• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 21

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 21


மகிழுந்திற்கு பணம் கொடுத்து அனுப்பிய அக்ஷிதா அவரசமாக அந்த அடுக்குமாடி வளாகத்தினுள் நுழைந்தாள் கண்களில் தோன்றிய பதற்றத்துடன். 'ப்ச், இந்த நேரத்தில அம்மா பார்த்திருப்பாங்களா? அப்பாக்கு தெரிஞ்சிருக்குமா? தேட ஆரம்பிச்சிருப்பாங்களா' என்று பல வித எண்ணங்களில் உழன்றாலும் அவளுக்கு கண் முன் தெரிந்தது அவளின் இரண்டு வருட காதலன் ஜோ என்ற ஜோஷ்வா..ஆம், அவள் படிக்கும் அதே கல்லூரியில் மருத்துவக்கல்லூரி மாணவன் அவன். ஆடவன் இயல்பிலே அதிக அமைதி, அதுவே அக்ஷியை ஈர்க்க ஆகப்பெரும் காரணமாய் போயிற்று. அவன் இதழ் விரியா புன்னகை பாவத்திற்கு பெண் அடிமை. பெற்றவர்கள் இருவரும் சிறு வயதிலே தவறி விட தேவாலயம் ஒன்றினால் தத்தெடுக்கபட்டு கிறிஸ்துவனாகவே வளர்ந்தவன் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக்கல்லூரியில் நுழைந்திருந்தான். துறுதுறுவென எப்பொழுது தன்னிடம் வம்பிலுத்தப்படி அக்ஷியை பிடித்திருந்தாலும் அவளுக்காகவும் தனக்கு யாருமில்லை என்பதற்காகவும் விலக முனைய அதுவே ஆடவனை இறுகமாக பற்றிக் கொள்ள வலுவான ஊன்றுகோலாய் போயிற்று பேதைக்கு. அவனின் கண்ணியமும் கரிசனங்களும் பெண்வளை உருகி கரைய தான் செய்தது. அவனும் பெண்ணை ஈர்க்க என்றெல்லாம் அப்படியில்லை. அவனின் இயல்பான சுபாவமே அது தான். அவளிடம் மட்டுமின்றி எல்லோருக்காவும் கரிசனைகள் பொங்கி வழியும் ஆடவனதிடத்தில்.


மின்தூக்கியில் நுழைந்தவள் ஜோஷ்வாவின் எண்ணிற்கு அழைத்தப்படியே இருக்க அதுவே உயிரிழிந்ததாக தகவலை கொடுத்துக் கொண்டிருந்தது. சலிப்பாக நெற்றியை தேய்த்தவள் ஐந்தாவது தளத்தில் இறங்கி வீட்டு வாயிலில் அழைப்புமணியை அழுத்திக் கொண்டிருந்தாள் அந்த இரவுப்பொழுதில். ஆம், நேரமோ ஒன்பதை தொட முயன்றது.


நேற்றிரவிலிருந்து பணியில் முக்கிய அறுவை சிகிச்சையில் இருந்து விட்டு அப்பொழுது தான் உறங்க துவங்கியிருந்தனர் அமீத்தும் ஜோஷ்வாவும். அமீத், ஜோஷ்வாவின் பள்ளி, கல்லூரி தோழன். இருவரும் கல்லூரி, அடுத்து வேலையின் பொருட்டு சென்னையின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர் ஒன்றாகவே.


அமீத் தான் கதவை திறந்தான், உறக்கம் கலைந்த அலுப்போடு எதிரில் நிற்பவளை முறைத்து. மற்ற நேரமென்றால் ஏதாவது வம்பிலுத்திருப்பான். அந்த இரவு நேரமும் பாவையின் களைப்பு நிறைந்த பதற்றமான முகமும் அவனது வாயை அடைக்க செய்ய, 'வா' என தலையசைத்து சோம்பலான புன்னகை கொடுத்து மீண்டும் தனதறைக்குள் நுழைந்து கொள்ள அக்ஷியோ ஜோஷின் அறைக்கதவை தட்டியிருந்தாள்.


