• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 7

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 7




வீட்டிற்கு வந்தும் யாஷ்வியினால் நவீனின் செயலில் இருந்து மீள முடியவில்லை. தனது உள்ளங்கையை அவ்வப்பொழுது தூக்கி பார்த்துக் கொண்டவளுக்கு இன்னும் அவனிதழ் ஈரத்தின் மிச்சம் தன்னிடமே ஒட்டியிருப்பதை போலொரு மாயை எழ உடல் சிலிர்த்து அடங்குவதை தடுக்க முடியவில்லை. ஆம், தலை முதல் பாதம் வரை சிலிர்த்தது. முகம் கரையாத புன்னகையை நிரப்பி பிரகாசிக்க நவீனும் அதுபோலொரு நிலையில் தான் ஆழ்ந்திருந்தான். தன் கன்னங்களில் பாவையின் உள்ளங்கை வெம்மையின் கதகதப்பு நீட்டித்திருப்பதை போல உணர, நகர இயலாதவனாக செயலற்று அமர்ந்து கொண்டான் தலையை கோதியப்படி. முழுவதுமாக அவனை நிறைத்திருந்தாள், 'எப்படி இவள் என்னை பாதிக்கிறாள்?' என்று தங்களை குறித்த ஆராய்ச்சியில் திளைத்தவன் மனது தன்னுடைய அதிகப்படியான பேச்சுக்களையும் குறிப்பிட்டு காட்டியது. ஆம், அதிகமாகவே பேசியிருந்தான், யாரிடம் பகிர விரும்பாது தந்தையின் உடல்நிலையை குறித்தும் அவளிடம் பேசியிருந்தானே! ஏனோ தன்னையும் அவளையும் பிரித்து பார்க்க மனது வரவில்லை. அன்றைய நாளை மட்டுமின்றி நவீனையும் முழுவதுமாக ஆக்கிரமித்துக் தன்னுள் வாரிச்சுருட்டிக் கொண்டாள் பேதை.


மறுநாள் ஊருக்கு கிளம்பியவன் அவளுக்கு அழைத்திருக்கவில்லை. காலையிலிருந்து அவன் அழைப்பான் என்று அலைபேசியுடனே சுற்றித் திரிந்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாது மாலை போல் ஆடவனுக்கு அழைத்து விட்டாள். "கிளம்பிட்டிங்களா, போன் பண்ணவே இல்லை" என்று குறைபட்டுக் கொண்டப்படி.

"ஆமா யாஷ், ஆஃப்டர்நூனே வந்துட்டேன்" என்று பதில் கொடுத்தவன் கவனம் தன்முன்னிருந்த கணினியில் குவிந்திருந்தது. "ஏன் சொல்லாம கிளம்பிட்டிங்க, மார்னிங் ஷமீய ஸ்கூல்க்கு அழைச்சுட்டு போகும் போது உங்களை எதிர்பார்த்தேன்" என்றவளின் பேச்சை கவனிக்காதிருந்தவன், "என்ன சொன்ன யாஷ்?" என்று மீண்டும் வினவ பாவைக்கு சட்டென்று கண்ணீர் துளி தேங்க அழைப்பை துண்டித்து விட்டாள். நன்றாக பேசியிருந்தாலும் முதலில் இருந்தே நவீன் தன்னை அலட்சியம் செய்வது போலொரு எண்ணம் பெண்ணின் ஆழ் மனதில் உண்டு. அதற்கு அவனின் திமிரான யாரையும் அசட்டையாக கடந்து விடும் உடல் பாவனையை கூட முக்கிய காரணமாக கூறிடலாம். அதுவும் தன்னிடம் கூறாமல் கிளம்பியதோடு இதுவரை அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசிடாத ஆடவனின் செயல் இன்னும் அவளை பலவீனமாக உணர செய்தது. ஒரே விஷயமே பலமாகவும் பலவீனமாகவும் அமைந்து விட்டால் அதை விட ஆகச்சிறந்த ஆபத்தொன்றுமில்லை. ஆம், அவளின் பலம், பலவீனம் இரண்டுமே நவீனாகி போனான். 'அவனிடம் எதிர்பார்க்காதே!' என்று மூளை பிதற்றினாலும் மனது அதன் கட்டுப்பாட்டில் இருந்தால் தானே!



நவீனிற்கு இன்னும் புரியவில்லை அவளின் கோபம்! காதை விட்டு அலைபேசியை தள்ளி வைத்து பார்த்தவன் அதுவொரு தன்செயலான நிகழ்வென்றெண்ணி மீண்டும் அழைத்தான். அழைப்பு முழுவதுமாக சென்று துண்டாகியது. யாஷ்வி அலைபேசியை கையில் தான் வைத்து வெறித்து அமர்ந்திருந்தாள். 'நான் ஏன் இப்படி இவனுக்கு அடிமையாகி போனேன்' என்ற சுயபச்சாதாபத்தால் எழுந்த கண்ணீரை விழுங்கிக் கொண்டு.


இரண்டு முறைக்கு பிறகு, 'ஒருவேளை அவசர வேலையாக சென்றிருப்பாள்! பிறகு பேசிக் கொள்ளலாம்' என்றெண்ணியவன் அதற்கு பிறகு யாஷ்வி என்றொருவளை மறந்தே போனான் ஒரு வாரங்களாக. தந்தை மருத்துவமனையில் இருக்க அவரின் இடத்தினில் நின்று அனைத்தையும் பார்த்தான். அதில் அவனுக்கு பெரிதாக விருப்பமொன்றுமில்லை ஆனால் தந்தைக்காக செய்தான். "நீ பொறுப்பெடுத்துக்கோ கண்ணா, இந்த வயசானவனுக்கு ஓய்வு கொடுடா" என்று அவர் பல முறை யாசித்தும், "ப்பா, இது உங்களோட சக்ஸஸ், அதில எனக்கு பங்கு வேணாம். நானா எனக்கான அடையாளத்தை உருவாக்கிப்பேன்" என்று பதிலளித்து அசையாதிருந்தவன் இன்று தந்தைக்காக அவரின் உழைப்பை வீணாக்கி விடக் கூடாதென்று என்ற எண்ணத்தில் அவருக்கு பதிலாய் நின்று கொண்டான். ஆக, வேலை அதன் பின் தான் ஓடினான்.


