• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

ஆருயிரே!_03

New member
Messages
5
Reaction score
6
Points
3
தன்னை தாக்க வந்த பொருள் சுவற்றில் மோதி கீழே விழுந்ததைப் பார்த்து பெருமூச்சு விட்டவாறே நிமிர்ந்த பத்மினி, தன்னையே தீ கக்கும் பார்வை பார்த்திருந்த ராம் கிருஷ்ணனைப் புரியாமல் பார்த்தாள்.

அவன் அவளை முறைத்தவாறே அங்கிருந்து நகரப் போக, அவனை சொடக்கிட்டு நிறுத்திய பத்மினி, "ஹலோ அத்தான். இப்போ எதுக்கு எனக்கு இதை வீசி அடிச்சீங்கனு சொல்லாம எங்க போறீங்க? சொல்லிட்டு போகலாம்ல? " என்று கேட்க, நின்று திரும்பியவன்

"என்னை கிருஷ்னு கூப்பிடாதனு எத்தன வாட்டி சொல்லிருக்கேன்? என்னை அப்டி கூப்டுற உரிமை என்னோட அகிக்கு மட்டும் தான் இருக்கு. புரிஞ்சிதா?" என்று கர்ச்சனையாய்க் கேட்டான் ராம்.

"ஏன் நாம கூப்பிட கூடாதா அத்தான்? நான் உங்களை எப்பவும் அப்டி தான கூப்பிடுவேன்? திடீர்னு என்னாச்சு?" என்று கேட்க

"அதைத்தான் சொல்லுறேன். ஒவ்வொரு வாட்டியும் அப்டி கூப்பிடாதனு என்னால சொல்லிட்டு இருக்க முடியாது. இனிமே அப்டி கூப்பிடாத. அப்பறம் என்னை மனுஷனா பார்க்க மாட்ட" என்று அவளின் முகம் பாராமலே கூறியவன், "டோர் அந்தப் பக்கமா இருக்கு. ப்ளீஸ் வெளியப் போய்ட்டு" என்று கதவைக் கை காட்டிக் கூறினான்.

அவன் நீட்டிய கையையும் அவனையும் மாறி மாறிப் பார்த்த பத்மினி, "சரிங்க அத்தான். இதோ போய்ட்டேன்" என்று கூறியவாறு கதவருகே சென்று நின்று, "பட் யூ நோ ஒன் திங்? நான் எப்பவும் போல உங்களை கிருஷ் அத்தான்னு தான் இனிமேயும் கூப்பிடுவேன். நீங்க சொன்னதால என்னால அதை மாத்திக்க முடியாது அத்தான்" என்று கூறி விட்டு அங்கிருந்து ஓடி விட

"டேமிட்!" என்று கூறி, காலை நிலத்தில் ஓங்கிக் குத்தி விட்டு, அறையை விட்டு வெளியேறினான் அவன்.

இப்போது வீட்டுக்கு அகிலாவின் ஈமச் சடங்குகளை செய்வதற்காய் அக்கம் பக்கத்தவர்கள் வந்திருந்தனர். அவர்களை எல்லாம் சலிப்போடு பார்த்தவன், வாசலில் கிடத்தி வைத்திருந்த அகிலாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

அவளிடம் பேசுவதற்கு நா எழவில்லை அவனுக்கு. வாயை திறந்து விட்டால் அழுது விடுவேன் என்ற அச்சத்தில் வாயை மூடி அவளைப் பார்த்தான் ராம் கிருஷ்ணன். தங்கள் காதலுக்கு இடையில் மரணம் என்ற பாலம் கட்டப்பட்டு விட்டதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சொல்லாமல் கொள்ளாமல் எழுந்து எங்காவது ஓடி விடலாமா என்று கூட சிந்தித்தான் அவன்.

மெதுவாக கையைத் தூக்கி அவளின் கன்னத்தை வருடியவனின் கண்களில் கண்ணீர் நிறைந்து அவளின் மதி முகத்தைப் பார்க்க விடாமல் தடுக்க, கண் இமைகளை தட்டித் திறந்து அவளைப் பார்த்தவன், "ஐ.. ஐ லவ் யூ அகி" என்றான்.

முயன்று பேசி விட்டான். அதற்கு மேல் அவனால் அங்கு நிற்க முடியவில்லை. வேகமாய் எழுந்து நின்று சுற்றி நின்ற யாரையும் பொருட்படுத்தாமல் மாடியேறி அறைக்குள் நுழைந்து கொண்டவன், அறை முழுவதுமாக நிறைந்திருந்த அவளின் புகைப்படங்களைப் பார்த்து அழத் தொடங்கினான்.