கண்களை கசக்கி எழுந்து வந்தவன் அவளை பார்த்து அதிர்ந்தாலும் முகத்தில் காட்டாது பெருமூச்சோடு வழியை விட உரிமையாய் உள்ளே சென்று படுக்கையில் கவிழ்ந்து கொள்ள ஜோஷூம் அமைதியாய் அவளின் பின்பே உள்ளே நுழைந்து அருகில் அமர்ந்து, "அக்ஷி.." என்றிட மேலும் தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள், 'போடா' என்பதாய்.


"ப்ச்.." என்று தலையை கோதிக் கொண்டவன் அவளை எழுப்பி அமர வைக்க சட்டென்று தேங்கிய கண்ணீரை உள்ளிழுக்க முயன்றபடி முகத்தை திருப்பிக் கொண்டாள். அவளை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டவன், "இந்த நேரத்தில எதுக்கு தனியா வந்த நீ?" என்று கடிந்து கொள்ள, "நீங்க ஏன் போனை சுவிட்ச் ஆஃப் பண்ணீங்க? உங்களுக்கு எதுக்கு போன்?" என்று ஆத்திரமாக கேட்டவள் அருகிலிருந்த அவனின் அலைபேசியை எரிச்சலோடு கீழே ஏறிய முனைய லவகமாக அதனை கைப்பற்றியிருந்தவன் பாவையை பாவமாய் பார்த்தான்.


ஜோஷ்வாவிற்கு மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்திருந்தது. எழுத்து தேர்விலும் நேர்முக தேர்விலும் தேறியிருந்தான் ஆடவன். ஆக, இரண்டு மாதத்தில் கிளம்புபவன் திரும்பி வர பல வருடங்களாவது ஆகும் என்பதால் அக்ஷி ஒற்றைக்காலில் நின்று சிவக்குமாரிடம் திருமணம் குறித்து பேசும்படி அழைத்துச் சென்றிருந்தாள்.


அவளுக்கு நிறைய ஆண் நண்பர்களும் உண்டென்பதால் அவ்வாறே நினைத்த சிவக்குமாரின் ஜோஷின் பேச்சில் ஏகக்கடுப்படைந்தார். அதிலும் அவன் அனாதை என்பதை விட வேறு மதத்தை சார்ந்தவன் என்பதே அவருக்கு பூதாகரமாக தெரிய மகளை தான் ஓங்கி அறைந்திருந்தார், "எவ்வளவு தைரியம் உனக்கு?" என்பதாய். இடையில் விஜயனுக்கும் மங்கைக்கும் வேறு ஏராளமான வசவுகள், "அப்பயே கட்டிக் கொடுக்கலாம் சென்னேன். அவ படிக்கட்டும்னு நீங்க தான அனுப்பி வைச்சீங்க, இப்ப ஊர் பேர் தெரியாத அனாதையெல்லாம் தைரியமா என் வீட்டுக்கு பொண்ணு கேட்டு வந்திருக்கான். எல்லாம் இவளால தான்" என்று மீண்டும் அக்ஷியை அடிக்க வர அவளை இழுத்து தன் அருகில் நிறுத்திக் கொண்டவன், "உங்களுக்கு கோபம்னா என் மேல காட்டுங்க, அதை விட்டு அவளை அடிக்கிற வேலையெல்லாம் வேணாம். அப்பா, அம்மா இல்லாம போனதுல என் தப்பு எண்ண இருக்கு. உங்க பொண்ணை உங்களை விட நல்லா பார்த்துக்கிற அளவுக்கு நான் படிச்சு வேலையில இருக்கேன். இன்னும் டூ மந்த்ல்ல பாரின் போயிடுவேன். தென் திரும்பி வந்து ப்ரெண்ட்டோட சேர்ந்து ஒரு ஹாஸ்பிடல் கட்டலாம்னு ப்ளான்ல்ல இருக்கோம்" என்று தன் புறத்தை விவரித்து தன்மையாகவே பேசியிருந்தாலும் சிவக்குமார் அவனை சட்டையை பிடித்து வெளியவே தள்ளி இருந்தார். அக்ஷிக்கு இதுவரை தன்னை இளவரசியாய் தாங்கிய தந்தையின் கொடூர முகம் அப்படியொரு பேரதிர்ச்சியை கொடுத்திருந்தது. இதில் ஜோஷ்வா வேறு, "நீங்க விரும்பலைனாலும் நாங்க கல்யாணம் பண்ணிப்போம். அவளை விடுற ஐடியால நான் இல்லை" என்று சட்டை கையை மடித்து விட்டு ஏறக்குறைய எச்சரித்தே கிளம்பியிருந்தான். அதில் கொதித்தெழுந்த சிவக்குமார் மகளை அத்தனை பேச்சு பேசி தீர்த்து விட்டு மகனோடு தொழில் விஷயமாக வெளியூர் கிளம்பிருந்தார், "இவ நான் வர வரைக்கும் எங்கையும் போகக் கூடாது அப்படி போனா உன்னை கொன்னே போட்டுடுவேன்" என்று மங்கையை எச்சரித்து.


