• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

இதயம் 17

Administrator
Staff member
Messages
628
Reaction score
893
Points
93
இதயம் 17 :

“போயிட்டு வரேன், மா,” என்றபடி காலணிகளை அணிந்த மலர், ரிஷியின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

அவளது மனமும் முகமும் நிர்மலமாக இருந்தது. காரணம், நேற்றைய இரவெல்லாம் நன்றாகச் சிந்தித்து, இது எந்தக் காலத்திலும் சரிப்பட்டு வராது; இது தனக்கும் நல்லதல்ல, அவருக்கும் நல்லதல்ல என்று முடிவுக்கு வந்திருந்தாள்.

நேற்று மகிழுந்தில் ரிஷியின் பேச்சில் அவளது இதயம் தாளம் தப்பியது என்னவோ உண்மைதான். ஆனால், அது சரிப்பட்டு வராது, நடக்காது என்று அறிந்த பின் அதற்கு ஆசைப்படுவது உசிதமல்ல என்பது மலரின் எண்ணம்.

சிறுவயதிலிருந்தே மலர், தனக்குக் கிடைக்காத ஒன்றின் மேல் எப்போதும் ஆசை வைக்க மாட்டாள். தன்னாலும், தன்னுடைய பெற்றோராலும் எது முடியுமோ, அதை மட்டுமே ஆசைப்பட்டுக் கேட்டு வாங்கிப் பழகியவள். இப்போது வரை அப்படித்தான்.

வளர்ந்து தந்தையின் பொறுப்புகளைத் தோளில் சுமந்த பிறகு, இன்னுமே மனதில் முதிர்ச்சி பிறந்திருந்தது. கிடைக்காத ஒன்றிற்காக ஆசைப்பட்டு, ஏங்கி அழுது வாழ்வை அழித்துக் கொள்வதற்குப் பதில், தன்னிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான் மலரின் கொள்கை. இப்போது வரை அப்படித்தான் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

அதனால்தான், மீன் விற்கும் தனக்கு ஒரு கறிக்கடைக்காரனோ அல்லது மளிகைக் கடைக்காரனோதான் ஒத்து வருவான்; அதற்கு மேல் ஆசைப்படுவதற்குத் தனக்குத் தகுதி இல்லை என்று அவளுக்கு நன்கு புரிந்திருந்தது.

இப்போது வந்து ரிஷிக்குத் தன் மீது பிடித்தம் ஏற்பட்டுள்ளது என்பதற்காக, தானும் ஆசை வளர்த்துக்கொண்டு, பிறகு அவனது வீட்டில் ஒப்புக்கொள்ளாமல் தன்னையும் தன் குடும்பத்தையும் கீழ்த்தரமாகப் பேசுவதை அவள் விரும்பவில்லை.

மற்றவர்களைப் பற்றி அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், நிச்சயம் ராதாவும் அவரது மருமகளும் கண்டிப்பாக இதற்கு எந்தக் காலத்திலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களை எதிர்த்து திருமணம் செய்ய ரிஷியும் முன்வர மாட்டான். அவள் அறிந்தவரை, ரிஷி மிகவும் குடும்பத்துடன் ஒத்துப்போகிறவன்தான்.

என்னதான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், எல்லாவற்றிலும் தாயின் முடிவை ஏற்றுக்கொள்பவன், கலந்தாலோசிப்பவன். அப்படிப்பட்டவன் நிச்சயமாகக் குடும்பத்தை எதிர்த்து தன்னைத் திருமணம் செய்ய நினைக்க மாட்டான்.

அதற்கு மேல், அவர்களை எதிர்த்து தன்னால் வாழ முடியாது என்பது நிச்சயமாகத் தெரியும். காரணம், தன்னுடைய குடும்பச் சூழ்நிலை. தனக்கே இங்கு ஆயிரம் சுமைகள் இருக்கின்றன. இதில் புதிய பிரச்சனையா?

