• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,247
Reaction score
3,666
Points
113
வேதம் – 29
நாட்கள் விரைவாகத் நகரத் தொடங்கின. ஏழாம் மாதம் தன் வீட்டிலேயே மனைவிக்கு அழகாய் வளைகாப்பை முடித்திருந்தான் அன்பழகன்.
சோனைமுத்து தன்னால் இயன்றவற்றை மகளுக்குச் செய்து மகிழ்ந்தார். அதனை அன்புடன்
ஏற்றுக்கொண்டாள் வேதா. கணவன் தடுக்கவில்லை. அவர்களுக்கு இடையேயான உறவை கொஞ்சம் தனக்குப் புரிய வைத்து மனதில் நிறுத்திக்கொண்டான். அவனது புரிதலில் மனைவி மகிழ்ந்து போனாள்.
முருகையாவும் அவ்வப்போது வேதாவை வந்து பார்த்துவிட்டு சென்றார். ஒன்பதாம் மாதம் தொடங்க, வேதவள்ளிக்கு அடுத்த பருவத்தேர்வுகள் ஆரம்பமாகின.
வத்சலா மகனை நன்றாய் திட்டிக்கொண்டே மருமகளை விடுதிக்கு அனுப்பினார். ஆயிரம் பத்திரங்களை வார்த்தையால் உரைத்தவர், “எக்ஸாம் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்துடணும் வேதா. பார்த்து இருந்துக்கோ, அங்க பக்கத்துல ஹாஸ்பிடல் இருக்கு தானே?” கவலையாய்க் கேட்ட மாமியாரைப் பார்த்து புன்னகைத்தவளுக்குத் தன் தாயின் நினைவு அழையா விருந்தாளியாக மனதை நிறைத்தது. அவர் இருந்திருந்தாலும், இப்படித்தான் நடந்து கொண்டிருப்பார் போல என எண்ணியவளின் இதழ்களிலும் மென்னகை மலர்ந்தது.
“அத்தை.‌.‌.” அவரை லேசாய் அணைத்தவள், “ஒரு வாரத்துல எக்ஸாம் முடிஞ்சு வந்துடுவேன். நீங்க கவலைப்படாதீங்க...” என்றவள் அறைக்குள் நுழைய, அவளுக்குத் தேவையானவை எல்லாம் பையில் சரியாக உள்ளதா எனப் பார்த்தான் அன்பழகன்.
“டைமாச்சு, கிளம்பலாமாங்க?” என்ற வேதவள்ளியை நிமிர்ந்து பார்த்தவன், “கிளம்பலாம்...” என அவளருகே வந்து நின்றான்.
“ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத, முடிஞ்சளவுக்கு எக்ஸாம் நல்லா பண்ணு...” என கூறி லேசாய் அணைத்து நெற்றியில் முத்தமிட்டான் அன்பழகன். தானும் அவனை அணைத்தாள். மனைவியை இந்த நிலைமையில் விடுதிக்கு அனுப்பவதற்கு கடுகளவு கூட அவனுக்கு விருப்பம் இல்லை. இருப்பினும் அவளது படிப்பு முக்கியமாகப்பட்டது. தினமும் அவளால் கல்லூரிக்கும் வீட்டிற்கும் பயணம் செய்வது என்பது இயலாத காரியம். ஒரு வாரம் விரைவில் கடந்துவிடும் என தவிக்கும் மனதை சமாதானம் செய்துகொண்டான். மகிழுந்தில்தான் இருவரும் சென்று இறங்கினர்.
விடுதி வாயில் வரை வந்துவிட்டவனைப் பார்த்து இதழ் பிரியாது புன்னகைத்த வேதவள்ளி, “விட்டா, உள்ளே வந்துடுவீங்க போல. இது லேடீஸ் ஹாஸ்டல்ங்க. போங்க...” சிரிப்புடன் அவனை அனுப்பி வைத்தவள், விடுதிக்குள் நுழைந்தாள்.
