• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,264
Reaction score
3,704
Points
113
எண்ணம் – 14

மலர்விழிதான் முதலில் கண்விழித்தாள்‌. அவளது இடையைச் சுற்றி தனஞ்செயன் கரங்கள் வளைத்திருந்தன. அவன் புஜத்தில்தான் தலைவைத்து இவள் படுத்திருந்தாள்.

கணவனின் முகம் மிக அருகில் இருக்கவும் அவனையே சில நிமிடங்கள் ஆழ்ந்து பார்த்தாள். என்ன முயன்றும் இந்த ஆறு வருடங்களில் ஒரு முறை ஒரு நாள் கூட இந்த முகத்தை அவளால் எண்ணாது இருக்க முடியவில்லை. ‘ஏன் இவனை எனக்குப் பிடித்து தொலைத்தது?’ எப்போதும் எழும் கேள்விதான் மண்டையைக் குடைந்தது. மெதுவாய் கைகளைத் தூக்கி அவனது முன்முடியைக் கோதினாள்.

சிறிது நேரம் அவனையேப் பார்த்திருந்தவள், மெதுவாய் அவன் கரத்தை இடையிலிருந்து எடுத்தாள். எழுந்து அமர்ந்து விரிந்திருந்த முடியைக் கொண்டியிட்டு கழிவறைக்குள் மலர் நுழைய, தனஞ்செயன் விழிகளைத் திறந்தான். அவன் எப்போதோ விழித்துவிட்டான். எழ மனமில்லாது படுத்திருந்தான்.

வேண்டுமென்றே தான் அவளது இடையில் கையைப் போட்டு அணைத்திருந்தான். கண்விழிக்கும் போது அதைப் பார்த்து மலரின் எதிர்வினை என்னவாக இருக்கும் என காண்பதற்காக இவன் விழிகளை மூடி உறங்குவது போல நடித்தான். தொடர்ந்து அவளின் பார்வையும் மெலிதாய் தளிர்க் கரங்கள் நீண்டு அவனது முன்முடியைக் கோதியதையும் அவனால் நன்றாகவே உணர முடிந்தது.

'தான் பார்த்தால் முறைக்கும் முறைப்பும், கோபமான முகமும் சுழித்த உதடும் என இவையனைத்தும் தூங்கும்போது மட்டும் எங்கு சென்று ஒளிந்து கொண்டதோ?' மனம் கேலி செய்தது.

‘எதற்கு இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்? எத்தனை நாள் இவள் மறைத்துவிடலாம் என நினைத்திருக்கிறாள்?’ என்ற எண்ணத்துடன் தானும் எழுந்தான்.

மலர்விழி சமையலறைக்குச் சென்று தேநீரைத் தயாரித்தாள். தனக்கொரு குவளை எடுத்துக்கொண்டவள், கூடத்திலிருந்த நீள்விருக்கையில் வந்து அமர்ந்தாள். காலை சம்மணம் போட்டு வசதியாய் அமர்ந்து தேநீரை சுவைத்தவள், அலைபேசியை எடுத்து சாரதிக்கு அழைத்தாள்‌. காலையிலே இரண்டு முறை அவர் அழைத்து இருப்பதாக தவறி அழைப்பு காட்டவே, திருப்பி அழைத்திருந்தாள்.

மகளின் உடல்நிலை எப்படி இருக்கிறது என அவர் விசாரிக்க, மலர்விழி அதற்குப் பதிலளித்தாள். உணவு மேஜையில் அமர்ந்து தானும் தேநீரை அருந்திய தனாவின் பார்வை முழுவதும் மனைவியிடம்தான். அவளது பாவனை, பேச்சு என அனைத்தையும் கவனித்தான்.

எதிலுமே ஒரு துளி கூட அவனால் தனக்கான காதலை, தேடலை கண்டறிய முடியவில்லை. எப்போதும் போல திமிராய், அதைவிட முறைப்புமாகத்தான் அவனைப் பார்த்து வைத்தாள். இவள் தான் அந்த நாட்குறிப்பேட்டை எழுதி இருப்பாளா? என்ற சந்தேகம் இப்போது கூட அவனுக்கு முளைத்துத் தொலைத்தது.

