• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 4

Administrator
Staff member
Messages
567
Reaction score
808
Points
93
தேனும் இனிப்பும் 4:

அவனும் நானும்
வேரும் மரமும்…


ஜானு தனக்கு கூறப்பட்ட செய்தி உண்மை தானா என்று கிரகிக்க முற்பட, “ஜானவி லைன்ல இருக்கிங்களா? உங்க பொண்ணு ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டா” என்று ஆசிரியர் மீண்டும் உறுதிப்படுத்த,

“ஹ்ம்ம் இருக்கேன் மேம்” என்றவளுக்கு நொடி நேரத்திற்கு எதுவும் புரியவில்லை.

பின்னர் தன்னை சமாளித்து, “நான் ஒரு ஹாஃப் ஹவர்ல வந்திடுவேன் அதுவரைக்கும் பாப்பாவ பாத்துக்கோங்க மேம்” என்று நிதானித்து கூற, “ஓகே” என்று மொழிந்த ஆசிரியர் அழைப்பை துண்டித்தார்.

இங்கு ஜானவி தான் எதுவும் உணராது சில நிமிடங்கள் சிலையாகிவிட்டாள். தன்னுடைய மகள் பெரிய பெண்ணாகிவிட்டாளா? பனிரெண்டு வயது தானே ஆகிறது. இதுவரை இதை பற்றி தான் எதுவும் சிந்திருக்கவில்லையே?

தான் பதினைந்து வயதில் தான் பெரிய பெண்ணானோம். அதுபோல தான் மகளுக்கு இருக்கும் என்று எண்ணியது தவறாகிவிட்டதே.

தனக்கு பொறுப்புகள் கூடிவிட்டது என்று உள்ளம் கூக்குரலிட, தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானாள்.

இதனை கவனித்த அருகில் இருந்த உடன் பணிபுரியும் ஷீலா, “என்ன ஜானவி கிளம்புற மாதிரி இருக்கு எதுவும் பிராப்ளமா?” என்று வினவிட,

“இல்லை அதெல்லாம் ஒன்னுமில்லை. ஒரு எமெர்ஜென்சி ஒர்க் வந்திடுச்சு அதான்” என்று சமாளித்தவள் எழுந்து சென்று தனது மேலாளரிடம் கூறிவிட்டு கனியை தேடி சென்றாள்.

கனியும் அதே நிறுவனத்தில் மற்றொரு பிரிவில் பணி புரிகிறாள். அவள் மூலமாக தான் ஜானவி இங்கு பணிக்கு சேர்ந்தாள்.

தன்னை தேடி வந்த ஜானுவை கண்டதும், “என்னடி இப்போதான சாப்பிடும் போது பார்த்தோம். திரும்ப வந்திருக்க?” என்று கேள்விக் கணை தொடுக்க,

“கனி அது ஜீவி ஸ்கூல்ல இருந்து கால் வந்துச்சு” என்று ஜானு பேசுகையில் இடை நுழைந்தவள், “என்னாச்சு எதுவும் பிரச்சனையா?” என்று பதறி கேட்டாள்.

“இல்லையில்லை அது ஜீவி பெரிய பெண்ணாகிட்டா” என்று ஜானு தவிப்புடன் கூற, சடுதியில் கனியின் முகம் மலர்ந்து போனது.

“நல்ல விஷயம் தானடி அதுக்கு ஏன் இப்படி பயப்பட்ற” என்று கனி கேட்க,

“அது எனக்கு திடீர்னு இதை கேட்டதும் பயமாகிடுச்சு. நான் இதெல்லாம் யோசிச்சு வைக்கலைடி. பாப்பாவ வீட்டுக்கு அழைச்சிட்டு போய் என்ன பண்ணணும், சடங்கு இதெல்லாம் எனக்கு தெரியாது” என்று தவிப்பும் பதற்றமுமாக மொழிந்தாள்.

தனியாக பெண் பிள்ளையை வளர்க்கும் தாயின் பயம் உணர்ந்தவள் அவளது கையை பிடித்து, “ஜானு ரிலாக்ஸ் இதுல பயப்பட்றதுக்கு எதுவுமே இல்லை. வீட்ல தான் அம்மா இருக்காங்க மங்களம் பாட்டி இருக்காங்க மணி அண்ணா வொய்ப் இருக்காங்க. அவங்க கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவாங்க. வா நாம பர்ஸ்ட் பாப்பாவ அழைச்சிட்டு வருவோம்” என்று ஆறுதல் கூற, அதில் சிறிதாக தெம்பு பிறந்தது.

