• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,271
Reaction score
3,717
Points
113
எண்ணம் – 20

‘தேவி எதற்குத் தன் தாயின் அறைக்குள் வந்ததும் வராததுமாய் செல்கிறார்?’ என்ற யோசனையுடன் அவரைப் பார்த்தவாறே நின்ற தனஞ்செயனுக்கு அப்போதுதான் உறைத்தது.

‘கடவுளே! இப்போதான் ஒரு பிரச்சனையை சமாளிச்சேன். அடுத்து தேவி அத்தை ரூபத்துல பஞ்சாயத்தா?’ என்று மனதில் தோன்ற, அவனும் அவர் பின்னே சென்றான்.

“ஏன் அண்ணி, கட்டுனதுதான் ஒன்னும் இல்லாத வீட்ல பொண்ணை கட்டீட்டிங்க சரி. நாலு பேர் வர்ற சபையில கழுத்து நிறைய நகையைப் போட்டு நிக்கிறதுக்கென்ன உங்க மருமகளுக்கு? நம்ம வீட்ல நகையே இல்லையா? இப்படி பஞ்சத்துல அடிபட்ட மாதிரி இருக்காளே இவ! நீங்க கேட்க மாட்டீங்களா?” தேவி லீலாவதியிடம் கேட்க, அது தனஞ்செயன் காதிலும் தெளிவாய் விழுந்தது.
அவர் பேசிய பேச்சில் தனா பல்லைக் கடித்துத் தன் கோபத்தைக் கட்டுக்குள்கொண்டு வந்தான்.

“ஏன் தேவி, வந்ததும் வராததுமா இப்படி பேசுற?” லீலாவதி சற்றே அதட்டல் போட, “அத்தை...” என காட்டமாய் அழைத்தான் தனா.

அவனைப் பார்த்த இருவரும் திகைக்க, “அத்தை, பேசும்போது என்ன பேசுறோம்னு யோசிச்சு பேசுங்க. இப்போ நீங்க அவளைப் பேசுனது என்னைக் குத்தம் சொல்ற மாதிரிதான் இருக்கு. அப்படித்தானே?” இவன் காரமாய் வினவினான்.

“ஐயோ தனா! உன்னைப் போய் நான் பேசுவேனா? அவளைத்தான் டா பேசுனேன்!” தேவி பதறினார்.

“அவன்னா என்ன அர்த்தத்துல சொல்றீங்க? அவ யாரு இந்த வீட்ல சொல்லுங்க?” தனாவின் குரல் அதட்டலாய் ஒலித்தது.

“அதுப்பா தனா... அவ நகை எதுவும் போடாம இருக்கதால நான் சொன்னேன்...” தேவி திக்க,

“சொன்னீங்க இல்ல. அசிங்கமா பேசுனீங்க. அவ யாரோ ஒருத்தி இல்லை. என் பொண்டாட்டி, இந்த வீட்டோட மருமக, இந்த வீட்ல ஒரு அங்கம். இங்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கோ, அதே உரிமை அவளுக்கும் இருக்கு. ஒவ்வொரு முறை நீங்க அவளைத் தாழ்த்தி பேசும்போது மொத்தக் குடும்பத்தையும் பேசுற மாதிரிதான்!” அவன் குரலை உயர்த்திப் பேச, தேவி மௌனமானார்‌. அவர் முகமோ அவமானத்தில் கன்றிச் சிவந்தது.

“தனா, குரலை அடக்கிப் பேசு. அவங்க உன் அத்தை...” லீலா மகனைக் கண்டித்தார்.

“ம்மா, நான் அத்தையை இதுவரை எதாவது ஒரு வகையில மரியாதை குறைவா நடத்தி இருக்கேனா? அவங்களுக்கு கொடுக்குற மரியாதையை சரியா கொடுக்குறேன். அதே மாதிரி அவங்களும் என் பொண்டாட்டிக்குரிய மரியாதையை கொடுக்கணும். பணத்தைக் காரணம் காட்டி அவளை எந்த இடத்திலும் இறக்கிப் பேசக் கூடாது...” என்று லீலாவிடம் பொரிந்தவன், “இதுதான் நான் உங்ககிட்ட இதைப் பத்தி பேசுறது கடைசியா இருக்கணும் அத்தை. உங்க வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க. உங்களை என் அம்மா ஸ்தானத்துலதான் இத்தனை நாளும் பார்த்திட்டு இருக்கேன். நீங்களே உங்களை தாழ்த்திக்காதீங்க!” என்றவனின் கோபம் மட்டுப்படவே நேரம் எடுத்தது.