‘எத்தனை திமிர் இவளுக்கு? எவ்வளவு நெஞ்சழுத்தம்‌. இத்தனை நாட்களாக தன்னைப் பிடிக்காது என்று சாதித்துவிட்டாளே! ஆறு வருடமாகத் தன்னை இவள் காதலித்து இருக்கிறாள். ஆனால், அதை அவளது பேச்சில் செயலில் என எங்குமே தன்னால் கண்டறிய முடியவில்லை போல’ மனம் அவனையே சாடியது.

லோகநாயகி அடுத்துப் பேச, மாறனிடமும் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டே அழைப்பைத் துண்டித்தாள். சமையல்காரப் பெண்மணி உள்ளே நுழைந்தார்.

“வாங்க கா...” என சின்ன புன்னகையுடன் அவரை வரவேற்றவள், “அக்கா, காரமா பட்டானி குருமாவும், சப்பாத்தியும் செஞ்சு வைங்க கா. ரெண்டு நாளா காய்ச்சல்னால வாயே கசந்து போச்சு...” என அவரிடம் பேசிவிட்டு அறைக்குச் சென்றவளின் பார்வை தனஞ்செயனை தொட்டு மீண்டது. அதை அவனாலும் உணர முடிந்தது.

காலையில் எழுந்ததுமே எதையோ சிந்திப்பது போல இருந்த தனஞ்செயனின் பாவனையில் என்ன என்பதாய் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தவாறு கடந்தாள் மலர்விழி.

குளித்து முடித்து வந்தவள், இருந்தப் பசியில் நான்கு சப்பாத்திகளை வயிற்றுக்குள் தள்ளினாள். இப்போது உடல்நிலை இயல்புக்கு வந்தது போலிருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் தேர்வுகள் இருக்க, அறைக்குள் சென்று புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினாள்.

மலரைக் கவனித்த தனஞ்செயனுக்கு இப்போதே அனைத்தையும் கேட்டு இழுத்து வைத்து அவளது கன்னத்தில் நான்கு விட வேண்டும் போலிருந்தது. சூழ்நிலை தனாவின் கைகளைக் கட்டிப் போட்டிருந்தது. அவளது உடல்நிலை ஒரு காரணம் என்றால், தேர்வுகள் மற்றொரு காரணம். இப்போதே தனா மலரிடம் நடந்ததை விசாரித்து அவளை ஒருவழியாக்க முடியும். அத்தனை கோபம் மனசுக்குள் கனன்றது. இருந்தும் அவளிருக்கும் நிலை கருதி அமைதிகாத்தான். ஆனால், அதை அதிகம் சோதித்தாள் மலர்விழி.

அலுவலகத்திற்கு நேரமாக கிளம்பிச் சென்றுவிட்டான். மலர்விழி அறையிலிருந்து வெளியே உணவுண்ண மட்டும்தான் வந்தாள். தீவிரமாக படித்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருக்க, தனா எங்கேயும் செல்லாது படுத்திருந்தான். கையில் அலைபேசியை வைத்திருந்தவனுக்கு அப்போதுதான் நினைவு வந்தது மாறனைப் பார்த்து பேச வேண்டும் என எண்ணியது. எதுவும் பேசாது எழுந்து குளித்து கிளம்பி, மாறன் வீட்டிலிருக்கிறானா என அலைபேசியில் அழைத்து உறுதி செய்துவிட்டு அவனைக் காண சென்றான்.

“வாப்பா தனா, உள்ளே வா...” அன்று சாரதிக்கும் விடுமுறை நாள். அதனால் அவரும் வீட்டிலே இருந்தார்.

அவரிடம் சிறிது நேரம் அமர்ந்து பேசினான். லோகநாயகி தேநீரை எடுத்து வர, அதைக் குடித்துவிட்டு மாறனைப் பார்க்க அறைக்குள் நுழைந்து கதவை சாற்றினான்.

