• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,259
Reaction score
3,689
Points
113
எண்ணம் – 8

மணி பன்னிரெண்டைத் தொட்டும் மலர்விழிக்கு வேலை இருந்தது. எழுத எழுத சென்றுக் கொண்டேயிருக்க, அலுத்துப் போனாள்.

குனிந்து எழுதியதில் கழுத்து வலி வேறு. கழுத்தை இருபுறமும் அவள் திருப்ப, தனஞ்செயன் தூக்கம் வராது புரண்டுக்கொண்டிருந்தது கண்ணில்பட்டது. மின்விளக்கு வெளிச்சம் வேறு அவனை தொந்தரவு செய்தது போல. கண்ணைச் சிமிட்டி, தலையணையில் முகம் புதைத்தான். அவனைப் பார்த்து வெற்றியைச் சுருக்கியவள், நாளைக்கு மீதம் இருப்பவற்றைப் பார்த்துக் கொள்ளலாம் என எடுத்து வைத்துவிட்டு படுக்கச் சென்றாள்.

வழக்கமாகத் தூங்கும் நேரத்தைவிட இன்று தாமதமாகப் படுத்ததில் கண்களை உறக்கம் அண்டவே இல்லை. வலதுபுறம் இடதுபுறம் எனத் திரும்பி எப்படியாவது நித்திரையைத் தழுவிவிடலாம் என்ற அவள் முயற்சி தோல்வியையே தழுவியது.

எழுந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள். திருமணம் முடிந்த நாளிலிருந்து நடந்தவைகளை எல்லாம் எண்ணிப் பார்த்தாள். அதில் அவளுக்கும் தனாவிற்குமான உரையாடலில் பெரும்பாலும் சண்டையிலே முடிகிறது என மூளை உணர்த்த, மனது அதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

மூளை பகுப்பாய்வு நடத்தி எது தவறு, எது சரியென சுட்டிக்காட்ட, நடந்தவைகளை அசைபோட்டாள் மலர்விழி. திடீரென கழுத்தினோரம் லேசாய் வெப்பமும் மூச்சு சத்தமும் கேட்க, கழுத்தில் உள்ள முடிகள் எல்லாம் சிலிர்த்தன. திரும்பிப் பார்த்தாள், படுத்தவாறே உருண்டு அவள்புறம் தலையை வைத்திருந்தான் தனஞ்செயன். திரும்பி அவனைப் பார்த்தது போல மலர்விழி அமர்ந்தாள்.

தனஞ்செயனின் உதடுகள் லேசாய் சிரிப்பது போல விரிந்திருக்க, அவனது முகத்தையே ஆழ்ந்து பார்த்தாள். எத்தனை முயன்றும் அவளால் மறக்க முடியாத வதனமாகிற்றே. அத்தனை ஆழமாய் மனதில் பதிந்து போயிருந்தான் இந்தத் தனஞ்செயன். சிறு வயதில் அவனுடனான அழகிய நினைவில் முகம் கனிந்து போனது. சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு, சற்றுமுன் தனா தன்னிடம் கோபமாய் பேசியது நினைவு வர, இப்போது அவனை முறைத்துவிட்டு உறங்கச் சென்றாள்.

மறுநாள் அவரவர் வேலையில் நேரம் சுழன்றது. மலர் அதிகாலையிலே எழுந்து கல்லூரிக்கு கிளம்பிச் சென்றாள். அப்போதுதான் அவளால் கல்லூரிக்குச் சரியான நேரத்தில் செல்ல முடிந்தது. மாலை வீட்டிற்கு வரவும் அதிக நேரமானது. ஒரே வாரம், அதற்கு மேல் அவளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை, மொத்தமாய் சோர்ந்து போனாள்.

லீலா ஏன் தனியாய் வீடு பார்த்துப் போக சொன்னார் என்பது இப்போது மலருக்குப் புரிந்தது. 'பேசாமல் கல்லூரி முடியும் வரை அங்கே அருகில் எதாவது வீடு வாடகைக்கு எடுத்து குடியிருப்பதுதான் இப்போதைக்கு வழி' எனத் தோன்றியது அவளுக்கு.

