• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 19

Administrator
Staff member
Messages
576
Reaction score
833
Points
93
தேனும் இனிப்பும் 19:

நானும் அவனும்
கடலும் காற்றும்


திலகாவின் வார்த்தையில் ஜீவாவின் உடலோடு சேர்த்து முகமும் இறுகியது.

விழிகளை ஒரு கணம் மூடி திறந்தவன் அருகில் இருந்த தந்தையின் முகம் பார்த்து, “இவங்க இனிமே இந்த வீட்ல இருந்தா நான் ஜானுவையும் பிள்ளைங்களையும் கூட்டிட்டு வெளியே போய்டுவேன்” என்று தீர்க்கமாக உரைக்க, லிங்கம் ஆடிப்போய்விட்டார்.

“என்ன?” என்று அதிர்ந்தவர் முகனது வதனம் காண, “இனி ஒரு நிமிஷம் இவங்க இங்க இருந்தாலும் நான் இங்க இருந்து கிளம்பிடுவேன். திரும்பி வர மாட்டேன்” என்று நிதானமாக அழுத்தம் திருத்தமாக கூறினான்.

லிங்கத்திற்கும் தங்கையின் செயல் பிடிக்கவில்லை. இருந்தும் மகளை இழந்த துக்கத்தில் பேசுகிறாள் என்று இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தார்.

மருமகளை பேசியது கூட பெரிதாய் தெரியவில்லை. ஆனால் தன் மகன் அவனை பேசுவதா? கோபம் பெருகியது.

லிங்கம் தங்கையை தீர்க்கமாக பார்த்து, “திலகா நீ என்னை பேசுறேன்னு புரிஞ்சு தான் பேசுறீயா? எவ்ளோ பெரிய வார்த்தை அதுவும் என் மகனை” என்று வார்த்தைகளை கடித்து துப்ப, இதுவரை தன்னை ஒரு வார்த்தை கூட கடிந்து பேசிடாத அண்ணன் பேசியதும் அதிர்ந்து, “அண்ணா அவன் என்னை வீட்டைவிட்டு வெளியே போக சொல்லிட்டு இருக்கான். நீ அவனை கேக்காம என்னை பேசிட்டு இருக்க” என்று வினவினார்.

லிங்கம் பதில் மொழிவதற்குள் கண்ணாயிரம், “திலகா வா போகலாம்” என்று கோபத்தை கட்டுப்படுத்தி அழைக்க, “நீங்க பேசாம இருங்க. இது என் அண்ணனுக்கும் எனக்கும் இருக்க பிரச்சனை” என்று கணவனை எகிறினார்.

மற்றவர்கள் முன்னிலையில் மனைவியின் செயலில் முகம் இறுகியவர், “ஓ அப்படியா சரி. இனி உன் அண்ணன் வீட்லயே இருந்துக்கோ. இப்போ நீ என்னோட வரலைன்னா என்னைக்குமே உனக்கு அங்க இடம் கிடையாது” என்றவர் விறுவிறுவென நடந்து செல்ல, திலகவதி ஏகமாய் அதிர்ந்து கணவனையும் அண்ணனையும் கண்டார்.

லிங்கம், “நீ என் மகனை பேசுனது என்னை பேசுனதுக்கு சமம்” என்று இறுகிய குரலில் உரைத்திட, திலகாவிற்கு விழிகள் நிறைந்துவிட்டது.

ஆவேசமாக ஜானு மற்றும் ஜீவாவின் புறம் திரும்பியவர், “இதெல்லாத்துக்கு காரணம் நீ தான். என் மகளை கொன்னு அவ இடத்துக்கு வந்த நீ நல்லாவே இருக்க மாட்ட” என்று சாபமிட்டவர் விறுவிறுவென வெளியேறிட, இங்கு ஜானுவும் ஜீவாவும் தான் விக்கித்து நின்றுவிட்டனர். ஜானுவின் விழிகள் மடமடவென நிறைய துவங்கியது.

மனைவியை தோளோடு அணைத்தவனுக்கு மனது கலங்கி போக, “நாங்க தனியா போய்ட்றோம்” என்று தந்தையை பார்த்து மொழிந்தான்.

லிங்கம், “ஜீவா” என்று தவிப்புடன் காண, “ஜீவா என்னப்பா” என்று பரமேஸ்வரி மகனது கரத்தை பிடித்து கொண்டார்.

பரமேஸ்வரிக்கும் திலகவதி கண்ணீரோடு கொடுத்த சாபம் அதிர வைத்திருந்தது.

