• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,273
Reaction score
3,731
Points
113
எண்ணம் – 21

“மலரு...” வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாய் முகமெல்லாம் பூரிப்புடன் மகளை அழைத்தார் லோகநாயகி. விழி அலைபேசியில் பெற்றவர்களிடம் விஷயத்தைக் கூறியதும் அவர்களுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை.

‘எப்போதுமே அடித்துக் கொண்டிருக்கிறார்களே! எப்படி மகள் தனஞ்செயனுடன் அனுசரித்து வாழ்கிறாளோ? என்ன செய்கிறாளோ?’ என்ற கவலை லோகநாயகியை சில நாட்களாக நிம்மதி இழக்கச் செய்திருந்தது என்னவோ உண்மை. ஆனால், அதெல்லாம் மகள் கூறிய வார்த்தையில் காற்றில் பறந்திருந்தது. அவருமே கணவன் மற்றும் மகனுடன் விழியைக் காண பறந்து வந்திருந்தார்.

“ம்மா‌‌...” என அவரைக் கண்டதும் அவள் புன்னகைக்க, மகளை அணைத்துக்கொண்டார் தாய். சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை. சாரதியும் லேசாய் நெகிழ்ந்து போயிருந்தார். மகளை இப்போதுதான் பள்ளி முடிந்து கல்லூரி சேர்த்துவிட்டது போலிருக்க, அதற்குள் அவளுக்கு திருமணம், குழந்தை என அவரது மனம் நம்ப மறுத்தது.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு டி. என்ன சொல்லன்னு தெரியலை. எங்க நான் தப்பு பண்ணிட்டனோன்னு அப்போ அப்போ வருந்திட்டே இருந்தேன். கடவுள் எது செஞ்சாலும் அது சரியாத்தான் இருக்கும்!” என்ற லோகநாயகியின் வார்த்தைகள் முழுவதும் மகள் கருவுற்று இருப்பதில் சந்தோஷத் துள்ளல் தெறித்தது.

“சந்தோஷமா இருக்கு மாப்ளை. எங்களை, தாத்தா, பாட்டியாக்கிட்டீங்க!” லோகு தனாவிடமும் மகிழ்ச்சியைப் பகிர, அவன் மெதுவாய் புன்னகையுடன் தலையசைத்தான். அவரது செய்கையில் இவனுக்கு உதட்டில் சிரிப்பு பெரிதானது.

சாரதியும் தனஞ்செயன் தோளில் லேசாய் தட்டினார். மாறன் எதுவும் பேசாது தங்கையைப் பார்த்தான். அவள் முகத்திலிருந்த பூரிப்பில், சந்தோஷத்தில் நடந்த அனைத்து சண்டைகளும் பிரச்சனைகளும் பின்னுக்குச் சென்றிருந்தன.

“வாழ்த்துக்கள் டா மச்சான்!” தனாவை அணைத்தவன், “தேங்க்ஸ் டா...” என்றான் முணுமுணுப்பாய்.

தனா, “டேய்... என்ன?” என தானும் அவளை இறுக அணைத்துக்கொண்டான். இருவருக்கும் அந்நொடி விழியின் மலர்வில் பூரிப்பில் தித்தித்தது.

வெளியே சத்தம் கேட்க, ராமலிங்கமும் லீலாவதியும் வந்துவிட்டதை உணர்த்தியது. லீலா மருமகளை ஆரத் தழுவி, உச்சி நுகர்ந்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இரு வீட்டினருக்கும் இத்தனை நாட்கள் கொஞ்சமே கொஞ்சம் ஒட்டியிருந்த பயம் காத தூரம் சென்றிருந்தது.

“டேய்! இந்த மாதிரி நேரத்துல மலரை தனியா விடக்கூடாது. பேசாம அவளை அங்க கூட்டிட்டுப் போய்டலாம். இன்னும் ஒரு மாசம்தானே?” லீலாவதி மலர்விழியின் கையைப் பிடித்து அருகே அமர்ந்து கொண்டார்.
அவர்கள் வீட்டின் வாரிசை சுமக்கும் சமயத்தில் மருமகளை தனியே விட அவருக்கு மனதில்லை .