“ஹ்ம்ம்” என்று தெளிந்த முகத்துடன் தலையசைத்தாள்.

“இரு நான் பெர்மிஷன் சொல்லிட்டு வர்றேன்” என்ற கனி எழுந்து செல்ல, ஜானவிக்கு நினைப்பு முழுவதும் மகளிடம் தான்.

முதல் முறை தான் பருவமெய்தி இருந்த போது பதினைந்து வயது என்பதால் ஓரளவிற்கு விவரம் தெரிந்திருந்தது. ஆனால் ஜீவிக்கு பனிரெண்டு வயது தான் ஆகிறது. இதனை பற்றி எந்த புரிதலும் இல்லாமல் பயப்படுகிறாளா? என்று எண்ணம் விரவியது.

கனி வந்ததும் இருவரும் தங்களது இரு சக்கர வாகனத்தில் பள்ளியை நோக்கி சென்றனர். சரியாக இருபது நிமிடத்தில் பள்ளியை அடைந்ததும் ஜானு விவரம் கேட்டு மகளை காண விரைந்தாள்.

ஜானு கதவை திறக்க அறையின் ஓரத்தில் ஒரு மேஜையில் அமர்ந்து இருந்த ஜீவி தாயை கண்டதும் எழுந்து நின்றாள்.
தாயை கண்டு புன்னகைக்க முயன்றாள் இருந்தும் முகத்தில் சிறிதளவு பயம் தென்பட்டது.

ஜானு, “ஜீவி…” என்று ஓடிச்சென்று அணைத்து கொள்ள, “ம்மா…” என்றவளும் பதிலுக்கு அணைத்தாள்.

மகளின் பயம் உணர்ந்தவள், “ஒன்னும் இல்லைடா தங்கம். இட்ஸ் ஜெஸ்ட் அ பயாலஜிகல் சேஞ்ச். இதுல பயப்பட எதுவுமே இல்லை” என்றவளுக்கு ஏனோ மகளை காண்கையில் விழிகள் கலங்கின.

இப்போது தான் மகளை கையில் வாங்கியது போல உள்ளது அதற்குள் இத்தனை வருடங்கள் ஓடிவிட்டதா? என் மகள் பெரிய பெண்ணாகிவிட்டாளா? என்று வியப்பு ஜனித்தது.

ஜானுவின் கலங்கிய கண்களை கண்ட கனி, “ப்ச் ஜானு நல்ல விஷயம் நடக்கும் போது எதுக்கு கண்கலங்கிட்டு இருக்க” என்று அதட்டியவள், “என் தங்கம் பெரிய மனுஷியாகிடுச்சா?” என்று ஜீவியின் கன்னம் கிள்ளினாள்.
ஜீவியின் முகத்தில் சின்னதாய் வெட்க புன்னகை பூத்தது.

ஜானு விழிகளை துடைத்து கொண்டு மகளது பையை எடுக்க, கனி, “நான் போய் அனி அன்ட் தேஜ்ஜையும் அழைச்சிட்டு வர்றேன். மணி மூனாக போகுதே. எப்படியும் ஒன் ஹவர்ல விட்டுடுவாங்க தான” என்க,

“ஹ்ம்ம் நானும் பாப்பாவும் பார்க்கிங் போறோம் நீ பசங்களை அழைச்சிட்டு வா” என்று ஜானு கூறினாள்.

கனி அகன்றதும் மகளது கைப்பிடித்து அழைத்து சென்றவளுக்கு ஜீவாவின் நினைவு. தங்கள் வாழ்வு மட்டும் நன்றாக இருந்திருந்தால் இந்த விடயத்தை கேட்டு எவ்வளவு மகிழ்ந்திருப்பான் என்று எண்ணம் ஜனிக்க ஜீவாவின் சிரித்த வதனம் மனக்கண்ணில் நழுவியது.

மகளை எப்படி கொண்டாடி இருப்பான் எத்தனை பேரை அழைத்து விழா நடத்தியிருப்பான் என்று அலையலையாக எண்ணம் வந்து மோதியது.

“போகலாம் டி” என்ற கனியின் குரலில் நடப்புக்கு வந்தவள் மகளோடு வீட்டை நோக்கி சென்றாள்.

இவர்கள் வந்ததுமே, “ஜானு ரொம்ப நல்ல விஷயம் நடந்திருக்கும்மா” என்று கனியின் தாய் புன்னகையுடன் வர,

“பாப்பா முகம் ஒரு வாராமா பளபளன்னு இருக்கும் போதே நான் நினைச்சேன்” என்றபடி வந்தார் மங்களம் பாட்டி.

