• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

இதயம் 11

Administrator
Staff member
Messages
630
Reaction score
897
Points
93
இதயம் 11:

நீயில்லாமல் கவிதையும் இசையும் சுவையே தராது…

விழிகளை ஆழியாய் விரித்த மலர், “நிஜமாவே இந்த டிரஸ் எல்லாம் எனக்குத்தானா சார்?” என்று வினவிட, “ஆம்” எனும் விதமாக ரிஷியின் தலை அசைந்தது.

“எல்லாமே புதுசு மாதிரி இருக்கே சார்,” என்றவள் ஐயத்துடன் கேட்க, “எல்லாமே யூஸ் பண்ண டிரஸ்தான்,” என்று ரிஷி பதில் மொழிந்தான்.

“சரி,” என்பதாய் தலையசைத்தவள், “நான் பை ஏதும் கொண்டு வரல சார். சாயந்தரம் வரும்போது கொண்டு வந்து எடுத்துக்கிறேன்,” என்று பதில் இயம்ப, “இந்த ட்ராலியும் உனக்குத்தான். எடுத்துட்டு போ,” என்று ரிஷி கூறினான்.

“உண்மையாவா?” என்று விழிகளை இன்னும் பெரிதாக விரித்து ஆச்சரியமாய் கேட்க, ரிஷி அமைதியாய் தலையாட்டினான்.

“ரொம்ப தேங்க்ஸ், ரிஷி சார். எனக்கு இந்த மாதிரி ட்ராலி வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை,” என்றவளது குரலில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.

ஆசையாய் அந்த ட்ராலியைத் தொட்டுப் பார்த்தவள், “நான் போயிட்டு வரேன் சார்,” என்றபடி ட்ராலியைத் தள்ளிக்கொண்டு நடந்தாள்.

மலர் உள்ளே நுழைந்ததும், அவள் கையில் இருந்த பெட்டியைக் கண்ட வித்யா, “என்னக்கா இது?” என்று வினவிட, “இதுல ஃபுல்லா டிரஸ் இருக்கு, வித்யா. ரிஷி சாரோட தங்கச்சி ஷாலினி இருக்காங்கல்ல, அவங்களோடது. லாஸ்ட் டைம் வந்திருந்தப்போ என்கிட்ட ‘போடாத டிரஸ் நிறைய இருக்கு, உனக்குக் கொடுக்கவானு’ கேட்டாங்க. நானும் சரின்னு சொன்னேன். இப்போ ரிஷி சார் ஊருக்குப் போயிட்டு வரும்போது கொடுத்துவிட்டு இருக்காங்க போல. சார் என்கிட்ட குடுத்தாங்க,” என்று மலர் நீண்டதொரு விளக்கம் அளித்தாள்.

வித்யா ஆவலாக பெட்டியைத் திறந்து பார்க்க, உள்ளிருந்த உடைகள் எல்லாம் புதியது போலவே மின்னின.

“என்னக்கா, பழைய டிரஸ்ன்னு சொன்ன. பாக்க எல்லாம் புதுசு மாதிரியே இருக்கு,” என்று வித்யா வியப்புடன் கேட்க, “அவங்க டிரஸ் எல்லாம் ஒரு தடவை, ரெண்டு தடவைதான் போடுவாங்களாம். அதான் பார்க்க புதுசா இருக்கு,” என்று மலர் விளக்க, “என்ன டிரஸ்?” என்றபடி வெளியே வந்தாள் சாகித்யா.

“அக்கா, இங்க வாயேன். இந்த டிரஸ் எல்லாம் சூப்பரா இருக்கு,” என்று வித்யா சாகித்யாவை அழைக்க, அவளும் அருகில் வந்து பார்த்தாள்.

“ஆமாடி, சூப்பரா இருக்கு. எல்லாமே ரொம்ப காஸ்ட்லி போல,” என்று சாகித்யா கேட்க, “ஆமா சாகி, எல்லாமே ஷாலினி மேடமோட டிரஸ். அவங்க எப்படியும் காஸ்ட்லியாத்தான் போடுவாங்க,” என்று மலர் பதிலளித்தாள்.