காலை நிகழ்விற்கு பிறகு ஜோ அவசர அறுவை சிகிச்சையின் பொருட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அகப்பட்டு விட அலைபேசியோ உயிரிழந்து போயிருந்தது. அவனுக்கு முயற்சித்து ஓய்ந்த அக்ஷியோ மங்கை அசந்த நேரமாய் பார்த்து வீட்டை வெளியேறி இருந்தாள். கிளம்பும் பொழுது யாருக்கோ அழைத்த சிவக்குமார், "நாளைக்கே வாங்க, நான் சாயந்திரம் வந்திடுவேன். மாப்பிள்ளை போட்டோ பார்த்தேன், எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என்று பேசி சென்றிருக்க அக்ஷிக்கோ உள்ளுக்குள் குளிரெடுத்தது என்னவோ உண்மை. எப்பொழுது அடித்திடாத தந்தை கை நீட்டியது அழுகையை கொடுத்தாலும் ஜோஷ்வா குறித்து அவரின் பேச்சுகள் பெண்ணவளை அதிகமாக தாக்கி தளர்த்தியிருந்தது. சும்மா இருந்தவனை தான் தானே இத்தனை இழி பேச்ச வாங்கும்படி இறக்கி விட்டோம் என்ற குற்றவுணர்வு வேறு ஆட்கொள்ள அழுத்தம் தாங்காமல் கிளம்பி ஓடி வந்திருந்தாள்.


சட்டென்று அக்ஷி முகத்தை மூடிக் கொண்டு அழ பதறியவன், "ஹேய், என்னாச்சு அக்ஷிம்மா?" என்று அவளை அணைத்து சமாதானம் செய்ய முயல, "இனி நான் அங்க திரும்பி போக மாட்டேன் ஜோஷ், நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று ஆடவனை அதிர செய்திருந்தாள் அவனின் காதலி. அவளை ஆயாசமாக பார்த்தவன், "என்ன பேசுற அக்ஷி நீ, உனக்கு இன்னொரு வருஷம் ஸ்டடீஸ் இருக்கு. தென் நானும் ஹையர் ஸ்டடீஸ் பண்ணனும். கொஞ்ச நாள் பொறுத்துக்கோ ப்ளீஸ்" என்று கெஞ்ச, "என்னை அங்க திரும்பி அனுப்புனீங்க நான் வேற எங்கயாவது போய்வேன். ஜோஷ், அப்பா அவரை பார்த்தாலே பயமா இருக்கு, எப்படி பேசுறாங்க தெரியுமா?" என்றவளுக்கு விசும்பல் நின்ற பாடு இல்லை. அவளை சமாதானம் செய்வதற்கு ஆடவன் வெகுவாகவே திணறி போக பெண் தன் முடிவில் உறுதியாக நின்று விட்டாள். ஆக, ஒரே வாரத்தில் காவல் நிலையத்தில் பல்வேறு களேபரங்களுக்கிடையில் அக்ஷியை திருமணம் செய்திருந்தான் ஜோஷ்வா. மேலும் கீழும் குதித்த சிவக்குமாரால் எதுவுமே செய்ய முடிவில்லை. அப்படியொரு ஆத்திரம் ஜோஷ்வாவின் மீது மட்டுமல்லாது அக்ஷியின் மீதும் தான். அவர்களின் வயதை காரணம் காட்டி காவலர்கள் திருமணத்தை நடத்தி கொடுத்து விட சிவக்குமார் அடிப்பட்ட புலியால் சீறியிருந்தார் ஜோஷ்வாவை நோக்கி. எல்லாபுறமும் மோதியும் அவரால் எதுவும் செய்திருக்க முடியவில்லை. ஜோஷ் நேரடியாகவே கமிஷ்னரிடம் பேசியிருந்தான் தன்னுடைய நண்பன் உதவியோடு. ஆக, சிவக்குமாரால் நேரடியாக அவர்களை தாக்க முடியாத நிலை. மேலும் அவர்களின் உயிருக்கு ஆபத்தென்றால் இவர் தான் பொறுப்பென்று அமீத் வேறு ஒரு புகாரை கொடுத்து வைத்து விட்டான். அவரின் கைகள் முழுமையாக கட்டி விட்டனர்.



