• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,314
Reaction score
3,904
Points
113
நேரம் – 34 💜

பரிதி தலையைக் கைகளில் தாங்கி அமர்ந்திருந்தான். எப்படியோ துண்டித்துப் போன அழைப்பை மீண்டும் இணைத்து நீதிபதியிடம் மன்னிப்பைக் கோரி, அவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்து முறையாய் விவாகரத்தைப் பெற்று விட்டார்கள் இவர்கள்.

“மேடம், டிஜிட்டல் சைன் போட்டாலே போதும். நீங்க இந்தியா வரும்போது பேப்பர்ஸ் மட்டும் கலெக்ட் பண்ணிக்கோங்க. இப்போ யூ ஆர் அபிஷியலி டிவோர்ஸ்ட்!” என வழக்கறிஞர் அப்போதுதான் இருவரிடமும் மின்னணுக் கையொப்பம் பெற்று சட்டபடி விவாரத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

இசைவாணி அவரிடம் நன்றி கூறி அவருக்கான பணத்தை அனுப்பிவிட்டு இவனிடம் வந்தாள். பரிதி அமர்ந்திருந்ததைப் பார்த்து அவன் தோளில் கை வைத்தவள், “என்னாச்சு பரிதி? அதான் டைவர்ஸ் கிடைச்சுடுச்சே. போ, போய் உன் மதியை சமாதானம் பண்ணு. சும்மாவே ஆடுவா, இப்போ சலங்கை வேற கட்டிவிட்டுட்ட” என்றாள் கேலியுடன்.

“ம்ப்ச்... நீ வேற வாணி. அவ எப்பவோ கிளம்பி போய்ட்டா. செம்ம கோபத்துல இருக்கா. கால் பண்ணி பார்த்தேன். ப்ளாக்ல போட்டுட்டா போல!” என்றான் இறங்கிய குரலில்.

சில நொடிகள் அவனையே பார்த்தவள், “அவளைக் கல்யாணம் பண்றதுல ஸ்ட்ராங்கா இருக்கீயா பரிதி?” எனக் கேட்டாள்.

“கண்டிப்பா வாணி... இத்தனை வருஷம் யாரோடவும் கமிட்டாகாம இருந்ததுக்கு ஓரே ரீசன், லவ் பண்ணா அந்தப் பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணணும்னு. நான் ஸ்ட்ராங்கா இருக்கேன். பட், அவ எப்படின்னு தெரியலை!” எனக் கவலையுடன் கைகளை விரித்தான்.

“அவ உன்னை விட மாட்டா பரிதி!” அமைதியான குரலில் வாணி சொல்ல, இவன் நிமிர்ந்து கேள்வியாக அவளைப் பார்த்தான்.

“உன்னைக் கழட்டி விடுற ஐடியா இருந்தா அவ இவ்ளோ தூரம் வந்திருக்க மாட்டா. அவளுக்கு உன் மேல பொசசீவ் அதிகம் பரிதி‌. அதுதான் கோபமா வெளிப்படுத்துறா. சமாதானம் பண்றது கஷ்டம்தான். பட், போ... போய் அவளைக் கன்வின்ஸ் பண்ணு‌. இப்போ லீகலா நீயும் நானும் டிவோர்ஸ்ட். சோ, உனக்கும் எனக்கும் இதுக்கும் மேல எந்த ஒட்டும் இல்ல, உறவும் இல்ல. மேக்சிமம் டூ மந்த்ஸ்தான் நான் உன் கூட இருப்பேன்னு சொல்லு. அவ கன்வின்ஸாகிடுவா!” என வாணி கூறவும், இவன் அவள் கைகள் இரண்டையும் தன் கரத்தினுள் புதைத்துக் கொண்டான். இசைவாணி அவனை சலனமில்லாமல் பார்த்துப் பின்னர் நிதானமாகப் புன்னகைத்தாள்.

