• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 17

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93
அத்தியாயம் 17



சாராவை அணைத்தது மட்டுமே ஆடவனின் நினைவில் இருந்தது. பாவையின் அருகாமை கொடுத்த இதத்தில் விழிகள் தாமாகவே நித்திரையை தழுவி இருந்தது. திருமணம், அடுத்து மருத்துவமனை என்று கடந்த ஒரு வாரமாகவே சுற்றியதால் இருவருக்குமே ஆழ்ந்த நிம்மதியான உறக்கம் இருந்ததிருக்கவில்லை.

மல்லிகா வேறு புலம்பி இருந்தார். "என்ன டி, இந்த பொண்ணு கல்யாணத்தைன்னைக்கா மயங்கி விழணும். சும்மாவே மெல்ல எது கிடைக்கும்னு திரியுறவங்களுக்கு மத்தியில தான் நம்ம வாழ்ந்திட்டு இருக்கோம். நீ வந்த நேரம் தான் இப்படியாகிடுச்சுனு சொல்லிடுவாங்களோ, ஆனா உன் மாமியார் பேச்சை பார்த்தா நல்ல விதமா தான் இருக்கு ஆனா யாராவது எதாவது சொல்லிக் கொடுத்து உன்னை பேசிடாம" என்று புலம்பி இருக்க, "ப்ம்ச், ம்மா.. அவங்க யாரும் அப்படி நினைக்கறவங்க இல்லை, சித்தை மீறி யாரும் எதுவும் என்னை சொல்லிட மாட்டாங்க அதுவுமில்லாம அத்தையும் அப்படி எல்லாம் யார் சொல்றதையும் கேட்டு பேசுற ஆள் கிடையாது. நீயே எதையாவது கிளப்பிவிடாத" என்று கடிந்திருந்தாலும் அவளுள்ளும் சின்ன நெருடல் இருக்கவே செய்தது,
ஷர்மியை மருத்துவமனை அனுமதித்திருந்ததைக் குறித்து. ஆனால் அகிலா, "நல்லவேளை கல்யாணத்து முன்னாடி இப்படி நடக்கலை, இல்லை இவளை ஹாஸ்பிடல் வைச்சுட்டு மண்டபத்துக்கும் வீட்டுக்கும் அல்லாடி இருப்போம். கெட்டதிலையும் ஒரு நல்லது தான். ஆனா உன்னை தான் சரியா கவனிக்க முடியலை, எங்களோட சேர்ந்து நீயும் எதுக்கு அலையுற, பேசாம நீயும் அவனும் உங்கம்மா வீட்டில கூட இரண்டு நாள் இருக்களேன்" என்று பேசியிருக்க சாராவிற்கு அவளையும் அறியாமல் அவரின் மேல் ஒரு பிடித்தம் தோன்றியிருந்தது. அதாவது அவரின் இரண்டு மக்களை போலவே சாராவிடமும் இயல்பாய் உரையாடி ஒட்டிக் கொண்டார் அப்பெண்மணி.


காலையில் உறங்க தொடங்கியவர்கள் உணவு கூட வேண்டாம் என்ற ரீதியில் ஆழ்ந்த துயிலில் இருக்க அஸ்வின் மதியம் போல் வந்து அழைப்புமணியை அழுத்தியிருந்தான். அப்பொழுது தான் அடித்து பிடித்து இருவருமே எழுந்தமர்ந்தனர். சாரா, ஒரு நிமிடம் அதிர்ந்தே விட்டாள் ஆடவனின் வருகையில், விழிகள் விரிந்தது தன்னை போல் இயல்பாய், 'அவனை எதிர்பார்க்கவில்லை என்பதை அப்பட்டமாய் வெளிக்காட்டி!'... அந்த விழியசைவின் அபிநயத்தின் மீது அவனின் பார்வை ரசனையாய் படிந்தது.


ஆனால் சட்டென்று ஒரு கோபம் துளிர்த்தது. 'இவனை யார் வரச் சொன்னது? முழித்திருக்கும் பொழுது திரும்பி கூட பார்க்கவில்லையாம்! உறங்கும் பொழுது கட்டியணைத்து படுத்திருக்கிறான். ஒரு வேளை மற்ற நான்கு நாளும் இப்படி தானோ? எனக்கு தான் தெரியவில்லையோ?" என்று நொடித்து அவளது எண்ணங்கள் சீரான அலைவரிசையில் கடந்த நாட்களை குறித்து பயணிக்க துவங்க விழிகள் இன்னும் ஆடவனையே, 'பே' வென விரிந்து சிறையெடுத்துக் கொண்டிருந்தது. ஆளை விழுங்கும் பார்வை தான், உணர்ந்து கொண்ட ஆடவனுக்கு சட்டென்று புன்னகையை பூக்க தலையை கோதிக்கொண்டான். மாறாக பெண்ணின் இதழ் விரியவே இல்லை. இல்லை, அவ்வாறு இறுக்கி பிடித்துக் கொண்டாள். ஏற்கனவே வெட்கம் கெட்டு அவனின் பின்பு செல்லும் தன் மனதை குறித்து நிறைய கழிவிரக்கம் அவளுள் உண்டு. 'அதெப்படி நீ அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கலாம்?' என்று போராடி போராடி தோற்ற வரலாறு ஏராளமாகவே உண்டு. உணர்ச்சியின் பிடியில் அல்லது கோபத்தில் உச்சியில் மட்டுமே அந்த கட்டுப்பாடுகளை தகர்த்திருக்கிறாள், அதுவே இத்தனை இடைவெளிகளை பரிசாக தந்திருந்ததே.