“போதும் பா. என்னால இவ ரொம்ப பட்டுட்டா. இப்பவும் என்னால அவளுக்கு கஷ்டம் தான் பா. இதோட எல்லாத்தையும் முடிச்சுக்குவோம். முதல் தடவை அவங்க பேசும் போதே நான் இந்த முடிவை எடுத்திருந்தா அவங்க இவ்ளோ தூரம் பேசியிருக்க மாட்டாங்க” என்றவனது குரல் கரகரத்தது.

“ஜீவா அவசரப்படாதப்பா” என்று பரமேஸ்வரி தவிப்புடன் கூற, “இல்லைம்மா. இப்போ அவங்க போய்ட்டாங்க. இன்னொரு நாள் வருவாங்க இதே மாதிரி என்னையும் என் பொண்டாட்டியையும் பேசுவாங்க. இதுக்கு மேல அவளால எதையும் கேக்க முடியாது” என்று தாயிடம் மறுப்பை தெரிவித்தான்.

பரமேஸ்வரி, “ஜானு” என்று அவளது கையை பற்ற, அவளது கன்னம் கண்ணீரால் நனைந்து போயிருந்தது. திலகாவின் சாபம் இப்போதும் அவளை நடுங்க செய்திட கணவனது பிடியில் தான் நன்றாக நின்றிருந்தாள்.

மகனை பிரிய நேரிடுமோ என்று அஞ்சி நிற்கும் தாயை கண்டவளுக்கு வார்த்தை வரவில்லை. தானும் அவரது கரத்தை அழுத்தமாக பிடித்தவள், “நான் என் பசங்களை அடிச்சு கொடுமை பண்றேனா?” என்று விம்மலுடன் கேட்டாள்.

“எங்களைவிட நீ தான் நல்லா பாத்துக்கிறம்மா” என்றவரும் கலங்கிய குரலில் கூறிட, “சரிப்பா” என்ற லிங்கத்தின் குரல் அனைவரையும் ஒரு கணம் அமைதியடைய செய்தது.

அதன் அர்த்தம் உணர்ந்த பரமேஸ்வரி, “என்னங்க என்ன பேசுறீங்க?” என்று பதறி கேட்க, “நீ சொன்னது சரிதான் பா. என் தங்கச்சியோட உறவை என்னால வெட்டிக்க முடியாது. மகளையும் கட்டி கொடுத்திருக்கேன். நீ சொன்னது போல தனியா குடி வைக்கிறேன் உங்களை” என்று லிங்கம் நிதானமாக யோசித்து கூறினார்.

“ஏங்க அவ பேசுனா அவளை கண்டிக்காம என் புள்ளைய தனியா போக சொல்லுவீங்களா?” என்று ஆதங்கமாக கேட்க, “ம்மா” என்று தாயின் கரம் பற்றியவன், “ரொம்ப தூரம் இல்லை. இங்க நம்ம ஏரியாலயே ஒரு வீடு பாத்துக்கிறோம். கொஞ்ச நாள் எங்களுக்கு நிம்மதி வேணும் புரிஞ்சுக்கோங்கம்மா” என்று இறைஞ்சும் குரலில் கேட்டான்.

அவனது குரல் பரமேஸ்வரியை மறுக்க முடியாது செய்துவிட அமைதியாகிவிட்டார்.

லிங்கம், “நம்ம சோமநாதன் வீடு காலியாதான இருக்கு. அதை பேசி முடிச்சிடலாம். இதை பத்தி இனி யாரும் பேச வேணாம்” என்றவர் அகன்றிட,

ஜீவா, “ம்மா சோமநாதன் அங்கிள் வீடு பக்கத்து வீடு தான. ரெண்டு நிமிஷத்துல வந்திட்டு போகலாம்மா” என்று பலவாறு சமாதானம் செய்திட்டான். இறுதியில் பரமேஸ்வரியும் மகன் இங்கிருந்து திலகவதியிடம் பேச்சு வாங்குவதற்கு தனியே செல்லலாம். அதுவும் பக்கத்து வீடு தானே என்று சம்மதித்துவிட்டார்.

தாயை சமாளித்தவன் மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்து கொண்டு அறைக்கு சென்றுவிட்டான்.

ஜீவிக்கு விபரம் புரியும் வயது என்பதால் தாயின் அழுகையை கண்டு கலங்கி நின்றாள்.

“ஜீவி இங்க வா” என்று ஜீவா அழைக்க, “அப்பா” என்று அவனருகே சென்றாள்.

“இங்க நடந்த எதையும் போட்டு நீ குழப்பிக்காத. பாட்டி கோபத்துல பேசிட்டாங்க. இனிமே இப்படி பேச மாட்டாங்க. அப்பா எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்” என்று அவளுயரத்திற்கு குனிந்து விளக்கம் கூற, “சரிங்கப்பா” என்று உடனே ஏற்று கொண்டவளுக்கு தந்தை மீது நம்பிக்கை இருந்தது.

