• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,249
Reaction score
3,668
Points
113
எண்ணம் – 1

இன்னுமே இருள் விலகாதிருந்தக் காலை பொழுது. மெல்லிய முணுமுணுப்பாய் பூச்சிகளின் ரிங்காரமும், பறவைகளின் சத்தமும் செவியை மோதின. பால்கனியிலிருந்த சாய்விருக்கையில் சற்றே உடலை வளைத்து அமர்ந்திருந்த மலர்விழியின் கைகளில் ஒரு எழுதுகோல் இருந்தது. தலைக்கு மேலே எரிந்த நியான் விளக்கும் கணினி உமிழ்ந்த வெளிச்சமும் அந்த இடத்தை பளிச்சென மின்னச் செய்தன. மேஜை மீதிருந்த காகிதத்தில் எதையோ எழுதுவதும் பின்னர் கணினியில் அதை தட்டச்சு செய்வதுமாய் இருந்தாள்.

மலர்விழி பிரபல பொறியியல் கல்லூரி ஒன்றில் கணிப்பொறியியல் முதுகலை இரண்டாம் வருடம் படித்து வருகிறாள். நாளை அவளுக்கு செமினார் வழங்கப்பட்டிருந்தது. அதற்காகப் பாடக் குறிப்புகளையும் இதர இத்யாதிகளையும் சேகரித்துக்
கொண்டிருந்தாள்.

தொடர்ந்து விசைப் பலகையில் நர்த்தனமாடிய விரல்களும், உற்றுக் கவனித்ததில் பூத்துப் போயிருந்த விழிகளும் சற்றே ஓய்வு வேண்டுமென கெஞ்சின.‌ ஏனோ அன்று அவளுக்கு உறக்கம் அண்டவே இல்லை. அதிகாலை மூன்று மணியிலிருந்து இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறாள்.

குனிந்தே மடிக்கணினியை நீண்ட நேரம் பார்த்ததில் கழுத்தில் வேறு வலியெடுத்தது. கழுத்தை இரண்டு புறமும் திருப்பியவள், தலையை அப்படியே நாற்காலியில் சாய்த்தவாறு அமர்ந்தாள்.


“ஏன் டி, எதுக்கு இவ்வளோ காலைல இங்க உக்காந்துட்டு இருக்க?” மெல்லிய அதட்டலுடன் அங்கு வந்தார் லோகநாயகி. அவர் கையிலிருந்த தேநீர் கோப்பையைக் கண்டதும் உற்சாகமானவள்,

“ம்மா... தேங்க் யூ” என தாயின் கேள்விக்குப் பதிலளிக்காது தேநீரைப் பருக ஆரம்பித்தாள்.

“ஏன் டி, கேட்குற கேள்விக்குப் பதில் இல்லை. எவ்வளோ நேரமா இங்க உக்காந்து இருக்க. பனி வேற... சளி புடுச்சுக்கப் போகுது டி!” என்ற லோகநாயகியைப் பார்த்து மெலிதாய் சிரித்து வைத்தாள் மகள்.

“சரி, சரி. காலைல 9 டூ 10 முகூர்த்தம். இப்போ இருந்து கிளம்புனாதான், எட்டு மணிக்காவது கிளம்புவோம். போய்க் குளிச்சுட்டு நான் எடுத்து வச்சிருக்க சேலையைக் கட்டு டி!” என்றார் லோகநாயகி.

“என்ன முகூர்த்தம் மா?” அசட்டையாய் மகள் வினவ, அதில் தாயின் பொறுமை சற்றே பறந்தது.

“ஏன்டி, போன வாரமே சொன்னேனே. லீலா பையன் தனாவுக்கு கல்யாணம், கட்டாயம் நம்மளை வர சொல்லி இருக்காங்கன்னு...”

“ம்மா, நான் வரலை. நீங்க மட்டும் போய்ட்டு வாங்க...” மலர் மறுப்பாய் தலையை அசைக்க,

“எனக்கொன்னும் இல்லை. உன் அண்ணன்கிட்டே பதில் சொல்லிக்கோ. அவங்க நம்ப வீட்டுக்கு வந்து அத்தனை முறை எல்லாரும் வரணும்னு சொல்லிட்டு போனாங்க...”

