• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 6

Administrator
Staff member
Messages
567
Reaction score
808
Points
93
தேனும் இனிப்பும் 6:

அவனும் நானும்
மீனும் புனலும்…



“டீ குடிக்கிறீங்களா…?” என்றவளது குரலில் கலைந்த ஜீவா திரும்பி ஜானவியை பார்த்தான்.

அவள் முகம் உணர்வுகளற்று இருந்தது. அப்படி வைத்திருக்க அவள்படும் பிரம்ம பிரயாத்தனம் படவேண்டி இருந்தது.

சில நொடிகள் அமைதியாக அவள் முகம் கண்டவன், “ஹ்ம்ம்…” என்று தலையசைக்க, ஜானு அமைதியாக அகன்றாள்.

பால்கனி கம்பியை பிடித்தபடி நின்றிருந்த ஜீவாவின் பார்வை தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த மகள் மீது தான்.

பாவடை தாவணியில் அழகின் மொத்த உருவமாக இருக்கும் மகளை ரசிக்க கண்கள் இரண்டு போதவில்லை.

அதுவும் அவளது முகத்தில் இருக்கும் அந்த சிரிப்பு ஜானுவின் பிரதி பிம்பமாய்.

இருவரும் காதலித்த நாட்களில் தங்களுக்கு பெண் பிள்ளை பிறந்தால் ஜானுவை போல தான் இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்திருக்கிறான்.

அது இப்போது நினைவாகியது. ஜானுவை அப்படியே உரித்து வைத்திருக்கும் தங்களது குழந்தை ஒவ்வொரு அசைவிலும் அவளை நினைவுபடுத்துகிறது.

இதழ்களில் மென்னகை பூத்தது. இளையவர்களுடன் ஓடிப்பிடித்து விளையாடி கொண்டிருந்தாள்.

தீபாவும் நரேனும் அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்து இளையவர்களை பார்த்து கொண்டே இருந்தனர்.‌ உள்ளே நுழைந்து தேநீரை தயாரித்தவளுக்கு இன்னும் கரத்தின் நடுக்கம் போகவில்லை.

என்னவோ நடப்பது எல்லாம் கனவா? இல்லை நினைவா என்று புரியவில்லை. இதயம் மத்தளம் வாசிக்கும் ஓசையை உணர முடிந்தது அவளால்.

அவன் வர வேண்டும் மனது கோடி முறை எதிர்ப்பார்த்தது தான். ஆனால் வந்த பிறகு உள்ளுக்குள் அதைவிட அதிகமான அச்சம் உண்டானது.

ஏன் வந்தாய் என்னை தேடி என்று கத்த வேண்டும் என்பது போல இருந்தது.

இன்று வந்து நீ சென்றுவிடுவாய் நாளை உன்னை பார்க்க ஏங்கி தவிக்கும் மனதிடம் என்ன கூறி சமாதானம் செய்வேன் என்று உள்ளே கூக்குரல் கேட்டது.

கலங்கும் விழிகளை துடைத்து கொண்டவள் தேநீரை வடிகட்டினாள்.

ஜீவாவின் பார்வை இன்னுமே மகளின் மீது தான். பார்க்க பார்க்க மகளை தெவிட்டவில்லை.

அழுத தடயம் தெரியாதவாறு முகத்தை அழுத்தி துடைத்து கொண்டு வெளியே வந்தவள் அவனது முகத்தை பக்கவாட்டில் பார்த்து அப்படியே சில கணங்கள் நின்றுவிட்டாள்.

அவனது வதனம் அதில் தெரிந்த ரசனை என்னவோ பல ஜென்மமாய் தான் ஏங்கி தவித்த ஒன்று இப்போது நிறைவேறிய பிரம்மை.

அவன் வரவு தன்னை கொன்று கூறு போடும் என்று அறிந்தாலும் தான் பதிலின்றி தவித்து நின்ற போது வந்தவனது வருகை எத்தகைய நிம்மதியை அவளுக்கு வாரி வழங்கியது என்று வார்த்தைகளால் வடிக்க இயலாது.

