• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,257
Reaction score
3,680
Points
113
எண்ணம் – 9

அடுத்து ஒரு வாரத்திலே மாறன் தனக்குத் தெரிந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடு காலியாக உள்ளதாகக் கூற, மலர்விழி தான் வரவில்லை, தனஞ்செயனை அழைத்துச் சென்றுவிடுமாறு கூறிவிட்டாள். அவளுக்குப் படிக்க நிறைய இருந்தன.

மாறனும் தனஞ்செயனும் அந்த வீட்டைச் சென்று பார்த்து வந்தனர். மூன்றாவது தளத்திலிருந்த வீட்டில் இரண்டு படுக்கை அறைகள், ஒரு கூடம் எனப் பார்க்க நன்றாய் இருந்தது‌. இரண்டு பேருக்கு இந்த வீடு போதும் என தனஞ்செயன் கூற, வீட்டின் உரிமையாளரிடம் இருவரும் வாடகை எவ்வளவு எனப் பேசிவிட்டு வந்தனர்‌.

அடுத்து வந்த சனிக்கிழமையில் மலர்விழியும் தனஞ்செயனும் தங்களது உடமைகளையும் மற்ற இத்யாதிகளையும் இந்த வீட்டிற்கு மாற்றியிருந்தனர். இரண்டு வீட்டுப் பெற்றவர்களும் வந்து அனைத்துப் பொருட்களையும் அதனதன் இடத்தில் வைத்து வீட்டை ஒழுங்குப் படுத்திக் கொடுத்துவிட்டு அன்று மாலை விடை பெறுவதாய் இருந்தனர்.

“மலர், தனியா வீட்டைப் பார்த்துக்குறது சுலபம் இல்லை டி. நீதான் எல்லாத்தையும் பார்த்துப் பொறுப்பா செய்யணும்...” அனைத்தையும் ஒதுங்க வைத்து முடியவும், லோகநாயகி மலரை அழைத்து பத்து நிமிடங்கள் அறிவுரை பொழிய, அமைதியாய்க் கேட்டுக் கொண்டாள். ஆனால், அதை செயல்படுத்தும் எண்ணமெல்லாம் அவளுக்கு இல்லை என்பது தாயறியாதது.

அங்கே தனாவின் வீட்டில் வேலை பார்த்த சமையல் செய்யும் பெண்மணியை லீலா இங்கே பணியமர்த்திவிட்டார். காலையில் வந்து அவர் காலைக்கும் மதியத்திற்கும் சமைத்து வைத்துவிட்டுச் செல்வதாக ஏற்பாடு. மீண்டும் மாலை வந்து இரவுணவு சமைத்துக் கொடுப்பார் என நம்பிக்கையான அவரை இங்கே வேலைக்கு வரச் சொன்னார் லீலா. அந்தப் பெண்மணியும் சரியென்று சம்மதித்துவிட்டார்.

லோகநாயகி கூட, “ஏன் லீலா, சமையல்காரங்க எல்லாம் எதுக்கு? ஒன்னு ரெண்டு மாசத்துல அவளே பழகிடுவா. இப்போ பழகுனாதான் உண்டு. எப்போ அவளும் சமையல் கத்துக்குறது?” எனக் கூற, லீலா மறுத்துவிட்டார்.

“அதெல்லாம் பொறுமையா என் மருமக கத்துக்கட்டும். இப்போ அவளுக்குப் படிப்பு முக்கியம். காலேஜூக்கும் போய்ட்டு வந்து, சமையல் செய்றது ரொம்ப கஷ்டம். படிக்குற புள்ளை, படிப்பைக் கெடுக்க கூடாது...” என்று லீலா மறுத்துவிட்டார்.

“சரி நீங்களாச்சு! உங்க மருமகளாச்சு...” லோகநாயகி சிரிப்புடன் நகர்ந்துவிட்டார். மலர் குடும்பத்தினர் விடை பெற்றனர்.

