• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

இதயம் 15

Administrator
Staff member
Messages
627
Reaction score
891
Points
93
இதயம் – 15

"என்ன மலரு, நேரமாச்சு. கிளம்பாம இங்கேயே உலாத்திட்டு இருக்க?" என்று மாதவி கேட்க,

"இதோ கிளம்பிட்டேன் மா," என்ற மலர், கையில் தனது பையை எடுத்துக் கொண்டாள்.

"சாப்பாடு எடுக்காம போற, மலரு," என்று அங்கிருந்த டிபன் பாக்ஸைச் சுட்டிக்காட்டி மாதவி கூற,

"மறந்துட்டேன்," என்றவள், அதனை எடுத்து வைத்துக் கொண்டாள்.

"என்ன மலரு, நேத்துல இருந்து ஏன் ஒரு மாதிரி சுத்திட்டு இருக்க?" என்று மாதவி வினவ,

"என்ன ஒரு மாதிரி சுத்துறேன்? நல்லாத்தான் இருக்கேன். எனக்கு ஒண்ணுமில்ல," என்று பட்டென்று பதில் அளித்தவள், காலில் செருப்பை மாட்டிக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்.

மனதிற்குள் மட்டும் ஒருவித பயம் மெதுவாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. காரணம், ரிஷியின் நேற்றைய செயல்கள்தான். இந்தக் கணம் நினைத்தாலும் அடிவயிற்றிலிருந்து பயப்பந்து உருண்டது.

எப்படி அவனைப் பார்க்கப் போகிறோம்? வேற ஏதாவது பேசினால் என்ன செய்வது? என்று எண்ணங்கள் வந்து குடைய, தன் போக்கில் மனதிற்குள் புலம்பியவாறே நடந்து சென்றாள்.

இன்றைக்கு விடுமுறை எடுக்கலாம் என்று எண்ணியவள், திடீரென்று காரணமின்றி எடுத்தால் தாய், உடன்பிறந்தவர்கள் என்று வரிசையாகக் கேள்வி கேட்பார்கள்; உடல்நிலை சரியில்லையா என்று கவலைப்படுவார்கள் என்று நினைத்துதான் இப்போது கிளம்பினாள்.

திடமாகக் கிளம்பிவிட்டாள்தான். ஆனால், ரிஷியை எப்படி எதிர்கொள்வது என்றுதான் சுத்தமாகத் தெரியவில்லை.

நன்றாகத்தானே இருந்தான். திடீரென்று ரிஷிக்கு என்ன ஆனது என்று மலருக்குச் சந்தேகம். நேற்று வரை தனது முகத்தைக் கூட நிமிர்ந்து பார்த்துப் பேசாதவருக்கு இப்போது என்ன வந்தது? ஏன் இப்படிச் செய்தார்? என்று பலவாறான யோசனைகள் வந்து போயின.

மலருக்கு ரிஷியின் மீது நிறைய மதிப்பும் மரியாதையும் இருந்தது. இப்போதுவரை அது மாறவில்லை. அவன் நேற்று செய்த செயல்களை ஏதோ புரியாமல், தெரியாமல் செய்து விட்டான் என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவளுக்கு, ரிஷியைத் தவறாக எண்ண மனம் வரவில்லை.

காரணம், அவனிடம் பணிபுரியும் இந்த ஒன்றரை வருட காலத்தில், ஒரு முறை ஏன் ஒரு நொடி கூட தவறான பார்வையைத் தன் மீது வீசாதவன். அப்படியிருக்க, ரிஷியின் மீது எப்படி தவறான எண்ணம் தோன்றும்?

தனக்குள்ளே புலம்பியவாறு சென்றவள், ரிஷியின் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினாள். அவன் வந்து திறக்கும் இடைவெளியில் இதயம் படபடவென அடித்துக் கொண்டது.

'முகத்தை நார்மலா வை, மலர். ஒண்ணுமில்ல. நம்ம ரிஷி சார்தான். நேத்து ஏதோ தெரியாம பேசியிருப்பாரு,' என்று தனக்குத்தானே ஆறுதல் கூறியவள், முகத்தை முயன்று சாதாரணமாக வைத்துக் கொள்ள, ரிஷி வந்து கதவைத் திறந்தான்.

