை இறுக அணைத்தாள்.

“ஒன்னும் வேணாம் போடி!” இப்போது தனா முறுக்கிக் கொள்ள, “ச்சு... என் புருஷன், என் ப்ராபெர்ட்டி!” என்றவள் அவனை மேலும் இறுக்கி அணைக்க, தனஞ்செயன் உடல் லேசாய் தளர்ந்தது. மனைவி அணைப்பிற்குள் சுகமாய் தன்னைப் புதைத்தவன், “இந்தப் பொண்டாட்டியை புரிஞ்சுக்க எனக்கு ட்ரெய்னிங் பத்தலை காட்!” எனப் புலம்பினான்.

பக்கென சிரித்த மலர்விழி, “அதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது!” என உதட்டை சுழிக்க, அந்த உதட்டில் அழுத்தமாய் முத்தமிட்டான் கணவன். விழியிடம் லேசான சிலிர்ப்பு. அவளை அப்படியே அள்ளித் தன்மீது
போட்டுக்கொண்டு, அணைத்தான் தனா. அவளும் எதுவும் கூறாது அவனது அணைப்பில் தன்னைத் தொலைத்தாள்.

சுபம்
 
Top