• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 5

Administrator
Staff member
Messages
567
Reaction score
808
Points
93
அத்தியாயம் 5:

அவனும் நானும்

ஆலும் நிழலும்…

“ஜானு மரப்பலகைய எடுத்து வைக்க சொன்னேனே எடுத்துட்டியா?” என்று மங்களம் பாட்டி வினவ,

“ஹ்ம்ம் எடுத்து வச்சிட்டேன் பாட்டி” என்ற ஜானு மகளுக்கு களியை ஊட்டி கொண்டு இருந்தாள்.

“அதை எடுத்து முன்னாடி வச்சிடு. அப்போதான் எடுக்க வசதியா இருக்கும்” என்று மங்களம் கூற,

“சரிங்க பாட்டி” என்றவள் மகளுக்கு உணவை ஊட்ட விழைய,

“ம்மா போதும்மா. நேத்து கொடுத்தது கூட பரவாயில்லை இது ரொம்ப கசக்குது” என்று ஜீவி மறுத்தாள்.

“இது வெந்தையக்களி கசக்கதான் செய்யும் சாப்பிடு சாப்பிட்டாதான் வயிறு காலெல்லாம் வலிக்காம இருக்கும்” என்று மங்களம் பாட்டி அதட்ட, முகத்தை சுருக்கியவள் அமைதியாக வாங்கி கொண்டாள்.

மகளது முகத்தை காண பாவமாக இருந்தாலும் தான் அவளுக்கு சாதகமாகப் பேசினாள் சாப்பிட மாட்டாள் என்று அறிந்து அமைதியாக ஊட்டினாள்.

மங்களம் அகன்றதும், “ஜானு பாப்பாவுக்கு எடுத்துட்டு வந்தேன் நல்லா இருக்கா” என்றபடி உடையுடன் கனி வர,

“எதுக்குடி இந்த பார்மாலிட்டீஸ்” என்று ஜானு கேட்டாள்.

“ஹேய் நான் பண்ணாம வேற யாரு பண்ணுவா அமைதியா இருடி” என்று அதட்டிய கனி ஜீவியிடம், “உனக்கு பிடிச்சிருக்கா செல்லம்?” என்று வினவினாள்.

அரக்கு நிறத்தில் கரை வைத்த பட்டுபாவடை சட்டையை கண்ட ஜீவி, “ரொம்ப அழகா இருக்குத்தை” என்று புன்னகைத்தாள்.

“உனக்கு பிடிக்கணும்னு பாத்து பாத்து வாங்குணேன்” என்ற கனி ஜானுவிடம், “சாப்பாட்டுக்கு சொல்லியாச்சு தானடி?” என்று கேட்க,

“ஹ்ம்ம் சொல்லிட்டேன் மார்னிங் எய்ட்க்கே கொண்டு வந்திடுவாங்க” என்று முடித்தாள் ஜானவி.

என்னதான் அனைத்தையும் எடுத்து செய்ய நட்புகள் உறவுகள் இருந்தாலும் ஜீவாவின் அருகாமையை தான் மனம் விரும்பியது. தன் சோகத்தை தனக்குள் புதைத்தவள் சாதாரணமாக நடமாடினாள்.

வெளியே ஓடி பிடித்து விளையாடி கொண்டிருந்த அனிருத் மற்றும் தேஜ் இருவரும் உள்ளே ஓடிவர,
“டேய் பாத்து விழுந்திடாம விளையாடுங்க டா” என்று கனி அதட்டி பிடித்தாள்.

“அதெல்லாம் விழ மாட்டோம்” என்ற இருவரும் வெளியே ஓட,
ஜீவியின் விழிகள் அவர்கள் மீது ஏக்கமாக படிந்தது.

கனி, “என்ன ஜீவி உனக்கும் விளையாட போகணுமா?” என்று வினவ,

“ஹ்ம்ம்” என்று அவளது தலை ஏக்கத்துடன் அசைந்தது.

“ரெண்டு நாள் தானடி தங்கம். தண்ணீ ஊத்துன பின்னாடி நீயும் விளையாடலாம்” என்று கன்னத்தை பிடித்து கொஞ்ச,

“சரிங்கத்தை” என்றவளுக்கு ஓரிடத்தில் அமர பிடிக்கவில்லை. தானும் அவர்களை போல ஓடியாடி விளையாட தான் ஆசை பிறந்தது.