தனஞ்செயனை அவனது பெற்றவர்களிடமிருந்து பிரித்து அழைத்துச் செல்வதில் அவளுக்கு சுத்தமாய் விருப்பம் இல்லை. ஒற்றை மகன் என அவனைச் சுற்றித்தான் லீலா மற்றும் ராமலிங்கத்தின் உலகம் நகர்கிறது என்பது மாமியாரின் பேச்சிலே அவளால் உணர முடிந்தது. அதனால் தனியாகச் செல்லுவதைப் பற்றி பெரிதாய் யோசிக்கவில்லை. ஆனால், இப்போது வேறு வழியில்லை என யோசித்தவள், பெருமூச்சைவிட்டாள். காலையில் உணவு உண்ணும்போது லீலாவதியிடமும் ராமலிங்கத்திடமும் இதைப் பற்றி பேசினாள்.

“அத்தை, நீங்க சொன்னது சரிதான். டெய்லி ட்ராவல் பண்ண ரொம்பக் கஷ்டமா இருக்கு...” என்றாள் ஓய்ந்தக் குரலில்.

அவளைப் பார்த்துப் புன்னகைத்த லீலா, “நான் தான் அப்போவே சொன்னேனே டா. சரி ஒன்னும் பிரச்சனை இல்லை. நீயும் அவனும் தங்குற மாதிரி ஒரு பிளாட் பார்க்கச் சொல்றேன்...” எனப் பதிலளித்தார்.

“அத்தை, உங்கப் பையன் எதுக்கு என் கூட வரப் போறாரு?” என இவள் கேட்க, லீலாவும் ராமலிங்கமும் நெற்றியைச் சுருக்கினர்.

“அத்தை, உங்கப் பையன்தான் தனிக்குடித்தனம் போறதுக்கு அர்த்தத்தை சொன்னாரு. நான் மட்டும் தனியாதான் போகணுமாம். அதான் தனிக்குடித்தனமாம், அவர் எங்கேயும் வர மாட்டேன்னு சொல்லிட்டாரு. சோ, நான் ஒரு ஆள் தங்குற மாதிரி சின்ன வீடா கூடப் பாருங்க...” என்றவள், “அப்படியில்லைன்னா, ஹாஸ்டல் கூட ஓகேதான். நான் ஹாஸ்டல்ல ஸ்டே பண்ணிக்கிறேன்...” என்றாள். லீலாவிற்கு லோகநாயகி கூறியது நினைவு வந்தது.

“கழுவுற மீன்ல நழுவுற மீனு என் மக. அதனால ஹாஸ்டல் போறேன்னு சொன்னா விட்றாதீங்க லீலா...” என லோகநாயகி வார்த்தைகள் செவியில் எதிரொலித்தன.

“மலர், அவன் சொன்னதை எல்லாம் பெருசா எடுத்துக்காத. அவன்கிட்ட நான் பேசுறேன். ஹாஸ்டல் எல்லாம் வேணாம். எதாவது அப்பார்ட்மெண்ட்ல வீடு காலியா இருக்கான்னுப் பார்க்குறேன்...” என்றார் லீலா.

“ஆமா டா, உன்னைத் தனியா எல்லாம்விட முடியாது. உன்னைப் பெத்தவங்க எங்களை நம்பிதானே அனுப்பி இருக்காங்க. அதனால் தனாகிட்டே நாங்க பேசுறோம்...” ராமலிங்கமும் மகன் கூற்றை மறுதலித்தார்.

“அத்தை, மாமா... நீங்களாச்சு. உங்கப் பையனாச்சு. அவர் வந்து ரெண்டு பேர் சேர்ந்து வீடு பார்க்கலாம்னு சொன்னா, எனக்கு ஓகேதான். ஏன்னா, அவர்தான் என்னைத் தனியா போகச் சொன்னது!” என்றவள், கல்லூரிப் பையை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.

அவள் சென்ற சில நிமிடங்களிலே
தனா உணவு உண்ண வந்தான். மேஜை மீது அமர்ந்தவன், “என்ன சாப்பாடு மா?” என வினவியபடியே லீலா தட்டில் வைத்த தோசையை உண்ண ஆரம்பித்தான்.

“தனா, நீ பண்றது, பேசுறது எல்லாம் வர வர சரியில்லை...” ராமலிங்கம் கண்டனமாய்க் கூற, என்னவெனப் பார்த்தான் அவன்.

“ஆமா டா! மலர்கிட்டே ஏன் அப்படி சொன்ன?” என லீலா வினவினார்.

தாய், தந்தையைப் புரியாது பார்த்து வைத்தவன், “நான் என்னம்மா சொன்னேன்?” என வினவினான்.

