• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 16

Administrator
Staff member
Messages
1,030
Reaction score
2,923
Points
113
அத்தியாயம் - 16



"ஹேய் மீனு, என்ன பண்ணீட்டு இருக்க, எழுந்திரு முதல்ல" என்று அதட்டி வலுக்கட்டாயமாக அவளது கையை பற்றி தூக்க முயல அவனது கைகளை ஆக்ரோஷமாக தட்டி விட்டாள். அவனோ அவளை பாவமாக பார்க்க டேபிளில் தலை சாய்த்து படுத்து விட்டாள். கண்ணீர் ஆறாய் பெருகிட இமைகள் அவளையும் மீறி வலுக்கட்டாயமாக மூடிக் கொண்டது. பிடிக்கவில்லை யாரையும் எதையும். மீண்டும் கண்களை திறந்திடவே கூடாது என்றெல்லாம் மனதில் எண்ணங்கள் தோன்றி மறைய ஏதோ வேறு உலகத்திற்குள் சென்று கொண்டிருந்தாள் மீனலோஷினி.



"மீனு ப்ளீஸ் எழுந்திரு டி, சொல்றத கேளு. ப்ளட் ரொம்ப போகுது" என்று குழந்தையை போல் அவளுக்கு புரிய வைக்க முயல அவளுக்கோ அவனது குரல் ஏதோ தூரத்தில் அசரீரியாக கேட்பது போல் தோன்றியது. அவளோ தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து எழுந்து கொள்ள முயல முடியவில்லை. முகமெல்லாம் இரத்தமாக மாறியது.

சில நிமிடங்கள் அருகில் நின்று நெற்றியை நீவியவன் இதற்கு மேல் முடியாது என உணர்ந்து அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்.


அவளது நடப்பது எல்லாம் உணர முடிகிறது ஆனால் பதிலுரைக்கவோ எதிர்க்கவோ முடியவில்லை. அப்படியே அவனது தோளில் அடைக்கலமாகினாள். அவளை தனது காரில் ஏற்றியவன் மருத்துவமனையை நோக்கி விரைந்தான்.


பதற்றத்தில் அவனுக்கு வியர்த்து வழிந்தது. அவளின் நிலையை கண்டு, ஏற்கனவே உழன்றிருந்த குற்றவுணர்ச்சி பரந்து விரிந்து தாண்டவமாடியது. எந்த சூழலிலும் இவளை விட்டிருக்க கூடாது. தான் இன்னுமே சற்று உறுதியுடன் இருந்திருக்க வேண்டுமோ? தன்னால் தான் இப்படி நிற்கிறாளோ அவளது கண்ணீருக்கு தான் தான் காரணம் என்ற உணர்வே அவனது மனதை அறுத்தது. முடிந்து விட்டது மாற்ற முடியதல்லவா?? இருந்தும் செய்திருக்கலாமே என்றே மனது அடித்துக் கொண்டது.

தவித்து துடித்தது. அவள் திருமணம் முடித்து நன்றாக இருந்திருந்தால் கூட அவனது குற்றவுணர்வு குறைந்திருக்கும். ஆனால் இப்பொழுது தன்னை தானே மன்னிக்க முடியவில்லை. இவளை துடிக்க வைத்தல்லவா வாழ்ந்திருக்கிறேன். ச்சை...என்று தன்னை மிகவும் கீழாகவே உணர்ந்தான்.


மருத்துவமனையில் அனுமதிக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் சற்றே ஆழமாக இருக்க இரத்தமும் அதிகளவு வெளியேறி இருந்தது.
இதை விட பெரிதாக வாழ்க்கை எனக்கு காயத்தை அளித்திட முடியுமா என்று ஒவ்வொரு சூழலிலும் அவன் கர்வமாக அதை இதயத்தில் தாங்கி எதிர்த்து நின்றாலும் இல்லை இல்லை இது என்ன பிரமாதம் இன்னும் இதை விட சிறப்பானதாகவே உனக்கு காத்திருக்கிறது என்று அவனை ஆச்சரியத்தில் ஆழத்திக் கொண்டிருக்கிறது காலச்சக்கரம்.


