• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 26

Messages
47
Reaction score
2
Points
8
*சொல்லாமல்....!*

*மௌனம் 26*

*சில வருடங்களுக்கு முன்...*

எத்தனை தேடியும் தர்ஷினியின் விழிகளுக்கு ஆடவன் சிக்காதிருக்க உள்ளுக்குள் ஏதோ சோர்வு அவளறியாமல்.

தோழியின் முகத்தில் வந்து உணர்வுபாவங்கள் ஆர்த்திக்கும் கொஞ்சம் வினோதமாய் இருந்தது.
"என்ன இவ இப்டிலாம் ரியாக்ட் பண்றா..?" கேட்க நா எழுந்தாலும் அப்படியே அடக்கிக் கொண்டாள்,கேள்வியை.

இனிதே நிகழ்வு நிறைவுறும் போது நேரம் ஆறு மணியைக் கடந்திருக்க தர்ஷினிக்கு எப்படியாவது ஆடவனைக் கண்டு விட்டு செல்ல வேண்டும் என்கின்ற எண்ணம் மனதில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்க அதை எப்படி தோழியரிடம் சொல்வது என்பது தீவிர சிந்தனையாய்.

கார்த்திகா இன்னொரு தோழியுடன் முன்னே நடந்திருக்க ஆர்த்தியுடன் அந்த மண்டபத்தை விட்டு வெளியேறியவளுக்கு ஒரு கூட்டத்தின் மத்தியில் நின்று கதைத்துக் கொண்டிருந்த ஆடவனைக் கண்டதும் அவனை சந்தித்து விடலாம் என்றிருந்த எண்ணத்தில் பெரும் சந்தேகம்.

ஒரு கணம் பக்கவாட்டாய் திரும்பி அவன் உருவத்தை பார்த்தவாறு வெளியேற அவளின் விழி உரசலை கண்டும் காணாது இருந்தவனின் விழிகளில் வந்து போனது,சிறு மின்னலொன்று.

"தர்ஷினி..சீனியர் அக்காங்க இருக்காங்க..வா பேசிட்டு போலாம்.." மண்டபத்தின் வெளியே நின்று கதைத்துக் கொண்டிருந்த பெண் மாணவியரைக் காட்ட அவளும் மறுக்கவில்லை.

அவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த போது உள்ளிருந்த ஆண்கள் கூட்டம் வெளியேறுவது புரிய தன்னைக் கேளாமலே தேவாவின் விம்பத்தை ஸ்பரிசித்து விட்டு மீண்டது அவள் விழிகள்,ஒரு முறை.

அரைமணி நேரம் கடந்திருக்கும்.
சம்பாஷணை முடிந்து நுழைவாயிலை நோக்கி நடக்கும் போது யாரோ தன்னை அழைப்பது கேட்க பக்கமாய் பார்த்தவளின் விழிகளில் சிறு அதிர்வு.

வழமையாய் தான் இருக்கும் மரத்தடியில் இரு தோழர்கள் உடனிருக்க தேவா தான் அழைத்திருந்தான்,
தன் கணீர்க்குரலால்.

கொஞ்சம் யோசித்தாலும் பாதங்கள் அவனை நோக்கி நீள பின் தொடர்ந்த ஆர்த்தியின் இதழ்களில் நமட்டுச் சிரிப்பு.

இருள் தான் என்றாலும் ஆங்காங்கே ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகளின் ஒளிக் கீற்றுக்களின் வரவினால் மெல்லிய வெளிச்சம் அவ்விடத்தில்.

"என்ன சீனியர் சார்..?" அவனிடம் கேட்க நினைத்த கேள்விகளை மறைத்து இயல்பாய் கேட்டவளின் செயலில் அவனிதழ்களில் மெச்சும் புன்னகையொன்று.

"உனக்கு தர வேண்டியது ஒன்னு இருக்கு.." அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னவனின் கரங்களோ தான் அமர்ந்திருந்த கட்டில் தன்னருகே வைத்திருந்த அந்த கடதாசிப் பையை தட்டியது.

அவள் புரியாது பார்த்திருக்க கிஷோருக்கு தான் இருப்புக் கொள்ளவில்லை.

"பால்ஸ்..என்னடா இவன் கிப்ட் எல்லாம் வச்சிருக்கான்..?"தோழனின் காதில் கிசுகிசுக்க அவனும் உதடு பிதுக்கினான்,
"தெரியாது.." என்பதாய்.

ஆர்த்தியின் விழிகளோ ஆடவனை அதிர்வுடன் நோக்கிட ஒற்றைப் புருவம் ஏற்றி இறக்கிய ஆடவனின் செய்கையின் சட்டென மாறியது அவளின் விழிமொழி.

அவனோ அதை எடுத்து நீட்டும் முன்பே அவனை விழி நிமிர்த்த வைத்திருந்தது,அவளின் அழைப்பு.

"சீனியர் சார்.."

"ம்ம்ம்ம்..என்ன தேவா..?"