லீலா சிறிது நேரம் மகனிடம் பேசிவிட்டு கிளம்பலாம் என அமர்ந்திருந்தார். ராமலிங்கமும் அவருக்கு அருகே அமர்ந்திருக்க, தனஞ்செயனிடம் பெற்றவர்கள் எதையோ பேசினர். அவர்கள் முகத்தை வைத்தே மலர்விழியால் பிரிவுத்துயரைக் கணிக்க முடிந்தது.

அவளறிந்த வரை தனஞ்செயனைவிட்டு அவர்கள் பிரிந்தது இல்லை. இந்த முதல் பிரிவு அவர்களை வருந்தச் செய்கிறது என லீலாவின் முகத்தைப் பார்த்து உணர்ந்தாள்.

“பத்திரமா இரு டா. வேலை வேலைன்னு அது பின்னாடியே ஓடாத. டைம்க்கு சாப்பிடு. நான் தனத்துகிட்டே சொல்லி உனக்குப் பிடிச்சதா சமைக்க சொல்றேன்...” என்ற லீலாவதியை புன்னகையுடன் பார்த்தான் மகன்.

“முக்கியமான விஷயம்... அவகிட்ட சண்டை எதுவும் போடாத டா. ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுத்தாதான் வாழ்க்கை நல்லா இருக்கும். நீ, நான்னு போட்டி, ஈகோ எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு, அவளைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு டா...” என்றவரைக் குறும்பாய் பார்த்தவன், “வேற எதுவும் அட்வைஸ் இருக்கா மா?” என வினவினான்.

“போடா... போ...” லீலாவும் சிரித்துவிட்டார்.

“சரி டா, நாங்க வரோம்...” என்று ராமலிங்கம் எழ, லீலாவும் எழுந்து நின்றார். மலர்விழி இப்போது அவர்கள் அருகில் வந்தாள்‌.

“என் மகனைப் பத்திரமா பார்த்துக்கோ மருமகளே...” என்றவரை அணைத்தவள், “தேங்க்ஸ் அத்தை‌‌...” என்றாள் மென்னகையுடன். அவளது முதுகை பாசத்துடன் தடவினார் லீலா.

“சரி டா... ரெண்டு பேரும் பத்திரமா இருங்க. எதுனாலும் ஃபோன் பண்ணுங்க...” என்றவர் மகன் கையை மனமே இல்லாது விட, “ம்மா... நானே உங்களை ட்ராப் பண்றேன்...” என தனாவும் அவர்களுடன் சென்றுவிட்டான்.

இத்தனை நேரம் சலசலப்புடன் இருந்த வீடு, இப்போது அத்தனை அமைதியாய் இருந்தது. கூடத்திலிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து ஓரமாய் வைத்துவிட்டு சுத்தம் செய்தாள்.

கல்லூரி சம்பந்தபட்ட பொருட்கள், அவளுடைய உடைகள் என எல்லாம் ஒரு தனி அறையில் வைத்திருந்தாள். ஏன்? எதற்கு? என ஆயிரம் கேள்விகளால் தங்கையைக் குடைந்தப் பின்னரே மாறன் அவள் கேட்ட மெத்தையை வாங்கிக் கொடுத்திருந்தான். அதை எடுத்து மற்றொரு அறையின் மத்தியில் படுப்பதற்கு ஏதுவாகப் போட்டாள். தனஞ்செயனின் அறையில் கட்டில் இருந்தது. மற்றொரு அறையில் கட்டில் இல்லை.

'இவளுக்குப் படிக்க மட்டும்தானே அந்த அறை, இன்னொரு கட்டில் வேண்டாம்' என லோகநாயகிதான் மகளின் குணம் அறிந்து லீலாவைத் தடுத்துவிட்டார். ஆனால், மலர்விழி மாறனிடம் கூறி மெத்தையை வாங்கிப் போட்டு தனக்குரிய அறையை அவளுக்கேற்றவாறு அமைத்தாள்.

ஜன்னலருகே எழுதும் மேஜையும் நாற்காலியையும் நகர்த்திப் போட்டு, ஒரு முறை அறையைச் சுற்றிப் பார்த்தாள். எல்லாம் திருப்தியாகிவிட, படுக்கலாம் என செல்லப் போக, அழைப்புமணி ஒலித்தது.