இன்னும் சாகித்யாவின் படிப்பு முடியவில்லை. முரளி இப்போதுதான் கல்லூரியில் முதலாண்டு எடுத்து வைத்திருக்கிறான். வித்யா இன்னும் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை. குறைந்தபட்சம் சாகித்யா படித்து முடித்து, பணிக்குச் செல்லும் வரையாவது தன்னுடைய தேவை நிச்சயமாகக் குடும்பத்திற்கு இருக்கும்.

சாகித்யா படித்து முடித்துவிட்டால், நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துவிடும். பிறகு அவள் முரளி மற்றும் வித்யாவைப் படிக்க வைத்துக்கொள்வாள்.

பழைய படங்களில், நாடகங்களில் வருவது போல, வாழ்க்கை முழுவதும் அவர்களது முன்னேற்றத்திற்கு மட்டுமே உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்டவள் மலர் அல்ல. அதற்காக அவர்களை அம்போவென்று விட்டுச் செல்லும் ரகமும் அல்ல. அவர்கள் சொந்தக் காலில் நிற்கும் வரையிலாவது தாய்க்குத் தோள் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறாள்.

இப்போது இடையில் வந்து இந்தக் காதல், கல்யாணம் இதெல்லாம் எதற்கும் இடமில்லை. தனக்கு, தன்னுடைய கடமைதான் இப்போதைக்குப் பெரிது. அப்படியே திருமணம் செய்ய எண்ணினாலும், ரிஷியைத் திருமணம் செய்யத் துளியும் மலர் விரும்பவில்லை.

காரணம், ரிஷியைப் பிடிக்காமல் இல்லை. ரிஷியின் மீது மலருக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது. ஆனால், அது அவன் கொடுத்த பணியின் நிமித்தமும், முரளியின் படிப்பிற்கு உதவிய பண்பின் பொருட்டும்தான். மற்றபடி, தனிப்பட்ட முறையில் அவனுக்கு மலரின் மீது ஏற்பட்ட உணர்வு ஏதும் மலருக்குச் சிறிதும் இல்லை.

மலர் ரிஷியை கனவிலும் அந்தக் கோணத்தில் கண்டதில்லை. இனிமேலும் எண்ணப் போவதில்லை. ஏனெனில், அவனுக்கும் தனக்கும் எந்த விதத்திலும் ஒரு சதவீதம்கூட பொருத்தமில்லை.

மனம் ராதாவின் பேச்சுக்களை எண்ணி அஞ்சினாலும், ஒரு தாயாக அவரது நிலையில் இருந்து சிந்தித்தது. தான் அவர் இடத்திலிருந்தால், இவ்வளவு வசதியான வாழ்வில் இருந்து கொண்டு, தன்னுடைய மகனுக்கு ஒரு மீன் விற்கும் பெண்ணைத் திருமணம் செய்யச் சம்மதிப்போமா? நிச்சயமாக இல்லை என்றுதான் தோன்றியது.

அப்படியே தான் எண்ணினாலும், அவருக்கும் அதுபோன்ற எண்ணமும் பெருந்தன்மையும் இருக்க வேண்டும் என்று என்ன அவசியம்? அவர், அவருடைய அந்தஸ்துக்கும் தகுதிக்கும் ஏற்றவாறுதானே மருமகள் வேண்டும் என்று எண்ணுவார்? இதில் தவறு இருப்பதாக மலருக்குச் சிறிதும் எண்ணமில்லை.

ஆக, ரிஷியின் ஆசைதான் முற்றிலும் தவறு; ஏற்றுக்கொள்ள முடியாதது. இப்போது ஏதோ வயதுக்கோளாறில் அவரது விருப்பத்திற்கு தான் சம்மதித்துவிட்டாலும், இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு எந்தச் சாத்தியக்கூறும் இல்லை. எதிர்காலத்தில் உருவாகவும் வாய்ப்பில்லை. காரணம், தன்னுடைய பின்புலம்தான்.

“குப்பமா?” என்று ஒருவித அருவருப்பு உணர்வுடன் தன்னைப் பார்த்தவர் எப்படி குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக்கொள்வார்? அதற்குச் சிறிதும் வாய்ப்பில்லை.