“சரி... வரேன், வரேன். ஆனால், சேலை எல்லாம் கட்ட முடியாது. சுடிதார் தான்!”

“காலையிலே ஒவ்வொன்னுத்துக்கும் என்னைப் போராட வைக்காத மலரு. போ, போய் குளிச்சுட்டு சேலையை உடுத்து” தாய் நகர, எதுவும் கூறாது குளித்து முடித்து அவர் எடுத்து வைத்திருந்த புடவையை அணிந்தாள்.

சிறிது நேரத்திலே லோகநாயகியும் சாரதியும் கிளம்பிவிட, மாறன் முன்பதிவு செய்திருந்த மகிழுந்து வருகிறதா என வாயிலில் நின்று நோட்டமிட்டுக்கொண்டிருந்தான். மலர்விழி தயாராகி கீழே வர, “ப்ரிட்ஜ் மேல பூ இருக்கு பாரு மலரு. அதை வச்சுக்கோ” என்ற தாய்க்குத் தலையை அசைத்தவாறு பூவை எடுத்து வைத்தாள் மலர்விழி.

மகிழுந்து வந்துவிட, “ம்மா, அப்பா வாங்க கிளம்பலாம்...” என்ற மாறன், “என்ன மலர், கண்ணெல்லாம் சிவந்திருக்கு?” எனத் தங்கை முகத்தை ஆழ்ந்து பார்த்தவாறு வினவினான்.

“நல்லா கேளு டா. எப்போல இருந்து லேப்டாப் முன்னாடி உக்காந்து இருக்கான்னு தெரியலை” நொடித்துக்கொண்டே லோகநாயகி மகிழுந்தில் ஏறினார்.


“தூக்கம் வரலை, அதான் செமினார்க்கு ப்ரிபேர் பண்ணேன் மாறா” என்று மாறனுக்கு விளக்கம் கொடுத்தவாறு மலர்விழியும் மகிழுந்தில் ஏற, அரைமணி நேரத்தில் திருமண மண்டபத்தை அடைந்திருந்தனர்.

“தனஞ்செயன் வெட்ஸ் சுமித்ரா!” எனப் பெயர் பொறிக்கப்பட்ட பலகையும், வண்ண வண்ணப் பதாகைகளும் அவர்களை வரவேற்றன.


வெளியே வரவேற்பில் நின்றிருந்த ராமலிங்கம், இவர்களைக் கண்டதும் புன்னகையுடன் அருகில் விரைந்தார். “வாங்க சாரதி, வாங்க மா... மலர் நல்லா இருக்கீயா டா?” என வரவேற்றார்.


“நல்லா இருக்கேன் மாமா...” மலர்விழி மெல்லிய புன்னகையுடன் கூறினாள்.


“இப்போதான் ஸ்கூல் படிக்கிற புள்ளை மாதிரி ரெட்டை ஜடைல பார்த்தது. அதுக்குள்ளேயும் மடமடன்னு வளர்ந்துட்டா!” என்ற ராமலிங்கத்திடம் மேலும் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு, நால்வரும் உள்ளே நுழைந்தனர்.


மண்டபம் சற்றே சலசலப்புடன் மங்கல வாத்தியங்களும் பேச்சு சத்தங்களும் நிரம்பி வழிந்தன.
இருபுறமும் வரிசையாய் நாற்காலிகள் போடப்பட்டு, முக்கால்வாசி இருக்கைகள் சுற்றத்தாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.


மேடையில் அமர்ந்திருந்த தனஞ்செயன் இவர்களைக் கண்டதும் மெலிதாகச் சிரித்தான். மாறன் மேடையேற செல்ல, அவன் பார்வை இப்போது மலர்விழியை அடைந்தது. அவளைப் பார்த்து தனா புன்னகைக்க, சின்ன தலையாட்டலுடன் அதை ஏற்றவள், ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.

“நீங்க இருங்க, நான் லீலாவைப் பார்த்துட்டு வரேன்!” என்ற லோகநாயகி நகர்ந்துவிட, சாரதி தன் வயதையொத்த மனிதர்களிடம் அமர்ந்துவிட்டார்.