யாஷ்வி, அன்றைக்கு இரவு பேசும் பொழுதே நவீனிடம் ஒப்பித்திருந்தாள். "டூ டேஸ்ல்ல ஜாப் ஜாயின் பண்ண போறேன் நவீன்" என்று அவளின் அலுவலக விவரங்களை. தாடியை தடவியப்படி கேட்டுக் கொண்டவன், "நல்ல ஆஃபர் தான், என்னோட ப்ரெண்ட் ஒருத்தன் அங்க ஹெட்டா இருக்கான். நான் அவன்கிட்ட பேசுறேன்" என்றவன் தாமதிக்காமல் நண்பனிடம் உரையாடி யாஷ்வியின் விரவங்களை பகிர்ந்திருந்தான். பெண் அலுவலகம் சென்ற பொழுது நவீனின் பரிந்துரையால் சிறந்த கவனிப்பு தான். ஆம், உயர் அதிகாரியான நவீனின் நண்பன் அழைத்து, 'யாஷ்வியை தன்னுடைய சொந்தம்' என்று அறிவித்திருந்தான். அது நவீனின் பொருட்டு, அவன் யாருக்கும் அத்தனை சுலபத்தில் மற்றவர்களிடம் பரிந்துரைக்கு சென்றிட மாட்டான். அவ்வாறு சென்றாள் கண்டிப்பாக மிக நெருக்கமானவர்களாகவே இருக்க வேண்டும்.

ஆனால் அது எதுவுமே யாஷ்வியை குளிர்விக்கவில்லை. அவளின் எதிர்பார்ப்பெல்லாம் ஆடவனின் அருகாமை அது இல்லையெனறாலும் எப்பொழுதாவது ஒரு அழைப்பு. அவனில்லாத ஒரு வாரம் என்பது அத்தனை மலைப்பாக இருந்தது பேதைக்கு. 'ப்ம்ச்.. ' என்று சலித்துக் கொள்பவள் மறந்தும் நவீனிற்கு அழைக்கவில்லை.



கட்டிலில் கைக்கட்டி சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்தவளை ஷமீயின் வருகை கலைத்தது. "அத்தை, போன்" என்று அலறலுடன் கட்டிலில் தவ்வி ஏறிய முயலகுட்டி ஒலித்துக் கொண்டிருந்த அவளின் அலைபேசியுடன் மூச்சு வாங்க நின்றாள்.


அவளின் செயலில் யாஷ்வியின் முகத்தில் லேசான புன்னகை அரும்ப ஷமீயின் கன்னத்தை கிள்ளி கொஞ்சியபடி அலைபேசியை கைப்பற்ற நவீன் தான். புன்னகை மறைந்து போக அழைப்பை ஏற்காது துண்டித்து விட்டாள். ஏனோ அவனிடம் பேசுவதற்கு மனது வரவில்லை. பயம், எங்கே பேசினால் உடைந்து அழுதிடுவோமோ என்று. தன்னுடைய எதிர்பார்ப்பினால் வார்த்தைகளை கொண்டு அவனை காயப்படுத்தி விடுவோம் எனவும் தான். யாஷ், இயல்பிலே யாரையும் காயப்படுத்திட விரும்ப மாட்டாள். அதுவும் நவீனை ம்கூம்...சத்தியமாகவே மாட்டவே மாட்டாள்.

அலைபேசியை தூர வைத்தவள் ஷமீ இழுத்து மடியில் அமர்த்தி அவளுடன் விளையாட துவங்கி விட சற்று நேரத்தில் ரூபா அறைக்கதவை தட்டினாள்.


"யாஷ், நவீன் கூப்பிடிருக்கார். உன் நம்பர் மிஸ்ஸாகிடுச்சு போல. ஏதோ கேட்கணுமாம்" என்று அலைபேசியை கொடுத்து, "ஷமீ பசிக்குதுன்னு சொன்ன இல்ல சாப்பிட வா, சாப்பாடு ரெடியாகிடுச்சு" என்று மகளை கைகளில் அள்ளிச் சென்று விட்டாள்.



'இவனை...' என்று பல்லைக் கடித்தவள் அழைப்பை காதில் பொருத்த, "யாஷ், உன்னோட மொபைல்க்கு என்னாச்சு? ஏன் கால் அட்டென் பண்ண மாட்ற நீ?" என்று இயல்பாய் வினவினான்.
ஆக, தன்னுடைய விலகல், கோபம் கூட அவனுக்கு புரியவே இல்லை என்பதே பெண்ணிற்கு அப்படியொரு அழுத்தத்தை கொடுத்தது.


நெற்றியை தேய்த்தவள் ஆயாசமாக அமர்ந்து கொள்ள, "நான் உன் நம்பருக்கு கூப்பிடுறேன் யாஷ்" என்று பாவையின் பதிலை எதிர்பார்க்காது அழைப்பை துண்டித்து அவளுக்கு அழைத்து விட்டான்
காணொளியில்.

யாஷ் சென்று ரூபாவின் அலைபேசியை கொடுத்து விட்டு அறைக்கதவை பூட்டி தன் அலைபேசியை ஸ்டான்டில் வைத்து நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். சில நிமிடங்களில் அவள் முன் தோன்றினான். அத்தனை களைப்பாக இருந்தது அவனின் முகம், ஆனால் எப்பொழுதும் போல் இதழ் வளைத்து சற்று சோம்பலான புன்னகையுடன் நன்றாக நாற்காலியில் சாய்ந்து அசட்டையாக அமர்ந்திருந்தான். அது அலுவலகமாக இருக்க வேண்டுமென்று அவனை சுற்றி தெரிந்த அமைப்பு கூறியது.
தன்னையே ஆராயும் யாஷ்வியை நோக்கி சொடக்கிட்டவன், "ஹாய் யாஷ்?" என்றான் கையசைத்து.


மீண்டவள் இப்பொழுது முறைத்தாள். "வொர்க் எப்படி போகுது, எல்லாமே ஓகே வா?" என்றான். 'க்கும்...இவ்வளவு சீக்கிரமாய் கேட்டு விட்டானே!' என்று வேறு அவளின் மனது அலுத்துக் கொள்ள பதில் கூறாது இதழ் சுழித்து அமர்ந்திருந்தாள். நீடித்தது அவனின் பேச்சுக்கள் எதிர்பேச்சின்றி அரைமணி நேரமாக. ஆம், பதில் பேசாது தவிக்க செய்தாள் ஆடவனை. அவன் முன் தான் அமர்ந்திருந்தாள் தலையை டேபிளில் கவிழ்த்தப்படி முகத்தை மறைத்துக் கொண்டு.