“ஆமா பா தனா, மலர் அங்கே இருந்தாதான் நல்லது. லீலாவும் பார்த்துக்குவாங்க!” என்று லோகுவும் கூற, தனஞ்செயன் அவர்கள் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தான்.

“அம்மா, அத்தை... நீங்க இப்போ அதீத சந்தோஷத்துல பேசுறீங்க! சோ, கொஞ்சம் நிதானமா யோசிங்க. அங்க இருந்து டெய்லி ரெண்டு மணிநேரம் ட்ராவல் பண்ணா, அவ ஹெல்த் என்னாகும். ஏற்கனவே வாமிட்டிங், தலைசுத்தல் எல்லாம் இருக்கு. இன்னும் ஒன் மந்த்தான், ப்ராஜெக்டை சப்மிட் பண்ணிட்டா, அடுத்து எக்ஸாம்தான். அது முடிஞ்சதும் நீங்களே சொன்னா கூட, இங்க இருக்க மாட்டோம். எல்லாத்தையும் பேக் பண்ணிடுவோம்!” என பொறுமையாய் அவர்களுக்குப் புரிய வைக்க முயன்றான்.

“அதில்லை டா. நீ தனியாளா எப்படி அவளைப் பார்த்துப்ப. ரொம்ப கஷ்டமாச்சே டா. புள்ளைத் தாச்சியைப் பார்த்துக்குறது ஒன்னும் அவ்வளோ சுலபம் இல்லை!” லீலாவதி குரலில் யோசனை படர்ந்தது.

“ஆமா மாப்ளை, அவளுக்கு இந்த நேரத்துல புடிச்சதை சமைச்சுக் கொடுக்கணும். ஆசைப்பட்டதை செய்யணும்னு எங்களுக்கும் ஆசை இருக்கும். மாமியார் வீடு, அம்மா வீடுன்னு ஒன்னுக்கு ரெண்டு வீடு இருக்கும்போது என் புள்ளை தனியா இருந்தா, கஷ்டமா இருக்கும் பா!” லோகு வருத்தத்துடன் பேசினார். அவரது பார்வை வாஞ்சையாய் மகளைத் தழுவியது.

தனா பெரியவர்களுக்கு என்ன சொல்லிப் புரிய வைப்பது எனத் தெரியாது திணறி மனைவியைப் பார்த்தான். “ம்மா... ஒரு மாசம்தானே? அதெல்லாம் பட்டுன்னு ஓடிடும். என் புருஷன் உங்க எல்லாரையும்விட என்னை நல்லா பார்த்துப்பாரு. இந்த மாதிரி நேரத்துல அங்க இருந்து இங்க ட்ராவல் பண்றது ரொம்ப கஷ்டம் மா!” என்றவள், “அத்தை, வீக் எண்ட் அங்க வரோம். அதுலயே எட்டுநாள் போய்டும். அப்புறம் வெறும் 22 நாள்தான். அதுவும் சீக்கிரம் போய்டும். எக்ஸாம் முடிஞ்சதும் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு அங்க வந்துடுவோம்!” என்று லீலாவதிக்கும் புரிய வைக்க முயன்றாள். இருந்தும் இரண்டு தாய்மார்களின் முகமும் கூம்பிவிட்டது.

“ப்ம்ச்... என்ன லீலா நீ‌. அதான் மலர் சொல்றா இல்லை. எல்லாம் சரியா வரும். தனா பார்த்துப்பான்!” ராமலிங்கம் கூற, அனைவரும் அரைமனதாய் ஒப்புக் கொண்டனர்.

“ம்மா, ரெண்டு பேரும் முன்ன மாதிரி இல்லை. இப்போ அவங்களுக்கு இடையில நல்ல புரிதலும், காதலும் இருக்கு. கண்டிப்பா தனாவால மலரைக் கேர் பண்ண முடியும். அப்படி உனக்கு அவளுக்கு எதாவது செஞ்சுக் கொடுக்கணும்னு தோணுச்சுன்னா, என்கிட்ட கொடுத்துவிடு. நான் இங்க வந்து கொடுக்குறேன். சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல முகத்தை சோகமா வச்சுக்காதீங்க!” மாறன் தாயை அதட்ட, அவர் ஓரளவிற்குத் தெளிந்தார்.