“அக்கா, நான் இந்த டிரஸ் எடுத்துக்கிறேன் க்கா,” என்று வித்யா ஒன்றைத் தூக்க, “ஏய், உனக்கு அதெல்லாம் ரொம்ப பெருசா இருக்கும்,” என்று மலர் பதிலளித்தாள்.

“பரவாயில்ல க்கா. நான் வளர்ந்த பின்னாடி போட்டுக்குறேன்,” என்று வித்யா எடுத்துக்கொள்ள, மலர் சாகித்யாவிடம், “உனக்கு வேணுன்றதை எடுத்துக்கோ,” என்றாள்.

“எனக்குத்தான் ஏற்கனவே நீ நிறைய வாங்கிக் கொடுத்து இருக்கியே க்கா. உன் கிட்டதான் டிரஸ் கம்மியா இருக்கு. வேலைக்கு வேற போயிட்டு வர. நீயே வச்சுக்கோ,” என்று சாகித்யா கூற, “நிறைய இருக்கேடி. உனக்கு பிடிச்சதை எடுத்துக்கோ,” என்று மலர் மீண்டும் மொழிந்தாள்.

அந்த உடையிலிருந்து ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்ட சாகித்யா, “எனக்குப் போதும் கா. நீயே வச்சுக்கோ. ஆபீஸ் போகையில தினமும் போட்டுட்டு போ. உனக்கு அழகா இருக்கும்,” என்று இயம்ப, மலர் தலையசைத்தாள்.

“டிரஸ்ஸ பார்த்தது போதும். ரெண்டு பேரும் சீக்கிரம் கிளம்புங்க. ஸ்கூல், காலேஜுக்கு டைம் ஆச்சு,” என்று மாதவி நினைவுபடுத்த, “ஆமால, டைம் ஆயிடுச்சு,” என்று இருவரும் அடித்துப் பிடித்து வெளியேறினர்.

மாதவியும் அந்த உடைகளை கண்டுவிட்டு, “இந்த துணி எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு மலரு. ஆனா சைஸ் கொஞ்சம் பெருசா இருக்க மாதிரி இருக்கு. நான் உனக்கு பிடிச்சு தரேன்,” என்று கூற, அந்த உடையில் ஒன்றை தேர்வு செய்து எடுத்தவள், “இதை புடிச்சுதாம்மா. இன்னிக்கு போட்டுட்டு போறேன்,” என்று மலர் ஆசையாக கேட்டாள்.

“நீ போய் சாப்பிடு. அதுக்குள்ளயும் நான் புடிச்சு வச்சுடறேன்,” என்ற மாதவி தையல் இயந்திரத்தை நோக்கி செல்ல, மலர் உணவு உண்ண சென்றாள்.

தாய் தைத்துக் கொடுத்ததும் அந்த உடைகக்கு மாறியவள், கண்ணாடியின் முன் நின்று முன்னும் பின்னும் திரும்பி பார்த்தாள். அந்த வெங்காயத்தாள் நிற உடை அவளுக்கு மிகவும் அழகாய் இருந்தது.

“அம்மா, இந்த டிரஸ் எனக்கு ரொம்ப நல்லா இருக்குல்ல?” என்று மலர் தாயிடம் கேட்க, “ஆமா மலரு. இந்த கலர் உனக்கு பொருத்தமா இருக்கு,” என்று மகளை புன்னகையுடன் பார்த்தார் மாதவி.

“எல்லா டிரெஸ்மே நல்லா இருக்கு. ஷாலினி மேடம் கிட்ட தேங்க்ஸ் சொல்லணும்,” என்று எண்ணிக் கொண்டவள் அலுவலகத்திற்கு புறப்பட்டாள்.

அலுவலகத்திலுமே அவளது உடையை பார்த்து நிறைய பேர் நன்றாக இருப்பதாக கூற, மலர் அன்று முழுவதுமே முகம் முழுவதும் புன்னகையுடன்தான் வலம் வந்தாள்.