"யாஷ் என்னடி பிரச்சனை வாயை திறந்து சொன்னா தான தெரியும்?" என்பதை அவனுக்கு தெரிந்த அத்தனை மொழிகளிலும் வெவ்வேறு விதங்களில் கேட்டு விட்டான். பெண் அசைந்தாளில்லை, 'நன்றாக கத்துடா, நானும் ஒரு வாரமாக இப்படி தான் புலம்பிக் கொண்டு சுற்றினேன் பித்து பிடித்தப்படி' என்ற எண்ணத்தில் அசட்டையாக படுத்திருந்தவளின் குரலை தீண்டியது, "நீ இப்ப நிமிர்ந்து பார்க்கலை பேசலைன்னா உங்க அண்ணனுக்கு கூப்பிடுவேன். யாஷ்க்கு எதோ பிரச்சனை போய் பாருங்கனு சொல்லுவேன்" என்றான் மிரட்டலாய்.


அதிர்ந்து நிமிர்ந்தவள் அப்படியொரு முறைப்பை கொடுக்க நன்றாகவே மலர்ந்து புன்னகைத்தான். "சிரிக்காதீங்க நவீன்" என்றாள் இழுத்து பிடித்த பொறுமையோடு பல்லைக்கடித்தப்படி. அவன் மேலும் இதழை வளைக்க பேதைக்கு கோபம் தலைக்கேற, 'போடா' என்று இதழுக்குள் முணுமுணுத்தாள்.



இதழசைவை உணர்ந்து கொண்டாலும், "என்ன சொன்ன கேட்கலையே யாஷ், சத்தமா பேசு" என்று வம்பிலுத்தவன் புன்னகையை விழுங்க முயல பெண் இளகவேயில்லை. "யாஷ்.." என்றான் உள்ளார்ந்து தலையை கோதியபடி. கரைந்து உருக செய்தது குரல், நன்றாக அமர்ந்திருந்தவள் விழிகளில் கண்ணீர் தேங்கியது அந்த விளிப்பில்.


வேகமாக துடைத்துக் கொண்டவள், "உங்களுக்கு இப்ப தான் என்னோட நினைவு வந்துச்சா?" என்று ஒட்ட வைத்த கோபக் குரலில் வினவினாள். அபத்தம் என்று புரிகிறது ஆனால் அவனிடம் எந்த வரையறைகளையும் வகுத்துக் கொள்ள பாவை மனது விரும்பிவில்லை. சுதாரித்து அவளை உணர்ந்து கொண்டவன் இதழில் புன்னகை ஜனித்தது. "குழந்தையா டி நீ?" என்றவன், தன்னுடைய ஐயத்தை உடனே மறுத்து, "ஷமீயும் நீயும் ஒன்னு தான்" என்றான் உணர்ந்தவனாக. ஆம், யாஷ் குழந்தையாக தான் தெரிந்தாள் அவனுக்கு எந்தவித கள்ளம்கபடமின்றி.

பேச்சுக்கள் நீள, "நீங்க ஏன் என்கிட்ட சொல்லாம கிளம்புனீங்க? அட்லீட்ஸ் ஜாப் போற அன்னைக்காவது கால் பண்ணி விஷ் பண்ணியிருக்கலாமே" என்றாள் எதிர்பார்த்து ஏமாந்த கதைகளை. நவீனுக்கு அவள் தன்னை இத்தனை தேடுகிறாள் என்பதே ஒரு வித பூரிப்பை கொடுத்தது. புருவத்தை நீவியவன், "நான்..இதுவரை யார்கிட்டயும் சொல்லி பழகலை யாஷ், அம்மாக்கு கூட தெரியாது நான் எங்க இருக்கேனு. எப்பயாவது நானா எனக்கு தோணும் போது கூப்பிட்டு சொல்லுவேன் அவ்வளவு தான். இப்படியே என் இஷ்டத்துக்கே பழகிடுச்சு, மாத்த முடியலை.." என்று தவறை ஒப்புக் கொடுத்தான் திணறலாக.


"இனி பழகிக்கோங்க, நான் எதிர்பார்ப்பேன்" என்றாள் சட்டமாக உரிமைகொண்டு. அதில் அந்த குரலில் தெரிந்த அக்கறையிலும் மிரட்டலிலும் நவீன் உருகினான். ஆம், பிடித்தது பெண்ணவளை மட்டுமின்றி அவளின் பிதற்றுதலையும் கூட. அவர்களின் முதல் ஊடலை முடிவுக்கு கொண்டு வந்து உறக்கத்தை தழுவ நேரம் நள்ளிரவை தாண்டியது.


அதற்கு பிறகு தினமும் அவளுக்கு அழைத்து பேசுவதை வாடிக்கையாக்கி கொண்டான். அவனே அழைக்கவில்லையென்றாலும் பெண் அழைத்து விடுவாள். இறுக்கி பிணைத்துக் கொண்டாள் அவனை! ஆடவனுக்கும் அதிலொன்றும் அத்தனை கஷ்டமாயிருக்கவில்லை.


தந்தை ஓரளவு தேறி வீட்டிற்கு வர
அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து மீண்டும் சுற்ற ஆரம்பித்தான். அதற்கு அவர் முழுமையாக ஒப்புதல் அளிக்காமல் வார விடுமுறைகளை மட்டும் கருணை காட்டி அவனுக்கு விட்டுக் கொடுத்தார். ஆக, வார இறுதி நாட்கள் பெங்களூரில் தான். மீண்டும் நண்பனை தொடர்பு கொண்டு படப்பிடிப்பு தளத்தை தேடி சென்றான். உடன் யாஷ்வியையும் அழைத்துக் கொண்டான்.


அவளுக்கும் மறுக்க பெரிதாக காரணம் தோன்றவில்லை. அவனுடனான பொழுதிற்காகவே அதை ஒப்புக் கொண்டாள். மனோவும் ஏற்கனவே செய்து கொண்டிருந்த வேலை என்பதால் அவளின் முடிவுகளில் தலையிடவில்லை. "வொர்க் போய்ட்டு உன்னால மேனேஜ் பண்ண முடியுமா? ஹெல்த்தை பார், ரொம்ப ஸ்ரெய்ன் பண்ணிக்காத" என்றான் தங்கையிடம் அக்கறை கொண்டு. சவிதாவும் தடை எதுவும் கூறியிருக்கவில்லை.


