• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 35(இறுதி அத்தியாயம்)

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் - 35

அன்று திரிலோகேஷ் அனைவரையும் அந்த புது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். சுற்றி பெரிய அளவில் இல்லையென்றாலும் சிறிதாக செடிகள் வளர்த்து தோட்டம் போல் அமைத்திருந்தனர்.

அதன் அழகிலே லயித்தவள் வாயிலிலே தேங்கி விட அவளுடன் அவனும் நின்று விட்டான். இந்துமதி பேத்தியுடன் உள்ளே சென்று விட்டார்.


"எப்படி இருக்கு மீனு?" என்றவன் அவளை நெருங்கி நிற்க, "சூப்பர், எப்படி ஆல்ரெடி இருந்துச்சா இல்லை நீங்க ஏற்பாடு பண்ணீங்களா?" என்றபடி அமர்ந்து அதிலிருந்த பூக்களை ஆராய்ச்சி செய்ய, "நான் தான் பண்னேன். அக்ரிமெண்ட் போட்டு தான் கட்ட ஆரம்பிச்சாங்க. அப்பவே இதையெல்லாம் நட்டு வளர்க்க ஏற்பாடு பண்ணிட்டேன்" என்பவனையே காதலோடு பார்த்திருந்தாள். அவளுக்கு செடிகளை பராமரிப்பதில் ஆர்வம் அதிகம். அவர்களின் வீட்டில் பெரிய அளவில் தோட்டம் வைத்திருந்தனர் என்பதை அவர்கள் காதலித்த காலத்திலே அவன் அறிந்திருந்தான்.

காதலின் வெளிப்பாடு என்பது இவ்வாறு சிறு விஷயங்களே! அதிகபட்ச பெண்களின் எதிர்பார்ப்பும் இதுவே. தன்னை உணர்ந்து தன் உணர்வுகளுக்கு மதிப்பளித்திடும் வழித்துணையே!

திரிலோகோஷ் இன்னும் இன்னும் அவளை ஈர்த்து நின்றான். அப்படியே நின்றவளை, "ம்மா.." என்ற மேகாவின் குரல் கலைத்து.

"என்னடா?" என்றபடி அவன் மகளை கைகளில் அள்ளிக் கொள்ள, "பாட்டி கூப்பிட்டாங்க" என்றாள். இருவரும் உள்ளே நுழைய, "நல்ல நேரம் முடியுறதுக்குள்ள பாலை காய்ச்சிடலாம் மீனு, ரெடி பண்ணீட்டேன். நீ வாம்மா" என்றழைக்க, "நீங்களே பண்ணுங்கம்மா" என்றாள் கணவனை பார்த்தப்படி.


"இல்லை டா" வேண்டாம் என்று இழுக்க அவரின் எண்ணம் புரிந்தவன், "ஆன்ட்டி, இந்த பார்மலிட்டிஸ் எல்லாம் வேண்டாம். நாங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க நீங்க. பண்ணுங்க" என்று கூற அவரின் கண்களும் லேசாக கலங்கி தான் போனது அவனின் வார்த்தைகளில்.

கணவனை இழந்தாலே அவள் எந்த நல்லா காரியங்களுக்கும் முன் நிற்க கூடாதென்று வரையறுத்து விட்ட சமுதாயம். பெண்கள் பிறக்கும் பொழுது பூவுடனும் பொட்டுடனும் கணவனுடனும் பிறப்பதில்லை என்றாலும் இடையில் வந்து செல்வதகாக பெண்களை ஒதுக்கி வைத்தே பழகிய சமுகத்தின் வெளிப்பாடு தான் இந்த தாயின் தயக்கம். மனைவியை இழந்த எந்த ஆணும் ஒதுக்கி வைக்கப்படுவதில்லையே! ஆனால் பெண்கள்?? எந்த வரையறையும் யாரையும் புணபடுத்தாத வரை ஏற்புடையதே!

சம்மதமாக தலையசைத்தபடி அவர் பேத்தியுடன் பேசியபடி உள்ளே செல்ல அவனை நெருங்கி நின்ற மீனு அணைத்துக் கொண்டாள். முகத்தை நிமிர்த்தியவன், "என்னடா?" என்று வாஞ்சனையுடன் கேட்க முற்றிலும் அவனுள் புதைந்திடும் எண்ணம். தம்மை காயப்படுத்தியும் எதிரிலிருப்பவரையும் அரவணைத்துச் செல்லும் குணம் என்பது எல்லாருக்கும் வாய்த்து விடாதே!