“மலரு, உன் புருஷனையும் மாமியாரையும் கூட்டிட்டு வாம்மா. நேரமாச்சு...” தரையில் அமர்ந்து தாம்பூலத் தட்டில் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த கார்த்திகா கூற, அவருக்கு அருகில் லீலாவின் பெரியம்மா அமர்ந்து என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார்.

தனஞ்செயனையும் லீலாவையும் அழைத்து வர சென்ற மலர், தேவியின் கடைசி பேச்சை கேட்டுவிட்டு அப்படியே நின்றுவிட்டாள். அவருக்கு பதில் கொடுக்க நாக்குப் பரபரக்க, கோபம் பொங்கத் தொடங்கியது. ஆனால், அதற்கடுத்தான தனஞ்செயனின் பேச்சில் அப்படியே நின்றுவிட்டாள். அவனது பேச்சு, இவளது வார்த்தையைக் கோபத்தைத் தடை செய்திருந்தது.

சில நொடிகளில் உள்ளே சண்டை முடிய, இவள் எதுவுமே பேசவில்லை. இயல்பாய் உள்ளே நுழைந்து, “அத்தை, எல்லாரும் வந்தாச்சு. வாங்க அத்தை...” என்றவள், “நீங்களும் வாங்க...” என தனாவிடம் கூறிவிட்டு, தேவியை ஒரு முறைப்போடு கடந்துவிட்டாள். அவளை வா என அழைக்கக் கூட மலருக்கு மனம் வரவில்லை.

'நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீர்கள்!' என்ற பாவனையோடு நடந்தாள். தேவியும் பதிலுக்கு அவளை முறைத்துவைத்தார்.

“தனா, முகத்தை முதல்ல நல்லா வச்சுக்கோ. அப்புறம் எல்லாரும் என்ன என்னன்னு கேட்பாங்க. வா டா!” என்றவர், “தேவி... நீயும் வா” என இருவரையும் அழைத்துச் சென்றார்.

மலர்விழியும் தனாவும் நாற்காலியில் அமர வைக்கப்பட, அவர்களது கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. விழியின் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறை கட்டிவிட்டு, தனா அணிந்த தாலியைக் கழட்டினார் கார்த்திகா.

மூத்த பெண்மணியும் பெரியம்மாவும் சேர்ந்து லோகநாயகி வாங்கி வந்த தங்கக் குண்டுகளை அந்தத் தாலியில் கோர்த்து இருபுறமும் மூடிச்சை நன்றாக இட்டனர்.

“ஏய்யா தனா, இந்தா உன் பொண்டாட்டி கழுத்துல சாமியை வேண்டிட்டு இதை போடு. என்னைக்கும் ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க!” தனாவின் கையில் தாலி கொடுக்கப்பட, இத்தனை நேரமிருந்த இறுக்கம் அப்போது அவனிடம் தளர்ந்திருந்தது.

மென்னகையுடன் அதை வாங்கியவன் மனைவியைப் பார்க்க, அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள். முதல்முறை கட்டும்போது இருவரிடமிருந்த மனநிலையும் இப்போது தலைகீழாய் மாறியிருக்க, விழி தனாவை நேசம் நிறைந்த மனதுடன் பார்த்தாள். தேவியிடம் தனக்காக அவன் பேசிய பேச்சுக்கள் எல்லாம் இன்னும் அவளது செவியில் எதிரொலித்தன.