யாஷ்வியின் நாட்களை இறக்கை கட்டிக் கொண்டு தான் பறந்தது. இதோ இன்னுமொரு வாரத்தில சவிதா இந்தியா திரும்ப போகிறார். அதுவே மகளிற்கு அத்தனை உற்சாகத்தை கொடுத்திருந்தது. நவீனின் கைப்பிடித்து ஆறு மாதங்கள் கடந்திருந்தது. முதலில் பாவையிடம் தடுமாறினாலும் ஓரளவு நிதானித்து அவளை அனுசரிக்க பழகிக் கொண்டான். அதாவது அவளின் எதிர்பார்ப்பில் பத்தில் ஐந்தையாவது நிறைவேற்றிக் கொண்டிருந்தான். அந்தளவு மாற்றத்திற்கே பெண் திருப்தி பட்டுக்கொண்டாள்.


யாஷ்வியும் அவனை தனக்கு ஏற்ப பழக்கிக் கொண்டாள் என்றாலும் தகும். வார விடுமுறை யாஷ்விக்கு மட்டுமின்றி ஷமீக்கு ஏக கொண்டாட்டம் தான். நவீன் வந்து விடுவானே! ஷமீயும் அவனிடம் நன்றாகவே ஒட்டிக்கொண்டாள். படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் பொழுது யாஷ்வி வேலையின் பொருட்டு மட்டுமே வெளியில் வருவாள் மற்றப்படி நவீனின் அறையில் தான் ஷமீயும் அவளும் அடைக்கலமாகி கொள்வார்கள் அவனுடனே. ஆடவனும் இருவரையும் தன் பார்வை வட்டதிலே வைத்துக் கொண்டான். முன்பும் அப்படி தான் என்றாலும் இப்பொழுது அருகாமையில் தன் அறையிலே நிறுத்தி வைத்தான். யாஷ் அடங்கி அமர்ந்தாலும் ஷமீ அவ்வப்பொழுது வெளியில் சுற்றி விட்டு தான் வருவாள். தங்களுடைய இடமென்பதால் நவீன் அவளை கட்டுப்படுத்த மாட்டான். ஆக இருவரும் இணைந்தால் சமாளிப்பதற்குள் ஆடவன் வெகுவாக திணறி போவான். ஷமீ கூட அவனுக்கு தலையசைத்து காது கொடுத்திடுவாள் ஆனால் யாஷ் அவனை போட்டு படுத்தி தான் எடுப்பாள்.


மெதுவாக இருவரும் ஒருவரை ஒருவர் தங்களுக்கு பழக்கிக் கொண்டனர், பிறரை காயப்படுத்தாதவாறு. யாஷ்வி கோபம் வந்தால் அதிகபட்சம்
வாயையே திறக்க மாட்டாள். அதுவே ஆடவனுக்கு ஆகப்பெரும் அவஸ்தை தான். "பேசு யாஷ்" என்று கெஞ்சி அரைமணி நேரமாவது போராட வேண்டியிருக்கும். அது நவீனின் இயல்புக்கு மாறான ஒன்று தான்! மற்றவர்களிடம் காட்டுவது போல் அவளிடம் அலட்சியம் காட்ட முடியவில்லை. அதற்கு மனது ஒப்புக் கொடுக்கவில்லை, 'போ' என்று உதறிச் செல்லுமளவிற்கு அவனுக்கு தைரியமில்லை. அந்த நிலையையெல்லாம் கடந்து அவனுக்கு மிக நெருக்கமாக பிரதான உணர்வாகி போனாள் பேதை. யாஷ்வி, அதற்காக தொட்டதெற்கெல்லாம் முகம் சுருக்கும் ரகமல்ல. அவளும் சில இடங்களில் இறங்கி தான் செல்வாள் ஆடவனுக்காக.
திமிரெல்லாம் மடிந்து வீழ்ந்து தான் போனது அவளின் முன்! ஆம், தனக்காக அதீத பிரியத்தை தேக்கி நிற்பவளிடம் அவனால் அலட்சியத்தை பிரதிபலிக்க இயலவில்லை. அவளின் விழியே கட்டுப்படுத்தியது ஆடவனை. அதில் அவனுக்கு பெரிதாக வருத்தமொன்றுமில்லை, கர்வம் தான் மேலிட்டது. ஆனால் அவ்வப்பொழுது அவளுடன் சண்டைக்கு செல்வதுண்டு, "நீ என்னைய உன் கன்ட்ரோல்ல வைச்சுருக்கடி. எப்படி இருந்தேன் தெரியுமா நான்?" என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டு புன்னகையுடன். இடுப்பில் கையூன்றி முறைப்பவள், 'ஓஹோ! அப்படியா?..என்னென்ன சொல்றான் பாருங்களேன்' என்ற ரீதியில் பார்த்து வெறுப்பேற்றுவாள்.




அன்றொரு வார விடுமுறை நாள், யாஷ் உண்டு முடித்து ஷமீயுடன் கிளம்பியவள் நவீனின் வீட்டை ஒரு முறை பார்வையிட்டு விட்டு அவனுக்கு அழைத்தப்படி மின்தூக்கி முன் நின்றாள். அவன் அழைப்பையே ஏற்காமல் இருக்க, 'ம்ப்ச்..' என்று சலித்தவள் மின்தூக்கியில் ஏற, 'ஐயகோ, உள்ளே தான் நின்றிருந்தான்'. அவளின் முகத்தில் வந்து போன பாவனையில் ஆடவன் இதழ் புன்னகையை விழுங்க அப்பட்டமாய் முறைத்தாள். எப்பொழுதும் போல் சாய்ந்து நின்றவனின் கழுத்தை கட்டிக் கொண்டாள் ஷமீ. ஆம், யாஷ்வி இன்னதொன்று சுதாரிக்கும் முன் அவளின் இடுப்பில் இருந்து அவனிடம் தாவியிருந்தாள். தடுமாறிய யாஷ் ஷமீயையும் சேர்த்து முறைக்க அவளோ அதை கண்டு கொள்ளாமல் நவீனிடம் வம்பு பேசிக் கொண்டிருந்தாள். இது வாடிக்கையான ஒன்று தான் கடந்த ஆறு மாதத்தில். ஆடவனிடம் யாஷ்வி பேசியதை விட ஷமீ தான் அதிகம் பேசியிருக்கிறாள். இதில் அவ்வப்பொழுது யாஷ்வியுடன் எழும் சண்டைக்களுக்கு துணைக்கு பரிந்து பேச அவனை தான் அழைத்து வருவாள். யாஷ்வியோ, 'ஆளைப்பார்' என்று இருவரையும் மேலும் கீழும் பார்ப்பாள் அலட்சியமாக.