விடுமுறை தினமாதலால் கட்டிலில் படுத்திருந்த மாறன், அலைபேசியில் ஆங்கில படமொன்றைப் பார்த்துக்
கொண்டிருந்தான். தனாவைக் கண்டதும் அதை அணைத்து வைத்தவன், “வா டா, என்ன ஏதோ பேசணும்னு சொன்ன?” என மாறன் கேட்டு முடிவதற்குள் அவனது கன்னத்தை சேர்த்து ஓங்கி ஒரு அறை விட்டிருந்தான் தனஞ்செயன்.

அவனின் செயலை எதிர்பாராத மாறன் தள்ளாடி கீழே விழச் சென்று சுவற்றைப் பிடித்து தன் நிலைப் படுத்தியவன், “இப்போ எதுக்கு டா அடிச்ச?” என கன்னத்தில் கையை வைத்து கோபத்துடன் வினவினான்.

மாறனை அடித்தக் கையை உதறிய தனா, “வாயை மூட்றா! இன்னொரு வார்த்தைப் பேசுன, வர்றக் கோபத்துக்கு சாவடிச்சுடுவேன்...” சினத்தில் பல்லை நறநறவெனக் கடித்தான்.

மாறனுக்கு அவனது முகத்தைப் பார்த்ததும், பட்டென நினைவு வந்தது. “டைரியைப் படிச்சியா டா?” பதட்டத்துடன் வினவ, தனா அவனை கோபமாய் உறுத்து விழித்தான். விட்டால் மாறனைப் பார்வையிலே பொசுக்கி இருப்பான்.

இரண்டடி பின்னே நகர்ந்த மாறன், “மச்சான்... அது மலர்தான் டா உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்லக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டா!” கம்மிய குரலில் கூறினான்.

“ஆமா, இவ பெரிய தியாகச் செம்மல். தியாகம் பண்றா காதலை... இடியட். அவளுக்கு விழ வேண்டிய அடி. உடம்பு சரியில்லை, எக்ஸாம்க்கு படிக்கிறாளேன்னு கோபத்தைக் கட்டுப்படுத்திட்டு இருக்கேன். இல்லை, உனக்கு கொடுத்ததை விட அதிகமாக அவ கன்னத்துல நாலு வச்சிருப்பேன்...” கோபத்தில் இரைந்தவனை மாறன் சற்றே கலக்கத்துடன் பார்த்தான்.

“டேய், டைரியைப் படிச்சா நீ மலரைப் புரிஞ்சுப்பன்னு தான் நினைச்சேன். ஆனால், இவ்வளோ கோபமா இருக்கீயே டா!” மாறன் குரலில் கலக்கம். எங்கே இதனால் மீண்டும் பெரிய இடைவெளி அவர்களுக்கிடையில் விழுந்துவிடுமோ என்று.

“வாய்ல நல்லா வருது டா...” என கையில் கிடைத்தவற்றை மாறன் மீது எறிந்த தனா, “ஏன் டா, நான் தான் புரிஞ்சுக்கணும், அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும். ஈகோவை வர விடக் கூடாது. ஆனால், உன் தங்கச்சி மட்டும் லவ் பண்ணதை கூட மனசுக்குள்ளே புதைச்சு வச்சிடுவா. ஈவன் என்னைப் பிடிக்கும்னு ஒரு வார்த்தை, பார்வை எதுவுமே கிடையாது. எப்பப் பார்த்தாலும் சண்டை! சண்டை! பேசப் போனாலே எதிரியைப் பார்க்குற மாதிரி பார்ப்பாளாம். நான் இந்தப் படத்துல கதைல எல்லாம் வர்ற மாதிரி இவங்க கண்ணைப் பார்த்தே கண்டு பிடிக்கணுமோ?” என நக்கலாகக் கேட்டு வைத்தான் தனா. கட்டுக்கடங்காத கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

“டேய்... அதில்லை டா!” மாறன் ஏதோ கூற வர, அவனைத் தன் முறைப்பிலே அடக்கிவிட்டான்.

“இவன் பெரிய புடுங்கி மாதிரி அவ சத்தியத்துக்கு கட்டுப்பட்டு அமைதியா இருப்பானாம். என்னைப் பார்த்தா உங்க ரெண்டு பேருக்கும் கேனைப் பையன் மாதிரி தெரியுதா?” என மேலும் இரண்டு கெட்ட வார்த்தைகளை உதிர்த்தான்.

