• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,259
Reaction score
3,690
Points
113
எண்ணம் – 7

மலர்விழியின் பேச்சில் பல்லைக் கடித்த தனா, அறைக் கதவை சாற்றிவிட்டு அவளிடம் விரைந்தான். அழகுகலை நிபுணர் எப்போதோ விடை பெற்றிருந்தார்.

மலர் கண்ணாடியைப் பார்த்தவாறே அமர்ந்து இருந்தாள். அவளது கழுத்திலிருந்த நகைகள் அனைத்தும் கனமாய் மனதில் கனத்தை ஏற்றின. ஏனோ அதை அணிய அவளுக்கு சுத்தமாய் விருப்பம் இல்லை. சில நொடிகளில் கண்ணாடியின் வழியே தனஞ்செயனின் கோபமான முகம் தெரிய, நெற்றியைச் சுருக்கி அவனைப் பார்த்தாள்.

“ஏன் விழி இப்படி சீப்பா பிகேவ் பண்ற?” தனா கோபத்தில் முகத்தைச் சுளித்தான்.

‘என்ன?’ எனப் புரியாது அவனை நோக்கினாள் இவள்.

“தேவி அத்தை அப்படி பேசுனது தப்புதான். அதுக்காக அவங்க மேல இருக்க கோபத்தைக் குழந்தைங்க மேல காட்டுவீயா? ஹவ் சீப் யூ ஆர்?” அருவருப்பாய் கூறியவனைப் பார்த்து கோபம் வந்தாலும், அதை முகத்தில் காட்டாது உதட்டைக் கேலியாய் வளைத்தாள்.

“ஆமா, நான் சீப்பான பொண்ணுதான்!” என்றாள் கசந்த புன்னகையுடன். என்றுமே இவனால் என்னைப் புரிந்து கொள்ள முடியாது என மனம் கேலி செய்தது, வலித்து தொலைத்தது.

“விழி, நான் உன்கிட்ட இருந்து இதை எக்ஸ்பெக்ட் பண்ணலை...” என்றவன், “இதுதான் லாஸ்ட். குழந்தைங்களை எதுவும் சொல்றதைப் பார்த்தேன். அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன். குழந்தைங்க டி அவங்க. ஆசையா உன்கிட்ட பேச வராங்க. அவங்ககிட்ட இப்படி பிகேவ் பண்ண எப்படி டி மனசு வருது?” எனக் கோபமாய் ஆரம்பித்து ஆற்றாமையாய் முடித்தான். ஒரு வார்த்தை அவனிடம் பதில் பேசவில்லை மலர்விழி. அழுத்தமாய் அவனை ஒரு பார்வை மட்டும் பார்த்தாள்.

“பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...” என்றவன் கதவை அடித்து சாற்றிவிட்டு வெளியேறினான்‌. கணவனைப் பார்த்து மலர்விழியின் இதழ்கள் விரக்தியாய் வளைந்தன.

சிறிது நேரத்திலே,
“மலரே! என்ன மேக்கப் ஓவரா இருக்கு?” என கரண் உள்ளே நுழைய, ஊர்மிளாவும் பின்னே நுழைந்தாள். அவர்களைப் பார்த்ததும் இவளுக்குப் புன்னகை பிறந்தது.

“என்னடி நிஜமாவே அழகா இருக்க. இப்படி அழகா இருப்பன்னு தெரிஞ்சிருந்தா, நானே உன்னைக் கட்டியிருப்பேனே!” என்று கிரண் கண்ணடிக்க, “ஹக்கும்... இருக்கும் போது ஒன்னுத்தையும் காணும். இல்லாதப்போ வாய்க்கு ஒன்னும் குறை இல்லை!” என ஊர்மிளா இழுத்தாள்.

“இவளை...” என கரண் ஊர்மி தலையில் கொட்ட வர, அவனது கையை சரியாய் அந்நேரம் உள்ளே நுழைந்த மாறன் தடுத்தான் . அவனது செயலில், “ஹ்க்கும்... ம்க்கும்...” என மலர்விழி தொண்டையைக் கனைத்தாள். அதில் அசடு வழிந்த மாறன், தங்கையைப் பார்த்து சிரித்து வைத்தான். ஊர்மிளா மாறனைப் பார்த்து மெல்லிய சிரிப்பை உதிர்த்தாள்.

“நாங்களும் இங்க மனுஷங்க இருக்கோம் மாறா...” கரண் கூற,
“மனுஷன் லிஸ்ட்ல நீயே உன்னை சேர்த்துக்க கூடாது டா. அதை நாங்க சொல்லணும்!” மாறன் கூற்றில் பெண்கள் இருவரும் சிரித்தனர்.

