• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,249
Reaction score
3,668
Points
113
எண்ணம் – 2

மணப்பெண் மாறினாலும், திருமணம் முடிந்திருந்ததில், சலசலப்பு சற்றே அடங்கியது. அடுத்தடுத்து சடங்குகள் மேடையில் நடைபெற்றன. இருவீட்டு பெற்றவர்கள் காலிலும் விழுந்து தம்பதி சமேதராக மலர்விழியும் தனஞ்செயனும் ஆசிர்வாதம் வாங்கினர்.

பின்னர் உறவுக்காரர்களில் மூத்தவர்கள் ஒவ்வொருவராக மணமக்களை வாழ்த்தினர். வந்திருந்த பெரியவர்களில் ஒருவர், “ரெண்டு பேரும் நல்லா இருங்க. இன்னாருக்கு இன்னார்னு கடவுள் போட்ட முடிச்சு. அதான் இந்தக் கல்யாணம் இப்படி நடந்திருக்கு. நல்லா சுகமா இருங்க!” என வாழ்த்திவிட்டுச் செல்ல, மலர் அவரைச் சலனமில்லாது பார்த்தாள். தனஞ்செயன் முகத்தில் சிரிப்பு என்பது துளி கூட இல்லை. சுமித்ராவின் செயலில் மொத்தமும் இறுகிப் போயிருந்தான். அதைவிட, மலர்விழியை வேறு தனக்காக கட்டாயப்படுத்திவிட்டார்களோ? என அவளுக்காகவும் மனம் வருந்தியது.

கொஞ்சம் கொஞ்சமாக உறவினர்கள் எல்லோரும் மணமக்களை வாழ்த்தி, சாப்பிட்டு முடித்து மண்டபத்தைவிட்டு அகல ஆரம்பித்தனர்.

ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து விழுந்து எழுந்ததில் மலர் சோர்ந்து போனாள். தங்கையின் முகத்தைப் பார்த்த மாறன், “ம்மா, அவங்க ரெண்டு பேரையும் சாப்பிட கூட்டீட்டுப் போங்க!” என லோகுவிடம் கூறினான்.

“எல்லாரும் ஆசிர்வாதம் பண்ணி முடிஞ்சதும் சாப்பிட கூட்டீட்டுப் போகலாம். இப்போ ஜூஸ் எதுவும் எடுத்துட்டு வந்து கொடு” என்றவர், மலரின் அருகே சென்றார்.

“என்னடி, என்ன பண்ணுது?” என்று மகளின் நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைக்க விழைய, யாருடைய கவனத்தையும் ஈர்க்காது அவரது கையைத் தட்டிவிட்டிருந்தாள் மலர். அந்த செயலில் தாயின் முகம் வாடிப்போனது. தனஞ்செயன் விழிகளில் அது தப்பாமல் பட்டுவிட்டது.

மாறன் கையில் பழச்சாறுடன் வந்தான். “ம்மா, நீங்க போங்க. அவகிட்டே நான் பேசிக்கிறேன்...” என்றவன், “மலர் இந்த ஜூஸை குடி. காலைல இருந்து எதையும் சாப்பிடலை நீ” என்றான். எதுவும் எதிர்வினையாற்றாது நின்றாள்.

“மலர், என்ன கோபம் இருந்தாலும், அதை காட்டுற நேரம் இது இல்ல. முதல்ல ஜூஸை குடி...” என அதட்டலிட்டான் தமையன். ஆனால், அசையாது அழுத்தமாய் நின்றாள் தங்கை. அவளது அடத்தில் மாறன் என்ன செய்வது எனத் தெரியாது திகைத்தான். கண்டிப்பாக இவளை சமாதானம் செய்வது எளிதல்ல என உணர்ந்தவன், “டேய், தனா. நீயாவது ஜூஸை குடி டா...” என நண்பனிடம் நீட்டினான். இத்தனை நேரம் நடந்ததை அவனும் பாத்துக்கொண்டுதான் இருந்தான்.

“இல்லை டா, எனக்குப் பசிக்கலை...” என்றவனின் முகமும் சோர்ந்து போயிருந்தது. உடலும் லேசாய் தளர்ந்தது போல நின்றான். மாறன் ஒரு பெருமூச்சோடு அகன்றான்.