மறக்காமல் ரிஷிக்கு புலனத்தில் செய்தி அனுப்பி ஷாலினியின் எண்ணை பெற்றுக் கொண்டவள், அவளுக்கு நன்றி கூறி செய்தியும் அனுப்பி இருந்தாள்.

மலருக்கு சிறுவயதிலிருந்தே புதிய உடைகள் வாங்குவதென்றால் அலாதி பிரியம்தான். தந்தை இருந்தவரை மகளது ஆசையை நிறைவேற்றினார். அவர் இறந்த பிறகு குடும்ப கஷ்டத்தை பார்க்கவே மலருக்கு நேரம் சரியாக இருக்க, புதிய உடை வாங்கவெல்லாம் பணம் இருந்ததில்லை. இப்போது ஷாலினி கொடுத்த உடையெல்லாம் மிகவும் அழகாக இருக்க, தினமும் ஒன்றை உடுத்தி மகிழ்வுடன் சுற்றி வந்தாள்.

“சார், எம்ப்ளாயிஸ்க்கு இந்த மந்த் தீபாவளி போனஸ் கொடுக்கணும். நீங்க இந்த பைலை பாத்துட்டு ஓகே சொன்னா அமௌன்ட் கிரெடிட் பண்ணிடலாம்,” என்று உதவியாளர் கூறியதை கேட்டுக் கொண்டவன், “நான் பாத்துட்டு உங்களுக்கு இன்பார்ம் பண்றேன். யூ மே கோ நவ்,” என்று அனுப்பிவிட்டு அந்த கோப்பை எடுத்து புரட்டிப் பார்த்தான்.

அப்போதுதான் மலருக்கு தீபாவளிக்கு போனஸ் கொடுக்க வேண்டும் என்ற நினைவு வந்தது. எவ்வளவு கொடுக்க வேண்டும்? வேறு ஏதும் வாங்கி கொடுக்க வேண்டுமா? என்று அவனுக்கு தெரியவில்லை. இதற்கு முன் வீட்டில் உள்ள பணியாளர்களுக்கு நேரடியாக அவன் சம்பளம் எதுவும் கொடுத்திருந்ததில்லை.

எல்லாவற்றையும் அண்ணனும் தந்தையும் பார்த்துக் கொள்வதால் அவனுக்கு பெரிதாக இதைப் பற்றி தெரியவில்லை. அலுவலகத்தில் ஒரு மாத சம்பளத்தை தீபாவளி போனஸாக ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தெரியும். ஆனால் மலருக்கு எப்படி என்று யோசித்தவன், சுதாகரிடம் அழைத்து அவன் என்ன கொடுப்பான் என்று விசாரித்தான்.

சுதாகர் ஒரு மாத சம்பளமும், புதிய உடை மற்றும் இனிப்பு வகைகளும் வாங்கி கொடுத்ததாக கூற, “சரி,” என்று கேட்டுக் கொண்டான்.

“பித்து பித்து கொண்டு தவித்தேன் தவித்தேன்...” என்று அலைபேசியில் ஒலித்த பாடலுடன் தானும் மென்குரலில் பாடியபடி சமைத்துக் கொண்டிருந்த மலரை, அலைபேசியின் செய்தி அறிவிப்பு தடை செய்தது.

“யார் நமக்கு மெசேஜ் பண்றது?” என்று எண்ணியவாறு எடுத்து பார்க்க, அவளது வங்கி கணக்கிற்கு இருபத்தைந்தாயிரம் வரவு வைக்கப்பட்டிருந்தது.

“எதே! இருபத்தஞ்சாயிரமா? இவ்வளவு பெரிய அமௌன்ட் நமக்கு யார் அனுப்பி இருக்கா? ஒருவேளை மெசேஜ் மாத்தி அனுப்பிட்டாங்களோ இந்த பேங்க்காரங்க,” என்ற ஐயத்துடன் வங்கி கணக்கு செயலியில் இருப்பை பார்க்க, அது இருபத்தைந்தாயிரம் என்று காண்பித்தது.

வேகமாக யார் அனுப்பியது என்று தேடிப் பார்க்க, ரிஷிகேஷவ் என்ற பெயரில் இருந்து பணம் அனுப்பப்பட்டிருந்தது.