பார்வை பரிமாற்றத்தில் லயித்திருந்தவர்களை மீண்டும் ஒலித்த அழைப்பு மணி கலைத்தது. எழ முயன்றவளை முந்திக் கொண்டவன், "நான் பார்க்கிறேன்" என்று வெளியேற தலையை பிடித்துக் கொண்டவளுக்கு உறக்கத்தில் இருந்தது எழுந்தது லேசான ஒரு தலைவலியை கொடுத்திருந்தது. வேகமாக எழுந்தவள் ஓய்வறை சென்று முகம் கழுவி வெளியில் வந்து மணியை பார்க்க இரண்டை நெருங்கி இருந்தது. 'இவ்வளவு நேரமா தூங்கிட்டேன்' என்று நெற்றியை தட்டிக் கொண்டவள் வெளியில் வர சித்விக் அஸ்வினுடன் நின்று உரையாடிக் கொண்டிருந்தான்.


"என்னடா ஆஃப்டர்நூனே வந்திட்ட?" என்று வினவிய சாரா அவனருகில் செல்ல, "காலையில சொன்னேனே! இன்னைக்கு எக்ஸாம், அதான் எழுதிட்டு வந்திட்டேன்" என்றான் தம்பி.


"ம்ம், மறந்திட்டேன். சாப்பிட்டியா நீ?" என்றவள் அடுப்பறை நோக்கி விரைய, "இல்ல, ஒன்னோ க்ளாக் தான் எக்ஸாம் முடிஞ்சது. வரும் போது ஹோட்டல் போகலாம் நினைச்சேன், சரி வீட்டுக்கு தான போறோம் இங்க வந்து பார்த்துக்கலாம்னு வந்திட்டேன்" என்று தனது பையை ஷோஃபாவில் வைத்து விட்டு உணவு மேஜையில் இருந்த தண்ணீரை வாயில் சரித்துக் கொண்டவன் அங்கேயே அமர்ந்தும் கொண்டான்.


"நான் எதுவுமே செய்யலை, வெஜிடபுள் எதாவது இருக்கா என்ன? வாங்கி வைச்சியா?" என்றவள் கைகள் குளிர்சாதன பெட்டியை ஆராய, "இல்ல சாரா, நானே நேத்து தான வந்தேன். எக்ஸாம்க்கு படிக்கவே நேரமில்ல. நேத்து முழுசும் வெளியில வாங்கி தான் சாப்பிட்டேன். இப்போதைக்கும் நான் ஆர்டர் பண்ணிடுறேன். நீ ஈவ்னிங் போய் வாங்கிட்டு வந்திடேன்" என்றவன் கூடுதல் இணைப்பாக, "நான் இன்னைக்கு நைட் ஹாஸ்டல் போய்டுவேன் சாரா, வொன் வீக் கழிச்சு எக்ஸாம் முடியவும் தான் வருவேன்" என்றான்.



பாலை எடுத்து பிரித்தவள் பாத்திரத்தில் ஊற்றி அதை அடுப்பில் ஏற்றி விட்டு, "ஏன்டா?" என்ற வினாவோடு அவனருகில் வர, அஸ்வின் விழிகள் சுற்றிலும் அலைபாய சித்விக் அங்கிருந்திருக்கவில்லை. எப்பொழுதோ அவன் அறைக்குள் நுழைந்திருந்தான். "குரூப் ஸ்டடி சாரா, நீ மட்டுமிருந்தா ப்ரெண்ட்ஸை வீட்டுக்கு வரச்சொல்லிடுவேன் ஆனா மாமாவும் வந்திருக்காங்களே! அவங்க எதாவது நினைச்சிட்டா, டிஸ்டர்ப் பண்ண வேணாம் சோ நான் புக் எடுத்திட்டு போக தான் இன்னைக்கே வந்தேன்" என்றான்.

(தொடர்ந்து கீழே படிக்க)
 
Last edited by a moderator:
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93
அவன் கூறுவது அவளுக்கும் சரியாக தோன்ற தலையை இருபுறமும் உருட்டியவள், "காபி போட போறேன், உனக்கு வேணுமா?" என்று மீண்டும் அடுப்பறை நுழைய, "இல்ல இப்ப ஃபுட் வந்திடும், ஒரேதா சாப்பிட்டுக்கிறேன்" என்றவன் தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டான்.


சாரா, அவளுக்கும் சித்விக்கிற்கு இரண்டு குவளை தேநீருடன் வெளியில் வர அவன் மட்டும் தான் இருந்தான் அலைபேசியில் எதையோ சுவரசியமாக பார்த்தப்படி உணவு மேஜையில் அமர்ந்து கொண்டு.

எதுவுமே பேசாது குவளையை அவன் முன் வைத்தவள் அஸ்வினை விழிகளால் தேடி அவனது அறைக்குள் எட்டி பார்க்க புத்தகங்களை பையில் நிரப்பிக் கொண்டிருந்தான் ஆர்வமாக.


மீண்டும் வந்து சித்விக் எதிரில் அமர்ந்தவள் தன்னுடைய குவளையை கையில் எடுத்துக் கொண்டு பருக துவங்க, "தாங்க்ஸ் சாரா, நானே கேட்கணும் நினைச்சேன்" என்றிட பெண் நிமிரவே இல்லை. 'போடா, யாருக்கு வேணும் உன்னுடைய நன்றி, நீ தான் என்னுடன் பேச மாட்டியே!' என்று எண்ணிக் கொண்டவளுக்கு ஒரு வித அலட்சிய பாவம் வந்து ஒட்டிக் கொள்ள அசையவே இல்லை. அவனுடைய வார்த்தைகளை காதில் வாங்காதது போல் கருமமே கண்ணாக தேநீரை துளி துளியாக உள்ளிறக்கி கொண்டிருந்தாள். அவளுடைய உடல் மொழி ஆடவனுக்கு சட்டென்று ஒரு வித எரிச்சலை கொடுத்திருக்க, "ப்ம்ச், சாரா, என்னை நிமிர்ந்து பாரேன் டி" என்றவன் வார்த்தை அதட்டுதலாக வெளி வர அது இன்னுமே அவளுள் ஒரு வித வீம்பைக் கொடுத்திருக்க குவளையை பிடித்திருந்த பாவை கரங்களின் அழுத்தம் மேலும் கூடியது. இன்னும் சற்று அழுத்தினால் கூட அந்த கண்ணாடி குவளை உடைந்து சிதறும் அபாயம் உண்டு.