சிறிது நேரத்திலே மணமக்கள் சாப்பிட அழைக்கப்பட்டனர். இருவரும் பெயரளவில் உண்டு எழுந்தனர். உறவினர்கள் எல்லாம் விடைபெற்றதும், தம்பதியர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மலர்விழிக்குத் தங்கை முறையில் ஒரு சிறுபெண் அவர்களுக்கு ஆரத்தி எடுக்க, “எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சு வலது காலை எடுத்து வச்சு வா மா!” என்றார் லீலா. எதுவும் பேசாது தலையை மட்டும் அசைத்த மலர்விழி, வலது காலெடுத்து வைத்து அந்த வீட்டில் முதன்முறையாக நுழைந்தாள்.

“கல்யாணம் எப்படி நடந்திருந்தாலும், முறையா எல்லாத்தையும் சரியா செய்யணும் லீலா...” என உறவுக்காரப் பெண் ஒருவர் மணமக்களை அமர வைத்து பாலும் பழத்தையும் கொடுத்தார். எல்லாவற்றையும் எந்த உணர்ச்சியும் காட்டாது செய்து முடித்திருந்தாள் மலர்விழி. தனாவிற்கும் அப்படித்தான். கடமைக்கென இருவரும் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தையும் முடித்தனர்.

“சாமியைக் கும்பிட்டு விளக்கேத்தி வைமா. குடும்பம் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கோ!” லீலாவின் பெரியம்மா ஒருவர் மலர்விழியின் கையில் தீப்பெட்டியைக் கொடுத்தார்.

விளக்கை ஏற்றி விழிகளை மூடி வேண்டியவளுக்கு லேசாய் கண் கலங்கியது. சட்டென இமை சிலுப்பி அதை மறைத்துவிட்டாள். இருவரும் ஒன்றாய் நின்று கடவுளை வணங்கினர். தனாவிற்கு எப்போதுமே பெரிதாய் கடவுள் நம்பிக்கை இல்லை. அதனால் கடமைக்கென கையைக் கூப்பி நின்றான்.

இப்போது ஓரிரு நெருங்கிய சொந்தங்களும் தனாவின் குடும்பத்தாரும் மலரின் குடும்பத்து ஆட்களும்தான் வீட்டில் இருந்தனர்.

இத்தனை நேரம் நின்று, நடந்து, ஆசிர்வாதம் வாங்க குனிந்து என மலர் ஒருவழியாகியிருந்தாள். இதில் சரியாய் உணவு உண்ணாதது வேறு அவளை மேலும் சோர்வடையச் செய்திருந்தது. இன்னுமே உறவினர்கள் அவளைச் சுற்றி இருக்க, அமர கூட முடியவில்லை. கழுத்தைச் சுற்றி மாலை வேறு கனமாய் இருந்தது. அதைவிட மனதில் பெரிய கனம் ஏறிக்கொண்டது.

“அத்தை, மாலையைக் கழட்டலாமா?” லோகு அருகில் இருந்தும் லீலாவதியிடம் வினவினாள் மலர்விழி.

“கழட்டிக் கொடு மலர்” என்று அவர் மாலையை வாங்கிச் சென்றார்.

உறவினர்கள் அகன்றதும் மலர்விழி இருக்கையில் பொத்தென அமர்ந்தாள். நடந்தது, நடந்து கொண்டிருப்பது என அனைத்தையும் மூளையும் மனதும் உணர்ந்து உண்மையை ஆராய்ந்தது. என்ன நடக்கிறது? ஏது நடக்கிறது என உணரும் முன்னே அவள் செல்வியிலிருந்து திருமதியாகியிருந்தாள். குனிந்து கழுத்தைப் பார்த்தாள். கழுத்திலிருந்த மஞ்சள் கயிறு அவள் திருமதி.மலர்விழி தனஞ்செயன் என அழுத்தமாய்க் கூறியது. அதை தொட்டுப் பார்த்தாள். சிந்தை முழுவதும் ஆயிரம் சிந்தனைகள். சிறிது நேரம் படுத்து தூங்கினால் நன்றாய் இருக்கும் என உடல் கூட கெஞ்சியது. நேற்று இரவும் அவள் தூங்கவில்லை என்பது உபரியாய் உடலை வருத்தியது.

