• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

இதயம் 13

Administrator
Staff member
Messages
628
Reaction score
893
Points
93
இதயம் – 13

“ம்மா, இந்தப் புடவை எனக்கு நல்லா இருக்கா?” என்று வினவிய மலர், முன்னும் பின்னும் சுற்றிக் காண்பிக்க,

“ரொம்ப நல்லா இருக்கு, மலர். இன்னும் கொஞ்சம் நல்லா கட்டணும். நான் சரி பண்ணி விடுறேன்,” என்றவர் எழுந்து வந்து மலருக்குப் புடவையை ஒழுங்குபடுத்தினார்.

தான் கட்டியிருந்த ஆலிவ் பச்சை நிறப் புடவைக்கு தோதாக ஒரு ஜிமிக்கி எடுத்து அணிந்தவள், கழுத்தில் மெல்லிய சங்கிலி போட்டுக் கொண்டாள். பிறகு, கூந்தலை நன்கு உலர்த்தியவள், ஒரு சிறிய கிளிப்பில் அதனை அடக்கினாள்.

வேறு எந்த ஒப்பனையும் இன்றி, நெற்றியில் சிறிதான வட்டப் பொட்டு ஒன்றை ஒட்டிக் கொண்டவள், “ஓகே தானம்மா? வேற எதுவும் மாத்தணுமா?” என்று வினவிட,

“எல்லாமே நல்லா இருக்கு, மலர். மூக்குத்தி இன்னொன்னு இருக்குல்ல, அதை மாத்திக்கிறியா?” என்று வினவினார்.

தனது ஒற்றைக்கல் மூக்குத்தியில் விரலை வைத்து பார்த்தவள், “இதுவே இருக்கட்டும்மா. நல்லாத்தான் இருக்கு. அந்த மூக்குத்தி கொஞ்சம் பெருசா இருக்கும்,” என்று மறுத்துவிட, மாதவியும் “சரி” என்று கூறினார்.

மலரின் கல்லூரித் தோழி ஒருத்திக்குத் இன்று திருமணம். அதற்காகத்தான் தயாராகிக் கொண்டிருந்தாள். காலை பத்து முதல் பதினொரு மணி வரை முகூர்த்தம். திருமணத்திற்கு சென்று விட்டு அப்படியே அலுவலகத்திற்குக் கிளம்பி விடலாம் என்று முடிவு செய்திருந்தாள்.

ரிஷி வீட்டிற்குச் சென்று வேலை முடித்துவிட்டு, அங்கிருந்து அப்படியே திருமணத்திற்குச் செல்லும் யோசனை. தன் வீட்டிற்கு வந்து சென்றால் நேரத்திற்குச் செல்ல முடியாது; மற்ற தோழிகள் காத்திருக்க நேரிடும் என்பதால் இவ்வாறு முடிவு செய்திருந்தாள்.

“முடியை பின்னல் போட்டுவிடவா, மலரு?” என்று மாதவி கேட்க,

“தினமும் பின்னித்தான் போடுறேன். இருக்கட்டும்மா,” என்றவள், தன்னுடைய பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

மலருக்குப் புடவை கட்டிப் பெரிதான அனுபவம் எதுவும் இல்லாததால், நடந்து செல்வதற்குச் சற்று சிரமமாக இருந்தது.

“யாருதான் இந்தச் சேலையெல்லாம் கண்டுபிடிச்சது? ஒரு நாள் கட்டிட்டு போயிட்டு வரதுக்குள்ள நாக்கு தள்ளுதுப்பா...” என்று புலம்பியபடி ரிஷியின் வீட்டை அடைந்திருந்தவள், அழைப்பு மணியை அழுத்தினாள்.

உள்ளே இருந்து கதவைத் திறந்த ஷாலினி, மலரைப் புடவையில் கண்டுவிட்டு,

“வரேவ்வா! சேரில உனக்கு சூப்பரா இருக்கு!” என்று மெலிதான கூச்சலிட,

“ஷாலினி மேடம்! நீங்க எப்ப வந்தீங்க?” என்று மகிழ்வுடனும் திகைப்புடனும் வினவினாள் மலர்.

“உள்ளே வா, மலர்,” என்று வழிவிட்ட ஷாலினி, “இப்பத்தான் கொஞ்ச நேரம் முன்னாடி வந்தேன்,” என்று பதில்மொழிய,

“வரேன்னு என்கிட்ட சொல்லவே இல்ல,” என்றும் மலர் வினா தொடுத்தாள்.

“திடீர்னு ஒரு வொர்க் வந்துருச்சு, மலர். அதுதான்,” என்று விளக்கம் கொடுத்த ஷாலினி,

“என்ன விசேஷம்? சாரியெல்லாம் கட்டிட்டு வந்து இருக்க?” என்று வினவிட,

“என் பிரண்டுக்கு மேரேஜ். அதான் பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து சேலை கட்டிட்டு போலாம்னு கேட்டாங்க,” என்று பதில் அளித்தாள் மலர்.