பின்னர் சிறிது நேரம் பேசிவிட்டு கனி நகர ஜானு மதிய உணவினை தயாரிக்க சென்றாள்.

ஜீவி தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருக்க அழைப்பு மணி ஒலித்தது.

பழக்க தோஷத்தில் ஜீவி எழ முற்பட சமையலறையில் இருந்து எட்டி பார்த்த ஜானு, “ஜீவி எழக்கூடாது. நான் போய் பாக்குறேன்” என்றபடி வர,

“மறந்துட்டேன் மா” என்று புன்னகையுடன் நாக்கை கடித்தாள். அந்த புன்னகை அப்படியே ஜீவாவை நினைவுப்படுத்தியது.

மகள் அருகே வந்து அவளது கன்னம் பிடித்து கொஞ்சியவள், “அழகு என் பொண்ணு” என்றுவிட்டு நகர, ஜீவியிடத்தில் புன்னகை இதழ் விரிந்தது.

“உன் அளவுக்கு இல்லைம்மா” என்று ஜீவி கூற,

“காமெடி பண்ணாதடி” என்று ஜானு சிரித்தாள்.

“நிஜமாம்மா என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் உன்னை என்னோட அக்காவான்னு கேக்குறாங்க” என்று ஜீவி கூறியதும் திரும்பி மகளை போலியாக சிரிப்புடன் முறைத்தவள் கதவை திறக்க, ஆதவன் நின்று இருந்தான்.

அந்த நேரத்தில் அவனை எதிர்பாராதவள் திகைத்து பிறகு, “வாங்க வாங்க ஆதவன்” என்று வரவேற்க, ஆதவன் தலையசைத்து உள்ளே வர தேஜும் உடன் வந்தான்.

இதுவரை பெரிதாக அவன் வீட்டிற்கு வந்ததில்லை இப்போது முதல் முறையாக வருகிறான். எப்போதும் மகனை அழைக்க வந்தால் கூட வாசலோடு சென்றுவிடுவான்.

உள்ளே நுழைந்த ஆதவன் ஓரத்தில் அமர்ந்திருந்த ஜீவியை பார்த்து புன்னகைக்க அவளும் அழகாய் சிரித்தாள்.

ஜானு, “என்ன குடிக்கிறீங்க டீ ஆர் காஃபி?” என்று வினவ,

“எதுவும் வேணாம்ங்க” என்று ஆதவன் மறுத்தான்.

“பர்ஸ்ட் டைம் வீட்டுக்கு வந்து எதுவும் சாப்பிடாம போவீங்களா? டீ போட்றேன் குடிச்சிட்டு போங்க” என்று நகர்ந்தவள் திரும்பி, “அது குடிப்பீங்க தான இல்லை” என்றவள் சம்பிரதாயம் பார்த்து முப்பது நாட்களுக்கு எதுவும் உண்ண மாட்டானா என்று எண்ணி இழுக்க,

“அதெல்லாம் எதுவும் பாக்க மாட்டேன் டீ ஓகே” ஆதவன் கூறியதும் உள்ளே சென்றவள் ஐந்து நிமிடத்தில் டீயுடன் வந்தாள்.

தேஜ் ஜீவி இருவரும் தங்களுக்குள் ஏதோ பேசி கொண்டிருக்க ஆதவன் புன்னகையுடன் பார்த்திருந்தான்.

ஆதவனிடம் தேநீரை நீட்டியவள் மகளுக்கு கொடுத்துவிட்டு தேஜிற்கு ஆற வைத்து கொடுத்தாள்.

தேநீரை அருந்திய ஆதவன் வாங்கி வந்திருந்த பழம் மற்றும் இனிப்புகளை நீட்ட, “எதுக்கு இதெல்லாம்…” என்றபடி ஜானு நோக்க,

“வாங்கிக்கோங்க எனக்கு தெரிஞ்சவரை வாங்கிட்டு வந்து இருக்கேன்” என்று ஆதவன் மொழிய, ஜானு வாங்கி கொண்டாள்.