அவளின் அருகே சென்றமர்ந்தார் லோகநாயகி. “மலரு, அம்மா மேல கோபமா டி? இது எதுவும் இப்படி நடக்கும்னு காலைல யாரும் எதிர்பார்க்கலையே! அங்க சபையில சொன்னது போல, எல்லாம் கடவுள் சித்தம் டி. தனா தான் உனக்கு கணவனா வரணும்னு கடவுள்தான் எழுதி வச்சிருக்காரு. ஆரம்பத்துல உனக்கு கஷ்டமா இருக்கலாம். ஆனால், போகப் போக நீ புரிஞ்சுப்ப. உன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்புறோம்...” என்று மகள் கையைப் பிடிக்க, அப்படியொரு ஆள் அருகில் இருக்கிறார் என்பதைப் போல கூட அவள் எதிர்வினையாற்றவில்லை. யாரிடமோ லோகநாயகி பேசுகிறார் என்பதைப் போலத்தான் பார்த்திருந்தாள். தாயின் முகம் சோர்ந்து போனது.

அப்போதுதான் வெளியே சென்றிருந்த சாரதி உள்ளே நுழைந்தார். மனைவியும் மகளும் அமர்ந்திருக்க, அவர்கள் அருகில் சென்றார்.
“என்ன லோகு, ஏன் ஒரு மாதிரி இருக்க?” என வினவினார்.
“எல்லாம் உங்க மகளாலதான். கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோன்னு பயமா இருக்குங்க. என்கிட்ட முகம் கொடுத்துக் கூட பேசலை. ரொம்ப கோபமா இருக்கா!” என்றார் கவலை தோய்ந்த குரலில்.

“லோகு, அவளைப் பத்தி உனக்குத் தெரியாதா? திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணி வச்சதால அவ கோபமா இருப்பா. எல்லாம் சரியாகிடும். நடப்பது எல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சுக்கோ!” என்றார். மலரும் அதைக் கேட்டுகொண்டுதான் இருந்தாள்.

தன் அலைபேசியை எடுத்தவள், நண்பனுக்கு அழைத்தாள். அழைப்பு ஏற்கப்பட, “நிதிஷ், எனக்கொரு ஹெல்ப் பண்ணு டா. வீட்டோட கீ ஜன்னல்ல இருக்கும். அதை ஓபன் பண்ணி, என் ரூம்க்குள்ள போ‌. அங்க ஒரு சூட்கேஸ்ல என் ட்ரெஸ் இருக்கும். அதை மட்டும் நான் சொல்ற அட்ரெஸ்க்கு எடுத்துட்டு வா டா!” என்றாள்.

எதற்கென புரியாவிட்டாலும், “சரி மலர், நான் எடுத்துட்டு வரேன்!” என நிதிஷ் அழைப்பைத் துண்டித்தான்.

“ஏன் டி, மாறனை அனுப்பிவிட வேண்டியது தானே?” என வினவினார் லோகநாயகி
“மலரு, நானும் மாறனும் போய் எடுத்துட்டு வர்றோம் டா...” என்ற சாரதி, “ஏன் லோகு, வேற என்னென்ன வேணும்னு நீ சொல்லு. இப்போதைக்கு அத்தியாவசிய தேவைக்கு மட்டும் திங்க்ஸ் எடுத்துட்டு வந்து கொடுப்போம். ஒரு ரெண்டு நாள் போகட்டும். அவளோட பொருள் எல்லாத்தையும் இங்க எடுத்துட்டு வந்துடலாம்...” என்றார் மனைவியிடம்.

“தேவையில்லை, என் வேலையை நான் பார்த்துக்கிறேன். மீறி எடுத்துட்டு வந்தீங்கன்னா, எதையும் நான் கையால கூடத் தொட மாட்டேன்!” என்ற மலர்விழி, பெற்றவர்களின் முகத்தைக் கூட காண விழையவில்லை. வீட்டிற்கு செல்லலாம் என நகர்ந்த சாரதியின் கால்கள் நின்றுவிட்டன.

“மலர், நீ ரொம்ப அடம்புடிக்கிற. ஆமா, நாங்க செஞ்சது தப்புதான். திடீர்னு கல்யாணம்னு சொன்னா, யாராலும் ஏத்துக்க முடியாதுதான் டா. ஆனால், இதெல்லாம் எதையும் நாங்க திட்டமிட்டு பண்ணலையே!” என்றவர் மகள் கையைப் பிடித்தார். மற்றொரு கரம் அவளது தலையைத் தடவியது. தந்தைக்கும் அவளுக்குமான உறவு அத்தனை உரிமையானது. தாயிடம் அதிகம் ஒட்டுதல் இல்லையெனினும் அவரைப் புறக்கணிக்க முடியவில்லை.