பிறகு சாரதி வாங்கி வந்த இனிப்பை மகளுக்கும் மருமகனுக்கும் ஊட்டினார். லீலாவும், லோகுவும் சேர்ந்து மலர்விழிக்குப் பிடித்த உணவை இரவிற்கு சமைக்க, அனைவரும் ஒன்றாய் உண்டனர்.

பின்னர் லோகநாயகி மகளிடம் அரைமணி நேரம் கர்ப்பக் காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிவுரைக் கூற, லீலாவதியும் மருமகளிடம் ஆயிரம் பத்திரம் கூறி விடைபெற்றார்.

“மலர்...” என்ற மாறன் தங்கையின் நெற்றியில் லேசாய் முத்தமிட்டான். அண்ணனை இறுக அணைத்தவளுக்கும் லேசாய் விழிகள் கலங்கின.

“நீ சந்தோஷமா இருந்தா, அதுவே போதும்...” என்றவன் வார்த்தையில் மலர்விழி மீதான அக்கறையும் அன்பும் கொட்டிக் கிடந்தன. அதெல்லாம் என்றைக்கும் தீராத ஒன்று என அவளும் அறிந்ததே. அவர்கள் இருவரையும் சிறு புன்னகையுடன் பார்த்த தனா, “ம்க்கூம்... ஹக்கும்
போதும் டா. அவ என் பொண்டாட்டி இப்போ!” என்றான். என்ன முயன்றும் குரலில் குறும்புதான் இருந்தது.

“உனக்கு அவ இப்போதான் பொண்டாட்டி. பொறந்ததுல இருந்தே அவ என் தங்கச்சி டா!” மாறன் சிலிர்த்தான்.

“அது க.மு டா. இப்போ க.பி!” என்று மனைவியை இழுத்துத் தன் கைவளைவில் நிறுத்தினான் தனா.

“க.மு? க.பி?” அண்ணன் தங்கை இருவரும் புரியாது தனாவை நோக்க, “கல்யாணத்துக்கு முன்னாடி, பின்னாடி டா!” என விளக்கமளித்தான்.

மாறன் நண்பனை முறைத்து, ஏதோ பேச வர, “மாறா, போகலாம் வா டா!” என சாரதி குரல் கொடுத்தார்.

“இதோ வரேன் பா!” என்றவன் தனாவை முறைத்துவிட்டு, தங்கையிடம் சிறிய தலையாட்டலுடன் விடை பெற்றான்.

அவர்கள் சென்றதும் விழியைப் பின்னிருந்து அணைத்துக்கொண்டான் தனா. இவள் உதடுகளில் மென்னகை.

“விழி, அத்தை சொன்னது போல இந்த மாதிரி நேரத்துல எதாவது சாப்பிடணும்னு, செய்யணும்னு ஆசை வருமாமே! என்ன வேணும்னாலும் சொல்லு!” என்றான் மலரின் செவியில் முத்தமிட்டு. அதில் கூசிச் சிலிர்த்தவள், கணவன் கைகளை எடுத்துக் கன்னத்தில் ஒற்றிக் கொண்டாள். எதையும் கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை பெண்ணுக்கு. ஏதோ மனம் முழுவதும் சொல்ல முடியாத நிறைவு.

“தெரியலையே...” என இழுத்தவள், “ஹம்ம்... முன்ன மாதிரி கோபமா ஒரு தடவை என்கிட்ட சண்டை போடுங்க!” என்றாள் குறும்பாய்.

அவளது முகத்தைப் பார்த்து உதட்டைக் கடித்துப் புன்னகையை அதக்கியவன், “அந்த சண்டையெல்லாம் போடத் தெரியாது டி பொண்டாட்டி. கட்டில் சண்டை வேணா போடலாம்!” என்றான் அவளின் மீது ரசனையாய்ப் பார்வையை செலுத்தி. அந்தப் பார்வையில் முறைக்க முயன்று தோற்றவள், கணவனை நோக்கிக் கைகளை உயர்த்தினாள்.