அவளது பார்வையில் தனாவிற்கு லேசாய் கூச்சம் வந்துவிட, தாலியை அணிவித்தவன் விழியின் காதருகே குனிந்து, “போதும் டி... பார்வையாலே மனுஷனைக் கொள்ளாத!” என யாரும் அறியாது நொடியில் முணுமுணுத்து விலகியிருந்தான்.
அதில் இப்போது விழிக்கு லேசாய் கன்னத்தில் வெட்கம் படர்ந்தது. மாறன் அவர்கள் இருவரையும் நிறைவுடன் பார்த்தான். மனம் முழுவதும் சந்தோஷம் நிரம்பி இருந்தது அவனுக்கு. ஊர்மிளா மாறன் கையில் அழுத்தம் கொடுக்க, அவளைப் பார்த்து தலையை அசைத்தான். அனைவரும் கையிலிருந்த மஞ்சள் கலந்த அரிசியை மணமக்கள் மீது தூவினர்.

பின்னர் இருவரும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, அவர்கள் மணமக்களின் நெற்றியில் குங்குமத்தைப் பூசி வாழ்த்தினர். ஒவ்வொருவராக வாழ்த்தி முடிய, உணவுப் பரிமாறப்பட்டது.

கூடத்திலிருந்த நாற்காலிகள் மேஜைகள் அனைத்தும் அகற்றப்பட்டு, போர்வை விரிக்கப்பட, உறவினர்கள் அமர்ந்து உண்ணத் தொடங்கினர். வீட்டு ஆட்களும் வேலை ஆட்களும் சேர்ந்து பரிமாற, நிகழ்ச்சி சிறிதுநேரத்தில் முடிவுற்றது.

நெருங்கிய சொந்தங்கள் மட்டும் வந்திருந்ததால், நிறைய கூட்டம் இல்லாது போக, சிறிது நேரத்திலே அனைவரும் கிளம்ப ஆரம்பித்தனர். தனாவும் விழியும் உணவு உண்டு முடிய, அவன் ராமலிங்கத்துடன் வந்தவர்களை வழியனுப்ப சென்றுவிட்டான்.

மலர்விழி ஊர்மிளா மற்றும் கரணுடன் அமர்ந்துவிட்டாள். எல்லோரும் விடை பெற்று வீடே வெறிச்சோடி போக, மலர் வீட்டினரும் விடை பெற்றனர்.

மாறன் மலர்விழியின் அருகே வர,
“அட்வைஸ் எதுவும் பண்ணணுமா மாறா?” என்று தமையனைப் பார்த்து மென்முறைப்பை சிந்தினாள்.

“ஹக்கும்... அதெதுக்கு. அதான் நீயும் உன் புருஷனும் அடிச்சுக்கோ, புடிச்சுக்கோன்னு சந்தோஷமாதானே இருக்கீங்க. நான் எதுக்கு இடையில?” மாறன் சலிப்பாய்க் கூறினாலும், தங்கை மகிழ்ச்சியாக வாழ்கிறாள் என்ற நினைப்பே தித்தித்தது. விழியும் அவனது முகத்தைதான் பார்த்தாள்.

“தேங்க்ஸ் மாறா!” விழி உணர்ந்து கூற, “பாருடா!” என்றவன் அவளது தலையைக் கலைத்துவிட்டான்.

நினைவு வந்தவளாய், “என்ன மாறா, ஊர்மியைக் கரெக்ட் பண்ணிட்டீயா?” என வினவினாள். இவன் திருதிருவென விழிக்க, “ப்ம்ச்... தத்தி” மலர் தமையனை முறைத்தாள்.

“மலர்...” மாறன் கோபமாய் அழைக்க, “கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. ஒரு பொண்ணைக் கரெக்ட் பண்ண துப்பில்லை...” என இரைந்தவள், “பேசாம நானே அவகிட்ட பேசிடவா?” என்றவளின் பார்வை ஊர்மியைத் தேடின.

“எம்மா பரதேவதை! என் வாழ்கையை நான் பார்த்துக்கிறேன். நீ உன் வேலையை மட்டும் பாரு!” முறைத்துவிட்டு மாறன் நகர, “போடா...” என இவளும் நகர்ந்துவிட்டாள்.

அன்றைய நாள் கொஞ்சம் பரபரப்புடன் கழிந்தது. இப்போதுதான் மலரால் ஆசுவாசம் கொள்ள முடிந்தது. இலகுவான உடை ஒன்றை எடுத்துக்கொண்டு கழிவறைக்குச் சென்றவள், சேலையை மாற்றினாள். தலையிலிருந்த பூவை எடுக்கச் சென்றவள், அது வாடமல் இருக்கவும் விட்டுவிட்டாள்.