அவளின் இறுகிய நிலையை உண்ர்ந்து கொண்ட ஆடவன் அதற்கு பின் பேசவே இல்லை, அவனின் பார்வை ஆழமாக பேதையை ஊடுருவ, அவளால் அதனின் வீச்சை தாங்க இயலவில்லை தான். 'மனமோ அவனிடம் சரணடைய யாசித்துக் கொண்டிருக்க' வெகு சிரமத்துக்கிடையில் அதனை தன் வசப்படுத்திக் கொண்டிருந்தாள் பாவை. அழைப்பு மணி மீண்டும் ஒலிக்க, இருவருக்கும் முன்பாக அஸ்வின் கதவருகே விரைந்திருந்தான், "ஃபுட் வந்திருச்சு போல!" என்றபடி.


உணவை வாங்கி வந்து டேபிளில் வைக்க சாரா எழுந்து அடுப்பறை நுழைந்திருந்தாள் காலி குவளைகளை வைத்து விட்டு தட்டுக்களை எடுத்து வருவதற்காக.


"சாப்பிடலாம் வாங்க மாமா" என்ற அஸ்வின் பொட்டலங்களை பிரிக்க, "இல்ல வேணாம், நீங்க சாப்பிடுங்க. நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்" என்ற சித்விக் எழுந்து அறைக்குள் நுழைந்து கொண்டான்.


"என்னவாம்?" என்ற சாரா, அஸ்வின் பிரித்து வைத்த உணவை தட்டில் போட்டு அவனுக்கு வைக்க கைகளை கழுவி வந்து அமர்ந்தவன், "வேணாம் சொல்லிட்டு போறாங்க, மார்னிங் சாப்பிட்டிருக்க மாட்டாங்க நினைக்கிறேன்" என்றிட காதில் வாங்கினாலும் அமைதியாய் அமர்ந்து விட்டாள்.

"சாரா, நீ போய் திரும்ப கூப்பிட்டு பாரேன்" என்ற அஸ்வின் உணவை தொடாமல் அமர்ந்து கொள்ள அவனை ஒரு பார்வை பார்த்தவள் பெருமூச்சு விட்டு அறைக்குள் நுழைய படுக்கையில் கவிழ்ந்து படுத்திருந்தான்.


"சித் சாப்பிட வாங்க" என்றவள் குரலில் அவன் இப்பொழுது அசையவே இல்லை. "சித்" என்றவள் சென்று தோளை தொட, "போடி" என்றவன் கையை தட்டி விட, "ப்ம்ச், இப்ப வர முடியுமா? முடியாதா? அஸ்வின் வேற உங்களுக்காக சாப்பிடாம வெய்ட் பண்றான்" என்றாள் அவனை எழுப்பும் பொருட்டு.

அவளின் வார்த்தைகளில் சட்டென்று எழுந்து அமர்ந்து கொண்டு, "அப்ப அவனுக்காக தான் கூப்பிட வந்த? நான் சாப்பிடலைன்னா உனக்கு பிரச்சனையில்ல அப்படி தான?" என்ற கேள்வியில், 'இதென்னடா வம்பா போச்சு' என்று நெற்றியை தேய்த்தவள், "ம்ம், நீங்க எங்க போறீங்கனே எனக்கு தெரியறது இல்ல, அப்புறம் சாப்பிடுறதும் சாப்பிடாததும் மட்டும் எனக்கு எப்படி பிரச்சனையாகும்?" என்றாள் ஒரு வித நலிந்து உள்ளிறங்கிய குரலில்.


"ஹேய் புரியுற மாதிரியே பேச மாட்டியா நீ?" என்ற சித்விக் ஆயாசமாக அவளை பார்க்க, "சாப்பிட வாங்க" என்றவள் அதற்கு மேல் பேசாது கதவை அத்தனை வேகத்துடன் அடைத்து விட்டு வெளியேறினாள். அந்த ஒலியின் வேகம் கூறியது, 'நீ வந்தாக வேண்டும்' என்ற கட்டளையை. 'அவள் இத்தனை அமைதியாய் நடந்து கொண்டதே அதிசயம். நீயாய் கலாட்டாவை ஏற்படுத்தி விடாதே. அஸ்வின் வேறு இருக்கிறான். அவள் வெடித்து விட்டாள் கண்டிப்பாக யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கவே மாட்டாள். உன்னாலுமே அவளை கட்டுப்படுத்த முடியாது' என்பதை மனது இடிந்துரைக்க அவசரமாக எழுந்து வெளியில் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டான்.


இருவருமே அமைதியாய் உணவை உள்ளிறக்க அஸ்வின் தான் இருவரிடமும் வாய் கொடுத்தான். சித்விக்கும் சரி சாராவும் சரி அவனுக்கு பதில் மட்டுமே கொடுக்க விழைய உணவை உண்டு முடித்திருந்தனர். அஸ்வின் நேரத்தை பார்க்க மூன்றை கடந்திருந்தது.