“அவளை மட்டும் தனியா வீடு பார்த்துப் போக சொல்லி இருக்க. ஏன்டா அப்படி சொன்ன? அவ தனியா ஒரு வீட்லயும், நீ இங்கேயும் இருக்கத்தான் கல்யாணம் பண்ணி வச்சோமா? அதுவும் பொம்பளைப் பிள்ளையைத் தனியா போய் இருக்க சொல்ற.. அன்னைக்கு என்னடான்னா, நடுராத்திரியில அவளை வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்ற. இப்படிதான் உன்னை நாங்க வளர்த்தோமா?” ராமலிங்கம் கடுமையாகப் பேச, தனா மலரை நினைத்துப் பல்லைக் கடித்தான்.

“ப்பா... நான் அந்த அர்த்தத்துல சொல்லலை...” என தனா கூற, “நீ எதை நினைச்சு சொன்னாலும், அதோட அர்த்தம் ஒன்னுதான் டா!” என்றார் லீலா.

“ம்ப்ச்... ம்மா, என்னால உங்களையும் அப்பாவையும் விட்டுட்டு இருக்க முடியாது மா. அதான் எனக்குத் தனியா போறதுல விருப்பம் இல்லை...” என்றான் தாயைப் பார்த்து‌.

அவனது கூற்றில் லீலாவதிக்குப் புன்னகை பிறந்தது. மகனின் தலையைக் கோதியவர், “டேய்! உன்னை என்ன ஒரேடியாவா தனியா அனுப்புறோம். இதோ, இந்த மாசம் முடிஞ்சதுன்னா இன்னும் ஏழு மாசம்தான். மலர் படிப்பு ஓவரானதும் நீங்க இங்கேயே வந்துடப் போறீங்க...” என்றார்.

“ம்மா... இருந்தாலும்...” என மகன் இழுக்க, “டேய்! இது அவளுக்காக மட்டும் இல்லை. உங்க ரெண்டு பேருக்காகவும்தான் டா. தனியா கொஞ்ச நாள் இருந்தா, உங்களுக்குள்ள புரிதல் வரலாம். அதான் சொல்றேன். அதனால கொஞ்ச நாள் தனியா போங்க...” என மகனை சமாதானம் செய்தார் லீலா. ராமலிங்கமும் மலரை முன்னிறுத்தி போகச் சொல்ல, தனஞ்செயன் ஒருவழியாய் ஒப்புக்கொண்டான்.

அலுவலகம் சென்றவனுக்கு அடுத்தடுத்து மூன்று அழைப்புகள். மலரின் அப்பா, அம்மா, மாறன் என மூவரும் அழைத்துவிட்டனர். லீலா லோகநாயகி அழைத்திருக்கவும், நடந்ததைக் கூற அவர் கணவன், மகனிடம் கூறிவிட்டார். அதனாலே மூவரும் அழைத்து தனா அப்படி பேசியது தவறு என அறிவுரை மழை பொழிய, நொந்து போனான் தனஞ்செயன். எல்லாம் சேர்த்து மலர்விழியின் மீது கோபமாய்த் திரும்பியது.

இரவு வீட்டிற்குச் சென்றவன், அறைக்குள் சினத்துடன் நுழைந்தான். மேசையில் அலைபேசியை வைத்து அதில் ஏதோவொரு காணொளியை ஓடவிட்டு, காதொலிப்பானை செவியில் சொருகியிருந்த மலர்விழி பாடத்திற்காகக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.

“விழி‌...” என சினத்துடன் அவளருகே சென்று நின்றான் தனா. அவனது நிழலை வைத்து வரவை உணர்ந்தாலும் எதிர்வினையாற்றது பெண் அமர்ந்திருக்க, காதொலிப்பானை பிடித்திழுத்திருந்தான்‌ கணவன்.

செய்திருந்த வேலை தடைபட்டதில் எரிச்சலானவள், “இப்போ என்ன வேணும் உங்களுக்கு?” எனக் காட்டமாய் வினவினாள்.

“அம்மா, அப்பாகிட்ட என்ன சொன்ன விழி? உன்னை நான் வீட்டைவிட்டுப் போக சொன்ன மாதிரி சொல்லி வச்சிருக்க? எது பேசுனாலும் அதை சண்டையா மாத்த, உன்னால மட்டும் எப்படி டி முடியுது?” என்றவனை முறைத்து வைத்தாள்.