அவனது முகத்தில் நேற்றைய நிகழ்வின் சிறு சுவடுகூட இல்லாமல் இருக்க, இவளிடம் ஒரு சிறு திகைப்பு தோன்றி, பின் அது ஆசுவாசமாக மாறியது.

எப்போதும் காலை வணக்கம் கூறுபவள், அன்று எதுவும் கூறாமல் சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்.

ரிஷியும் அவளிடம் எதுவும் பேச முயற்சிக்கவில்லை.

குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பாலை எடுத்து, அவனுக்குச் சத்துமாவு காய்ச்சத் தொடங்கியவளது மனம், 'என்ன, எதுவுமே நடக்காத மாதிரி அமைதியா இருக்காரு?' என்று எண்ண, மற்றொரு மனம், 'அப்படி நடந்து கொள்வது நல்லதுதானே? நீ வேற எதையும் எதிர்பார்க்குறியா?' என்று கேட்டிட,

'அப்படிலாம் ஒண்ணுமில்ல,' என்று அதனைத் தட்டிவைத்தாள்.

பிறகு சத்துமாவு கஞ்சியை எடுத்துவிட்டு திரும்பியவள், சமையலறை வாயிலில் நின்றிருந்த ரிஷியைக் கண்டாள்.

அதனைக் கண்டு ஒரு கணம் திகைத்தவள், பின் இயல்பாகி, "எதுவும் வேணுமா, சார்?" என்று கேட்டிட,

ரிஷி பதிலற்று அவளையே நோக்கினான்.

அதில் சிறிதாய் படபடத்துப் போனவள்,

"சார்..." என்று மெல்லிய குரலில் அழைத்திட,

"வேணும், மலர்," என்று அவளது முகத்தைக் கண்டான்.

அவனது பதிலில் உள்ளுக்குள் பெரிதாய் அதிர்ந்தவள், முகத்தில் எதையும் காட்டாமல்,

"என்ன வேணும், சார்?" என்று கேட்டுவைத்தாள்.

"என்ன கேட்டாலும் கிடைக்குமா, மலர்?" என்றவன், சுவற்றில் சாய்ந்தபடி வினவிட,

"சார்..." என்ற திகைத்தவளுக்கு அடுத்த வார்த்தை வரவில்லை.

"சொல்லு, மலர்," என்று இயல்பாக அவளை நோக்கினான்.

சத்தியமாக மலருக்கு என்ன எதிர்வினை ஆற்றுவது என்றே தெரியவில்லை.

"பதில் சொல்லு, மலர். சாப்பிட என்ன கேட்டாலும் கிடைக்குமா?" என்று மீண்டும் அவளை விழியுயர்த்திப் பார்க்க,

"ஆங்... கிடைக்கும், சார்," என்று சட்டென்று கூறியவளது குரலில் ஆசுவாசம் குடியிருந்தது.

அதனை உணர்ந்த ரிஷி, இதழ் கடையில் தோன்றிய புன்னகையை மறைத்து,

"நான் சாப்பாடுதான் கேட்டேன், மலர். அதுக்கு இவ்வளவு ஷாக்? நீ வேற எதுவும் நினைச்சியா?" என்று புருவம் உயர்த்த,

"நான்... நான் என்ன நினைக்கப் போறேன்? நான் எதுவும் நினைக்கல," என்று சடுதியில் மறுத்தாள் மலர்.

பதிலின்றி அவளைப் பார்த்தவனது இதழ்களில் கீற்றாய்ப் புன்னகை முளைத்தது.

அவளது கையில் இருந்த சத்துமாவு கஞ்சியை வாங்கிக் கொண்டவன், கூடத்திற்குச் சென்று அமர்ந்துவிட,

'மலரே, இவருகிட்ட கொஞ்சம் கவனமா இருக்கணும். நேத்து ஏதோ தெரியாம பேசிட்டாருன்னு நினைச்சா, இன்னைக்கு ஞாபகம் வச்சு இருக்காரு,' என்று புலம்பியவள், காலை உணவைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டாள்.

மனம் மட்டும் சற்று முன்பு தன்னிடம் வம்பளித்தவன் மீதே மையம் கொள்ள, மனதினில் நேற்று நடந்த நிகழ்வு நிழலாடியது.

மூச்சுக்காற்று உரசும் நெருக்கத்தில் தன்னருகே நின்றிருப்பவனை, படபடக்கும் இதயத்துடன் மலர் விழியுயர்த்திக் காண, அவனது பார்வை முழுவதும் மலரது முகத்தில்தான் இருந்தது.