சில சமயம் யாஷ்வி அவனுடன் காணொளியில் பேசும் பொழுதும் ஷமீ உடனிருப்பாள், அவளின் மடியில் ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டு. பழக்கதோஷத்தில் முதல் முறை அவனை காணொளியில் கண்டவுடன் தன் முன்னிருந்த மடிக்கணினியை நோக்கி கை நீட்டியிருந்தாள் சாக்லேட்டிற்காக. புரிந்து கொண்ட நவீன் முகத்தில் அப்படியொரு புன்னகை தவழ வேகமாக தன் முன்னிருத்த மேஜையை திறந்து ஆராய்ந்து ஒரு சாக்லேட்டை எடுத்து நீட்டியிருந்தான். ஷமீயோ இங்கிருந்தே அதை பெற்று விடும் முனைப்பில் கைகளை நீட்டிக் கொண்டு மடிக்கணினி மீது பாய்ந்து விட்டாள். யாஷ் சட்டென்று அவளை பிடித்து இழுக்க இருவருமே பின்னால் படுக்கையில் சரிந்திருந்தனர். மடிக்கணினியை அவளிடமிருந்து காப்பாற்ற யாஷ் தான் படாத பாடு பட்டு போனாள். நவீன் கண்களில் நீர் தழும்புமளவிற்கு புன்னகையுடன் ஷமீயின் செயலின் ரசனையில் லயித்து விட யாஷ் தான், "உங்களை..என்ன பண்றீங்க நீங்க? சின்ன குழந்தை அவ" என்று முறைத்தாலும் அவளின் இதழையும் புன்னகை நிரப்பியிருந்தது.

(தொடர்ந்து கீழே படிக்கவும் 👇👇)
 
Last edited:
Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
யாஷையும் ஷமீயையும் படப்பிடிப்பு தளத்தில் இறக்கி விட்ட நவீன், "எனக்கு வெளியில வேலை இருக்கு யாஷ், ஈவ்னிங் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன். ஆல் தி பெஸ்ட்" என்று கையை உயர்த்தி வாழ்த்தை தெரிவித்து பறந்திருந்தான். ஆம், அன்று யாஷ்வி ஒப்பந்தமிட்டிருந்த குறும்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கவிருந்தது. ஷமீயுடன் உள்ளே நுழைந்த யாஷூம் தனக்கான வேலையில் ஆழ்ந்திருந்தாள்.


நவீன் மதியமே வேலை முடித்து திரும்பியிருந்தான். அவன் அறைக்குள் நுழையும் பொழுதே யாஷ் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவன் வந்து நிற்கும் அரவம் உணராத அளவிற்கு இருந்தவளை, "யாஷ்?" என்று தோள் மீது கை வைத்து கலைத்திருந்தான். அவனை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்து விழித்தவளுக்கு சடென்று கண்களில் நீர் தழும்பி விட்டது.


பதறியவன், "ஹேய் யாஷ்" என்று அவளின் தாடையை பிடித்து தன்னை பார்க்க செய்ய அமர்ந்த வாக்கிலே அவனை அணைத்துக் கொண்டாள். அவள் ஏனோ தன் கட்டுப்பாட்டிலே இருந்திருக்கவில்லை. சில நிமிடங்கள் அவளின் தலையை வருடியவன் நிதானப்படுத்த முயற்சிக்க தெளிந்திருந்தாள் பெண். விலக்கி நிறுத்தியவன், "என்ன யாஷ்?" என்றிட இருபுறமும் தலையசைத்தவள் குனிந்தபடி, "அம்மா ஞாபகம் வந்திருச்சு நவீன்" என்றாள் உள்ளிறங்கிய குரலில்.


அருகிலிருந்த நாற்காலியை இழுத்து போட்டு அவள் முன்
அமர்ந்தவன், "அதான் நெக்ஸ்ட் வீக் வந்திடுவாங்க தான, அப்புறம் என்ன? சரி சாப்பிட்டியா நீ?" என்று அவளை இயல்பாக்க முயன்றான். 'இல்லை' என்று மறுப்பாக தலையசைத்தவள், "டூ மினிட்ஸ்" என்று எழுந்து ஓய்வறை சென்று முகத்தை கழுவி வர அவளுக்காக உணவை வரவழைத்திருந்தான். உணவு உள்ளிறங்கவேயில்லை. கையால் அளந்தப்படியே இருக்க, "யாஷ் என்ன பண்ணிட்டிருக்க நீ?" என்று கடிந்தவன் அவளின் இடது கையை பிடித்துக் கொள்ள, "எனக்கு பசிக்கலை நவீன், போதுமே" என்றாள் சிறுகுழந்தையாய். அவளின் முகம் ஏனோ வாடியிருந்தது. உணர்ந்தவன், "என்னாச்சு யாஷ்? எதாவது ப்ராப்ளமா என்ன?" என்றான். மறுத்து தலையசைத்தவள் உணவை எடுத்து கொட்டி விட்டு கைக்கழுவி அவனருகில் வந்து அமர்ந்து கொண்டாள் ஆடவனின் தோளில் முகத்தை புதைத்தப்படி. ஏதோ அவளை பாதிக்கிறது என்று தெரிகிறது ஆனால் இன்னதென்று ஆடவனால் உணர முடியவில்லை. ஆக, அமைதியாய் அவளை அவதனித்துக் கொண்டிருந்தான்.


அறைக்கதவு தட்டி அனுமதி வேண்டி அவளின் ஒப்பனையாளர் நின்றிருந்தார். ஆம், அது நவீனின் பிரத்யோக அறை, அனுமதியில்லாமல் யாரும் உள்ளே நுழைந்திட முடியாது.