எட்டி அவனது கன்னத்தில் இதழ் பதித்தவள், "லவ் யூ லோகேஷ்" என்றிட அவளது விழிகளில் தெரிந்த காதல் தன்னில் தொலைந்திடும் படி அவனுக்கு ஆணையிட்டுக் கொண்டிருந்தது. நெற்றி முட்டி சிரித்தவன், "வா போகலாம், ஆன்ட்டி வெயிட் பண்ணுவாங்க" என்று மனைவியை அழைத்துச் சென்றான்.

விளக்கேற்றி இறைவனை வழிபட்டு சிறப்பான முறையில் பாலை காய்ச்சினார்கள். வீட்டில் பொருட்களன்றி இருப்பதால் பேசச்சுகள் எதிரொலித்துக் கொண்டிருந்தது. மேகா சத்தமாக புன்னகைத்தபடி படிகளில் ஏறி இறங்கி விளையாட அவளின் சிரிப்பொலியின் எதிரொப்பில் வீடே நிறைந்திருந்தது. "ஹேய், பார்த்து" என்று மீனலோஷினி அவளின் அருகிலே பாதுகாப்பாய் நின்றபடி இருக்க, "ம்மா... சூப்பரா இருக்கு. நீங்களும் வாங்க" என்று அவளையும் உடன் அழைத்திருந்தாள் அந்த பிஞ்சு. இருவரின் உரையாடல்களை பார்த்து இரசித்த புன்னகைத்தபடி லோகோஷூம் இந்துமதியும் சற்று தள்ளி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நிறைவு என்பது நம்மிடம் இருக்கும் பணமோ செல்வத்தின் அளவோ பொருத்ததன்று! நம் வாழும் வாழ்க்கையில் தான் நிர்ணயமாகிறது.


எதுவுமின்றி நிறைவுடன் இருப்பவர்களும் உண்டு எல்லாமுடன் இருந்தும் மனக்குறையுடனே வாழ்பவர்களும் உண்டு. இரண்டு நாட்களில் பொருட்களுடன் அவர்களும் புது வீட்டில் குடியேறி விட்டனர். மீனுவும் மேகாவும் பள்ளிக்கு செல்ல லோகேஷ் அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டான். பிரச்சனைகளின்றி யாரின் வாழ்வு நகராதே! அதை சரி செய்து ஓடிக் கொண்டிருப்பது தானே வாழ்க்கை. அவ்வ பொழுது ஊடல் எழுந்தாலும் யாராவது ஒருவர் இறங்கிச் சென்று தீர்க்க முற்பட்டனர்.

ஆறு மாதத்தில் மீனலோஷினி கர்ப்பமாகி விட வீடே மகிழ்ச்சியால் நிறைந்து விட்டது. இந்துமதி செல்விக்கு அழைத்து விஷயத்தை கூற அவர்களும் வந்து பார்த்துச் சென்றனர். திரிலோகேஷ் தான் மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் சுற்றிக் கொண்டிருந்தான். மீனு வேலையை விட்டு வீட்டிலே இருந்து கொண்டாள். இரட்டை பிள்ளைகள் என்பதால் ஐந்து மாதங்களிலே அவளுக்கு வயிறு நிறை மாதத்தை போல் பெரிதாகி விட்டது.


மேகா தான் அவளருகில் அமர்ந்து கொண்டு, "ம்மா... உங்க வயிறு ஏன் பெரிசாகிடுச்சு" என்பாள். மீனு புன்னகையுடன், "உன் கூட விளையாட பாப்பா வரப் போறாங்க. நீ தான யாருமே இல்லைனு ரொம்ப வருத்தப்பட்ட" என்று கன்னத்தை கிள்ளி கொஞ்சியபடி கூற வேகமாக திரிலோகேஷ் மடியில் இருந்து இறங்கி அவள் அருகில் சென்றவள் வயிற்றில் கை வைத்து பேசிடுவாள் பின்பு தந்தையிடம் திரும்பி, "ப்பா... பாப்பா பேசுவே மாட்டுறாங்க" என்று முறையிடுவாள். அவளின் செயல்களால் அவர்களுமே எல்லாவற்றையும் மறந்து குழந்தை தனத்திலும் பேசச்சிலும் லயித்து போய் விடுவார்கள்.