அமீத் தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொண்டிருக்க அந்த இரண்டு படுக்கையறை கொண்ட குடியிருப்பு முழுவதும் அக்ஷிதா வசமாகி போனது. ஜோஷ் தன்னுடைய வெளிநாடு கனவை சில வருடங்கள் தள்ளி வைப்பதென்று முடிவெடுத்து விட்டான். அதில் அக்ஷிக்கு ஏக வருத்தம் தான் ஆனால், "நீயும் ஸ்டடீஸ் கம்ளீட் பண்ணு அக்ஷி நெக்ஸ்ட் இயர் ரெண்டு பேரும் சேர்ந்தே எக்ஸாம் கிளியர் பண்ணி அங்க போய் செட்டில் ஆகிடலாம்" என்றிருக்க அதில் ஓரளவு தேறியிருந்தாள் பெண்.



தினமும் அவளை கல்லூரியில் விட்டு மருத்துவமனை செல்வது மாலையில் அழைத்து வருவது என்று ஜோஷ் மிகவும் பிஸியாகி போனான். அக்ஷியையும் படிப்பு பிடித்துக் கொள்ள இருவருமே ஓடிக் கொண்டிருந்தனர். ஆனால் படிப்பை முன்னிறுத்தி ஜோஷோ பெண்ணை தள்ளி நிறுத்தியிருக்க அவளோ அவனின் கட்டுப்படாட்டை சுலபமாக உடைத்திருந்தாள். அந்த வயதிற்கே உரிய மோகமும் தாபமும் போட்டிப் போட்டு அவர்களை தழுவ அவர்களும் ஒருவரை ஒருவர் தங்களுள் இட்டு நிரப்பி பலமுறை அத்து மீறியிருந்தார்கள். விளைவாய் ஆறு மாத திருமண வாழ்வின் முடிவில் அக்ஷி கர்ப்பம் என்பது ஜோஷ் உறுதி செய்து அவளை முறைத்து அமர்ந்திருந்தான்.


"இன்னும் சிக்ஸ் மந்த் தான காலேஜ், சோ பேபி பெத்துக்கலாமே! ஒரு டூ இயர்ஸ் ஆனதும் நான் திரும்ப படிக்கிறேன்" என்று பல்வேறு காரணங்களை கூறி ஜோஷை அவள் சமாதானம் செய்திருந்தாலும் அவனால் முழு மனதோடு ஏற்க முடிவில்லை. ஏற்கனவே கல்லூரியில் இருந்து வரும் பொழுது துவண்டு போய் இருப்பவள் இப்பொழுதெல்லாம் அதிகமாகவே தளர்ந்திருந்தாள். "எதையாவது நான் சொல்றதை கேட்கிறீயா நீ?" என்று ஜோஷ் அவ்வப்பொழுது கடிந்து கொண்டாலும அக்ஷியோ அமைதியாய் அவனை பேச விடாது இறுக அணைத்துக் கொள்வாள் கண்களை சுருக்கி கெஞ்சியபடி. அதற்கு மேல் ஜோஷாலும் அவளை கடிய இயலாது. எல்லாமே தெளிந்த நீரோடை போல் ஓடிக் கொண்டிருந்தது அன்றைய ஒரு இரவு வரும் வரை. ஆம், அவசர சிகிச்சை என்று கிளம்பி சென்ற ஜோஷ்வா இரண்டு நாளாகியும் வீடு திரும்பியிருக்கவில்லை. அக்ஷி அழுது அரற்றி அவன் பணி புரியும் மருத்துவமனை எல்லாம் தேடி பலனலளிக்காததால் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தாள்.