“ப்பா, என்னைக் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. உங்க மேல கொஞ்சம் இல்லை, நிறைய கோபம் வருது. அதை காட்டி உங்களை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைக்கிறேன். கொஞ்ச நாள் என்னை என் போக்குல விடுங்க. என்னை என்னால பார்த்துக்க முடியும்...” என்றாள். சாரதி தலையை மட்டும் அசைத்தார். வாயைத் திறந்து இதையாவது கூறினாளே என லோகுவிற்கு சற்றே நிம்மதி பிறந்தது.

தனஞ்செயன் அறைக்குச் சென்று உடையை மாற்றினான். அலைபேசி வேறு தொடர்ந்து இசைத்துக்கொண்டே இருந்தது‌. திருமணத்திற்கு வராத நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் நடந்ததை விசாரிக்க, வாழ்த்து சொல்ல என குறுஞ்செய்திகளையும் அழைப்புகளையும் விடுத்தனர். யாரிடமும் இப்போது பதில் கூறும் மனநிலையில் இல்லை அவன். எனவே அதை அணைத்து தூர எறிந்தான்.

சரியாய் அதேநேரம் உள்ளே நுழைந்தார் ராமலிங்கம்.
“என்ன தனா, ஏன் போனை தூக்கி போட்ற?” என்ற அதட்டலுடன் அலைபேசியை எடுத்து மேஜை மீது வைத்தார். மகன் பதில் கூறவில்லை.

“அப்பா மேல கோபமா?” என்று அவர் வினவ, நிமிர்ந்து அவரைப் பார்த்தான்.

“கோபம்தான் பா. சுமித்ராவை விட நீங்க செஞ்சதை என்னால ஏத்துக்க முடியலை. மலரை கட்டாயப்படுத்தி எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கிங்க. அவளுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு அவளோட நடவடிக்கையே சொல்லுது. என் வாழ்க்கைக்காக ஒரு பொண்ணு வாழ்க்கையைப் பணயம் வைக்கலாமா பா?” என தனஞ்செயன் வார்த்தைகள் தெறித்து விழுந்தன.

“ஏன் தனா, உனக்கு, மலர் இந்தக் கல்யாணத்தை சம்மதம் இல்லாம பண்ணிக்கிட்டான்னு தோணுதா?”

“ஆமா, அத்தையும் மாமாவும் அவளை கன்வின்ஸ் பண்ணி, கட்டாயப்படுத்திதான் சம்மதிக்க வச்சாங்க!”

“கட்டாயப்படுத்தி மலரை சம்மதிக்க வைக்க முடியும்னு தோணுதா? அவளை சின்ன வயசுல இருந்தே நீ பார்த்து இருக்க. ரொம்ப நல்ல பொண்ணு. ஆனால், பிடிவாதம் அதிகம். அவளுக்கு இஷ்டம் இல்லைன்னா, மேடை வரை வந்து கல்யாணம் பண்ணி இருக்க மாட்டா. என்ன, திடீர்னு மேரேஜ் நடந்ததால, கொஞ்சம் கோபம். மத்தபடி, அவ உனக்கு பொருத்தமா இருப்பா டா. மனசை போட்டுக் குழப்பிக்காத!” என்றவரை இன்னுமே ஆற்றாமையுடன் பார்த்தான். நடந்ததை மாற்ற முடியாது. இனிமேல் எதுவென்றாலும் பார்த்துதானே ஆகவேண்டும் என மனதை சமாதானம் செய்தான். கண்டிப்பாக இரவு மலரிடம் பேச வேண்டும் என நினைத்தான்.

“ப்பா, நைட் சடங்கு சம்பிரதாயம்னு எதுவும் பண்ணிடாதீங்க தயவு செஞ்சு!” என்று தனா ராமலிங்கத்திடம் அறிவுறுத்தியிருக்க, அதை அவர் லீலாவதியிடம் கூறிவிட்டார்.

உறவினர்கள் ஒரு சிலர், “நடக்க வேண்டியது எல்லாம் கால காலத்துல நடந்தாதான், புருஷன் பொண்டாட்டிக்குள்ள இணக்கம் வரும். அவன் அப்படித்தான் சொல்லுவான். பெத்தவங்க நீங்கதான் எல்லாத்தையும் பார்த்து செய்யணும்!” என்று அவர்கள் பிடியிலே நின்றனர். லீலாவதி என்ன செய்வது எனத் தெரியாது விழி பிதுங்கினார்.