அப்படியே விழியைக் கைகளில் அள்ளிக் கொண்டான் தனா. அறைக்கு சென்று மனைவியை கைவளைவிலே படுக்க வைத்தான். வலக்கரம் அவளின் வயிற்றை வருட, இடதுக் கரம் தலைக் கோதியது. நெற்றியில் இதழ் பதித்து, கண்களில் ஒற்றியெடுத்து மூக்கில் முத்தமிட்டவன், இதழில் இளைப்பாறினான். அப்படியே அவளது கழுத்து வளைவில் தலையைப் புதைத்துப் புரட்டி மனைவியின் வாசத்தை உள்ளிழுத்து, சுகித்தான். இன்னும் இன்னும் முன்னேறச் சொல்லி மனமும் உடலும் பரபரத்தன. ஆனாலும் அவளின் உடல்நிலை கருதி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

“தூங்கு டி!” என்ற தனா அவளின் தலையைத் தன் மார்பில் வைத்தான். இவளுக்குப் புன்னகை அரும்பியது.

எக்கி கணவன் உதட்டில் முத்தமிட்டவள், “ஐ லவ் யூ!” என்றுவிட்டு கண்களை இறுக மூட, இவனது அதரங்களில் மென்னகை படர்ந்தது. மூவரும் தூங்கிப் போயினர்.

மறுநாள் காலையிலும் விழி உண்ட அனைத்தும் வாந்தி எடுத்திருந்தாள். தனா என்ன செய்வது எனத் தாயிடம் கேட்டு, அவளுக்கு எலும்பிச்சை சாற்றைப் பிழிந்து கொடுத்தான். தானே அவளைக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றான்‌. மீண்டும் மாலையில் அவனே அழைத்தும் வந்தான். இப்போதைக்கு மனைவியின் மீதான அவனது பொறுப்புணர்வு தலைதூக்க, முடிந்தளவு அவளை நன்றாய்க் கவனித்துக்கொள்ள முயன்றான். அவள் வரும் நேரத்திலே வேலையை முடித்துவிட்டு, தனக்கு கீழே வேலை பார்க்கும் ஊழியரிடம் பொறுப்பை ஒப்படைத்தான். மடிக்கணினியில் வீட்டிலே வேலைகளை முடிந்தளவு செய்தான். அப்படியே மலர்விழிக்கும் வேண்டியதை செய்து கொடுத்தான்.

லீலாவதியும், லோகநாயகியும் காலையில் எழுந்ததும் மலர்விழிக்குத்தான் அழைத்தனர்.
அவள் உடல்நலம் எப்படி இருக்கிறது என விசாரித்துவிட்டுதான் மற்ற வேலைகளைக் கவனிக்கச் சென்றனர். ஒருவாரம்தான் கடந்து இருக்கும். அதற்குள்ளே நான்கு நாட்கள் மாறன் அந்த வீட்டிற்கும் இந்த வீட்டிற்கும் நடந்துவிட்டான். லோகநாயகிதான் மகளுக்கு பிடித்தமானவற்றை செய்து கொடுத்தனுப்பி இருந்தார்.

எல்லோரும் அக்கறையாகக் கவனித்துக்கொண்ட போதும் மலர்விழி நிறைய சோர்ந்து போனாள். வாந்தியும் மயக்கமும் அவளைப் பாடாய்ப்படுத்தின. எந்த வேலையிலும் ஒழுங்காய் கவனம் செலுத்த முடியவில்லை. கல்லூரியில் ப்ராஜெக்டை குறித்த தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். செய்முறை அனைத்தையும் செய்து முடித்துவிட்டாள்.

இப்போது செய்தவற்றை புத்தகமாக ஒப்படைக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னும் இரண்டு நாட்களில் அதை முடித்தால்தான், பத்து நாட்களில் தேர்விற்குப் படிக்க முடியும். இதுவும் சேர்ந்து அவளை
மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கியிருந்தது.

கணினியின் முன்பு அமர்ந்திருந்தவளுக்கு தலை லேசாகச் சுற்றியது. திரை உமிழ்ந்த வெளிச்சத்தை சரியாய் பார்க்க முடியவில்லை. சில நிமிடங்களுக்கு முன்புதான் உண்ட அனைத்தையும் வாந்தி எடுத்திருந்தாள்.