முகத்தை கழுவிவிட்டு அவள் வெளியே வர, தனா அலைபேசியில் ஏதோ படத்தைப் பார்த்துக்கொண்டு கட்டிலில் படுத்திருந்தான். விழியும் கட்டிலில் விழுந்தவள், அப்படியே நகர்ந்து கணவன் அருகே சென்று அவனது வலதுகையை லேசாகத் தூக்கி உடலை வளைத்து அவனுள் புகுந்து அணைத்துக்கொண்டாள்.

விழியின் செய்கையில் தனஞ்செயனுக்குப் புன்னகை அரும்பியது. இருந்தும் மனைவியைக் கவனிக்காது படத்தைப் பார்க்க, அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்த விழி, தனாவின் வாசத்தை உள்ளிழுக்க, இவனுக்கு உடல் கூசியது.

“ஏய் ராங்கி, என்னடி பண்ற?” கிசுகிசுப்பாய்க் கேட்டவனின் குரலில் திரும்பியவள், “என்னமோ பண்றேன்... என் புருஷன்!” என்றாள் அதிகாரமாய்.‌ இவனுக்கு இளம் புன்னகை தொற்றிக் கொண்டது.

“ஓஹோ...” என இழுத்தவன் மீண்டும் அலைபேசியில் கவனத்தைப் பதிக்க, விழியும் நன்றாய் அவன் மீது வசதியாய் சாய்ந்து மார்பில் தலையை வைத்துப் படத்தைப் பார்த்தாள். சில நிமிடங்களில் படத்தில் ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கி முத்தமிடும் காட்சி வர, தனா உதட்டோரம் குறும்பு புன்னகையுடன் ஓரக்கண்ணால் விழியைப் பார்க்க, அவள் பட்டென அவன் மார்பில் முகத்தைப் புதைத்தாள்.

“முதல்ல அந்தப் படத்தை ஆஃப் பண்ணுங்க!” மனைவி சிணுங்கினாள். இவனுக்கு சிரிப்பு பொங்கியது.

“நோ... நோ. இனிமேல்தான் மெயின் சீனே இருக்கு!” இவன் குரலில் கேலியிருக்க, நிமிர்ந்து அவனை முறைத்தவள், எக்கி அவன் தாடியடர்ந்த கன்னத்தை வருடினாள். அதில் தனஞ்செயன் மனதும் மூளையும் மங்கத் தொடங்கியது. அப்படியே அவனது கன்னத்தில் அழுத்தமாய் காதலாய் முத்தமிட்டு, “தேங்க்ஸ்...” என்றாள்.

அந்த நன்றி எதற்கெனத் தெரிந்தும், “எதுக்காம்?” என இமை உயர்த்தியவனின் முகம் புன்னகையில் மலர்ந்திருந்தது.

“எதுக்கோ... தோணுச்சு. சொன்னேன்!” விழி இழுத்துக் கூறவும், இவன் நினைவு வந்தவனாய் அலைபேசியை அணைத்துத் தூர தூக்கிப் போட்டுவிட்டு, மனைவியை அப்படியே தன் மீது தூக்கிப் படுக்க வைத்தவன், “ஆமா, காலைல என்னடி சொன்ன?” என்றான் அன்பும் அதட்டலுமாய். இப்படி இருவராக மட்டும் இருக்கும் போது கூற வேண்டிய விஷயத்தை காலையில் கூறிவிட்டாளே! என்ற ஆதங்கம் அவன் குரலில் வெளிப்பட்டது.

“என்ன... என்ன சொன்னேன்?” வேண்டுமென்றே மலர் தெரியாது என உதட்டைப் பிதுக்க, அதைக் கையில் பிடித்தவன், “ஒழுங்கா சொல்லுடி!” என்றான் காதலாய்.

“முடியாது!” உதட்டை அவனிடமிருந்து பிரித்து இவள் முடியை சிலுப்ப, தலையில் சூடியிருந்த பூ முன்புறம் வந்து விழுந்தது.

“சொல்ல மாட்டல்ல?” தனா மிரட்டல் தொனியில் கேட்க, “முடியாது...” திமிராய் பதிலளித்தாள் விழி.