மெதுவாக அவளது ஆழி விழிகளைத் தொட்டு, பிறகு ஒற்றைக்கல் மூக்குத்தி அணிந்த நாசியில் சறுக்கி, அவளது சிறிய அதரங்களில் நிலைக்கொண்டது.

அவனது பார்வையை உணர்ந்தவள் கதவோடு மேலும் ஒன்றிக்கொள்ள, இப்போது அவளது விழிகளை மட்டும் இமைக்காமல் நோக்கினான்.

"சார்... சார்..." என்று தனக்கே கேட்காத குரலில் மலர் திணற,

"என்னை விட்டுட்டுப் போகாத, மலர்," என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினான்.

"என்ன... என்ன சொல்றீங்க நீங்க?" என்றவள் திக்கித் திணறிக் கேட்க,

"நீ கிளம்புனதும் என்னோட உலகம் இருண்டு போய்டுச்சு, மலர்," என்றவனது குரல் நேசத்தில் கனிந்து அவளது செவியில் உருகியது.

இதுவரை உணர்ந்திடாத அந்தக் குரல் அவளது இதயத்தைப் பெரிதாய் அதிரச் செய்ய, மூச்சை இழுத்துப் பிடித்தாள். உள்ளங்கை இரண்டையும் இறுக்கிக் கொண்டவளது விழிகள் அவனையே வெறித்துப் பார்த்தன.

கைகள் இரண்டையும் அவளைச் சிறை செய்தது போல கதவின் மீது ஊன்றியவன், குனிந்து அவளது செவியருகே,

"மலர்..." என்று தனது ஒட்டுமொத்த தவிப்பையும் தேக்கி அழைக்க,

இவளுக்கு அவனது விழிகளிலும் குரலிலும் தென்பட்ட தவிப்பு நடுக்கத்தை உண்டாக்கியது.

தொண்டைக்குழி வறண்டு போக, உமிழ்நீரை விழுங்கி அதனைச் சரிசெய்தவள்,

"ப்ளீஸ்... தள்ளிப் போங்க..." என்று மெதுவான குரலில் முணுமுணுக்க,

"என்னை விட்டுத் தள்ளிப் போகாத, மலர்," என்றவனது குரல் உணர்ச்சியின் மிகுதியில் கரகரத்தது.

மலருக்கு அதிர்ச்சியிலும் திகைப்பிலும் வேறு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதுவும் அவனது விழிகள் காட்டிய உணர்வு அவளை முழுவதுமாகத் தாக்க, விழிகளை மூடித் திறந்தாள்.

"ஒரே ஒரு டைம், மலர்..." என்றவனது விரல் அவளது வதனத்தை நோக்கி வர,

சட்டென்று இரு கரங்களாலும் அவனைத் தள்ளியவள், கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்துவிட்டாள்.

வேகவேகமாக அங்கிருந்து நகர்ந்து பிரதான சாலைக்கு வந்தவள், ஒரு மரத்தின் மீது சாய்ந்து நின்று பெரிய பெரிய மூச்சுகளை வாங்கினாள்.

படபடவென அடித்துக் கொண்ட இதயத்தின் மீது கையை வைத்தவள், விழிகளை மூடித் திறந்து தன்னைச் சமன்படுத்திக் கொண்டாள்.

பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தைக் கழுவிவிட்டு, சிறிது தண்ணீரும் அருந்தியவளுக்கு ஓரளவு ஆசுவாசம் பிறந்தது.

பின் படபடவென வேகநடையில் வீட்டை நோக்கிச் சென்றாள். வீட்டை அடையும் வரையிலுமே தன்னைக் கடந்து சென்ற வாகனங்களோ, மனிதர்களோ, சுற்றுச்சூழலோ எதுவுமே அவளது கவனத்தில் பதியவில்லை.

ஒருவித அதிர்வான மனநிலையில் இருந்தவள் வீட்டை அடைய,

"என்ன மலர்? ஏன் இப்படி வேர்த்து விறுவிறுத்து வந்திருக்க? மெதுவா வர வேண்டியதுதானே?" என்ற மாதவியின் குரலில்தான் தெளிந்தாள்.