"நான் கொஞ்சநேரம் தூங்கிக்றேன் சாரா, நைட் சாப்பிட்டு தான் கிளம்புவேன். நீ நாளையிலிருந்து ஆபீஸ் போகணும் தான? போய் தேவையான திங்க்ஸ் மட்டும் வாங்கிட்டு வந்திடு, அதான் மாமா இருக்காங்களே, அழைச்சுட்டு போ" என்று உறங்க சென்று விட்டான். ஆம், அவர்கள் இருவரும் குடியேறியதில் இருந்து இருவருமே இணைந்து தான் சமைத்து உண்கிறார்கள். சாராவிற்கு அத்தனை சுவையாக சமைக்க தெரியவில்லை என்றாலும் ஓரளவு சமைப்பாள். அதுவும் இரண்டு பேர் என்பதால் அதொன்று அத்தனை சிரமமாக இருக்கவில்லை. கார்த்திக் உடன் இருக்கும் பொழுது அவனே சமைத்து விடுவான், அஸ்வினும் சாராவுடன் உதவிக்கு நின்றிடுவான். வாரத்தில் இறுதி நாள் விடுமுறையன்று சென்று ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் சமையலுக்கு தேவையான இத்தியாதிகளை வாங்கி வந்து விடுவார்கள். கல்யாணத்திற்கு கிளம்பியவர்கள் சில வாரம் கழித்து வந்திருக்க வீடு துடைத்து வைத்தாய் போலிருந்தது.


'சித்தை அழைக்க வேண்டுமா?' என்ற தயக்கங்களுடனான எண்ணத்தில் அறைக்குள் நுழைந்திருந்தாள். முன்பெல்லாம் 'அவனுடன் செல்ல போகிறோம்' என்ற எண்ணங்கள் கூட பாவைக்கு பேரூவகையை கொடுக்கும். மாதத்தில் அந்த ஒரு நாளுக்காக, அவனை பார்ப்பதற்காக ஏங்கி தவித்து காத்திருந்த இனிமையான தருணமெல்லாம் உண்டு. ஆனால் இப்பொழுது அருகிலே இருக்கிறான் அவனை உணரவே முடியவில்லை, 'என்ன தான் வேண்டும் எங்களுக்கு? எதற்கு வாழ்க்கையை இத்தனை இடியாப்ப சிக்கலாக்கி கொண்டிருக்கிறோம். அவன் எப்பொழுதும் விலகி தானே நிற்பான். நீ தானே நெருங்குவாய்? இப்பொழுது மட்டும் புதிதா ஏன் இந்த வீம்பு, எங்கிருந்து முளைத்தது? அவனிடம் ஏன் எதிர்பார்த்து ஏமாறுகிறாய்?' என்று மனது இலக்கில்லாமல் அலைபாய துவங்க மனதில் பாரமேறிக்கொண்டது.


அமைதியாய் அறைக்குள் நுழைந்தவள் விழிகள் ஆடவனை ஆராய தீவிரமான அலைபேசி உரையாடலில் இருந்தான். பெருமூச்சை இழுத்து விட்டவள் தன்னுடைய உடைகளை ஆராய்ந்தெடுத்து குளியலறை புகுந்து கொண்டாள். இந்த ஒரு மாதத்தில் ஆடவனின் புறக்கணிப்பு பெண்ணை வெகுவாகவே தாக்கி உடைய செய்திருந்தது. எத்தனை முறை அவளே சென்று பேசினாலும் அவனிடம் சூழ்ந்திருந்த இறுக்கங்கள் அவளை தள்ளி அதாவது வெகுதூரமாக தள்ளி நிற்கும்படி உந்தியது.


தயாராகி வெளியில் வந்தவள் கண்டது என்னவோ மடிக்கணினியுடன் அமர்ந்திருந்தவனை தான். அவனின் தீவிர பாவத்தில், கணினியை அவளின் விழிகள் ஆராய அது அஸ்வினுடையது. எதுவுமே கூறாது கண்ணாடி முன் நின்று தயாராகி முடித்தவள் அவன் முன் நிற்க இப்பொழுது தான், 'என்ன?' என்பதாய் நிமிர்ந்து பார்த்தான்.


தயக்கங்களை உடைத்து, "ஷாப்பிங் போறேன், வர்றீங்களா?" என்றாள். அவளின் இந்த விலகலான பேச்சக்களை சுத்தமாகவே ஆடவனுக்கு பிடிக்கவில்லை. எப்பொழுதும் உரிமையாக அதிரடியாக, 'வர வேண்டும்,செய்ய வேண்டும்' என்ன கட்டளைகள் மட்டும் நிறைந்த அவளின் வார்த்தைகள் பூசிக் கொண்ட தயக்கங்கள் அவனுக்கொரு ஆயாசத்தை கொடுத்திருந்தது. 'ஏதாவது பேசி சரி செய்து கொள்ளேன்டா, அவளிடம் என்ன உனக்கு தயக்கம்?' என்று மனது ஆர்பரித்தாலும் மூளை எதையுமே பேசுவதற்கான கட்டளைகளை விதிக்கவே இல்லை போலும்.


"ம்ம், போகலாமே. எனக்கு சேஞ்ச் பண்ண ட்ரெஸ் வேணும். அவசரத்தில எதுவுமே எடுத்திட்டு வரலை" என்றவன் குரலில் தான் அவனையே கவனித்தாள். அவனின் உடை அதிகமாகவே கசங்கியிருந்தது. 'சாரா..என்ன தான் செய்து கொண்டிருக்கிறாய்?' என்று மனது கடித்தது. ஆம், திருமண முடிந்து அவனுடைய வீட்டிற்கு சென்ற நான்குநாட்களில் எதையுமே அவள் தேடியதில்லை.