பேச்சுத் துணைக்கு ஆள் இல்லை. என்ன செய்வது எனத் தெரியாது சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்த மலர், பின்னர் அலைபேசியை எடுத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். லோகநாயகி லீலாவதிக்கு உதவியவாறே, அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“கல்யாணத்துக்கு முதல்நாளே வரச்சொன்னா, காலைல வந்து நிக்குறீங்களே!” லீலாவதி சற்றே உரிமையுடன் கோபமாய்க் கேட்க, லோகநாயகி, “அவருக்குக் கொஞ்சம் வேலை இருந்தது லீலா. அதான் வர முடியலை” எனப் பதிலளித்தார்.

பத்து நிமிடத்தில் பெண்ணை அழைத்து வர வேண்டும் என புரோகிதர் கூற, “சரி, வாங்க லோகு, என் மருமகளைக் காட்றேன். என்னோட சொந்தக்காரப் பொண்ணுதான். சின்ன வயசுல கூட வீட்டுக்கு வந்து இருக்காளே! சுமித்ரா, உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என மணப்பெண் அறையை நோக்கி நகர்ந்தார் லீலாவதி.

“ஆமா! சின்ன புள்ளையா பார்த்தது” லோகுவும் பதிலளித்தவாறு நடந்தார்.

மணப்பெண் அறைக்குள்ளே லீலாவதி செல்ல, அங்கே சுமித்ராவின் அம்மா கோசலையும் அவரது தந்தை ஞானவேலும், இரண்டாவது பெண்ணும்தான் இருந்தனர். கூடவே சுமித்ராவின் தோழிகள் சிலர்.

பெற்றவர்களின் முகம் பயத்தில் வெளுத்திருந்தது. “என்ன அண்ணே! சுமியைக் காணோம்? எங்க அவ? நீங்க எல்லாம் ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்ற லீலாவதிக்கு அவர்களின் கலக்கம் சுமந்த முகம் பதற்றத்தைத் தோற்றுவித்தது.


அவர்கள் அமைதியாகவே நிற்கவும், “என்னாச்சு அண்ணி? சுமி பாத்ரூம் போய்ருக்காளா?” என கழிவறைப் பக்கம் சென்றார்.


“அத்தை, அக்காவைக் காணோம். லெட்டர் எழுதி வச்சுட்டு எங்கயோ போய்ட்டா!” சுமியின் தங்கை கூற, லீலாவதிக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.


“என்னை மன்னிச்சுடு மா தங்கச்சி. என் பொண்ணு கடைசி நேரத்துல இப்படி பண்ணுவான்னு நாங்களே எதிர்பார்க்கலை!” என்று கம்மிய குரலில் ஞானவேல் கூறினார். மகளின் செயலால் அவமானத்தில் கூனிக் குறுகிப்போனார்கள் பெற்றவர்கள். இப்படியெல்லாம் நடக்கும் என அவர்களும் எதிர்பார்க்கவில்லை. திருமணம் எனப் பேச்சு எடுத்த நாளிலிருந்து அமைதியாய் எல்லாவற்றிலும் பங்குக்கொண்ட சுமித்ரா, கடைசியில் இப்படி செய்வாள் என ஞானவேல் நினைக்கவில்லை.


“என்ன அண்ணா சொல்றீங்க? அண்ணி, அவர் சொல்றது எல்லாம் உண்மையா?” என லீலா அதிர்ச்சி தாங்காது கோபமாய் வினவ, கோசலையிடம் பதில் இல்லை.

அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது. பதில் கூற திராணியற்று நின்றிருந்தார். அத்தனை ஆசை ஆசையாய் எல்லாம் பார்த்து மகளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் முடிக்கலாம் என அவர்கள் எண்ணியிருக்க, அதையெல்லாம் மொத்தமாய் சிதைத்துவிட்டு சென்றிருந்த மகளை எண்ணி கோபமும் ஆற்றமையும் அவரது தொண்டையை அடைக்கச் செய்தன.

சிறுவயதிலிருந்தே கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து செல்லம் கொஞ்சி வளர்த்த சுமித்ரா, அதற்கு தக்க சன்மானம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டாளே என பெற்ற உள்ளம் விம்மித் துடித்தது. முன்பே இந்தத் திருமணத்தில் சம்மதம் இல்லையென கூறி இருந்தால் கூட, கணவனை அவர் சமாளித்து இருப்பார். இப்படி ஊர் கூடிய சபையில் தீராத அவமானத்தை வரவழைத்தவிட்டாளே என கண்களிலிருந்து குபுகுபுவென நீர் வழிந்தது கோசலைக்கு.