அடுத்து என்ன பேசுவதென்று அவனுக்கு தெரியவில்லை. ஜானுவும் அமைதியாக நிற்க, “சரிங்க ஜானவி நான் போய்ட்டு வர்றேன்” என்று ஆதவன் எழுந்து கொள்ள,

“ஹ்ம்ம்…” என்று என ஜானுவும் தலையசைக்க, ஜீவியிடத்தில் செல்கிறேன் எனும் விதமாக புன்னகைத்தவன் மகனுடன் நகர, ஜானுவுக்கு இப்போதும் இவனது நிலையை எண்ணி வருத்தம் பிறந்தது. எட்டு வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டானாம் ஆதவன்.

உண்மையாக நேசித்தவர்கள் ஒன்றாக இருந்தால் இந்த கடவுளுக்கு பிடிக்காது போல என்று எண்ணி பெருமூச்சு விட்டவள் சிந்தையுடன் சமையலை முடித்தாள்.

மதிய உணவு நேரம் வந்திருக்க ஜீவி தொலைக்காட்சியை பார்த்தபடியே உறங்கியிருந்தாள். உண்டுவிட்டு உறங்க சொல்லலாம் என்று எண்ணியவள், “தங்கம் எழுந்திரு சாப்பிட்டு தூங்கு” என்று எழுப்ப, “அப்புறம் சாப்பிட்றேன்” என முகத்தை போர்வையால் மூடினாள்.

“கொஞ்சமா சாப்பிட்டு தூங்குடா. இந்த நேரத்தில சாப்பிடாம இருக்க கூடாது அம்மா எடுத்திட்டு வந்து ஊட்டிவிடவா” என்று கொஞ்ச,

“ஹ்ம்ம்…” என்று சிணுங்கியவள், “சரி கொஞ்சமா எடுத்துட்டு வா” என்று உறக்கத்தை தொடர்ந்தாள்.

ஜானு உணவை தட்டில் போட்டு எடுத்து வந்து மகளை எழுப்ப, எழுந்து தாயின் தோளில் சாய்ந்து கொண்டவள் பாதி உறக்கத்திலே உண்டாள்‌.

மகளுக்கு ஊட்டிவிட்டு பிறகு தானும் உண்டவள் அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு வந்து மகளருகே படுத்து அணைத்து கொண்டாள். ஜீவியும் தாயின் கதகதப்பில் நன்றாக ஒட்டி படுத்து கொண்டாள்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஜானுவை அழைப்பு மணி அழைக்க இமையை கஷ்டப்பட்டு திறந்தாள். இரவெல்லாம் அலைகழிப்பில் உறங்காது இருந்தவள் மதியம் தன்னையும் மீறி உறங்கியிருந்தாள்.

அருகில் இருந்த அலைபேசியில் நேரத்தை பார்க்க ஐந்தாகியிருந்தது.

“அஞ்சு மணியாகிடுச்சா…” என்று அதிர்ந்து எழ, மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது.

“வர்றேன் டூ மினிட்ஸ்” என்று குரல் கொடுத்தவள் முகத்தை கழுவிட்டு துடைத்தபடி கதவை திறக்க,

“அத்தை…” என்று கத்தியபடி விதுரன் காலை கட்டி கொள்ள, எதிரில் புன்னகையுடன் நரேனும் தீபாவும் நின்றிருந்தனர்.

அவர்களது வரவில் ஆனந்த அதிர்ச்சி அடைந்தவள், “அண்ணா…” என்று முகம் முழுவதும் சிரிப்புடன் அழைத்து விதுரனையும் தூக்கி கொண்டாள்.

“உள்ள வாங்கண்ணா” என்றவள், “அண்ணி…” என்று தீபாவின் கையை பிடித்து கொண்டாள்.

“என்ன மேடம் அழகாகிட்டே போறீங்க” என்றபடி தீபா அணைத்து கொள்ள,

“வந்ததுமே கலாய்க்க ஆரம்பிச்சிட்டிங்களா” என்று போலியாக அலுத்து கொண்டாள்.

இவர்களது வரவில் முழித்து கொண்ட ஜீவியும் அத்தையின் கூற்றை ஆமோதித்து, “நானும் சொன்னேன்த்தை ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் உன்னோட சிஸ்டரான்னு கேக்குறாங்கன்னு அம்மா தான் நம்பலை” என்க, “உண்மைய சொன்னா உங்கம்மா நம்பமாட்டா” என்று தீபா சிரித்தாள்.