“ரிஷி சாரா! அவர் எதுக்கு எனக்கு இருபத்தைந்தாயிரம் அனுப்பி இருக்காரு? தெரியாம மாத்தி எதுவும் அனுப்பி இருப்பாரோ?” என்று சந்தேகித்தவள் வேகமாக ரிஷியை நோக்கி சென்றாள்.

அவன் கூடத்தில் அமர்ந்து மடிக்கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்க, “ரிஷி சார், என் அக்கவுண்டுக்கு இருபத்தஞ்சாயிரம் அனுப்பி இருக்கீங்க. தெரியாம மாத்தி அனுப்பிட்டீங்களா? திருப்பி அனுப்பவா?” என்று வினவினாள்.

“அது உனக்குத்தான். தீபாவளி போனஸ்,” என்று ரிஷி பதில் அளிக்க, “தீபாவளி போனஸ் இவ்வளவா?” என்று அதிர்வுடன் அவனை கண்டாள்.

சுதாகர் கிட்ட கேட்டேன். அவன்தான் ஒன் மந்த் சேலரியும் டிரெஸ்ஸும் எடுத்துக் கொடுக்கணும்னு சொன்னான். டிரெஸ்ஸுக்கும் சேர்த்து அமௌன்ட் அனுப்பி இருக்கேன். நீயே எடுத்துக்கோ,” என்று ரிஷி முடித்துவிட, அதிர்விலிருந்து மீண்டவள், “ரொம்ப தேங்க்ஸ், ரிஷி சார்,” என்று ஆர்ப்பரித்தாள்.

இவ்வளவு பணம், அதுவும் ஒரே மாதத்தில் அவள் சம்பாதித்திருக்க, மனம் மகிழ்வில் துள்ளியது.

அந்தக் கணமே தீபாவளிக்கு என்னென்ன வாங்க வேண்டும், தனக்கு என்ன உடை வாங்க வேண்டும் என்று மனதிற்குள் கற்பனை பெரிதாய் விரியத் துவங்கியது.

இந்த முறை குடும்பத்தினருக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடையை, பணத்தைப் பார்க்காமல் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

வித்யாவுக்கு மட்டும் இந்த விடயம் தெரிந்தால் சந்தோஷத்தில் எப்படி குதிப்பாள் என்று எண்ணியபடியே மலர் அங்கேயே நின்றுவிட, மடிக்கணினியில் இருந்து பார்வையை விலக்கியவன் நிமிர்ந்து அவளை கேள்வியாக நோக்கினான்.

அவனது பார்வையை கண்டதும் தான் அங்கேயே நின்று விட்டதை உணர்ந்தவள், ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்.

வீட்டில் உள்ளவர்களுக்கு விஷயம் தெரிந்ததும், அவர்களும் மிகவும் மகிழ்ந்து போயினர். இதில் வித்யாதான் தனக்கு மூன்று உடை வேண்டும் என்று கேட்டு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தாள். மலர் அந்த வார இறுதியில் அனைவரும் சென்று உடை எடுத்து வரலாம் என்று கூறி தங்கையை அமைதிப்படுத்தினாள்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாதலால் மலர் மெதுவாய் காலை சமையலை முடித்துவிட்டு, தானும் உண்டுவிட்டு வந்து மதிய உணவை தயாரிக்கும் வேலையில் இறங்கி இருந்தாள்.

இப்போது அழைப்பு மணி ஓசை கேட்க, “சாரை பாக்க யாரும் வந்து இருப்பாங்களோ?” என்று எண்ணியபடி போய் கதவை திறந்தாள்.

“கதவை திறக்க எவ்வளவு நேரம் மலர்?” என்று சிடுசிடுத்தபடி நின்றிருந்தார் ராதா.

அவரை எதிர்பாராது ஒரு நொடி அதிர்ந்தவள், பின் முகத்தை இயல்பாக்கி, “கிச்சன்ல இருந்ததனால கேட்கல மேடம்,” என்றபடி அவருக்கு வழிவிட்டவள், மனதிற்குள், ‘மலரே, நீ சந்தோஷமா இருக்கது அந்த கடவுளுக்கே பொறுக்கலை போல. அதுதான் இந்த அம்மாவை அனுப்பி வச்சிட்டார்,’ என்று எண்ணிக்கொண்டாள்.