அப்படியே ஏற்றுக்கொண்டாலும், தன்னால் அங்கே நிம்மதியாக வாழ முடியாது என்று மலருக்கு நன்றாகத் தெரியும். கஞ்சியாக இருந்தாலும், மன நிம்மதியோடு குடித்து வாழ வேண்டும் என்பது மலரின் கொள்கை.

ஆக, இரவெல்லாம் உறங்காமல் சிந்தித்தவள், இன்று நிச்சயமாக ரிஷியிடம், “இது எந்தக் காலத்திலும் சரிப்பட்டு வராது. உங்களது படிப்பிற்கும் அந்தஸ்திற்கும் ஏற்றபடி ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை நிச்சயமாக நன்றாக இருக்கும்,” என்று கூறிவிட வேண்டுமென உறுதிபூண்டாள்.

மனம் மீண்டும் நேற்று ரிஷி தன்னிடம் ஒட்டுமொத்த நேசத்தையும் குரலில் தேக்கி, “மலர், நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்ட நிகழ்விற்குச் சென்றது.

அவனது முகத்திலிருந்த அவாவும், குரலில் தளும்பி வழிந்த நேசமும் மலரை ஒரு கணம் திகைக்கச் செய்தது. ஏற்கனவே இது எதிர்பார்த்த ஒன்று என்றாலும், அந்தக் கணம் அப்படி உடனடியாகக் கேட்பான் என்று சிறிதும் எண்ணியிருக்கவில்லை.

விழிகளைப் பெரிதாய் விரித்து அதிர்ந்து போன மலர், இமை அசையாது அவனைக் காண, நொடிகள் அமைதியாகக் கழிந்தன.

அவள் திகைப்பை மெதுவாய் உள்வாங்கியவன், தனது கரங்களை அவளது கரத்தின் மீது படியச் செய்தான்.

அவளது வலக்கரத்தைத் தன்னுடைய இரு கரங்களுக்குள் பொதிந்து கொண்டவன், “மலர், ட்ரஸ்ட் மீ. நான் உன்னை நல்லா பார்த்துக்குவேன். நம்ம லைஃப் கண்டிப்பா நல்லா இருக்கும்,” என்றான். அவனது ஒட்டுமொத்த நேசத்தைச் சுமந்து வந்த குரல், உணர்ச்சியின் பிடியில் லேசாகக் கரகரத்தது.

அந்தக் குரல் அவளது இதயத்தை வேகமாய் அதிரவைத்து, பூகம்பத்தைப் பூக்கச் செய்தது. வெடுக்கென அவனது கரத்திலிருந்து தன்னுடைய கையை மீட்டுக்கொண்டவள், வாகனத்திலிருந்து இறங்கி விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்துவிட்டாள்.

சமையலறைக்குள் நுழைந்து, சுவற்றில் சாய்ந்து விழி மூடி நின்றுவிட்டாள். இந்த இருபத்தியொரு வருட வாழ்க்கையில் யாரும் அவளை இப்படி பார்த்ததில்லை; இதுபோலப் பேசியதில்லை. வாழ்வின் முதல்முறையாக, ஒருவன் தன்னிடத்தில் நேசத்தைப் பகிர்ந்திருக்கிறான். அதுவும், தான் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த ரிஷிகேஷ்.

விழிகள் லேசாய் கலங்கியது. தன்னையும் ஒரு ஜீவன் நேசிப்பதை எண்ணி, இதயத்தின் ஓரத்தில் மெல்லிய சாரல் வீசியது. தன்னை எல்லாம் யாரும் பார்க்க மாட்டார்கள் என்று எண்ணியிருந்தவளிடம், “உன்னை மட்டுமே பார்க்கிறேன்,” என்று ஒருவன் கூறியது, மங்கையின் மனதில் சலனத்தின் சாரலை அடித்தது.

இமைகளைச் சிமிட்டி விழிநீரை உள்ளிழுத்துக் கொண்டவள், விரைவாகச் சமையல் வேலையைத் தொடங்கினாள்.