யாஷ்வி எழுந்து வந்து பார்க்க, "இன்னும் டென் மினிட்ல்ல உங்களுக்கு ஷாட் ரெடியகிடும். மேக்கப் போடணும்" என்று தகவல் கொடுக்க, "டூ மினிட்ஸ் வந்திடுறேன்" என்று அவரை அனுப்பி ஷமீயை தேடிச் சென்றாள். கீழ் தளத்தில் விளையாடிக் கொண்டிருந்தவளை அழைத்து வந்து நவீன் அறையில் விட்டவள் அவனையே பார்த்து தயங்கி நிற்க மடிக்கணினியில் இருந்து தலையை நிமிர்த்தியிருந்தான் 'என்ன?' என்பதாய் புருவம் உயர்த்தி. பெருமூச்சை இழுத்து விட்டவள் ஒட்ட வைத்த புன்னகையுடன் நகர்ந்து விட்டாள் அவசரமாக.


பத்து நிமிடம் அமர்ந்திருந்த நவீனிற்கு யாஷ்வியின் அந்த தயங்கி தடுமாறிய முகமே நினைவில் வந்து செல்ல ஷமீயை அழைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டான்.


ஐந்தே நிமிடங்களில் எழுந்து கொண்ட நவீன், "இன்னைக்கு ஷூட் போதும், மீதிய நாளைக்கு வைச்சுக்கோங்க" என்று சத்தமாக அனைவருக்கும் கேட்கும் படி அறிவிக்க நவீனின் நண்பன், "என்னடா? ஏன் இப்படி சொல்ற? இன்னைக்கு செஞ்ச செட்டப் அதுக்கான செலவு வீணாகிடுமே" என்றான் கவலையாக நவீன் அருகில் வந்து.


"என்ன செலவோ அதை என் நேம்ல நோட் பண்ணிடு, மொத்தமா செட்டில் பண்ணிடுறேன்" என்றவன் சத்தமாக, "யாஷ்" என குரல் கொடுத்தப்படி ஷமீயை தூக்கிக் கொண்டு வாயிலை நோக்கி விரைந்து விட்டான். ஒரு நிமிடம் என்ன நடக்கிறதென்று புரியாமல் விழித்தாலும் 'நவீன் காரணமன்று எதுவும் செய்திட மாட்டான்' என்று உணர்ந்த அவனின் நண்பன் எல்லோரையும் கிளப்பும் பணியில் இருந்தான். அதுவுமில்லாமல் நவீன், அவனுக்கு சொந்தமான கட்டிடம் தான் அந்த படப்பிடிப்பு தளம், சொற்ப வாடகையில் இவர்களுக்கு கொடுத்திருக்கிறான் மேலும் நிறைய பணமும் முதலீடும் செய்திருக்கிறான்.


இறுகி அமர்ந்திருந்தவன் கரங்களில் மகிழுந்து ஏறக்குறைய பறந்தது. யாஷ் வாயை இறுக மூடிக் கொண்டாள். ஆம், அவனின் முகபாவனையே அவளை அச்சுறுத்தியது. தொண்டையில் நீர் வற்றிப்போக ஷமீயை இறுக பிடித்தப்படி அமர்ந்திருந்தாள் விழிகளை மூடிய இருக்கையில் சாய்ந்து. மனது நிலையில்லாமல் அலைப்புற்றது. 'அவனுக்கு என்னை புரிகிறது, என்னுடைய பிரச்சனைகளை கூறாமலே தெரிகிறது' என்ற உவகை ஆர்பரித்தாலும் அதை விட தன்னிடம் இதுவரை ஒரு வார்த்தை கூட கேட்காத அவனின் பாவனை ஒரு வித கிலியை மேலிட செய்திருந்தது.


வீட்டு வாயிலில் இறக்கி விட்டவன் அவள் பேச வாயெடுக்கும் முன் காரை திருப்பிக் கொண்டு பறந்திருந்திருக்க ஆயாசமாக செல்லும் காரையே பார்த்திருந்தவள் வீட்டிற்கு சென்று விட்டாள். அவளால் நிற்க கூட முடியவில்லை, ஏனோ அத்தனை அசதியாய் உணர்ந்தது உடலோடு மனமும் சேர்ந்து. அதிலும் நவீனின் மௌனவிரதம் ஒரு அழுத்தத்தை கொடுத்திருந்தது.



அப்படியே படுக்கையில் விழுந்தவள் வெகு நேரம் உழன்று மாலை போல் உறங்கியிருந்தாள். உண்பதற்கு அழைக்க வந்த ரூபாவும் அவளை தொந்தரவு செய்யாது அகன்றிருந்தாள். யாஷ் அதிகாலை போல் தான் உறக்கம் கலைந்து எழுந்தமர்ந்தாள். நேரம் ஆறை தொட்டிருக்க பக்கதிலிருந்த ஷீமிக்கு விலகி இருந்த போர்வையை நன்றாக போர்த்தி விட்டு எழுந்து முகம் கழுவி வெளியில் வர ரூபா பரபரப்பாக சுற்றினாள்.


யாஷை கண்டவுடன், "குட்மார்னிங் யாஷ்" என்று புன்னகைத்தவள் தயாராய் வைத்திருந்த தேநீர் குவளையை அவளிடம் கொடுக்க அமர்ந்து அதை காலி செய்தவள் அடுப்பறை நுழைந்து கொண்டாள் .


"மனோக்கு டூ வீக்ஸா ஹெட் பெய்ன் யாஷ், எய்ட்க்கு டாக்டர் அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருக்காங்க. நாங்க இப்ப கிளம்பிடுவோம். நீ டோரை லாக் பண்ணி கீயை பிரபு வீட்டில் கொடுத்திடு யாஷ்" என்ற ரூபா சற்று நேரத்தில் மனோவுடன் கிளம்பியிருந்தாள்.



உறங்கும் ஷமீயை பார்த்து வந்த யாஷ் அலைபேசியுடன் ஹாலில் அமர்ந்து கொண்டாள். நேற்றைய நினைவுகளிலே உழன்றவளுக்கு நவீனின் முகம் வேறு வந்து தொலைக்க சற்று கிலியாக தான் இருந்தது. அலைபேசியை உயிர்பிக்க அவனிடமிருந்து இருமுறை அழைப்பு வேறு வந்திருந்தது. நேரத்தை பார்க்க நேற்றிரவு அழைத்திருப்பான் போலும். 'அவனின் உறக்கத்தை கெடுக்க வேண்டாம் பிறகு அழைத்துக் கொள்ளலாம்' என்ற நினைப்பில் அலைபேசியில் உலாவ துவங்க புலனத்தில் உள்ள குழுவில் வரிசையாக செய்திகள் வந்து குவிந்திருந்தது. ஆர்வமாக திறந்து பார்த்தவளின் விழிகள் சட்டென்று அதிர்ச்சியில் விரிந்து கொள்ள மூளையோ இது நவீனின் செயல் தான் அடித்துக் கூறியது. ஆம், நேற்று நடைபெற்ற குறும்படத்தின் கதாநாயகன் மாற்றப்பட்டிருப்பதால் இன்று நடைபெறவிருந்த படப்பிடிப்பு அடுத்த வாரம் ஒத்தி வைக்கப்படுகிறதென்று.