அழைப்பு மணி ஓசை கேட்டு தானும் வெளியே வந்த ரிஷி, தாயை எதிர்பாராது திகைத்து, “என்னம்மா, சொல்லாம வந்திருக்கீங்க?” என்று வினவ, “சும்மாதான் கண்ணா. உன்னை பாக்கணும் போல இருந்துச்சு. அதான்,” என்றபடி நீள்விருக்கையில் அமர்ந்தார்.

“சொல்லி இருந்தா நானே வந்து இருப்பேன் ம்மா. ஏன் நீங்க அலையுறீங்க?” என்றபடி ரிஷி தாயின் அருகில் அமர, “இதுல என்ன அலைச்சல் இருக்கு? கார்ல அங்க ஏறி இங்க இறங்குறேன். அவ்வளவுதானே?” என மகனிடம் கூறியவர், “எனக்கு போய் ஜூஸ் போட்டுக்கொண்டு வா, மலர்,” என்று மலருக்கு கட்டளையிட்டார்.

மலர் சரியென தலையசைத்துவிட்டு சமையலறை சென்று அவருக்கு பழச்சாறு செய்யும் வேலையில் ஈடுபட்டாள்.

மறக்காமல் தனது அலைபேசியில் ஓடிக்கொண்டிருந்த பாடலை நிறுத்திவிட்டாள். அதைக் கேட்டால் நிச்சயம் ராதா ஏதாவது கூறுவார் என்று அவளுக்கு தெரியும்.

இவர் இங்கிருந்து கிளம்பும் வரை தான் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டவள், இருவருக்கும் பழச்சாறை எடுத்துச் சென்று கொடுத்தாள்.

தாயும் மகனும் ஏதோ தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அதனை கவனித்தும் கவனிக்காத பாவனையில் கொடுத்துவிட்டு வந்து தனது வேலையை பார்க்கலானாள்.

சிறிது நேரத்தில், “மலர், என்ன சமைக்கிற?” என்று ராதாவிடமிருந்து குரல் வர, “சிக்கன் பிரியாணியும் சிக்கன் கிரேவியும் செய்றேன் மேடம்,” என்று பதில் அளித்தாள்.

“ஹ்ம்ம்... செஞ்சு முடிச்சிட்டு வந்து எனக்கு அந்த ரூமை கிளீன் பண்ணிக் கொடு,” என்று ராதா கட்டளையிட, “அந்த ரூம் ஏற்கனவே க்ளீனாத்தான் மேடம் இருக்கு,” என்று மலர் பதில் இயம்பினாள்.

“கடைசியா எப்போ கிளீன் பண்ண?” என்று ராதா வினவ, “இந்த வாரம்தான் மேடம்,” என்று பதில் மொழிந்தாள்.

“ஒரு வாரம் ஆச்சுல்ல. தூசி சேர்ந்திருக்கும். போய் கிளீன் பண்ணு. நான் ரெஸ்ட் எடுக்கணும்,” என்றவர் அலைபேசியில் மூழ்கிவிட, சமைத்து முடித்தவள் அந்த அறையை பெருக்கி துடைக்கத் துவங்கினாள்.

மலர் அறையை சுத்தம் செய்து முடித்ததும், “கிளீன் பண்ணி முடிச்சிட்டல்ல. நீ கிளம்பு. லஞ்ச் நாங்க பாத்துக்கிறோம்,” என்று அவளை அனுப்பிவிட, ‘என்னடா இது! எட்டாவது அதிசயமா இருக்கு!’ என்று வியந்து போனவள், விட்டால் போதும் என்று வீட்டிற்கு ஓடி விட்டாள்.

மாலை மீண்டும் அவள் வரும்போது ரிஷி வந்து கதவை திறந்தான். அங்கு ராதா இருப்பதற்கான அறிகுறி தெரியவில்லை. ஒருவேளை கிளம்பிவிட்டாரா என்று எண்ணியவாறு காபியை தயாரிக்க, சிறிது நேரத்தில் கூடத்தில் அவரது குரல் கேட்டது.