“கூட்டு சேர்ந்துட்டிங்களா ரெண்டு பேரும்” என்று ஜானு இடுப்பில் கை ஊன்றி போலியாக முறைக்க,

“என்ன என் தங்கச்சியை வம்பிழுக்குறீங்களா?” என்று நரேன் சிரிப்புடன் வர, மற்றவர்கள் அவனது தொனியில் சிரித்துவிட்டனர்.

“அண்ணா யூ டூ ப்ரூட்டஸ்” என்ற அதிர்ந்தவள் விதுரனை தூக்கி கொண்டு, “நீ வாடா நாம இவங்க கூட சேர வேணாம் சேர்ந்து அத்தைய கலாய்க்குறாங்க” என்று இதழை கோணியவள் சமையலறைக்குள் நுழைந்தாள்.

விதுரனுக்கு பூஸ்ட்டை ஆற வைத்து கொடுத்து மற்றவர்களுக்கு தேநீருடன் வர மூவரும் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.

“நீங்க ரெண்டு பேரும் ஏன் கீழ உட்கார்ந்து இருக்கீங்க மேல உட்காருங்க” என்று ஜானு கேட்க,

“என் மருமக பக்கத்துல தான‌ உட்கார்ந்து இருக்கோம்” என்ற தீபா காலை நீட்டி வாகாய் அமர்ந்தாள்.

ஜானு புன்னகையுடன் தேநீரை கொடுக்க, “என்ன நாளைக்கு வர்றோம்னு சொல்லிட்டு இன்னைக்கே வந்துட்டோம்னு கேக்க மாட்டீயா?” என்று தீபா வினா தொடுக்க,

“என் அண்ணன் தங்கச்சிக்காக எல்லா வேலையும் விட்டுட்டு அடிச்சு பிடிச்சு ஓடி வந்திருக்கும்” என்று புன்னகையுடன் ஜானு பதில் மொழிந்தாள். அதில் நரேனது முகத்தில் இதழ்விரிந்த புன்னகை.

“க்கும் ரொம்பத்தான் இவரு நாளைக்கு தான் போவோம்னு சொன்னாரு நான் தான் நீ தனியா எப்படி சமாளிப்பேன்னு இவரை இழுத்துட்டு வந்தேன்” என்று தீபா கூற, ஜானுவின் புன்னகை இமை நீண்டது.

நரேன் மனைவியை பார்த்து என் தங்கை நம்பமாட்டாள் என்று அர்த்தமாக சிரிக்க, “அண்ணனும் தங்கச்சியும் பாசமலர் படத்தை அப்புறமா ஓட்டுங்க” என்று சிலுப்பி கொள்ள, ஜானு வந்து நரேன் அருகே அமர்ந்து கொண்டாள்.

அவளது கையை பிடித்து கொண்ட நரேன், “எல்லா வேலையும் முடிஞ்சதா? புட் டெகரெஷன்?” என்று வினவ,

“ஹ்ம்ம் நானும் கனியும் எல்லாத்தையும் பார்த்துட்டோம்ணா” என்று பதில் மொழிய, இருவருக்கும் உரையாடல் தொடர்ந்தது.

“எல்லாருக்கும் சொல்லிட்டியா?” என்று நரேன் கேட்க,

“நான் யாருக்கு பெருசா சொல்ல போறேன். இங்க இருக்கவங்க அப்புறம் கீர்த்தி, அனிகாக்கு சொன்னேன் அவ்ளோதான்” என்று ஜானு முடிக்க,

“அவ்ளோதானா?” என்று நரேன் மீண்டும் கேட்க,

“ஆமண்ணா” என்று இவளும் தலையசைத்தாள்.

“வேற யாரையும் மிஸ் பண்ணிட்டியா?” என்று நரேன் வினா எழுப்ப, ஒரு கணம் யோசித்தவள் அவனை புருவம் சுருக்கி பார்த்தாள்.

“ரொம்ப முக்கியமானவங்க ஜானு” என்று நரேன் நிறுத்த,

ஒரு கணம் அமைதியாக அவனை கண்டவள், “இல்லை ண்ணா. வேற யாரையும் நான் கூப்பிட விரும்பலை. நம்மளால யாரு வாழ்க்கையிலயும் பிரச்சினை வர கூடாது” என்று புன்னகையுடன் முடித்தவள் குடித்து முடித்த காலி தம்பளர்களை எடுத்து கொண்டு சமையலறை சென்றாள்.