சிறிது நேரத்திலே வத்சலா அழைத்துவிட்டார். “பத்ரமா போய்ட்டீயா? டைமுக்கு சாப்பிடு, நல்லா தூங்கு...” என அன்பான கட்டளைகளையிட்டு அழைப்பைத் துண்டித்தார். கடைக்கு சென்ற அன்புவும் மனைவிக்கு அழைத்துப் பேசினான்.
ஒருவாரம் விரைவில் ஓடியிருந்தது. வேதவள்ளி ஓரளவுக்கு எல்லா தேர்வுகளையும் நன்றாகவே முடித்திருக்க, அன்று மாலையே மனைவியை அழைத்துப் போக வந்துவிட்டான் அன்பழகன். இரண்டாம் வருடத் தேர்வு முழுவதும் முடிந்திருக்க, அடுத்து மூன்றாவது வருடம்தான். இடையில் தேர்வு விடுமுறை விட்டிருந்தனர். கணவனுடன் கிளம்பிவிட்டாள் வேதவள்ளி.
வீட்டிற்கு வந்ததும் வத்சலா மருமகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டார். தங்களது வீட்டின் முதல் வாரிசு, நன்றாக பிறக்க வேண்டும் என சில கோவில்களில் வேண்டுதல் எல்லாம் வைத்துவிட்டிருந்தார் பெண்மணி.
மருத்துவமனையில் குழந்தை பிறப்புக்கு இன்னும் பதினைந்து தினங்களே இருப்பதாகத் தேதி குறித்துக் கொடுத்திருந்தனர். அன்பழகன் வேறு மனைவி அசைந்தால் குற்றம், வேகமாய் நடந்தால் குற்றம் என அவளை அன்புத் தொல்லை செய்துகொண்டிருந்தான். அதையெல்லாம் சுகமான சலிப்புடன் மனைவி ஏற்றுக்கொண்டாள்.
“வா வேதா, சின்னதா வாக் போய்ட்டு வரலாம்...” கையைத் தன் முன்னே நீட்டிய அன்பழகனை முறைத்தவள்,
“யோவ் அன்பு, ரொம்ப பண்ற நீ...” என சலிப்பாய் அவன் கரத்துடன் கைகளைக் கோர்த்து மெதுவாய் தெருவில் நடந்தாள் பெண். கணவன் முகத்தில் சன்னமான சிரிப்பு.
“வர வர நீ மரியாதையே கொடுக்குறது இல்லை டி. முதல்ல எல்லாம் எப்போவாது ஒருதடவை பேர் சொல்லுவ... இப்போ...” உதட்டை வளைத்து சிரித்தான் கணவன். பக்கவாட்டில் திரும்பி அவன் முகம் பார்த்தவளுக்கும் உதட்டில் புன்னகை மலர்ந்து தொலைத்தது.
“மரியாதை வேணுமா என்ன?” ஒற்றைப் புருவத்தை உயர்த்தி வினவினாள் வேதா.
“ப்ம்ச்... வேணாமே!” தோளை குலுக்கினான் கணவன். கடந்த இரண்டு வருடத்தில் அவர்களுக்கு இடையேயான புரிதல் அத்தனையாய் அதிகரித்திருந்தது. வேதவள்ளி கணவனின் ஒவ்வொரு சொல்லையும் செயலையும் அவதானித்து அவனை புரிந்து கொள்ள முயற்சித்தாள்.

அன்பழகனுக்கு ஓரளவுக்குப் பழகிவிட்டிருந்தாள். பழக வைத்திருந்தான் கணவன். தான் இப்படித்தான் என்று தன்னை மனைவிக்கு ஒவ்வொரு நாளும் உணர்த்திக் கொண்டிருந்தான். எப்படியெல்லாம் காதல் செய்யலாம் என ஆசைகொண்டிருந்தானோ, அதை விட அதிகமாய் மனைவியை நேசித்தான். தன்னை நேசிக்க அவளுக்கும் கற்றுக்கொடுத்தான்.