“லீலா, அவங்க சொல்றதுக்கு எல்லாம் சும்மா தலையை மட்டும் ஆட்டிவைங்க. இல்லன்னா, அதுக்கொரு பஞ்சாயத்தை வச்சுடுவாங்க. நம்ம பார்த்துக்கலாம். எப்படியும் எல்லாரும் நைட்டு கிளம்பிடுவாங்க...” என்று லோகநாயகிதான் தற்போதைய தீர்வொன்றை வழங்கினார். லீலாவதிக்கும் அதுவே சரியென்று பட, ஒப்புக்கொண்டார்.

சிறிது நேரத்திலே நிதிஷ் வந்துவிட்டான். சாரதிதான் அனைவருக்கும் அவனை அறிமுகம் செய்து வைத்தார்.

மலர் அருகே ஒரு இருக்கையில் அமர்ந்த நிதிஷ், “என்ன மலர் இது? என்கிட்ட கூட சொல்லாம கல்யாணம் பண்ணிட்டீயா?” என அதிர்ந்து கேட்டான். மலரும் நிதிஷூம் ஒரே பள்ளியில் பயின்றவரகள். அதுவும் இல்லாது ஒரே தெருவில் வசித்து வந்ததும், அவர்களுக்கு இடையே சிறுவயதிலேயே நட்பை மலரச் செய்திருந்தது.

எதுவும் பேசாது அவனை சலனமில்லாமல் பார்த்தாள் மலர். அதிலே நடந்ததை இன்னும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை எனப் புரிந்தது நிதிஷ்க்கு. அவளது மனதின் அலைப்புறுதலை அவனால் உணர முடிந்தது. எப்போதும் தெளிவாக இருக்கும் விழிகள் முழுவதும் இன்று கலக்கம் சூழ்ந்திருந்தது.

“எல்லாத்தையும் பார்த்துக்கலாம் டா. விடு” என்றவன் தோழியின் கரத்தை ஆதரவாகப் பிடித்தான். அதில் இவளுக்கு லேசாய் கண் கலங்கியது. இத்தனை பேர் அவளது விருப்பம் வெறுப்பு என எதையும் மதிக்காது நடந்து கொண்டிருக்க, இரண்டு நிமிடங்களில் தனது மனதை புரிந்து கொண்டவனைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தாள்.

“நீ சொன்ன சூட்கேஸ் எடுத்துட்டு வந்துட்டேன். வேற எதுவும் வேணும்னா சொல்லு மலர், நான் எடுத்துட்டு வந்து தரேன்...” என்றான்.

“இல்லை டா, இப்போதைக்கு ட்ரெஸ் மட்டும் போதும். இன்னொரு நாள் நான் வந்து எல்லாத்தையும் பேக் பண்ணி எடுத்துக்குறேன்!” என்றாள். சிறிது நேரம் அவளிடம் பேசிவிட்டு அகன்றான் நிதிஷ்.

“மலர், அதுதான் தனா ரூம்டா. போய் ட்ரெஸ் மாத்துறதுன்னா, மாத்திக்கோ!” என்று லீலா கூற, தலையை அசைத்தவள், அறைக்குள் நுழைந்தாள். தனஞ்செயன் அறையிலிருந்து சற்று நேரம் முன்புதான் வெளியேறி இருந்தான். கதவை நன்றாய் தாழ் போட்ட மலர்விழி சேலையை அவிழ்த்துவிட்டு இலகுவான இரவுஉடை ஒன்றை அணிந்தாள்.

முகத்திலிருந்த முகப்பூச்சு, தலையிலிருந்த பூ என அனைத்தையும் கலைத்தவள், முகத்தை கழுவிவிட்டு, தலையை தூக்கிக் கொண்டையிட்டாள். இப்போதுதான் எதிலிருந்தோ விடுபட்ட உணர்வு. மூச்சை நன்றாய் வெளிவிட்டாள்.

கதவு தட்டும் சத்தம் கேட்க, எழுந்து சென்று திறந்தாள். தனஞ்செயன் தான் நின்றிருந்தான். அவளை எதிர்பாராது திகைத்துப் பின், அவளது கழுத்திலிருந்த மாங்கல்யம் தங்களுக்கு இடையே நடந்த திருமணத்தை நினைவு படுத்தியது. நொடியில் தன்னை சமாளித்திருந்தான்.