அலட்சிய பாவத்தோடு நடத்த பெண் நொந்தே போனாள். என்ன செய்வதென்று தெரியவில்லை. யாரிடம் கேட்பது. அமீத், ஒரு வாரத்திற்கு முன்பு தான் ஊருக்கு கிளம்பியிருந்தான் திருமணம் என்று. இருவரையும் கட்டாயம் வர வேண்டும் என வற்புறுத்தி. ஆக அவனை தொந்தரவு செய்ய மனதின்றி முகத்தை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தாள் இழுத்து பிடித்த பொறுமையோடு. நேரம் இரவை நெருங்க, "சார், என் ஹஸ்பெண்டை டூ டேஸா காணலை" என்று காவலர் முன் நிற்க ஏற இறங்க பார்த்தவர், "லவ் மேரேஜா, எத்தனை நாளாச்சு" என்று உறுதிப்படுத்தி, "என்னம்மா இன்னும் விவரம் புரியாத பொண்ணா இருக்க, அங்க பார் அந்த பொண்ணும் உன்னை மாதிரி தான். மூனு மாசம் குடும்பம் நடத்திட்டு வயித்தில ஒன்னையும் கொடுத்திட்டு விட்டு ஓடி போய்ட்டான் இப்ப நடுத்தெருவுல நிற்கிது. பெத்தவங்க பேச்சை எங்க கேட்குறீங்க நீங்க?" என்று வசைபாடே உடைந்தே போனாள். ஆனால் மனதோ, 'என்னோட ஜோஷ் அப்படி இல்ல, என்னை விட்டு போக மாட்டார் அவர் நல்லவர்' என்று அரற்ற மேலும் அரை மணி நேர காத்திருப்பிற்கு பிறகு, "நாளை வந்து பார்" என்ற தகவலோடா அனுப்பி வைக்கப்பட்டாள்.


அவனில்லாத அவ்வீடும் இருளும் பாவையை அச்சுறுத்த உறங்கா இரவாகி போனது. ஆகிற்று ஒரு வாரமும் அவளும் காவல்நிலையம் அலைகிறாள் ஒரு தகவலும் இல்லை. அவளின் ஆண் நண்பர்களும் பெண் நண்பர்களும் உடன் அலைந்தார்கள் தங்களுக்கு தெரிந்த வகையில் விபத்து நடந்த இடம் ஜோஷ்வா மருத்துவமனை அவன் வளர்ந்த இடம் என்று தங்களால் முடிந்தளவு தேடி மோதினார்கள். இறுதியில் கிடைத்த பதில் என்னவோ சுழியமே! காவலர்களும் பத்தோடு பதினொன்று என்று வழக்கை முடித்து வைக்க நண்பர்களோ, "நீ வீட்டுக்கு போ அக்ஷி, நாங்க அங்கிள்கிட்ட பேசுறோம். தனியா இருக்கிறது பாதுகாப்பில்லை" என்று தங்களுக்கு தெரிந்த அறிவுரைகளை வழங்கினார்கள். ஆனால் அக்ஷி அசையவேயில்லை, இரண்டு மாதங்கள் அங்கேயே தான் கடத்தினாள். சரியான உணவும் உறக்கமும் இன்றி பாதியாக உருகி கரைந்தாள். அன்று கல்லூரியில் வந்தே ஆக வேண்டுமென்று கட்டாயமாக அழைத்திருக்க சென்று நின்றவள் மயங்கி சரிய அவர்களோ விஜயனுக்கும் சிவக்குமாருக்குமே அழைப்பு விடுத்தனர்.


சென்றவர் எதுவும் பேசாது மகளை அழைத்து வீட்டிற்கு கொண்டு வந்து விட்டார். அக்ஷி அவ்வீட்டு இளவரசி போல் தான் வளைய வந்தாள். சிவக்குமாருக்கும் மகளை அத்தனை பிடிக்கும் ஜோஷ்வா விஷயத்தை தவிர்த்து. சிவக்குமாரிடம் கால்களை பிடித்தே கெஞ்சினாள், "ப்பா, எப்படியாவது அவரை தேடி கொடுங்க" என்று. மகளை பார்க்க பார்க்க ஆற்றாமை பொங்கியது மனிதருக்கு. காவலர்கள் சிவக்குமாரின் உபயத்தால் வீடு தேடி வந்தார்கள் புகாரை பெற்றுக் கொள்ள ஆனால் அவர்கள் கொடுத்தது என்னவோ, 'அவன் உன்னை ஏமாற்றி விட்டான். அவனுக்கு தேவை உன் உடம்பு மட்டும் தான். தினமும் இதே போல் நூறு வழக்குகளை பார்க்கிறோம் அபலை பெண்ணே" என்பது தான். ஆனால் உள்ளம் யாரையுமே எதையுமே நம்ப மறுத்தது.