தன்னிலை எண்ணிக் கலங்கிய மனதைக் கல்லாக்கிக் கொண்டவள், “கிடைக்காத ஒன்றிற்கு ஆசைப்படாதே,” என்று அதட்டி அடக்கியவள், வழக்கத்திற்கு மாறாக விரைவாகச் சமையலை முடித்துவிட்டு, ரிஷியிடம் கூறாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

கூடத்தில் அமர்ந்து மடிக்கணினியைப் பார்த்துக் கொண்டிருந்தவன், மலர் வெளியேறியதை அறிந்தும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

நடந்ததை நினைத்தபடியே வந்தவள், ரிஷியின் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினாள். ரிஷி வந்து கதவைத் திறந்ததும், வழக்கம் போல, “குட் மார்னிங், ரிஷி சார்,” என்று மலர்ந்து புன்னகைத்தவள், எதுவும் நடவாத பாவனையில் உள்ளே செல்ல, அவளது முயற்சியைப் புரிந்துகொண்டவனின் இதழ்களில் குறும்புன்னகை பூத்தது.

மலர் அதையெல்லாம் கவனிக்கவில்லை. தான் வந்திருப்பது வீட்டு வேலை செய்ய மட்டும்தான்; அதனைப் பார்த்துவிட்டு கிளம்பிவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தவள், செய்தித்தாளை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு வாசலைக் கூட்டத் தொடங்கினாள்.

பிறகு தண்ணீர் தெளித்து கோலமிட்டவள், உள்ளே சென்று ரிஷிக்குச் சத்துமாவுக் கஞ்சியைச் செய்யத் தொடங்கினாள்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் பின்னால் ஆள் வரும் அரவம் கேட்க, திரும்பினாள். ரிஷி சமையலறை வாயிலில் நின்றிருந்தான்.

“ஏதாவது வேணுமா, ரிஷி சார்? காபி போட்டுத் தரவா, சார்?” என்று மலர் வழக்கமான குரலில் கேட்க, சில நொடிகள் அவளது முகத்தை அமைதியாகப் பார்த்தவன், பின் சிரிப்புடன், “கருணைமலருக்கு என் மேல கருணையே இல்லை,” என்று கூறிட, அவனது பாவனையில் இவளுக்கும் புன்னகை எழுந்தது.

அதனை லாவகமாக மறைத்தவள், சமையல் மேடைப் புறம் திரும்பி, கஞ்சி தயாரானதும் கப்பில் ஊற்றி, அதில் ஒரு கரண்டியை வைத்து, “சத்துமாவுக் கஞ்சி ரெடி பண்ணிட்டேன், சார்,” என்று அவனிடம் நீட்டி, தன்னுடைய கடமையே கண்ணாக இருந்தாள்.

ரிஷி அதனை வாங்காது அவளை ஆழ்ந்து நோக்க, அவனது பார்வையைச் சுலபமாகத் தவிர்த்தவள், அங்கிருந்து நகர்ந்து சென்று கூடத்தில் இருந்த டீப்பாயில் கஞ்சி கிண்ணத்தை வைத்துவிட்டு வந்து, அங்கு ரிஷி இல்லாத தோரணையில் காலை சமையலுக்குக் காய்களை வெட்டத் தொடங்கினாள்.

பத்து நிமிடங்களாகியும் ரிஷி அங்கிருந்து நகராது நிற்க, மலருக்குத்தான் அவன் தன்னைப் பார்ப்பது ஓர் அசௌகரியத்தைக் கொடுத்தது.

திரும்பி அவனைக் கண்டவள், “ரிஷி சார், ப்ளீஸ்,” என்று விழிகளைச் சுருக்கிக் கெஞ்ச, அவளது முகத்தைக் கண்டவனது இதழ்களில் ரசனையாய் ரகசியச் சிரிப்பு பூத்தது.

அதனைக் கண்டும் காணாது கடந்தவள், ரிஷி அங்கிருந்து நகர்ந்ததும் பெருமூச்சுடன் சமைக்கத் தொடங்கினாள்.