“ராங்கி...” என்றவன் பட்டென மனைவியை கீழே தள்ளி அவள் மீது படுத்தான். விழியின் கழுத்தடியில் புதைந்தவனின் நாசி இப்போது இரண்டு மலரையும் நுகர்ந்தது. அவள் சூடியிருந்த மல்லிகைப் பூ ஆளையே மயக்கியது, மனைவியும்தான். கைகள் அவளது உடைக்குள்ளே நுழைந்து வெற்றிடையை பதம் பார்க்க, மலர்விழியின் உடல் சிலிர்த்தது.

“இப்போவும் சொல்ல மாட்டீயா டி?” கரகரத்துப் போய் காற்றாய் வெளிவந்த குரலில் இவள் லேசாய் திணறி, “முடியாது!” என கூறி முடிப்பதற்குள் உதட்டைக் கவ்வியிருந்தான் தனா. முடியாது என்றவளை நூறு முறையாவது ‘ஐ லவ் யூ’ என இரவு முழுவதும் சொல்ல வைத்து, மனைவியைக் கொஞ்சித் தீர்த்தான்.

காலையில் மலர்விழி எழ முயற்சித்தாள். முடியாது போக, கண்களைத் திறந்து பார்க்க, தனாவின் மீது படுத்திருந்தாள். எவ்வளவு நேரம் அப்படி படுத்திருந்தாள் என்பது அவளே அறியாள்.

‘ச்சு... பாவம் அவர்! வலிக்கப் போகுது!’ மனம் கணவனுக்காக கரிசனத்தை உதிர்த்தது.

அவளது இடையை நன்றாய்க் கட்டிக்கொண்டு மனைவியை தன்மீது போட்டிருந்த தனாவின் காதருகே குனிந்தவள், “என்னை விடுங்க. உங்களுக்கு வலிக்கப் போகுது!” என்றாள் விழி.

“பரவாயில்லை. என் பொண்டாட்டி தானே? சுகமான சுமை!” உறக்கத்திலும் பேச்சு தெளிவாய் விழ, இவளுக்கு சிரிப்பு வந்தது.

“ஆள் மயக்கி!” அவன் முடியைப் பிடித்து விழி லேசாய் இழுக்க, தனஞ்செயன் முகத்தை சுளித்தான்.

“யாரு டி ஆள் மயக்கி... நைட் ஃபுல்லா யாரு, யாரை மயக்குனான்னு சொல்லவா?” என்றவனின் பேச்சில் சிவந்தவள், அவன் வாயைப் பொத்தினாள்.

“ஒன்னும் தேவையில்லை. விடுங்க...” எனக் கடினப்பட்டு அவனிடமிருந்து பிரிந்து எழுந்தாள்.

சனி, ஞாயிறு விடுமுறையாக இருக்க, இருவரும் இங்கேயே தங்கிவிட்டனர். ஞாயிறு மாலை அந்த வீட்டிற்கு சென்றனர்.

அடுத்தடுத்து நாட்கள் தனாவுக்கு வேலையிலும் விழிக்கு கல்லூரியிலும் கழிந்தது. முன்பு போல நாளொரு சண்டையும் பொழுதொரு சமாதானமும் அல்லாது, வாரத்திற்கு ஒரு சண்டை வந்தது. மலர்விழி எங்கும் எதிலும் இறங்கி வரவேயில்லை. தனா தான் எல்லாவற்றிலும் இறங்கி வந்தான்.

இந்த சில நாட்களில் அவன் மலரை ஓரளவிற்குப் புரிந்து கையாளத் தொடங்கி இருந்தான். மற்றவர்களிடம் தான் தவறு என்றால், ஒருபடி இறங்கி மன்னிப்பை கேட்டுவிடுகிறாள். அவளது தாயிடமும், மாறனிடமும் விழி மன்னிப்பை யாசித்தது
தனாவிற்கு நினைவு வந்தது. ஆனால், இவனிடம் மட்டும் மனைவி எப்போதும் முறுக்கிக்கொண்டு திரிகிறாள் என புத்திக்கு உறைக்க, புன்னகை முளைத்துத் தொலைத்தது. அதாவது தான் அவளைக் கெஞ்சி, கொஞ்சி, முத்தமிட்டு சமாதானம் செய்வது அவளுக்குப் பிடித்திருக்கிறது என்றதை உணர்ந்ததும், அவள் மேல் இருந்த சிறு குறைகளும் விடுப்பெடுத்துக் கொண்டன.