புரிதல் என்ற வார்த்தையில் தொடங்கி அலாதிப்பிரியத்தில் நேசம் அவர்களைக் கட்டுண்டு கிடக்கச் செய்திட்டது. வரையறைக்கு உட்படாத காதலெல்லாம் அன்பழகன் போன்றொரு வகையில் சேர்த்தி. அடாவடியாய், அமைதியாய், என பல வழிகளில் பெண்ணை காதல் செய்தான். ஒவ்வொரு முறையும் ஆச்சர்யமாய் அவனை நோக்கி, அந்தக் காதலை, தனக்கான நேசத்தை சுகமாய் அனுபவித்தாள் வேதா.
இடையில் அவர்களுக்கு இடையில் சிறுசிறு ஊடல்கள் வந்தப் போதும், மனைவியின் பேச்சை மீறவில்லை அன்பழகன். அவர்களது அறையைத் தாண்டி யாரின் முன்பும் தங்களுக்கு இடையேயான பிணக்குகள் தெரியக் கூடாது என்ற வேதாவின் வார்த்தைகளுக்குக் கீழ் படிந்தான்.‌ அவளுமே கணவனைப் புரிந்துகொண்டு அவனுக்காக தன்னிடம் சிலவற்றை மாற்றிக்கொண்டாள். அது அவளது சுயத்தைப் பாதிக்காத வகையில் தானிருந்தது.
ஆனால் அன்பழகன் அப்படியில்லை. மனைவியே சரணம் என்று அவளைச் சுற்றிக்கொண்டிருந்தான் என்பதே உண்மை. அப்படித்தான் மனைவியை மயக்கிவிட்டிருந்தான். சண்டைகளுக்குப் பிறகு அவர்களுக்கேயான தண்டனைகளை அறைக்குள் அழகாய் பரிமாறிக்கொண்டனர்.
அவர்கள் இருவரும் சிறிதுநேரம் தெருவில் நடந்துவிட்டு உள்ளே நுழைய, “டீ குடிங்க...” என்று தேநீரை அவர்களுக்குக் கொடுத்தார் வத்சலா. மனைவியை நாற்காலியில் அமர வைத்தவனின் அலைபேசி அலறியது. அதை எடுத்துப் பேசிக்கொண்டே அறைக்குள் நுழைந்தான் அன்பு.
சூடான தேநீரை தொண்டைக்குள் இறக்கிய வேதவள்ளி குவளையை எடுத்துக்கொண்டு சமையலைறைக்குள் நுழைந்தாள். “என்ன வேதா, ஸ்நாக்ஸ் எதுவும் செஞ்சுத் தரவா? பசிக்குதா?” என கேட்டார் வத்சலா.
“ஐயோ, வயிறு ஃபுல்லா இருக்கு அத்தை. எதுவும் வேணாம்...” என்றவள், “உங்ககிட்டே ஒன்னு கேட்கணும். கேக்கவா அத்தை?” என இழுத்தாள்.
அவள் இழுவையில் லேசான சந்தேகச் சிரிப்புடன் மருமகளைப் பார்த்தவர், “உன் இழுவையே சரியில்லை. சரி கேளு, நீயும் உன் புருஷன் கூட சேர்ந்துட்ட...” என்றார்.
“ப்ம்ச்... அதொன்னும் இல்லத்தை. இப்போ பாப்பா வயித்துல இருக்கதால அது வேணுமா? இது வேணுமான்னு பார்த்துப் பார்த்து அக்கறையா செய்றீங்களே! இதே மாதிரி குழந்தை பொறந்தப் பிறகும் செய்வீங்களா?” எனக் கேட்டாள். கேலியாக இருந்தக் குரலின் பின்னிருந்த தேடலையும் எதிர்பார்ப்பையும் பெரியவரால் உணர முடிந்தது. மருமகளை வாஞ்சையுடன் பார்த்தார் வத்சலா. அவர் கோபத்தில் என்றாவது ஒருநாள் திட்டினால் கூட, ஒருமுறை கூட அதை தன் மகனிடம் அவள் ஒப்பித்தது இல்லை என அவர் இப்போது சில காலங்களாய் உணர்ந்திருந்தார். மகன் போலவே மருகள் இப்போது தன்னை, தன் அன்பை அத்தனை எதிர்பார்க்கிறாள் என உணர்ந்தவரின் உதட்டில் மென்னகை.
