• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,269
Reaction score
3,715
Points
113
எண்ணம் – 3

மலர்விழிதான் முதலில் கண்விழித்தாள். எழுந்து கழிவறை சென்றுவிட்டு முகம் கழுவி வந்தாள். தன்னுடைய பையிலிருந்து துண்டை எடுத்து முகம் துடைத்தவாறே, கண்ணாடி முன்பு நின்றிருக்க, கழுத்தில் அணிந்திருந்த தாலி உடைக்கு வெளியே தொங்கியது. அதைதான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

கரங்கள் தாலியை ஒருமுறை தொட்டுத் தடவின. நேற்றைக்கும் இன்றைக்கும் உள்ள வேறுபாடு அவள் கழுத்திலிருந்த தாலிதான். மனம் லேசாய் கேலி செய்ய, உதட்டை வளைத்தாள்.

அவளது அரவத்தில் தனாவிற்கும் விழிப்பு வந்தது. எழாது படுத்தவாறே அவளின் செய்கையைப் பார்த்தான். 'எதுக்கு இந்த சிரிப்புன்னுத் தெரியலையே!' என யோசனையுடன் அவளை நோட்டமிட்டான்.

புது இடத்திற்கு வந்ததை ஒரு சதவீதம் கூட மலர்விழியின் முகமும் அகமும்
பிரதிபலிக்கவில்லை. தாலியை எடுத்து சட்டைக்குள்ளே போட்டாள். துவட்டிய துண்டை ஜன்னலில் காய வைத்துவிட்டு துணிப்பையைக் கட்டிலுக்குக் கீழே தள்ளினாள். தனஞ்செயன் இரவு சரியாய் அவளை கவனிக்கவில்லை. இப்போது நன்றாய் உற்றுப் பார்த்தான்.

முட்டிக்குக் கீழ்வரை கால்சராயும், தொளதொளவென மேலுடையும் போட்டு இருந்தாள். தூக்கிக் கட்டிய கொண்டை, நெற்றியில் ஒரு பொட்டு. கழுத்தில் தான் கட்டிய தாலி என அவன் யோசனையுடன் அவளைப் பார்க்க, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வெளியே சென்றுவிட்டாள். இப்போதுதான் இவனுக்கு மூச்சே வந்தது. எழுந்து அமர்ந்தவன், தானும் கூடத்திற்கு வந்தான்.

மலர்விழி வருவதைப் பார்த்த லீலா, “வா மலர்... டீ குடி” என்று பணியாட்களை தேநீர் எடுத்து வரச் சொல்லினார். அவருடன் அமர்ந்துவிட்டாள் பெண்.

“நைட் நல்லா தூங்குனீயா மலர்? புது இடம் தூக்கம் வந்துச்சா?” என அவர் கேட்டுக்கொண்டிருக்க, ‘கும்பகர்ணி மாதிரி தூங்குனா மா!’ என மனதிற்குள் கூறியவாறு வந்து சேர்ந்தான் தனஞ்செயன்.

“கொஞ்சம் டயர்ட் அத்தை. அதான் நல்லா தூங்கிட்டேன்!” என்றவள், தேநீர் வரவும், அதை வாங்கி குடித்தாள். லேசாய் தலைவலி வந்திருக்க, இப்போது தேநீர் பரமசுகமாய் இருந்தது. அவள் ரசித்துப் பருகுவதைக் கவனித்துக்கொண்டு தான் இருந்தான் தனஞ்செயன்.

“காலைல சாப்பிட என்ன வேணும் மலர், பூரி சுடவா? உனக்குப் பிடிக்குமே!” எனக் கேட்டவரை சற்றே ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். இத்தனை ஆண்டுகள் கடந்தும் தன்னுடைய விருப்பத்தை அவர் நினைவில் வைத்திருப்பதை நினைத்துப் புன்னகைத்தவள், “எதுனாலும் ஓகேதான் அத்தை. உங்க இஷ்டம்” எனப் பதில் இயம்பினாள்.

“சரி, அப்போ பூரியே போடலாம்” என்றார் லீலா.

“அத்தை, எனக்கு சமைக்கத் தெரியாது...” இவள் தயக்கமாய் கூற, லீலாவிடம் மெல்லிய புன்னகை பிறந்தது.