“தனா, போதும் டா. என்னமோ எங்க மேல மட்டும் தப்பு இருக்க மாதிரி பேசாத டா. அன்னைக்கு சூழ்நிலைல நாங்க பண்ணது தான் சரி...” என்றான் இவனும் கோபமாய்.

“எது டா சரி, சம்பந்தப்பட்ட என்கிட்ட ஒரு வார்த்தைக் கூட கேட்காம உங்க இஷ்டத்துக்கு முடிவெடுக்குறதா? இதுல நான்தான் முக்கியமா இருந்திருக்கணும். ஆனால், அண்ணனும் தங்கச்சியும் அழுத்தக்காரங்க டா. கடைசிவரை நீங்களா எதையும் சொல்லலை!” பொரிந்தான் தனா.

“ப்ம்ச்... புரியாம பேசாத டா. மலர் சொல்றது போல இப்பவும் எதுவுமே மாறலை. நீங்க, உங்கக் குடும்பம் வேற டா. உங்க வாழ்க்கை வேற. அப்போ அன்னைக்கு நாங்க எடுத்தது சரியான முடிவு டா!”

“அடிச்சு சாவடிச்சுடுவேன் உன்னையும் அவளையும். பெரிய பணம், சொத்து, அந்தஸ்துன்னு, மயிறு, மட்டைன்னுட்டு. என்னைக்காவது நான் உங்களை பணத்தை வச்சு ட்ரீட் பண்ணி இருக்கேனா டா? இதான் நீங்க ரெண்டு பேரும் என்னைப் புரிஞ்சு வச்சிருக்க லட்சணம்...” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் தனா. அவன் கூறியது அத்தனையும் உண்மையே. தனா எப்போதும் பணம், பொருள் என எதற்கும் பெரிதாய் முக்கியத்துவம் கொடுத்தது இல்லையே.

அவன் வார்த்தையில் கொஞ்சம் தணிந்தான் மாறன். “தனா, உனக்குப் நான் சொல்றது புரியலையா டா? உன்னைப் பொறுத்தவரை பணம், அந்தஸ்து எதுவும் பெருசில்லை டா. ஆனால், உங்கக் குடும்பம், அதைவிட உங்களோட சொந்தக்காரங்க. ஏன் இப்பவும் அப்படித்தானே பேசுறாங்க!” மாறன் குரலில் இப்போது வேதனை இருந்தது. அன்றைய சூழலில் மலர் அழுத அழுகையை நினைத்தால், இப்போதும் அவனை மொத்தமாய் அது உலுக்கிவிடும்.

“உன் தங்கச்சி வாழப் போறது என் கூடவா? இல்லை என் சொந்தக்காரங்க கூடவா டா?” தனா தீர்க்கமாய் வினவினான்.

“பேசுறதுக்கும் கேட்குறதுக்கும் ஈஸிடா. ஆனால், ரியாலிட்டில நாங்க எவ்வளோ கஷ்டத்தை, பிரச்சனையை பேஸ் பண்ணணும்னு அன்னைக்கு நல்லா யோசிச்சு எடுத்த முடிவுதான் டா அது!”

“ச்சு... சும்மா சொன்னதையே சொல்லாத டா. கோபத்துல அடிச்சு பல்லை உடைச்சிடப் போறேன்!” என்ற தனஞ்செயனுக்கு மனதே ஆறவில்லை. எவ்வளவு பெரிய விடயம், அதிலும் நான் சம்பந்தப்பட்ட விடயத்தில் என்னை ஒரு வார்த்தைக் கூட கேட்காது இவர்களே என்னை முன்னிறுத்தி ஒரு முடிவை எடுத்துவிடுவார்களாம். இதில் ஆறு வருடமாய் சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது மனதில் வைத்து செத்துக் கொண்டிருக்கிறாள் ஒருத்தி எனக் கொதித்துப் போனான்.