“சேரில சூப்பரா இருக்க, மலர். சுடிதார்ல சின்ன பொண்ணு மாதிரி தெரியிற,” என்று ஷாலினி சிரிப்புடன் கூற,

“நிஜமாவே நல்லா இருக்கா?” என்று ஐயத்துடன் கேட்டாள் மலர்.

“இது என்ன கேள்வி? நிஜமாவே நல்லா இருக்க. உண்மைக்கே சூப்பரா இருக்கு, மலர்,” என்று ஷாலினி இயம்ப,

இருந்தும் நம்பாத பாவனையில் புன்னகைத்து வைத்தாள் மலர்.

“நீ சிரிக்கிறதைப் பார்த்தா நான் சொல்றதை நம்பாத மாதிரி இருக்கே? இரு, உன்னை நம்ப வைக்கிறேன்,” என்றுவிட்டு எழுந்து சென்று,

“அண்ணா, இங்க வா!” என்று தமையனை அழைத்தாள்.

“மலர், இப்ப எதுக்கு ரிஷி சாரைக் கூப்பிடுறீங்க?” என்று மலர் பதற,

“என்ன, ஷாலினி?” என்றபடி வெளியே வந்தான் ரிஷி.

“அண்ணா, நீயே சொல்லு. மலர் இந்தச் சாரில அழகாத்தானே இருக்கா?” என்று வினவிட,

ரிஷியின் பார்வை ஒரு கணம் மலர் மீது படிந்து மீண்டது.

“சொல்லுண்ணா...” என்று ஷாலினி மீண்டும் கேட்க,

“ஹ்ம்ம்... நல்லா இருக்கு,” என்று ரிஷி மெலிதான தலையசைப்புடன் கூறினான்.

“பாத்தியா, மலர்? அண்ணனே சொல்லிட்டாரு. இப்பவாவது நம்புறியா?” என்று ஷாலினி கேட்க,

“நீங்க சொன்னப்பவே நம்பிட்டேன். இதுக்கு எதுக்கு சாரைக் கூப்பிட்டீங்க?” என்று மெலிதான முணுமுணுப்புடன் கூறிச் சிறிதாய் புன்னகைத்தவள்,

“நான் போய் சாருக்குச் சத்துமாவு கஞ்சி ரெடி பண்றேன். உங்களுக்கு காபி ஓகேவா?” என்று வினவினாள்.

“காபி ஓகேதான், மலர். நானும் வரேன் உன் கூட,” என்றவள், மலருடன் சமையலறையில் நுழைய,

“நீங்க இப்பத்தான் வந்தீங்க. போய் ரெஸ்ட் எடுங்க. நான் காபி கொண்டு வரேன்,” என்றாள் மலர்.

“ஏசி கார்ல ஜம்முன்னு உக்காந்துட்டு வந்தேன். இதுக்கு எதுக்கு ரெஸ்ட்?” என்ற ஷாலினி, சமையலறை திண்டில் ஏறி அமர்ந்தாள்.

“என்ன வேலையா வந்திருக்கீங்க, மேடம்?” என்று மலர் கேட்க,

“என்னோட பிஎச்.டி. தீசிஸ் ஒர்க்குக்காக ஒரு ப்ரொபசரை பார்க்க வந்திருக்கேன்,” என்று ஷாலினி பதிலளித்தாள்.

இருவரும் பேசியபடி வேலையைக் கவனிக்க,

“மலர், ரிஷி சார் கம்பெனில சாப்பிட்டுக்குவாரு. நீங்க என்ன பண்ணுவீங்க? உங்களுக்கு மதியத்துக்கும் சேர்த்து சமைச்சிடவா?” என்று வினவ,

“நான் ஆப்டர்நூன்தான் ப்ரொபசரை பார்க்க போறேன். வெளியவே லஞ்ச் பாத்துக்கிறேன். நீ இன்னைக்கு ஆபீஸ்க்கு லீவா?” என்று வினவினாள் ஷாலினி.

“இல்லை. கல்யாணம் பத்து டூ பதினொன்னுதான். முடிச்சுட்டு பன்னிரெண்டு மணிக்கு ஆபீஸ்க்குப் போயிடுவேன். நீங்க மதியம் வர வீட்லதான் இருப்பீங்களா?” என்று பதில் வினவ,

“ஆமா, மலர். எனக்கு எந்த ஒர்க்கும் இல்ல. சாப்பிட்டு தூங்கி எழுந்து கிளம்பிப் போகணும்,” என்று பதில்மொழிந்தாள் ஷாலினி.

“அப்ப என்கூட கல்யாணத்துக்கு வரீங்களா?” என்று மலர் வினா எழுப்ப,

“நானா?” என்று திகைப்புடன் கேட்டாள் ஷாலினி.

“ஆமா, நீங்கதான். கல்யாணம் இங்க பக்கத்துலதான். வர்றீங்களா?” என்று மலர் மீண்டும் அழைக்க,

“நான் எப்படி அங்கே? எனக்கு யாரையும் தெரியாதே,” என்று தயங்கினாள் ஷாலினி.