அவன் தன்னையே மறந்து விட்டாலும் அவளை மறப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு. அவனின் வாழ்நாளில் அவன் அதிகம் உச்சரித்த வார்த்தை தன்னவளின் பெயராகத் தான் இருக்கும். அவன் அதிகம் பேசியது தன்னவளைப் பற்றியதாகத் தான் இருக்கும். அதிகம் ரசித்தது அவளின் மதி முகத்தை மட்டுமாய் தான் இருக்கும். அவனின் சிந்தனை முழுவதும் அவள் மட்டுமே நிறைந்திருப்பாள். இன்றும் நிறைந்திருக்கிறாள். இனியும் நிறைந்திருப்பாள்!

தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் சரிந்தவனுக்கு அவளை முதலில் பார்த்த நாள் தான் மனக்கண் முன் தோன்றியது!

அது ஒரு மழைக்காலம். நேரம் மாலை ஐந்து மணியாகவே இருந்தாலும் மழைமேக மூட்டத்தால் வானம் கும்மென்று இருண்டுக் கிடக்க, மழை ஹோவென கொட்டிக் கொண்டிருந்தது.

தனது அலுவலகத்தின் கண்ணாடி சுவற்றினூடாக வெளியே பெய்து கொண்டிருந்த மழையைப் பார்த்தவாறு, குளிருக்கு இதமாய் காபி அருந்திக் கொண்டிருந்தான் ராம் கிருஷ்ணன்.

குடைக்கு பதிலாக ஒரு ஃபைலை தலைக்கு மேலால் தூக்கிப் பிடித்த படி நடந்து வந்து கொண்டிருந்தாள் அகிலாதேவி! பாதை ஓரமாக அன்னநடையிட்டு நடந்து வந்து கொண்டிருந்தவளின் மேல், அவளைத் தாண்டி வேகமாய் சென்ற ஒரு வாகனம் சேற்றை வாரி இறைத்து விட்டுச்செல்ல,

"ஓ நோ! என் ட்ரெஸ்" என்று கூறி ஃபைலைக் கீழே போட்டு விட்டுக் குனிந்து தன் உடையில் படிந்திருந்த சேற்றைப் பார்த்தவள், "யோவ்! என் ட்ரெஸ்ல சேற்றை வாரி இறைச்சுட்டு உன் வாட்டுக்குப் போயிட்டு இருக்க. யூஸ்லெஸ் இடியட்!" என்று கத்தியவாறே அவளைத் தாண்டி வெகு தூரம் சென்று விட்டிருந்த வாகனத்தைப் பார்த்து திட்டினாள்.

திடீரென்று உடல் சில்லிட்டதில் தான் ஃபைலைக் கீழே போட்டு விட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன் என்ற உண்மை அவளுக்கு உரைத்தது.

வேகமாய் குனிந்து கீழே நீரில் முற்றிலுமாக நனைந்து போயிருந்த ஃபைலைக் கையில் எடுத்துக் கொண்டவள், "கிருஷ்ணா! கிருஷ்ணா! என் ஃபைல் இப்டி நனைஞ்சு போச்சே. இனி நான் என்னத்த பண்ணுவேன்?" என்று முணுமுணுத்துக் கொண்டு, அருகில் இருந்த பஸ் ஸ்டாண்ட்டில் சென்று மழைக்கு ஒதுங்கி நின்று கொண்டாள்.

பைலை கைப்பைக்குள் சுருட்டி வைத்து விட்டு உள்ளங்கைகளைத் தேய்த்தவாறே ஸ்டாண்ட்டை விட்டு தலையை மட்டும் நீட்டி வெளியே எட்டிப் பார்த்தவளின் மனமோ,'என்ன அகி நீ? இவ்ளோ மழை பெய்யுது. நீ என்னடான்னா சும்மா பார்த்திட்டு இருக்க? இங்க உன் காதைப் பிடிச்சு திருகி மழைல நனையாதன்னு சொல்லுறதுக்கு யாருமே இல்ல. பேசாம போய் நனைஞ்சுட்டு வா' என்று அறிவுறுத்தியது.

அவளுக்கு அதுவே சரியென்று பட்டது. குண்டு குண்டுக் கண்களை உருட்டி தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தவள், அப்படி யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு மழையில் கைகளை விரித்து நனையத் தொடங்கினாள்.