சமையல் வேலையை முடித்ததும், ரிஷியிடம் இது தொடர்பாகத் தெளிவாகப் பேசிவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.

அரை மணி நேரத்தில் மலர் காலை சமையலை முடித்துவிட்டு வெளியே வர, ரிஷி குளிக்கச் சென்றிருந்தான். அவன் வருவதற்குள் வீட்டைச் சுத்தம் செய்துவிடலாம் என்று எண்ணியவள், பெருக்கித் துடைக்கத் தொடங்கினாள்.

ஒரு வழியாக அனைத்து வேலையையும் செய்து முடிக்க, ரிஷி அலுவலகத்திற்குத் தயாராகி வெளியே வந்தான்.

அவனைக் கண்டதும் உணவுப் பாத்திரங்களை எடுத்து மேஜை மீது அடுக்கினாள். ரிஷி தனது அலைபேசியை சார்ஜரில் இருந்து எடுத்துவிட்டு வந்து உணவருந்த அமர்ந்தான்.

மலர் அவனுக்கு உணவைப் பரிமாற, ரிஷி நிமிர்ந்து, “நீயும் சாப்பிடு, மலர்,” என்க,

“எனக்கு வேணாம், சார். நான் காலையில டிபன் கட்டிக்கொண்டு வந்துட்டேன். அது வேஸ்ட் ஆயிடும்,” என்று முடித்தாள் மலர்.

“சோ வாட்? நீ கொண்டு வந்தது கொடு, நான் சாப்பிடுறேன். இதை நீ சாப்பிடு,” என்று தனது தட்டை அவளை நோக்கி நகர்த்த, அதனை எதிர்பாராது திகைத்தவள், பின் சமாளித்து,

“இல்ல, வேணாம் சார். எங்க வீட்ல இன்னைக்கு கஞ்சி தான். நீங்க அதெல்லாம் சாப்பிட மாட்டீங்க,” என்று விளக்கினாள்.

“யார் சொன்னது, நான் சாப்பிட மாட்டேன்னு? எனக்கு கஞ்சி ரொம்பப் பிடிக்கும். எங்கே உன் டிபன்?” என்று விழிகளால் துலாவ, இதனைச் சிறிதும் எதிர்பார்த்திராதவள் மலங்க மலங்க விழித்தாள்.

காரணம், மலரின் வீட்டில் இன்று கஞ்சி இல்லை. மாதவி தக்காளி சாதமும் உருளைக்கிழங்கு வறுவலும் செய்து கொடுத்திருந்தார்.

“எங்கே, மலர்? உன் டிபன் பேக்ல இருக்கா?” என்று ரிஷி வினவ, அது இரண்டு நாள் ஊறிய கஞ்சி, ரொம்பப் புளிக்கும். உங்களால் சாப்பிட முடியாது என்று கூறிய பொய்யை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டாள்.

“ரெண்டு நாள் கஞ்சியா? இதுவரைக்கும் நான் சாப்பிட்டதே இல்லை, மலர். கொடு, எப்படி இருக்குன்னு பார்ப்போம்,” என்று கேட்டிட,

“நீங்க ஆர்வமா கேக்குற அளவுக்கு அது ஒன்னும் அவ்வளவு நல்லா இருக்காது, சார். இந்தச் சாப்பாடுதான் சுடச் சுட இருக்கு. இதே சாப்பிடுங்க,” என்று மலர் இயம்பினாள்.

“நீ ஃபர்ஸ்ட் கொடு, மலர். சாப்பிட்டுப் பார்த்துட்டு அது வொர்த்தா, இல்லையா, நான் சொல்றேன்,” என்று ரிஷி விடாமல் கேட்க, வேறு வழியின்றி,

“நான் இந்தச் சாப்பாட்டைச் சாப்பிடுறேன்,” என்று ஒப்புக்கொண்டவள், அவனுக்குப் பரிமாறியதைத் தனக்கு எடுத்துக்கொண்டாள். பிறகு புதிதாக ஒரு தட்டை எடுத்து அவனுக்கு உணவை வைத்தாள்.