“ம்க்கூம்...” சடைத்தவாறே திரும்பிய வத்சலா, காய்கறிகளைக் நறுக்கத் துவங்கினார்.
“அதான் நீயே சொல்லீட்டீயே! எல்லாம் என் பேர
புள்ளைகளுக்காக மட்டும்தான். குழந்தை பொறந்ததும் நானும் சீரியல்ல வர்ற வில்லி மாமியாராகிடுவேன்...” கேலியோடு கூறியவரை, “ப்ம்ச்... அத்தை...” என்ற சிணுங்கலோடு வேதா அணைத்துக்கொண்டாள்.
“சும்மா ஈஷிட்டே இருக்காத வேதா. போ, போய் உன் புருஷன்கிட்ட செல்லம் கொஞ்சு. நான் சமைக்கணும்...” சடைத்தவரைப் பார்த்து வேதாவிற்கு மேலும் புன்னகை விரிந்தன.
“வில்லி மாமியார் மாதிரி உங்க மகன் கிட்ட இல்லாதது பொல்லாததையும் சொல்லி எங்க ரெண்டு பேருக்கும் இடையில் சண்டையை இழுத்து விடுவீங்களா அத்தை?” உதட்டை கடித்து சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டாள் வேதா.
“ஹக்கூம்... நான் சொன்னதும் அப்படியே உன் புருஷன் பாய்ஞ்சு வந்து உன்கிட்ட சண்டை போட்ருவான் பாரு...” சலித்த மாமியாரைப் பார்த்து பொங்கிச் சிரித்தாள் மருமகள்.
“உங்களுக்குத் திறமை பத்தலை அத்தை, அப்படி இப்படி நாலஞ்சு சீரியலைப் பார்த்து கத்துக்கோணும்...” என்று கூறிய மனைவியின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் அன்பழகன்.
“என்னம்மா, என் பொண்டாட்டியை ஏதோ திட்ற மாதிரி இருக்கே...” இழுவையாகக் கேட்டவனின் மீசைக்கு கீழே சிரிப்பு முளைத்தது.
“ச்சு... இதோ வந்துட்டான்ல. எங்க காணோம்னு பார்த்தேன். போம்மா... போ உன் புருஷனைக் கூப்ட்டு போ...” வத்சலா இருவரையும் முறைக்க முயன்றார். ஆனால், சிரிப்புதான் வந்தது. மூவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்தனர்.
நாட்கள் மெதுவாகக் கரைய, ஐந்து நாட்களுக்கு முன்பே வேதவள்ளிக்கு இடுப்பு வலி வந்துவிட, குடும்பமே மருத்துவமனையில் வாசம் செய்தனர். நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல், அழகாய் பெண் குழந்தை ஒன்று ஜீவித்திருந்தது. சுகப்பிரசவத்திலே குழந்தைப் பிறந்திருக்க, சிகிச்சைக்கு அவசியமின்றிப் போயிற்று.
மயக்கத்திலிருந்த வேதவள்ளியின் அருகே தொட்டிலில் கிடந்தாள் அவர்களது செல்லக் குழந்தை. பட்டு ரோஜா நிறத்தில் கண்களை விழித்து ஒவ்வொருவரையும் பார்ப்பதும் பின் லேசாய் சிணுங்குவதும், கண்களை கசக்குவதுமாய் இருந்தாள் குழந்தை.
வத்சலா குழந்தையைத் தட்டிக்கொடுத்து தூங்க வைத்துவிட்டு அருகிலே நாற்காலியைப்போட்டு அமர, முத்துக்கிருஷ்ணனும் அவரருகில் அமர்ந்தார்.