"நா உங்ககிட்ட ஒரு கேள்வி கேக்கட்டுமா..?" அவனைப் பாராது தரையைப் பார்த்து கேட்டவளுக்கு சடுதியான தன் மன தைரியத்துக்கு காரணம் தெரியவில்லை.

"ம்ம்.." என்றவனின் விரல்கள் தாடையை தடவி மீண்டது.

"அந்த வெப் சீரிஸ் ல நீங்க தான நடிச்சீங்க..? இதுவா உங்க பர்ஸ்ட் வெப் சீரிஸ்..?எதுக்கு உங்க பேரே வச்சீங்க..? அடுத்து கண்ணுக்கு எதுக்கு லென்ஸ் போட்டு நடிச்சீங்க..?
யாரு டைரக்ட் பண்றா..? இதுக்கப்றமும் வெப் சீரிஸ் நடிப்பீங்களா..? உங்களுக்கு சினிமால ஹீரோ ஆகுறதா லட்சியம்..?
நீங்க நல்லா பாடுறீங்க தான..அப்போ பாடவும் செய்வீங்களா..?" யோசித்து வைத்திருந்த கேள்விகளை மூச்சு விடாமல் ஒப்புவித்தவளை இமை கொட்டாது அவன் பார்த்திருக்க கேள்விகளை எண்ணிக் கொண்ட விரல்களை கண்டதும் தன்னையறியாமலேவிரிந்து விட்டிருந்தன,
அவனிதழ்கள்.

கேள்வி மொத்தத்தையும் கேட்டு முடித்து தலையை நிமிர்த்தாது விழி உயர்த்தி அவள் பார்த்த பார்வையில் ஒரு கணம் தடுமாறித் தான் போனது,
அவன் இதயமும்.

சட்டென தன்னை மீட்டுக் கொண்டாலும் ஒரு நொடி அவன் விழிகள் வெளிப்படுத்திய பாவனையை கண்டிருந்தால் அவளுக்கும் தன் மீது ஆடவனுக்கு காதல் இருக்கின்றது என்று சந்தேகமாவது துளிர்விட்டிருக்குமோ என்னவோ..?

"என்னடி இது..இவர் கிட்ட மட்டும் இப்டி சாதாரணமா பேசற..?"தோழியை நெருங்கி அவளின் காதோரம் ஆர்த்தி முணுமுணுக்க மெதுவாய் அவளின் கரத்தை கிள்ளி விட்டிருந்தாள்,
தர்ஷினி.

"ஓகே..ரைட்ட்ட்ட்..இதுக்கெல்லாம் பதில் சொல்லனும்ல.." பின்னங்கழுத்தை கோதிய படி கேட்டவனுக்கு பதிலாய் மேலும் கீழும் ஆடியது அவன் சிரசு.

"எங்கடா..அவ..ச்சேச்சே..அவங்க பேசுவாங்கன்னு பாத்துட்டு இருப்பான்..பேசுனதும் எப்டி ரியாக்ஷன் குடுக்குறானுன்னு பாரேன்..கெத்த விடாம லவ் பண்ணி நம்ம சாகடிக்கிறான்..
பய ரொம்ப தான் அழுத்தம்.."வழமை போல் பிதற்றிய கிஷோரின் வாய் பாலாவின் முறைப்பில் ஒட்டிக் கொண்டது.

"நா தான் நடிச்சேன்.."

"இது தான் என்னோட பர்ஸ்ட் வெப் சீரிஸ்.."

"எனக்கு என் பேரு புடிக்கும்..ஆனா பர்ஸ்டா கேட்டப்போ கேரக்டருக்கு என்னோட பேர் வேணான்னு தான் சொன்னேன்..அப்றம் சீரிஸ் பாதி முடிஞ்சப்றம் டப்பிங் ஸ்டார்ட் பண்றப்ப மாத்த சொல்லலாம்னு தான் இருந்தேன்..பட் அதுக்குள்ள அந்த பேரு ரொம்ப புடிச்சுப் போச்சு..ஸோ மாத்தல.." என்றவனின் இதழ்களுக்குள் அழகான புன்னகை ஓடியது.

"செல பேருக்கு நா தான் நடிச்சேன்னு லென்ஸ் போட்டப்றமும் டவுட் வந்துச்சு..லென்ஸ் போடலனா கன்பார்மே பண்ணி இருப்பாங்க..அதான்.." மொழிந்தவனின் விழிகளை அவளை ஆழமாய் ஊடுருவிற்று.

"டைரக்ட் பண்ணது என் ப்ரெண்ட் ப்ரித்வி.."

"இதுக்கப்றம் ஐடியா இல்ல..என்னோட கேரியர பாக்கனும்.."

"ச்சே..அதெல்லாம் இல்ல..சும்மா ஒரு எக்ஸ்பீரியன்ஸுக்கு பண்ணி பாத்தேன் அவ்ளோ தான்.."