இப்போதும் அந்த கணம் இதயத்தில் சிலிர்ப்பூட்ட சில மணி நேரங்களுக்கு முந்தைய நிகழ்வு மனத்திரையில் நழுவி சென்றது.

மங்களத்திடம் பதில் கூற இயலாது தவித்து கலங்கி நின்ற கணம் எதிரில் இருந்தவனை கண்டு அசையாது நின்றவளின் விழிநீர் கன்னம் தாண்டியிருந்தது.

ஒரு நொடி கனவு தான் காண்கின்றோமா? என்று விழிகளை சிமிட்டி பார்க்க அவளிடத்தில் மட்டும் பார்வையை பதித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான் ஜீவா.

நிஜம் தான் அந்த கணம் அவன் தன்னருகில் தான் நிற்கிறான் என்று உணர்ந்த கணம் கடகடவென விழிகளில் நீர் நிறைந்தது.

சுற்றி இருந்த அனைவரையும் மறந்து போனாள். அந்த கணம் தானும் அவனும் மட்டுமே இவ்வுலகில் இருப்பதாய் தோற்றம்.

இமைத்தால் மறைந்து போய்விடுவானோ என்று விழிகளில் தவிப்புடன் அவனை நோக்கினாள்.

‘என்னுடலில் உயிர் இருக்கும் வரைக்கும் இவன் ஒருவனது நினைப்பு போதும்’ என்று உள்ளம் கூக்குரல் இட்டது.

அவளது நிலையை உணர்ந்த தீபா, “ஜானு…” என்று ஆதரவாக தோளை பிடிக்க, சடுதியில் சுயம் உணர்ந்தவள் விழிகளை சிமிட்டி கண்ணீரை துடைத்தாள்.

நரேன் எழுந்து சென்று, “வா ஜீவா” என்று அணைத்து கொள்ள, ஜானு அங்கிருந்து நகர்ந்து முகம் கழுவி வந்தாள்.

வெகு வருடங்களுக்கு பிறகு ஜீவாவை கண்டதால் எல்லோரும் நலம் விசாரிக்க அனைவரிடத்திலும் புன்னகையுடன் பதில் அளித்தவனது கவனம் அவளிடத்தில் தான்.

நகர்ந்து முகம் கழுவி வந்து உணர்வுகளைப் புதைத்து வந்தவள் மெலிதான புன்னகையுடன், “வாங்க சார்” என்று வரவேற்க, ஒரு கணம் அமைதியாய் அவளை பார்த்தவன் தலையசைக்க, அந்த பார்வை அவளை அசைத்து பார்த்தது.

என்னவோ அவளால் அதற்கு மேல் அங்கிருக்க இயலவில்லை. எங்கே தான் அனைவரின் முன்பு உடைந்து போவோமோ என்று அஞ்சி தன்னுடைய அறைக்கு வந்துவிட்டாள். அங்கிருந்த அனைவருக்கும் நடந்தது தெரியும் ஆதலால் இருவரிடமும் தேவையற்ற கேள்வி கேட்டு எந்த சங்கடமும் படுத்தவில்லை.

அறைக்கு வந்து அடைந்து கொண்டவளுக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. முழுதாய் இரண்டு வருடங்கள் கழித்து வந்தவனை கண்டு அவளது மொத்தமும் ஆட்டம் கண்டது.

இனி இந்த பிறவியில் தன்னால் பார்க்கவே முடியாது என்று ஏங்கி தவித்தவனை கண்ட கணம் உள்ளுக்குள் இதயம் நழுவியது.‌ தானும் அவனும் ஒன்றாய் நின்று மகளது விழாவை நடத்தி இருந்தால் எவ்வளவு அழகாய் இருந்திருக்கும் என்று உள்ளம் ஏங்கியது.

இப்போதும் தன்னுடைய திருமணத்தை பற்றி பேசுகிறார்களே இதோ என் கண்முன்னே வந்து நிற்கிறானே இவனை எப்படி கடந்து போவேன். அது இந்த பிறவியில் முடியுமா என்ன? என்று கேட்பவர்களிடத்தில் கத்த வேண்டும் என்று தோன்றியது.