உடையிலிருந்து உணவு வரை அவளை தான் தேடி வந்தது. மேலும் அவளுக்கிருந்த இத்தியாதி தேவைகளுமே தானாகவே நிறைவேறியிருந்தது யாரையுமே கேட்காது. காரணம் வேறொன்றுமில்லை சித்விக் மட்டுமே. அவன் தன்னை கவனிக்கவில்லை என்ற மாயையில் சிக்கிக் கொண்டாலும் 'அது அப்படி இல்லை'என்று நிறைய இடங்களில் உடைத்து சிதற செய்திருந்தான். ஆனால் அதை உணரும் நிலையில் அவள் தான் இருந்திருக்கவில்லை.



ஆக, சிந்தனையிலிருந்தவள் அசையாது நிற்க சித்விக் மடிக்கணினியை மூடி வைத்து கார் சாவியை எடுத்திருந்தான். "சாரி" என்று முணுமுணுத்தவள் அவசரமாக அஸ்வின் அறைக்குள் நுழைய அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனை தொந்தரவு செய்யாது கபோர்டை ஆராய்ந்து அஸ்வினின் புது உடை ஒன்றை எடுத்து அறைக்குள் நுழைந்து சித்விக்கிடம் நீட்டியிருந்தாள், "சேஞ்ச் பண்ணிக்கோங்க, கிளம்பலாம்" என்பதாய்.


அவள் நீட்டியதை வாங்காது ஆராய்ச்சி பார்வை செலுத்தியவன், 'வேண்டாம்' என்று மறுப்பாய் இருபுறமும் தலையசைக்க அவளுக்கோ கண்ணீரே வரும் போல் இருந்தது. ஆனாலும் ஒட்டிக் கொண்ட பிடிவாதத்துடன் நீட்டிக் கொண்டே நின்றிருந்தாள், 'நீ வாங்காது நகர மாட்டேன்' என்பதாய்.


அவளை உணர்ந்தவன் கையிலிருப்பதை வாங்கி படுக்கையில் போட்டு விட்டு, "வா போகலாம்" என்று நிற்க பெண் அப்படியே படுக்கையில் அமர்ந்து கொண்டாள் விழிகளாலே தனது அதிருப்தியை காட்டி. ஏற்கனவே இருந்த குற்றவுணர்வை அவனின் நடவடிக்கை மேலும் கிளறி விடப்பட்டிருக்க, 'எங்குமே செல்வதற்கு மனமில்லாது ஒரு ஆயாசம் வந்து ஒட்டிக் கொள்ள, போங்கடா, நான் எங்குமே வரவில்லை' என்று கத்த மனது விழைய அடக்கி அமர்ந்திருந்தாள். 'சாரா, இது நீயா?' என்று மனது ஆர்பரித்தாலும் நிறையவே மாறி இருந்தாள். ஏனென்று அவளுக்கே தெரியவில்லை தான்.


நொடியில் சிவந்து போன அவளின் மூக்கின் நுனியும், பேச துடித்த இதழை அடக்கி கடித்து, தேங்கிய விழிநீரை உள்ளிழுத்தப்படி அமர்ந்திருந்த நிலையும் ஆடவனை ஆழ்மனது வரை சென்று தாக்க அமைதியாய் நகர்ந்து அமர்ந்திருந்தவளை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் பிடித்துக் கொண்டான். பெண்ணின் ஒவ்வொரு அணுவும் அதிர்ந்து நடுங்க உடம்பிலுள்ள மயிரிழைகள் எல்லாம் கூசி சிலிர்த்து நின்றது. ஆம், இத்தனை நாட்களில் அவனே அவளை நெருங்கியதாக சரித்திரமே கிடையாது. அவள் தான் ஒட்டிக்கொண்டே திரிவாள். இந்த அணைப்பு பாவையை அதிகமாகவே தாக்க முனைய நிமிர்ந்து அவனது வதனத்தை பார்க்க முயன்றாள். 'வேண்டாம்' என்று மறுத்து அவளின் முகத்தை தன் வயிற்றுடன் வைத்து அழுத்திக் கொண்டான். ஆம், பெண்ணவளின் விழிகள் கடத்தும் வலிகளை அனுபவிக்குமளவிற்கு துணிவில்லை தான் அவளின் கணவனுக்கு.


அவளுக்கும் இப்படியே புதைந்து விடும் வேகம் தான். இயல்பிற்கு திரும்ப நொடிகள் அல்ல நிமிடங்களே தேவையாயிருந்தது.


விலகி அமர்ந்தவள் நிமிர்ந்து பார்க்க, "ட்ரெஸ் சைஸ் எனக்கு சரியா இருக்காது சாரா" என்றவன் வார்த்தையில், 'ஆஹா, அப்படியா? போடா டேய்' என்று நம்பாத பார்வை மனைவி கொடுக்க அந்த பாவனை அவனுக்கு அப்படியொரு புன்னகையை கொடுத்திருந்தது. மலர்ந்து விரிந்த அவனின் வதனத்தை பார்த்தப்படி சிலையென சமைந்து அமர்ந்திருந்தவளை தலையில் லேசாக தட்டியவன், "கெட்அப் சாரா, போகலாம்" என்பதாய் இடையில் கைக்கொடுத்து தூக்கி நிறுத்தியிருந்தான்.

அவளின் இதழையும் புன்னகை ஆக்கிரமிக்க இருவரும் காரில் ஏறி கிளம்பி இருந்தனர் பல்பொருள் அங்காடியை நோக்கி. முதலில் இருந்த இறுக்கத்தை குறைத்து ஒரு வித இலகு தன்மையை உருவாக்கி இருந்தது ஆடவனின் செயல்கள்.
காரில் ஏறியவுடனே மல்லிகா அழைத்து விட்டார் மகளுக்கு. பேசி முடிக்க அடுத்து அகிலா, "என்னம்மா சித் வந்திட்டானா? என்ன பண்ற?" என்று ஆரம்பித்தவரின் பேச்சுக்கள் நீள அமைதியாய் அதிக சத்தமில்லாது பதில் தந்தப்படி அமர்ந்திருந்தாள். அவனும் அவளின் வார்த்தைகளையும் பதில்களை காதில் வாங்கியப்படி காரை இயக்கியிருக்க சிறிது நேரத்தில் கடைக்குள் நுழைந்திருந்தனர்.