மலருக்கு அப்படியொன்றும் பெரிதாய் இல்லை. கதவை திறந்து அவனுக்கு வழிவிட்டு, கட்டிலில் சென்று அமர்ந்துகொண்டாள். உள்ளே சொல்லலாமா? வேண்டாமா? என இவன் தயங்கி நிற்க, “உள்ள வாங்க...” என்ற மலரின் குரல் அவனது செவியை மோதியது.

உள்ளே நுழைந்த தனஞ்செயன் அவளைத் தயக்கமாய்ப் பார்த்தான். பின்னர் தொண்டையைச் செருமினான். எதற்கும் அசையவில்லை என்பதைப் போல விழிகளை மூடி கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

“சாரி விழி...” என்றான். அந்த அழைப்பில் பட்டென கண்களைத் திறந்தவள், “மலர்விழின்னே‌கூப்பிடலாம்...” என்றாள். லேசான கோபம் குரலில் எட்டிப் பார்த்தது.

“சரி, சாரி மலர்...” என்று இவன் தணிந்த குரலில் கூறினான். தவறு தங்கள் மீதுதான் என மனம் அடித்துக்கொண்டது.

“எதுக்கு இந்த சாரி? என்னை ஸ்பேரா யூஸ் பண்ணதுக்கா?” கைகளைக் கட்டிக்கொண்டு அழுத்தமாய் வினவினாள் மலர்விழி. அவளது கூற்றுப் புரியாது விழித்தவன், சடுதியில் உணர்ந்தான். அவளது பேச்சு தனாவின் கோபத்தை லேசாய் தட்டிவிட்டது.

“ம்ப்ச்... ஸ்பேரான்னா, என்ன அர்த்தம் மலர்?” இப்போது அவனது குரல் முழுவதும் இறுக்கம்.

“அதான் சுமித்ரா, உங்க அத்தைப் பொண்ணு ஓடுனதும், இன்னொன்னு இருக்கேன்னு என்னை உட்கார வச்சு தாலி கட்டுனீங்களே! அதை சொன்னேன்” என்றவள் வார்த்தைகள் சூடாய் வந்தன. அதில் நெற்றியைச் சுருக்கியவன் கரத்தை அழுத்தமாய் மூடித் திறந்தான்.

தன் மீது தவறு என தனா ஒருபடி இறங்கி செல்ல, இவள் பேச்சு அவனை உசுப்பியது. கோபத்தைக்கட்டுப்படுத்தியவன்,
“வார்த்தையை அளந்து பேசு விழி. எதையும் பிளான் பண்ணி பண்ணலை. சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் காரணம்...” பொறுமையை இழுத்துப் பிடித்து பேசினான். அவனை நக்கலாகப் பார்த்தாள் மனைவி.

‘இவளிடம் பேசுவது வீண். அவளாகப் புரிந்து கொண்டால்தான் உண்டு!’ என்றவன் அறையை விட்டு விறுவிறுவென வெளியேறினான். அவனையே வெறித்துப் பார்த்தாள் பெண்.

முகம் கடுகடுக்க வெளியே வந்த நண்பனைப் பார்த்த மாறன், “என்ன டா, என்ன சொன்னா மலரு?” என வினவினான்.

“ப்ம்ச்... என்ன சொல்லுவா? உன் தங்கச்சி மாறவே மாட்டாளா டா? நான் சொல்றதை காது கொடுத்துக் கேட்க கூட ரெடியா இல்லை அவ!” தனஞ்செயன் பொரிய, மாறனுக்கு சின்னதாய் சிரிப்பு முளைத்தது.

“ஹாஹா... ஒருநாள் கூட ஆகலை உனக்கு கல்யாணமாகி. அதுக்குள்ளேயும் இப்படி சலிச்சுக்குற... இனிமேதான் மச்சான் நீ தரமான சம்பவம் எல்லாம் பார்க்கணும்!” என்று இவன் சிரிக்க, தனாவிற்கும் புன்னகை பிறந்தது.

“நீ சொல்லணும்னு அவசியம் இல்லை. அவ பேசுன ரெண்டு வார்த்தையிலே ஓடி வந்துட்டேன் டா. ரொம்ப சூடா இருக்கா!” என்றான்.