சிறிது நேரத்திலே அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பினர். மலர்விழியும் தனஞ்செயனும் ஒரே மகிழுந்தில் அமர்ந்து இருந்தாலும், இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்கவில்லை.

மண்டபத்தின் வாயிலிலே “தனஞ்செயன் வெட்ஸ் மலர்விழி” என எழுதியிருக்க, இவளுக்கு கேலியானப் புன்னகை வந்தது. பத்து நாட்களுக்கு முன்னே இவனுடைய பெயர் வேறு ஒரு பெண்ணுடன் பொறிக்கப்பட்டிருந்தது என்பதை நினைத்து.

இருவரும் மேடையேறி நிற்க, உறவினர்கள் ஒவ்வொருவராக வருகைத் தர ஆரம்பித்தனர். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கூடத் தொடங்கியது.

வந்தவர்கள் மணமக்களை வாழ்த்திப் பரிசு பொருட்களை வழங்கி, புகைப்படத்திற்கு நின்று என நிகழ்ச்சி சென்றுகொண்டிருந்தது. இருவீட்டு பெற்றவர்களும் வந்தவர்களை வரவேற்க, உணவு உண்ண அழைத்துப் போக எனப் பம்பரமாய் சுழன்றனர்.

ராமலிங்கத்தின் தொழில் முறையில் நிறைய பேர் வருகை புரிய, மகனையும் மருமகளையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

தனாவின் கல்லூரி நண்பர்களும் மலரின் கல்லூரி நண்பர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். சிறிது நேரத்திலே இருவரும் உணவு உண்டு வர, புகைப்படக்காரர் அவர்களை ஜோடியாக நிற்க வைத்துப் பலவித கோணங்களில் படமெடுத்தார். நெருக்கமாக நிற்க சொன்ன நேரங்களில் மலர் முகத்தை சுளிக்க, இவன் அவளைப் பார்த்து முறைத்தான்.

“சார், அவங்க இடுப்புல கையை வச்சு குனிஞ்சு முகத்தைப் பாருங்க. மேடம் அப்படியே நீங்க நிமிர்ந்து அவர் முகத்தைப் பாருங்க...” என்று புகைப்படமெடுப்பவர் கூற, “அண்ணா, அதெல்லாம் வேணாம்!” என்று தனஞ்செயன் மறுத்துவிட்டான். மலரும் முடியாது என்பது போல நிற்க, நண்பர்கள் அனைவரும் இவர்களை நிற்க வைத்துவிட்டனர். வெற்றிடையில் பதிந்த கரம் மலர்விழியை பேச்சடைத்துப் போக செய்தது. அவனை நிமிர்ந்து முறைத்துவைத்தாள்.

“மேடம் சிரிங்க...” அவர் கூற, இன்னும் அவளை நெருங்கி நின்றான் தனா. அதைப் பொறுக்க முடியாது பல்லைக் கடித்தவள், கரத்தை உயர்த்தி அவனைத் தள்ளவிடச் சென்றாள். அவளது செயலை உணர்ந்தவன், உயர்ந்தக் கையை தன் முதுகில் கோர்த்து அவளது முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பினான். முறைத்தபடியே மலரும் கட்டாயமாய் சிரித்த தனாவும் புகைப்படத்தில் விழுந்தனர்.

“ஓகே...” எனப் புகைப்படக்காரர் கூறவும், அவனிடமிருந்து யார் கருத்தையும் கவராது விலகியவள், “இந்த ஒட்டுறது, உரசுறது இந்த வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க...” என்றாள் ஆத்திரமாய். வார்த்தைகள் மெலிதாய் வந்தாலும் கோபம் தெறித்தது. அவளை முறைத்து வைத்த தனா,
‘ஆமா! இவளை ஒட்டிக்கிறதுக்கு எனக்கு ரொம்ப ஆசை!’ என மனதிற்குள் கூறி, பல்லைக் கடித்தான்.

மீண்டும் உறவினர்கள் மேடையேறி வரத் துவங்க, இருவரின் கவனமும் அங்கே குவிந்தது. தனாவின் உறவுக்கார பெண்மணிகள் இரண்டு பேர் மேடையேறினர்.

“ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லா இருக்குய்யா... இந்த ஞானம் மகளுக்குக் கொடுத்து வைக்கலை!” என அவர் கூறியதும் தனாவின் முகம் மாறிவிட்டது. மலர்விழியும் அதை கவனித்துக்கொண்டுதான் இருந்தாள்‌.