“அதான் நான் இருக்கேன் இல்ல. நான் பாத்துக்குறேன் உங்களை,” என்றவள், அவள் தயங்குவதைக் கண்டு,

“உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா வேண்டாம்,” என்று கூற,

“விருப்பம் இல்லாமல்லாம் இல்ல, மலர். அங்க யாரையும் தெரியாது. அதான் யோசிச்சேன். சரி, வா போகலாம். நான் ரெடி ஆகிட்டு வரேன்,” என்று திண்டிலிருந்து குதித்தாள்.

“ஒரு வார்த்தை ரிஷி சார்கிட்ட சொல்லிட்டு வாங்க, மேடம்,” என்று மலர் கூற,

“அண்ணன் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க, மலர். நான் பார்த்துக்கிறேன். நானும் சாரி கட்டிட்டு வரவா?” என்று வினவினாள்.

“கட்டிட்டு வாங்க, மேடம். என் பிரண்ட்ஸ் எல்லாருமே சாரிலதான் வருவாங்க,” என்று மலர் கூற,

“என்கிட்டயும் இதே கிரீன்ல ஒரு சாரி இருக்கு. நான் போய் ரெடியாகுறேன்,” என்று ஷாலினி அறைக்குச் சென்றாள்.

ஷாலினி இடத்தில் வேறு யாராவது இருந்தால், நிச்சயமாக மலர் தன்னுடன் அழைத்திருக்க மாட்டாள். என்னவோ, தன்னுடன் இயல்பாகப் பழகும் ஷாலினியைக் கண்டால், சாகித்யாவுடன் இருப்பது போலத்தான் மலருக்குத் தோன்றும். அதனால்தான் அழைத்தாள்.

மலர் சமையலை முடிக்க, அதே நேரம் ஷாலினி தயாராகி வந்தாள். பாசிப் பச்சை நிறப் புடவையில் அழகாகத் தயாராகி இருந்தவளைக் கண்ட மலர்,

“அழகா இருக்கீங்க,” என்று புன்னகையுடன் கூற,

“உன்னைவிட அழகு கம்மிதான், மலர்,” என்று பதில் புன்னகைத்தாள் ஷாலினி.

“பொய்!” என்று உடனடியாக மலர் மறுக்க,

“நம்பலைன்னா போ, மலர்,” என்று போலியாய் சலித்த ஷாலினி,

“கிச்சன்ல வேலை செஞ்சு உன்னோட மேக்கப் எல்லாம் கலைஞ்சிருச்சு. வா, கொஞ்சம் டச்-அப் பண்ணி விடுறேன்,” என்று அழைத்தாள்.

“நான் மேக்கப் எதுவும் போட்டுட்டு வரலையே!” என்று மலர் ஐயத்துடன் கேட்க,

“போடலைன்னா என்ன? இப்ப போட்டுக்கோ. வா,” என்று கைப்பிடித்து தன்னறைக்கு அழைத்துச் சென்றவள், மலருக்குச் சிறிதான ஒப்பனைகள் செய்துவிட்டாள்.

“இதெல்லாம் எதுக்கு, மேடம்? வேண்டாம்,” என்று மலர் மறுக்க,

“ஹெவியா எல்லாம் போடல. லைட்டாதான் போடுறேன். ஒரு டென் மினிட்ஸ்ல முடிச்சிடலாம்,” என்று அவளைச் சரிகட்டிய ஷாலினி அழகாக ஒப்பனை செய்துவிட,

மலருக்கே கண்ணாடியில் தன் உருவம் அழகாய்த் தெரிந்தது.

என்ன மலர், உன்னை நீயே ரசிக்கிறியா? என்று சிரிப்புடன் ஷாலினி புருவம் உயர்த்த,

“கொஞ்சம் அழகாத்தான் தெரியுறேன்...” என்று மெல்லிய கூச்சத்துடன் கூறினாள் மலர்.

“கொஞ்சமில்லை, ரொம்பவே அழகா இருக்க, மலர்,” என்று ஷாலினி கண்ணடிக்க, மலரின் முகத்தில் புன்னகை இமை நீண்டது.

“சரி, வா கிளம்பலாம்,” என்று ஷாலினி அழைக்க,

“சார் சாப்பிட்டதும் எல்லாத்தையும் ஒதுக்கி வச்சுட்டு வரேன்,” என்று மலர் கூற,

“அகைன் கிச்சனுக்குப் போனா மேக்கப் எல்லாம் கலைஞ்சிடும், மலர். ஈவினிங் வந்து எல்லாத்தையும் பாத்துக்கலாம்,” என்று ஷாலினி மறுத்தாள்.

இருந்தும் மலரது முகம் யோசனையைத் தத்தெடுக்க,

“அண்ணா ஒண்ணும் சொல்ல மாட்டாரு, மலர். வா, நான் பாத்துக்குறேன்,” என்று கைப்பிடித்து வெளியே அழைத்து வந்தவள், ரிஷியின் அறைக் கதவைத் தட்டினாள்.