“எனக்கு முன்னாடி அப்பா ஆகிட்டல்ல டா நாயே...” அறிவு தம்பி தோளில் அடிக்க, அவனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
“ஆமா! ஆமா! என் புள்ளையை கண்ணுகிண்ணு வச்சுத் தொலைஞ்சுடாத டா. உன்கிட்ட இருந்து அவளைப் பார்த்துக்கணும்...” என அன்பு கூறவும், இருவருக்கும் சண்டை‌த் துவங்கியது. அறிவு அன்பழகனின் கையைப் பின்புறமாக மடக்கியிருந்தான்.
“பார்த்தீங்களா நீங்க பெத்த ரெண்டு நவ ரத்தினத்தை, அதுங்களுக்கே புள்ளை பொறந்தாலும் திருந்த மாட்டானுங்க...” வத்சலா அலுத்துக்கொள்ள, முத்துக்கிருஷ்ணன் இருவரையும் முறைத்தார்.
குழந்தை பிறந்த விஷயம் கேள்விப்பட்டு சோனைமுத்துவும் முருகையாவும் வர, மேலும் வத்சலாவின் உறவினர்களும் ஒரு சிலர் வந்துவிட்டனர்.
பெரியவர்கள் உறவினர்களைக் கவனிக்க, அறிவழகன் அவர்களுக்கு குடிக்க குளம்பி, தேநீர் வாங்கிவரச் சென்றான். அன்பழகன் அமர்ந்த இடத்திலிருந்து அசையவே இல்லை.
மகளின் பிஞ்சுக் கரங்களை எடுத்து தன் கைக்குள் பொதிந்து கொண்டான். அவளது கன்னத்தை லேசாய் தொட்டான். சிவந்து போனது குழந்தையின் கன்னம். அவளது மூக்கு, நெற்றி ஒரு ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருந்த அனபழகன் இந்த உலகத்திலே இல்லை. மனைவியை உரித்து வைத்திருந்தாள் குழந்தை. அன்பழகன் ஜாடை இருந்தாலும், வேதவள்ளியின் முகம் அப்படியே குழந்தையிடம் பிரதிபலித்தது.
சிறிது நேரத்திலே வேதா கண்விழிக்க, முகம் கொள்ளா புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.‌ சோர்ந்து போயிருந்தவள் லேசாக அசைய முயற்சிக்க, வாஞ்சையாக மனைவியைப் பார்த்தவன், அவளுக்கு உதவினான். குழந்தையைத் தூக்க முடியாது திணறியவன், தாயை அழைத்து வர, வத்சலா குழந்தையைத் தூக்கி மருமகள் அருகே படுக்க வைத்துவிட்டு நகர்ந்தார்.
மனைவியையும் மகளையும் கண்களில் நிரப்பிக்கொண்டான் கணவன். சிறிது நேரத்திலே உள்ளே நுழைந்த வத்சலா வேதா அருகே செல்ல, அவளும் அவரைத்தான் எதிர்பார்த்திருப்பாள் போல. அவர் வந்ததும் முகம் அதை பிரதிபலிக்க, குழந்தையைத் தூக்கி தொட்டிலில் கிடத்தியவர், “டேய், நீ கொஞ்ச நேரம் வெளிய இரு...” என்றார்.
“ஏன் மா?” என்றவன் பின் தலையை அசைத்து வெளியேற, வேதாவை கழிவறைக்கு அழைத்துச் சென்றார் பெண்மணி. அவளுக்கு உடைமாற்ற, மற்றத் தேவைகளை கவனித்துக்கொண்டார்.
மூன்று நாட்கள் அவர்களுக்கு மருத்துவமனை வாசம்தான். மகள் கையைப் பிடித்துக்கொண்டே அவளைச் சுற்றி வரும் கணவனை முறைத்த வேதா, “இங்கொரு மனுஷி இருக்கேன். உங்க கண்ணுக்குத் தெரியலையோ?” என சடைத்துக்கொண்டாள்.