“முறைக்காத விழி, நீ செஞ்சது சரியா? நான் என்னமோ உன்னைக் கொடுமை படுத்துற மாதிரி அவங்ககிட்ட நீ சொல்லி இருக்க...” என தனா ஆத்திரத்துடன் கூறினான்.

“நீங்க பேசுனதை தானே நான் சொன்னேன். நானா எதையும் சொல்லலையே!” மலர் கேலியாய்க் கூறினாள்.

அதில் பொறுமை இழந்தவன், “என்னடி நான் சொன்னதை சொன்ன? ஹம்ம், தனிக்குடித்தனம் போகணும்னு நீதானே ஸ்டார்ட் பண்ண...” என்றவன் பேச்சைத் தொடரும் முன் அவன் முன்னே கையை நீட்டிப் பேச்சைத் தடை செய்தவள்,

“நான் தனிக்குடித்தனம் போகணும்னு சொன்னேன். அதை நீங்க பார்த்தீங்க?” என்றவள் குரலில் காரம் கூடியது. தனா அதில் என்ன சொல்வது எனத் தடுமாற,

“முதல்ல நீங்களா எதையும் கற்பனை பண்ணீட்டு என்கிட்ட வந்து பேசுறதை நிறுத்துங்க. அத்தைதான், படிப்பு முடியுற வரைக்கும் காலேஜ் பக்கத்துல வீடு பார்த்துக் கொஞ்சநாள் இருங்கன்னு சொன்னாங்‌க. நான் வேண்டாம்னு சொல்லவும், உங்ககிட்ட சொன்னாங்க. இது எதுவுமே தெரியாம, நீங்களா எதையும் நினைச்சுட்டு என்கிட்ட பேசுனா, உங்க அபத்தமான பேச்சுக்கு என்னால பொறுப்பேத்துக்க முடியாது...” அழுத்தம் திருத்தமாகக் கூறியவளின் பேச்சில் தனஞ்செயன் வாயடைத்துப் போனான்.

‘முதலில் அவளிடம் என்ன நடந்தது என கேட்டுவிட்டு பேசி இருக்கலாமோ?’ மூளை கூற, ‘பேசுனா மட்டும் அப்படியே எல்லாத்துக்கும் பதில் சொல்லிடப் போறா...’ மனம் கேலி செய்தது. அதை உரைக்கவும் செய்தான்.

“ஆமா, நான் உன்கிட்ட என்ன நடந்ததுன்னு கேட்டா, அப்படியே பதில் சொல்லிடுவ பாரு...” என்றவன் பல்லை நறநறத்தான்.

“நேத்து நீங்க பேசும்போது நான் தான் சொல்லி இருப்பேன்னு ஒரு முன்முடிவோடதான் பேசுனீங்கன்றதை மறந்துடாதீங்க...” பதிலுக்கு மலரும் காட்டமாய் பதிலளித்தாள்.

“சரி, நான் பேசுனது தப்பாவே இருக்கட்டும். எதுக்கு நீ உங்க வீட்ல இருக்க எல்லார்கிட்டயும் சொன்ன? காலைல இருந்து ஒவ்வொருத்தரா போன் பண்ணி, நான் உன்னைக் கொடுமைபடுத்துறது போல பேசுறாங்க. இன்னைக்கு என் வேலையே போச்சு...” என்று தனா இரையவும், அவனை யோசனையாய்ப் பார்த்தாள்.

“எங்க வீட்ல இருந்து கால் பண்ணாங்களா?” மலர் கேள்வியாய்ப் பார்க்க, “ஆமா, பண்ணாங்க.‌‌ எல்லாரும் கால் பண்ணி என்னை சாவடிச்சுட்டாங்க...” என்றவன் பையைத் தூக்கித் தூர போட்டுவிட்டு உடை மாற்றச் சென்றுவிட்டான்.

கோபத்தில் பல்லைக் கடித்த மலர்விழி, அலைபேசியை எடுத்து லோகநாயகிக்கு அழைத்தார். மகளின் கோபம் குறைந்துவிட்டது போல, அதுதான் அழைத்துவிட்டாள் என லோகு ஆர்வமாய் அழைப்பை ஏற்று காதில் பொறுத்தினார்.

“மலரு, எப்படி இருக்க டி? நல்லா இருக்கீயா?” லோகு பாசமாய் வினவ, “சத்தியமா நான் நல்லா இல்லை மா...” என்றாள் கோபமாய்.