“கனி சொன்னா நீ எதுக்கு பயப்பட்ற அதான் இத்தனை பேரு இருக்கோமே நாங்க பாத்துக்க மாட்டோமா ஜானு” என்று உரிமையாக கடிந்த கனியின் தாய் கோகிலா, “ முதல் பிள்ளையை உள்ளே அழைச்சிட்டு போவோம்” என்று ஜானுவின் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

மங்களம், “ஜானு முதல்ல பாப்பாக்கு மஞ்சள் தேய்ச்சு தலைக்கு ஊத்திவிடு” என்று பெரியவராக கூற,

“சரிங்க பாட்டி” என்றவள் இது வரை போடாமல் வைத்திருந்த பட்டுப்பாவாடை ஒன்றை எடுத்து குளிக்க அழைத்து செல்ல கனியும் உதவிக்கு சேர்ந்து கொண்டாள்.

இருவரும் ஜீவியை குளிக்க வைத்து அழைத்து வர, “வந்துட்டிங்களா சூடா உளுந்தங்களி கிண்டி எடுத்து வந்திருக்கேன். இந்த சமயத்துல சாப்பிட்டா உடம்புக்கு நல்லது” என்று வந்தார் கோகிலா‌.

ஜீவி, “களியா எனக்கு பிடிக்காது” என்று முகத்தை கோணலாக்க, “அப்படிலாம் சொல்ல கூடாது ஜீவி. பாட்டி கொடுக்குறதை சாப்பிடணும்” என்று ஜானு அதட்டினாள்.

மங்களம் உலக்கை எடுத்து வந்து வைத்தவர், “இதை தாண்டி மூனு நாளைக்கு வர கூடாது நீ” என்று கூற, “நான் நாளைக்கு விளையாட போக முடியாதா?” என்று அதிர்ந்தாள் ஜீவி‌‌.

“மூனு நாளைக்கு தான் தங்கம்” என்று கனி சமாதானம் செய்தாள்.

“ஜானு உன்னோட நகை எல்லாம் எங்க?” என்று கோகிலா கேட்க, “உள்ளைதான்மா இருக்கு” என்று ஜானு பதில் அளித்தாள்.

“அதெல்லாம் எடுத்துட்டு வா. வயசுக்கு வந்த பிள்ளை பொட்டு தங்கம் கூட இல்லாம இருக்ககூடாது” என்றிட,

“சரிங்கம்மா” என்றவள் தன்னுடைய நகைகளை எடுத்து வந்து மகளுக்கு அணிவித்தாள்.
தான் வயதிற்கு வந்த போது மகிழ்ந்து கொண்டாடிய பெற்றோரின் நினைவில் விழிகள் கலங்கின.

அதற்கு ஏற்றது போல, “நீ வயசுக்கு வந்தப்பவும் நான் தான் எல்லாத்தையும் உன் பாட்டி கூட எடுத்து செஞ்சேன். அப்போ உன் அம்மா அப்பா முகத்துல எவ்ளோ சந்தோஷம் பாத்தேன் தெரியுமா. கடவுள் அவங்களை சீக்கிரம் கூப்ட்டிருக்க வேணாம்” என்று மங்களம் பாட்டி வருந்த, ஜானுவும் விழிகளை துடைத்தாள்.

“விஷேச வீட்ல கண்ணு கலங்க கூடாது. அப்பா அம்மா எங்க இருந்தாலும் உங்களை ஆசிர்வாதம் பண்ணுவாங்க” என்று கோகிலா தான் சமாதானம் செய்தார்.

நாட்காட்டியில் நல்ல நாள் பார்த்த மங்களம், “நாளைக்கு அடுத்த நாள் நல்லா இருக்கு அன்னைக்கே தண்ணீ ஊத்திடலாம்” என்றவர், “பெருசா விஷேசம் வைக்க போறீயா?” என்று வினவினார்.

“இல்லை பாட்டி சிம்பிளா செஞ்சிடலாம்” என்று ஜானு கூற,

“அதுவும் சரிதான். அப்போ சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லிடு” என்று முடிக்க,

“நான் பெருசா யாருக்கு சொல்ல போறேன்.‌ எனக்கு உறவுன்னு இருக்கது நீங்க தான. நரேன் அண்ணாக்கு மட்டும் தான் சொல்லணும். அவர் தான் மாமா முறைக்கு நிக்க போறாரு” என்று ஜானு இயம்பினாள்.