“ஆமா லீலா, நான் பெத்த சிறுக்கி இப்படி எல்லார் வயித்துலயும் மண்ணள்ளிப் போட்டுட்டு போய்ட்டா” என அவர் கதறி அழ, லீலாவதிக்கு நெஞ்சே அடைத்தது. ஒரே மகன் என ஆசையாய் அவன் திருமணத்தை ஊர் மெச்சுமளவு செய்ய வேண்டும் என இத்தனை சிறப்பாய் எல்லாம் செய்திருந்தார். கடைசியில் திருமணம் இப்படி ஊர் கூடிய சபையில் நின்று போனால் என்னாவது? அதுவும் மகனின் நிலைமை என்னவாகும்? அவன் எப்படி எதிர்வினையாற்றுவான் என பெற்றத் தாயாய் துடித்துப் போனார்‌. பெற்றவர்கள் கைக்காட்டிய பெண்ணை எந்த மறுப்புமின்றி ஏற்றுக்கொண்டவனுக்கு தாங்கள் தேர்ந்தெடுத்த இணை தப்பாகிவிட்டதே என நெஞ்சம் பரிதவித்துப் போனது.

“உங்கப் பொண்ணுக்கு இதுல விருப்பம் இல்லைன்னா, முன்னாடியே சொல்ல வேண்டியது தானே? ஏன் என் பையன் வாழ்க்கையோட விளையாட்றீங்க?” லீலா கோபத்தில் கத்தினார். அவரது நிதானம் முழுவதும் தவறி இருந்தது. லோகநாயகிக்கும் என்ன எதிர்வினையாற்றுவது எனத் தெரியவில்லை. எனவே சாரதியையும் ராமலிங்கத்தையும் அழைக்கச் சென்றுவிட்டார்.


“லீலா, நீயே பார்த்த தானே? கல்யாணத்துல ஒரு வார்த்தை சம்மதம் இல்லைன்னு சொன்னாளா? எல்லாத்துக்கும் தலையை தலையை ஆட்டுனாளே பாவி! இப்போ எங்களை இப்படி நிக்க வச்சுட்டு போய்ட்டா!” கோசலைதான் கலங்கிய குரலில் கூறினார்.

லோகநாயகியும் சாரதியும் உடன் ராமலிங்கமும் பெண்ணின் அறை நோக்கி பதற்றத்துடன் செல்லவும், மாறனும் அவர்கள் பின்னே சென்றான்.

கணவனைக் கண்டதும் லீலா, “ஏங்க, சுமித்ராவுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு ஓடிப்போய்ட்டாங்க!” என்று விழிகளில் நீருடன் கதறிவிட்டார். ராமலிங்கத்திற்கு பேரதிர்ச்சி. அவர் பெண்ணின் பெற்றவர்களைப் பார்க்க, அவர்கள் எதுவும் பேசவில்லை. சூழ்நிலை உறைக்கவே சற்று நேரம் பிடித்தது மனிதருக்கு.

“என்ன ஞானம் இதெல்லாம்? இப்படி உங்கப் பொண்ணு உங்களை மட்டும் இல்லை எங்களையும் அசிங்கப்படுத்திட்டுப் போய்ட்டா. இப்போ மேடையில உட்கார்ந்து இருக்க என் மகனோட நிலைமை என்னென்னு யோசிச்சீங்களா?” கோபமாக வினவினார் அவர். ஞானவேலும் கோசலையும் எதுவும் கூறாது தலையைக் குனிந்தனர்.

புரோகிதர் கூறும் மந்திரங்களை தனஞ்செயன் உச்சரித்தாலும், விழிகள் என்னவோ தாய் தந்தை, மாறனின் குடும்பத்தின் பின்னே செல்ல, ஏதோ பிரச்சனை என்று அவனது உள்மனம் கூறியது. அவர்கள் உள்ளே சென்று பத்து நிமிடங்கள் கடந்தும், வெளியே வரவில்லை. உள்ளுணர்வு எதையோ உணர்த்த விழைந்தது.