வாரங்கள் மாதங்களாக அக்ஷி மேலும் உருகினாளே தவிர ஜோஷ் வந்த பாடில்லை. மங்கை தான் மகளுக்காக அல்லாடினார். இன்னும் யாருக்கும் கர்ப்பமாக இருப்பது தெரியாது. அவளும் எதுவும் கூறிவில்லை, கல்லூரிக்கு கூட செல்லாமல் அறையிலே அடைந்து கிடந்தவள் மீண்டும் மயங்கி சரிய குடும்பமே மருத்துவமனை விரைந்தது. "அக்ஷி ஐந்து மாத கர்ப்பமெனவும் அவள் பலவீனமாக இருக்கிறாள்" என்றும் மருத்துவர் கூற
சிவக்குமாருக்கு அதை கேட்டு அப்படியொரு கொதிப்பு. "அந்த குழந்தை எங்களுக்கு வேணாம், கலைச்சிடுங்க டாக்டர்" என்று விட மயக்கம் தெளிந்து எழுந்தமர்ந்து தந்தையின் பேச்சை கேட்டு விட்டு அக்ஷி கத்தி ஆர்பாட்டமே செய்து விட்டாள்.


"நீங்க என்னை பார்க்க தேவையில்ல, என் குழந்தைய கொல்றதுக்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தா?" என்று பேசி தீர்க்க சிவக்குமாரோ, "இப்படி ஆடி தான நடு ரோட்டில நிற்கிற? இன்னும் என்னென்ன அசிங்கத்தை எங்க மேல வாரி பூச போற? மரியாதையா குழந்தைய கலைச்சிடு, நான் உனக்கு வேற நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன். நீ நிம்மதியா இருக்கலாம்" என்று பேசினார்.

தந்தையும் மகளும் நேருக்கு நேராக முட்டிக் கொள்ள மங்கையும் விஜயனும் தான் தவித்து போனார்கள். அவனுக்கு தங்கை மீது கட்டுக்கடங்காத கோபம், படிக்க வேண்டிய வயதில் வாழ்க்கையை சீரழித்து நிற்கிறாளே என ஆதங்கம்.


"நீ அப்பா சொல்றதை கேளு அக்ஷி" என்று அவனும் நின்று விட அக்ஷியோ உறுதியாக மறுக்க சிவக்குமார் இருக்குமிடம் உணராது மகளை அடித்து விட கூட்டம் கூடியது.



ராகவனுக்கு மூச்சு திணறல் காரமணாக எப்பொழுதும் வழக்கமாக பார்க்கும் மருத்துவரை சந்திருக்க வாணியும் நவீனும் அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனை வந்து தங்கியிருந்தனர். மருந்தகம் சென்ற நவீன் எதார்த்தமாக கூச்சலின் பொருட்டு அங்கு எட்டி பார்க்க அக்ஷியோடு சிவக்குமார் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்.


உள்ளே நுழைந்த நவீன், "என்னாச்சு மாமா?" என்றிட மேலும் அவரின் முகம் வாடி கசங்கியது. கையை பிசைந்தபடி நின்றிருத்த மங்கையும் அழுகையோடு அவனை பாவமாய் பார்க்க, "நீ முதல்ல ரூமுக்குள்ள வா" என்ற சிவக்குமார் மகளின் கையை பிடித்து இழுக்க அவளோ ஆக்ரோஷத்துடன் அதனை தட்டி விட்டாள். மீண்டும் ஆத்திரம் தலைக்கேற மகளை மூர்க்கமாக தாக்க துவங்க இடையில் புகுந்த நவீன் அக்ஷியை தன் கைவளைவில் நிறுத்திக் கொண்டான்.


"உனக்கு எதுவும் தெரியாது நீ ஓரமா போ நவீன், இவளை பெத்ததுக்கு நாங்க பெறாமலே இருந்திருக்கலாம். அப்படியே அடிச்சு கொன்னுடுறேன். எங்களுக்காவது நிம்மதி மிஞ்சும்" என்ற சிவக்குமாரை வலுக்கட்டாயப்படுத்தி ராகவனை அனுமதித்திருந்த அறைக்கு அழைத்து வந்திருந்தான்.