“சரி அப்போ வீட்லயே பண்ணிக்கலாம். நான் சொல்ற பொருள் எல்லாம் லிஸ்ட் போடு” என்று மங்களம் கூற, ஜானுவும் வேலைகளை கவனிக்க துவங்கினாள்.

தனக்கு பொறுப்புகள் கூடிவிட்டதை உணர்ந்தவள் இனி கூடுதலாக மகளை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று எண்ணி கொண்டாள்.

என்னென்ன வேண்டும் எப்படி செய்ய வெண்டும் என எல்லாவற்றையும் பெரியவர்கள் சொல்படி கேட்டு கொண்டாள்.
எல்லாவற்றையும் கூறிவிட்டு மற்றவர்கள் அகல கனியும் பிறகு வருவதாக கூறி சென்றாள்.

ஜீவியும் ஜானுவும் மட்டும் இருந்தனர். திடீரென மகள் உயரம் கூடிவிட்டது போல தோற்றம். மஞ்சள் பூசி பட்டு பாவாடை சட்டையில் அவ்வளவு அழகாய் இருந்தாள் ஜீவிதா.

“அழகா இருக்க ஜீவி” என்று மகளை அணைத்து கொண்டவளுக்கு ஜீவாவின் நினைவு.

அவனுக்கு அழைத்து கூறலாமா? என்று எண்ணம் பிறக்க அதை அடியோடு விரட்டினாள். தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு தான் இன்று வரை அவன் தன்னை தேடி வரவில்லை.

தான் அழைக்க போய் அவனது நல் வாழ்வில் ஏதேனும் இடையூறு வந்துவிட போகிறது. இத்தனை நாட்கள் தான் தானே பார்த்து கொண்டேன். இனியும் நானே பார்த்து கொள்வேன் என்று முடிவெடுத்தவள் நரேனுக்கு அழைத்தாள்.

அழைப்பு முடிவடையும் நேரத்தில் ஏற்றவன், “சொல்லும்மா ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டியா?” என்று வினவ, “ஹ்ம்ம் வந்துட்டேன் ண்ணா” என்று பதில் அளித்தாள்‌.

“பாப்பா என்ன பண்றா?” என்று நரேன் வினா தொடுக்க, “பக்கத்துல தான் இருக்கேன்” என்றவள், “வீட்லயாண்ணா இருக்கீங்க?” என்று கேட்டாள்.

“ஆமா ஜானு இப்போதான் வந்தேன் ஏன் கேக்குற?” என்று பதில் வினா தொடுத்தான்.

“ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்ணா அண்ணியை கூப்பிட்டு ஸ்பீக்கர்ல போட்றீங்களா?” என்று வினவ,

“என்னடா எதுவும் பிரச்சனையா?” என்று நரேன் புருவம் நெறித்தான்.

“நல்ல விஷயம் தான் அண்ணியை கூப்பிடுங்க” என்றதும், “சொல்லு ஜானு என்ன விஷயம்?” என்று தீபாவும் வந்து சேர்ந்தாள்.

“அண்ணா அண்ணி ஜீவி ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டா” என்று கூறியதும், “என்ன?” என்று இருவரிடத்திலும் ஏக மகிழ்ச்சி.

“என்ன சொல்ற ஜானு எப்போ?” என்று தீபா ஆர்ப்பரிக்க, “கொஞ்சம் முன்னதான் ண்ணி ஸ்கூல்ல இருந்து கூப்பிட்டு சொன்னாங்க” என்று ஜானு பதில் அளித்தாள்.

“ரொம்ப நல்ல விஷயம் சொல்லி இருக்க ஜானு” என்று நரேன் மகிழ, “இப்போதான் அவளை கையில வாங்குன மாதிரி இருக்கு அதுக்குள்ள பெரிய மனிசியாகிட்டா நாள் வேகமா ஓடுது ஜானு” என்று தீபா கூற,
“ஆமாண்ணி” என்று ஜானு ஆமோதித்தாள்.

“சரி எப்போ தண்ணீ ஊத்துற பங்ஷனுக்கு என்ன பிளான்?” என்று தீபா கேட்க,

“வீட்ல சிம்பிளா வைக்கிற பிளான் தான் ண்ணி. நீங்களும் அண்ணனும் வந்து தான் மாமா அத்தை முறை செய்யணும்” என்று ஜானு அழைக்க,

“கண்டிப்பா என் தங்கச்சிக்கு நான் செய்யாம வேற யாரு செய்வா” என்று நரேன் உரிமையாக கூறினான்.