“நான் உன்கிட்டே நிறைய டைம் ஹார்ஷா நடந்துருக்கேன். சண்டை போட்டிருக்கேன். பட், நீ எப்பவுமே எனக்கு நல்லதுதான் செஞ்சிருக்க வாணி. நீ சொன்ன மாதிரியே லீகலா டிவோர்ஸ் எல்லாம் வாங்கி கொடுத்துட்ட‌. நான் ஒரு லூசு. உன்னைப் போய் தப்பா நினைச்சுட்டேன். நீ ரொம்ப நல்லவ வாணி. தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்க் அண்ட் சாரி!” என்றான் உணர்ந்து. அவனிடமிருந்த தன் பார்வையைப் பிய்த்து சுற்றுப்புறத்தில் சுழல்விட்டவள், சின்ன முறுவலுடன் தன் கரத்தை அகற்றிக் கொண்டாள். பின்னர் அவன் தோளில் தட்டினாள்.

“சந்தோஷமா இரு பரிதி. இளமதி நல்ல பொண்ணுதான். நீ சொன்ன மாதிரி கொஞ்சம் அவளை மாத்துனா போதும். இப்போ போய் அவளை சமாதானம் பண்ணு. உங்க வீட்டையும் நீயே சமாளிக்கப் பாரு. இதுக்கும் மேல என்னை எதுலயும் இழுக்காத பரிதி. உங்கம்மா என்னை பொண்ணு மாதிரி பார்த்துக்கிட்டாங்க. உங்கப்பா ஆத்தான்னு வாய் நிறைய கூப்பிடுவாரு. அவங்க ரெண்டு பேர் முன்னாடியும் வந்து மறுபடியும் எனக்குப் பொய் சொல்ல விருப்பம் இல்ல. உன்னால சமாளிக்கவே முடியலைன்னா மட்டும் என்கிட்டே சொல்லு!” என்றவள் எழுந்து சமையலறைக்குள் நுழைந்தாள்.

அவள் பின்னே சென்ற பரிதி, “கண்டிப்பா உன்னைக் கூப்பிடுவேன் வாணி!” என்றான். இவள் சின்ன சிரிப்புடன் மாட்டேன் என தலையை அசைத்தாள்.

“இவ்வளோ தூரம் ஹெல்ப் பண்ணிட்ட. அப்படியே மேரேஜையும் முடிச்சு வச்சிடு வாணி!” அவளை வம்பிழுத்தான் பரிதி.

“நான் என்ன ப்ரோக்கர் வேலையா பார்க்குறேன். உங்க மேரேஜை நடத்தி வைக்க. அதுக்கெல்லாம் வேற ஆளைப் பாரு. இப்போ போய் உன் ஆளை சமாதானம் பண்ணு!” என்றவள்,

“அப்புறம் முக்கியமான விஷயம். உனக்கும் எனக்கும் இருந்த ரிலேஷன்ஷிப் லீகலா கட்டாகிடுச்சே. இனிமே எதுக்கும் என்னைத் தொல்லைப் பண்ணாத. இனி நீ யாரோ, நான் யாரோ!” என்றாள் தீவிரக் குரலில். அவளை முறைத்தான் பரிதி. அவனின் ஒருக்கரம் இளமதிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய வண்ணமிருந்தது.

“ப்ரேக் பாஸ்ட் மட்டும் ப்ரிபேர் பண்றேன் பரிதி. லஞ்ச் நீ ஆஃபிஸ் கேண்டீன்ல பார்த்துக்கோ. எனக்கு டைமில்ல!” என்றவள், காலை உணவை செய்துவிட்டு அலுவலகம் கிளம்பினாள். பரிதியும் தன் வேலையிடத்தை நோக்கிப் புறப்பட்டான்.

மாலை வேலை முடிந்ததும் இளமதியைக் காண அவள் அலுவலகம் சென்றான். அவன் மீது ஏகக் கோபத்தில் இருந்தவள், அவனை யாரோவெனக் கடந்து போனாள். அடுத்து வந்த ஒரு வாரமும் பூனைக் குட்டி போல அவள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று அவளை சமாதானம் செய்ய முயன்றவனுக்கு பலன் என்னவோ பூஜ்ஜியம்தான்.

அவன் சொல்ல வருவது என்ன என்பதைக் கூட மதி செவிக்கு ஈய மறுத்தவளைப் பார்த்தவனுக்கு ஒருவித எரிச்சல் படர்ந்தது. அப்படியென்ன இவளுக்குத் தன் மீது நம்பிக்கை இல்லாத்தனம் என ஆற்றாமையுடன் அடுத்த வாரம் அவளைக் காணவே அவன் செல்லவில்லை. ஆனாலும் மனத்தின் சோர்வை முகம் காண்பித்துக் கொடுத்தது. அவர்களுக்கு இடையிலான பிணக்கு தீரவில்லை என உணர்ந்த வாணி, அவர்களாகவே சரிசெய்து கொள்ளட்டும் என்பது போல நடந்து கொண்டாள்.
ஆனாலும் பரிதியிடம் முன்பிருந்த இயல்பு குறைந்ததை உணர்ந்தவளுக்கு அப்படியே விட மனதில்லை.