வாணி அவரிடம் பேசி அமைதியாய் அமர வைக்க ராகவனுக்கோ அழுது தவித்து நிற்கும் தங்கையை பார்க்க பொறுக்க முடியவில்லை. ஏற்கனவே ஏற்பட்டிருந்த கசப்பு காரணமாக சிவக்குமார் அவருடன் ஒட்ட விட்டிருக்கவில்லை. ஆக கணவரின் குணம் தெரிந்த மங்கையும் நாசூக்காக அண்ணனுக்காக அவரின் மரியாதைக்காக விலகி நின்று கொண்டார்.

அக்ஷியை தன் அருகில் அமர வைத்துக் கொண்ட நவீன் தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினான். அழுது அடிவாங்கி முகமெல்லாம் வீங்கி கன்னமெல்லாம் ஒட்டிப் போய் அப்படியொரு பரிதாபமான தோற்றம். பார்த்த நவீனுக்கு ஆற்றாமை பொங்கியது. சிவக்குமாரை முறைத்தப்படியே அமர்ந்திருந்தான்.


விஜயன் தான் அமைதியாய் வாணியிடமும் ராகவனிடம் ஒன்று விடாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தான். சிவக்குமார் உறுதியாக, "குழந்தை வேணாம் வாணி, கலைச்சுட்டா அவளுக்கு வேற நல்ல இடமா பார்த்து நானே நல்லா வாழ வைக்கிறேன். எப்படி வளர்த்தேன் அவளை, எல்லார் முன்னமும் தலை குனிய வைச்சு என்னை அசிங்கப்படுத்திட்டா" என்று மீண்டும் தன் முடிவிலே நிற்க, "என்னால முடியாதுப்பா, நீங்க என்னை அடிச்சே கொன்னாலும் இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன். என் குழந்தை எனக்கு வேணும்" என்றாள் வீம்போடு.


சிவக்குமார், "சரி இங்கயே உன்னை கொன்னுட்டு நாங்க கிளம்பிடுறோம்" என்று மகளை நோக்கி முன்னேற சட்டென்று நவீன் மறைத்துக் நின்று கொண்டான், "அவளுக்கு விருப்பமில்லைன்னா விடுங்க குழந்தை இருந்துட்டு போகுது" என அவளை தன் புறமிழுத்து. "நீங்க தள்ளுங்க, இடையில வராதீங்க" என்ற சிவக்குமார் நவீனுடன் தள்ளு முள்ளில் ஈடுபட்டு இறுதியாக, "அவளை நீ கல்யாணம் பண்ணிக்க போறீயா என்ன, குழந்தைய வைச்சுக்க சொல்ற?" என வார்த்தைகளை அவனை நோக்கி விட, "ஆமா" என்ற நவீன் நிறுத்தி நிதானமாக, "அவளை நான் பார்த்துக்கிறேன். இனிமே உங்க கை அவ மேல பட்டிச்சு" என்று முடிக்க அவனின் பேச்சில் எல்லாரும் அதிர்ந்து போனார்கள். அப்படி இப்படி என்று சிவக்குமாரை வீட்டிற்கு இழுத்து சென்று விட அக்ஷியும் மங்கையும் மருத்துவமனையில் இருந்து கொண்டனர்.


நவீன் கோபத்தில் வார்த்தைகளை விட்டாலும் ராகவன் சட்டென்று அதை விடாமல் பிடித்துக் கொண்டார். அவருக்கும் தன் இறுதி காலம் நெருங்கியது போல் தோன்ற, "நவீன் நீ அக்ஷியை கல்யாணம் பண்ணிக்கோப்பா, எப்படியும் யாருக்காவது கட்டி தான் கொடுக்க போறாங்க. எங்கயாவது தெரியாது இடத்தில போய் திரும்ப அவ கஷ்டப்பட்டுடக் கூடாது. நம்ம பொண்ணுப்பா, என் தங்கச்சி அழுகிறதை பார்க்க முடியலை பாவம் அவ" என்று மகனின் கைகளை பிடித்துக் கொண்டார். ராகவன் நினைத்ததை மருத்துவர் நவீனிடம் வாய் வார்த்தையாகவே கூறியிருந்தார், "இன்னும் எத்தனை நாள்னு சொல்ல முடியாது. இருக்கிற வரை இருக்கட்டும் நிம்மதியா பார்த்துக்கோங்க" என. வாணியும் இது தான் வாய்ப்பு, விட்டால் கடைசிவரை மகன் தனி மரமாய் நின்றே போவான் என எண்ணி தன் பங்கிற்கு பேசி மகனை கரைத்து விட்டார். அதாவது ஒரு இக்கட்டில் நிறுத்தி, 'செய்கிறாயா?' என்றல்லாமல், 'செய்' என்பதாய்.