“அட! பரவாயில்லை. கத்துக்கலாம் மலரு‌. ஒன்னுக்கு ரெண்டு சமையல்காரங்க வீட்ல இருக்காங்க. அப்புறம் என்ன, இன்னும் நீ படிச்சே முடிக்கலை. பார்த்துக்கலாம்...” என்று அவர் எளிமையாய் கூறிவிட, தலையை மட்டும் அசைத்தாள் மலர்.

“சரி, இன்னைக்கு என் மருமகளுக்கு நான் பூரி போட்றேன். நீ போய் குளிச்சுட்டு வா” என்று அவர் சமையலறை நோக்கி நகர, “நானும் ஹெல்ப் பண்றேன் அத்தை...” என மலர்விழியும் அவருடன் சென்றாள்.

இருவரும் சமைத்துக்கொண்டே சிறுவயது கதைகளைப் பேசி சிரித்தனர். நீண்ட ஏழு வருட இடைவெளியை இந்த ஒருநாளில் பேசி மாளாது என்பது போல லீலா பேச, மலர் மெல்லிய புன்னகையுடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாள். பின்னர் அவள் பூரியைக் கோணல் மானலாய் தேய்க்க, லீலா அதை எண்ணெயில் பொரித்து எடுத்தார்.

அடுத்ததாய் லீலா உருளைக் கிழங்கு குருமா எப்படி செய்வது என அவளுக்கு விளக்கியவாறே அதை செய்தார். பேச்சு தனாவிடமிருந்து இப்போது மலருக்குத் தாவியது. அவள் சிறுவயதில் செய்த சேட்டைகளை கிண்டலாய்க் கூற, மலர் முகம் வெட்கத்தில் சிவந்தது. லீலா அதையும் குறிப்பிட, சிணுங்கினாள் இவள். இதையெல்லாம் ஏழாம் அதிசயமாய் கண்டும் காணாமலும் அமர்ந்திருந்தான் தனஞ்செயன்.

“சரிங்க அத்தை, நான் குளிச்சுட்டு வரேன்...” என்றவள் அறைக்குச் சென்றாள். குளித்து முடித்து முதலில் சுரிதாரை எடுத்தாள். பின் அதை வைத்துவிட்டு, ஒரு புடவையை எடுத்து அணிந்தாள். கண்ணாடியில் ஒரு முறை திரும்பித் திரும்பிப் பார்த்தாள் பெண். திருப்தி வரவும், தலையை வாரிவிட்டு வெளியே வந்தாள். குனிந்து அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தவன் செவியை கொலுசு சத்தம் நிறைக்க, நிமிர்ந்து பார்த்தான். மெல்லிய அலங்காரத்துடன் வந்த மலர்விழியை மனம் உண்மையாய் ரசித்தது. மனைவி என்ற காரணத்தினால் அல்ல! மலர்விழி நல்ல திருத்தமான பெண். மிதமான அலங்காரம் அவளை அழகியாய் காண்பித்தது.

“டேய், போனையே பார்த்துட்டு இருக்காத, போ... நீயும் போய் குளிச்சிட்டு வா. ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுவீங்க...” என்று லீலாவதி கூறியதும் தனஞ்செயன் குளித்துமுடித்து வந்தான். ராமலிங்கமும் வர, நால்வரும் உண்டனர்.

“என்னம்மா இது? இண்டியா மேப்பை விட மோசமா இருக்கு...” எனத் தட்டிலிருந்த பூரியை எடுத்து தனஞ்செயன் ஆட்டிக் காண்பிக்க, இங்கே மலர் பல்லைக் கடித்தாள்.

“டேய்! மலர் முதமுதல்ல செஞ்சது. அப்படித்தான் ஆரம்பத்துல இருக்கும். பேசாம சாப்பிடு!” அதட்டலிட்டாலும் மகனின் அஷ்டக் கோணலான பார்வையில் லீலாவதிக்கும் சிரிப்பு பொங்கியது.

“லீலா, அவனை சொல்லீட்டு நீ சிரிக்கிற. பேசாம சாப்பிடுங்க!” இப்போது ராமலிங்கம் அதட்டல் வேலை செய்ய, நால்வரும் உண்டு எழுந்தனர்.