அவளைச் சின்ன சிரிப்புடன் பார்த்தவன், “உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியாடி?” என வினவினான். வேதா புரியாது விழிக்க, அவளருகே சென்று கட்டிலில் அமர்ந்தவன், “நீயும் உங்கப்பனும் என் முன்னாடியே கொஞ்சிக்கலாம், தப்பில்லை. ஆனால், நான் என் மகளைக் கொஞ்ச கூடாது. இதெல்லாம் எந்த ஊர் நியாயம் டி?” எனக் கேட்டவனை முறைத்தவள், மறுபுறம் திரும்பிக்
கொண்டாள்‌. சின்ன சிரிப்புடன் மனைவியை அணைத்துக்கொண்டான் அன்பு.
மூன்று நாட்கள் முடிய, அனைவரும் வீடு திரும்பினர். குழந்தையை எப்படி பார்த்துக்கொள்வது எனத் தெரியாது தடுமாறிய மருமகளுக்கு அனைத்தும் தானே செய்தார் வத்சலா. தன் தாய் தனக்குப் பார்த்த பக்குவத்தை அப்படியே மருமகளுக்கு செய்தார். அன்பழகனும் மனைவியைத் தாங்கினான், எப்போதும் தாங்குவான்.
ஒருமாதம் கடந்திருக்க, குழந்தைக்கு ஸ்ருதி என பெயர் சூட்டி மகிழ்ந்தனர். வேதவள்ளிக்குக் கல்லூரி துவங்கிவிட, குழந்தையை இங்கேயே விட்டுவிட்டு அவள் விடுதியில் தங்குவது சரிவராது என்ற வத்சலா, மகனிடம் கூற, அன்பழகனும் யோசித்தான். அவளைத் தனியே விட அவனுக்கும் விருப்பமில்லை. அதனால் கல்லூரியிலிருந்து மாற்றுச் சான்றிதழ்களை வாங்கி அருகிலிருந்த கல்லூரியில் இறுதி ஆண்டை முடிக்கும் படி சேர்த்துவிட்டிருந்தான்.
வேதவள்ளிக்கும் அது சற்று வசதியாக இருந்தது. காலையில் கல்லூரிச் செல்பவள், மதியமே வீட்டிற்கு வந்துவிடுவாள். குழந்தையையும் கவனித்துக்கொள்ள வசதியாக இருந்தது. வேதா மகளையும் படிப்பையும் ஒருசேர கையாளப் பழக, கணவன் நிறைய ஒத்துழைப்புக் கொடுத்தான். வேதவள்ளி நல்லபடியாக இளங்கலையை முடித்துவிட்டிருந்தாள்.
அவளுக்கு முதுகலை படிக்க ஆசை துளிர்விட்டது. “மேல படிக்குறீயா? இல்லை வேலைக்கு எதுவும் ட்ரை பண்றீயா வேதா?” என அன்பழகன் வினவ,
“எனக்கு எம்.பி.ஏ ஹூமன் ரிசோர்ஸ்மெண்ட் படிக்க ஆசையா இருக்குங்க. படிக்கவா?” எனக் கேட்ட மனைவியை மறுக்கும் எண்ணமெல்லாம் துளிகூட இல்லை கணவனிடம்.
“இதென்ன டி கேள்வி, டேன்செட் க்ளியர் பண்ணு. நல்ல காலேஜ்ல எம்.பி.ஏ சேர்த்து விட்றேன்...” என்ற அன்பழகனை காதலாகப் பார்த்தாள் மனைவி.
குழந்தையை மடியில் தூங்க வைத்துக்கொண்டிருந்த வேதா நகர முடியாது, “ஒரு நிமிஷம் இங்கப் பக்கத்துல வாங்களேன்...” என அன்புவை அழைக்க, அவனும் எதற்கென தெரியாது அவளுக்கு அருகே வந்தான்.