“ஆமா, மாப்பிள்ளைகிட்டே என்ன குறை கண்டாளோ?” இரண்டாவது பெண்மணி கூறியதும், தனாவின் முகம் இறுகிப் போனது‌.

அதைப் பார்த்த மலர், “ஏன் ஆன்ட்டி, குறையிருந்தாதான் பொண்ணு கல்யாணம் அன்னைக்கு ஓடுமா? அந்தப் பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லைனாலும் ஓடும். அதனால மத்தவங்களை காயப்படுத்துற மாதிரி பேசாதீங்க!” என்றாள் தன் கடைசி சொட்டு பொறுமையை இழுத்துப் பிடித்து. சபை நாகரீகம் அவளைப் பேசவிடவில்லை.

“என் மருமகளுக்கு கோபத்தை பாரு... நான் எதார்த்தமா சொன்னேன் மா. இருந்தாலும் புருஷனுக்கு இப்போவே இவ்வளோ சப்போர்ட்டா?” என நொடித்துவிட்டு அவர் செல்ல, தனா மலரைத் திரும்பி பார்த்தான். அவள் பார்வை கீழே இருந்த கூட்டத்திடமிருந்தது. அவளது பாவனைகளை வைத்தே கோபத்தை அடக்கிக் கொண்டிருக்கிறாள் என கணவனுக்கும் புரிந்தது.

நேரம் பதினொன்றை நெருங்கிவிட, எல்லா உறவினர்களும் விடை பெற்றிருக்க, இவர்களும் வீட்டிற்கு கிளம்பினர். லீலா மலரின் குடும்பத்தையும் தேவியையும் தன் வீட்டிற்கு பின்னிருந்த விருந்தினர் வீட்டில் தங்க வைத்தார்‌.

தேவி கணவனிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு தூங்கச் செல்ல, அவரிடமிருந்து இருவரும் இங்கே வந்துவிட்டனர்.
சமையலறையில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்தாள் மலர். இப்போதுதான் குளித்து முடித்து இரவு உடையை அணிந்திருந்தாள். தண்ணீர் தாகமெடுக்க, சமையலறைக்கு வந்தாள். எல்லோரும் உறங்கச் சென்றிருந்தனர்.

சமையலறை வாயிலில் குட்டியாய் இரண்டு உருவம் தெரிய, இவளுக்குப் புன்னகை வந்தது.
“அபி, கிருத்தவ்...” என அவர்களை அழைத்தாள். ஏனோ அந்த இரண்டு சிட்டுகளுக்கும் மலரைப் பிடித்துப் போயிற்று. இங்கு வந்தாலே, அவள் பின்னேதான் சுற்றுகின்றனர். மலர் பொதுவாக குழந்தைகளைத் தூக்கி கொஞ்சவோ அவர்களிடம் விளையாடவோ ஆர்வம் பெரிதாய் காட்ட மாட்டாள். அவளது இயல்பும் கூட அப்படித்தான். ஆனால், இந்த ரெண்டு வாண்டுகளும் தன்னையே சுற்றி வர, அவளால் தவிர்க்க முடியவில்லை. தயங்கி தயங்கி இருவரும் அருகில் வந்தனர்.

“சாரி அக்கா, அம்மா உங்களை காலைல திட்டிட்டாங்க இல்ல?” கிருத்தவ் கூற, அபி தலையை அசைத்தாள்.

“அச்சச்சோ, பரவாயில்லை டா குட்டி!” என அவர்கள் கன்னத்தைப் பிடித்து கிள்ளியவள், “உங்களுக்காக சாக்லேட் வாங்கி வச்சேன். இருங்க எடுத்துட்டு வரேன்!” என அறைக்குள்ளே நுழைந்து இன்னெட்டுகளை எடுத்து வந்து கொடுத்தாள்.

“தாங்க் யூ அக்கா...” என இருவரும் அவளது கன்னத்தில் முத்தமிட்டனர்.

“சரி, சரி. டைமாச்சு. ரெண்டு பேரும் போய் படுங்க. உங்க அம்மா தேடப் போறாங்க...” என்றாள்.

“இல்லை, அம்மா தூங்கிட்டாங்க. அவங்களுக்குத் தெரியாமதான் வந்தோம்...” அபி அரிசி பற்கள் தெரிய புன்னகைத்தாள். அதில் இவளுக்கும் புன்னகை வந்தது.