ஒருவாறு தன்னைச் சமாளித்து கணினியில் தட்டச்சு செய்து கொண்டிருந்தாள். மீண்டும் குமட்டிக்கொண்டு வர, எழுந்து வாந்தி எடுத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தவள், தலையில் இரு கைகளையும் வைத்தாள். கண்கள் மங்கலாகிப் போன உணர்வு. தெளிவில்லாத நிலையில் இருந்தாள்.

கையில் எழும்பிச்சை பழச்சாறுடன் உள்ளே நுழைந்த தனா, “விழி, இந்தா, லெமன் ஜூஸ் குடி. பெட்டரா பீல் பண்ணுவ!” என அவள் தோளைத் தொட்டான். அவனிடம் எந்த எதிர்வினையும் காட்டவில்லை பெண்.

“விழி... என்னாச்சு? வேற எதுவும் பண்ணுதா?” தனஞ்செயன் கரிசனமாய்க் கேட்க, “ப்ம்ச்... ஒன்னும் இல்லை. ஜூஸை வச்சுட்டுப் போங்க!” என்றாள் எரிச்சல் மண்டிய குரலில். இவன் கைகள் ஒரு நொடி நின்றுவிட்டன. பின்னர் எதுவும் கூறாது பழச்சாறை மேஜை மீது வைத்துவிட்டு அகன்றான்.

சில நிமிடங்கள் கழித்து அதை எடுத்துப் பருகி தன்னை சமன் செய்தாள் மலர்விழி. அவனிடம் கோபமாய்ப் பேசியது இப்போது மனதை உறுத்தியது. ‘கடவுளே!’ என நெற்றியைச் சுருக்கியவளுக்கு, மனம் வலித்தது. தனக்காக என்று வேலையைக் கூட கணக்கில் எடுக்காது அக்கறையாய்க் கவனித்துக்கொண்ட கணவனிடம் தன் கோபத்தைக் காட்டியது பெரிய தவறாய் தோன்றியது.

இமையோரம் லேசாய் பனிக்க, தனஞ்செயன் அறைக்குள் நுழைந்தாள். இவள் வரவை உணர்ந்தும் தனா நிமிரவில்லை. மனைவியின் எரிச்சலில் சுடு சொற்களில் அவனுக்கும் கோபம் எட்டிப் பார்த்தது. இவளுக்காக என்று அவன் எல்லாவற்றையும் அக்கறையும் நேசமுமாய்ப் பார்த்துப் பார்த்து செய்ய, பட்டென அவள் முகத்தில் அடித்தவாறு எரிச்சலாகப் பேசியதில் மனம் வலித்தது தனாவிற்கு.

அவன் முன்னே சென்று நின்றவள், “ஜெய்...” என்றாள். குரல் முழுவதும் தவறு செய்த குற்ற குறுகுறுப்பு. கலங்கிப் போயிருந்தாள் விழி‌. அவனிடம் பதில் இல்லை, எந்தவித அசைவும் இல்லை.

அதில் மீண்டும் கண்கள் உடைப்பெடுத்தன. “சாரி... நான் வேணும்னு பேசலை...” என்றவளின் கண்ணீர் அவனது அலைபேசி திரையை நனைத்தது. நிமிர்ந்து அவளைப் பார்த்தான் தனா. கண்ணெல்லாம் உள்ளே சென்று, கருவளையம் சூழ்ந்திருந்தது. வாந்தி எடுத்து எடுத்து தொண்டையில் புண்ணே வந்திருக்கும். அதோடு சேர்த்து மிகவும் ஓய்ந்தும் போயிருந்தாள் விழி. அவளிடம் கோபத்தைக் கணவனால் இழுத்துப் பிடிக்க முடியவில்லை.

கண்களில் வழியும் நீரைத் துடைத்தவள், “சாரி...” என்க, இவனுக்கு உருகிவிட்டது. இரண்டு கையையும் அவளை நோக்கி விரித்தான். எதுவும் பேசாது அவனிள் புகுந்தவள், தனாவின் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்தாள். மெல்லிய விசும்பல் பெண்ணிடம்.