இதையெல்லாம் கண்ணாடி சுவருக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ராம், 'இந்த பொண்ணு என்ன பைத்தியமா? இந்த டைம்ல மழைல நனைஞ்சுட்டு இருக்கா' என்றெண்ணி தலையில் தட்டிக் கொண்டான்.

அது எதையும் அறியாமல் கொட்டும் மழையில் ஆசை தீர நனைந்து முடித்தவள், குளிரில் உடல் விறைத்து ஓடி வந்து பஸ் ஸ்டாண்ட்டினுள் நின்று கொண்டாள்.

நேரத்தைப் பார்க்கலாம் என்று மணிக்கட்டைத் திருப்பி கைக்கடிகாரத்தைப் பார்த்த போது தான், ஆர்வக்கோளாறில் அதைக் கூட கழற்றி எடுத்து வைக்காமல் மழையில் நனைந்து விட்டது நினைவு வந்தது அவளுக்கு.

"அச்சோ! என் வாட்ச்!" என்றவாறே கையில் இருந்த கைக்கடிகாரத்தைக் கையிலிருந்து கழற்றிப் பார்க்க, கைக்கடிகாரத்திற்குள் மழை நீர் நிறைந்ததால் தன் வேலையை நிறுத்தி விட்டிருந்தது அது. மொபைல் வேறு சார்ஜ் இன்றி உயிரை விட்டிருக்க, விட்டால் அழுது விடுவேன் என்ற ரீதியில் இதழ் பிதுக்கி நின்றிருந்தவளுக்கு குளிர் உடலைத் துளைத்து எடுத்தது.

"எப்படியாவது கொஞ்சம் கொஞ்சமா இங்கிருந்து போய் ஆசிரமத்தை அடைந்துட வேண்டியது தான். ஆனால் ஆசிரமத்துக்கு இங்கேருந்து அரைமணிப் பயணம். அவ்ளோ தூரத்தை எப்டி தனியாவே, நடந்து போய்டறது? வழமையா வர பஸ் கூட இன்னுமே வரல. நேரம் என்னனு கூட தெரியல. எல்லாம் என் விதி! " என்று சலித்துக் கொண்டவள், கைப்பையை தூக்கிப் பிடித்தவாறு வெளியே எட்டிப் பார்த்தாள்.

அப்போது அவளைத் தாண்டி செல்லப் போன காரைக் கண்டு அவசர அவசரமாக அதைக் கை நீட்டி நிறுத்தியவள், கார் நின்றதும், "ப்ளீஸ் லிப்ட் கொடுக்குறீங்களா?" என்று காரின் ஜன்னலைத் தட்டிக் கேட்க, ஜன்னல் கண்ணாடியைக் கீழிறக்கி அவளை மேலிருந்து கீழாக பார்த்தான் ராம் கிருஷ்ணன்.

அவனின் ஆராய்ச்சிப் பார்வை கண்டு முழித்தவள், "சார் ப்ளீஸ். இங்க வேற யாருமே இல்ல. வழமையா பஸ்ல தான் போவேன். பட் இன்னிக்கு அதுவும் வரல. டெக்ஸி எதையுமே காணல. ப்ளீஸ் சார். நான் சொல்லுற இடத்தில என்னை ட்ரோப் பண்ணி விடுறீங்களா?" என்று கெஞ்சலாகக் கேட்க, வந்து ஏறு என்பது போல் தலை அசைத்தான் அவன்.

"தேங்க் யூ சார்" என்று கூறிவிட்டு பள்ளி மாணவியாய் துள்ளிக் குதித்து காரில் ஏறிக் கொள்ள

"எங்க போகணும்?" என்று அவள் புறம் பாராமலே கேட்டான் ராம்.

"அருணாதேவி ஆசிரமம்!" என்று கூறிவிட்டு துப்பட்டாவை இழுத்துப் போர்த்திக் கண்களை மூடிக் கொள்ள

"ஆசிரமத்துக்கா? இந்த நேரத்திலயா? நீங்க நியூஸ் பார்க்கலைன்னு நினைக்கிறேன். இப்டியே மழை பெய்திட்டு இருந்தா.." என்று கூற வந்தவனை இடை மறித்தவள்

"சார் சார். நான் நியூஸ்லாம் விடாம பார்ப்பேன். இப்டியே மழை விடாம பெய்திட்டே இருந்திச்சுன்னா இன்னும் கொஞ்சம் நேரத்துல வெள்ளம் வரக் கூடிய அபாயம் இருக்கு. சோ டக்குனு வீடுகளுக்கு போய்டுங்கனு சொல்லிருக்காங்க. இதைத்தான சொல்ல வந்தீங்க?" என்று கேட்டாள்.