"பாடுவேன் தான்..பட் அந்தளவு இல்ல..அந்த பீல்ட்ல இன்ட்ரஸ்ட் கெடயாது.." அச்சுப்பிசகாமல் நினைவில் வரிசைப்படி பதிலளிக்க சுற்றி இருந்தவர்கள் வாய் பிளக்காதது மட்டுமே குறை.

தர்ஷினிக்கே தான் கேட்ட கேள்விகள் வரிசைப்படி நினைவில்லாது இருக்க ஏனோ ஆடவனின் செயல் அவளை அத்தனை வியப்பில் ஆழ்த்தியது.

"கேள்வி எல்லாம் முடிஞ்சிருச்சா..இன்னும் இருக்கா..?"

"இ..இல்ல..சீனியர் சார்..இவ்ளோ தான்.."

"ஓகே ரைட்ட்ட்ட்.." என்றவாறு தன்னருகே இருந்த கடதாசிக் கவரை அவளை நோக்கி நீட்ட பேந்த பேந்த விழித்தாள்,அவள்.

"இந்தா வாங்கிக்க.." உணர்வுகள் மறைத்தவாறு சொன்னவனின் குரல் அழுத்தமாய் தான் இருந்தது,அவளுக்கு.

"ம்ஹும்.." கூறியவாறு மறுப்பாய் தலையசைத்து ஆர்த்தியை பார்க்க அவளுக்கும் தேவாவின் நடத்தையில் சிறு புதிர்.

"தேவா..வாங்கிக்கன்னு சொல்றேன்ல.." விழியால் மிரட்டியவனின் பேச்சை மறுக்கும் தைரியம் துளியேனும் இல்லை,அவளிடம்.

கை நீட்டி வாங்கியவளோ புரியாது அதை சுற்றிச் சுற்றி பார்க்க அங்கு அதில் இருப்பதை பார்க்க ஆர்வம் அதிகமாக இருந்தது, ஆடவனின் தோழர்களிடம் தான்.

"என்னடா..கிப்ட் கொடுத்து ப்ரபோஸ் பண்ணப் போறானோ..?"

"டேய் கிஷோர் எரும மாடே..ரகசியம் பேசறேன்னு காத கடிக்காத..அவனாவது கிப்ட் கொடுக்குறதாவது..தள்ளி நில்லு..அட்ட மாதிரி ஒட்டுகிட்டு.." முழங்கையால் பாலா குத்த முறைத்தவாறே விலகி நின்று கொண்டான்,கிஷோர்.
"தெறந்து பாரு.." அவன் கட்டளைக்கேற்ப ஆராய்ந்தவளுக்கு உள்ளே இருந்த தண்ணீர்ப் போத்தலைக் கண்டதும் புருவங்கள் சுருங்கிற்று.

யோசனையுடன் வெளியே எடுத்தவளின் கரங்களில் குடியிருந்ததை கண்டதும் இருமியே விட்டிருந்தனர்,
கிஷோரும் ஆர்த்தியும் ஒரு சேர.

"என்னடா இவன் வாட்டர் பாட்டில் வாங்கிக் கொடுக்குறான்..? என் வாழ்க்கைல இப்டி ஒரு கிப்ட் லவ்வருக்கு கொடுக்குறது நா கண்டதில்லடா சாமி.."

"அவனுக்கு அவன் லல்வர் படிக்கனும்..அதான் என்கரேஜ் பண்றான்..வேணுன்னா பாரு சான்ஸ் கெடச்சா இது மாதிரி தான் வாங்கி கொடுப்பான்.." சொன்ன பாலாவின் இதழ்களில் மெல்லிய புன்னகை.

ஏதேதோ கற்பனைகள் அந்த குறுகிய நேரத்தில் உருப்பெற்றிருக்க அது மொத்தமும் தவிடு பொடியாகியிருந்ததே,அவள் வெளியே எடுத்த கணம்.

"எதுக்கு..வாட்டர் பாட்டில்..?"

"அன்னிக்கு..கேன்டீன்ல யாதவ் இருக்குறப்போ எடுத்து அடிச்சது உன்னோட வாட்டர் பாட்டில் தான..அமுங்கிருச்சுல.அதான் இது.." அவன் சொல்லவே அன்று தான் தவறுதலாக தண்ணீர்ப்போத்தலை விட்டுச் சென்றதும் மீள எடுக்க வரும் போது "கில் யூ டேமிட்.." எனக் கத்திக் கொண்டு அவன் ஓங்கி மேசையில் அடித்ததும் நினைவில் வர அந்த விழிகளில் தெரிந்த ரௌத்திரம் இந்த நொடியும் அவளின் உடலில் சிறு அதிர்வை தந்து சென்றது.

"ஓ..ஓஹ்..அதுவா சீனியர் சார்..பரவால..இத நீங்களே வச்சிக்கோங்க.." அவள் மறுத்தவாறு அவனிடம் நீட்ட உறுத்து விழித்தன,
அவன் விழிகள்.