அப்போதுதான் குளித்து முடித்து வந்தவன் கதவைத் திறக்க,

“அண்ணா, நானும் மலரும் ஒரு பங்க்ஷனுக்குப் போயிட்டு வரோம்,” என்று ஷாலினி கூற,

“என்ன பங்க்ஷன்?” என்று ரிஷி வினவினான்.

“மலரோட காலேஜ் பிரண்டுக்கு மேரேஜ். இங்கதான் பக்கத்துல. போயிட்டு வந்திட்றோம்,” என்று ஷாலினி விளக்க,

“எதுல போறீங்க?” என்று மீண்டும் ஒரு கேள்வியைத் தொடுத்தான் ரிஷி.

அதைப் பற்றிச் சிந்திக்காதவள் மலரிடம் திரும்பி,

“எதுல போறோம், மலர்?” என்று வினவினாள்.

“நாங்க முன்னாடி பஸ்ல போற பிளான்லதான் இருந்தோம், மேடம். இப்ப நீங்க வர்றதால ஆட்டோ புடிச்சுக்கலாம்,” என்று மலர் தனது எண்ணத்தைக் கூற,

ஷாலினி பதில் அளிக்கும் முன்,

“என்னோட காரை எடுத்துக்கோங்க,” என்றிருந்தான் ரிஷி.

ஷாலினி பதில் அளிக்கும் முன்,

“ஆனால் நாங்கள் எட்டு பேர் போகணுமே...” என்று மலர் ரிஷியின் முகம் காண,

“மலர், அண்ணாவோட கார் பெருசுதான். எட்டு பேர் தாராளமா போகலாம். நான் நல்லா ட்ரைவ் பண்ணுவேன். அதிலயே போயிட்டு வந்துடலாம்,” என்று ஷாலினி முடித்துவிட்டாள்.

மலர் மீண்டும்,

“சார் எதுல போவாங்க ஆபீஸ்க்கு?” என்று தனது சந்தேகத்தைக் கேட்க,

“அதான் பைக் இருக்கே, மலர். அண்ணா அதுல போயிடுவாங்க,” என்று பதில் அளித்தாள்.

மலர் புரிந்ததாய்த் தலையசைக்க,

“நம்ம திடீர்னு பிளான் போட்டுட்டோம். முன்னாடியே தெரிஞ்சிருந்தா டிரைவரை காரை எடுத்துட்டுப் போகச் சொல்லி இருக்க மாட்டேன். நான் வந்த கார்லயே போயிருக்கலாம்,” என்று ஷாலினி மொழிந்தாள்.

ரிஷி தனது மகிழுந்தின் சாவியை எடுத்து வந்து கொடுக்க,

“போயிட்டு வர்றோம், ண்ணா,” என்று ஷாலினி உரைத்தாள்.

“சேஃப் ஜர்னி,” என்று ரிஷி தங்கைக்கு அறிவுரை கூற,

“நான் பார்த்துக்கிறேன், ண்ணா,” என்று பதில் கொடுத்தவள் மலருடன் வெளியே வந்தாள்.

ஷாலினி ஓட்டுநர் இருக்கையில் அமர, அவளது பக்கத்து இருக்கையில் அமர்ந்த மலர்,

“நான் உங்களுக்கு வழி சொல்றேன், மேடம்,” என்றாள்.

“மஹால் பேரு சொல்லு, மலர். நம்ம கூகுள் மேப்ஸ் போட்டுக்கலாம்,” என்ற ஷாலினி,

“உன்னோட பிரண்ட்ஸ எங்க பிக்-அப் பண்ணணும்?” எனக் கேள்வி கொடுத்தாள்.

“அவங்க பஸ் ஸ்டாப்ல இருப்பாங்க,” என்றவள் தனது தோழிக்கு அழைத்து, அனைவரும் வந்துவிட்டதை உறுதி செய்து கொண்டாள்.

பேருந்து நிறுத்தத்தை நோக்கி மகிழுந்தைச் செலுத்தியபடி வந்த ஷாலினி,

“கிஃப்ட் எதுவும் வாங்கலையா, மலர்?” என்று வினவ,

“வாங்கி இருக்கோம், மேடம். பிரண்ட்ஸ் கிட்ட இருக்கு,” என்று பதில் அளித்தாள்.

“நான் எதுவும் கிஃப்ட் வாங்கலையே, மலர்,” என்று ஷாலினி மலரை காண,

“அதுதான் நாங்க வாங்கி இருக்கோமே, மேடம்,” என்று பதில் உரைத்தாள் மலர்.

“இருந்தாலும் நான் எப்படி சும்மா வந்துட்டுப் போறது? பக்கத்துல எதுவும் கிஃப்ட் ஷாப் இருக்கா, மலர்?” என்று வினவ,

“பக்கத்துல இருக்கு, மேடம்,” என்று மலர் பதில் இயம்பினாள்.