“ஒன்னும் இல்லை டா. என்ன பண்ணுது?” எனக் கேட்டு அவள் முதுகைத் தட்டிக்கொடுத்தான். இரண்டு தாய்மார்களும் அத்தனை வற்புறுத்தி ஏன் கூறினார்கள் என அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல்நிலையும் மனநிலையும் சட்டென்று நொடிக்கு நொடி மாறிவிடுகிறது. அதற்கு அவர்களது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் காரணம் என்பதை தனாவால் புரிந்து கொள்ள முடிந்தது.

“என்னாச்சு என் விழிக்கு?” எனக் கேட்டவனை பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்தாள். அவளது கலைந்த முடியைக் காதோரம் ஒதுக்கி, கண்ணில் வழிந்த நீரைத் துடைத்துவிட்டான்.

“ப்ராஜெக்ட்க்கு டைப் பண்ணணும். ஆனால், சிஸ்டம் பார்க்க முடியலை!” என்றாள் கவலையான குரலில்.

“அவ்வளோ தானா? நீ என்ன பண்ணணும்னு சொல்லு. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்!” என தனா கூறவும், அவனை லேசாய் முறைத்தாள்.

“ஹே! ஐ யம் சீரியஸ் டி. கண்டிப்பா பண்றேன்!” தனா மீண்டும் அழுத்திக் கூற, தலையை சம்மதமாய் அசைத்தவள், அவனது கழுத்து வளைவில் முகம் புதைத்தாள்.

“கொஞ்ச நேரம் இப்படியே இருக்கலாம்!” விழி முணுமுணுக்க, இவன் உதட்டில் மென்னகை படர்ந்தது. சில நிமிடங்கள் கடக்க, அவளை கட்டிலில் அமர வைத்துவிட்டு மடிக்கணினியை எடுத்து வந்தான் தனா.

அவனருகே தோளில் சாய்ந்தமர்ந்தவள், என்னென்ன செய்ய வேண்டும் என்று கூற, அவன் அவள் கூறியதை செய்தான். இரண்டு நாட்களும் தனஞ்செயனே உதவி புரிய, நல்லபடியாக அந்த வேலையை முடித்து, பேராசிரியர் கையெழுத்திற்காக ஒப்படைத்துவிட்டாள். இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

அடுத்ததாக தேர்வுகளுக்குப் படிக்க வேண்டும். தனஞ்செயன் முன்பு புத்தகத்தை எடுத்துக்கொண்டு சென்று நின்றாள். அவன் சலித்துக் கொள்ளவே இல்லை. வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் மனைவியின் அருகே அமர்ந்து புத்தகத்தை வாசித்து, அவளுக்கு விளக்குவான். இவள் மேஜையில் படுத்துக்கொண்டோ அல்லது அவனது மடியில் படுத்தவாறு அதைக் காதில் வாங்குவாள்.

இடையிடையே இரண்டு பெற்றவர்களும் வந்து பார்த்துவிட்டு சென்றனர். விஷயம் கேள்விப்பட்டு, ஊர்மி, கரண், நிதிஷ் என அனைவரும் வந்து வீட்டை அமர்க்களப்படுத்திவிட்டே சென்றனர்.

அதோ இதோ என தேர்வுகள் வந்துவிட, தன்னால் முடிந்தவரை நன்றாக எழுதி முடித்திருந்தாள். சென்ற முறை போல அவளால் நீண்ட நேரம் விழித்திருக்கவோ, படிக்கவோ முடியவில்லை. தனாவும் மனைவியை எந்த மெனக்கெடலும் வேண்டாம் என அதட்டியிருந்தான். அதனால் ஏதோ முடிந்தளவு அனைத்திலும் சிறப்பாக முடித்திருந்தாள். மறுவாரமே
இரண்டு வீட்டுப் பெற்றவர்களும் வந்து வீட்டைக் காலி செய்து, தனஞ்செயனையும் மலரையும் அங்கே அழைத்துச் சென்றுவிட்டனர்.
 
Top