“ஆமாங்கத்தை, இந்த பொண்ணையும் வேணாம்னு சொல்றான். நீங்களே பார்த்தீங்க தானே பொண்ணு போட்டோவ. எவ்வளவு அழகா இருக்கான்னு! இதைவிட அழகான பொண்ணு நான் எங்கன்னு போய் தேட முடியும்? இவனுக்கு எந்த பொண்ணை பார்த்தாலும் பிடிக்க மாட்டேங்குது,” என்று ராதா அலைபேசியில் புலம்புவது மலரின் காதில் விழ, அதைக் கேட்டபடியே வெங்காய பஜ்ஜியை சுடத் துவங்கினாள்.

“அந்தஸ்திலயும் நம்மள போல வசதியானவங்கதான். பொண்ணு நல்லா படிச்சிட்டு, அவங்க அப்பாவோட ஸ்டீல் ஃபேக்டரிய பார்த்துட்டு இருக்கு. அழகு, அறிவு, பணம் எல்லாமே இருக்கு. இருந்தும் இவன் ஏன் வேணாம்னு சொல்றான்னு எனக்கு தெரியல,” என்று ராதாவின் புலம்பலை காதிற்குள் வாங்கியவாறு, காபியையும் வெங்காய பஜ்ஜியையும் கொண்டு வந்து அவர் முன் வைத்தாள் மலர்.

பின் ரிஷியிடம் கொடுப்பதற்காக அவனைத் தேட, “அவன் வெளியே போய் இருக்கான். அவன் வந்ததும் வேற செஞ்சு கொடு,” என்று அலைபேசியில் கவனத்தை வைத்தவாறு ராதா கூற, “சரி,” என்று தலையசைத்தவள் சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்.

மதியம் சமைத்த பாத்திரங்கள் கிடக்க, அதனை விளக்கி வைக்கத் துவங்கினாள். இன்று இரவு உணவுக்கு என்ன சமைக்க வேண்டும் என்று ராதாவிடம் கேட்க செல்ல, அவரது மேஜை மீது இருந்த புகைப்படம் மலரின் கவனத்தை ஈர்த்தது.

அதனைக் குனிந்து பார்த்தவள், “அம்மாடி! என்ன இவங்க இவ்வளவு அழகா இருக்காங்க!” என்று வாய்விட்டு கேட்டுவிட, தனது தேர்வில் ராதாவிற்கு பெருமை மேலோங்கியது.

“என்னோட செலக்சன் அழகா இல்லாம எப்படி இருக்கும்?” என்று சிரிப்புடன் வினவ, “அப்படியே இந்த டிவில எல்லாம் வர்ற ஹீரோயின் மாதிரி இருக்காங்க. இவங்கதான் ரிஷி சாரை கல்யாணம் பண்ணிக்க போறாங்களா?” என்று பதில் வினவினாள் மலர்.

“எங்க! அவனுக்கு பார்த்த பொண்ணுதான். ஆனா அவன் புடிக்கலைன்னு சொல்லிட்டானே,” என்று ராதா சலிப்புடன் கூற, “இவ்ளோ அழகான பொண்ணையும் வேணாம்னு சொல்லிட்டாரா சார்?” என்று ஆச்சரியமாக வினவினாள் மலர்.

“ஆமா. ஒரு செகண்ட் கூட போட்டோ பாக்கல. ‘பிடிக்கல’ன்னு ஒரு வார்த்தையில முடிச்சிட்டான். அதுதான் என்ன பண்றதுன்னு தெரியாம யோசிச்சிட்டு இருக்கேன்,” என்று ராதா யோசனையுடன் கூற, “இவங்க சீரியல்ல வர்ற ஹீரோயின் மாதிரி இருக்காங்க மேடம். ஒருவேளை சார் படத்துல வர்ற ஹீரோயினி அளவுக்கு அழகா பொண்ணு எதிர்பார்க்கிறாங்களோ?” என்று ஐயத்துடன் வினவினாள் மலர்.