சிறிது நேரத்திலே ராமலிங்கத்தின் தங்கை தேவி, அவரது கணவன் இரண்டு பிள்ளைகள் என அனைவரும் வந்துவிட்டனர். இரவு அவர்களது வீட்டிற்கு சென்றுவிட்டு, இப்போது திரும்பியிருந்தனர்.

“வா தேவி, வாங்க அண்ணா. சாப்பிட்டீங்களா? பசங்களை கூப்பிடுங்க. சாப்பிடலாம்...” லீலா அவர்களை வரவேற்க, “இல்லை அண்ணி, காலைல வீட்ல சாப்பிட்டுதான் வந்தோம்...” என்று தேவி கூறிவிட்டார்.

அடுத்தடுத்து லீலாவின் பெரியம்மா, அவரது அக்கா மற்றும் குழந்தைகள், ஒன்றுவிட்ட சித்தி, அத்தை என மீண்டும் சொந்தங்கள் அனைவரும் வீட்டில் கூட ஆரம்பித்தனர்.

தேவியின் மகனும் மகளும் மலரின் இருபுறமும் அமர்ந்தனர்.
“அக்கா, உங்கப் பேர் என்ன? நீங்க படிக்குறீங்கன்னு அப்பா சொன்னாரு... எந்த ஸ்டாண்டர்ட் படிக்குறீங்க?” என ஆர்வமாய் அவளிடம் வளவளக்கத் தொடங்கினர். சின்ன சிரிப்புடன் அவர்களுக்குப் பதிலளித்தாள்.

சிறிது நேரத்திலே மலரின் குடும்பமும் அவர்களது நெருங்கிய சொந்தமும் என உறவினர்கள் குழுமிவிட்டனர். லீலாதான் அனைவருக்கும் மதிய உணவு என்னென்ன வேண்டும் எனக் கூறி வேலையாட்களை ஏவிக்கொண்டிருந்தார்.

பின்னர் உறவினர்களின் சலசலப்புத் தொடங்கியது. சாரதியின் அக்கா, அவரது குடும்பமும் வந்திருந்தனர். முத்தவராக அவரைப் பேச வைப்பது முறை என லோகநாயகியிடம் சாரதி கூற, அவரும் சரியென்றுவிட்டார்.

“இப்படியொரு அழகான அத்தைப் பையனை டீல்ல விட்டுட்டு யாரையோ திடீர் கல்யாணம் பண்ணிக்கிட்டீயா மலரு?” காதருகே கேட்ட சத்தத்தில் ஒரு நொடி திடுக்கிட்ட மலர்விழி, பின்னர் தன் பின்னே நின்றவனின் காதை பிடித்து திருகினாள்.

“விடு டி, வலிக்குது...” என அவன் துள்ளினான். “தடியா, எப்போ வந்த?” என்றவளுக்கும் துள்ளல் மீண்டிருந்தது. கரண், அவளது அத்தைப் பையன், ஆதர்ஷ நண்பன், நலம்விரும்பியும் கூட.

காதைத் தேய்த்தவன், “நான் நல்லாதான் இருக்கேன். நீதான் கால்கிலோ சோகத்தோட இருக்க மாதிரி தெரியுது” என அவன் கூற, “ச்சு... அதெல்லாம் ஒன்னும் இல்லை டா. நான் நல்லாதான் இருக்கேன்...” என மலர் புன்னகைத்தாள்.

“நம்பிட்டேன் டி...” என இவன் அங்கலாய்த்து, “இப்போ கூட ஒன்னும் பிரச்சனை இல்லை. அவரை கழட்டி விட்ரு. நான் வாழ்க்கைத் தரேன்!” என்றான்.

“போடா...” என கரண் தலையிலே மலர் கொட்ட, அந்நேரம் அவர்களைக் கடந்து சென்றான் தனஞ்செயன். அவனது பார்வை அவர்கள் இருவரையும் உரசிச் சென்றது.

“என்னடி, உன் ஆளு என்னை மொறச்சுட்டுப் போறாரு. பேசாம போய் சமாதான தூது விட்டுட்டு வரவா?” என கரண் எழ, “உன் வாலை கொஞ்ச நேரம் சுருட்டு மச்சான்...” என மாறன்தான் அவனது தலையில் தட்டினான்.