"தேவா..அத எடுத்துக்க..அவ்ளோ தான்.." குரலில் இல்லாத அதட்டல் அவன் விழிகளில் இருந்தது.
அத்துடன் சிறு கோபம் வேறு.

மனதில் எந்த வித உணர்வுகளும் இல்லாத திரிந்தவனுக்கு புதிதாய் உருவெடுத்திருந்த காதல் முற்றாய் மாற்றியிருக்க அதை வெளிப்படுத்தாமல் தனக்குள் வைத்துக் கொள்வது பெரும் சவாலாய்த் தான் இருந்தது,ஆடவனுக்கு.

அதிலும் அவனின் காதல் சற்று வித்தியாசமாய் இருக்க அவளைப் பார்ப்பதே அரிதாக நடக்கும்.
எங்காவது வெளியில் சென்றால் சில பொருட்களை கண்டிடும் போது அவளுக்கென வாங்கிட நினைத்தாலும் எந்த உரிமையில் அவளிடம் கையளிப்பது என்பதே பெரும் கேள்வியாய் மனதை நிறைக்க அந்த எண்ணமும் பட்டென மறைந்து விடும்.

அதிலும் தான் கொடுத்தால் தன் மீது அவளுக்கு சந்தேகம் வராது என்பதற்காக அவளுக்கென்று பார்த்து பார்த்து வாங்கியது.
அதை வாங்கும் போது தன் தலைவிதியை முதன் முதலாக நொந்து கொள்ளவும் மறக்கவில்லை,
ஆடவன்.

"அவ..அவன் லவ்வருக்கு என்னவெல்லாம் வாங்குவான்..நம்ம நெலம.." சத்தமாக முணுமுணுத்தது கடையில் இருந்த பையனின் செவிகளில் அவனின் அதிர்ந்த முகத்தை இவன் உறுத்து விழித்தது எல்லாம் வேறு கதை.

அப்படியெல்லாம் நடந்திருக்க இவள் மறுத்திடும் போது ஆடவன் ஏது செய்ய..?

"இல்ல சீனியர் சார்..வேணா.."

"வீட்ல தப்பா நெனச்சிப்பாங்களா.?"

"அப்டிலாம் இல்ல..சீனியர்..வீட்ல சொன்னா நம்புவாங்க..ஆனா இது வேணா சீனியர்.."

"ஒருத்தங்க தந்தா அத எடுத்துக்கனும்..திருப்பி எல்லாம் நீட்டக் கூடாது.." நொடியில் தன் முகத்தை மாற்றி அவன் சொல்ல அவன் முகத்தில் மின்னிய அப்பாவித் தனம் அவளை தலையாட்டச் செய்தது.

"தேவா.."

"சொல்லுங்க சீனியர்.."

"நல்லா படிக்கனும்...படிப்புல மட்டுமே கான்சன்ட்ரேட் பண்ணு..ஏதாவது ப்ராளம்னா ஆரவ் கிட்ட சொல்லு.."

"சரி சீனியர்.."

"எப்பவும் தைரியமா இருக்கனும் தேவா..ஏதாச்சும் ப்ராப்ளம் வந்தா தைரியமா பேஸ் பண்ணனும்..புரியுதா...?"

"சரி..சீனியர்.."

"சரி அப்போ கெளம்புங்க..இருட்டிருச்சு.." என்க சிறு புன்னகையுடன் மூவரிடமும் சொல்லிக் கொண்டு விடை பெற்றுக் கொண்டனர்,
பெண்கள் இருவரும்.

இருளில் அவள் உருவம் மறையும் வரை இமைக்காது அவளின் முதுகைத் தான் தொட்டு நின்று கொண்டிருந்தது,
அவன் பார்வை.

இத்தனை நேரம் முகத்தில் ஒட்டிக் கொண்டிருந்த அழுத்தம் தகர்ந்திட அப்படி ஒரு தளர்வு விழிகளில்.
சிறு புள்ளியாய் ஒரு வலி மனதுக்குள் புகுந்து வட்டமிட அதை தவிர்க்கும் வழி தெரியாது தவிப்பு அவனில்.

முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவனை கண்ட தோழர்களின் மனதிலும் சிறு பாரம்.
இப்படி ஒரு தேவாவை அவர்களும் கண்டதில்லை,
இத்தனை நாளில்.

"பீல் பண்றியா தேவா..?" கிஷோர் கேட்க மறுப்பாய் தலையசைத்தாலும் விழிகள் அதற்கு மாறான கதை சொல்லின.

"பேசாம லவ்வ சொல்லிர்ரேன்..தங்கச்சியோட பேசவாச்சும் முடியும்ல.." ஆற்றாமையுடன் பாலா சொல்ல முறைப்புடன் மறுத்தான்,ஆடவன்.

"அவங்க படிக்கட்டும்..படிச்சு ஒரு நல்ல எடத்துக்கு வரனும்..அவங்க சொந்தக் கால்ல நிக்கற மாதிரி..அது வர நா காத்துகிட்டு இருக்கத் தான் போறேன்..காதல்னு சொல்லி அவங்க மனச கலச்சி விட புடிக்கல.." எப்போதும் மொழியும் பதிலை சொல்லியிருந்தாலும் குரலில் சிறு வலி.