‘அதற்குள்ளே வந்துவிட்டாரா?’ என எண்ணியவாறே மலர்விழி கதவைத் திறக்க, சமையல் செய்யும் பெண்மணி நின்றிருந்தார்.

“வாங்க தனாக்கா‌‌...” என இவள் வழிவிட்டாள்.

“நைட்டுக்கு என்ன மா சமைக்கட்டும்?” என்றவாறே அவர் சமையலறைக்குள் நுழைந்தார்.

“சிம்பிளா எதாவது பண்ணுங்க கா...” மலர் பதிலளிக்க,

“இட்லி சுட்டு, சட்னி அரைச்சிடவா?” எனக் கேட்டவருக்கு தலையை அசைத்தவள், கூடத்திலிருந்த நீள்விருக்கையில் அமர்ந்தாள்.

சாரதியும் லோகநாயகியும் சீர் பொருட்கள் என அவளுக்கு வாங்கிக் கொடுத்தவை எல்லாம் இப்போது இந்த வீட்டை அலங்கரித்து இருந்தன. தொலைக்காட்சியும் அதில் அடக்கம். அதை தவிர தேவைப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் லீலாதான் பார்த்து வாங்கி வந்தார்.

மலர் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து பாடல்களை ஒலிக்கவிட்டாள். அப்படியே அந்த நீள்விருக்கையில் கால்களை நீட்டிப் படுத்துவிட்டாள்‌. தனம் சமைத்து முடித்து சென்று அரைமணி நேரம் கழித்துதான் தனஞ்செயன் வீட்டிற்கு வந்தான்.

எழுந்து சென்றவள், மேஜையில் உணவை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தாள். பார்வை தனஞ்செயன் அறையையே நோட்டமிட்டன. சில நிமிடங்களில் தனஞ்செயனும் வந்து அமர்ந்து உண்டான். அவன் சாப்பிட்டு முடிய, எல்லாவற்றையும் சமையலறைக்குள் எடுத்துச் சென்றுவிட்டாள்‌.

தனஞ்செயன் அறைக்குச் சென்று முடங்கினான். படுக்கையில் விழுந்தவன், லீலாவிற்கு அழைத்து அவர் சாப்பிட்டாரா? தந்தை சாப்பிட்டாரா? என விசாரித்து சில நிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான். உறக்கம் வராததால் அலைபேசியில் பொழுதைப் போக்கினான்.

மின்விளக்கு எரிந்துகொண்டே இருந்தது‌. மலர்விழி இப்போதைக்கு வருவது போல தெரியவில்லை என யோசித்தவன், எழுந்து சமையலறை சென்று தண்ணீர்கொண்டு வந்தான்‌.

அப்படியே விழிகள் அருகிலிருக்கும் அறைக்குள் குவிந்தன. மேஜையில் புத்தகத்தை திறந்து வைத்திருந்தவள், அலைபேசியில் மூழ்கி இருந்தாள். அவளது அறையிலிருந்த மெத்தையும் விரிப்பையும் கண்டவனுக்கு சத்தியமாய் ஆச்சர்யம் வரவில்லை.

தோளைக் குலுக்கியவன், இந்த சிலநாட்களாக அவளைப் புரிந்து வைத்திருந்தான். “மாறா, கண்டிப்பா டபுள் பெட்ரூம் பிளாட்தான் வேணும். நான் லேட் நைட் உட்கார்ந்து லைட் போட்டு படிப்பேன். யாரையும் டிஸ்டர்ப் பண்ண கூடாது டா. அதான் சொல்றேன்...” என மாறனிடம் அடம்பிடித்து இரண்டு படுக்கையறைகொண்ட வீட்டை மலர் பார்க்கச் சொன்ன போது தனாவும் அருகில்தான் இருந்தான். அது அவனது செவியிலும் விழுந்தது.