“ஏன் மலர், என்னாச்சு?” லோகு பதறிப் போய் வினவினார்.

“எல்லாம் நீங்க பண்ற வேலைதான் மா. எதுக்காக ஒருத்தர் மாத்தி ஒருத்தர் அவருக்கு கால் பண்ணீங்க?” எனப் பொரிந்தாள் மலர்விழி.

“அது மலர், தம்பி பேசுனது சரியில்லையே மலர். அதான் நான் போன் பண்ணி பேசுனேன்...” லோகு தயங்கினார்.

“நான் கேட்டேனா மா? உங்க யார்கிட்டேயும் வந்து என் புருஷன் அப்படி பண்றாரு, இப்படி பண்றாருன்னு சொன்னேனா? எதுக்கு மூனு பேரும் அவருக்கு போன் பண்ணீங்க?”

“இல்லை டி, லீலா தான் பேசும்போது சொன்னாங்க. அதான்...” லோகு இழுத்தார்.

“நீ பண்ண வேலையால அவருக்கும் எனக்கும் சண்டை. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? நான் நல்லா வாழணுமா? இல்லையா? நீங்க பண்ற வேலையால, சின்ன சண்டை பெரிய பிரச்சனை ஆகிடுச்சு...”

“ஐயயோ! மலர், மாப்ளைக்கும் உனக்கும் பெரிய சண்டையா?” லோகநாயகி தாயாய்ப் பதறிப் போனார்‌.

“ஆமா சண்டைதான்... என்னால எல்லாத்தையும் ஹேண்டில் பண்ண முடியும்மா. நானா வந்து உங்ககிட்ட சண்டைன்னு சொல்ற வரை, நீங்க மூனு பேரும் என் விஷயத்துல தலையிடாதீங்க. உங்க இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டீங்க. சரி, அதை நான் ஏத்துக்கிட்டேன் தானே? இப்போ நான் என் இஷ்டத்துக்கு வாழ்ந்துக்குறேன் மா. நீங்க உள்ள வராதீங்க...” என அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

மகளின் பேச்சில் லோகநாயகிக்கு விழிகள் கலங்கிவிட்டன. அவளுடைய நல்லதிற்காக செய்த விஷயம் இப்படியாகிவிட்டதே என மலர் பேச்சில் தவித்துப் போனார். அதுவும் இல்லாது அவளது கடுமையான பேச்சு இவரை வருத்தியிருந்தது‌.

“யார்கிட்டே மா பேசிட்டு இருக்க?” என வினவியவாறே மாறன் உள்ளே நுழைந்தான். லோகநாயகி அவனுக்குப் பதில் கூறவில்லை.

அவரின் கலங்கிய விழிகளைப் பார்த்து பதறிய மாறன், “ம்மா, என்னாச்சு?” என அழுத்தமாய்க் கேட்க, லோகநாயகி நடந்ததை மெல்லிய விசும்பலுடன் கூறி முடித்தார்.

கண்ணைத் திறந்து மூடிக் கோபத்தைக் கட்டுப்படுத்திய மாறன், மலர்விழிக்கு அழைத்தான். அழைப்புச் சென்றுகொண்டே இருக்க, ஏற்கப்படவில்லை. அவன் இலக்கத்தைப் பார்த்ததும் புறக்கணித்திருந்தாள் தங்கை.
பின்னர் தனாவிற்கு அழைத்தான்.

“தனா, ஃபோனை அவகிட்டே கொடு டா...” மாறன் எடுத்ததும் கூற, யோசனையுடன் அலைபேசியை மலர்விழியின் மேஜை மீது வைத்தான் தனஞ்செயன்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், அலைபேசியை எடுத்து காதில் பொறுத்தினாள். “என்ன நினைச்சுட்டு இருக்க மலர் நீ? அம்மாகிட்ட ஏன் அப்படி கோபமா பேசுன?” என எடுத்ததும் மாறன் கோபமாய் வினவினான்.

“நீங்க பண்ணதெல்லாம் சரியா மாறா?” இவள் பல்லைக் கடித்தாள்.