அவளது செய்கையில் ரிஷியின் இதழ்களில் குறும்புச் சிரிப்பு ஒன்று பூத்தது. அதனைக் கண்டவள் ஏதும் கூறாது குனிந்து உண்ணத் தொடங்க, ரிஷியும் தனது உணவைச் சாப்பிட ஆரம்பித்தான்.

தான் உண்டு கொண்டிருந்தாலும், இடையிடையில் ரிஷிக்குத் தேவையானதை மலர் எடுத்து வைக்க, அவனும் மலருக்குப் பரிமாறினான்.

உணவைச் சாப்பிட்டதும், பாத்திரங்களை எடுத்து ஒதுக்கி வைத்த மலர், தனது பையை எடுத்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமாக,

“வெயிட் பண்ணு. டூ மினிட்ஸ். நானும் வரேன். சேர்ந்து போயிடலாம்,” என்றவன், அவளது பதிலை எதிர்பாராது தனது அறைக்குள் நுழைந்திட, மலர்தான் இங்கு விழிகளை மூடித் திறந்தாள்.

இரண்டு நிமிடங்கள் என்றவன், ஐந்து நிமிடங்கள் கழித்து வெளியே வர, மலர் அப்படியே நின்றிருந்தாள்.

இடையில் தான் சென்றுவிடலாமா என்று சிந்தித்தாள். தான் கிளம்பினால் இந்தப் பிரச்சனை முடிந்துவிடுமா? இதனை இன்றோடு பேசி முடித்துவிடலாம் என்று எண்ணியவள், அப்படியே நின்றுவிட்டாள்.

ரிஷி வந்ததும், “வா, மலர். போகலாம்,” என்றழைக்க, “ஒரு அஞ்சு நிமிஷம், ரிஷி சார். நான் உங்ககிட்ட பேசணும்,” என்று நிறுத்தினாள் மலர்.

தனது கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவன், “ஒரு கிளையன்ட் மீட்டிங் இருக்கு, மலர். டென் ஓ கிளாக். இட்ஸ் ஆல்ரெடி கெட்டிங் லேட். கார்ல போயிட்டே பேசுவோமா?” என்று வினவிட, மலரும் மறுக்க இயலாது தலையசைத்தாள்.

மலர் மகிழுந்தில் ஏறியதும், ரிஷி அலுவலகத்தை நோக்கி செலுத்தினான். இரண்டு நிமிடங்களில் அவனது பகுதியைக் கடந்து பிரதான சாலையை அடைந்தவன், “என்ன, மலர்? சொல்லு. ஏதோ பேசணும்னு சொன்னியே?” என்று கேட்டிட, அவனிடம் பேச வேண்டியதைத் தனக்குள் உருப்போட்டுக் கொண்டிருந்தவள், பேசுவதற்கு ஏதுவாக அவனைப் பார்த்தபடி திரும்பி அமர்ந்தாள்.

அவளை ஓரக்கண்ணால் கண்டவனுக்குப் புன்னகை எழுந்தது. அதனைத் தன் இதழ்களுக்கடியில் மறைத்தவன், “பிரிபரேஷன் எல்லாம் பலமா இருக்கே,” என்று கேலியாகக் கேட்டிட,

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. நல்லா கேட்டுக்கோங்க, சார். உங்களுக்கும் எனக்கும் எந்த விதத்திலும் ஒத்து வராது. நீங்க வேற, நான் வேற. என்னால எந்தக் காலத்திலும் உங்க அளவுக்கு உயரத்தில வர முடியாது. உங்களால் எனக்காக இறங்கி வர முடியாது.

இப்போ வேண்டாம். எதுவும் ஆரம்பத்தில் தோணலாம். ஆனால், காலம் முழுக்க அப்படியே இருக்காது. என்னைக்காவது ஒரு நாள் உங்களோட தேர்வு தப்புன்னு வருத்தப்படுவீங்க.