“ஏன் இப்படியிருக்க பரிதி?” இவள் மனம் கேட்காமல் அவனிடம் விசாரித்தாள்.

“ம்ப்ச்.‌. எல்லாம் மதிதான் வாணி‌. கன்வின்ஸ் பண்ண இடமே கொடுக்க மாட்றா. சின்ன சின்ன விஷயத்துக்கு இப்படி கோவிச்சுகிட்டா இவளோட எப்படி நான் காலம் முழுக்க ஓட்டுறது‌. இப்பவே சலிப்பா வருது வாணி!” என்றான்
எரிச்சலாக பிடரியைக் கோதிபடியே.

“அழகான பொண்ணு வேணும்னு ஆசைப்பட்டா மட்டும் போதாது பரிதி. அவளோட குணத்தையும் அனுசரிச்சுப் போகணும். அவளை எப்படி சமாதானம் செய்றதுன்னு யோசி!” என்றாள் அவள். இவனும் சரியென தலையை அசைத்தான்‌‌. அந்த வாரயிறுதி இளமதி அவள் அத்தை வீட்டிற்குச் சென்றதை அறிந்தவன், நேரே அங்கேயே பயணப்பட்டான்.

இளமதியின் அத்தை வெகு சாந்தமாக இருந்தார். இந்திய முக அமைப்புதான் என்றாலும் லண்டனில் வாழ்ந்ததில் அவரது நடை உடையில் நவீனம் தெரிந்தது. அவனை வரவேற்று அமர வைத்தவர், குடிக்க பழச்சாறு கொடுத்தார். அவன் யாரென விசாரித்து தெரிந்து கொண்டார்.

“உங்களைப் பத்தி மதி நிறைய சொல்லிருக்கா தம்பி. தூங்குறா... நான் போய் எழுப்புறேன்!” என அவர் சென்று அவளை அழைத்து வந்தார்‌. அரிதாரம் எதுவும் இல்லாமல் இரவு உடையில் தலைக் கலைந்து முகம் லேசாய் வீங்கியிருந்தாலும் கூட அழகாய் இருந்தாள் மதி. இவனைப் பார்த்ததும் அவள் முகத்தைக் கோணினாள்.

“நீங்க பேசிட்டு இருங்கப்பா. நான் லஞ்ச் ப்ரிபேர் பண்றேன்!” என பெரியவர் அகல, இவன் அவளை வெளியே இருந்த தோட்டத்திற்கு இழுத்து வந்தான்.

“உன் மனசுல என்னைப் பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கேன்னு சொல்லிடு மதி. அப்புறம் நம்ப சேர்றதா, பிரியுறதான்னு முடிவெடுக்கலாம்!” அவன் வெட்டு ஒன்று துண்டு இரண்டென பேச, அவள் முகம் அதிர்ந்தது.

“ஏன் இப்படி ஷாக்காகுற? ஒரு உறவுல அடிப்படையே நம்பிக்கைதான். ஒரு பொண்ணோட ரூம்ல நான் உக்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் உனக்கு சந்தேகம் வந்துடுச்சுன்னா அப்புறம் எப்படி‌ நம்ப ரிலேஷன்ஷிப் கண்டினியூ ஆகும்?” அவன் அழுத்திக் கேட்டதும்,

“ஷட் அப் பரிதி. அப்படி எனக்கு சந்தேகம் வரணும்னா இந்த ரெண்டு வருஷத்துல எப்பவோ வந்திருக்கலாம். நீயும் அவளும் ஒரே வீட்ல தங்கியிருக்கீங்களே. என்னைக்காவது ஒருநாள் நான் உன்னை ஏதாவது கேட்டிருப்பேனா?” என சீறினாள் அவள்.

“அப்போ எதுக்கு டீ இவ்ளோ கோபம் உனக்கு? நான் என்ன பண்ணேன்?” அவனும் கடுப்புடன் கேட்டான்.