“அம்மாகிட்ட சொல்லாம எங்கேயும் போகக் கூடாது. அது தப்புடா!” என இவள் கண்டிக்க, “அம்மாகிட்ட சொன்னா உங்களைப் பார்க்க விட மாட்றாங்களே! என்ன செய்ய? திட்டுறாங்களே!” என கிருத்தவ் கன்னத்தில் கையை வைத்தான். என்ன பதில் கூறுவது என மலருக்குத் தெரியவில்லை

“ஹம்ம்... உங்க அம்மாகிட்ட சொல்லி பெர்மிஷன் கிடைச்சாதான் எங்கேயும் போகணும். இப்போ ரெண்டு பேரும் கிளம்புங்க!” விருந்தினர் வீடு வரை சென்று அவர்களை விட்டுவிட்டு வந்தாள்‌. இத்தனை நேரம் நடந்த அனைத்தையும் தனாவும் கவனித்தான். காலையில் ஏன் மலர் அப்படி நடந்துகொண்டாள் என இப்போது அவனுக்குப் புரிய, தன்னையே நொந்துகொண்டான்‌. கண்ணாடி முன்னே நின்றிருந்த மலர் கொண்டையை அவிழ்த்துவிட்டாள். பின்னர் காதிலிருந்த தோடை அகற்றினாள். படுக்கும்போது அது அதிகமாய் அவளை தொல்லை செய்தது. லீலாதான் அந்த தோடை அவளிடம் கொடுத்திருந்தார்.

அவளது செய்கைகளைக் கவனித்த தனாவுக்கு, மேடையில் தனக்காக மலர் பேசியது நினைவிற்கு வந்தது. அதற்கு நன்றி கூற வேண்டும் என நினைத்திருந்தவன், “விழி...” என அழைத்தான். அவளிடம் பதிலில்லை. எதிர்பார்த்த ஒன்று தானே? என நினைத்தவன், “விழி, நான் உன்கிட்ட தான் பேசுறேன்‌...” என்று எழுந்து அவளருகே சென்று நின்றான்.

தன் பின்னே நின்றவனை பொருட்டாய்க் கூட மதிக்கவில்லை மலர்விழி. அவளை ஒட்டியபடி நின்றவனின் வாசம் நாசியை நிறைக்க, முறைத்துக்கொண்டே திரும்பி அவனிடமிருந்து கவனமாய் தள்ளி நின்றாள்.

“என்ன வேணும்?” கோபமாய் அவள் வினவ, இவனுக்குப் மென்னகை பிறந்தது. இஷ்டமே இல்லையெனினும் மலரின் மனம் அந்தப் புன்னகையை சேமித்தது.

“என்ன கேட்டாலும் கிடைக்குமா?” என்றவனின் குறும்பான பேச்சில் ஒரு நொடி அதிர்ந்தவளின் முகம் கோபத்தில் தகிக்க, “இந்த மாதிரி பேச்செல்லாம் என்கிட்ட வேணாம்...” என்றாள் வார்த்தைகளை கடித்து துப்பியபடி.

“சாரி... சாரி...” என காதில் கையை வைத்து கண்களை சுருக்கியவனிடமிருந்து பார்வையை நகர்த்தியவள், அவனை தவிர்த்தாள்.

“சரி, தேங்க்ஸ்... அதை சொல்லத்தான் கூப்ட்டேன்‌. எனக்காக நீ பேசுனதுக்காக...” என்றவன் அவள் முன்னே சமாதானக் கொடியைப் பறக்கவிட்டு கையை நீட்டினான். அவளைப் புரிந்து கொள்ள இந்த நட்பு என்னும் ஆயுதம் பயன்படும் என மூளையும் மனதும் ஆராய்ந்து முடிவெடுத்திருந்தது.

அவனையும் கையையும் மாறி மாறி பார்த்தவள், “அந்த இடத்துல யாரா இருந்தாலும் நான் இப்படித்தான் பேசி இருப்பேன்...” என கத்தரிப்பது போல பேசி, படுக்கச் சென்றுவிட்டாள்.

‘உனக்காக என்று நான் எதையும் செய்யவில்லை!’ என்ற அர்த்தம் அதில் பொதிந்துதான் இருந்தது. அதைப் புரிந்து கொண்டவனும் சிரித்தவாறே தலையை இருபுறமும் அசைத்துவிட்டு உறங்கச் சென்றான். மறுநாள் உறவினர்கள் நண்பர்கள் என அவரவர் வீட்டிற்கு விடை பெற்றனர். லோகநாயகி மகளிடம் அறிவுரை பொழிந்துவிட்டு செல்ல, அதையெல்லாம் அவள் காதில் கூட வாங்கவில்லை என்பது உண்மை.