இவனே எதாவது செய்து அவளிடம் பேச்சு வாங்கி, முத்தமிட்டு சமாதானம் செய்தான். அப்போதெல்லாம் மனைவி முறுக்கிக் கொள்வதைப் பார்க்கையில் அத்தனைப் பிடித்தது தனாவிற்கு.

வேலை நடுவிலும் அவனுக்காக சிறு சிறு சமையலை கற்றுக்கொண்டு மலர் சமைக்க, தனா அவளுக்கு உதவினான். இருவரும் வீட்டு வேலையை சரிசமமாய்ப் பங்கிட்டு கொண்டனர்.

நாட்கள் மாதங்களாக உருண்டோடியது. இன்னும் ஒரு மாதத்தில் மலருக்கு கல்லூரி நிறைவடைகிறது. அதற்கடுத்து தேர்வு வந்துவிடும். அதை நல்லபடியாக முடித்தால், அவளுடைய முதுகலை முடிவடைகிறது.

மலர்விழி அவளுடைய ப்ராஜெக்டை நன்முறையில் செய்துவிட வேண்டும் என்று முழு முனைப்போடு அதில் ஈடுப்பட்டிருந்தாள். அதற்காக கொஞ்சம் வெளியே அலைச்சல் வேறு. அதோடு சேர்த்து படிப்பிலும் தன் கவனத்தை செலுத்தினாள்.

எப்போதாவது அவள் சோர்ந்து போய் அமர்ந்துவிட்டால், தனா அருகே எங்கேனும் மனைவியை அழைத்து செல்வான். இருவரும் சேர்ந்து எதாவது படம் பார்ப்பார்கள். அதிலும், அவன் ஒரு படத்தை திரையிட, இவள் வேறொன்றை வைக்க சொல்வாள். சண்டை வரத்தான் செய்தது. மனைவியை சமாதானம் செய்து, இரண்டுமே அல்லாது வேறு படத்தைப் போட்டுவிடுவான் தனா. சண்டையும் சமாதானமுமாகத்தான் நாட்கள் சென்றன. ஆனால், அது முன்பு போல இருவரையும் காயப்படுத்தவில்லை.
சண்டை முடியவும், மறுநிமிடமே இருவரும் மறந்து போயினர். அவ்வப்போது மாறன் வருவான். இவர்கள் அங்கே செல்வார்கள். அப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

மலர்விழி அன்று கல்லூரிக்குச் செல்லும்போதே காலையில் தலை லேசாகச் சுற்றியது. கல்லூரிக்குள் நுழைந்ததும் உண்ட உணவை அப்படியே வாந்தி எடுத்திருந்தாள்.

சக மாணவர்கள் வீட்டிற்கு செல்லும்படி அறிவுறுத்த, “ஒன்னும் இல்லை. டைஜஸ்ட் ஆகலை பா!” எனக் கூறி அன்றைய நாளை கடந்துவிட்டாள்.

இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வரும்போது எதேச்சையாக ஒரு குழந்தைப் படத்தை கடக்க நேரிட்ட போது, மனம் படபடவென அடித்துக் கொண்டது. ப்ராஜெக்ட் வேலையில் மும்முரமாகிப் போனவள், அந்த மாதம் மாதவிடாய் தவறியதை மறந்துவிட்டாள். இப்போது அது நினைவு வர, செல்லும் வழியிலுள்ள மருந்தகத்தில் கர்ப்பத்தை உறுதி செய்யும் கருவியை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.

உள்ளே நுழைந்ததும் மீண்டும் தலை சுற்றல் தொடங்க, முதல் வேலையாக கழிவறைக்குள் நுழைந்து பரிசோதித்துப் பார்த்தாள். அதில் இரட்டைக் கோடுகள் விழ, மலரின் உடலில் மெல்லிய அதிர்வு. இமையோரம் லேசாய் பனிக்க, உதட்டில் புன்னகை பூத்தது.