“சரி, உன்னோட பிரண்ட்ஸ பிக்-அப் பண்ணிட்டு, கிஃப்ட் வாங்கிட்டு பங்க்ஷனுக்குப் போகலாம்,” என்று ஷாலினி கூற, மலர் தலையசைத்து வைத்தாள்.

பிறகு பேருந்து நிறுத்தம் சென்று மலரின் தோழிகளை ஏற்றிக்கொண்டு, பரிசு வாங்குவதற்காக ஒரு கடைக்கு அழைத்துச் சென்றாள்.

மலரின் தோழிகளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு பணக்கார வீட்டுப் பெண் இவ்வளவு சாதாரணமாகத் தங்களுடன் பேசி பழகுகிறாள் என்று.

ஷாலினி கடைக்குச் சென்றதும், மலரின் தோழி ஒருத்தி,

“என்ன மலரு, பணக்கார வீட்டுப் பொண்ணுனு சொன்ன... கொஞ்சம் கூட பந்தாவே இல்லாம இவ்வளவு நல்லா பழகுறாங்க,” என்று வியப்புடன் வினவிட,

“எனக்கும் ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும்போது இதான்டி தோணுச்சு. அவங்க வீட்டிலேயே ரிஷி சாருக்கு அப்புறம் இவங்கதான் ரொம்ப நல்ல கேரக்டர். பணம் இருக்கவங்க, இல்லாதவங்க அப்படின்னு எதுவும் பார்க்க மாட்டாங்க. எல்லாரோடவும் ஒரே மாதிரி பழகுவாங்க. நான் சமையல் பண்ணும்போது கிச்சனுக்கே வந்து எனக்கு உதவி கூட பண்ணுவாங்க, தெரியுமா?” என்று ஷாலினியின் பெருமையைக் கூறினாள்.

“பரவாயில்லையே... ரொம்ப நல்லவங்களாத்தான் இருக்காங்க,” என்று மற்றொரு தோழி ஆச்சரியமாய்க் கேட்டுக்கொள்ள,

“ஆமா, மகி,” என்று மலர் பதில் உரைத்தாள்.

பிறகு உள்ளே சென்ற ஷாலினி வந்துவிட, இவர்களது பேச்சு தடைபட்டது.

அதனைக் கண்ட ஷாலினி,

“என்ன, என்னைப் பார்த்த உடனே பேச்சை நிறுத்திட்டீங்க?” என்று சிரிப்புடன் மலரைப் பார்க்க,

“உங்களைப் பற்றித்தான் பெருமையா சொல்லிட்டு இருந்தேன், மேடம்,” என்று பதில் அளித்தாள் மலர்.

“என்னைப் பற்றிப் பேசுனதை நம்புறேன். ஆனா பெருமையா சொல்றதுக்கு என்ன இருக்கு?” என்று ஷாலினி சிரிப்புடன் யோசிக்கும் பாவனை செய்ய,

“என்ன இருக்குனு கேக்குறீங்க? நிறைய இருக்கு. எங்க கூட இவ்வளவு சகஜமா பேசி பழகுறீங்களே, அதுவே பெரிய விஷயம்,” என்று மலருக்கு முன் மற்றவள் பதிலுரைத்தாள்.

“ஏன், நீங்களும் மனுசங்கதானே? சகஜமா பழகுறதுல என்ன ஆச்சரியம்?” என்று ஏதும் இல்லாத பாவனையில் ஷாலினி கேட்க,

‘பாத்தாயா, நான் சொன்னது உண்மைதான்?’ என்பது போல மற்றவர்களைப் பார்த்தாள் மலர்.

“என்ன இருந்தாலும் நீங்க பெரிய இடத்துப் பொண்ணு,” என்று கூட்டத்தில் இருந்த ஒருத்தி கூற,

“அது என்ன பெரிய இடம், சின்ன இடம்? எல்லாருமே மனுஷங்கதான். பணத்தை வைச்சு எப்பவும் யாரையும் எடை போடக்கூடாது,” என்று ஷாலினி கண்டிப்புடன் கூறினாள்.

“உங்களை மாதிரி எல்லாரும் நினைக்கிறதில்லையே?” என்று மலர் கேட்க,

“அவங்களுக்கு எல்லாம் புத்தி இல்லை. அவ்வளவுதான்,” என்று இலகுவாய் முடித்துவிட்டாள் ஷாலினி.

பேசியபடியே திருமண மண்டபத்தை அடைந்தனர். ஷாலினிக்கு அங்கே யாரையும் பெரிதாகத் தெரியாது என்பதால், மலர் அவளது கையைப் பிடித்து தன்னுடனேயே வைத்துக் கொண்டாள்.

ஷாலினிக்கும் அந்தத் திருமணத்திற்குச் சென்று வந்தது புது அனுபவமாக இருந்தது. அவளிடம் எல்லோரும் அன்பாகப் பேசினார்கள். மலரின் தோழிகளும் இயல்பாகப் பழகினார்கள்.