வரவேற்பு முடிந்து ஓரிரு நாட்கள் கழித்து கல்லூரி செல்லலாம் என நினைத்திருந்த மலர்விழி, அப்போதைக்குத் தேவையான புத்தகங்களை மட்டும் எடுத்து வந்திருந்தாள். மற்றொரு நாள் சென்று அனைத்தையும் எடுத்து வரவேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

காலையிலே எழுந்து குளித்து கல்லூரி செல்லத் தயாராகி வந்தவளை புன்னகையுடன் ஏறிட்டார் லீலா‌.

“எல்லாத்தையும் மறக்காம எடுத்துட்டீயான்னு பாரு மலர்...” என்றவர் மகனுக்கும் மருமகளுக்கும் உணவைப் பரிமாறினார்.

“எடுத்துக்கிட்டேன் அத்தை...” என்றவள் உண்டுவிட்டு கிளம்ப,
“விழி, காலேஜ்க்கு எப்படி போவ? தனா ட்ராப் பண்ணட்டுமே...” என வினவினார் லீலா.

“இல்ல அத்தை, மாறன் என் ஸ்கூட்டீயை எடுத்துட்டு வந்து தரேன் சொன்னான். இப்போ பஸ் ஸ்டாப்ல இருப்பான்‌. அவன் கூடவே போய்ட்டு, வரும்போது ஸ்கூட்டில வருவேன்...” என அவள் பதிலளிக்க, தலையை அசைத்தார் பெரியவர். அவரிடம் புன்னகைத்துக் கிளம்பியவளின் பார்வை மருந்துக்கும் தனாவின் புறம் திரும்பவில்லை. ஆனால், தனஞ்செயன் அவளைத்தான் நீண்ட நேரமாய்ப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவனின் பார்வைத் தன்னை துளைத்தாலும், அதை கண்டு கொள்ளாது கிளம்பிவிட்டாள் பெண்.

அவள் கூறியது போலவே மாறன் பேருந்து நிலையத்தில் காத்திருந்தான். செல்லும் வழியில் தனது அலுவலகத்தில் மாறன் இறங்கிக் கொள்ள, மலர் கல்லூரியை நோக்கிச் சென்றாள்.

அவளது தாய் வீட்டிலிருந்தே கல்லூரிக்குச் செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும். இப்போது தனா வீட்டிலிருந்து கல்லூரி செல்ல ஒன்றரை மணி நேரங்களாகிற்று. தாமதமாகத்தான் சென்றாள். விடுப்பு எடுத்தற்காக துறைத் தலைவரைப் பார்த்துவிட்டு வகுப்பிற்குச் சென்றாள்.

நண்பர்கள் அனைவரும் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். கடந்த பத்து நாட்களாக என்ன நடந்தது? ஏன் திடீர் திருமணம்? எனப் பல கேள்விகளால் அவளைத் துளைத்தெடுக்க, சிலவற்றிற்கு உண்மையாகவும், சிலதை மறைத்தும் பேசினாள்.

கல்லூரி முடிந்து போக்குவரத்து நெரிசலில் வீட்டை அடைய ஏழு மணியாகிவிட்டது. சோர்வாக உள்ளே நுழைந்த மலர்விழியைப் பார்த்த லீலாவதிக்கு லோகநாயகி பேசியது நினைவு வந்தது. கணவரிடம் அதை பகிர்ந்திருக்க, அவரும் சரியென்றுவிட்டார்.

இன்று காலையில் அழைத்திருந்த லோகநாயகி சிறிது நேரம் பொதுவாய்ப் பேசிவிட்டு, பின் மலரின் படிப்பைப் பற்றிய பேச்சிற்குத் தாவினார்.

“இங்க இருந்தே காலேஜ் போய்ட்டு வந்து ரொம்ப டயர்டாகிடுவா மலரு. இப்போ அங்க இருந்து போய்ட்டு வர்றது கொஞ்சம் சிரமமாய் இருக்கும் அவளுக்கு...” என லோகு கூற, லீலாவும் யோசித்தார்.