உடையை மாற்றி முகத்தைக் கழுவிவிட்டு வந்தவள், சூடாக ஒரு தேநீரைத் தயாரித்துப் பருகினாள். தனஞ்செயன் எப்போது வருவான் என இவள் வாயிலையையே பார்க்க, என்றைக்கும் விட அன்றைக்கு விரைவாய் வந்தவனின் முகத்தில் சோர்வு அப்பிக் கிடந்தது.

இவளைப் பார்த்து சோபையாய் புன்னகைத்தவன், நீள்விருக்கையில் அமர்ந்து மேஜை மீது காலை நீட்டினான். ஒரு கை கழுத்துப் பட்டையை சற்றே இறக்கிவிட, மற்றொரு கை மேஜை விளிம்பில் குடி புகுந்தது.
மலர் சமையலறைக்குள் நுழைந்து அவனுக்கு தேநீர் தயாரித்து எடுத்து வந்தாள்.

“தேங்க்ஸ் டி பொண்டாட்டி!” என்ற தனா தேநீரைப் பருகவும், அவன் அருகே அமர்ந்தாள் விழி.

அவன் தேநீரைக் குடிக்கும் வரை மௌனம் காத்தவள், “ஜெய்...” எனக் கூறி அவன் கை வளைவில் தன்னைப் புகுத்தவும், தனாவும் கையைத் தளர்த்தினான். அவளது அழைப்பில் இவனது சோர்வு காணமல் போயிருந்தது. அவனாகக் கேட்காமல் மனைவி ஜெய் என அழைக்க, “விழி... என்ன அதிசயம்?” என்றவனின் குரல் துள்ளியது.

அவனை நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் இருப்பதைக் கண்டறிய முடியாதவன், “என்ன வேணுமாம் விழிக்கு? என்கிட்ட எதுவும் சொல்லணுமா?” என கனிவாய் கேட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான். அந்தக் கனிவில் அக்கறையில் அகம் நெகிழ்ந்து போனது பெண்ணுக்கு.

இமையோரம் நீர்த்துளி படர, “ஜெய், ஐ அம் ப்ரக்னென்ட்!” என்று கூறியவள், அவன் மார்பில் முகத்தைப் புதைத்தாள். மனைவி கூற்றுப் புரிந்ததும், தனஞ்செயன் இன்பமாய் அதிர்ந்து போனான். உள்ளே பரபரப்புத் தொற்றிக்கொண்டது. சத்தியமாய் இருவருமே இந்த விஷயத்தை எதிர்பார்க்கவில்லை.

“விழி, ஆர் யூ சீரியஸ்?” தனாவின் குரல் முழுவதும் மகிழ்ச்சி பொங்கியது. ஆர்வமாய்த் தன்னை நோக்குபவனை முறைத்து, “ஒரு நாள் மனுஷியை நிம்மதியா தூங்கவிட்டதில்லை. இதில்லை சீரியஸான்னு கேள்வி வேற?” உதட்டைச் சுழித்து சடைத்தவளைப் பார்த்து தனா பொங்கிச் சிரித்தான். நிறைந்த மனதுடன் அவனைப் பார்த்தாள் மலர்விழி.

“இது என் ஹார்ட் வொர்க் டி!” என்றவனின் கரங்கள் மனைவியின் வயிற்றைத் தடவ, அவன் கூற்றில் இவள் சிவந்து கணவனை முறைத்தாள். இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

“வீட்ல சொல்லீட்டியா?” தனா வினவ, “உங்ககிட்டே சொல்லீட்டு அவங்ககிட்டே சொல்லலாம்னு நினைச்சேன்!” என்ற மலர் கணவனை இறுக அணைக்க, அவன் உதட்டில் புன்னகை பூத்தது. குனிந்து அவளது உதட்டில் மென்மையாய் முத்தமிட்டவன், “ஐ லவ் யூ டி பொண்டாட்டி!” என்றான் காதலாய். எதுவும் பேசவில்லை விழி. அந்தக் கணத்தின் மகிழ்ச்சியை இருவரும் ஆத்மார்த்தமாக உள்வாங்கினர்.
 
Top