“வா டா நல்லவனே! வார்த்தைக்கு வார்த்தை மச்சான், மாமன்னு கூப்ட்டு, இப்படி உன் தங்கச்சியை யாருக்கோ கட்டி வச்சுட்டீயே டா. அவளுக்காக காத்திருந்த எனக்கு என்ன மேன் பதில் சொல்லப் போற?” என்ற கரணின் பாவனையில் மலர் பொங்கிச் சிரித்தாள். தனாவிற்கு பேச்சு தாயிடம் இருந்தாலும் பார்வை மனைவியிடம் இருந்தது.

“உன் வாய் குறையவே குறையாதா டா! நீ மனுஷனா இருந்தா என் தங்கச்சியைக் கொடுத்து இருப்பேன். நீ மனுஷ இனத்துல வராம, குரங்கா போய்ட்டீயே!” என மாறன் கூற, மீண்டும் சிரிப்பலை.

“ஹம்ம்... க்கும். என்ன இங்க சத்தம். அண்ணனும் தங்கச்சியும் என் அண்ணனை கலாய்ச்சு தள்றீங்க போல...” என கரணின் தங்கை ஊர்மிளாவும் இவர்களுடன் இணைந்தாள்.

மதிய உணவு முடிந்து அனைவரும் கூடத்தில் கூட, சாரதியின் அக்கா கார்த்திகா பேச்சைத் தொடங்கினார். “இப்படி திடீர்னு என் தம்பி மகளுக்கு கல்யாணமாகும்னு நாங்க நினைக்கலை. நடந்து போச்சு, சொந்தக்காரங்க எல்லாம் போன் பண்ணி விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால் எங்க வீட்டு சைட்ல இருந்து ஒரு ரிசெப்ஷன் மாதிரி வைக்கலாம்னு இருக்கோம். நீங்க என்ன சொல்றீங்க?” என அவர் வினவினார்.

“சொல்றதுக்கு என்ன இருக்குங்க. நல்லபடியா ரிசெப்ஷன் வச்சுடலாம். அப்படியே விட்டுப்போன எல்லா சொந்தக்காரங்ககளையும் கூப்பிட்டு, பொண்ணு மாப்பிள்ளையை அறிமுகமுப்படுத்துன மாதிரியுமாச்சு...” லீலாவின் பெரியம்மா பேசினார்.

“ரொம்ப நல்லதுமா. நீங்க சொல்றதும் சரிதான். அப்புறம் வரதட்சணை நீங்க எதிர்பார்க்குற அளவுக்கு செய்ய முடியாது. எங்களால் என்ன முடியுமோ அதை செஞ்சுடுறோம்...” கார்த்திகா கூற,

“அதென்னங்க எதிர்பார்க்குற அளவுன்னு சொல்றீங்க. ஊர்ல எல்லாரும் வாங்குறது தானே? ஏதோ திடீர்னு நடந்ததால இப்படியொரு குடும்பத்துல அண்ணன் பொண்ணு எடுத்துட்டாரு. சரி, உங்களால முடிஞ்ச ஐஞ்சோ, பத்தோ, செஞ்சுடுங்க. ஏன்னா, உங்களுக்கும் அப்போதான் மரியாதை கிடைக்கும். இப்போ எல்லாம் வரதட்சணையைப் பொறுத்துதான் பொண்ணு வீட்டுக்காரங்களை எல்லாரும் மதிக்குறாங்க...” ராமலிங்கத்தின் தங்கை தேவி கூற, சாரதி மற்றும் லோகநாயகியின் முகமே விழுந்துவிட்டது. இதுபோல பேச்சுகள், ஏற்றத்தாழ்வுகள் வரும் என எண்ணித்தானே அவர்கள் முதலில் தனா-மலர் திருமணத்திற்கு யோசித்தார்கள்.

“தேவி, என்ன பேச்சு இது? பெரியவங்க இருக்கும்போது நீ எதுக்கு இடையில் பேசுற?” ராமலிங்கம் தங்கையைக் கடிந்தார். லீலாவும் தேவியை அதிருப்தியுடன் பார்த்தார். எப்போதுமே தேவி இப்படித்தான். யாருடைய மனம் நோகினால் என்ன என்று மனதில் உள்ளதை போட்டு உடைத்துவிடும் குணம் அவருடையது.