தீபா அவள் பின்னோடு செல்ல திரும்பி பார்த்த ஜானவி, “வாங்கண்ணி நைட்க்கு என்ன சமைக்க சொல்லுங்க” என்று வினவ,

“சமையலை விடு ஜானு உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும்” என்று அவளது கைப்பிடித்து திருப்பினாள் தீபா.

“என்னண்ணி?” என்று ஜானு நோக்க,

“இந்த மூவிஸ் எல்லாம் பாத்து இருக்கியா? செகெண்ட் சேன்ஸ் கிடைக்குமே அது போல உன் லைஃப்ல எதாவது மிராக்கில் நடந்தா எப்படி இருக்கும்” என்று தீபா ஆர்வமாய் அவள் முகம் கண்டாள்.

அவள் கூறுவதன் அர்த்தம் விளங்காது புருவம் நெறித்தவள், “என்ன சொல்றீங்கண்ணி எனக்கு புரியலை” என்றுவிட,

“ஹேய் ஜீவா உன் லைஃப்ல திரும்பி வந்தா எப்படி இருக்கும்னு கேட்டேன்” என்று தீபா புருவம் உயர்த்தினாள்.

“நான் ஏதோ இம்ப்பார்ட்டன்ட் விஷயம்னு நினைச்சா என்ன பேசிட்டு இருக்கீங்க” என்றவள் சமையலுக்கு காய்கறிகளை எடுத்து வைக்க,

“இது இம்ப்பார்ட்டன்ட் இல்லையா ஜானு?” என்று தீபா அதட்டலாக கேட்டாள்.

“இல்லைண்ணி. நடக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லாத ஒன்னை பத்தி பேசுறதுல எந்த பயனும் இல்லை” என்று ஜானு முடிக்க,

“ஒருவேளை நடந்துட்டா?” என்று தீபா நிறுத்தி அவளை கண்டாள்.

“கனவுல தான் நடக்கும்” என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவள் சமையலை துவங்க, இவளிடம் பேசி புரிய வைக்க முடியாது என்று நினைத்து தானும் சமையலலில் இணைந்து கொண்டாள்.

அன்றைய பொழுது அழகாய் கழிய மறுநாள் காலையே எழுந்து ஜானு வேலையை துவங்க அவளுடன் மற்றவர்கள் இணைந்து கொண்டனர்.

அவர்களது குடியிருப்பு வளாகத்தின் மாடியில் தான் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மங்களம் மற்றும் கோகிலாவின் வழிகாட்டுதலில் ஜீவியை ஜானு மற்றும் தீபா சடங்குகளை செய்து தயார் செய்தனர்.

நரேன் தான் தாய் மாமன் முறையில் வந்து நின்று அனைத்தையும் செய்தான்.
ஜீவியை அழைத்து வந்து அமர வைக்க ஒவ்வொருவராக வந்து சந்தனம் பூசி சென்றனர்.

நரேன் மற்றும் தீபா இருவரும் வந்து சந்தனம் வைத்துவிட்டு தங்கத்தில் கழுத்தணி, காதணி மற்றும் வளையலை அவளுக்கு பரிசாக அளிக்க, ஜானு அதிர்ந்து பார்த்தாள்.

அவர்கள் தனக்கு உறவாக வர வேண்டும் என்று எண்ணினாளே தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.

தீபாவிடம், “அண்ணி எதுக்கு இதெல்லாம்” என்று சங்கடமாக இழுக்க, “நீதான மாமா அத்தையா வந்து முறை செய்ய சொன்ன. இதெல்லாம் இல்லாம எப்படி முறை செய்யிறது” என்று தீபா அவளது வாயை அடைத்தாள்.

கனி, கீர்த்தி மற்றும் அனிகா என அங்கிருந்த அனைவருமே பரிசை கொடுக்க, ஜானு இதெல்லாம் வேண்டாம் என்று கூறியிருக்க ஏன் வாங்கி வந்தார்கள் என்று சிறிது சங்கடம் கொண்டாள்.

ஆதவன் கூட பெரிய பரிசு பெட்டி ஒன்றை தேஜின் கையில் கொடுத்து ஜீவிக்கு பரிசளித்தான்.