“இருக்க வேலையெல்லாம் விட்டுட்டு ஆசை ஆசையா உன்னைப் பார்க்க ஓடி வந்தேன். ஆனால் நீ என்னை வெளியத் தள்ளி கதவை சாத்துற. அதுவும் அந்த லேடி இசைவாணி முன்னாடி. என்னை என் அன்பை நீ மதிக்க மாட்டுற. எனக்கு ஃப்ரையாரிட்டி கொடுக்க மாட்டுற. அப்போ எனக்கு எவ்வளோ கோபம் வரும்?” எனக் ஆத்திரத்தோடு கேட்டாள் மதி.

“லூசு மாதிரி பேசாத மதி. அவ எனக்கு ப்ராஜெக்ட்க்கு ஹெல்ப் பண்ணா. மீட்டிங்ல இருந்தோம் நாங்க. சரியா முடியுற டைம்க்கு வந்து என்ன ஏதுன்னு விசாரிக்காம கத்திட்டுப் போற நீ? க்ளையண்ட் என்ன நினைப்பாரு? ஹம்ம்? இந்த வேலை எனக்கு எவ்வளோ கஷ்டப்பட்டு கிடைச்சதுன்னு உனக்குத் தெரியும் தானே?” அவனும் கடுப்புடன் கேட்க, இவள் அவன் கூற்றின் நியாயம் உணர்ந்து அமைதி காத்தாள்.

“இதுக்கு மேல இதைக் கண்டினியூ பண்ண வேணாம். முடிச்சுக்கலாம் மதி. ஐ யம் சோ டையர்ட்!” என அவன் வேறு பேசும் முன்னே அவனை இறுக்கி அணைத்திருந்தாள் இளமதி.

“தப்புதான் விடு, நான் வேணும்னு செய்யலை. அவளைப் பார்த்தாலே எனக்கு என்னமோ கடுப்பாகுது பரிதி. என்னை இர்ரிடேட் பண்றா அந்த வாணி!” என்றவளை சின்ன முறைப்புடன் தள்ளி நிற்க வைத்த பரிதி, “அவ ரொம்ப நல்லவ மதி. அதுவும் இல்லாம அவளுக்கு என்னைவிட வயசு கூட. வாணி எனக்கு அக்கா மாதிரி!” என்றான். மதியின் முகத்தில் அப்போதுதான் நிம்மதி பிறந்தது.

“நிஜமா அவ உனக்கு அக்கா மாதிரித்தானே?” என மீண்டும் ஒருமுறை கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டாள். பின்னர் அவளது மாமாவின் உடல்நிலையைப் பற்றி அறிந்தவன், மதிய உணவை அங்கே முடித்துக்கொண்டுதான் அகன்றான்.

“அடிக்கடி வந்துட்டுப் போங்க தம்பி!” மதியின் அத்தை அன்போடு கூறவும், இவனும் அவரிடம் சிறிது நேரம் சிரித்துப் பேசிவிட்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டான். அவன் செல்லும்போது இசைவாணி இயந்திரத்தில் போட்ட துணியை எடுத்து வராந்தாவில் காய வைத்துக் கொண்டிருந்தாள்.

“வாணி...” என்றவன் முகம் தெளிந்து புன்னகையுடன் காணப்பட, இவள் முறுவலித்தாள்.

“என்ன பேட்ச்-அப் ஆகிட்டீயா?” எனக் கேட்டவளிடம் மலர்ந்த முகத்துடன் தலையை அசைத்தான் அவன்.‌

“ஹம்ம்... சந்தோஷம். லவ்வர்ஸ்னா சண்டை வரத்தான் செய்யும் பரிதி. அதுக்காக நீ ரொம்ப சலிச்சுக்காத. சண்டையே போடாம கடவுளால கூட சமாளிக்க முடியாதாம்!” என்றவள், “இன்னைக்கு உனக்கு இன்னொரு ஹேப்பினெஸ்!” என்றாள் கண்ணைச் சிமிட்டி. அவன் என்னவெனப் பார்த்தான்.