“ப்ம்ச்... அவங்க பண்ணது தப்பாவே இருக்கட்டும். அதுக்காக வயசுல மூத்தவங்கன்ற மரியாதை கூட இல்லாம பேசியிருக்க? நான் முன்னாடியே உன்கிட்ட சொல்லி இருக்கேன். யார்கிட்ட என்ன பேசுறோம்னு நிதானம் இருக்கணும். அது இல்லைன்னா, பேசுற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாம போய்டும். மூனாவது மனுஷங்ககிட்ட அப்படி பேசுறதே தப்பு. நீ நம்ம அம்மாகிட்டே பேசியிருக்க...” மாறன் அழுத்தமாய்க் கேட்க, மலர் சற்று நிதானித்தாள். கோபத்தில் வார்த்தைகளை அதிகமாய் வீசிவிட்டது புரிந்தது.

“இல்லை மாறா, எனக்கும் அவருக்கும் பிரச்சனைன்னா, அத்தை மாமா பேசுவாங்க. அவங்க பேசுனா, அது அவரோட அம்மா, அப்பான்னு போய்டும். ஆனால், நீங்க பேசுனா, அவரோட ஈகோ டச் ஆகும் ண்ணா‌‌. அதுவும் இல்லாம, அவருக்கு உங்க மேல இருக்க அபிப்ராயம் சட்டுன்னு இறங்கிடலாம். நான் முன்னாடி சொன்னதுதான், எனக்காக நீங்க இறங்கிடக் கூடாதுன்னு...” கூறிவிட்டு ஒரு பெருமூச்சை வெளிவிட்டவள், பொத்தென இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

“நீ என்கிட்ட இவ்வளோ பொறுமையா பேசுற இல்ல, அதை அம்மாகிட்ட சொன்னா என்ன குறைஞ்சா போய்டுவ. இப்போ எல்லாம் உன்கிட்ட சுத்தமா நிதானம் இல்லை. யார் என்னென்னு பார்க்காம, எடுத்தெறிஞ்சு பேசுற. நீ பேசுனது அம்மாவைக் காயப்படுத்தி இருக்கும்னு உனக்குத் தோணலையா? அவங்க நீ நல்லா இருக்கணும்னுதான் ஒவ்வொன்னா, பார்த்து பார்த்து செய்றாங்க. அவங்ககிட்டே உன் கோபத்தை எல்லாம் கொட்டிட்ட. பெருசா அம்மா, அப்பான்னு சொல்றது எல்லாம் வெறும் வாய் வார்த்தைக்கு தானே மலர்?” மாறன் பேசியதும் மலருக்கு விழிகள் பனித்துவிட்டன.

தவறென தெரிகிறது. ஆனால், கோபத்தை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. மாறனின் பேச்சில் மனம் முழுவதும் பாரமேறிக் கொண்டது. உதட்டைக் கடித்து அழுகையை அடக்கினாள்.

“சாரி மாறா... அது... அது கோபத்துல பேசிட்டேன்...” என்ற மலர்விழி குரலும் விழிகளும் கலங்கிப் போயிருந்தன.

“என்கிட்ட சாரி கேட்டு எந்தப் பயனும் இல்லை. இனிமே, அம்மான்னு இல்லை, யாரா இருந்தாலும் இப்படி எடுத்தெறிஞ்சு பேசாத. அவ்வளோதான் நான் சொல்லுவேன்!” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட, விழிகளில் தொக்கி நின்ற விழிநீர் கன்னத்தை நனைத்தது.

லோகநாயகியிடம் அப்படி பேசியது தவறு என மூளையும் மனதும் நிதனாத்தை இழந்த தன்னை சாட, மீண்டும் அழுகை வந்தது. கண்ணைத் துடைத்துவிட்டு வெளியே வந்து தனாவின் அலைபேசியை அவன் கையில் வைத்தவள், அறைக்குள் நுழைந்தாள்.

அவர்கள் பேசட்டும் என தனா அப்போதே வெளியே வந்திருந்தான். மலர்விழி அழுதிருக்கிறாள் என அவளது முகம் காட்டிக் கொடுத்தாலும், அவளை சமாதானம் செய்ய மனம் வரவில்லை. தன்முனைப்பு தடுத்துவிட, சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தவன், அறைக்குள் நுழைந்தான்.

அவனைப் பார்த்தவள் விழிநீரைத் துடைக்க, இவனுக்கு மனம் கேட்கவில்லை. தாயின் அறைக்குச் சென்றவன், “ம்மா... விழியை வந்து பாரு. அழறா!” என அவரை தன் அறைக்குள்ளே அழைத்துச் சென்றவன், வெளியேறிவிட்டான்.