கடந்த ஆறு வருடங்கள் எத்தனை கொடுமையாய் நகர்ந்தன என மலர்விழி எழுதியிருந்த ஒவ்வொரு பக்கமும் அவளைவிட தனஞ்செயன் துடித்துப் போனான், தவித்துப் போனான். ஆங்காங்கே சில பக்கங்களில் கண்ணீர் தடயங்கள் கூட இருந்தன. அதை வருடியவன் கை நடுங்கிப் போனது.

“டேய், என்ன நினைச்சுட்டு நீ இப்படி பேசுற. சரி, நீ சொல்ற மாதிரியே அன்னைக்கு மலர் வந்து உன்கிட்ட விருப்பத்தை சொல்லி இருந்தா, உடனே சம்மதிச்சு இருப்பீயா?” மாறன் காட்டமாய்க் கேட்டான்.

“அறிவு இருக்கா டா அண்ணனுக்கும் தங்கச்சிக்கும். விழி ஸ்கூல் படிச்சுட்டு இருந்தா டா. அவளை எனக்கு அந்த மாதிரி எல்லாம் பார்க்கவே தோணலை. நீங்க வந்து என்கிட்ட சொல்லி இருந்தா, அன்னைக்கு சிட்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி ஒரு முடிவெடுத்து இருக்கலாம். விழி இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இருக்கத் தேவையில்லையே! ஒருவேளை எனக்கு அவளைப் பிடிச்சு, ரெண்டு பேரும் வெயிட் பண்ணி, ரெண்டு வீட்லயும் சம்மதம் வாங்கி, இந்நேரம் எங்கக் கல்யாணம் நல்லபடியா கூட நடந்து இருக்கலாம்...” என மாறனை முறைத்தவன், “எதையும் யோசிக்காம, நீங்களா எப்படி டா முடிவு பண்ணீங்க?” மீண்டும் அதையேக் கேட்டான்.

மாறனிடம் பதிலில்லை. ஒருவேளை தனாவிடம் அன்றே உரைத்து இருக்கலாமோ? என மனதும் மூளையும் தாமதமாக ஆலோசனை கூறியது. தலையைக் குனிந்து நின்றான். அப்போது சரியெனப்பட்ட விஷயங்கள் இப்போது மறுபகுப்பாய்வு செய்திருக்கலாமோ எனத் தோன்றியது.

அவனின் அமைதியைப் பார்த்த தனா, “எக்ஸாம் முடியட்டும்.‌ உன் தங்கச்சியைப் பார்த்துக்குறேன்!” என்றான்.

மாறன் படக்கென நிமிர்ந்தான்.
“டேய், அவ மேல ஒரு அடி விழுந்துச்சு, நான் மனுஷனா இருக்க மாட்டேன்...” என்றான் கோபமாய்.

“ஓஹோ... செய்றதையும் செஞ்சுட்டு கோபம் வருதோ ஐயாவுக்கு. என்ன டா பண்ணுவ? என்ன பண்ணுவ நீ? இப்போ சொல்ற...” தனா கையை முறுக்கிக்கொண்டு ஒரெட்டு முன்னே வைக்க, மாறன் பயந்து போனான். ஏற்கனவே அவன் கொடுத்த அடியில் ஒரு பக்க கன்னம் வீங்கிவிட்டது. மீண்டும் உடம்பு தாங்காது என மனம் அலறியது.

“சரி, சரி டா தனா. கோபப்படாத டா. எதுனாலும் பேசிக்கலாம்...” இப்போதைக்கு அவன் கோபத்தைக் குறைக்கும் வழியை யோசித்தான் மாறன்.

நண்பனை முறைத்த தனா நகரப் போக, “தனா, சாரி டா...” என மாறன் அவன் கையைப் பிடிக்க, அவனை ஒரே நொடியில் உதறித் தள்ளி இருந்தான்.

“அவளைக் கூட மன்னிப்பேன் டா. ஆனால், உன்னை...” என மீதியைக் கூறாது தலையை இடம் வலமாக அசைத்தான். உண்மையில் தனஞ்செயன் மாறன்மீது அத்தனைக் கோபமாய் இருந்தான். மலர்விழி அப்போது சிறியப் பெண். அவளுக்குத்தான் எதுவும் புரியாது, யோசிக்கும் அளவுக்கு பக்குவம் இல்லை. ஆனால், இவனுக்கு அறிவு எங்கே போனது?’ என மனம் மாறனை வகை தொகையில்லாமல் சாடியது.