புரோகிதர் பெண்ணை அழைத்து வரக் கூறியும் சுமித்ரா வராது இருக்க, தனா அமர்ந்த இடத்திலிருந்து எழுந்துவிட்டான்.

“மேடைல உட்கார்ந்த பிறகு எழுந்துக்க கூடாது தம்பி” புரோகிதர் கூறியதைக் காதில் வாங்காதவன், பெண்ணின் அறையை நோக்கிச் சென்றான். மாப்பிள்ளை மேடையிலிருந்து இறங்கியதும் கீழே உறவினர்கள் தங்களுக்குள் சலசலக்கத் தொடங்கினர்.

மலர்விழியும் அப்போதுதான் சுற்றம் உறைக்க, நிமிர்ந்து பார்த்தாள். தனஞ்செயன் செயலில் என்னவென்பதாய் அவனைப் பார்த்தாள்.

“ம்மா, என்னாச்சு?” என்றவன், தாயின் கலங்கிய முகத்தில் நெற்றியைச் சுருக்கினான். அவனது வரவை எதிர்பாராது எல்லோரும் அதிர்ந்து நின்றனர்.

“தனா, சுமிக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு எழுதி வச்சுட்டு ஓடிப் போய்ட்டாங்க டா!” மாறன்தான் நண்பனிடம் கூறினான். அவனின் எதிர்வினை என்னவாக இருக்கும் என அனைவரும் பதைபதைப்புடன் பார்த்து நின்றனர்.

மாறன் கூறியதைக் கேட்டதும் தனாவின் முகம் கோபத்தில் சிவந்து போனது. இறுகிப் போய் நின்ற மகனைப் பார்த்து பதறிய லீலா, அவனருகே சென்றார்.


“தனா...” என அவன் கையைப் பிடித்து நின்றார்.


“எங்களை மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை!” ஞானவேல் கையைக் கூப்பினார். அவரை சலனமில்லாமல் பார்த்தான்.

“தனா, இப்போ என்ன செய்யலாம்னு நீயே சொல்லுப்பா!” என்ற ராமலிங்கம் மகனைப் பார்த்தார்.

“மாப்பிள்ளைக்கு சம்மதம்னா, என் ரெண்டாவது பொண்ணு காயத்ரியைக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்!” கோசலை கூற, தனஞ்செயன் அவரை அழுத்தமாகப் பார்த்தான். பதினெட்டு வயது கூட நிரம்பாத சிறுமி அவள். அதுவும் தனாவிற்கும் அவளுக்கும் பத்து வயது வேறுபாடிருக்கும்.

“என்ன கோசலை பேசுற நீ?” என்ற ஞானவேல் மனைவியை அதட்டினார்.


லீலாவதி மகனைப் பார்க்க, அவன் அழுத்தமான முகத்துடன் முடியாது என தலையை ஆட்டினான். அவனுக்கும் இதுபோலொரு சூழ்நிலையை எப்படி கையாள்வது எனத் தெரியவில்லை.

“இப்போ என் மகனுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? வெளிய எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சுப் போச்சு!” லீலாவதி ஆதங்கத்துடன் தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

ராமலிங்கம் இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வென யோசித்தார். சொந்தம் என்ற முறையில் நிறைய பேர் தனாவிற்கு பெண்தர முன்வருவார்கள்தான். ஆனால், அவருக்கு ஏனோ ஒருவரும் மனதிற்கு ஒப்பவில்லை. சட்டென காலை சேலையில் பார்த்த மலர் கண்முன்னே தோன்றினாள்.

கண்டிப்பாக தனாவிற்கு அவள் பொருத்தமாக இருப்பாள். நல்ல குணமான பெண்ணும் கூட. சிறுவயதிலிருந்தே அவளை நன்கு தெரிந்தவர். சாரதி வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நேர்மையான மனிதர். அவர்கள் குடும்பத்தைக் குறை சொல்ல எந்தக் காரணியும் அவருக்குப் புலப்படவில்லை.