“ஹக்கும்... உன்கிட்ட ரெண்டு வார்த்தை பேசுனா. ஆனால், எங்க கிட்ட ஒரு வார்த்தைக் கூட பேசலை. மேடம் எப்போ மலையிறங்குவாங்களோ தெரியலை. சின்ன வயசுல இருந்து இந்த கோபமும் பிடிவாதமும் மட்டும் இவளுக்கு அதிகமாகிட்டேதான் டா போகுது. ஆனால், ரொம்ப நல்லவ டா என் தங்கச்சி. நல்லா பார்த்துக்கோ...” என்ற மாறனிடம் தனா மெலிதாய் தலையை அசைத்துவைத்தான்.

இரவு தனா கூறியது போல எந்த சடங்கும் இல்லை. மலர்விழியின் பெற்றவர்கள் கிளம்பிவிட்டு, காலையில் வருவதாகத் தெரிவித்தனர். லீலாவும் ராமலிங்கமும் இங்கேயே தங்க வற்புறுத்த, மறுத்துவிட்டனர்.

மலர்விழி அவர்கள் மூவரையும்தான் பார்த்திருந்தாள். ஆனால், அவள் முகத்திலிருந்து எதையுமே பெற்றவர்களால் கண்டறிய முடியவில்லை.
சிறிதான வருத்தம், கலக்கம், கோபம் என எதுவுமே பிரதிபலிக்காது சிலை போல நின்றாள் பெண்.

“மலர், உன் கோபத்தை எல்லாம் எங்களோட வச்சுக்கோ. மாப்பிள்ளை பாவம் டி. நல்ல பையன், அடிச்சு எதுவும் வச்சுடாத!” என்று லோகு மகளிடம் யாருக்கும் கேட்காத வகையில் கூற, அவளது அனல்பார்வை அவரை பொசுக்கியது. சாரதி எதுவும் கூறாது மகளைப் பார்த்து தலையை அசைத்தார்.

மாறனுக்கு லேசாய் கண்கள் கலங்கின. சிறு வயதிலிருந்தே அடித்தாலும் பிடித்தாலும் ஒன்றாய் வளர்ந்தவர்கள், திடீரென பிரிவை சந்திக்கின்றனர். அதனால் லேசாய் உள்ளத்தில் வருத்தம் மேவியது அவனுக்கு.

“மலர், இங்க பாரு...” என மாறன் கூற, அவன் முகத்தைப் பார்க்காது வேறுபுறம் திரும்பினாள் மலர்விழி.

“என் முகத்தைப் பாரு...” என்றவன், “சாரி... அண்ட் ஹேப்பி மேரீட் லைஃப். கண்டிப்பா நீ இங்க இருந்தாதான் சந்தோஷமா இருப்ப...” என முணுமுணுத்து அவளது தலையைக் கலைத்துவிட்டான். இத்தனை நடந்தும் அசைந்தாள் இல்லை.

‘அவளது செயலைப் பார்த்து தனஞ்செயன் அயர்ந்து போனான். பெற்றவர்களிடமும் அண்ணனிடமும் கூட இவள் இத்தனை அடமாய் நிற்கிறாளே. தான் எப்போது இவளை சமாதானம் செய்வது?’ என்பது போல ஆயாசமாய் அவளை நோக்கினான். அவர்கள் மூவரும் விடைபெற்றனர்.

“சரி, போய் ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க. காலைல இருந்து நின்னுட்டே இருந்தது ரொம்ப டயர்டா இருக்கும்...” என்று லீலாவதி கூற, மலர்விழி தனஞ்செயனின் அறைக்குள் நுழைந்தாள்.

சிறிய கட்டிலில் இரண்டு பேர் படுக்க முடியாது என உணர்ந்தவள், போர்வையை எடுத்து தரையில் விரித்தாள். பின்னர் தலையணை ஒன்றை எடுத்து கீழே போடவும், அவள் பின்னே தனஞ்செயன் அறைக்குள் நுழைந்தான்.

“கட்டிலே அட்ஜஸ்ட் பண்ணி படுக்கலாமே. ஏன் கீழே பெட்ஷிட்டை விரிக்கிற?” என இவன் வினவ, அதை காதில் வாங்காதவள், தரையில் படுத்துவிட்டாள்.

“சொல்றதை காதிலே வாங்க மாட்டியா விழி?” தனா லேசாய் குரலை உயர்த்த, “மலர்விழி என் பேர்...” என அவளும் பல்லைக் கடித்தாள்.