அப்படியே நாட்கள் நகர அன்று அவர்களின் இறுதித்தேர்வு.

தேர்வுகளை முடித்து விட்டவர்களுக்கு மகிழ்வு ஒரு புறம் என்றால் இனி தோழர்களை கண்டிட முடியாது என்பது பெரு வலியாய் அனைவர் மனதிலும்.

ஆங்காங்கே கூட்டமாய் நின்று கொண்டிருந்த அனைவர் முகத்திலும் வலியில் சாயல்.
சிலர் அழுது கொண்டிருக்க சிறு புன்னகையுடன் பார்த்தவாறு வழமையான தம் இடத்துக்கு வந்திட கவலை தோய்ந்த முகத்துடன் வந்து சேர்ந்தனர்,அவனின் தோழர்கள்.

பாலாவயும் கிஷோரையும் அணைத்து விடுவிடுத்தவனுக்குள்ளும் அத்தனை போராட்டங்கள்.
உடன் இருந்தவர்களை பிரிந்து செல்வது அத்தனை எளிதாய் இருக்கவில்லை.

அதிலும் நாளை அவன் வீட்டை காலி செய்து கொண்டு சென்னைக்கு செல்வதாய் இருக்க தோழர்களுக்கு மனம் ஆறவில்லை.

இங்கிருந்தாலாவது அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியும்.
ஆனால், இப்போது..?

அமைதியாய் மூவரும் அந்த மரத்தடியில் அமர்ந்திருக்க மௌனக்காற்று அந்த இடத்தை நிரப்பியிருந்தது.
நன்றாகவே உடைந்து போயிருந்தது கிஷோர் தான்.
அவனுக்கு கொஞ்சம் மென்மையான மனம்.

நேரமும் கடக்க ஆடவனுக்கு வேறு வேலைகளும் இருந்தது.
நாளை வீட்டைக் காலி செய்யவும் வேண்டுமே.

"டேய் கிஷோர் என்னடா இது..? சின்னப் புள்ள மாதிரி..எந்திரி..எப்டியும் நம்ம ப்ரெண்டஷிப் கன்ட்னியூ ஆகத் தான் போகுது..எதுக்குடா பீல் பண்ற..?"

"நீ என்னடா கல்லு மாதிரி இருப்ப..நா அப்டியா..வந்துட்டாரு மகாராஜா திட்ட..எங்கள மெரட்டிட்டு திரியுற தான...தங்கச்சி கிட்ட பம்மிட்டு தான் நிப்ப.." கோபத்தில் துவங்கி சாபத்தில் முடிக்க சிரித்து விட்டிருந்தான்,
ஆடவன்.

பாலாவுக்கும் அதே நிலை தான்.
அவர்களின் நட்பு தொடரந்திடத் தான் செய்கின்றது என்பது புரிந்தாலும் ஆடவனைப் போல் சூழ்நிலையக் கையாள அவனுக்கும் தெரியவில்லை.

மீண்டும் ஒரு தடவை கட்டியணைத்து விட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்திட்ட சமயம் அடித்துப் பெய்யத் துவங்கியது,
மழை.

கல்லூரி நுழைவாயிலுக்கு முன்னே இருக்கும் கடையின் முன்னே மூவரும் ஒதுங்கிக் கொள்ள ஆடவனின் விழிகள் அலைபாய்ந்தது.

இந்நேரம்,
தர்ஷினி வந்திருக்க வேண்டுமே..?

ஏனோ அவளைப் பார்த்திட வேண்டும் என்கின்ற எண்ணம் மழையின் வரவுடன் அவனுள் புகுந்து வியாபித்து நின்றது.

சரிவாய் விழுந்த சாரல் அவனின் முகத்தை நனைக்க அதை விரல்கள் கொண்டு வழித்த படி நின்றவனின் முகத்தில் வந்த உணர்வுகள் புரியாது போகுமா,தோழர்களுக்கு.

"தேவா..சிஸ்டர பாக்கனும் மாதிரி இருக்கா..?" தோழனின் கேள்விக்கு மறையாது பதில் சொன்னவனின் விழிகள் இன்னும் கல்லூரி நுழைவாயிலைத் துழாவிக் கொண்டு நின்றது.

"மச்சீ..போய் பாத்துட்டு வர்லாமா..?"

"ம்ஹும்..இன்னிக்கு ஈவ்னிங்க் லெக்சர்ஸ் இல்ல அவங்களுக்கு..சரியாயிருந்தா இந்நேரம் வந்திருக்கனுமே.." கைக்கடிகாரத்தை பார்த்த படி அவன் கூறிட விழிகளில் ஒரு தவிப்பு.