“சாரதி, உன் பொண்ணு மலரை என் பையன் தனாவுக்கு கொடுக்க உங்களுக்கு சம்மதமா?” என ராமலிங்கம் வினவினார்.
ராமலிங்கம் திடீரென கேட்கவும் சாரதிக்கு என்ன கூறுவது எனத் தெரியவில்லை. தனஞ்செயன் அவர் பார்த்து வளர்ந்தப் பையன். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. மாறனின் நெருங்கிய நண்பனும் கூட. அவர் மனைவியைப் பார்த்தார்.

“தங்கச்சி, என் பையனுக்கு உங்கப் பொண்ணைக் கொடுங்க. நல்லா பார்த்துப்பான்!” லோகநாயகியிடம் ராமலிங்கம் கேட்டார். லீலாவதியும் கணவர் பேச்சுக்கு சம்மதம் என்பதைப் போலத்தான் நின்றிருந்தார். தன் மகன் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற பதைபதைப்பு அவரிடம். மலர் என்றதும் அவர் மனதில் எந்தவித எதிர்ப்பும் தோன்றவில்லை. அதற்குள்ளே விஷயம் லேசாய்க் கசிந்து நெருங்கிய உறவினர்கள் எல்லாம் கூட ஆரம்பித்தனர்.


“ப்பா, என்ன பேசுறீங்க? அதெல்லாம் வேணாம். நடந்ததை சொல்லி மேரேஜை ஸ்டாப் பண்ணுங்க!” தனா இடையில் நுழைய,

“தனா, அப்பா ஒரு முடிவெடுத்தா சரியா இருக்கும்னு நம்புனா அமைதியா இரு. இல்லைன்னா, உன் இஷ்டப்படி கல்யாணத்தை நிறுத்தலாம்!” ராமலிங்கம் உறுதியாய் கூறிவிட, அவனால் வேறெதுவும் பேச முடியவில்லை.

லோகநாயகி கணவனையும் மகனையும் பார்த்தார். லீலாவதியின் குடும்பம் தங்களை விட நன்கு வசதியானது. தங்களால் அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு சீரெல்லாம் செய்ய முடியாதே! அதுவும் இப்போது அவசரப்பட்டு ஆசையில் சம்மதம் தெரிவித்துவிட்டு, பின்னர் மகள் வாழ்க்கை வீணாகிவிடக் கூடாதே என்று பெற்ற உள்ளம் நான்கையும் யோசித்துத் தொலைத்தது.

“ம்மா, என்ன யோசிக்குறீங்க? தனாவைப் பத்தி எனக்குத் தெரியும் மா. நம்ம மலரை நல்லா பார்த்துப்பான்!” மாறன் நண்பனுக்கு ஆதரவாய் பேசினான்.

கணவன் முகத்தைப் பார்த்தார் லோகநாயகி. அவரும் சில நொடிகள் யோசித்துவிட்டு, “ராமலிங்கம், நீங்க எதிர்பார்க்குற அளவுக்கு சீர் எல்லாம் எங்களால செய்ய முடியாது. உங்க அளவுக்கு நாங்க வசதியும் இல்லை. இப்போ சம்மதம்னு சொல்லிட்டு, பின்னாடி எங்களால எதுவும் செய்ய முடியாம போகலாம். அது உங்களுக்கும் கஷ்டம், எங்களுக்கும் கஷ்டம்” என உண்மையை, மனதில் உள்ளதை அப்போதே உரைத்தார்.


“என்ன சாரதி, பணம் பெருசு, வரதட்சணை பெருசுன்னு நினைக்கிற ஆளா நாங்க. சுமித்ராவைப் பேசுனப்ப கூட, உங்களால முடிஞ்சதை செய்ங்கன்னு தான் சொன்னோம். வரதட்சணை, பணம் இதெல்லாம் பத்தி யோசிக்காதீங்க. எப்பவுமே பொண்ணு வீட்ல இருந்து வாங்கி எங்க வீட்டை நிறைக்கணும்னு நினைச்சதே இல்லை. என் பையனை நம்பி, அவன் குணத்தை நம்பி உங்கப் பொண்ணை கொடுங்க. எங்க வசதியைப் பார்த்து இல்லை” ராமலிங்கத்தின் பேச்சில் மூவருக்கும் பரம திருப்தி ஏற்பட்டது.