யோசிக்கவே இல்லை வேகமாக எழுந்து உடையை குனிந்து பார்த்தவள் மேலே ஒரு துப்பட்டாவை போட்டு உறங்கும் ஷமீயை ஆராய்ந்து கதவை பூட்டி நவீனின் வீட்டுக்கதவை தட்டியிருந்தாள்.


திறந்தவன் அவளை ஆராய்ச்சியாய் பார்க்க அவளும் அவனை தான் ஆராய்ந்தாள். வெளியில் கிளம்புவதற்கு ஆயத்தமாகியிருப்பான் போலும்!.

"உள்ள வா யாஷ்" என்றவன் உள்ளே சென்று தன் கைக்கடிகாரத்தை மாட்டிக் கொண்டு மகிழுந்தின் சாவியை தேடி பிடிக்க யாஷ் அமைதியாய் அமர்ந்து அவனை தான் வேடிக்கை பார்த்திருந்தாள்.


கண்ணாடி முன் நின்று தலையை கோதி சரி செய்தவன் இறுதியாக அவளிடம் வந்தான், 'என்ன?' என்று பார்வை பார்த்து. அவனுக்கு பெண்ணிடத்தில் கட்டுக்கடங்காத கோபம் தான். ஆனால் முயன்று இயல்பாக்கி அவளின் இருபுறமும் கையூன்றி நின்றான் அசட்டையாக முறைத்து.

எழுந்து நின்றவள் அவனை அணைத்துக் கொண்டாள் சட்டென்று. ஆடவன் ஒரு நிமிடம் தடுமாறி தான் போனான். ஆனால் சுதாரித்து, "யாஷ் ஷர்ட் கசங்குது பார், நான் வெளியில கிளம்பிட்டேன்" என்றானே அவ்வளவு தான் வேண்டுமென்றே கையால் சட்டை முழுவதையும் கசக்கி இருந்தாள்.


"உனக்கு கொழுப்பு ரொம்ப தான் ஏறிப் போச்சு டி" என்றவன் அவளை விலக்கி தளர்ந்து ஷோபாவில் அமர்ந்து கொண்டான் அவளின் செயலில் லேசாக அரும்பிய புன்னகையுடன்.


"நீங்க தான செய்தீங்க அதை?" என்றாள் வினாவாய் விழிகளை விரித்து. புருவத்தை நீவியவன் நன்றாக பின்னால் சாய்ந்தமர்ந்து கைகளை பின்னால் கட்டிக் கொண்டு, "எதை யாஷ்?" என்றான். இலகு தன்மை குறைந்து முகம் சட்டென்று கடுமையேறி இருக்க அதிலே உணர்ந்து கொண்டவள், "சாரி நவீன்" என்றாள் உள்ளிறங்கிய குரலில் இறைஞ்சுதல் பார்வையோடு.


"போடி உன்கிட்ட பேசக் கூடாதுன்னு தான் இருந்தேன்" என்றான் தலையை கோதியப்படி. கோபம் அதிகமாகவே கனன்றது.


"நவீன்" என்றவள் அமைதியாய் அருகில் அமர்ந்து கொண்டாள் அவனின் கைகளை ஆதரவாக பிடித்தப்படி. "சொல்லக் கூடாதுனு இல்லை நவீன், எப்படி சொல்றதுன்னு தெரியலை" என்றாள் தவிப்பாக. அந்த விழிகளில் தெரிந்த பதற்றத்தில் சற்று இளகினான். "சரி இந்த ஒரு முறை உனக்கு எக்ஸ்கியூஸ் ஆனா நான் இருக்கும் போது திரும்ப நடக்காது இன்கேஸ் நடந்தா தைரியமா பேஸ் பண்ணனும், முடியலையா அட்லீஸ்ட் என்கிட்ட இன்பார்ம் பண்ணனும்" என்றான் மிரட்டலாக. ஆம், நேற்று நடைபெற்ற படப்பிடிப்பில் கதாநாயகனா புதிதாக ஒருவனை தேர்ந்தெடுத்திருந்தனர். முதல் நாள் நாயகன் நாயகிக்கான படப்படிப்பு துவங்கி இருக்க யாஷ் அருகில் அமர்ந்து அவளுடன் உரையாடலை துவங்கினான். யாஷ் அதை துண்டிக்க முயன்றாலும் விடாது பேச்சை வளர்த்தவன் இறுதியில், "உங்களை எனக்கு பிடிச்சிருக்கு யாஷ், கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று நிற்க யாஷ் முதலில் விழித்தாலும் பின் நாசூக்காக அவனை மறுத்து விலகி நவீனின் அறைக்குள் புகுந்து கொண்டாள்.



அதில் சற்று கடுப்பாகி போனவன் அவளிடம் வம்பு வளர்த்தான். நெருக்கமான காட்சிகள் இல்லையென்றாலும் அவளின் தோளை உரசுவது விரல்களை பிடிப்பது என்று கேமிரா முன் நின்று அவர்கள் கூறியதை விட அதிகமாகவே நடிப்பை கொட்டினான். யாஷ்வியினால் எதிரிலிருப்பவன் எண்ணங்களை நன்றாகவே படிக்க முடிந்தது. முதலில் எதிர்பாராமல் என்றெண்ணி இருந்தவள் அடுத்தடுத்து அத்தகைய சீண்டல்களே நிகழ புரிந்து கொண்டாள். பெண்ணால் அங்கு நிற்கவே முடியவில்லை ஏனோ மனம் சட்டென்று நவீனை தேட விழிகளில் நீர் தேங்கி கொண்டது. சமாளித்து இயக்குநரிடம் கூறி நவீனின் அறைக்குள் புகுத்து கொண்டாள். இதை எவ்வாறு கையாள்வது என்று அவளுக்கு புரியவில்லை. அப்படி தலையை பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் நவீன் வந்திருந்தான்.