நீண்ட நாட்களாக தாயின் கை மணம் போல வாலை மீன் குழம்பு சாப்பிட வேண்டுமென அவன் கேட்டுக் கொண்டேயிருக்க, அன்றைக்குத்தான் அந்த மீன் கிடைத்தது. வாங்கி வந்த வாணி, சிந்தாமணியிடம் அழைத்து எப்படி குழம்பு வைப்பது எனக் கேட்டறிந்தாள். அவர் கூறிய செய்முறையை மாற்றாது அப்படியே சமைத்து அவனுக்காக காத்திருந்தாள்.

“வாலை மீன் குழம்பு இஸ் வெயிடிங் ஃபார் யூ!” என அவள் கூறவும், இவன் புன்னகை பெரிதானது. குளித்து உடை மாற்றி வந்தான். இசைவாணி பரிமாற, இருவரும் உண்டனர். சிந்தாமணி காணொளி அழைப்பில் வந்து சிறிது நேரம் பேசினார். மகனுக்காக மருமகள் மெனக்கெட்டு செய்வதில் அவருக்கு நிரம்ப திருப்தி.

“பரவாயில்லை டா உன் பொண்டாட்டி... மெனக்கெட்டு என்கிட்டே எப்படின்னு கேட்டு செய்றா. நல்லா இருக்கா குழம்பு?” சிந்தாமணி விசாரிக்க, இவன் சப்புக் கொட்டிக் கொண்டே சாப்பிட்டான்.

“உன்னைவிட வாணி சூப்பரா செஞ்சிருக்காம்மா. அவகிட்டே எப்படின்னு ஒருதடவை கேட்டுக்கோ!” அவன் குறும்பாய் கூற, இரு பெண்களும் அவனை முறைத்தனர்.

சிந்தாமணி அழைப்பை துண்டித்ததும், “நீ அடங்கவே மாட்டீயா? எதுக்கு எனக்கும் உன் அம்மாவுக்கும் சண்டையை மூட்டி விட்டுட்டே இருக்க?” எனக் கடிந்தாள்.

“சும்மா விளையாட்டுக்கு வாணி. போர் அடிக்குது எனக்கு. நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டா எண்டர்டெயினா இருக்கும்ல!” அவன் தோளைக் குலுக்கி கடைசி வாய் உணவையும் ருசித்து உண்டு எழுந்தான். கையைக் கழுவிவிட்டு வந்தவன், இசைவாணியின் கரத்தைப் பற்றிக் குலுக்கினான்.

“செஃப் ஆக வேண்டிய கை வாணி இது. ஐடில தெரியாத்தனமா வந்து மாட்டிக்கிச்சு!” என்றான் கேலியாக. ஆனாலும் அவள் வைத்த மீன் குழம்பின் வாசனை இன்னும் சில நாட்களுக்காவது அவனிடமே தங்கியிருக்கும். அவள் அவனை முறைத்தாள்.

“நீ இங்கருந்து கிளம்பிட்டா உன் சமையலை ரொம்ப மிஸ் பண்ணுவேன் வாணி. யார் எனக்கு டெய்லி வகை வகையா குக் பண்ணித் தருவா?” என்றான் உண்மையான வருத்தத்துடன்.

“குக்கிங் ரொம்ப சிம்பிளான விஷயம் பரிதி. நீயே கத்துக்கலாம். மதியும் நீயும் சேர்ந்து குக் பண்ணா வேலை ஈஸியா முடியும்!” இவள் கூற, அவன் கேலியாகச் சிரித்தான்.

“அவ சமைக்கலாம் மாட்டா வாணி‌. அவளைப் பத்தி உனக்குத் தெரியாது. எப்படியும் நான்தான் சமைக்க கத்துட்டு அவளுக்கும் சேர்த்து சமைச்சுப் போடணும். பட் அது கூட நல்லாதான் இருக்கும். நமக்கு பிடிச்சவங்களுக்கு சமைச்சுக் கொடுத்து அவங்களை சாப்பிட வச்சுப் பார்க்கிறதும் அழகுதானே?” என்றான் ரசனையான குரலில். இவள் தலையை அசைத்தாள்.

“பேசாம இன்னும் டூ மந்த்ஸ் இருக்கே. நீயே எனக்கு குக் பண்ண கத்துக் கொடு வாணி. உன்னோட கைப்பக்குவம் நாக்குல ஓட்டிக்கிச்சு. நானா கத்துக்கிட்டாலும் நல்லா இருக்காது!” என்றவன், மறுநாளிலிருந்து தினமும் இரவு அவளோடு சமைக்கப் பழகினான். இசைவாணி எளிமையான உணவுகளை அவனுக்கு கற்றுக் கொடுத்தாள்.