"அது இருட்டிருச்சுல ம்மா... அதான் வேகமா வந்தேன்," என்றவள் முகத்தைப் பூந்துவாலையால் துடைக்க,

"என்ன மலரே? எதையாவது பார்த்து பயந்துட்டியா? ஏன் உன் முகம் ஒரு மாதிரி வெளுத்துப் போயிருக்கு?" என்று மாதவி அருகில் வந்தார்.

"அதெல்லாம் எதுவும் இல்லை. நான் எதைப் பார்த்து பயப்படப் போறேன்? என்னைப் பார்த்தாத்தான் நாலு பேர் பயப்படணும்," என்று படபடத்த மனதைச் சமன்படுத்தித் தாய்க்குப் பதில் அளித்தவள், குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

கதவில் சாய்ந்து நின்று தனது முகத்தைக் கண்ணாடியில் பார்க்க, தாய் கூறியது போல் அச்சத்தில் வெளுத்திருந்தது.

குழாயைத் திறந்து மீண்டும் ஒருமுறை முகத்தை அழுத்தித் தேய்த்துக் கழுவியவள், துண்டால் துடைத்தாள்.

இப்போது ஓரளவிற்கு முகம் சாதாரணமாகத் தெரிந்தது.

வெளியே வந்து மற்றவர்களிடம் எதுவும் பேசாதவள், உண்டுவிட்டு வந்து கட்டிலில் கவிழ்ந்துவிட்டாள்.

"என்னக்கா, வந்தோனே படுத்துட்ட?" என்று அருகில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த சாகித்யா கேட்க,

"தூக்கம் வருது, சாகி," என்றவாறு மறுபுறம் புரண்டு படுத்து விழிகளை மூடினாள்.

ஆனால், விழிகளை மூட முடிந்ததுமே, விழிகளுக்குள் முகம் முழுவதும் தவிப்பைத் தாங்கிய ரிஷி வந்து நின்றான்.

அதில் அதிர்ந்தவள் படக்கென்று எழுந்தமர, அவள் அமர்ந்த வேகத்தில்,

"என்ன ஆச்சுக்கா?" என்று பதறி வினவினாள் சாகித்யா.

"ஒண்ணும் இல்ல, சாகி. கண்ணுல தூசி விழுந்திருச்சு," என்று இல்லாத தூசியை அகற்றுவதற்காக விழிகளைக் கசக்கியவள் மீண்டும் படுத்துக் கொண்டாள்.

ஆனால் விழிகளை மூடவில்லை. மூடினால்தான் அடுத்த நொடியே வந்து நிற்கிறானே, சில நேரத்திற்கு முன்பு நேசம் பகிர்ந்தவன்.

"இது என்னடா வம்பா இருக்கு?" என்று எண்ணி நெற்றியைத் தேய்த்தவள், விழிகளை மூடாமல் திரும்பிப் படுக்க,

"என்னை விட்டுப் போகாத, மலர்..." என்று நேசத்தில் கனிந்து உருகியவனது குரல் செவிக்குள் மோதியது.

அந்தக் குரல் மீண்டும் அவளது உள்ளத்தைச் சில்லிட வைத்தது.

"என்னதான் ஆச்சு இந்த ரிஷி சாருக்கு? இத்தனை நாள் நல்லாத்தானே இருந்தாரு. திடீர்னு என்கிட்ட வந்து இப்படி பேசிட்டு இருக்காரு. ஒருவேளை தண்ணி எதுவும் அடிச்சிருப்பாரோ?" என்று யோசித்தவள், பிறகு,

"இல்லையே... தான் அறிந்த வரையில் அவனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை," என்று நினைத்தாள்.

பிறகு ஏன் அவ்வாறு பேசினான்? அதுவும் தன்னிடத்தில் அவனது விழிகளும் குரலும் உணர்த்திய உணர்வு நிஜமா என்று மனம் ஐயம் கொள்ள,

"கண்டிப்பாக அது உண்மை இல்லை, மலர். நீ தொட்ட டிரஸ்ஸையே போட மாட்டேன்னு தூக்கிப் போட்டவர், அப்படிப்பட்டவர் உன்னைப் பார்ப்பாரா?" என்று மற்றொரு மனம் கேள்வி கேட்டது.