அதான் இப்பவே உங்களுக்கு புரிய வைக்க முயற்சி பண்றேன். நீங்க நல்லா படிச்சிருக்கீங்க. இவ்ளோ பெரிய கார் கம்பெனி வச்சிருக்கீங்க. பார்க்க அழகாவும் இருக்கீங்க. உங்களுக்கு எவ்வளவு நல்ல பொண்ணு கிடைக்கும் தெரியுமா? உங்க ரேஞ்ச் உங்களுக்கு புரியவே இல்ல, சார். அப்படி புரிஞ்சிருந்தா, நீங்கள் என்னை எல்லாம் பார்த்திருப்பீங்களா?

நான் ஒரு பர்சன்டேஜ் கூட உங்களுக்கு ஏத்தவே இல்லை. உங்களுக்குனு ஒரு பொண்ணு கண்டிப்பா பிறந்து இருப்பாங்க. அவங்க சீக்கிரம் உங்களைத் தேடி வருவாங்க. அவங்களைக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருங்க, ரிஷி சார்.

எனக்கேத்த மாதிரி ஒரு கறிக்கடைக்காரனையோ, மளிகைக் கடைக்காரனையோ பார்த்துக் கல்யாணம் பண்ணி, நானே என் வாழ்க்கையைப் பார்த்துட்டுப் போயிடுவேன். அதுதான் சரியா இருக்கும். இதுதான் நிதர்சனம்.

உங்களுக்கு ஏத்த மாதிரி பொண்ணு அன்னைக்கு வந்தாங்களே, ரோகிணி மேடம்... அவங்கள மாதிரிதான். அவங்கதான் உங்களுக்கு கரெக்டா இருப்பாங்க.

நான் சொல்றது உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். நான் எப்படி வேலைக்காரியா வந்தேனோ, அதே மாதிரியே போயிடுவேன். நீங்க உங்க வாழ்க்கையைப் பாருங்க.

உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும், ரிஷி சார். அதை இப்படி என்னைப் பார்த்து வீணாக்காதீங்க. நீங்க தனியாவே இருக்கிறதுனால்தான் என்னையெல்லாம் பார்க்கணும்னு தோணுது போல. கூடிய சீக்கிரம் வீட்டில் பார்க்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்க.

உங்க கல்யாணத்துல எல்லா வேலையும் நான்தான் எடுத்து செய்வேன்,” என்று அழகாய்ப் புன்னகைத்தவள், மகிழுந்திலிருந்து இறங்கினாள்.

இரண்டு நிமிடங்களுக்கு முன்பே ரிஷி அலுவலகத்தை வந்து அடைந்திருந்தாலும், அமைதியாய் அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

வெளியே இறங்கியதும், கண்ணாடி வழியாகக் குனிந்து அவனைப் பார்த்தவள், “மீன் வாசனையே பிடிக்காத உங்களால் எந்தக் காலத்திலும் மீன் விற்கிற ஒரு பொண்ணுகூட வாழ முடியாது. நீங்க எனக்கு முதலாளி. நான் உங்ககிட்ட சம்பளம் வாங்குற தொழிலாளி. இது இப்படியே கண்டினியூ ஆச்சுனா, எனக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது,” என்று விட்டுக் நடக்கத் தொடங்கினாள்.

வாகனத்தை நிறுத்திவிட்டு அவள் பின்னோடு வந்தவன்,

“எனக்கு மீன் வாசனை பிடிக்காதுதான், மலர். ஆனால், அன்னைக்கு அந்த மீன் வாசனையைத் தாண்டி உன் வாசனை எனக்குள்ள இறங்கிடுச்சு. அப்போதான் புரிஞ்
சது... உன் வாசனை எந்த வாசனையையும் மறக்க வச்சிரும்னு,” என்று ஆழ்ந்த குரலில் அவளிடம் கூறிவிட்டு, தன் அறையை நோக்கிச் சென்றிட, இங்கு மலர்தான் திகைத்து நின்றுவிட்டாள்.
 
Last edited:
Top