“ஆமா! அதுதான் இப்போ ரொம்ப முக்கியம்...” என முணுமுணுத்தவன், ‘சரிதான் போடி’ என கட்டிலில் படுத்துவிட்டான். காலையிலிருந்து அலைந்தது அசதியாய் இருந்தாலும், தனாவிற்கு உறக்கமே வரவில்லை. நேற்று வரை தன் மனைவி சுமித்ரா என மனதில் ஒரு பிம்பத்தை வைத்திருந்தான். ஆனால், ஒரே நாளில் மொத்தமாய் எல்லாம் மாறியிருந்தது. இன்னுமே அவனால் நடந்ததை நம்பவே முடியவில்லை. காலையில் பெரியவர் சொல்லிய வார்த்தை இப்போதும் செவியில் மோதியது.
இவள்தான் தனக்கு மனைவி என கடவுள் ஏற்கனவே எழுதி வைத்திருக்கிறாரோ? என்ற எண்ணம் வேறு வந்தது. சுமித்ரா ஓடிப்போனதில் அவனுக்கு கோபமும் வருத்தமும் இருந்தது.

ஆனாலும் மனதின் ஓரத்தில் லேசாய் நிம்மதி கீற்றுப் பரவியது. வேறொருவரை விரும்பிவிட்டு சுமித்ரா தனக்கு மனைவியாய் வந்திருந்தால், அவளுக்கும் அது கஷ்டம். தனக்கும் அது கஷ்டம். அதற்கு இதுவே பரவாயில்லை எனத் தோன்றியது.

இருந்தும் அவள் இப்படி மேடை வரை வந்து ஏமாற்றியதை அவன் மன்னிக்கத் தயாராய் இல்லை. பெற்றவர்களிடம் கூற பயமாய் இருந்தால், தன்னிடமாவது ஒரு வார்த்தை உரைத்திருந்தால் இந்த திருமண பேச்சை முன்பே தடுத்து இருப்பான். இப்படி அனைவர் முன்னிலையிலும் அவளது தாய், தந்தை மட்டும் அல்லாது தன்னுடைய பெற்றவர்களையும் சேர்த்து சுமி அவமானப்படுத்திச் சென்றது மனதில் அவள் மீதான எண்ணத்தை மொத்தமாய் மாற்றிவிட்டிருந்தது. முன்பாவது அத்தை மகள், தனக்கு மனைவியாய் வரப்போகிறவள் என்ற எண்ணம் இருந்தது. காலையில் அவளது செயலில் மொத்தமும் சிதைந்து போனது. சுமித்ரா மீது தனாவிற்கு தனிப்பட்ட விருப்பம் எதுவும் இல்லை. பெற்றவர்கள் கூறினார்களே என்றுதான் அவளைத் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டான். அதனால் அவளது செயல் இவனை வருத்தவில்லை‌, கோபம் கொள்ளத்தான் செய்திருந்தது.

மலர்விழியை சிறுவயதிலிருந்தே தனாவிற்குத் தெரியும். ஆனால், அவள் மீது அவனுக்கு ஈர்ப்போ, ஆசையோ இருந்தது இல்லை. அதற்கு அவளது குணமும் ஒரு காரணம். எளிதில் யாருடனும் நட்பை பாராட்டவோ, உறவு கொள்ளவோ மாட்டாள். பிடிவாதக்காரி, அழுத்தமானவள். அதே சமயம் எல்லா விஷயத்திலும் நேர்மையை எதிர்பார்ப்பாள். மாறனை காண இவன் அங்கு சென்றாலும் இவளைக் காண்பது அரிதுதான். அறைக்குள்ளே தான் இருப்பாள். வெளியே அவளைக் காண முடியாது. சிந்தனை சிறு வயது ஞாபகங்கள் என மலர்விழியைத்தான் சுற்றி வந்தன. அப்படியே திரும்பி அவளைப் பார்க்க, நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் மலர்விழி.

'எப்படி இவளுக்கு தூக்கம் வருகிறது? எனக்குக் கூட திருமணம் என்று தெரியும். பெண் மாறியதில் மனதில் ஆயிரம் எண்ணங்கள் வியாபித்திருக்கிறது. ஆனால், இவளுக்கு நடந்ததோ, ஆக மொ
த்தத்திற்கும் எதிர்பாரா நிகழ்வு. அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, நன்றாய் உறங்குகிறாளே!' என எண்ணியவன், அப்படியே சிறிது நேரத்திலே தானும் உறங்கிப் போனான்‌.

 
Top