லோகநாயகி கணவனை சம்மதமாய்ப் பார்த்தார். “தனா நாங்கப் பார்த்து வளர்ந்தப் பையன். அவனுக்கு எங்கப் பொண்ணைக் கொடுக்க சம்மதம் ராமலிங்கம்...” என சாரதி கூற, மாறனுக்கும் மகிழ்ச்சிதான். தனஞ்செயனும் அவனும் ஒரே பள்ளியில் பயின்றவர்கள். அவனறிந்தவரை, தனா பணத்திற்கு ஒருநாளும் முக்கியத்துவம் கொடுத்தது இல்லை. குணமும் குறை என்று சொல்வதற்கு இல்லை.

“தம்பியை ஒரு வார்த்தை சம்மதம் கேளு லீலா!” என லோகநாயகி தனஞ்செயனைப் பார்த்துக் கூற, ராமலிங்கமும் லீலாவதியும் மகன் முகத்தைப் பார்த்தனர்.


“விழிக்கு இதுல சம்மதமான்னு கேளுங்க...” என்று தனஞ்செயன் கூறியதும் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி படர்ந்தது.


“தனா, போய் மேடைல உட்காருப்பா. முகூர்த்தத்துக்கு நேரமாச்சு. மலரை நாங்க கூட்டீட்டு வரோம்!” என்று லீலாவதி மகன் மனம் மாறுவதற்குள் அவனை மேடையேற்றினார்.

மேடைக்கு நடந்து சென்றவனின் கண்கள் இருக்கையில் அமர்ந்து அவனை யோசனையுடன் பார்த்த மலர்விழியில் படிந்து மீண்டன.

“மலர், அம்மா கூப்பிட்றாங்க. எழுந்து வா” மாறன் தங்கை கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.

“என்ன மாறா, என்னாச்சு?” என வினா தொடுத்தவாறே, அவன் இழுப்பிற்குச் சென்றாள்.

“என்ன மா, எதுக்கு கூப்டீங்க?” தாயருகே சென்றாள். பெற்றவர்கள் இருவரும் மகளைத்தான் பார்த்திருந்தனர். இன்னும் ஒருவருடத்தில் படிப்பு முடிந்துவிடும், மகளுக்கு திருமணம் செய்யலாம் என காலையில் அவளைப் புடவையில் பார்த்த போது பேசியிருந்தனர். ஆனால், அது இன்றே நடக்கும் என அவர்கள் எண்ணியிருக்கவில்லை.

“மலர், சுமித்ராவுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு ஓடிப் போய்ட்டா. இப்போ ஒரு இக்கட்டான சூழ்நிலை, அதான் அம்மாவும், அப்பாவும் உன்னை தனாவுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்குறதா சொல்லிட்டாங்க!” மாறன் தங்கை என்ன சொல்வாளோ? எனப் பயந்துதான் கூறினான். மலர்விழி பார்க்க அமைதியானவள். ஆனால், அழுத்தமும் பிடிவாதமும் அளவுக்கு அதிகம்.

மாறன் கூறியதில் மெல்லிய அதிர்ச்சியும் கோபமுமாய் பெற்றவர்களைப் பார்த்தாள். லீலாவும் ராமலிங்கமும் அங்கிருப்பதைப் பார்த்து எதையும் பேச முடியாது பல்லைக் கடித்தவள், தாய் தந்தையரை முறைத்தாள்.

“லீலா, அண்ணா, நீங்க ரெண்டு பேரும் வெளிய போய் அடுத்து ஆக வேண்டியதை பாருங்க. பொண்ணு மாறிடுச்சுன்னு சொல்லுங்க!” என லோகநாயகி அவர்கள் இருவரையும் வெளியேற்ற முனைந்தார்.

“லோகு, மலர் என்ன சொல்றா?” லீலா வினவ, “அவ என்ன சொல்லுவா? நாங்க பார்த்து செய்றதுதான்” என்று அவர்களை வெளியேற்றிவிட்டார். மற்றவர்களும் சென்றுவிட, இப்போதும் நால்வர் மட்டுமே எஞ்சினர்.

“ம்மா, யாரைக் கேட்டு இந்த முடிவை எடுத்தீங்க? எனக்கு இதுல சம்மதம் இல்ல!” மலர்விழி கோபத்தில் பல்லைக் கடித்தவாறே வார்த்தைகளைக் கொட்டினாள்.