மலருடன் மிகவும் மகிழ்ச்சியாக அங்கே சுற்றிக் கொண்டிருந்தாள் ஷாலினி. மணமக்களுக்குப் பரிசைக் கொடுத்து புன்னகையுடன் வாழ்த்திவிட்டு வந்தாள்.

பிறகு உண்டுவிட்டு, மலரின் தோழிகளை அவர்களை ஏற்றிய இடத்திலேயே சென்று இறக்கிவிட்டவள், மலருடன் அலுவலகத்தை நோக்கிச் சென்றாள்.

“மேடம், என்ன பஸ் ஸ்டாப்புல இறக்கி விடுங்க. நான் போயிடுறேன். எதுக்கு உங்களுக்கு அலைச்சல்?” என்று ஷாலினியிடம் மறுக்க,

“நானும் ஆபீஸ் பக்கம் வந்து ரொம்ப வருஷம் ஆச்சு. உன்னை இறக்கி விட்டுட்டு அப்படியே ஆபீஸைப் பார்த்துட்டுப் போறேன், மலர்,” என்று முடித்துவிட்டாள் ஷாலினி.

இருவரும் பேசியபடியே செல்ல,

“மலர், இந்த மேரேஜ் பங்க்ஷனுக்கு வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லாரும் என்கிட்ட ரொம்ப நல்லா பேசி பழகுனாங்க,” என்று புன்னகையுடன் கூற,

“நீங்களும் அந்தஸ்த்து, தகுதி எதுவும் பார்க்காமல் அவங்ககிட்ட இயல்பா பழகுனீங்களே, மேடம். அதுதான் எல்லாரும் அன்பா நடந்துக்கிட்டாங்க உங்ககிட்ட,” என்று மலர் பதிலளித்தாள்.

“அந்தஸ்த்து, தகுதி எல்லாம் ஒண்ணுமே இல்ல. எல்லாமே நம்ம மனசுதான். எங்களோட ஸ்டேட்டஸ்ல இருக்க நிறைய பேரோட பங்க்ஷன் அட்டெண்ட் பண்ணி இருக்கேன். ஆனா எனக்கு இந்த அளவுக்கு எங்கேயும் பிடிக்கல. நீங்க எல்லாரும் மனுஷங்களை மனுஷங்களா பார்த்தீங்க. ஆனா நான் போற பங்க்ஷன்ல அவங்க வர்ற கார், போட்டு இருக்க டிரஸ், அப்புறம் ஜுவல்ஸ் இதையெல்லாம் வைச்சுத்தான் ஆட்களை மதிப்பாங்க,” என்று ஒருவித சலிப்புடன் கூற,

“நிஜமாவா, மேடம்?” என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் மலர்.

“ஆமாம், மலர். அங்க எல்லாமே பணம்தான். எனக்கு அது சுத்தமா பிடிக்காது. எங்க அம்மாவும் அண்ணியும் கூட அப்படித்தான். நான் சொன்னாலும் அவங்க கேட்க மாட்டாங்க,” என்று ஷாலினி பேச, மலர் கேட்டுக் கொண்டே வந்தாள்.

பத்து நிமிடத்தில் ரிஷியின் நிறுவனத்தை அடைந்திருந்தனர்.

“சரிங்க, மேடம். நான் போய் என்னோட வேலையைப் பார்க்கிறேன். சார் ரூம் அந்த சைடு இருக்கு. உங்களுக்கு தெரியும் தானே?” என்று மலர் கேட்க,

“எனக்கே தெரியும், மலர். நான் பார்த்துக்கிறேன்,” என்று ஷாலினி அவளை அனுப்பிவிட்டு தமையன் அறையை நோக்கிச் சென்றாள்.

அப்படியே அந்த நாள் கழிய, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மலர் தனது வியாபாரத்தை முடித்துவிட்டு ரிஷியின் வீட்டிற்குச் சென்றாள்.

“குட் மார்னிங், மலர்,” என்று புன்னகையுடன் அவளை வரவேற்ற ஷாலினி,

“நாங்க ரெண்டு பேரும் காபி குடிச்சுட்டோம். பிரேக்ஃபாஸ்ட் மட்டும்தான் செய்யணும். வா, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாம்,” என்று அழைத்தாள்.

“உங்களுக்கு எதுக்கு சிரமம்? நானே பாத்துக்கிறேன். நீங்க போங்க,” என்று மலர் மறுக்க,

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எனக்கு போர் அடிக்குது. வா, நாம இன்னைக்கு என்ன சமைக்கலாம்? வெஜிடபிள் புலாவ் செய்யலாமா?” என்று ஷாலினி கேட்க,

“உங்களுக்கு ஓகேன்னா செய்யலாம். தொட்டுக்க கோபி மஞ்சூரியன் செஞ்சிடலாம்,” என்றாள் மலர்.