அவள் இரண்டு படுக்கையறைக் கொண்ட வீடு கேட்பது எதற்கு என ஏற்கனவே தனா யூகித்து இருந்தாலும், இப்போது மனைவியே உறுதி செய்திருந்தாள். அலட்சியமாக தோளைக் குலுக்கியவன், அறைக்குள் சென்றுவிட்டான்.

சிறிது நேரம் படித்தாள் மலர்விழி. அடுத்த மாதம் அவளுக்கு தேர்வுகள் நடக்கவிருந்தது. திடீரென திருமணம் நடந்ததில் அவளால் எதிலும் கவனம் செலுத்த முடியாது போகிற்று. அதனாலே இப்போது படித்துக்கொண்டிருந்தாள். தூக்கம் வரவும் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு உறங்கச் சென்றாள்.

மறுநாள் காலையில் வீட்டின் அழைப்புமணி ஒலித்துக்கொண்டே இருந்தது. மலர்விழி தாமதமாகத் தூங்கச் சென்றதால், இன்னும் அவள் உறக்கத்திலிருந்து எழவில்லை.

‘சே... காலைல யாரு?’ என முகத்தைச் சுளித்தவாறே படுக்கையிலிருந்து எழுந்த தனஞ்செயன் வெளியே சென்று கதவைத் திறந்தான்.

“குட் மார்னிங் ப்ரோ‌...” இந்தப் பூனைக் கண்ணையும் சுருட்டை முடியையும் எங்கோ பார்த்திருக்கிறேன் என மூளை கூற, அவன் பின்னே ஒரு பெண்ணும் ஆனும் உள்ளே நுழைந்தனர். மாறன் அவர்களுக்கு அடுத்ததாய் உள்ளே நுழைந்தான்‌.

“மச்சான், கல்யாணத்துல பார்த்து இருப்பியே! இது கரண், ஊர்மி எனனோட கசின்ஸ்... அப்புறம் இது நிதிஷ், உனக்கே தெரியுமே!” என மாறன் கூற, தனஞ்செயன் மெலிதாகப் புன்னகைத்து அவர்களைப் பார்த்து தலையை அசைத்தான்.

“எங்க அண்ணா, மலரைக் காணோம். இன்னும் தூங்குறாளா?” என ஊர்மி கேட்க,
“ஆமா மா‌‌...” என்றவன் அவர்களை அமர வைத்தான்.

“நான் போய் மலரை எழுப்புறேன்‌‌...” ஊர்மி இயல்பாய் முதலிலிருந்த அறைக்குள் நுழைந்தாள்.

“அவ பக்கத்து ரூம்ல படிச்சுட்டு இருக்கா மா...” என்ற தனாவிற்கு தங்கள் அந்தரங்கம் வெளியே தெரிவதில் விருப்பம் இல்லை‌, அதனாலே பொய்யுரைத்தான்.

“அட... பெரிய படிப்ஸாகிட்டாளா இவ?” என்ற ஊர்மி கதவைத் தட்ட, சில நிமிடங்களில் கண்ணைக் கசக்கிவிட்டு எழுந்த மலர், “வரேன் டி... டூ மினிட்ஸ்!” என்று முகத்தை கழுவிவிட்டு கதவை திறந்தாள்.

இடுப்பில் கையை ஊன்றி அவளை முறைத்த ஊர்மி, “இந்த மேடம்க்கு அடிமை ரெண்டு பேர். இவங்க சொன்னதும் வேலைக்கு வரணுமாம்...” ஊர்மி நொடித்துக்கொண்டாள்.

“ஆமா... ஆமா‌. எங்க என் அப்ரண்டீஸ்?” சின்ன சிரிப்புடன் மலர் கூடத்திற்கு வர, “இதோ இருக்கோமே...” என கரண் கண்ணை உருட்டினான்.

“ஏன் மலர், உன் புக்ஸ் எல்லாம் நானே கேப் புக் பண்ணி எடுத்துட்டு வந்து கொடுத்து இருப்பேனே. எதுக்கு எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ற?” மாறன் தங்கையைக் கடிந்தான்.