“யாரடி கேட்கணும். பெத்தவங்களுக்குத் தெரியாதா? உனக்கு எது நல்லது? எது கெட்டதுன்னு. இந்தக் கல்யாணம் உன்னோட நல்லதுக்குத்தான்” லோகநாயகி கூறினார்.

“என்னம்மா நல்லதுக்கு? இன்னும் நான் படிச்சு கூட முடிக்கலை. அதுவும் இல்லாம, இப்படி திடுதிடுப்புன்னு கூப்ட்டு ஐஞ்சு நிமிஷத்துல மேரேஜ்னு சொல்வீங்க. நான் உடனே தலையை ஆட்டணுமா?” வார்த்தைகள் தெறித்தன.

“மலர், நாங்க என்ன வேணும்னு இதை செய்றோமா? வேற வழியில்லாம ராமலிங்கம் கேட்டாரு. அவங்க குடும்பமும் நல்ல குடும்பம். தனா நாங்க பார்த்து வளர்ந்தப் பையன்...” சாரதி மகளை சம்மதிக்க வைக்கப் போராட, அவளோ அடமாய் நின்றாள். சில நிமிடங்கள் பெற்றவர்கள் மகளை சம்மதிக்க வைக்க எத்தனை வழிகளில் முயன்றும், தன்னுடைய பிடிவாதம்தான் பிரதானம் என்பது போல அப்படியே அசையாது சிலையாய் இருந்தாள் மலர்விழி.

‘அவரசப்பட்டு வாக்குக் கொடுத்து விட்டோமோ? இந்தப் பெண் அசைவதாய் தெரியவில்லையே!’ சாரதிக்கு இப்படியொரு எண்ணம் துளிர்த்தது. சிறிது நேரம் அவர்களது உரையாடலைக் கேட்ட மாறன்,

“ம்மா, அப்பா நீங்க ஒரு ஐஞ்சு நிமிஷம் வெளிய இருங்க. நான் இவக்கிட்ட தனியா பேசணும்!” எனத் தங்கையை அழுத்தமாகப் பார்த்தவாறு மாறன் கூற, தாய் தந்தையர் வெளியேறினர்.

சரியாய் ஐந்து நிமிடத்தில் வெளியே வந்த மாறன், “ம்மா, அவ சம்மதிச்சுட்டா. போய் அவளை அலங்காரம் பண்ணி கூட்டீட்டு வாங்க...” எனக் கூற,
பெற்றவர்களுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது.

லோகநாயகி உள்ளே நுழைய, மலர் கண்ணாடி முன்பு அமர்ந்திருந்தாள். அழகுநிலையப் பெண் அடுத்து உள்ளே நுழைந்து ஐந்து நிமிடத்தில் லேசாய் அவளை ஒப்பனை செய்து தலையில் பூவை சூடிவிட்டார். அவளின் கழுத்தில் மாலையை அணிவித்த லோகநாயகிக்கு மகளின் இந்த அழுத்தமான தோற்றத்தில் லேசான பயம் கவ்வியது. “பொண்ணை அழைச்சுட்டு வர சொன்னாங்க!” என லீலாவதி வந்துவிட்டார். இதற்குமேல் எதுவும் செய்ய இயலாது என கடவுள் மேலே பாரத்தைப் போட்டவர், மலரை அழைத்துக்கொண்டு மேடையேறினார்.

எந்த சலனமும் இன்றி தனஞ்செயன் அருகில் அமர்ந்தாள் மலர்விழி
. அவனின் முகமும் இறுகிப் போயிருந்தது. இரண்டு பெற்றோர்களும் மேடையேறி நிற்க, அனைவரின் வாழ்த்துக்களுடனும் தனஞ்செயன் மலர்விழி கழுத்தில் மூன்று முடிச்சை இட்டு அவளைத் தன் மனையாளாக்கிக்
கொண்டான்.

தொடரும்...
 
Well-known member
Messages
1,062
Reaction score
764
Points
113
Super super
Annan kaaran apdi enna solliruppan🤔🤔🤔🤔 udane marriage ku ok sollittale
 
Top