பாவை அலைபேசியில் வைத்திருந்த லிஸ்ட்டுக்களில் உள்ள பொருட்களை தேடி எடுத்துக் கொண்டிருக்க ஆடவனும் அவளுடன் நடந்தான் ட்ராலியை தள்ளிக்கொண்டு. ஒரு வித இதமான மனநிலை இருவருக்கும் நெடுநாட்களுக்கு பிறகு. அதை விட ஆடவன் செயல்களால் அவளை நிறைத்திருந்தான் என்று கூறிடலாம்.


அரை மணி நேரமாகிற்று சாரா பொருட்களை வாங்கி முடிக்க, அடுத்து சித்விக்கிற்கு இரண்டு உடை எடுத்தார்கள். அவள் தான் நிறம் பார்த்து தேர்ந்தெடுத்தாள். அளவு கூறியவனுக்கு அவளின் பின்பாக சுற்றும் வேலை தான். மனைவியின் மீது ஆடவன் கண்கள் இரசனையாக படித்து மீள அவளோ ஆர்வமாக உடையை புரட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்.


எல்லாவற்றையும் முடித்தவர்கள் கிளம்பி இருந்தனர். வழியில் நிறுத்தி அவளுக்கு பழச்சாறு வாங்கி கொடுத்திருந்தான். பருகி முடிக்க அஸ்வினுக்கு ஒன்றை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி விரைந்திருந்தனர்.


அவர்கள் வீடு வந்து சேர லேசாக இருட்ட துவங்கி இருந்தது. உள்ளே நுழைந்தவள் பொருட்களை வைத்து விட்டு விளக்குகளை ஒளிர செய்து முகம் கழுவி நேற்று மல்லிகா கட்டிக் கொடுத்தனுப்பிய பூவை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்தாள். பூஜையறை, சிறிதான சுவற்றுடன் ஒட்டிய மரப்பலகை மட்டுமே. சாராவிற்கு அத்தனை விருப்பமில்லை என்ற பொழுதிலும் மல்லிகா வற்புறுத்தலின் பெயரில் தொடங்கியது இப்பொழுது பிடித்தத்தையும் கொண்டு வந்திருந்தது. பூவை சிறிது சிறிதாக வெட்டி அங்கிருந்த இரண்டு மூன்று படங்களுக்கு போட்டு விட்டு மீதியை தனது தலையில் சூடிக் கொண்டாள். ஊதுபத்தி ஏற்றியவள் அங்கிருந்த சிறிய விளக்கை ஏற்றி இரண்டு நிமிட கண் மூடி நின்று விட்டாள் அமைதியாய். சித்விக், நுழைந்தவுடன் ஷோஃபாவில் அமர்ந்தவன் தான் நகரவே இல்லை. பார்வையால் அவளை ஆராய்ந்து கொண்டிருந்தான். அவள் தான் வீட்டிற்குள்ளே அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாளே. வீட்டை நிரப்பியிருந்த அந்த பத்தியின் மணமும் அந்த அமைதி பொருந்திய சூழல் இதழில் உறைந்த புன்னகையுடன் அலைபாயும் அவனின் மனைவி என்று அந்த நிமிடம் ஆடவனுள் அப்படியொரு நிறைவை வாரி வழங்கியிருந்தது.



அடாவடியாக அதிரடியாகவே பார்த்த மனைவியின் இந்த அமைதி பரிமாற்றம் கூட ஆடவனுக்கு பிடித்திருந்தது. 'அஸ்வின் எழுந்து விட்டானா?' என்று அறையை எட்டிப்பார்த்தவள் சித்விக்கிடம் வந்து நின்றாள், "ஏதாவது வேண்டுமா?" என்று வினாவை தாங்கி.

இருபுறமும் தலையசைத்தவன் கைகளை அவளை நோக்கி நீட்டியிருந்தான் ஆடவன், 'இப்பொழுதே வந்து சரணடைந்து விடு' என்பதாய்.

இடுப்பில் கையூன்றி புன்னகையுடன் அவனை முறைத்தவளின் புருவம் ஏறி இறங்க, 'போடா, எனக்கு வேலையிருக்கு?' என்று பார்வை பார்த்தாள். 'அவன் காதலை கூறிய பொழுதும் இப்படி தானே கைகளை விரிந்து நின்றான்' என்ற எண்ணங்கள் விரிய பாவை மனதினுள் சட்டென்று ஒரு வித குளுமை விரவி இருந்தது. அதை வதனமும் பிரதிபலிக்க ஆடவனுள் இன்னுமே ஆர்வம் பிறந்தது அவள் விழியசைவின் அபிநயத்தில். புன்னகையுடன் எழுந்தவன் வேகத்தில் பாவை அதிர்ந்து இரண்டடி தள்ளி நிற்க, 'சாரா நீயா இது?' என்று ஆடவன் விழிகள் கேலியாய் நகைத்தது.