“எனக்கு பெப்பர் சிக்கன் கிரேவியும், கீ ரைஸூம் சாப்பிடணும் போலருக்கு வாணி”

“உங்க வீட்டுல அன்னைக்கு குக் பண்ணித் தந்தீயே ஒரு கிரேவி, அந்த டேஸ்ட் இன்னும் என் நாக்குலயே இருக்கு வாணி. அது செஞ்சு தரீயா?”

“அடை தோசையும், மல்லி சட்னியும் வேணும்!”

“பருப்பு உருண்டை குழம்புக்கு நாக்கு ஏங்குது வாணி. அதோ மாங்கா பச்சடி வச்சு சாப்பிட்டா நாலு தட்டு சோறு சாப்பிடுவான் பரிதி!” தினமும் எதையாவது எடுத்துக்கொண்டு வந்தான்.

“சும்மா பேச்சுக்கு என்னை நீ மெய்டுன்னு சொல்லலை. நிஜமாவே என்னை வேலைக்காரியா மாத்திட்டல்ல?” இசைவாணி அலுத்துக்கொண்டே என்றாலும் அவன் கேட்டதை செய்து கொடுத்தாள்.

சாப்பிடும்போது பரிதி இன்னும் அவர்கள் ஒப்பந்த திருமணம் பற்றி கூறவில்லை என்பதை பகிர, “ரொம்ப நாள் மறைக்காத பரிதி. அது உனக்குத்தான் பெரிய ப்ராப்ளமா வரும்!” என்றவள், மேலும் எதிலும் தலையிட்டுக் கொள்ளவில்லை.

அந்த வாரத்திலே மதியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்திருந்தான் பரிதி. அவளைப் பிடிக்கவில்லை எனினும் அவன் முகத்திற்காக உபசரித்து அமர வைத்தாள் வாணி.

“இசைவாணி... என் அங்கிள் ஆன்ட்டியோட தேர்டீத் ஆனிவர்சரிக்கு ஒரு பார்டி அரேஞ்ச் பண்ணிருக்கோம். கண்டிப்பா நீங்க வரணும்!” என மதி இவளை வற்புறுத்தி அழைக்க, வாணி வெறுமனே தலையை அசைத்தாள். மற்றபடி அவளுக்கு அங்கே செல்லும் எண்ணமில்லை.

“வாணி... அவகிட்டே சும்மாதானே தலையை அசைச்ச நீ. பட், நீ வா வாணி. இங்க வந்து டூ இயர்ஸ்ல ஒருநாள் கூட நீ எந்தப் பார்ட்டிக்கும் வந்தது இல்ல. இங்கருந்து கிளம்பவே போற. சோ, இந்த ஒரு டைம் கண்டிப்பா வரணும் நீ!” பரிதி அழைக்க, வாணி மறுதலித்தாள்.

“வேணாம் பரிதி. எனக்கு பார்ட்டி எல்லாம் பெருசா இன்ட்ரெஸ்ட் இல்ல. நீ போய் மதியோட அங்கிள் ஆன்ட்டியை மீட் பண்ணு. அவங்க மனசுல இடம் புடி. அப்போதான் உங்க மேரேஜ்க்கு ஹெல்ப் புல்லா இருக்கும்!” என்றாள் அவள்.

“வாணி... நீ நினைக்கிற மாதிரி பார்ட்டி இல்ல இது. இதுல ஃபேமிலியா வருவாங்க எல்லாரும். ட்ரிங்க்ஸ் இருக்கும்தான். பட், நாட் லைக் அ பப்!” என அவன் அவளை சம்மதிக்க வைக்க முயன்றான்.

“பரிதி... புரிஞ்சுக்கோ. அங்க எனக்கு யாரைத் தெரியும். நான் வந்து தனியா உக்கார்ந்து முழிச்சிட்டு இருக்க முடியுமா? அதுவும் இல்லாம இது உங்களோட ஃபேமிலி பார்ட்டி. நான் எதுக்கு தேர்ட் பெர்சன் மாதிரி?” அவள் கேட்க, பரிதி முறைத்தான்.