ஷாலினி அன்று மலரை அங்கேயே உணவு உண்ண வைத்தவள், வீட்டிற்கு அனுப்பவே இல்லை.

“தனியா இருந்தா எனக்கு ரொம்ப போர் அடிக்கும், மலர். அண்ணா அவ்வளவா பேச மாட்டாங்க. என் கூட இரு, மலர்,” என்று தன்னுடனேயே இருத்தி வைத்துக் கொண்டாள்.

மதிய உணவை முடித்ததும் மலர் கிளம்ப ஆயத்தமாக,

“அங்க போய் ரெஸ்ட் எடுக்கிறதை இங்கேயே எடு, மலர். வா,” என்று கைப்பிடித்து தன்னறைக்குள் அழைத்துச் சென்ற ஷாலினி, மலருடன் மெத்தையில் விழுந்தாள்.

மலர் பலமுறை அந்த அறைக்குச் சுத்தம் செய்யச் சென்றிருந்தாலும், மெத்தையில் அமர்ந்ததில்லை. இப்போது படுத்தவுடன் அவளை அழகாய் அந்த மெத்தை உள்வாங்கிக் கொள்ள, அதனை வியப்புடன் கண்டவள்,

“இந்த மெத்தை சூப்பரா இருக்கும், மேடம். விலை எவ்வளவு இருக்கும்? தம்பி, தங்கச்சி படிச்சு முடிச்சதும் இதே மாதிரி ஒரு மெத்தை வாங்கிப் போடணும் வீட்டுல,” என்று வினவிட,

“உனக்கு இந்த பெட் பிடிச்சு இருக்கா, மலர்? நான் இதை வாங்கித் தரவா?” என்று ஷாலினி ஆர்வமாய்க் கேட்டாள்.

“அதெல்லாம் வேணாம், மேடம். நானே வாங்கிக்கிறேன். எங்க வாங்கினீங்கன்னு மட்டும் சொல்லுங்க. விலையும் எவ்வளவு வரும்னு சொல்லுங்க,” என்று மலர் கேட்க,

“ஏன்? நான் வாங்கிக் கொடுத்தா நீ வாங்கிக்க மாட்டியா?” என்று புருவம் உயர்த்தினாள் ஷாலினி.

“அப்படிலாம் எதுவும் இல்ல. எனக்கு நானே சம்பாதிச்சு வீட்டுக்கு எல்லாத்தையும் வாங்கிக் கொடுக்கணும்னுதான் ஆசை. அதான் கேட்டேன். எங்க அம்மாவுக்கு உட்கார்ந்து தைச்சு முதுகெல்லாம் வலிக்குதுன்னு சொல்லுச்சு. இந்த மாதிரி மெத்தை வாங்கிக் கொடுத்தா முதுகு வலிக்காதுல்ல, தூங்கும்போது?” என்று மலர் விளக்கம் கொடுக்க,

ஷாலினி பதிலில்லாமல் அவளைப் புன்னகையுடன் நோக்கினாள்.

“அட போங்க, மேடம்! சும்மா கலாய்ச்சிகிட்டு...” என்று சலித்த மலர், ஷாலினியைப் பார்த்தவாறு திரும்பிப் படுத்து,

“இந்த மெத்தை விலை எவ்வளவுன்னு சொல்லவே இல்லையே, நீங்க?” என்று கேட்க,

“இதோட ரேட் மேபி பைவ் லாக்ஸ் இருக்கும்னு நினைக்கிறேன்,” என்று பதிலளித்தாள் ஷாலினி.

“எதே... அஞ்சு லட்சமா?” என்று அதிர்வில் மலர் எழுந்து அமர்ந்துவிட,

“ஏன், மலர்? இவ்வளவு ஷாக் ஆகுற?” என்று தானும் எழுந்து அமர்ந்தாள் ஷாலினி.

“நான் ஏதோ ஐயாயிரம், பத்தாயிரம் இருக்கும்னு நினைச்சேன். நீங்க ஐஞ்சு லட்சம்னு சொல்லவும் எனக்கு மினி ஹார்ட் அட்டாக்கே வந்துருச்சு. இவ்வளவு காஸ்ட்லியாவா மெத்தை இருக்கும்?” என்று நம்பாது மலர் கேட்க,

“பிப்டி லாக்ஸ் கூட மேட்ரஸ் இருக்கும். பிராண்ட் பொறுத்து அமௌன்ட் மாறும்,” என்று ஷாலினி பதில்மொழிந்தாள்.

“அஞ்சு லட்சத்துக்கு ஒரு சென்ட் இடமே வாங்கி இருக்கலாம். போங்க, மேடம்! நாங்க கோரப்பாயிலே தூங்குறோம்,” என்று சிலுப்பிக்கொண்டு மலர் படுத்துவிட, ஷாலினிக்குப் புன்னகை அரும்பியது.