அவள் கரண் மற்றும் நிதிஷை மட்டும்தான் தன்னுடைய புத்தகங்களை எடுத்து வரக் கூறினாள். ஊர்மிளா கரணுடன் தானும் வருவதாய்க் கூற, அதனால் மாறனும் அவர்களுடன் தொற்றிக்கொண்டு வந்திருக்ககூடும் என நமுட்டுச் சிரிப்பு சிரித்தவள், “ஒன்னும் பிரச்சனை இல்லை மாறா. நான் உன்னை வர சொல்லவே இல்லையே. பேசாம நீ கிளம்பு, நாங்கப் பார்த்துக்குறோம்...” என்று கூறினாள்.

“பரவாயில்லை, பரவாயில்லை. வந்தது வந்துட்டேன், இவங்களோடவே கிளம்புறேன்...” பொய்யான சலிப்பு மாறன் குரலில்.

“ப்ம்ச்... அப்படியொன்னும் சலிச்சுட்டு நீ இருக்க வேணாம், கிளம்பு. என்ன ஊர்மி, அவனைக் கிளம்ப சொல்லு...” என மலர்விழி ஊர்மிளாவிடம் திரும்ப, “ஐயயோ! நீயாச்சு... உங்க அண்ணனாச்சு!” என அவள் பின்வாங்கிவிட்டாள். அவளது பாவனையில் அனைவருக்கும் சிரிப்பு முளைத்தது.

தனஞ்செயன் அவர்களது பேச்சை சுவாரஸ்யத்துடன் கவனித்தான். மாறனுக்கு ஊர்மிளாவை சிறுவயதிலிருந்தே பிடிக்கும் என அவனுக்குத் தெரியும். ஆனால், இப்போது அது காதலில் வந்து நிற்கிறது போல என அவர்களது பேச்சில் கண்டு கொண்டான்.

“இந்தா மலர், உன் புக்ஸ்...” கரணும் நிதிஷூம் ஆளுக்கொரு பொதியை அவளிடம் நீட்ட, “ரூம்ல வச்சுடுங்க டா. என்னால தூக்க முடியாது...” என அறையைக் காண்பித்தாள்.

பின்னர் அனைவருடனும் சிரிப்பும் கலகலப்புமாய் நேரம் சென்றது. சமையல் செய்பவரை வர வேண்டாம் என மலர் கூறிவிட்டாள். ஊர்மிளா நன்றாக சமைப்பாள். அதனால் இன்று அவளும் தானும் சேர்ந்து சமைக்கலாம் என திட்டமிட்டவள், கரணையும் நிதிஷையும் கடைக்கு அனுப்பி தேவையான பொருட்கள் வாங்கி வரப் பணித்தாள்.

அவர்கள் வருவதற்குள் இருவரும் காலை உணவை எளிமையாய் சமைத்திருந்தனர். எல்லோரும் உண்டு முடிய, மதிய உணவை சமைக்க ஊர்மியும் மலரும் சமையலறைக்குள் நுழைந்தனர்.

“நாங்க இல்லாம குக்கிங்கா?” என கரணும் நிதிஷூம் உள்ளே நுழைய, சமையலறை ஒருவழியாகியிருந்தது. பிரியாணி என்ற பெயரில் எதையோ சமைத்து முடித்திருந்தனர்.

மாறன் தனாவுடன் அமர்ந்துவிட்டான். இவர்கள் எல்லோரும் ஒன்றாயிருக்க, அவன் தனியாய் இருந்தான். அதை கவனித்த மலர்விழிதான் மாறனை அவனது அறைக்கு அனுப்பியிருந்தாள்‌.

“மாறா, வா டா. பிரியாணி எப்படி இருக்குன்னு உண்மையான ரிவ்யூ கொடுக்குற. ஊர்மிதான் செஞ்சா...” என மலர் அவனருகே அமர்ந்தாள். சொல்லிக் கொள்ளும் அளவு இல்லாவிடினும், பிரியாணி பரவாயில்லாமல் இருந்தது. அதை சொல்லி அவளைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை மாறன்.