“என்ன அண்ணே! ஊர்ல உலகத்துல யாரும் வரதட்சணை வாங்கலையா என்ன? அவங்க பொண்ணுக்கு அவங்க செய்ய விருப்பப்பட்றாங்க. என்ன, நம்ம அளவுக்கு அவங்களால செய்ய முடியாது. அதைதான் நான் சொன்னேன்...” என்று தேவி மீண்டும் பேச பேச, மலரின் பொறுமை பறந்தது.

அவர் முன்பு பேசும்போதே அவளுக்கு கோபம் கட்டுக்கடங்காது பொங்கியது. இப்போது கொஞ்சமிருந்த பொறுமையும் பறக்க, மலர் ஏதோ பேச வரவும் அவளையேப் பார்த்திருந்த தனஞ்செயன் விரைந்து வந்து மனைவியின் கரங்களை அழுத்திப் பிடித்தான். அதில் ஒரு நொடி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“சபையில பெரியவங்க எல்லாரும் இருக்கும்போது நீ எதுவும் பேசக் கூடாது!” தனா அழுத்தமாகக் கடித்தான். அவனை அனல்பார்வை பார்த்தவள், கையை உதறிவிட்டு,
“ஆமாங்க, நாங்க உங்க அளவுக்கு வசதி இல்லாதவங்கதான். இதை நேத்து மண்டபத்துல என்னைப் பொண்ணு கேட்டப்போ உங்களுக்கு தெரியாது இல்ல. நீங்களும் ராமு மாமா பக்கத்துல தானே இருந்தீங்க. இப்போ, கல்யாணம் முடிஞ்சப் பிறகுதான் எங்க குடும்ப ஸ்டேட்ஸ் தெரியுதா? உங்க குடும்ப மானம் போகக் கூடாதுன்னு, மேடைல நான் உங்க வீட்டுப் பையன் பக்கத்துல உட்கார்ந்தேனே, அப்போவே இதைச் சொல்லி இருக்கணும்.”

“அப்படி சொல்லி இருந்தீங்கன்னா, நானும் மேடை வரைக்கும் வந்து இருக்க மாட்டேன். நீங்களும் உங்க சொந்தத்துலயே சுமித்ரா மாதிரி இன்னொரு நல்ல பொண்ணா பார்த்து உங்க வீட்டுப் பையனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுருக்கலாம். அந்தப் பொண்ணும் வரதட்சணை, நகை, பணம்னு கொண்டு வந்து கொட்டியிருப்பாங்க!” என்றவளின் எள்ளல் பேச்சில் தேவியின் முகம் கருத்துப் போனது.

“மலரு, என்ன பேசுற நீ. இத்தனை பேர் இருக்கும்போது இப்படித்தான் பேசுவீயா? பெரியவங்க அவங்க. மனசுல பட்டதை பேசிட்டாங்க. முதல்ல மன்னிப்பைக் கேளு...” லோகு அதட்ட, அலட்சியமாய் நின்றிருந்தாள் மலர்விழி. அவளது பேச்சில் தனாவின் முகம் சிவந்து போனது.

என்ன பேசுகிறாள் இவள் எனப் பல்லைக் கடித்தவன், “பணம், நகை, வரதட்சணை, ஸ்டேட்ஸ்னு இனிமேல் யாரும் இந்த வீட்ல பேசக் கூடாது. என் பொண்டாட்டி வரதட்சணைகொண்டு வந்துதான் வாழணும்னு அவசியம் இல்லை. நான் படிச்சு இருக்கேன். சொந்தமா பிஸ்னஸ் பண்றேன். என்னால என் குடும்பத்தைப் பார்த்துக்க முடியும்...” என்றவன், சாரதியிடம் திரும்பினான்.