"ப்ராஜெக்ட் வர்க் ஏதாச்சும் இருக்குமோ..?இல்லன்னே வேறேதாச்சும் லெக்சர்ஸ் போட்டுட்டாங்களோ..?"

"ம்ம்..அதான்.." என்றவனுக்கு அவளைக் காணாது அந்த இடத்தை விட்டு நகர்ந்திடும் எண்ணம் இல்லை போலும்.

பத்து பதினைந்து நிமிடங்கள் கடந்திட அவளின் வகுப்பில் இருந்து யாரும் வராதிருக்க தோழன் கூறியது உண்மை என வாதிட்டது,
அவன் மனம்.

"தேவா..அவங்களுக்கு லெக்சர்ஸ் போல..வா போய் பாத்துட்டு வர்லாம்.."

"ம்ஹும் வேணா..சந்தேகம் வந்துரும்.." அவளின் மனதை சரியாக கணித்துச் சொன்னான்,
தேவா...
தேவமாருதன்.

"ஆனா பாக்கனும் போல இருக்கு மச்சீ.."நெற்றியை நீவிய படி சொன்னவனின் முன்னுச்சி முடிகள் நெற்றியை முட்டி நின்றன.

விரல் கொண்டு அவற்றை பின்னே தள்ளியவனின் பாதங்கள் அடிக்கடி நிலத்தை தொட்டு மீள விழிகள் மட்டும் நுழைவாயிலில் தவம் கிடந்தன.

"வாய்ப்பில்லை.." என்று தெரிந்தும் எதிர்ப்பாப்புக்களை கைவிடாதது தான் சில ஆழமான நேசங்களின் தனித்துவமோ என்னவோ..?

இருப்புக் கொள்ளவில்லை ஆடவனுக்கு.
மழையில் நனைந்தவாறு கல்லூரி வாயிலின் அருகே வந்து நிற்க அதற்குள் நுழைவாயிலின் அருகே வந்து குடை பிடித்தவாறு எட்டிப் பார்த்தனர்,
இரு மாணவியர்.

"பர்ஸ்டா இயரா நீங்க..?" ஒரு பெண்ணிடம் கிஷோர் கேட்க ஆமோதிப்பாய் தலையச்தாள்,
அவளும்.

தர்ஷனியின் டிபார்ட்மென்ட்டைச் சொல்லி அவளை அழைத்து வருமாறு கூற புரியாது பார்த்தனர்,இருவரும்.

அதற்குள் அவனை பிடித்து தன்னருகே இழுத்த ஆடவனோ "இல்ல சிஸ்டர்..அப்டி ஒன்னுல்ல..நீங்க போங்க.." என்றவனின் விழிகள் தோழனை உறுத்து விழித்தன.

"இல்ல சிஸ்டர்..இவனுக்காக தான்..நெஜமா..வர சொல்லு.."முடிக்க முன்னே தோழனின் வாயைப் பொத்தியிருக்க மறு கரமோ அவர்களை போகுமாறு சைகை செய்திட அவர்களை புரியாது பார்த்துக் கொண்டு சென்றவர்களோ தர்ஷினியிடம் எத்தி வைத்திருந்தனர்,
நடந்ததை.

புதிதாகச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு தேவா யாரென்றே தெரியாதிருக்க அது தான் விதியின் சதியோ..?

"தர்ஷினி..யாரோ ஒரு பையன்..உங்கள பாக்க வர சொல்லி சொல்லி விட்டான்..
காலேஜ் வாசல்ல நிக்கிறான்.." என்க படபடத்தது அவளிதயம்.

"மே பீ அந்த பையன் உங்க லவ் பண்றான் போல.." தன் மனதில் பட்டதை கூறி விட்டு அவர்கள் கடந்திட இவளுக்கு தான் தலை சுற்றியது.

இப்படியெல்லாம் அவள் வாழ்வில் நடந்ததே இல்லை.
தன்னையும் யாரும் பார்த்திடுவார்கள் என்கின்ற எண்ணம் அவளுக்கு துளியும் வந்ததும் இல்லை,
அப்படியிருக்க இப்படிச் சொன்னால்..?

ஏனென்று தெரியவில்லை,
அது யாரென்று தெரிந்து கொள்ள வேண்டிய முளைத்தெழ பெரும் பதட்டமாகிற்று அவளுக்கு.

உள் மனம் விதிக்கும் கட்டளையை புத்தி தடுக்க முயல உள்ளங்கைகள் இலேசாய் வியர்த்தது.

ஆர்த்தியும் கார்த்திகாவும் பக்கத்தில் இல்லாதிருந்தது இன்னுமே அவளை தடுமாற்றத்தில் ஆழ்த்த தன் மனதில் எழுந்த எண்ணமே அவளை பலவீனப்படுத்துவதாய்.

இதற்கு முன் இப்படி அவள் நினைத்தது இல்லையே.
ஏன் இந்த நொடி மட்டும் இப்படி ஒரு ஆர்வம்..?