"ஆமாதானே... இதுவரைக்கும் என் கையில இருந்து கூட எதுவும் அவர் வாங்கினது இல்லை. எல்லாத்தையும் டேபிளில்தான் இருப்பாரு. நானும் டேபிளில்தான் வைப்பேன். அப்படி இருக்கும்போது அவர் எப்படி என்னைப் பார்க்க வாய்ப்பு இருக்கு?" என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டாள்.

ஆனால், ஏன் இன்று அவ்வாறு பேசினான் என்ற சந்தேகம் மட்டும் மனதை விட்டுப் போகவில்லை.

"ஒருவேளை அம்மா சொல்ற மாதிரி காத்து, கருப்பு எதுவும் அடிச்சிருக்குமா? இதெல்லாம் உண்மைதானா? அதனால்தான் இப்படி பேசிட்டு இருக்காரோ?" என்று சிந்தித்தவள், அதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று தானாகவே முடிவு செய்தாள்.

பிறகு திடீரென்று நேற்று வரை தன்னிடம் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேசாதவர் ஏன், எதற்காக அப்படிப் பேசினார் என்று மலருக்கு இது ஒரு பெரிய தலைவலியாகி இருந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, நாளை மீண்டும் அவரது வீட்டிற்குத்தானே வேலைக்குச் செல்ல வேண்டும். ரிஷி மீண்டும் இதேபோல் பேசினால் என்ன செய்வது? எப்படி எதிர்வினையாற்றுவது? என்று மனம் பலவாறாக உழன்றது.

எந்தக் கோணத்தில் இருந்து சிந்தித்தாலும், அவன் தன்னைப் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றியது. இருந்தும், ஏன் அந்தக் குரலும் அந்த விழிகளும் வாழ்வின் ஒட்டுமொத்த தவிப்பையும் அவளிடம் கொட்டின என்பது மட்டும் புரியவில்லை.

இப்படியே இரவு வெகுநேரம் புலம்பியவள், தாமதமாகத்தான் உறங்கிப் போனாள்.

மறுநாள் காலை எழுந்ததும் மீண்டும் ரிஷியின் நினைவுதான். அதனூடே மீன் வியாபாரத்தை முடித்து வந்தவள், அவனை எதிர்கொள்ள அஞ்சி வீட்டிற்குள்ளேயே நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான் மாதவி, அவளை கிளம்பத் தாமதமாகிவிட்டது என்று கேட்டார்.

நடந்தவற்றை நினைத்தவாறே காலைச் சமையலை முடித்தவள், சமைத்தவற்றை உணவு மேஜையில் எடுத்து வைத்துவிட்டு வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்தாள்.

பிறகு நேரத்தைப் பார்த்துவிட்டு கிளம்ப ஆயத்தமானவள், சில நிமிடங்கள் யோசித்துவிட்டு ரிஷியின் அறைக் கதவைத் தட்டினாள்.

அலுவலகத்திற்குத் தயாராகி இருந்த ரிஷி கதவைத் திறந்து,

"என்ன, மலர்?" என்று வினவிட,

அவனது "மலர்" என்ற அழைப்பில் உரிமை கூடியது போல இவளுக்குத் தோன்றியது.

இருந்தும் அதனைப் புறக்கணித்தவள்,

"சாப்பாடு சமைச்சு டேபிள்ல வச்சிட்டேன். நான் கிளம்பவா, சார்?" என்று அவனது முகத்தைக் காண,

"டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு, மலர். வரேன்," என்று அவன் அறைக்குள் திரும்பிட, இவளுக்குத்தான் அடிவயிற்றில் பயப்பந்து உருண்டது.

நேற்று பேசியது போல இன்றும் ஏதாவது பேசுவானோ என்ற அச்சம் அபஸ்வரமாய் வந்து குடிகொள்ள, முகம் அதீதக் கலவரத்தைக் காண்பித்தது.

மூடிய கதவை ஒரு நொடி பார்த்துவிட்டு கூடத்திற்கு வந்தவள், பேசாமல் அவன் வருவதற்கு முன்பே கிளம்பிவிடலாமா என்று சிந்தித்தாள்.

பிறகு அது சிறுபிள்ளைத்தனமாகத் தோன்ற, என்ன செய்வது என்று கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்தாள்.