“விக்கி வருவான் வாணி. நீ அவனோட உக்கார்ந்திரு. அவன் உனக்கு நல்ல ப்ரெண்ட் தானே?” பரிதி எத்தனை வற்புறுத்தியும் அவள் மறுக்க, விக்னேஷே இவளுக்கு அழைத்துப் பேசி, வருமாறு கூற, வாணியால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை. சரியென ஒப்புக் கொண்டாள்.

வாணி வேலை பார்த்துக் கொண்டிருந்த ப்ராஜெக்ட் நல்லபடியாக முடிந்து மீளாய்விற்காக வைக்கப்பட்டிருந்தது. ஓரிரு வாரங்களில் அந்த திட்டத்திற்கான ஒப்புதல் கிடைத்ததும் இவள் இங்கே வந்ததற்கான வேலை முடிந்துவிடும்.

“வாணி... ப்ராஜெக்ட் முடிஞ்சதும் நீங்க இந்தியா போய் அங்கேயே வேலையைக் கண்டினியூ பண்ணலாம். உங்களுக்கு இங்கே இருக்க விருப்பமிருந்தாலும் அடுத்த பிராஜெக்ட்க்கு உங்களை அசைன் பண்ணிட்றோம்!” என மேலதிகாரி கேட்க, இவள் யோசித்துவிட்டு செல்லுவதாக கூறிவிட்டாள்.

அதிகபட்சமாக ஒருமாதம் மட்டும்தான். அதற்குப் பின்னே இந்தியா செல்லப் போகிறோம் என்று நினைக்கையிலே நிம்மதி, சந்தோஷம் என எதுவுமே தோன்றவில்லை. அங்கே சென்றால் தனக்கென யார் இருக்கிறார்கள் என மனம் தாயை நினைத்துக் கனத்துப் போனது. இங்கேயே வேறு இருப்பிடம் தேடிக்கொண்டு வேலையைத் தொடரலாமா எனக் கூட யோசித்தாள்.

இங்கே இருக்கும்போது சுந்தரி அங்கே கமலாவுடன் நன்றாய் இருக்கிறார் என்பது போலத்தான் மனம் தன்னை சமாதானம் செய்து வைத்திருந்தது. அங்கே சென்று தாயில்லாத வீடு தன்னை வரவேற்கும்போது அதை எப்படி ஏற்றுக்கொள்ள என இப்போதே நெஞ்சை முட்டிக்கொண்டு வந்தது அழுகை. யாருமில்லாத அநாதை என்ற பெயர் அவளுக்கு இப்போது சரியாய் இருக்கும் என உதடுகள் கசப்பாய் முறுவலித்தன. அதே எண்ணத்துடனே கதவை திறந்து உள்ளே நுழைந்தாள். கூடம் வெறிச்சோடி கிடந்தது.

தன்னறைக்குச் செல்ல நடந்தவளுக்கு என்னவோ வித்யாசமாய் தோன்ற, அவளது கால்கள் சமையலறையை நோக்கி நகர்ந்தன. பரிதியும் மதியும் உலகம் மறந்து ஒருவரை ஒருவர் ஆழ்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அவளது இடையோடு கைக்கொடுத்து அவன் அணைத்திருக்க, அவள் கைகள் அவன் பின்னந்தலை முடியை இறுக்கிப் பிடித்திருந்தன. சுற்றம்‌‌ மறந்து தங்களது இணையோடு உறைந்து போயிருந்தனர்.

இந்தக் காட்சியை எதிர்பாராது அதிர்ந்த வாணி மிக அவசரமாய் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். இதயம் அதிவேகமாகத் துடித்தது. சட்டென தன்னறைக்கு நடந்தவளின் நடை தடுமாறியது. உதட்டைக் கடித்து மூச்சை இழுத்துவிட்டு விறுவிறுவென அகன்றாள்.

இரண்டு மணிநேரம் கழித்து அவள் வெளியே வரும்போது பரிதி கூடத்திலிருந்த நீள்விருக்கையில் படுத்தவாறே ஐபிஎல் பார்த்துக் கொண்டிருந்தான். இவள் அவனைக் கண்டும் காணாமலும் கடக்க, படக்கென தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அவள் பின்னே வந்தான்.