“மாமா, அத்தை உங்க ரெண்டு பேருக்கும்தான்‌. வரதட்சணைன்னு ஒரு ரூபாய் கூட நீங்க கொடுக்கக் கூடாது!” என்று கூற,

“அதெப்படி மாப்பிள்ளை, எங்கப் பொண்ணுக்குன்னு நாங்க சீர் செய்யணும்னு ஆசை இருக்கு. அவளுக்கு நாங்க கண்டிப்பா செய்வோம். அவ புகுந்த வீட்ல அப்போதான் மதிப்போட வாழ முடியும். யாரும் என் பொண்ணை ஒரு குறை சொல்லிடக் கூடாது. பெத்தவங்களா, இதை நாங்க செய்றதுதான் முறை...” சாரதிதான் கூறினார். வார்த்தையில் கொஞ்சமல்ல அதிகமாகவே ரோஷமும் கோபமும் இருந்தது மனிதருக்கு. வரதட்சணை என்ற வார்த்தையிலே இத்தனை பிரச்சனை. இதற்கு மேலும் தாங்கள் எதுவும் செய்யாதுவிட்டால், காலம் முழுவதும் இதை சொல்லிக் காட்டியே மகளைக் காயப்படுத்திவிடுவார்கள், குறை கூறுவார்கள் என பெற்ற மனம் பதறியது. கடன் வாங்கியாவது எல்லாவற்றையும் சீரும் சிறப்புமாய் செய்துவிட வேண்டும் என அந்நொடி முடிவெடுத்திருந்தார்.

“தனா, நீ அமைதியா இரு. பொண்ணைப் பெத்தவங்களுக்கும் செய்யணும்னு ஆசை இருக்கும் டா. பெரியவங்க பேச்சுல நீங்க தலையிடக் கூடாது. நீயும்தான் மா, பெரியவங்க நாங்க, அடிச்சுப்போம், கூடிப்போம். இதெல்லாம் எல்லா குடும்பத்துலயும் நடக்குறதுதான். சின்ன புள்ளைங்க நீ வார்த்தையைப் பார்த்துப் பேசணும். இத்தனை பேர் கூடியிருக்க சபையில எடுத்தோம் கவிழ்த்தோம்னு பேசக் கூடாது...” என்று லீலாவின் பெரியம்மா, தனாவை அடக்கினார். தனா கோபத்தில் பல்லைக் கடித்துவிட்டு, அறைக்குள் நுழைந்தான்.

பின்னர் இருபக்கமும் சமாதானம் பேசி, தங்களால் செய்ய முடிந்ததை செய்கிறோம் என மலரின் பெற்றவர்கள் கூற, எல்லோரும் சரியென்றுவிட்டனர். அடுத்ததாய் வரவேற்பு எங்கு வைக்கலாம், எந்த மண்டபம் என பேச்சுத் துவங்கி முடிய இரவானது. அனைவரும் விடை பெற்றனர்.

லோகு மலரின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார்.
“ஏன் மலர், இப்படித்தான் எல்லார் முன்னாடியும் பேசுறதா?” என அதட்டினார்.

“இந்த மாதிரி எல்லாம் பேச்சு வரும்னுதான் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு நேத்து நான் சொன்னேன். கேட்டீயா நீ? இந்த அவமானம் உங்களுக்குத் தேவையா ?” என ஆத்திர மிகுதியில் பொரிந்தாள் மலர். அவளது வார்த்தை முழுவதும் கோபம் தெறித்தது.

“ம்ப்ச்... பொண்ணுங்களுக்கு பொறுமை வேணும் மலர். அதை புரிஞ்சுக்கோ. குடும்பம்னா, ஆயிரம் இருக்கும். நம்மதான் பொறுத்துப் போகணும். புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. கல்லடிப் பட்டாலும், சொல்லடிப் படக்கூடாதுன்னு சொல்வாங்க. ஒழுங்கா இருக்க பழகு...” என அவர் புத்திமதி கூற, அதையெல்லாம் கேட்கும் பொறுமை அவளிடம் இல்லை.

“பொறுத்துப் போகணும்னா எப்படி? அவங்க பணக்காரங்கன்றதுக்காக, நம்மளை மட்டம் தட்டிப் பேசுவாங்க. அதெல்லாம் கேட்டும், சூடு சொரணை இல்லாம நிக்கணுமா?” இவள் பல்லைக் கடித்தாள்.

“மலரு, உனக்கு சில விஷயம் எல்லாம் புரியாது. இன்னைக்கு ஏதோ ஆதங்கத்துல பேசுறாங்க. நாளைக்கு உனக்கோ, தனாவுக்கோ நல்லது கெட்டதுன்னா, அவங்கதான் வந்து முன்ன நிப்பாங்க. புகுந்த வீட்டு சொந்தம் முக்கியம் டி!” லோகநாயகி மகளுக்குப் புரிய வைக்க முயன்றார்.