கூறியது போலவே இரண்டு நிமிடத்தில் வெளியே வந்தவன், அவளைக் கடந்து சென்று உணவு மேசையில் அமர்ந்திட,

"ஊஃப்..." என்று ஆசுவாச மூச்சை வெளியிட்டவள்,

"நம்மதான் தேவையில்லாம பயந்துட்டோம் போல. சார் கரெக்ட்டாத்தான் இருக்காரு," என்று எண்ணிக் கொண்டாள்.

அவளது கணிப்பைப் பொய்யாக்கும் வகையில் அடுத்த கணமே,

"மலர், வந்து எனக்கு சாப்பாடு வை," என்று ரிஷி அழைத்திட, இப்போது அந்தக் குரலில் உரிமை அப்பட்டமாகத் தெரிந்தது.

அதனை உணர்ந்தவள்,

"சார்..." என்று திகைப்புடன் அவனைப் பார்க்க,

"என்ன, மலர்? எனக்கு பசிக்குது. வா... வந்து சாப்பாடு எடுத்து வை," என்று மிக இயல்பாக அழைத்தான்.

தயங்கியபடி அவனருகே சென்றவள்,

"ஆனா சார், உங்களுக்குத்தான் வேலைக்காரங்க சாப்பாடு எடுத்து வச்சா பிடிக்காதே..." என்று ஐயத்துடன் அவனது முகத்தைக் காண,

"எனக்கு பிடிக்காதுன்னு நான் உன்கிட்ட சொன்னேனா, மலர்?" என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்திப் பார்த்தான்.

"ம்ஹூம்..." என்று அவளது தலை இடம் வலமாக அசைய,

"தென் வாட்? வந்து சர்வ் பண்ணு," என்று அழைத்தான்.

சரியெனத் தலையசைத்தவள் அமைதியாக அவனுக்கு உணவைப் பரிமாறினாள்.

மலர் பரிமாறி முடித்ததும்,

"நீயும் உட்கார்ந்து சாப்பிடு, மலர்," என்று ரிஷி கூற,

"நானா? நான் எப்படி... வேணாம்," என்று மறுத்தாள்.

"உன்னைச் சாப்பிடச் சொன்னேன், மலர்," என்று அதட்டியவன், அவளுக்கு ஒரு தட்டை எடுத்து வைத்து தானே பரிமாற,

மலர்தான் அவனது அதிரடியில் விழி பிதுங்கி நின்றாள்.

உணவை வைத்தவன்,

"சாப்பிடு," என்ற விதமாக அவளை நிமிர்ந்து பார்க்க,

படக்கென்று அமர்ந்தவள் உண்ணத் தொடங்கினாள்.

மனதிற்குள்,

"இந்த சாருக்கு நிஜமாவே பேய்தான் புடிச்சிருக்கு போல... அதான் இப்படி என்னை இம்சை பண்றாரு. இது எங்க போய் முடியும்னு தெரியலையே. கடவுளே, என்னைக் காப்பாத்துப்பா..." என்று புலம்பியவள், உணவை வாயில் எடுத்து வைக்க,

ரிஷியின் பார்வை அவளிடம்தான் இருந்தது.

அதனை உணர்ந்தவள் நிமிர்ந்து அவனைக் காண,

"என்ன?" என்னும் விதமாக புருவத்தை உயர்த்தி ரிஷி நோக்க,

பட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள்.

"சீக்கிரமா சாப்பிட்டு இங்கிருந்து கிளம்பி ஓடணும், மலரே..." என்று எண்ணியவள், உணவை வேகமாகச் சாப்பிடத் தொடங்க,

அதில் புரை ஏறிவிட, இருமத் தொடங்கினாள்.

"பார்த்து சாப்பிடு, மலர்," என்றவன், அவளது தலையில் லேசாகத் தட்டிவிட்டு தண்ணீரை எடுத்து நீட்ட,

அவனது செய்
கையில் மலரின் இருமல் அப்படியே நின்றுவிட்டது.

தண்ணீரைப் பருகிவிட்டு உணவை விரைவாக முடித்தவள், அவனிடம் கூறிவிட்டுக் கூடச் செல்லாமல் பையை எடுத்துக் கொண்டு வெளியே ஓடிவிட்டாள்.

ஏதோ பேயைக் கண்டது போல தன்னிடமிருந்து தப்பித்து ஓடுபவளைக் கண்டவனது இதழ்களில் குறுஞ்சிரிப்பு பூத்தது.

 
Top