அவர்கள் தனது நலனை எண்ணித்தானே கூறுகின்றனர் என்று தன்னை தானே தேற்றியவள் வெகு நேரங்களுக்கு பிறகே தன்னிலை அடைந்தாள்.

அழுது கரைந்து எதுவும் ஆக போவதில்லை என்று உணர்ந்தவள் எழுந்து முகத்தை இருமுறை கழுவி துடைத்து வர கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

மனது படபடவென அடித்து கொண்டது. ஜீவா வந்துவிட்டான் உன்னுடைய ஜீவா வந்துவிட்டான் என்று உள்ளம் ஆர்ப்பரிக்க முன்பு அதிர்ச்சியில் சரியாக கவனிக்காதவனை இப்போது முழுதாய் படம்பிடித்து கொள்ள மனது தயாரானது.

மற்றொரு மனம் நரேன் தான் வந்திருப்பான் எதிர்ப்பார்த்து ஏமாந்து போகாதே என்று எச்சரிக்க அதனை ஒதுக்கி தள்ளியவள் இன்றொரு நாள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு போகிறேன் எனக்கு என் எல்லைகள் தெரியும் என்று தானே சமாதானம் கூறி கொண்டவள் கதவை திறக்க, வெளியே நரேனும் தீபாவும் நின்று இருந்தனர்.

நொடியில் பரவிய ஏமாற்றத்தை மறைத்தவள், “வாங்க” என்று வழியை விட,

“கேட்டரிங்காரங்க வந்தாங்க எல்லா பாத்திரத்தையும் செக் பண்ணி ரிடர்ன் பண்ணிட்டோம். அப்புறம் எல்லாரும் கிளம்பினதும் ஆள் வச்சு க்ளீனும் பண்ணிட்டோம்” என்று நரேன் கூற,

“ஓ… எல்லாரும் கிளம்பிட்டாங்களா?” என்று கேட்டவளுக்கு லேசாக விழிகள் கலங்குவதாய்,

நரேனுக்கு முன்பு தீபா, “ஹ்ம்ம் கிளம்பிட்டாங்க ஜானு” என்று அவளது முகத்தை உற்றுப்பார்த்து கூற,

‘போய்விட்டான் போய்விட்டான் அவன் உன்னைவிட்டு, தேவைதானா உனக்கு முன்பே பார்த்து பேசியிருக்க வேண்டியது தானே? இனி அவ்வளவு தான் அவனைட பார்க்கவே முடியாது என்று உள்ளம் கூச்சலிட அழுகை பெருகியது.

அவ்வளவு தானா அவனுக்கு நான் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றுவிட்டான் மகளை பார்க்கத்தான் வந்தானா? தான் அவனுக்கு எதுவுமே இல்லையா? என்று உள்ளம் கதற விழிகளை சிமிட்டி தன்னை கட்டுப்படுத்த முயற்சித்தாள்.

தீபா, “ஜானு காஃபி போட்டு தரீறீயா?” என்று வினா தொடுக்க,

“ஹ்ம்ம்…” என்று அழுகையை அடக்கி தலையசைத்தவள் சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்.

இந்த கடவுளுக்கு இதே வேலையா ஆசையை காட்டி என்னை மோசம் செய்கிறாரே நான் கேட்டேனா அவனை வரவழைக்க சொல்லி வரவில்லை என்றாலும் அவ்வளவு தான் தன் விதி என்று தேறி கொண்டிருப்பேன்.

இப்படி என் கண்ணில் காட்டி மறைய வைத்து என்னை கொன்று கூறுபோடுகிறார் என்று சுயபட்சாபத்தில் அழுகை பெருகியது.

வெளியே இருக்கும் இருவருக்கும் தெரியாமல் தன்னுடைய அழுகையை கட்டுபடுத்தியவள் இருவருக்கும் காஃபி தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டாள்.

இருந்தும் அழுகை குறையவில்லை. இப்படி எதிர்ப்பார்த்து ஏமாந்து போவது தான் தன்னுடைய தலையில் இருக்கிறது போலும் என்று மனது குலுங்கியது.

துடைக்க துடைக்க வற்றாத ஜீவநதியாக விழிநீர் வழிந்தது. அழுதழுது முகம் சிவந்து போயிருந்தது.