“அம்மாவ நான் சமாதானம் பண்ணிக்கிறேன். நீயும் தம்பியும் ஹோம் வொர்க்க பண்ணுங்க” என்று ஜீவா மொழிய, “சரிங்கப்பா” என்றவள் அதியை சமாதானம் செய்து அழைத்து கொண்டு ஷியாமளாவின் அறைக்கு படிக்க சென்றாள்.

தன்னுடைய வார்த்தையை இத்தனை தூரம் நம்பும் மகளை எண்ணி விழிகள் பனித்தது‌.

விழிகள் அர்னவ்வை தேட அவன் அறைக்கு வந்ததுமே ஜானுவிடம் தாவியிருந்தான்‌. நடந்த கலவரங்களை கண்டு அவன் பயந்திருந்தான்.

“ஒன்னுமில்லைடா தங்கம்” என்று அவனை தோளில் போட்டு தட்டி கொடுத்து கொண்டிருந்தாள். அதனை கண்டவனுக்கு இவளை போய் அடித்து கொடுமை செய்கிறாள் என்று கூற எப்படி மனது வந்தது என்று தான் தோன்றியது.

ஜீவா அருகில் வந்ததும் பேச வேண்டாம் என்று சைகை செய்தவள் மகனை தூங்க வைப்பதில் மும்மரமாக இருந்தாள்.

ஜீவாவின் விழிகள் எதிரில் இருந்தவள் மீது படிந்தது. காலையில் குளித்து புது மலராக இருந்தவள் இப்போது அழுது கசங்கிய முகத்தோடு இருந்தாள்.

எல்லாவற்றிக்கும் நீதான் காரணம் என்று மனசாட்சி இடித்துரைக்க அவனிடத்தில் பதில் இல்லை.

முழுதாக பத்து நிமிடங்கள் ஆனது அவன் ஆழ்ந்த உறகத்திற்கு செல்ல அவனை மெத்தையில் படுக்க வைத்து விழுந்துவிடாதவாறு தலையணை வைத்தவள் கணவனருகே வந்து அமர்ந்து கொண்டாள்.

இருவரிடத்திலும் மௌனம் கோலோச்சியது‌. யார் முதலில் அதை உடைப்பது என்று தான் இருவரும் தயங்கி தவித்தனர்.

“சாரி ஜானு” என்ற ஜீவாதான் முதலில் அதனை உடைத்தான்.

“நடந்த எதுக்கும் நீ காரணம் இல்லை ஜீவா” என்று தன் உணர்வுகளை மறைத்து சோபையாக புன்னகைக்க, “நான் நேரடியா காரணம் இல்லைனாலும் என்னை வச்சு தான் உன்னை பேசுறாங்க” என்று பதிலளித்தான்

நேரம் சென்றதும் அதிர்ச்சியில் இருந்து ஓரளவு மீண்டிருந்தவள், “இது இல்லைனாலும் அவங்க வேற ஒரு காரணம் கண்டுபிடிச்சு பேசுவாங்க ஜீவா” என்றவள் அவன் முகம் பார்த்து, “என்னால நம்ப பசங்களுக்கு நல்ல அம்மாவா இருக்க முடியும் தான?” என்று வினவினாள். குரல் லேசாக தழுதழுத்தது.

அவளது முகத்தை கையில் ஏந்தியவன், “எனக்கே எதாவது ஆனாலும் நீ மூனு பேரையும் என் ஸ்தானத்தையும் சேர்த்து நல்லா பாத்துப்ப” என்று அவள் விழி பார்த்து உரைக்க, அதில் அவளது விழி நீர் கன்னம் தாண்டியது.

“இதுவரைக்கும் இழந்த இழப்பே போதும் நீ இப்படி பேசாத ஜீவா” என்று ஜானு கூற மௌனமாய் அவளது முகத்தை நெஞ்சில் புதைத்து கொண்டவன், “உன்னைவிட யாராலயும் அவங்களை நல்லா பாத்துக்க முடியாதுடி” என்றான்.

“அவங்க சாபம் விட்டு போனாங்களே ஜீவா” என்றவளது மேனி நடுங்கியது.

“எண்ணம் போல தான் வாழ்க்கை ஜானு. அவங்க சொன்னா நாம நல்லா இல்லாம போய்டுவோமா? நாம இன்னும் நூறு வருஷம் அல்லது குறைஞ்சது அம்பது வருஷமாவது சந்தோஷமா வாழ்வோம்” என்று நம்பிக்கையாக கூற, “நடக்குமா ஜீவா?” அவளது விழிகளில் ஏக்கம்.