தீபா, “பங்க்ஷன் நடந்தா எல்லாரும் கொடுக்கத்தான் செய்வாங்க. அமைதியா இரு” என்று அதட்டினாள்.

பிறகு காலை உணவு உணவகத்தில் இருந்து வர நரேன் அனைத்தையும் இறக்கி வைத்து தீபாவுடன் சேர்ந்து பரிமாறினான்.
காலை பத்து மணியளவில் எல்லாம் ஓரளவு நிறைவடைய எல்லோரும் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.

ஜானவிக்கு விழிகள் எல்லாம் மகளிடம் தான் பாவடை தாவணியில் சந்தனமிட்டு அணி மணிகளுடன் அவ்வளவு அழகாய் இருந்தாள்.

“உங்கண்ணே பட்டுடும் ஜானு” என்று தீபா அதட்ட, அதனை அசட்டை செய்தவள் ரசனையாக மீது பார்வையை பதித்திருந்தாள்.

மங்களம் பாட்டி, “ஜானு” என்று அழைக்க, “பாட்டி” என்றவள் மகள் மீதிருந்த பார்வையை அகற்றினாள்.

“ஏன்டி நடந்தது நடந்து போச்சு இன்னும் நீ தனியாவே இருக்கணுமா?” என்று மங்களம் வினவ, “பாட்டி” என்றவள் அதிர்வும் திகைப்புமாக பார்த்தாள்.

“என்ன பாட்டி நான் அந்த காலத்து மனுசியா இருந்தாலும் எனக்கு நியாயம்னு படுறதை தான் சரின்னு சொல்லுவேன்” என்றவர், “ஆதவன் தனியா தான இருக்கான். நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்த மாதிரி இருக்கும் பிள்ளைங்களுக்கும் அம்மா அப்பா கிடைச்ச மாதிரி இருக்குமே” என்க,

ஜானவி முகத்தில் ஏகமாய் அதிர்ச்சி. ஏன் ஆதவனுமே இதனை எதிர்பாராது அதிர்ந்து நோக்கினான்.

மற்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இருவரது பதிலை எதிர்ப்பார்த்தனர். தீபா ஏதோ பேச வர நரேன் தடுத்துவிட்டான்.

“பாட்டி‌‌…” என்றவளுக்கு வார்த்தை வர மறுத்தது. தொண்டைக்குழியில் ஏதோ ஒன்று அடைத்து கொள்ள தவிப்புடன் அவரது முகம் கண்டாள்.

“பதில் சொல்லுடி” என்று மங்களம் அழுத்தி கேட்க, இவளால் சடுதியில் மற்றவர்களிடம் பேசியது போல முகத்தில் அடித்தது போல பேசமுடியவில்லை.

சங்கடமாக ஆதவ்வை கண்டவள் அங்கிருந்து தப்பிக்க எழுந்து கொள்ள, “ஜானு” என்று மங்களம் அழைக்க, தவிப்புடனும் கலங்கிய விழிகளுடனும் அவர் முகம் கண்டவள் தலையை இ
டம் வலமாக அசைத்துவிட்டு நிமிர எதிரே வந்து கொண்டிருந்தான் ஜீவானந்தம்.

அவளது தவிப்பை கலக்கத்தை போக்கும் வல்லமை படைத்த ஒருவன். ஜீவாவை கண்ட கணம் கலங்கியிருந்த விழி நீர் கன்னம் தாண்டிட அவனை பார்த்தபடி அசையாது நின்றுவிட்டாள்…

 
Well-known member
Messages
1,051
Reaction score
759
Points
113
Jeeva eppo varuvaan nu ethirpaathutte irunthen, vanthuttan
Superrrrrrrrr superrrrrrrrr 🥳🥳🥳🥳🥳
 
Active member
Messages
229
Reaction score
176
Points
43
Innaiku jeeva scene irukumnu ethirparthean sis. Just entryoda stop pannitiga.. nice epi.
 
Well-known member
Messages
480
Reaction score
346
Points
63
Jeeva eppo varuvan nu than parthutu irundhen vandhutan aana naren mangalam patti ketkum pothu deepa pesa vandha tha stop pannathuku pinnadi enna reason nu than theriyala ah
 
Top