அவளை அணைத்தபடி படுத்தவள்,

“இதுக்குத்தான் ரேட் சொல்லாம நான் வாங்கித் தரேன்னு சொன்னேன், மலர்,” என்று ஷாலினி கூற,

“அஞ்சு லட்சம் போட்டு எனக்கு மெத்தை வாங்கித் தருவீங்களா?” என்று கழுத்தை மட்டும் திருப்பிக் கேட்டாள் மலர்.

ஷாலினி “ஆம்” எனும் விதமாகத் தலையசைக்க,

“அந்தப் பணத்தை யாராவது கஷ்டப்படுறவங்க இருந்தா, இல்ல படிக்க முடியாம கஷ்டப்படுற பிள்ளைங்க இருந்தா, உதவி பண்ணுங்க,” என்றவள் விழி மூடி உறங்கச் சென்றாள்.

“அதுதான் நம்ம கம்பெனியில இப்ப எம்ப்ளாயீஸோட பிள்ளைகளுக்கு எஜுகேஷனுக்கு ஹெல்ப் பண்றோமே, மலர். நான்தான் அப்பாவுக்கு இந்த ஐடியா கொடுத்தேன்,” என்று ஷாலினி கூற,

பட்டென்று அவள் புறம் திரும்பினாள் மலர்.

அவள் திரும்பிய வேகத்தில் அதிர்ந்த ஷாலினி,

“என்னாச்சு, மலர்?” என்று கேட்க,

“நீங்கதான் அந்த ஐடியாவை சொன்னீங்களா?” என்று விழி விரித்துக் கேட்டாள்.

“ஆமாம், மலர்,” என்று ஷாலினி தலையசைக்க,

“உங்களுக்கு நான் பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கேன், மேடம். நீங்க கொடுக்குற பண உதவியில்தான் என் தம்பி அவனுக்குப் பிடிச்ச காலேஜ்ல சேரப் போறான்,” என்று உணர்ச்சி ததும்பும் குரலில் நன்றி நவின்றாள்.

“என்னது, நன்றிக்கடனா? அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு... பேசாம படு, மலர். எனக்குத் தூக்கம் வருது,” என்று ஷாலினி விழிகளை மூட,

இப்போது தானும் அவளை அணைத்தபடி படுத்த மலர், சிரிப்புடன் விழி மூடினாள்.

இருவரும் உறங்கி மாலைதான் எழுந்தனர். பிறகு மலர் குழம்பியும் சிற்றுண்டியும் செய்ய, ஷாலினி அவளுக்கு உதவினாள்.

பேசியபடியே இருவரும் குழம்பியை அருந்தி முடிக்க,

“மலர், நான் ஷாப்பிங் போறேன். நீயும் வரியா?” என்று ஷாலினி கேட்க,

“இல்ல. நீங்க போயிட்டு வாங்க. நைட்டுக்கு சமைக்கணும்,” என்று மறுத்தாள் மலர்.

“நைட் டின்னர் நாங்க வெளியே பார்த்துக்குறோம். வா, நம்ம ஷாப்பிங் போயிட்டு வரலாம். நாளைக்கு நான் கிளம்பிடுவேன்,” என்று ஷாலினி கூற,

மலர் மறுக்க இயலாது அவளுடன் புறப்படத் தயாரானாள்.

ஷாலினி ரிஷியிடம் கூற, அவனும் தனக்கு சில பொருட்கள் வாங்க வேண்டி இருப்பதாகக் கூறி அவர்களுடன் கிளம்பினான்.

ரிஷி தனக்கு வேண்டிய பொருட்களை எடுத்தபடி வர, மலரும் ஷாலினியும் பேசியபடி பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு இளைஞன் அவர்களைச் சுற்றி வர,

“ஷாலினி மேடம், அந்தப் பையன் அப்போல இருந்து உங்களைப் பார்த்துக்கிட்டே நம்மளைச் சுத்தி வர்றான்,” என்று மெல்லிய குரலில் கூறினாள் மலர்.

“யாரு?” என்று அந்த இளைஞனை நிமிர்ந்து பார்த்தாள் ஷாலினி.

“அதோ அந்தப் பச்சை சட்டை...” என்று மலர் அடையாளம் காண்பிக்க,

அவனைப் பார்த்துவிட்டு திரும்பி
யவள்,

“அவன் என்னைப் பார்க்குற மாதிரி இல்ல. உன்னைத்தான் பார்க்கிறான்னு நினைக்கிறேன்,” என்று ஷாலினி கூறினாள்.

“அட போங்க, மேடம்! காமெடி பண்ணிக்கிட்டு... என்னையெல்லாம் யார் பார்ப்பா?” என்று சலித்தபடி மலர் கூற,

“நான் பார்ப்பேன்...” என்று ஒரு குரல் அவர்களுக்கு பின்னிருந்து கேட்டது.

இருவரும் அதிர்வுடன் திரும்பிப் பார்க்க,

அங்கே ஒரு கையை பாக்கெட்டில் நுழைத்தபடி இயல்பாக நின்றிருந்தான் ரிஷிகேஷவ்.
 
Top