பாதங்கள் எழுந்திட முயல தன்னை சமப்படுத்திக் கொண்டு அமர்ந்தவளுக்கு இந்த சிறு விடயத்துக்கு அவளுள் எழுந்த உணர்வுப் போராட்டம் அவளையே திகைக்க வைத்திருந்தது.

தன்னை அவள் தைரியாமானவள் என நினைத்துக் கொண்டிருக்க எளிதில் அவளைச் சூழ்ந்து கொண்ட இந்த தடுமாற்றம் புதிதாய் இருந்தது.

"காம் டவுன் தேவா..நம்ம கவனம் முழுக்க படிப்புல தான் இருக்கனும்.." ஆடவன் சொன்னதை நினைவு கூர்ந்து தன்னை சமப்படுத்த முயன்றாலும் மனதில் ஏதோ ஓர் படபடப்பு.

தாய் தந்தையின் முகம் தான் கண் முன்னே நினைவிலாட அப்படியே மேசையில் தலை வைத்தாள்,
தர்ஷினி.

"என்னடா மச்சீ..இன்னும் தங்கச்சிய காணோம்.." வாயிலுனூடு பார்த்த படி சொன்ன கிஷோரை முறைத்து தள்ளினான்,
ஆடவன்.

"ஏன் டா..?"

"தேவா வரமாட்டாங்க.." என்றிட்டவனின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.

"இல்ல இல்ல வருவாங்க.."

"ம்ஹும்..அந்த பொண்ணுங்களுக்கு நா யார்னே தெரியாது..போய் யாரோ கூப்புட்றதா தான் சொல்லியிருப்பாங்க..ஸோ வரமாட்டாங்க.."

"டேய் பேரயாச்சும் சொல்லி அனுப்பியிருக்கலாம்ல..நீ தான் பேசுறதுன்னா பயந்து சரி தங்கச்சி வந்துருக்கும்.."

"சரி விடு..வா போலாம்.." வார்த்தையாகச் சொன்னாலும் பாதங்கள் நகர மறுக்கத் தான் செய்தன.

"மச்சீஈஈஈஈ..உன் லவ் உண்மயா இருந்தா தங்கச்சி வருவாங்கடா..வெயிட் பண்ணு.."

"வந்தாலும் சரி வர்லன்னாலும் சரி...என் லவ் உண்ம தான்.." கடுப்புடன் சொல்லி விட்டு திரும்பி நடக்க வாயிலில் வந்து நின்றது,ஒரு முச்சக்கர வண்டி.

அதில் இருந்து இறங்கிய தர்ஷினியின் தந்தையைக் கண்டதும் அவன் சற்றே பதுங்கி நிற்க அதற்குள் குடையுடன் வேகமாய் நடந்து தந்தையின் முன்னே வந்து நின்றாள்,
தர்ஷினி.

அவரிடம் இருந்து பையை வாங்கிக் கொண்டு தலையை குனிந்த வண்ணமே உள்ளே சென்றவளை இரசனையுடன் ஆடவன் பார்த்திருக்க ஓரக் கண்களோ தோழனின் மிதப்பான புன்னகையை கண்டு கொண்டது.

மறுநாள் காலை சுற்றத்தார் அனைவரிடமும் கூறியவனாய் ஆடவன் விடை பெற முயல அவர்கள் ஏறுவதற்கான வாடகைக் கார் ஆடவனின் வீட்டு வாசலில் நின்றிருந்தது.

முன்னே ஒரு லாரி பொருட்களை ஏற்றிச் சென்றிருக்க பாட்டியை அழைத்து வந்து காரில் ஏற்றி விட்டவனின் பார்வை தர்ஷினியின் வீட்டு வாயிலைத் தான் துழாவி நின்றது,
அவள் வருகிறாளா எனப் பார்த்து.

நேற்றிரவு அவர்கள் வீட்டுக்குச் சென்று தான் கிளம்பப் போகும் செய்தியை சொல்லி அவள் உட்பட அனைவரிடமும் புன்னகையுடன் விடை பெற்று இருந்தாலும் ஏனோ இனி அடிக்கடி பார்க்க முடியாது என்பதாலோ என்னவோ மனம் ஒரு தடவை அவளைப் பார்க்கத் துடித்தது.

நேற்றைய தவிப்பை தவிடு பொடியாக்கும் வகையில் இன்றைய தவிப்பு.

கிஷோர் முன்னே சென்ற லாரியில் ஏறிச் சென்றிருக்க பாலா தான் உடனிருந்தான்,
தற்சமயம்.

அவனுக்கும் தோழனின் மனநிலை புரிய இதமாய் புன்னகைத்தாலும் என்ன தான் செய்திட இயலும்..?

சுற்றி இருந்தவர்கள் வெளியே வந்து அவனை வழியனுப்ப அவர்களுக்கு கையசைப்பை பதிலாக கொடுத்தவாறு வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டவனின் இதழ்கள் வெளியே நின்றிருந்த தர்ஷினியின் தந்தையையும் பார்த்து புன்னகை சிந்தின.