திரிலோகேஷ் அதிக நேரம் அவளுடனே செலவிட்டான். "ஆன்ட்டி முடியாதவங்க. அவங்க மேகாவை பார்க்கிறதே சிரமம் அதனால நான் உன்னை பார்த்துக்கிறேன்" என்றபடி அவளுடனே இருந்து தேவைகள் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்திட்டான்.

பிரசவ காலத்தில் செல்வியும் அவர்களுடன் வந்து தங்கிக் கொள்ள இந்துமதியும் திரிலோகேஷூம் மீனுவுடன் மருத்துவமனையில் இருந்தனர். இரட்டை பிள்ளைகள் என்பதால் சுகப்பிரசவம் சற்று சிரமம் என்று மருத்துவர் கூறிய நிலையிலும் அவளை அதிகமாக வருத்தாது சுகப்பிரசவத்திலே பிறந்து விட்டனர் அவனது மகன்கள் இருவரும். மீனுவின் கதறலைக் கண்டு அவனும் துடித்து விட்டான். அவனது நிலையைக் கண்டு இந்துமதி தான் தேற்றி கொண்டிருந்தார். அவரும் அவனும் தான் ஆளுக்கொரு குழந்தையாக கையில் வாங்கினார்கள். அவ்வளவு பூரிப்பு இருவருக்குமே. திரிலோகேஷிற்கு கண் முன் ஒரு நிமிடம் ஷாம்லியும் மேகாவும் வந்து சென்றனர். வந்தவுடனே, "டாக்டர், மீனு எப்படி இருக்கா?" என்று தவிப்புடன் நின்றான்.


"ஷி இஸ் ஆல்ரைட்" என்ற பின்பே இவ்வளவு நேரம் தேக்கி வைத்திருந்த மூச்சு சீரானது. ஒரு முறை நடந்த இழப்பே அவனை அதிகளவில் தாக்கி இருந்தது. குழந்தை வேணாம் என்று அவளுடன் மல்லுக்கு நின்றவனை சமாதானம் செய்வதற்குள் அவள் தான் பெரும்பாடு பட்டு போனாள். அவளது உறுதியிலே இப்பொழுது இருவரது கைகளில் தவழ்ந்திருக்கும் இரண்டு ரோஜாக்கள். இரட்டை பிள்ளை என்றால் பிரசவம் சிரமம் என்று மருத்துவரை ஒரு வழி செய்திருந்தான். அவனது அக்கறையிலும் அன்பிலும் மீனு கரைந்து உருகி தான் நின்றாள்.


சிறிது நேரத்தில் செல்வியும் குமாரும் மேகாவுடன் வந்து விட்டனர். மீனுவை நார்மல் வார்டுக்கு மாற்றி விட அனைவரும் அங்கு தான் இருந்தனர். திரிலோகஷின் இறுகிய முகம் கண்டு அவன் நிலையை உணர்ந்த மீனு அவனது கையை இறுக பற்றிக் கொண்டாள். அவன் பயத்திலிருந்து தெளியவே சற்று நேரம் பிடித்தது. மேகாவோ இரண்டு தொட்டிலின் கம்பிகளையும் இறுக பற்றியபடி அங்கிருந்து நகரவே இல்லை. அவளது செயலில் அனைவரும் புன்னகைத்து தான் போனார்கள்.



இந்தமதியின் உடல்நிலை கருதி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு திரிலோகேஷூம் செல்வியும் அவளுடன் இருந்து கொண்டனர். மேகாவோ வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்று திரிலோகேஷ் கழுத்தை கட்டியபடி அடம்பிடிக்க வேறு வழியின்றி அவளை அங்கு விட்டுச் சென்றனர்.

இரண்டு நாட்களில் வீட்டிற்கு அழைத்து வர இந்துமதி ஆலம் சுற்றி வரவேற்றார். அவருள் பொங்கிய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான்கு நாட்கள் உடனிருந்த செல்வியும் குமாரும் கிளம்பி விட்டனர். மீனு இரண்டு குழந்தை என்பதால் சற்று திணறி தான் போனாள். இந்தமதியும் உதவி புரிவார் தான். ஆனால் அவரது உடல்நிலையை கருதி அவரை அதிகம் வேலை செய்திட விட மாட்டாள்.