“இருக்குமோ?” என்று ராதா சிந்திக்க, “வாய்ப்பு இருக்கு மேடம். சார் பாக்க ஹீரோ மாதிரிதான் இருக்காரு. அதனால இன்னும் அழகான பொண்ணா எதிர்பார்க்கிறாரோ? நீங்க வேணா சார் கிட்ட கேட்டு பாருங்க மேடம்,” என்று மலர் மொழிந்தாள்.

‘இவ சொல்ற மாதிரி கேட்டு பாக்கலாமா?’ என எண்ணியபடி ராதா நிமிர, வாசலில் இவர்களது உரையாடலை கேட்டபடி நின்றிருந்தான் ரிஷிகேஷவ். கதவு பூட்டவில்லை. ஆதலால் இவர்களுக்கு ரிஷி வந்தது தெரியவில்லை.

மகனைக் கண்டதும், மலர் கூறியதை கேட்க நினைத்தவர் அருகிலிருந்தவளிடம், “உனக்கு இங்க என்ன வேலை? போய் நைட்டுக்கு சப்பாத்தியும் பன்னீர் பட்டர் மசாலாவும் செய்,” என்று அவளை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.

காரணம், ‘என் குடும்ப விடயத்தை பேசும்போது இங்கு சமையல் செய்யும் பெண்ணுக்கு என்ன வேலை?’ என்று எண்ணித்தான்.

ரிஷி எதையும் கேட்டுக் கொள்ளாது அறைக்குள் நுழைந்திட, “கண்ணா, உனக்கு இந்த பொண்ணைவிட அழகான பொண்ணை பார்க்கவா? இவ உனக்கு பொருத்தம் இல்லைனு நினைச்சுதான் வேண்டாம்னு சொன்னியா?” என்று நேரடியாக வினவிட, “ம்மா, அதெல்லாம் எதுவும் இல்ல.” என்று முடித்துவிட்டான்.

“அதுதான் ஏன் புடிக்கலைன்னு சொன்னாதானே கண்ணா. அடுத்த பொண்ணு உனக்கு பிடிச்ச மாதிரி பார்க்க முடியும். உனக்கு இன்னும் அழகான பொண்ணு வேணும்னாலும் அம்மா கிட்ட சொல்லு. எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு கொண்டு வரேன்,” என்று ஆவலாய் மகனது முகம் காண, ரிஷியிடம் சில கணம் மௌனங்கள்.

பிறகு, “ஓகே ம்மா. இந்த பொண்ணை பாக்க போகலாம். நேர்ல பாத்துட்டு நான் முடிவை சொல்றேன்,” என்று ரிஷி கூற, “நிஜமாவா கண்ணா?” என்றவரது முகம் எங்கும் மகிழ்ச்சியின் பூஞ்சாரல்.

“ஆமாம்,” என்று ரிஷி மீண்டும் அதனை உறுதிப்படுத்த, “ரொம்ப சந்தோஷம் கண்ணா. கண்டிப்பா உனக்கு இந்த பொண்ணு பிடிக்கும். நேர்ல பாத்துட்டு நீயே கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவ பாரு,” என்றவர் அடுத்த கணமே அலைபேசியை எடுத்து கணவரிடம், “ஏங்க, ரிஷி இந்த பொண்ணு பார்க்க சம்மதம் சொல்லிட்டான். வர புதன்கிழமை நல்ல நாள்தான். அன்னைக்கே போய் பார்த்துட்டு வருவோமா?” என்று அவ்வளவு சந்தோஷத்துடன் பேசத் துவங்கினார்.

ராதாவின் குரல் சமையலறையில் இருந்த மலருக்கும் கேட்க, ‘ஹை... ரிஷி சாருக்கு கல்யாணம்
ஆகப்போகுது!’ என்று அவளும் மகிழ்ச்சியில் துள்ளினாள்.

ஒவ்வொருவரிடமும் அலைபேசியில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த தாயை அமைதியாய் பார்த்திருந்தான் ரிஷிகேஷவ்.
 
Top