அவனிடம் எப்படி கூறவது என்று அலைமோதியவள் ஏதோவொரு தைரியத்தில் அதாவது நவீனின் மீது கொண்ட நம்பிக்கையில் மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்ல அவளின் பின்பே அவனும் வந்திருந்தான். நொடியில் யாஷின் அசௌகரியத்தை முகத்திலே கண்டு கொண்டவன் எல்லோரையும் கிளப்பியிருந்தான். ஆம், அங்கேயே நவீனால் அந்த ஆடவனை தாக்கியிருக்க முடியும் ஆனால் யாஷ் பெயரை கொண்டு எந்த களேபரமும் நடைபெறுவதில் அவனுக்கு விருப்பமில்லை. ஆக, அவளை வீட்டில் விட்டு மீண்டும் திரும்பி சென்றவன் அவனை அடிக்க பாய்ந்து நண்பனிடம் அத்தனை காய்ந்திருந்திருந்தான். எப்படியோ ஏறக்குறைய கெஞ்சி சமாதானம் செய்து இனி 'இதுபோல் நடைபெறாது' என்று உறுதிமொழி கொடுத்து நவீனை சமாதானம் செய்து கிளம்பியிருந்தான் நண்பன்.



பெண் சட்டென்று உடைந்து அழ துவங்கினாள். "என்னை சுத்தி எப்பயுமே அப்பா அம்மா அண்ணானு யாராவது இருப்பாங்க.
நான் இது போல் சூழ்நிலைய சந்திச்சதில்லை நவீன்... சோ எப்படி ரியாக்ட் பண்றது தெரியலை" என்றவள் திணற, "யாஷ், ரிலாக்ஸ். எதுக்கு இவ்வளவு டென்ஷனாகுற நீ?" என்று அதட்டி கண்ணீர் துடைத்தவன் எழுந்து சென்று தண்ணீர் பொத்தலை எடுத்து வந்து நீட்டியிருந்தான்.



வாங்கி பருகியவள் தன்னை சமன் செய்து கொள்ள, "யாஷ், நம்மளை சுத்தி எப்பயுமே நல்லவங்க மட்டும் இருப்பாங்கனு எதிர்பார்க்கிறது தப்பு. எல்லாத்துக்கும் நம்மளை தயாரா வைச்சுக்கணும். உனக்கு எதிரா ஒரு விஷயம் நடந்தா உடனே குரல் கொடுக்கணும். நீ தயங்குறது தான் எதிரில் இருக்கவங்களுக்கு தைரியத்தை கொடுக்கும். அந்த தப்பை மட்டும் எப்பயுமே செய்யக் கூடாது. நாலு பேர் எதிர்த்து பேசுனா தான் இந்த மாதிரி ஆளுங்க கொஞ்சமாச்சும் பயப்படுவாங்க. உன்னை காப்பத்த சூப்பர் ஹீரோ எல்லாம் வர மாட்டார் காட் இட்" என்றான் அழுத்தமாக.


"அதான் நீங்க இருக்கீங்களே!" என்று முணுமுணுக்க, 'பாரேன் இவளுக்கு திமிரை!' என்று முறைத்தான் ஆடவன்.


இரண்டு கைகளை மேலே தூக்கி புன்னகையுடன் சரண்டர் ஆனவள், "இனிமே கண்டிப்பா பேசுறேன் நவீன்" என்று பதில் கொடுக்க அவளின் கன்னம் தட்டி புன்னகைத்தான். "ஷ்ஷ்..." என்று நெற்றியை பிடித்தவள், "வந்து ரொம்ப நேரமாகிடுச்சு, ஷமீ தனியா தூங்குறா. முழிச்சிட்டா பயந்திடுவா" என்று எழுந்து கொண்டு, "தாங்கஸ் நவீன்" என்று மீண்டும் அவனை அணைத்தாள்.

"ஷர்ட் மாத்திட்டு கிளம்புங்க" என்று முணுமுணுத்தவளுக்கு ஏனோ நவீனை காணும் பொழுது சவீதா நினைவே கிளர்ந்தெழுந்தது. அவரும் அப்படி தான், யாஷ்விக்கு ஒன்றென்றால் அவ்வளவு தான் உண்டு இல்லையென்று ஆக்கி விடுவார் அனைவரையும். அவளையும் கடிந்து கொள்வார், "நீ ஏன் இப்படி இருக்க யாஷ்?" என கவலைக்கொண்டு. நவீனை பிடிக்கும் ஆனால் இப்பொழுது இன்னும் இன்னும் பிடிக்க துவங்கியது. ஆம், "நான் நடிக்கலை நவீன், எனக்கு இது வேண்டாம்" என்று கூறியவளை முறைத்து, "நீ கண்டிப்பா விலக கூடாது யாஷ், இப்படி பயந்து ஓட ஆரம்பிச்சா நீ எங்கயுமே நிற்க முடியாது, நில்லு தைரியமா எதிர்த்து நில்லு" என்று அறிவுரை கூறி அவளை பக்குவப்படுத்தினான். "நான் இருக்கிறேன்" என தைரியம் கொடுக்காமல் அவளே தனியாக எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியது இன்னும் அவனை தனித்து காட்டியது. தன்னை கூட அவள் சார்ந்திருக்க கூடாதென்று என்ற எண்ணங்களை பெண்ணவளிடம் கடத்தியவனால் இன்னும் ஸ்திரப்படுத்திக் கொண்டாள் பெண் தன்னை. நவீன் செயலாலும் வார்த்தைகளாலும் பெண்ணவளை முழுவதுமாக தன்னுள் ஆகர்ஷித்துக் கொண்டான்.






தொடரும்....
 
Last edited:
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Naveen kooda shami than nalla jodi potu iruka yash ah vida naveen indha alavukku change agi irukan ah yash avan ah yum purinchi iruku ah aval ah yum avanukku puriya vachi iruku ah
 
Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
Naveen kooda shami than nalla jodi potu iruka yash ah vida naveen indha alavukku change agi irukan ah yash avan ah yum purinchi iruku ah aval ah yum avanukku puriya vachi iruku ah
Thank you ma❤️❤️😍
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Naveen yash nalla pair tha 2 payrum oruthar oruthar puruju nadaguraga shami kutty negga romba cute naveen neyum yash ya nalla pandriga😍🤩 naveen sollurathu crt tha yash nammaku problem vantha Namma first face panna try pannanum epadiyaay irugaga cute ya 😍😍😍😍
 
Top