“இன்னும் காலேஜ் முடிய ஒரு எட்டு மாசம் இருக்குன்னு சொன்னா, லோகு. பேசாம, இந்தக் கொஞ்ச நாளைக்கு மலருக்கு ஓகேன்னா, அவளை ஹாஸ்டல் கூடப் பார்க்க சொல்லலாம். ஏன்னா, இவ்ளோ நேரம் ட்ராவல் பண்ணா புள்ளை ஓஞ்சு போய்டுவா” லீலாவும் வருத்தத்துடன் கூறினார்.

“ஹக்கும்... போச்சு போங்க லீலா. நீங்களே நல்லா ப்ளான் போட்டுக் கொடுத்துடாதீங்க. அதை சொல்லத்தான் நான் கூப்ட்டேன். ஏற்கனவே ரெண்டு பேருக்கும் சரியான புரிதல் இல்லை. இப்போ போய் அவளை ஹாஸ்டல் அனுப்பிட்டா, அப்புறம் ஒருத்தரை ஒருத்தர் எப்போ புரிஞ்சுப்பாங்க. அதான் என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு, உங்களுக்கு ஓகேன்னா, அதை செயல்படுத்தலாம்...” என்றார் லோகநாயகி. கடைசியாய் கூறும்போது அவரது குரல் தயங்கியது.

“என்ன தயக்கம் லோகு, சும்மா சொல்லுங்க. ஒத்து வந்தா அதையே பண்ணலாம். இவங்க ரெண்டு பேருக்கும் இடையில அண்டர்ஸ்டான்டிங்கும் வரும்...” அவரைப் பேச ஊக்கினார் லீலா.

“என்ன டா கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் கூட ஆகலையே! இப்படி பேசுறாளேன்னு நினைக்காதீங்க லீலா. மாப்ளையோட ஆபிஸ்க்கும் பக்கம் இருக்க மாதிரி, இவளுக்கும் காலேஜ் கிட்ட இருக்க மாதிரி ஒரு இடத்துல தனியா அவங்களை குடி வைக்கலாம். ஒரு எட்டு மாசம் மட்டும்தான். இந்த நேரத்துல ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுப்பாங்க. ஏன்னா, கல்யாணம் திடீர்னு நடந்து போச்சு. அதுக்காக தான் சொல்றேன். மத்தபடி தப்பான எண்ணம் இல்லை...” என்றார் லோகு.

“இதுல என்ன இருக்கு லோகு. நான் தனா அப்பாகிட்டே பேசுறேன். அவருக்கு ஓகேன்னா, ரெண்டு பேரையும் தனியா வச்சுடலாம். நீங்க சொன்ன மாதிரி அவங்களும் வாழ்க்கையை புரிஞ்சுப்பாங்க. மலர் வேற தனாகிட்டே முகம் கொடுத்துக் கூட பேசுறது இல்லை...”

“அவ அப்படியா பண்றா லீலா. நான் ஃபோன் பண்ணி சொல்றேன். கொஞ்சம் பிடிவாதம் அதிகம் அவளுக்கு...” லோகு கவலையான குரலில் கூறினார்.

“அட! அதெல்லாம் ஒன்னும் வேணாம் லோகு. என் மருமக கெட்டிக்காரி, புத்திசாலி. என்ன திடீர்னு கல்யாணம் ஆனதும் இப்படி இருக்கா, அவளே சரியாகிடுவா...” என்று அழைப்பைத் துண்டித்தார்.

லோகு கூறியதே அவரது செவிகளில் ஓடிக்
கொண்டிருந்தது. ஆனால், மகனை தங்களால் பிரிந்து இருக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. தனஞ்செயன் ஒரே மகனாகப் போய்விட, இதுவரை அவனை தனியாய் எங்கேயும் தங்கவிட்டது இல்லை. இப்போது அவனை தனியாய் அனுப்ப மனம் வரவில்லை. கணவரிடம் பேசியிருந்தார் லீலா. யோசித்துப் முடிவை எடு, எதுவென்றாலும் எனக்குச் சம்மதம் என்பதைப் போல ராமலிங்கம் கூறிவிட அதை மறந்து போனார் பெரியவர்.

இப்போது மலர் அத்தனை சோர்வாய் உள்ளே நுழைந்ததும், தாயாய் லோகநாயகியின் கவலைப் புரிந்தது அவருக்கு. சரி சிறிது நாட்கள் அவர்கள் தனியாக இருக்கட்டும் என லீலா தன் மனதை மாற்றிக்கொண்டார்.

முகம் கழுவி உடை மாற்றி வெளியே வந்தாள் மலர்.
“என்ன மலர், காலேஜ் எப்படி போச்சு?” என வினவியவாறே லீலா அவளது கைகளில் தேநீரை திணித்தார்.