“ரொம்ப நல்லா இருக்கு. அம்மா செய்றதை விட இந்தப் பிரியாணி நல்லா இருக்கே...” என்றவன் முகத்தின் முன்னே இரண்டு அலைபேசிகள் திடீரென தொங்கின.

“என்ன டா பண்றீங்க?” மாறன் அவர்களை யோசனையாகக் கேட்க, “ப்ம்ச்... அதொன்னும் இல்லை மாறா. நான்தான் எதுக்கும் இருக்கட்டும்னு எவிடென்ஸ் கலெக்ட் பண்ண சொன்னேன். போரடிச்சா, அம்மாகிட்ட போட்டுக் காட்டலாம். அப்படியே உன்னைப் போட்டுக் கொடுக்கலாம் இல்ல?” என்ற மலர்விழி பேச்சு முழுவதும் குறும்புதான். தனாதான் அவளை ஆச்சர்யமாய் பார்த்தான்.

“அடிப்பாவி... உன்னை நம்பி ஒரு பொய் சொல்ல முடியுதா?” மாறன் அலற,

“ஹம்ம்... பார்த்துக்க ஊர்மி. அவன் சொன்னது பொய்யாம்‌‌...” என்றாள் ஊர்மிளாவின் தோள்தட்டி.

ஊர்மி அவனை முறைக்க, “உன் பிரியாணியே வேணாம் மலரு...” என மாறன் கையெடுத்துக் கும்பிட, பெரிதாய் சிரிப்பொலி பரவியது‌.

‘இவளுக்கு இன்னும் எத்தனை முகம்தான் உள்ளது?’ எனப் பார்த்தான் தனஞ்செயன். தன்னிடம் எப்போதும் சிடுசிடுவென இருப்பவள், தன் தாய் தந்தையிடம் அவ்வப்போது செல்லம் கொஞ்சுவாள். இப்போது அவளது அண்ணன், நண்பர்களிடம் துடுக்காய் பேசுகிறாளே!’ எனப் பார்த்தான். மலர்விழி பெரிதாக யாரையும் எளிதில் அணுகவிட மாட்டாள். அவன் அறிந்தவரை நிதிஷ், சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பன். கரணும், ஊர்மிளாவும் சிறுவயதில் அதிகமாக அவன் கண்டது இல்லை. இப்போது தான் அவர்கள் மலர்விழியுடன் நெருக்கமாக இருக்கிறார்கள் எனப் புரிந்தது. அவளது இறுக்கமும் கோபமும் இவர்கள் அருகில் தளர்ந்து போவதை கவனித்தான்.

பின்னர் ஒருவழியாய் அனைவரும் உண்டு முடித்து மாலையில் கிளம்பினர். அவர்கள் கிளம்பியதும் சமையலறைக்குள் சென்ற மலர் திகைத்துப் போனாள். அப்படியொரு சுத்தமாய் சமையலறை இருக்க, அதை சுத்தம் செய்து முடியவே நேரமாகிவிட்டது. தனம் வந்து இரவுணவை சமைத்துவிட்டுப் போனார்.

மறுநாள் காலையில் இருவரும் கிளம்பி அவரவர் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டனர். மலர் தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரியை அடைந்தாள். அரைமணி நேரத்திற்கும் குறைவான பயணமாக இருக்க, இப்போது அவளால் ஆசுவாசமாக உணர முடிந்தது.
தனஞ்செயனுக்கும் வேலை இருந்தது. அவனும் அலுவலகம் வீடு என சுற்றினான்.

இருவரும் ஒரே வீட்டிலிருந்தாலும் பேச்சு இல்லை. அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு தானுண்டு தன் வேலையுண்டு என இருந்துவிட்டனர். தனா மலரிடம் பேச முயற்சிக்கவே இல்லை. எதாவது பேச சென்று அது சண்டையில் முடிய, அந்த முடிவைக் கைவிட்டான். அவளாகப் பேசினால் பார்த்துக்கொள்ளலாம் என அவன் நினைத்திருக்க, அது நடக்க வாய்ப்பேயில்லை என்பதை அறிவு தாமதமாய் உணர்த்தியது‌.