“கண்டிப்பா நடக்கும். பேரப்பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ற வரை இருப்போம்” என்று அவளது விழிகளில் இதழ் பதித்து மீள, “ஜீவா இந்த தனிக்குடுத்தனம் கண்டிப்பா வேணுமா? அத்தை என் கையை பிடிச்சு கேட்டப்போ எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை” தவிப்புடன் முகம் கண்டாள்.

“கண்டிப்பா போகணும் டி. இதுக்கும் மேல நாம இங்க இருந்தா அத்தை இன்னும் பேசுவாங்க” என்று ஜீவா அழுத்தி கூற, “ஆனால் நாம குடும்பத்தை பிரிக்கணுமா? நான் வந்து குடும்பத்தை பிரிச்சிட்டேனு மத்தவங்களுக்கு தோணாதா?” என்று கவலை அப்பிய குரலில் வினவினாள்.

“இங்க நடந்ததை பாத்தவங்க யாரும் அப்படி நினைக்க மாட்டாங்க. அப்படியே நினைச்சாலும் எனக்கு கவலை இல்லை. நமக்கு நம்ம நிம்மதி முக்கியம். இங்கயே இருந்து அத்தையோட பேச்சை வாங்க முடியாது” என்று ஜீவா எடுத்துரைக்க, அதில் நியாயம் இருந்தாலும் ஜானு தயங்கினாள்.

“எனக்கு கூட்டு குடும்பத்தில வாழ ரொம்ப ஆசை‌. உனக்கு தெரியும் தான ஜீவா?” என்று கேட்க, “தெரியும்” என்று தலையசைத்தவனுக்கு தனியாக வளர்ந்தவளுக்கு கூட்டு குடும்பத்தின் மீது எவ்வளவு ஆசை என்று தெரிந்திருந்தது.

‘இருந்தும் ஏன் அடம்பிடிக்கிறாய்?’ என்று வினாவை விழிகளில் தேக்கி ஜீவாவை காண, “ஆசையை விட இப்போ நமக்கு நிம்மதி ரொம்ப ரொம்ப முக்கியம் ஜானு. பக்கத்து வீட்ல தான இருக்கோம். ரெண்டு எட்டு எடுத்து வச்சா இங்க வந்திடுவோம். கொஞ்ச நாளைக்கு தான் நிரந்தரமா இல்லை. மத்தவங்களுக்கு புரிஞ்ச மாதிரி அத்தைக்கும் புரியணும். அப்புறமா நாம இங்க வந்திடலாம்” என்று அவளது சிகையை வருட, “ஹ்ம்ம்‌” என்று பெருமூச்சோடு தலையசைத்தாள்.

“கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு. காலையில இருந்து நிறைய வேலை உனக்கு” என்று ஜீவா அவள் சோர்ந்த முகத்தை பார்த்து கூற, “சரி” என்று தலையசைத்து படுத்து கொண்டவளுக்கும் ஓய்வு தேவையாக இருந்தது.

படுத்த சிறிது நேரத்திலே உறங்கி போனவளை வாஞ்சையுடன் பார்த்தவன் எழுந்து வெளியே வர, “அப்பா நாங்க ஹோம் வொர்க் முடிச்சிட்டோம்” ஜீவி அதியுடன் வந்தாள்.

“முடிச்சிட்டிங்களா குட்” என்று பாராட்டியவன், “அம்மாவும் தம்பியும் தூங்குறாங்க. அவங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று அறிவுரை வழங்கினான்.

“அப்பா கேக் வாங்கி கொடுங்க” என்று அதி அவனது காலை கட்டி கொள்ள, அவனுக்கும் வெளிய சென்று வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

“ஹ்ம்ம் போகலாம். பர்ஸ் மொபைல் எடுத்துட்டு வர்றேன் கீழ போங்க” என்றவன் அறைக்கு வந்து அலைபேசியை எடுத்துவிட்டு திரும்ப புகைப்படத்தில் சிரித்து கொண்டிருந்த லாவண்யா அவனை கவனிக்க வைத்தாள்.

நடந்த கலவரத்தில் இன்றைய தினம் கூட அவனுக்கு பின்னுக்கு சென்றிருந்தது. லாவண்யாவின் முகத்தை வெறித்தவன் மனதிற்குள், ‘நீ தான் எல்
லாவற்றையும் சரி பண்ணணும். நடக்குறதை பாத்திட்டு தான இருக்க’ என்று கூறிவிட்டு அமைதியாக வெளியேறினான்.







 
Well-known member
Messages
489
Reaction score
350
Points
63
Thilagavathi avangalukku irukirathu nakku ah illa vera ethavathu ah konjam kooda yosikama eppudi pesuraga ah
 
Top