“உனக்கு நாத்தனாரா நான் தான் எல்லா முறையும் செய்வேன்” என்று தீபா இயம்ப, “நேர்ல வந்து சொல்ல முடியலை என்னால பாப்பாவ தனியா விட்டுட்டு வர முடியாது” என்று வருந்தினாள்.

“ஏய் லூசு நமக்குள்ள எதுக்கு பார்மாலிட்டி நீ ஒரு கால் பண்ணா போதும் நாங்க ஓடி வந்திடுவோம்” என்று தீபா கூற, அவர்களது அன்பில் இவளுக்கு மனது நிறைந்தது.

“சரிங்கண்ணி நாளைக்கே வந்திடுங்க” என்று மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

இங்கு ஜானு அழைப்பை துண்டித்த அடுத்த கணம் நரேன் ஜீவாவிற்கு அழைத்துவிட்டான்.

அலைபேசியில் ஜீவி பரிசு வாங்கிய புகைப்படத்தை அன்றைய தினத்தில் நூறாவது முறையாக பார்த்து கொண்டிருந்தான் ஜீவா.

பார்க்க பார்க்க தெவிட்டவில்லை மகள் அவ்வளவு அழகாக இருந்தாள். அதுவும் அந்த புன்னகை அப்படியே ஜானுவை நினைவுபடுத்தியது.

இந்த புகைப்படத்தை நரேன் தான் நேற்றைய தினம் ஜீவாவுக்கு அனுப்பி இருந்தான். ஜானு தன்னை தேடி வராதே என்று கூறிய பிறகு அவளது வார்த்தையை மீற முயலவில்லை.

இருப்பினும் அவளை எண்ணி தவிக்கும் மனதினை ஆற்றுப்படுத்த நரேனிடம் அவ்வப்போது இருவரது நலத்தையும் விசாரிப்பான்.

நரேனுக்கும் நண்பனது நிலை புரிந்தது. நடந்த எந்த தவறும் அவன் மனதறிந்து செய்யவில்லை இருப்பினும் வாழ்நாள் முழுவதும் குற்றவுணர்ச்சியை சுமந்து அலைகிறான் என்று உணர்ந்து தானே அழைத்து அவர்களை பற்றி அவ்வபோது கூறுவான்.

ஜானுவிடமிருந்து வரும் புகைப்படங்களை நண்பனுக்கு அனுப்பி வைப்பான். மகளின் அழகை ரசித்து கொண்டிருந்தவனை நரேனது அழைப்பு கலைத்தது.

ஜீவா அழைப்பை ஏற்க, “எப்படி இருக்கடா?” என்று நரேன் துவங்க, “ஹ்ம்ம் இருக்கேன் டா. வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க” என்று ஜீவா பதில் வினவினான்.

“ஹ்ம்ம் எல்லாரும் நல்லா இருக்கோம். அப்புறம் நான் அனுப்புன போட்டோ பாத்தீயா?” என்று நரேன் கேட்க,

“ஹ்ம்ம் பாத்தேன். அழகா பொம்மை மாதிரி இருக்காடா என் பொண்ணு” என்று மகளை பற்றி பேசுகையில் குரலில் அவ்வளவு மென்மை.

மகள் மீது கொண்டிருந்த பாசத்தை அந்த குரலில் மென்மையில் உணர்ந்த நரேனுக்கு ஜீவாவின் மீது இரக்கம் சுரந்தது. இவனுக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும் என்று.

எல்லாம் சரியாக இருந்தால் இந்நேரம் இருவரும் எவ்வளவு மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருப்பார்கள்‌. இனியாவது இவர்களது வாழ்வு சிறக்க வேண்டும் என்று எண்ணியவன்,

“உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லதான் கால் பண்ணேன்” என்று நரேன் கூற,

“என்ன?” என்று வினவியவனுக்கு மகளையும் மனையாளையும் பற்றி அறிந்து கொள்ளும் அவா.

“உன்னோட பொண்ணு ஜீவிதா பெரிய பொண்ணாகிட்டா” என்று நரேன் கூறியதும்,

“நரேன்…” என்றவனுக்
கு வார்த்தை வரவில்லை. தொண்டைக்குழியில் ஏதோ சிக்கி கொண்டது. சடுதியில் மகளது புன்னகைத்த முகம் வந்து போக விழிகள் கலங்கியது. சடுதியில் கையில் இருந்த அலைபேசி நழுவியிருந்தது…






 
Active member
Messages
180
Reaction score
115
Points
43
Wow really excellent sister.. Such a wonderful writing..
 
Top