கதவில் கையை வைத்தவன் ஒரு நொடி நிதானித்து திரும்பினான். மாறன் என்னவெனப் பார்க்க, “நான் அந்தப் பக்கம் போனதும் உன் தங்கச்சிக்கு கால் பண்ணி நடந்ததை எல்லாம் சொன்ன இல்ல... சொல்ல நினைச்சா கூட இன்னொரு கன்னமும் வீங்கிடும்‌‌...” மிரட்டலாய் உரைத்தான்.

“டேய் யப்பா சாமி, நீயாச்சு உன் பொண்டாட்டியாச்சு. இடையில நான் வந்தா, என்னை என்னென்னு கேளு. முத நீ கிளம்பு டா!” மாறனும் எரிச்சலில் கூறினான். இவன் என்னமோ என் மீது மட்டுமே அனைத்து தவறும் என்பது போல பேசுகிறானே என முனைத்துக் கொண்டான்.

வீட்டிற்குச் சென்ற தனாவின் முழு கவனமும் மனைவி மீதுதான். அவளுடைய தேர்வுகள் முடியட்டும் எனப் பொறுமையை இழுத்துப் பிடித்துக் காத்திருந்தான். அதையெல்லாம் மலர்விழி உணரவில்லை.

படிப்பு படிப்பு என அதிலே உழன்றாள். பத்து நாட்கள் தொடர்ந்து ஏழு பரிட்சைகள் இருக்க, இரவு தூக்கம் தொலைத்துப் படித்தாள். படிப்பில் முழு கவனம் இருந்தப் போதும் தனாவின் மீது எப்போதும் போல ஒரு கண்ணை வைத்திருந்தாள்.

முதலில் எல்லாம் தனஞ்செயன் அதை உணர்ந்தது இல்லை. ஆனால், இப்போது அவனால் உணர முடிந்தது. அவன் மூன்று வேலையும் சரியாய் உணவு உண்கிறானா? வேலைக்கு சென்றுவிட்டு சரியான நேரத்திற்கு வருகிறானா? என தன்னைக் கண்டும் காணாதது போல பார்க்கும் மலர்விழியின் பார்வை இப்போதுதான் புத்திக்கும் மூளைக்கும் உறைத்தது. முறைத்துக் கொண்டேனும் தன்னை அவள் கவனிக்கிறாள் என தனாவால் உணர முடிந்தது.

திங்கள் கிழமை ஆரம்பித்த பரிட்சை அடுத்த செவ்வாய்கிழமை தான் முடிவுறும். தூங்கா இரவுகளை நெட்டித் தள்ளி ஒரு வழியாய் ஆறு பரிட்சைகளை முடித்தவள், செவ்வாய் கிழமை சற்றே ஆசுவாசமும் சந்தோஷமுமாய் கிளம்பினாள். அன்றுதான் கடைசி பரிட்சை. அதையும் நன்றாய் எழுதி முடித்துவிட்டால் போதும் என்று மனம் களிப்புற்றது.

இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்தவள், அதை இயக்கினாள். ஆனால், எரிபொருள் இல்லையென அது தன் இயக்கத்தை நிறுத்த, சற்றே பதட்டமடைந்தாள் மலர்விழி.

‘கடவுளே! கடைசி எக்ஸாம் அப்போவா இந்த ஸ்கூட்டில பெட்ரோல் தீரணும்!’ என நொந்தவள், அதை நிறுத்திவிட்டு ஏதேனும் வாகனம் கிடைக்கிறதா எனப் பார்த்தாள். நேரம் சென்று கொண்டே இருந்தது.

அலுவலகத்திற்கு கிளம்பிய தனஞ்செயன் அவளைக் கேள்வியாய்ப் பார்த்தான். பின்னர் இருசக்கர வாகனம் பழுதடைந்துவிட்டது போல என எண்ணியவன், மகிழுந்தை இயக்கி அவள் முன்னே சென்று நின்றான்.