அந்த வராண்டாவில் நடந்து கொண்டே இருந்தான். அவனால் அமர முடியவில்லை. அவன் மட்டுமின்றி மனதும் அலை பாய்ந்து தான் கொண்டிருந்தது. ஏன் இப்படி செய்கிறாள் இவளுக்கு என்ன குறை அழகில்லையா படிப்பில்லையா பணமில்லையா என்ன குறை வைத்தான். யாரையாவது மணந்து குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாமே. ஏன் அவளும் காயப்பட்டு இந்துமதியையும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணம் அவனது மனதில் எழுந்து கொண்டிருக்க இன்னும் என்னென்னமோ மனது சிந்தித்தது. இத்தனை பிடிவாதம் ஏன் இவளுக்கு என்றே எண்ணி அவன் மனம் தளர்ந்தது.


சில நிமிடங்களில் மருத்துவர் வெளியில் வர அன்னிச்சையாக ஓடியது அவனது கால்கள் அவரை நோக்கி. "பெரிய ப்ராப்ளம் ஒன்னுமில்லை, சின்ன கண்ணாடி பீஸ் மட்டும் உள்ள இருந்துச்சு. அதை ரிமூவ் பண்ணியாச்சு. கண் முழிச்சதும் வீட்டுக்கு அழைச்சுட்டு போங்க" என நகர்ந்து விட்டார்.


சற்று ஆசுவாச பெருமூச்சு விட்டவன் தளர்ந்து அமர்ந்து விட்டான். அதற்கு மேல் நிற்க காலில் வலுவில்லை என்பதை விட மனதிடம் தைரியமில்லை. உள்ளே சென்று அவளை காண வேண்டும் என்று மூளை கூறினாலும் மீண்டும் அவளை எதிர்கொள்ள மனது தயங்கி தடுமாறுகிறது.


இது என்ன என்று மூளை போராடுகிறது. எத்தனையோ கடினமான வழக்குகளையும் சரி சூழலையும் சரி இலகுவாக சமாளித்து வந்திருக்கிறான். ஆனால் இப்பொழுதோ மனதில் சுணக்கம். அவளது பார்வையே வாள் கொண்டு அறுத்திருக்க இப்பொழுது பேச்சு! சத்தியமாக தன்னால் தாங்கிடவே இயலாது என்று மனது மன்றாடியது! தலையை பிடித்துக் கொண்டே அமர்ந்திருந்தான் வெகு நேரம்.




டேபிளில் தலை சாய்த்தது வரை மட்டுமே நினைவிருக்க கண் விழித்தவள் அந்த அறை சுற்றி கண்களை அலை பாய விட்டு மருத்துவமனை என உணர்ந்தாள். மெதுவாக எழுந்து அமர்ந்தவள் விழிகள் கையை ஆராய வலது கை விரல்கள் முழுவதும் கட்டு போடப்பட்டிருந்தது. அதை கண்ட பின்பு தான் நடந்தவற்றை ஒவ்வொன்றாக மனது கொண்டு வந்து கண் முன் நிறுத்தியது. ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று நினைத்து மறுகியவளுக்கு பதிலே கிடைக்காது போக கண்களை மூடி சாய்ந்து அமர்ந்து விட்டாள். என்ன காரியம் செஞ்சு வச்சிருக்க மீனு என்று தன்னை தானே நொந்துக் கொண்டவள் திரிலோகேஷ் காலடி சத்தம் கேட்டே கண் விழித்தாள்.


அவளது முகத்தை பார்த்துக் கொண்டே ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நெருங்கி வந்தான். முன்பிருந்த ஆக்ரோஷம் கோபம் எல்லாம் வடிந்து மறைந்திருக்க அமைதியை தத்தெடுத்திருந்தது அவளது வதனம். ஆனால் அயர்ச்சியாக இருந்தது அழுதது மற்றும் நடந்து விட்ட நிகழ்வுகளால்.


அவளும் அவனை பார்த்திருக்க உள்ளே வந்தவன் அவளருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். ஆனாலும் இருவரது பார்வையும் விலகாமல் ஒருவரை ஒருவர் படம் பிடித்துக் கொண்டிருந்தது.


"மீனு ஆர் யூ ஓகே?" என்று அமைதியாக கேட்டவன் பதிலுக்காக காத்திருக்க தலையை மட்டும் அசைத்தாள்.

"ஏதாவது குடிக்கிறீயா?" என்றவன் அவளது பதிலுக்காக காத்திருக்காமல் சென்று ஜூஸ் வாங்கி வந்து நீட்டினான்.