பின்னிருக்கையில் பாட்டியின் பக்கத்தில் பாலா ஏறி அமர்ந்திருந்தான்,
கனத்த மனதுடன்.

"கடவுளே ஒரே ஒரு தடவ மட்டும் தேவாவ கண்ணுல காட்டு.." மனதுக்குள் வேண்டிக் கொண்டவனுக்கு நேரம் காலம் தெரியாமல் கிஷோர் சொன்னது நினைவில் வந்து தொலைக்க படபடத்தது,இதயம்.

"ப்ளீஸ் கடவுளே..ஒரே ஒரு தடவ.."தனக்குள் வேண்டியவாறு அமர்ந்திருக்க வண்டியை உயிர்ப்பித்திருந்த சாரதியைக் கலவரமாக பார்த்தன,
ஆடவனின் விழிகள்.

"என்ன தம்பீ..ஏதாச்சும் பர்ச்சனயா..?"

"ஆ..அப்டிலாம் இல்லண்ணா..வண்டிய எடுங்க.." தொய்வாய் சொல்ல பின்னிருந்த தட்டிய தோழனின் கரத்தை புன்னகையுடன் விலத்தி விட்டிருந்தான்,
ஆடவன்.

இன்னும் நேரமிருக்க கல்லூரிக்கு கிளம்பி இருக்க மாட்டாள் என்பதை அறிந்த மனமோ அவளின் வருகையை இன்னுமின்னுமே எதிர்பார்க்க ஒரு நொடியில் அவர்களின் வீட்டைக் கடந்து சென்றது,
வண்டி.

அவளைக் கண்டிடவில்லை.
அப்படியே கண் மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டவனின் மனதில் பெரும் தளர்வு.

அந்த மண்பாதை வழியே வண்டி சிறிதளவு தூரம் நகர்ந்திருக்கும்.
"தம்பீ கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க.." பாட்டியின் குரலில் சடாரென வண்டியை நிறுத்தி இருந்தார்,
சாரதி.

மூச்சிறைக்க ஓடி வந்து கொண்டிருந்தது,
ஆடவனின் தேவா தான்.

பின்னே திரும்பியவனுக்கு அவளைக் கண்டதும் விழிகள் பளிச்சிட அவளோ வந்தது,
பாட்டியிடம் பேசத் தானே.

"பாட்டி..அன்னிக்கு நா வாங்குன உங்க பொடவ.." கையில் இருந்த பையைக் கொடுத்தவளுக்கு மூச்சு வாங்கியது.

"எதுக்கு ராசாத்தி..நீயே வச்சுக்க.."

"எதே..அதெல்லாம் முடியாது..இது உங்க போடவ.." வம்படியாய் திணித்தவளின் செய்கையில் கன்னம் வழித்து நெட்டி முறித்தார்,அவர்.

"சரி பாட்டி பத்ரமா பொய்ட்டு வாங்க..அங்க போய் போன் பண்ணுங்க.."

"சரி கண்ணு.." அவர் சொல்ல பேச தோன்றினாலும் ஆடவனின் நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

"பாட்டி இங்க வந்தா வீட்டுக்கு வாங்க.."

"அதுக்கென்ன கண்ணு..உன் கல்யாணத்துக்கு கண்டிப்பா வர்ரேன்.."

"அப்டின்னா ஒரு அஞ்சு வருஷம் ஆகும் பரவாலயா..அதுக்கு முன்னாடி வாங்க பாட்டி.." பதில் சொன்னவளை கள்ளப் பார்வையால் உரசிக் கொண்டிருந்தான்,
ஆடவன்.

அவளும் விலகி நிற்க வண்டியை கிளப்பினாலும் அவளுடன் ஆடவன் பேசவில்லை.
ஓரிரு அடிகள் வண்டி நகர்ந்திருக்கும்.

யன்னலூடு எட்டிப் பார்த்து ஆடவன் அழகாய்ப் புன்னகைகக்க சிறு புன்னகையை பதிலாக் கொடுத்தவளின் விம்பம் ஆழமாய் பதிந்து போனது,
ஆடவனின் மனதில்.

இதழ்களில் புன்னகை உறைந்திருக்க நினைவுகளை அசை போட்டவாறு தன் பயணத்தை துவங்கியவனுக்கு தொடர்ந்திடும் பயணத்தலும் அவள் நினைவுகளே துணை என்பதில் ஐயமேதும் இல்லை.

அவள் அவனின் அவளாக மாறும் வரை அவனும் அந்த நினைவுகளுடன் காதல் செய்திடட்டும்,
சொல்லாமலே..!

தொடரும்.

🖋️அதி....!
2024.02.07

ப்ளேஷ் பேக் ஓவர்..
மொக்கயா இருந்துச்சோ தெரியல..

கொழம்பிர வேணாம்..
எல்லாம் க்ளியர் ஆகும்..

இனிமே மூவிங்க கொஞ்சம் ஸ்பீட் பண்ணலாம்
 
Top