சேலை முந்தானையில் முகத்தை துடைத்தவள் இருவருக்கும் கோப்பையில் காஃபியை ஊற்ற,
வெளியே அவனது குரல் ஜானுவின் ஜீவாவுடைய குரல் கேட்டது.

இது நிஜம்தானா? இல்லை கற்பனையா என்று புலன்கள் விழித்து கொண்டன. அவன் சென்றுவிட்டதாய் இவர்கள் கூறினார்களே என்று கேள்வி எழ, சடுதியில் கால்கள் கூடத்தை நோக்கி நகர்ந்தது.

அவள் வந்ததும், “அம்மா அங்கிள் எனக்கு இதெல்லாம் வாங்கி கொடுத்தாங்க” என்று ஓடிவந்து தாயை கட்டி கொண்டாள் ஜீவிதா.

ஜானுவின் பார்வை முழுவதும் அமர்ந்து நரேனிடம் பேசி கொண்டிருந்த ஜீவாவிடம் தான்.
வந்துவிட்டான் என்னுடைய ஜீவா அப்படியெல்லாம் அவன் என்னை விட்டு போகமாட்டான் என்று உள்ளே ஒரு குரல் ஆர்ப்பரித்தது.

அந்த கணம் ஜீவா ஜானுவை நோக்கி திரும்ப அவனுக்கு முகம் காட்டாமல் மகளிடம் குனிந்து கொண்டாள்.

“ம்மா ஜீவா அங்கிள் எனக்கு மட்டுமில்ல தேஜ், அனி அப்புறம் விதுக்கும் வாங்கி கொடுத்து இருக்காங்க” என்று ஜீவி முகமெல்லாம் புன்னகையுடன் கூற, இவளுக்கு மெலிதாக புன்னகை பூத்தது.

அது ஜீவா வந்துவிட்டான் என்பதாலா? இல்லை மகளின் புன்னகையால் விழைந்ததா என்பது அவள் மட்டும் அறிந்த ரகசியம்.

உடை இனிப்புகள் என்று நிறைய மகளுக்கு வாங்கி கொடுத்திருந்தான். அழுததில் சிவந்து இருந்த முகம் சோபையான புன்னகையுடன் பளபளத்தது.

“ம்மா நீ இன்னைக்கு அழகா இருக்க” என்று மகள் கூறிட, சடுதியில் கூடத்தில் இருந்தவர்களிடம் பார்வை சென்றது.

நல்லவேளை அவர்களுக்கு கேட்டிருக்கவில்லை. மகளிடம் திரும்பி, “அப்படியா?” என்று பார்க்க, “ஆமாம்மா” என்றவள், “இதென்ன ரெட்டிஷ்ஷா இருக்கு” என்று வினவிட, அவளிடத்தில் தடுமாற்றம்.

“அது டஸ்ட் அலர்ஜிடா” என்று சமாளிக்க, மகள் நம்பிவிட்டாள்.

காஃபியை எடுத்து கொண்ட தீபா, “ஜானு நானும் நரேனும் கொஞ்ச நேரம் தோட்டத்தில உட்க்காந்துட்டு வர்றோம்” என்று வெளியேற, “நானும் கொஞ்ச நேரம் விளையாடிட்டு வர்றேன்” என்று ஜீவியும் அவர்களுடன் சென்றுவிட, ஜீவாவும் ஜானுவும் தனித்துவிடப்பட்டார்கள்.

ஜானு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்க அவளை தவிக்கவிட விரும்பாதவன் எழுந்து பால்கனிக்கு சென்றுவிட்டான்.
அவனை கண்டபடி நின்றுவிட்டவளை அவனது அலைபேசி ஒலி நினைவுக்கு கொண்டு வந்தது.

ஜீவா அலைபேசியை எடுத்து பேச சுயநினைவை அடைந்தவள் வெகுநேரம் தான் அவனை பார்த்தபடி நின்றுவிட்டதை உணர்ந்து அவனருகே செல்ல பேசி முடித்தவன் தேநீரை எடுத்து கொண்டான்.