கணவனின் சட்டை நுனியைப் பிடித்து இழுத்தவள், சிரிப்புடன் அவனது உதட்டில் அழுத்தமாக முத்தமிட, அன்பழகன் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர, இதழ்கள் மலர்ந்தன.
“ப்ம்ச்... என்ன டி பண்ண, இதான் நீ கிஸ் பண்ற லட்சணமா? என்னோட பிராக்டீஸ் பத்தலை போல...” யோசனையாகத் தாடையைச் சொரிந்தவனைப் பார்த்து சிவந்து போனாள் பெண்.
“மாஸ்டர் சொல்லிக் கொடுத்ததைதான் ஸ்டூடண்ட் செய்ய முடியும்...” என குனிந்து முணுமுணுத்த மனைவியில் சன்னமான சிரிப்பு கணவனிடம்.
“ஒன்னும் பிரச்சனை இல்லை, இனிமே ஹெவியா ப்ராக்டீஸ் கொடுப்போம்...” என மேலும் பேசி பேசி மனைவியை மொத்தமும் சிவக்க வைத்திருந்தான் காதல் கணவன்.
கணவனிடம் சம்மதம் வாங்கிவிட்டாலும், மாமியார் என்ன கூறுவார் என யோசித்து தயங்கித் தயங்கி அவரிடம் கூறினாள் வேதா.
சில நிமிடங்கள் யோசித்த வத்சலா, “தாராளமா படி வேதா...” என்று புன்னகையுடன் கூறினார்.
“அத்தை, பாப்பாவை...” என தயங்கினாள். ஸ்ருதி பிறந்ததிலிருந்தே வத்சலாதானே கவனித்துக் கொள்கிறார்.
“ஒரு புள்ளை இல்லை, இன்னும் நீ நாலு பெத்து போட்டாலும், வளர்க்க என்கிட்ட தெம்பு இருக்கு வேதா. நீ உனக்கு விருப்பமானதை படி. என் வீட்ல அம்மாவுக்கு என்னைப் படிக்க வைக்க ரொம்ப ஆசை. அப்பா ஒத்துக்கலை, ஆனாலும் அவரை எதிர்த்து என்னை நர்ஸிங் படிக்க வச்சுட்டாங்க. இன்னைக்கு எனக்கு நர்ஸூன்னு அடையாளம் இருக்கு. அதே மாதிரி உனக்கொரு தனி அடையாளம் வேணும். பொண்ணுங்க படிக்குறது ரொம்ப முக்கியம்... போய் படி டா...” என்ற வத்சலாவைப் பார்த்து புன்னகைத்த வேதவள்ளியின் விழியோரம் ஈரம் துளிர்க்க, மனதில் கடவுளிடம் அந்த நொடி தன் வாழும் வாழ்க்கைக்கு நன்றியை நவில்ந்தாள்.
நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற வேதவள்ளியை விருதுநகரிலே ஒரு கல்லூரியில் அவள் ஆசைப்பட்ட முதுகலை படிப்பில் சேர்த்துவிட்டான் அன்பழகன். மீண்டும் குழந்தை, கணவன், படிப்பு என ஓட ஆரம்பித்திருந்தாள் அவள். தாங்கிக் கொண்டான் கணவன், அவளின் அன்பழகன். வாழ்க்கையின் ஓட்டத்தோடு அவர்களது வாழ்க்கையும் இணைந்து தேயத் துவங்க, வேதாவின் மீதான அன்பழகனின் காதல் மட்டும் தேயாது தொய்வில்லாது வளர்ந்துகொண்டிருந்தது.

































































 
Well-known member
Messages
551
Reaction score
389
Points
63
வேதா குடுத்து வைத்தவ, குடும்பமே அவளை தாங்குது
 
Top