அவனைக் கவனித்தும் அதை அசட்டை செய்தவள், அந்தத் தெரு வழியே வாகனங்கள் எதுவும் வருகிறதா எனப் பார்த்தாள். அவள் செய்கையில் பல்லைக் கடித்த தனா, ‘திமிரு... உடம்பெல்லாம் திமிரு. கொழுப்பு. ஈவ்னிங் பார்த்துக்குறேன் டி உன்னை!’ எனக் கடந்து சென்றுவிட்டான். ஐந்து நிமிடங்கள் கழித்தும் அந்த வழியே எந்த வாகனமும் வராததில் மலர்விழிக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது‌.

இன்னும் அரைமணி நேரம்தான் இருந்தது தேர்வுக்கு. இங்கிருந்து பிரதான சாலைக்கு நடந்து சென்றால் வாகனங்கள் எளிதில் கிடைக்கும். ஆனால், அங்கு செல்ல பத்து நிமிடங்களாவது ஆகும். அதற்குப் பின்னர் வாகனத்தைப் பிடித்து கல்லூரிக்குச் சென்றால் தாமதமாகிவிடுமே என மனம் பதறியது. அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். செயலியில் பதிவு செய்தால் மகிழுந்து வர இருபது நிமிடங்களாகும் என நேரக் கணக்கை அது காண்பித்துத் தொலைத்தது.

‘கடவுளே!’ என ஒரு நொடி விழிகளை மூடித் திறந்தவள் முன்னே மகிழுந்து வந்து நின்றது. தனஞ்செயன் தான் மீண்டும் வந்திருந்தான். மகிழுந்தையும் அவனையும் முறைத்துப் பார்த்தாள்.

‘இவனுடன் செல்ல வேண்டுமா?’ எனத் தோன்றினாலும் இப்போதைக்கு வேறு வழியில்லாது மகிழுந்தில் ஏறி அவனருகே அமர்ந்தாள்.

திசைமாற்றியை இயக்கிய தனஞ்செயன் உதட்டோரம் நக்கலாய் புன்னகை வழிய, ‘எக்ஸாமே எழுதலைனாலும் பரவாயில்லை!’ இறங்கிவிடலாம் என்ற நோக்கத்தில் கதவில் கையை வைத்தாள்‌ மலர்விழி.

“சென்டர் லாக் பண்ணிட்டேன். டோன்ட் ட்ரை டூ ஒபன்...” கொஞ்சமல்ல நன்றாக தனாவின் குரலில் கேலி இருந்தது. பல்லைக் கடித்துவிட்டு மறுபுறம் திரும்பிக்கொண்டாள் விழி.

சரியாகப் பத்து நிமிடத்திற்கு முன்பாகவே கல்லூரி வாயிலில் இறக்கிவிட்டான் தனா. அவனைப் பார்க்காது இறங்கி கல்லூரிக்குள் சென்றுவிட்டாள் மலர்விழி. அவள் செல்லும் திசையைப் பார்த்தவன், அலுவலகம் கிளம்பினான்.

தேர்வை நன்றாய் எழுதி முடித்திருந்தாள் மலர்விழி. மனம் முழுவதும் சந்தோஷம். எங்கே ஏதேனும் ஒன்றில் சொதப்பிவிடுவோமோ? என உடல்நிலை சரியில்லாத போது மனதில் லேசான பயம் எட்டிப்பார்த்தது. அதனாலே எப்போதைக்கும் விட இந்தத் தேர்வில் அதிகக் கவனம் செலுத்திப் படித்தாள்‌. நன்றாய் தூங்கி பத்து நாட்களானது எனச் சோர்ந்த உடலும் மனதும் ஓய்விற்குக் கெஞ்சியது‌. வீட்டிற்குப் போனதும் கண்டிப்பாக நன்றாய் தூங்கி
எழ வேண்டும் என்ற எண்ணத்துடன் அவள் உள்ளே நுழைய, ஒற்றை வார்த்தையில் அவளுடைய மொத்த நிம்மதியையும் பறித்திருந்தான் தனஞ்செயன்.
 
Top