“மலர், என்னாச்சு டா, ஏன் அழற?” என லீலா வினவ, “ஒன்னும் இல்லை அத்தை...” என்றாள் அவர் முகத்தைப் பார்க்காது‌.

“அப்புறம் ஏன் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு?” என அவளது முகத்தை நிமிர்த்தினார் லீலா.

“வீட்டுக்குப் போய்ட்டு வரவா அத்தை?” என்றவள் விழிகள் மீண்டும் கலங்கின.

“ப்ம்ச்... வீட்டு ஞாபகம் வந்துடுச்சா? அதுக்கு ஏன் அழுகை? போய் அம்மா, அப்பாவைப் பார்த்துட்டு வா. ஆனால், தனியா போகக் கூடாது. தனாவைக் கூட்டீட்டுப் போ...” என்றவருக்குத் தலையை அசைத்தாள் மலர்விழி.
மாற்றுடை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

“தனா, அவளை அவங்க வீட்டுக்குக் கூட்டீட்டிப் போய்ட்டு வா டா...” என லீலா கூற, தலையை அசைத்தவன், மகிழுந்து சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். சில நிமிடங்களில் மலர் மகிழுந்தில் ஏற, அரைமணி நேரத்தில் இருவரும் சாரதியின் வீட்டை அடைந்தனர்.

சாரதிக்கு நடந்தது எதுவும் தெரியாது. அப்போதுதான் வேலை முடிந்து வந்திருந்தார்.
“மலர்... வாம்மா. வா. தனா உள்ள வாப்பா...” என அவர் அழைக்க, லோகநாயகியும் மாறனும் வெளியே வந்தனர்.

“வா டா... வா மலர்...” மாறன் கூற, லோகநாயகி சமையலறைக்குள் நுழைந்தார். சாரதிக்குத் தயாரித்த தேநீரில் மீண்டும் சிறிது பாலை ஊற்றி கொதிக்க வைத்தார்‌.

“என்ன தனா, எதுவும் முக்கியமான விஷயமா? இப்போ வந்து இருக்கீங்க?” என சாரதி வினவினார்.

“முக்கியமான விஷயம் எதுவும் இல்லை மாமா. விழி, உங்களை எல்லாம் பார்க்கணும்னு சொன்னா, அதான் கூட்டீட்டு வந்தேன்...” என மெலிதானப் புன்னகையுடன் தனஞ்செயன் கூறினான்.
சாரதி தலையை அசைத்தவர், அவனது தொழில் பற்றிய பேச்சிற்குத் தாவினார்.

மலர்விழி அவர்களிடமிருந்து விலகி, சமையலறைக்குள் சென்றாள். அவளைப் பார்த்த லோகு, “வா மலர், இதோ டீ போட்டுட்டேன்...” என்றார் சலனமில்லாமல். தாயின் வதனம் எப்போதும் போல இருந்தாலும், அவரது முகத்தை வைத்தே அகத்தைக் கணித்தாள் மகள்.

“ம்மா, சாரி மா...” என்றவளைப் பார்த்து அவர் சின்னதாய் சம்பிரதாயப் புன்னகை புரிய, இவளுக்கு அழுகை பொங்கியது.

“ம்மா...” என்றவள் அவரை இறுக அணைத்தாள். விழிகளிலிருந்து குபுகுபுவென நீர் வழிந்தது.

மகள் அழுகைப் பொறுக்காத லோகநாயகி, “ச்சு... என்ன மலர். எதுக்கு இந்த அழுகை?” என அவளது முதுகில் தட்டிக்கொடுத்தார். அவரை இறுக அணைத்துக்கொண்டாள். தான் பேசியது அவரை எந்தளவுக்கு வருத்தியிருக்கிறது என அவரது கலங்கிய முகத்திலே மகள் அறிந்துகொண்டாள்.

அழுகை சில நொடிகளில் நின்றதும், “ம்மா... அது ஏதோ கோபத்துல பேசிட்டேன் மா...” என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில். லோகநாயகியின் கரங்களை எடுத்துத் தன் கன்னத்தில்
வைத்துக்கொண்டாள். மனம் முழுவதும் பாரமாய் இருந்தது.