ஜீவா தேநீரை பருக நிமிடங்கள் அமைதியில் கழிந்தது. இப்படியே இருந்தால் நிச்சயம் அவள் பேச மாட்டாள் என்பதை உணர்ந்தவன், “எப்படி இருக்க ஜானு?” என்று வினவ, “ஹ்ம்ம் நல்லா இருக்கேன்” என்று தலையசைத்தவள் நிதானத்திற்கு வந்திருந்தாள்.

அவளது நிதானம் உணர்ந்தவன், “பாப்பா நல்லா வளர்ந்துட்டால்ல” என்று மகளை பார்த்தபடி வினவ,
மகளிடத்தில் பார்வை பதித்தவள் மென்னகையுடன், “ஹ்ம்ம்” என்று தலையசைத்தாள்.

“இது எவ்ளோ சந்தோஷமான விஷயம் ஜானு இதை கூட என்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணலையா?” என்றவன் குரலில் வேதனையைத் தேக்கி கேட்க, இவ்விடத்தில் பெரும்தவிப்பு.

கண நேரத்தில் அதனை சமாளித்தவள் மென்னகையுடன், “உங்களுக்கு அழகான ஒரு குடும்பம் இருக்கு அது என்னால கலைய கூடாதுனு தான் நான் சொல்லலை” என்று வெகுநிதானமாக பதில் தர, இவனுக்கு தான் வியப்பு. நொடி நேரத்தில் எவ்வளவு இத்தனை பொறுமை என்று. ஜீவா பதில் ஏதும் பேசவில்லை.

“வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று ஜானுவே கேட்க, “ஹ்ம்ம் நல்லாயிருக்காங்க” என்று தலையசைத்தான்.

“அப்புறம் உங்களுக்கு செகெண்ட் பேபி என்ன பேபி?” என்றவளுக்கு அவனது நல்வாழ்வை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம்.

அதனை அவளது விழிவழி கண்டவன், “பையன் நேம் அர்னவ்” என்று கூற,

“ஓ… நான் பொண்ணா இருக்குமோன்னு நினைச்சேன்” என்றவள், “நேம் ரொம்ப அழகா இருக்கு” என்று புன்னகைத்தாள்.

அந்த புன்னகையில் நிச்சயம் அவனது நல்வாழ்வுக்கான மகிழ்ச்சி இருந்தது. எப்படி இவளால் முடிகிறது. இவ்விடத்தில் தான் இருந்தால் இத்தனை நல்ல மனம் கொண்டிருப்பேனா? என்று சந்தேகம் எழுந்தது ஜீவாவிற்கு.

“போட்டோ காட்றீங்களா?” என்று ஜானு ஆர்வமாக கேட்க, ஜீவா தனது அலைபேசியை எடுத்து மகனது புகைப்படத்தை காண்பித்தான்.

அதனை வாங்கி பார்த்தவளுக்கு உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு இழையோடியது. ஜீவாவின் ரத்தம் என்பதே அவளுக்கு இமை நீண்ட புன்னகையை தோற்றுவிக்க, “ரொம்ப அழகா இருக்கான் அவங்க அம்மா மாதிரியே” என்றவள், “பேமிலி போட்டோ இல்லையா?” என்று வினவிட, “இல்லை” என்று ஜீவா பதில் அளித்தான்.

“ஏன்?” என்ற கேள்வியை தேக்கி ஜீவாவை காண, சில நொடிகள் மௌனமாய் அவளை கண்டவன், “அவ இல்லை” என்று பதிலுரைத்தான்.

அதன்
பொருள் விளங்காதவள், “என்ன?” என்று புருவம் சுருக்க, “அவ இப்போ இல்லை” என்று அவள் முகம் பார்த்து உரைத்தான்.

அதில் ஏகமாய் அதிர்ந்தவள் அலைபேசியை நழுவவிட்டிருந்தாள்…
 
Well-known member
Messages
480
Reaction score
346
Points
63
Janu Jeeva kastappada koodathu nu nenacha aana avan ipadi oru nilamai la irupan nu ava nenaikavae illa
 
Well-known member
Messages
1,051
Reaction score
759
Points
113
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Top