"ஆமா. இதைத் தெரிஞ்சிகிட்டு தான் ஆசிரமத்துக்கு போகணும், அங்க போகணும், இங்க போகணும்னு சொல்லிட்டு இருக்கீங்களா? வீட்டு அட்ரஸ் சொல்லுங்க. இறக்கி விடறேன்" என்று கூற

"அச்சோ. என் வீடே அந்த ஆசிரமம் தான் சார். நான் ஆசிரமத்துல தான் இருக்கேன்" என்று கூறித் தலையில் கை வைத்துக் கொள்ள, காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தி விட்டு அவளைப் பார்த்தான் ராம் கிருஷ்ணன்.

"என்ன சொல்லுறீங்க?" என்று கேட்க

"என்ன சொல்லுறேன்னா, என்னை ஆசிரமத்துல இறக்கி விடுங்க. நான் அங்க தான் தங்கி இருக்கேன்னு சொல்லுறேன். வீட்டு அட்ரஸ் கொடுங்கன்னா நான் எதைக் கொடுப்பேன் சார்?" என்று அலட்சியமாய் கேட்க, ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே, "ஐம் சாரி!" என்றான்.

அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்ளவில்லை. வெளியே மழை விடுவதாயும் இல்லை. பாதை இருண்டு கார் ஹெட்லைட் வெளிச்சத்திலும் தெளிவில்லாமல் தெரிந்தது.

காரை ஒரு ஓரமாக நிறுத்திப் பெருமூச்சு விட்டவன், "இதுக்கு மேல போக முடியாது. ரோடு ஃபுல்லா இருட்டா இருக்கு. இதுக்கு மேல பள்ளம் வேற.. முன்னால வர வாகனம் தெரியாம ஏதாவது நடந்திடப் போகுது" என்று கூற, அவனைப் பாவமாகப் பார்த்து

"இனி என்ன பண்ணுறது சார்?" என்று கேட்டாள்.

"ஐ ஹவ் நோ ஐடியாஸ்" என்று கூறியவனை யோசனையுடன் பார்த்தவள், "சார் உங்க ஃபோனைக் கொஞ்சம் கொடுங்க. ஆசிரமத்துக்கு கால் பண்ணிட்டு கொடுத்திடறேன்" என்று கையை நீட்ட

"ஃபோன் பேட்டரி இஸ் டெட்!" என்றான் அவன்.

"ஓ கிருஷ்ணா!" என்று தலையில் கை வைத்துக் கொண்டவளை மின்னலடித்தது போல் திரும்பிப் பார்த்தவன், "என்னைக் கூப்பிட்டிங்களா?" என்று புரியாமல் கேட்க

"நானா? உங்களையா? இப்போவா? ஐயோ இல்லைங்க. நான் உங்களை கூப்பிடவே இல்லை. எனக்கு உங்க பெயரு என்னனு கூட தெரியாது சார்" என்று பாவமாகக் கூறினாள் அகிலா.

"அட! ஆமால்ல? சோ சாரி. எனக்கு நீங்க கிருஷ்ணானு கூப்பிட்ட மாதிரி கேட்டுச்சு. அதான் கேட்டேன்" என்று கூறிப் பெருமூச்சு விட

"சார். உங்க பெயரு கூட கிருஷ்ணாவா?" என்று ஆச்சரியமாய் கேட்க, ஆமென்று தலையசைத்தான் அவன்.

"நான் கிருஷ்ணானு கூப்பிட்டேன் தான். பட் உங்களை இல்லை. கிருஷ்ணாவை! கிருஷ்ணா என்னோட ஃபாவரைட் லார்ட். சோ அவர் பெயரை அடிக்கடி உச்சரித்து பழகிட்டேன் சார்" என்று கூற

"ஓஓ! கடவுளையா?" என்று கேட்டுப் புன்னகைத்தான் ராம்.

அவன் புறம் திரும்பி அழகாய் புன்னகைத்தவள், "கிருஷ்ணாவை ரொம்ப பிடிக்கும் சார். இப்போதைக்கு எனக்கு ஹெல்ப் பண்ண நீங்களும் எனக்கு கடவுள் தான். ரொம்ப நன்றி சார்" என்று கூறிக் கைக் கூப்ப, உதடு விரித்து புன்னகைத்தான் ராம் கிருஷ்ணன்.



◦◦◦⚬✿❀❀❀❀✿⚬◦◦◦
தொடரும்.
 
Top