“பரவாயில்லை விடு டி. நான் உங்களுக்குள்ள சண்டை வரும்னு நினைச்சு எதையும் செய்யலை. நீ சந்தோஷமா இருக்கணும்னு தான் என் மனசு யோசிச்சுட்டே இருக்கும். கொஞ்சம் பயம் கூட, நீ வேண்டாம்னு சொல்லியும் கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டோமே! பொண்ணு வாழ்க்கை வீணாகிடுமோன்னு எல்லாரைப் போலவும் ஒரு அம்மாவா உன் வாழ்க்கையைப் பத்தின பயம்தான் மலர். அதனாலதான் நான் மாப்பிள்ளைக்கிட்டே பேசுனேன்...” என்ற லோகநாயகியைப் பார்த்தவளுக்குத், தன் மீது கோபம் வந்தது. அவரைப் பற்றி தெரிந்திருந்தும், தான் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது என தன்னையே திட்டிக் கொண்டாள்.

“ம்மா... நீ எதையும் யோசிச்சு குழப்பிக்காத மா. என்னால எல்லாத்தையும் ஹேண்டில் பண்ண முடியும் மா. என்ன, இதுதான் என் வாழ்க்கைன்னு மனசு ஏத்துக்க கொஞ்ச நாள் ஆகும் மா...” என்றாள் அவரை தேற்றும் விதமாக. மலரின் பேச்சில் இப்போது லோகநாயகியின் முகம் தெளிந்திருந்தது.

“உன்னோட டீயை ரொம்ப மிஸ் பண்றேன் மா...” என அவர் கொடுத்த தேநீரை சுவைத்தாள். லோகநாயகி மற்ற இருவருக்கும் தேநீரை கொடுத்துவிட்டு வந்தார்.

“மாறானைப் பார்த்துட்டு வரேன் மா...” என்றவள் அறைக்குள் நுழைய, கணினியில் ஏதோ செய்துகொண்டிருந்தான் மாறன். இவளது வரவை உணர்ந்தாலும், அவன் எதிர்வினை எதுவும் செய்யவில்லை. அவனின் கோபம் மலருக்குப் புரிந்தது.

மாறன் அவ்வளவு எளிதில் எல்லாம் மலரிடம் கோபம் கொள்ளமாட்டான். தாய், தந்தை திட்டினால் கூட, அவன்தான் தங்கைக்கு ஆதரவாய் எப்போதும் நிற்பான். அப்படிப்பட்டவன், இப்போது கோபமாய் இருக்கிறான் என்றால், தன் தவறு என்னவென அவளால் உணர முடிந்தது.

“மாறா... சாரி டா...” என்றாள் அவனுக்குப் பக்கவாட்டில் நின்று. அவனிடம் எதிர்வினை இல்லை. அதில் இவளுக்கு மீண்டும் கண்ணீர் வழிந்தது.

“மாறா... கோபத்துல பேசிட்டேன் டா...” என்றவளுக்கு விழிகளும் குரலும் கலங்கிப் போய் வெளிவந்தன. அவளது கண்களிலிருந்து வழிந்த ஒரு சொட்டு நீர் மாறன் கைகளில் பட்டுத் தெறிக்கவும், “ப்ம்ச்...” என்றவன் நிமிர்ந்து தங்கையைப் பார்த்தான். அவனைத்தான் மலரும் பார்த்திருந்தாள்.

“ச்சு... இப்போ எதுக்கு இந்த ட்ராமா?” என்றவன் அவளை இழுத்து அணைக்க, “ஆமா... நான் ட்ராமாதான் டா போட்றேன்...” என முறைத்துக்கொண்டாள் மலர்விழி.

“ஹக்கும்... அதை நீ சொல்லித்தான் தெரியணும்னு அவசியம் இல்லை...” என மாறன் புன்னகைக்க, “போடா...” என இவள் சிணுங்கினாள். தங்கையின் தலையைத் தடவிக் கொடுத்த மாறன், மீண்டும் அவளது தவறைச் சுட்டிக்காட்டிப் பேசினான்.
தலையை மட்டும் அசைத்துக் கேட்டுக்கொண்டாள்.

ஒரு வழியாய் அண்ணன், தங்கை சமாதானம் அடைந்திருந்தனர். பின்னர் சிறிது நேரம் பேசிவிட்டு, மலர்விழியும் தனஞ்செயனும் வீட்டிற்குக் கிளம்பினர்.
 
Well-known member
Messages
559
Reaction score
389
Points
63
இருவருக்கும் பொறுமையே இல்லை
 
Top