அவளின் விழிகள் அஸ்வின் அறையை நோக்கி தீண்டி மீள கதவு பூட்டப்படாது திறந்தே இருந்தது. 'எப்பொழுது வேண்டுமானாலும் உறக்கம் கலைந்து எழுந்து வரும்' வாய்ப்புண்டு. இருந்தும் அவனை நெருங்கியவள் மார்பில் முகத்தை வைத்து அழுத்தி அவனின் சட்டையை இறுக பற்றிக் கொள்ள எப்பொழும் அவஸ்தையுடன் விலகி ஓடுபவன் நின்று நிதானமாக அவளை உள்வாங்க முயன்றான். 'இது அவளின் மீதான உரிமையில் வந்த நிமிர்வு' என்று பெண்ணவளுக்கும் உணர்த்தினான் செயல் மூலம்.


ஏனோ அவளையும் அறியாது நீர் துளிகள் விழிகளை ஆக்கிரமிக்க உணர்ந்து கொண்ட ஆடவன் முகத்தை நிமிர்த்தி, 'ஏன்டி' என்பதாய் துடைத்து விட விலகி நின்று கொண்டாள் பெண்.


தலையை கோதியவனின் விழிகளும் அஸ்வின் அறையை நோக்கி செல்ல சரியாக எழுந்து வெளியே வந்துக் கொண்டிருந்தான். அவர்கள் நின்று பேசிக் கொண்டிருப்பதை போலொரு தோற்றத்தை கொடுக்க சித்விக் வேகமாக திரும்பி அறைக்குள் நுழைந்து கொள்ள, "சாரா" என்ற அஸ்வின் அக்காவிடம் விரைந்திருந்நான்.


குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த பழச்சாற்றை எடுத்து குவளையில் ஊற்றி தம்பிக் கொடுத்தவள் வாங்கி வந்திருந்த காய்கறிகளை பிரித்து நெகிழிப்பையில் போட்டுக் கொண்டிருக்க அவனும் அவளுக்கு உதவி செய்தபடி உரையாட துவங்கி இருந்தான்.


குளித்து உடையை மாற்றி வந்த சித்விக் மடிக்கணினியோடு மீண்டும் ஹாலில் அமர்ந்து கொண்டான், அவர்களிலிருவரையும் பார்வை வட்டத்தில் கொண்டு வந்து.
சாரா இரவு உணவிற்கு தயார் செய்யும் பணியில் இருக்க அஸ்வின் அவளுக்கு உதவியபடி அடுப்பறையில் நின்று கொண்டான். இருவரின் பேச்சும் சிரிப்பு சத்தமும் அமைதியான வீட்டை நிறைக்க சித்விக் விழிகள் அவ்வப்பொழுது இருவரையும் தழுவி மீண்டுக் கொண்டிருந்தது. சாராவும் அவனை எட்டி பார்த்துக் கொண்டாள், 'என்ன செய்கிறான்' என்று. அஸ்வின் வந்து இடையில் காபி குவளையை கொடுத்து சென்றான், அவள் தான் கொடுத்தனுப்பி இருந்தாள்.


இருவரது இதழிலும் கரைய விரும்பாத புன்னகை ஒட்டியிருக்க இரவு உணவை முடித்தவுடன் அஸ்வின் கிளம்பி இருந்தான். வரும் வழியில் சாரா சித்விக்கிடம் கூறியிருந்தாள். "நீ எப்படி போற அஸ்வின், இரு நான் ட்ராப் பண்றேன்" என்ற சித்விக் அவனை அழைத்துக் கொண்டு விடுதிக்கு சென்று விட கதவை தாழிட்ட சாரா அமைதியாய் உணவு மேஜையிலே அமர்ந்து கொண்டாள் தலையை டேபிளில் சாய்த்தப்படி.


இருந்த அலைப்புறுதல்கள் எல்லாவற்றையும் இன்றைய ஒரு பொழுதே துடைத்தெறிந்தது போல் பிரவாகமான எண்ணங்கள் மனதை வியாபிக்க அப்படியே கண்களை மூடிக் கொண்டாள் அந்த நிமிடங்களை சிதறாமல் உள்ளே விழுங்கியபடி ஆடவனோடு சேர்த்து.

ஒரு மணிநேரம் கழித்தே சித்விக் திரும்பியிருந்தான். "மறந்துட்டேன் பாருங்க, இது வீட்டோட ஸ்பேர் கீ. ஏற்கனவே ஒரு முறை இப்படி தான் எடுத்திட்டு வந்து தொலைச்சிட்டேன். அப்புறம் சாரா என்னை அடிக்காதது தான் குறை. ஹவுஸ்ஓனர்க்கிட்ட பேசி திரும்பி வேற வாங்கி கொடுத்தா. நீங்க இதை அவக்கிட்ட கொடுத்திடுங்க" என்று சித்விக் கையில் கொடுத்து அஸ்வின் கிளம்பியிருக்க அதைக்கொண்டு கதவை திறந்து ஆடவன் உள்ளே நுழைந்திருந்தான்.



சித்விக் உள்ளே நுழைந்த அரவம் கூட உணராது பேதை ஒரு வித மாயையில் ஆழ்ந்திருந்தாள் கண்களை மூடியபடி, மனமும் அந்த நிமிட இதத்தில் லயித்திருந்தது. அவனும் அதிக சத்தமில்லாது அவளை நெருங்கி நிற்க அந்த மங்கிய விளக்கொளியில் அவளின் மூக்கில் குடியேறியிருந்த மூக்குத்தியின் ஒற்றைக்கல் மட்டும் எப்பொழுதையும் விட பளபளவென மின்னிக் கொண்டிருந்தது. புதிதாக திருமணத்திற்கு மாற்றியிருப்பாள் போலும்.




நின்றிருந்தான், ஐந்து நிமிடங்களுக்கு மேல் கடந்திருந்தது. அவளும் அந்த மங்கிய சூழலும் ஆடவனின் இதயத்துடிப்பை எகிறித் துடிக்க செய்து கொண்டிருந்தது. ஈர்த்தாள் பெண், முன்பை போல் பேசியல்லாது இக்கணங்களில் பேசாது. அவளின் உடலின் வளைவுகளை அளவெடுத்துக் கொண்டிருந்தது போல ஆடவன் விழிகள்.