அவரை நன்றியாய் பார்த்தவளுக்குத் தாயின் நினைவு வந்தது. அவரும் இப்படித்தான் கல்லூரி முடிந்து மகள் நுழைந்ததும் அவளது கைகளில் தேநீர் கோப்பையைத் திணிப்பார்‌.

“ரொம்ப தேங்க்ஸ் அத்தை, செம ட்ராஃபிக். கீங்கீங்ன்னு ஹாரன் சத்ததுல தலை வலியே வந்துடுச்சு!” என்றவாறு தேநீரை சுவைத்தாள். அவள் குடித்து முடிக்கும்வரை பொறுமை காத்தவர், “மலர், தனிக்குடித்தனம் பத்தி என்ன நினைக்கிற?” என வினவினார்.

லேசான ஆச்சரியம் பொதிந்த பார்வைப் பார்த்தவள், “ஏன் அத்தை, உங்க மகனை தனிக்குடித்தனம் கூட்டீட்டுப் போய்டுவேன்னு பயப்படுறீங்களா? சத்தியமா எனக்கு அந்த எண்ணம் இல்லை. எனக்கு உங்களோட, மாமாவோட இருக்கத்தான் விருப்பம். இதோ, இப்போ நீங்க நான் வந்ததும் என் முகத்தைப் பார்த்து போட்டுக் கொடுத்த டீக்காகவே இங்க இருந்து நகரமாட்டேன்.
நீங்களா போன்னு சொல்ற வரை இந்த வீட்டை விட்டுப் போக மாட்டேன்! டோன்ட் வொர்ரீ அத்தை” என்று மலர் கேலியாய் சொன்னாலும் அதில் உறுதியிருந்தது.

“ச்சு... அதுக்கு இல்ல டி. நீ டெய்லி டூ ஹவர்ஸ் ட்ராவல் பண்ணி எப்படி போய்ட்டு வருவ? ரொம்ப கஷ்டம். டயர்டாகிடுவ!”

“அட! போங்க அத்தை. என் ஒருத்திக்காக எல்லாம் உங்கப் பையனை நீங்க தனிக்குடித்தனம் போகச் சொல்லுவீங்களா? அங்க ஒரு மணி நேரம் ட்ராவல். இங்க கூட அரைமணி நேரம். அவ்வளவுதானே? எனக்கு ஒன்னும் கஷ்டமா தெரியலை. அதுவும் இல்லாம, உங்கப் பையன் கண்டிப்பா சம்மதிக்க மாட்டாரு. போங்க போங்க...” என்றவளுக்குத் தனிக்குடித்தனம் போகும் எண்ணம் சுத்தமாய் இல்லை. அறைக்குச் சென்றுவிட்டாள்.

‘இந்தப் பொண்ணு சொன்னா கேட்க மாட்டா... அவன்கிட்ட பேசுவோம்!’ என்றுவிட்டார் லீலா.
தனா எட்டு மணிக்குதான் வேலை முடிந்து வந்தான்‌.

“என்ன டா, வேலை அதிகமா?” என வினவியவாறே அவன் கையிலிருந்தப் பையை வாங்கினார்.

“கொஞ்சம் மா. இப்போ ஃபார்மா கம்பெனி ஆர்டர். சொன்ன டேட்ல கொடுக்கணும். அதான் நான் கூடவே இருந்து பார்த்துக்க வேண்டியதாப் போச்சு...” என்றவன் காலணிகளை அகற்றிவிட்டு அறைக்குள் நுழைந்தான்.

“அத்தை, வெளிய ஹால்ல இருக்க டேபிளை உள்ள தூக்கிப் போட்டுக்கவா? உட்கார்ந்து படிக்க கம்பர்டபிளா இருக்கும்...” என மலர் வினவ, “இதென்ன கேள்வி மலர். நம்ம வீடு, எதுனாலும் எங்கேனாலும் மாத்திக்கலாம்...” என ராமலிங்கத்திடம் இருந்து பதில் வந்தது. அவர் கூற்றில் புன்னகைத்தவள், அந்த மேஜையை நகர்த்தி அறைக்குள் போட்டாள். படிக்க, எழுத என நிறைய இருந்தது. இன்னும் ஒரு வாரத்திற்காவது வேலை நெட்டி முறித்துவிடும் என எண்ணிக்கொண்டே எல்லாவற்றையும் மேஜை மீது எடுத்து வைத்தாள். தனா குளித்துவிட்டு வந்தான்.