“செம்மயா பசிக்குது வாணி. என்ன குக் பண்ணப் போறோம் இன்னைக்கு!” வயிற்றைத் தடவியபடியே அவன் கேட்க, அது காதில் விழாதது போல வெங்காயத்தைப் பொடியாய் நறுக்கத் தொடங்கினாள் வாணி.

“வெங்காயம் எதுக்கு வாணி? என்ன டிஷ்?” எனக் கேட்டு இயல்பாக அவளைத் தொட வந்தவனிடமிருந்து வெகுகவனமாக விலகியவள், “உப்மா செய்யப் போறேன்!” என்றாள் அவன் முகம் பார்க்காது.

“சைக்... உப்மாவா. ப்ளீஸ் வாணி, வேற எதாவது செய்யலாமே. எனக்கு ஏதாவது காரமா சாப்பிடணும் போல இருக்கு!” அவன் கெஞ்ச,

“எனக்கு டையர்டா இருக்கு பரிதி. என்னால இதான் குக் பண்ண முடியும். உப்மா வேணாம்னா உனக்கு ஏதாவது ஆர்டர் போட்டு சாப்பிடு!” என்றாள்.

அவள் முகத்தின் சோர்வை உணர்ந்தவன், “என்னாச்சு? ஏன் ஒருமாதிரி இருக்க? பீவர் ஏதும் இருக்கா?” என நெற்றியைத் தொட வந்தவனிடமிருந்து விலகி நின்றவள்,

“நான் நல்லா இருக்கேன். இப்போ குக் பண்ணவா? வேணாமா?” என சிடுசிடுப்புடன் கேட்டாள். அவனுக்கு அவள் கோபம் எதற்கெனப் புரியவில்லை.

“சரி விடு... நீ போய் உக்காரு. நான் உப்மா செய்றேன்...” அவன் இறங்கி வர, அதற்கும் வாணி பெரிதாய் எதிர்வினையாற்றவில்லை.

“என்னதான் பிரச்சனை உனக்கு?” அவன் சலிப்போடு கேட்டான்.

பெருமூச்சுடன் நிமிர்ந்தவள், “இன்னும் ஒன் மந்த்தான் நான் இங்க இருப்பேன். அதுவரைக்கும் மதி இங்க வர வேணாம்!” என்றாள்.

“ஏன்... அவ வந்தா உனக்கென்ன பிரச்சனை?” பரிதி சுள்ளென கேட்டான்.

“எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. இதோ... இன்னைக்கு நான் வந்தது கூடத் தெரியாம ரெண்டு பேரும் ஃப்ரீ ஷோ காட்டிட்டு இருந்தீங்க. அவ வர்றப்போ எல்லாம் நீங்க ரெண்டு பேரும் எந்த நிலைமையில இருப்பீங்கன்னு நான் யோசிச்சுட்டே கதவை திறக்க முடியுமா? உங்களுக்கு அதைப் பத்தி கவலை இல்லாம இருக்கலாம். லண்டன் கல்சருக்கு நீங்க அடாப்டாகிட்டீங்க. ஆனால் நான் அப்படி கிடையாது. அதே பழைய பஞ்சாங்கமாத்தான் இருக்கேன். சோ, உங்க ரொமான்ஸை கொஞ்ச நாளைக்கு இந்த வீட்டுக்குள்ள வச்சுக்காதீங்க!” என்றாள் கேலியாக. ஆனாலும் இனிமேல் அப்படி செய்யக் கூடாதென அழுத்தமிருந்தது குரலில்.

அவள் பேசியதில் முகம் சிவந்தவன், முன்னெற்றியைக் கோதி, “சாரி வாணி... சாரி. நான்... அது மதிதான் கிஸ் பண்ணா!” அவன் விளக்கம் கொடுக்க வர, ஒற்றைக் கையை நீட்டி உன் விளக்கம் தேவையில்லை என்பது போல பார்த்தாள்.

“நீங்க கிஸ் பண்றதெல்லாம் எனக்குத் தேவையில்லாதது பரிதி. இந்த வீட்ல வேண்டா
ம்னு சொல்றேன். அதுவும் ஒன் மந்த்க்குத்தான். அப்புறம் உங்க இஷ்டம் போல இருந்துக்கோங்க!” என அவள் கூற, இவன் சங்கடத்துடன் தலையை அசைத்து ஏற்றான்.

தொடரும்...



 
Top