எப்பொழுதையும் போல், 'ஏன் இப்பெண் என்னை இவ்வளவு அழுத்தி இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கிறாள்? என்ன என்ன செய்து விட்டேன் இவளுக்காக நான்?' என்ற வினாவில் வந்து நின்று மனது ஊஞ்சலாடியது. அவள் கிளம்பி சென்றதில் ஆடவனுக்கு கோபமிருந்தாலும் அந்த நிகழ்வின் பின், அவனின் மீதான பேதையின் பிடித்தமே மிதமிஞ்சி இருப்பதை உணராமல் இல்லை. அவனும் கொண்ட கோபத்தில், 'நீ இல்லையென்றால் நானென்னாவேன் பெண்ணே! ஏன் இவ்வளவு அவசரம் உனக்கு? நானெதற்கு இருக்கினேடி?' என்ற ஆதங்கமே கோபமாக உருமாறியிருந்தது. ஆம், பாவை காவல் நிலையத்தில் இருக்கிறாள், விபத்து என்றும் தகவலை கேட்ட நொடி ஆடவன் இதயதுடிப்பு ஒரு நிமிடம் நின்று பின் துடித்தது அவனுக்கு மட்டும் தான் தெரியும். இன்றும், அவள் அமர்ந்திருந்த அந்த நிராதரவான நிலையை நினைத்தால் இன்னுமே அவனையே அறியாமல் இதயத்தில் ஆழந்ததொரு வலி ஊடுருவும். 'நானிருக்கும் பொழுது உனக்கெதற்கடி இப்படியொரு நிலை? நான் இல்லை என்றால் அது வேறு, அப்பொழுது கூட உன்னை அப்படி நின்றிட அனுமதிக்க மாட்டேன்' என்ற எண்ணங்கள் தான் அவனுள்.
அவள் அருகில் சென்றிருந்தால் கண்டிப்பாக கன்னத்தை வீங்கவே வைத்திருப்பான்‌. அது நிகழ்ந்திடவே கூடாதென்று தான் அவளை புறக்கணித்தான். 'நீ என்னடா என்னை விலக்க நினைப்பது? நான் அதற்கு அனுமதியளிக்க மாட்டேன்' என்ற ரீதியிலான அவளின் நடவடிக்கையை எப்பொழுதும் ரசிப்பவனின் ஆத்திரங்களையும் பிடிவாதங்களையும் கிளறி இப்படி இருவரையும் தள்ளி நிறுத்தி இருந்தது‌ சூழல்.



அந்த டேபிளில் கைகளை ஊன்றி நின்றவன் விழிகள் பெண்ணவளை பார்வையாலே கபளீகரம் செய்ய, சட்டென்று உந்துதலில் முகத்தை மறைத்திருந்த கைகளை விலக்கி பார்த்தவளின் விழிகள் அப்படியொரு அதிர்ச்சியில் விரிந்து கொண்டது‌, 'அவன் கதவை திறந்து வந்தது கூட தெரியாது இப்படியா இருப்பாய்?' என்று மனது கடிய, "நீங்க எப்படி உள்ள வந்தீங்க?" என்ற வார்த்தைகள் தடுமாறியது ஆடவனின் பார்வையில். ஆம், அவளை விழுங்க முயலும் விழிகளுடன், இதுவரை அவனிடம் கண்டிராத அத்துமீறல்களுடனான பார்வை.


மேலும் அவளை தவிக்க செய்யாது டேபிளில் சாவியை வைத்தவன், "அஸ்வின் உன்கிட்ட இந்த கீயை கொடுக்க சொன்னான்" என்பதோடு அருகில் அமர்ந்தும் கொண்டான். அந்த சாவியை கூட எடுக்கத் தோன்றாது அப்படியே அமர்ந்திருந்தவளின் முகமெல்லாம் நொடியில் வியர்வை துளிகள் பரவியிருந்தது. வேகமாக எழுந்து அடுப்பறை சென்று தண்ணீர் எடுத்து குடித்தவன் குவளையை கொண்டு வந்து அவளிடமும் நீட்டியிருந்தான்.


மறுக்காது வாங்கி பருகியவள் கரங்கள் முகத்தில் பூத்திருந்த வியர்வை துளிகளை துடைக்க முயல அவளின் கைகளை தடுத்து பிடித்துக் கொண்டவனின் செயலில் பெண் விழிகள் மருண்டு விழிக்க, அந்த பாவனை அப்படியே பெண்ணை அள்ளிக்கொள்ள சொல்லி உந்தியது. அவனின் பிடியில் இருந்த கரங்களின் வெம்மை குறைந்து குளிர் விரவ துவங்கியது. ஆம், கரையத்துவங்கினாள் அவனின் விழிகளை பேசிடும் யாசித்திடும் பாஷையிலும் தன்னை நெருங்கி தழுவ முயலும் ஆடவனுடைய ஸ்பரிசத்திலும்.


எழுந்து நின்றவனுடைய கரங்கள் பின்னால் இருந்து அமர்ந்தவாக்கிலே கழுத்தோடு அவளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டது. ஆடவன் நாடியை பேதையின் தலையில் வைத்து அழுத்தி இருக்க நொடியில் அவளின் விழிகளை இமைகள் தழுவிக் கொண்டது. சித்விக் இதழ்கள், "சாரி சாரா" என்று மெதுவாக மன்னிப்பு யாசிக்க அந்த நிசப்த அறையில் அது மாபெரும் சத்தமாக அவளின் செவியை சென்றடைந்தது.



தொடரும்....
 
Last edited by a moderator:
Top