மேகாவோ பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர மற்றபடி குழந்தைகளின் அருகில் தான் இருப்பாள். அவளுக்கு தன்னுடன் விளையாட இரண்டு தம்பிகள் வந்து விட்டார்களென்ற ஆனந்தம்.

காலிங்பெல் ஒலிக்க மீனு கதவை திறக்க திரிலோகேஷ் நின்று கொண்டிருந்தான். "வாங்க" என்றவள் சாப்பாட்டை எடுத்து வைக்க அறைக்குள் நுழைந்தவன் ப்ரெஷ்ஷாகி உடை மாற்றி வர மேகாவோ உறங்கும் குழந்தைகளின் அருகில் அமர்ந்து வீட்டுபாடம் செய்திருந்தாள்.


"இன்னும் தூங்கலையாம்மா" என்று மெதுவாக கேட்டபடி மகளின் அருகில் அமர, "இவ்வளவு நேரம் தம்பிங்க கூட விளையாடிட்டு இருந்தேன்ப்பா. அவங்க தூங்கவும் ஹோம்வொர்க் செய்றேன்" என்று கூறினாள் புன்னகையுடன். ஓரளவிற்கு மகள் வளர்ந்து விட்டதொரு உணர்வு அவனுள். அவளது தலையை வருடியபடி இருக்க அவனை தேடி மீனு வந்து விட்டாள்.


அவளுடன் சென்று உண்டு வருவதற்குள் மேகா அவர்களின் அருகில் படுத்து உறங்கி இருந்தாள்.
மீனு குழந்தைகளை தூக்கி தொட்டியில் படுக்க வைக்க திரிலோகேஷ் மேகாவை நேராக படுக்க வைத்தான். பிடிப்பற்ற இருவரது வாழ்வும் அந்த மூன்று பிஞ்சுகளால் இறுக பற்றி இழுத்துச் செல்லப்படுகிறது.



மேகாவின் அருகில் படுத்த மீனு உடனே உறங்கியும் விட்டாள். நாள் முழுவதும் குழந்தைகளுடனே முழித்திருப்பதால் அசதி அவளுக்கு அதிகம். அவனோ உறங்காது உறங்கும் மனைவியையும் குழந்தைகளையும் பார்த்தப்படி சிறிது நேரம் அமர்ந்திருந்தான்.


வாழ்க்கை எல்லா நேரத்திலும் இனிக்காது. அதீத துன்பம் தாக்கும் கணங்களில் கண்டிப்பாக இதை விட அதிக மகிழ்ச்சியை தருவதற்காக இறைவன் காத்திருக்கிறான். நமது பொறுமையும் நேர்மையும் சோதிப்பதற்கான ஒத்திகை தான் துன்பமே! எந்த இடத்திலும் எவ்வளவு துன்பம் வந்திட்டாலும் நமது சுயம் மாறாமல் வாழ்ந்திடுங்கள். உண்மைக்கும் பொறுமைக்கும் காலம் பல கடந்தாலும் என்றேனும் பலன் உண்டு.


குழந்தை லேசாக சிணுங்க மீனு முழித்து விட்டாள். அரை உறக்கத்தில் இருந்தவளை கண்டவன், "நீ தூங்குடா, நான் பார்த்துக்கிறேன்" என்று மனைவியை படுக்க வைத்து குழந்தை தொட்டிலை ஆட்ட அவளோ அவனை புன்னகையுடன் பார்த்தப்படி விழிகளை மூடிக் கொண்டாள்.

மாற்றம் ஒன்றே மாறாதது. நிரந்தரமற்ற உலகில் கோபம், அழுகை,பொறாமை, இன்பம், துன்பம் ஏன் மனிதனுமே கானல் நீரே! ஓடிக் கொண்டே

இரு இறைவன் உனக்கு நிர்ணயித்த இலக்கில் கரைந்திடும் நொடி வரை.



முற்றும்.
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Lovely story three roses 🌹🌹🌹 cute 🥰🥰🥰
 
Top