அவனை ஒரு பொருட்டாய் கூட மலர் மதிக்கவில்லை. எதாவது கூற வேண்டும் என்றால் தனம் மூலமாக சத்தமாகப் பேசுவாள். அதை தனாவாக தனக்கு எனப் புரிந்து கொண்டான்.

வார இறுதியில் தனா தாய் தந்தையைக் காணச் செல்ல, மலர் தனது இருசக்கர வாகனத்தில் அங்கு சென்றாள். லீலா அதை கவனித்துவிட்டு திட்ட, பின்னர் மறுவாரம் இருவரும் சேர்ந்து வந்தனர். வார நாட்கள் கல்லூரி அலுவலகம் எனச் செல்ல, வார இறுதி இரண்டு பெற்றவர்கள் வீட்டிலும் கழிந்தன.

மலர்விழிக்கு இன்னும் பத்து நாட்களில் தேர்வு இருக்க, எங்கேயும் செல்லாது படிப்பில் கவனத்தைச் செலுத்தினாள். தனா, தான் மட்டுமாக வீட்டிற்குச் சென்று வந்தான்.

அன்று சனிக்கிழமை வேலை முடிந்து அலுவலகத்திலிருந்து கிளம்பலாம் என தனா வெளிய வர, கல்லூரி நண்பன் ஒருவனை மனைவி மற்றும் குழந்தையுடன் சந்திக்க நேர்ந்தது. அப்படியே அவர்களுடன் அருகே இருக்கும் உணவகத்திற்குள் நுழைந்தான்.

சம்பிரதாய பேச்சுக்கள் முடிய, “அப்புறம் தனா, ஃபேமிலி மேனாகிட்ட. எப்படி போகுது வாழ்க்கை, சிஸ்டர் எப்படி?” என அவன் வினவியதும்தான் தனாவிற்கு திருமணமானதே உறைத்தது.

“நல்லா போகுது டா. அவ படிப்புல பிசியா இருக்கா‌‌.‌..” என உண்மையும் பொய்யும் கலந்து கூறியவன், குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினான்.

பேச்சுவாக்கில் மற்றொரு நண்பனுக்கும் அவனது மனைவிக்கும் ஆரம்பத்திலிருந்தே சண்டை. அந்தப் பெண் கடைசியில் இவனைப் பிடிக்காது திருமணம் செய்து வைத்துவிட்டதாக உரைத்து விவாகரத்து வாங்கிவிட்டாள் எனக் கூறினான், அருகிலிருந்தவன்.

அதைக் கேட்ட தனாவின் மூளையும் மனதும் அந்த விஷயத்தையே சுற்றி வந்தது. அவர்கள் மூவரும் விடைபெற இவன் வீட்டிற்குக் கிளம்பினான்.

‘ஒருவேளை மலருக்கும் அப்படியொரு எண்ணம் இருக்குமோ?’ என மூளை யோசித்து தொலைத்தது. அவளது நடவடிக்கைகள் தன்னை சுத்தமாகப் பிடிக்காதது போலத்தான் ஆடவனுக்குத் தோன்றியது. அரைமணி நேரப் பயணத்தில் ஆயிரம் முறை இந்தக் கேள்வி மனதை அரித்தது.

வீட்டிற்குச் சென்றதும் மலர்விழியிடம் கண்டிப்பாக கேட்டுவிட வேண்டும் என நினைத்தான். ‘இவ என்ன நினைச்சுட்டு இருக்கான்னு தெரியலை. அப்படி மட்டும் ஆமான்னு சொல்லட்டும், கன்னத்தை சேர்த்து ஒன்னுவிட்றேன். அப்போதான் அடங்குவா...’ என்ற எண்ணத்தில் தனா வீட்டிற்குச் சென்றான். முதல்வேலையாக மனைவியின் அறைக்குள் சென்று மனதிலிருப்பதை வினவ, அவன் நினைத்ததற்கு எதிர்ப்பதமாக மனைவி அவன் மூக்கை உடைத்திருந்தாள்‌.
 
Top