ஆக, ஒரே மாதத்தில் அவர்களின் திருமணம் ஏற்பாடனது. சிவக்குமாருக்கு பரம திருப்தி. அக்ஷிக்கும் வேறு வழி இருந்திருக்கவில்லை. சிவக்குமாரிடம் சென்றால் கண்டிப்பாக குழந்தையை அழித்து விடுவார், தனக்கும் வேறொருவரை திருமணம் செய்து விடுவார். மேலும் முழுதாக முடிக்காத படிப்போடும் ஐந்து மாத வயிற்றோடும் தனியாக வேலைக்கு செல்வது தங்குவது என்பதெல்லாம் ஆகாத காரியம் என்று தோன்றியது. நவீனோடு ஐக்கியமாகினாள் மருத்துவமனையிலே. பாவையை அழகாக கையாண்டான். அவளின் விருப்பத்திற்கேற்ப தனது செல்வாக்கை உபயோகப்படுத்தி ஜோஷ்வாவையும் வலை வீசி தேடினான். இறுதியில் பலனில்லாமல் போக உண்மையிலுமே அவன் தன்னை ஏமாற்றி விட்டான் என்பதை பெண்ணால் சுத்தமாக ஏற்கவே முடியவில்லை. உடைந்து போய் அதிக மாத்திரைகளை உட்கொண்டு ஒரு வார மருத்துமனை வாசம் என்று ஏகப்படட களபேரத்திற்கு பிறகு நவீனை திருமணம் செய்து ஹைதராபாத் சென்று விட்டாள்.



ஆறே மாத திருமண வாழ்க்கை பெண்ணவளை தலைகீழாய் மாற்றி விட ஆளே அடையாளம் தெரியாது ஒடுங்கி போனாள். அந்த குறும்பு புன்னகை, துறுதுறுப்பு, மின்னும் விழிகள் எல்லாமே நிரந்தரமாக விடை பெற எதையோ இழந்தது போலவே சுற்றினாள். நவீன் அத்தனை பொறுமையோடு பேசி அவளை மெது மெதுவாக மீட்டு, கட்டாயப்படுத்தி விட்ட படிப்பை தொடர செய்தான். வாணியும் அவளை மகளை போல் அரவணைத்துக் கொண்டார். எந்த இடத்திலும் அக்ஷியை நவீனும் சரி வாணியும் சரி அசௌகரியமாக உணர வைத்தில்லை. குழந்தை வரவை நவீன் மட்டுமல்லாது வாணியுமே கொண்டாடி தீர்த்தார். இடையில் ராகவன் இழப்பு தேறி இருந்தவர்களை மீண்டும் அமிழ்த்த ஹர்ஷித் வரவு அவர்களின் தாகத்தை மெதுவாக நீர்த்து போக செய்திருந்தது.



கூறிக் கொண்டிருந்த நவீனுக்கு தொண்டை அடைக்க அவன் மடியில் தலைசாய்த்திருந்த யாஷூக்கோ கண்ணீர் கரை புரண்டது. அக்ஷியும் நினைவிருந்து மீண்டவளாக உறங்கும் மகனின் தலையை வருடி மார்போடு அணைத்துக் கொண்டாள் அடைத்த நெஞ்சத்தோடு.



தொடரும்.....






















 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Naveen akshi kum ava pappa oda safety kaga matumae than kalyanam pannikitan ah sorry da naveen ne unna thappa nenachathuku yaru thediyum kedaikatha alavukku indha josh enga than poi irupan akshi pavam than unmai ah vae
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Aakshi epadi la nadathu iruga kudathu kastama iruku💔💔🥺 naveen crt ya antha situation face panni irukan ☹️yash ta naveen sollitan eppo harshith aakshi enna poraga😢😢😢
 
Top