“மலர், நீயும் வந்து சாப்பிடு. சாப்பிட்டு போய் படி...” என்று லீலா கூற, தனாவுடன் அவளும் உணவு உண்ண அமர்ந்தாள்.

நால்வரும் உண்டுகொண்டிருக்க, லீலாவிற்கு அப்போதுதான் நினைவு வந்தது. “தனா, நீயும் மலரும் கொஞ்ச நாள் தனியா வீடு பார்த்து இருக்கீங்களா?” என வினவினார். அவரை யோசனையாய் ஏறிட்டான் மகன்.

“அவ காலேஜ்க்கு இங்க இருந்து போய்ட்டு வர ரெண்டு மணி நேரம் ஆகுது டா. உனக்கும் ஆபிஸ் பக்கத்துல இருந்த மாதிரியும் இருக்கும். அவ படிப்பு முடியுற வரை அங்க பக்கதுல வீடு பார்த்துப் போங்க டா!” என்றார்.

“யோசிக்கிறேன் மா...” என்றவனின் பார்வை, மலரை மொய்த்தது.

அனைவரும் உண்டு முடிய, அறைக்குள் நுழைந்த மலர், தன் வேலைகளைக் கவனிக்கத் துவங்கினாள். அவள் பின்னே வந்த தனா, “விழி, நீதான் தனியா போகணும்னு அம்மாகிட்ட கேட்டீயா?” என வினவினான். அவனுக்குப் பதில் கூறாதவள், தன் புத்தகத்தைத் திறக்க, அவளுக்கு மறுபுறம் வந்து அதை பட்டென மூடியவன், “நான் கேட்ட கேள்விக்குப் பதில் வேணும்!” என்றான் கோபமாய்.

“ம்ப்ச்... உங்களோட அபத்தமான கேள்விக்குப் பதில் சொல்ல, என்கிட்ட நேரமும் இல்லை. எனக்கு விருப்பமும் இல்லை...” என்றவள் புத்தகத்தைத் திறந்தாள்.

“நீ சொல்லாம, அப்படியொரு எண்ணம் அம்மாவுக்கு எப்படி வந்து இருக்கும்? தனிக்குடித்தனம் போற நினைப்போட இருந்தா, அதை இப்பவே அழிச்சுடு. அந்த மாதிரி எண்ணம் இப்போ இல்லை, எப்பவுமே உனக்கு வரக் கூடாது. என் அப்பா, அம்மாவை விட்டு என்னால எங்கேயும் வர முடியாது!” என்றான் திட்டவட்டமாய். அவனது குரல் அவளைக் குற்றம் சாட்டியது.

நான் செய்யவில்லை எனக் கூறியும் இவன் நான் ஏதோ தவறு செய்ததைப் போல பேசுகிறானே என சீண்டப்பட்டவள், “ஓஹோ! உங்களால் உங்க அப்பா, அம்மாவை பிரிஞ்சு வர முடியாது. ஆனால், நான் மட்டும் எங்க அப்பா, அம்மாவை விட்டுட்டு உங்க வீட்ல இருக்கணும். இதெல்லாம் எந்த விதத்துல நியாயம். அதான் தனிக்குடித்தனம் போகலாம்னு முடிவெடுத்து இருக்கேன்!” எனறாள் நக்கலாக. அவன் பேச்சு இவளை மொத்தமாய் உசுப்பிவிட்டிருந்தது.

“விழி, நான் இப்போ சொல்றதுதான். தனிக்குடித்தனம் போகணும்னு நினைச்சா நீ போகலாம். ஆனால், அதுல நான் எங்கேயும் இருக்க மாட்டேன். நீ மட்டும் தனியா போக வேண்டியதுதான்...” என்றான் சீற்றமாக.

அவனை நக்கலாகப் பார்த்தவள், “ஓகே, பைன். நான் அத்தை கிட்ட சொல்லி தனி வீடு பார்த்துப் போறேன்...” என்று தோளைக் குலுக்கிவிட்டு, தன் வேலையைப் பார்க்கத் துவங்கினாள். அவளது நக்கலான பேச்சில் வந்த சினத்தை அடக்கியவன், ‘திமிரு பிடிச்சவ!’ என நினைத்து பல்லைக் கடித்தான்.

ஆனால், அவனறியவில்லை. மனைவி சொன்னதை செய்து முடித்து தன்னைப் பாடாய்ப் படுத்தப்போவதை.
 
Well-known member
Messages
559
Reaction score
389
Points
63
இப்படியே ஏறுக்கு மாறா இருங்க
 
Top