“முகத்துக்கு நேரா இப்படி பேசிட்டு, நல்லது கெட்டதுக்கு வந்து நிக்கணும்னு அவசியம் இல்லை மா. அப்படிப்பட்ட சொந்தம் தேவையில்லை!” மலர் பேச்சில் லோகநாயகி பொறுமை இழந்து போனார்.

“இப்படி விதண்டாவாதம் பேசுறதை முதல்ல நிப்பாட்டு டி...” அவர் மகளை அதட்டினார். சாரதியும், மாறனும் அவர்கள் அருகில் வந்துவிட்டனர்.

“ம்மா, நீ அவளைத் திட்டாதே. அந்தம்மா பேசுனது தப்பு...” மாறன் தங்கைக்கு ஆதரவாகப் பேசினான்‌.

“வாடா, ஏற்கனவே அவ ஆடுறா. நீ சலங்கை கட்டிவிடு...” மகள் மேல் இருக்கும் கோபத்தில் மகனைக் காய்ந்தார் லோகநாயகி.

“லோகு அமைதியா இரு...” என்ற சாரதி, “மலர், பெரியவங்க என்ன பேசுனாலும், நீ இடையில பேசக் கூடாது. இதுதான் உனக்கு முதலும் கடைசியும்!” என அவரும் மகளைத் திட்டினார். ஆனால், அதையெல்லாம் அசட்டை செய்தவளின் மனம் மட்டும் தேவியின் பேச்சில் கொதித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அனைவரும் விடை பெற்றனர்.

“நீங்கப் போய் தூங்குங்க. நான் மலர்கிட்டே கொஞ்சம் பேசிட்டு வரேன்...” என்ற லீலா மருமகளிடம் வந்தார்.

“மலரு...” என்றவரை நிமிர்ந்து யோசனையாய்ப் பார்த்தாள் மலர்விழி.

“சாரி டா, தேவி பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்குறேன். அவங்க எப்பவுமே அப்படித்தான். நான் கல்யாணமானப் புதுசுலயும் இப்படித்தான் பேசுனாங்க. அவங்க பேசுனதை மனசுல வச்சுக்காத. உன் நிலையில இருந்து பார்த்தா, நீ செஞ்சது சரிதான் டா. ஆனால், இடம், பொருள், ஏவல் பார்த்துப் பேசணும்மா. பட்டுன்னு வார்த்தையை விட்டுட்டா அள்ள முடியாதே. ஏன்னா, நேத்து வரை நீ எது பேசுனாலும், அது உன்னோட மட்டும் போய்டும். ஆனால், இப்போ நீ இந்தக் குடும்பத்து மருமக. இந்த வீட்டோட மரியாதையும் உன் பேச்சுலதான் இருக்கு. படிச்ச பொண்ணு, நீ புருஞ்சுப்பன்னு நம்புறேன். நானும் தேவிக்கிட்ட சொல்லி வைக்கிறேன்...” என்றுவிட்டு சென்றார் லீலா.

யார் கூறியதும் அவளது செவியில் ஏறவேவில்லை. மனதிலிருந்த கோபமும் கொஞ்சம் கூட தணியவில்லை. 'வேண்டாம்! இவன் எனக்கு வேண்டாம். இது சரிவராது' என மனம் எத்தனை தூங்கா இரவுகளை சுமந்து இருக்கும். ஆனாலும், விதி வேண்டாம் என்பதைதான் அவளிடம் சேர்ப்பித்திருந்தது. ஏற்கனவே கோபத்தில் கொத்தளித்துக் கொண்டிருந்தவளை, தூபம் போடுவது போல தனஞ்செயனும்,
“என் கூட வாழ இஷ்டம்
இல்லைன்னா, நீ கிளம்பி போய்ட்டே இரு...” என்றிருக்க, உடுத்தியிருந்த சேலையோடு தாய் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள் மலர்விழி.
 
Well-known member
Messages
568
Reaction score
389
Points
63
அடப்பாவமே 🤔🤔🤔🤔
 
Top