மறுக்காமல் வாங்கி குடித்தாள். சென்று மருத்துவரை பார்த்து மாத்திரை மருந்துக்களை எழுதி வாங்கி வந்தவன், "போகலாமா?" என்றிட சிறு தலையசைப்புடன் எழுந்து அவன் பின்னாலே சென்று காரில் ஏறிக் கொண்டாள். இருவருக்கும் பெரிதாக பேச்சு வார்த்தை இல்லாது போக அமைதியாத வண்டியை செலுத்தினான்.


அவனும் எதுவும் பேசிட விழைந்திடவில்லை. அவளும் கண்களை மூடி சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.




இது காதலா? வேறு என்ன பிடித்தமா? எதற்கு இன்னும் இவன் பின்பே செல்கிறாய்? நீ முட்டாளா? என்ன செய்து கொண்டிருக்கிறாய் மீனு என்று மனது அதிகமாக கேள்விக் கணைகளை தொடுக்க எண்ணங்கள் சீரற்று தறிக் கெட்டு ஓடியது.


அவன் தனக்கில்லை என்ற பொழும் இன்னும் அவனிலிருந்து மனது வெளி வர மறுக்கிறது. அவனிடம் கெஞ்சப் போகிறாயா என்னை திருமணம் செய்து கொள் என்றா? என்று எண்ணம் அறுத்தது இன்னும் ஆழமாக! வெளியில் தெரிந்த காயத்திற்கு மருத்திட்டு விட்டாய் ஆனால் மனதில் இருப்பதை என்ன செய்ய போகிறாய்? காயம் இருப்பதாவது உனக்கு தெரியுமா?



நீ ஆயிரம் நியாயம் கூறினாலும் எனக்கு துரோகம் அல்லவா இழைத்து விட்டாய்! உயிரை கொல்வது மட்டுமா குற்றம்? என் மனதை வதம் செய்து விட்டு சென்று விட்டாயே! தன் நம்பிக்கையை வேறொடு அறுத்து எறிந்து விட்டவனிடமே மீண்டும் மனது அடைக்கலமாக விழைய அதனால் உண்டான ஆத்திரம் கோபம் தான் இப்பொழுது கையில் கட்டாக பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.


கையில் காயமெல்லாம் வலித்திடவே இல்லை. மனதோ அதை விட அதிகமாக தாங்கிக் கொண்டிருக்க இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.



மொபைல் ஒலித்தது எடுத்து பேசினாள்.

"மீனு எங்கம்மா இருக்க? சாப்பிட்டீயா? எப்ப வருவ?" என்று வரிசையாக இந்துமதியின் வினாக்கள் அவரின் இருப்பை உணர்த்த சுயத்தை மீட்டெடுத்தாள்.


"வந்திட்டேன் இருக்கேன்ம்மா, பத்து நிமிஷத்தில ரீச்சாகிடுவேன்" என்று கூறி, "சரிடா, பார்த்து வா" என அழைப்பை துண்டித்து விட்டார்.



தற்பொழுது சுழன்ற எண்ணமெல்லாம் பின் செல்ல தற்பொழுது இந்துமதி மட்டுமே கண் முன் நின்றார். அவருக்காகவாது கேட்க வேண்டும் என்று எண்ணியவளுக்கு தைரியம் என்பது முற்றிலும் தூரமாக சென்று விட்டது. அருகில் வண்டி ஓட்டுபவனையே பார்த்திருந்தாள்.


அவளின் பார்வை புரிந்தாலும் நேராகவே பார்வையை செலுத்தியவன், "ஏதாவது சொல்லணுமா?" என்று கேட்டான் அமைதியான பாவனையில்.


முன்பை விட சூழல் சற்று இலகுவாகியிருந்தது. அவளது கண்கள் தன்னிடம் ஏதோ கேட்க தயங்குவது புரிந்தது.


"ம்ம்" என்றவள் தலையாட்டிட வண்டியை ஓரமாக நிறுத்தினான்.



'சொல்லு' என்பது சைகை செய்தவன் அவளை இன்னும் பார்க்கவில்லை. அவளின் கசங்கிய முகமே அவனை அதீதமாக தாக்கி தடுமாற செய்கிறது. மேலும் தன்னுள்ளே சுருங்க சொல்லி உந்துகிறது. தன்னையே கீழிறக்கி அவமானமாக உணர்கிறது மனது. இதை எவ்வாறு சரி செய்திட அவனால் இயலும். பிழை தான் திருத்த முடியுமா முயன்றிடுவானா?





மூச்சை இழுத்து தன்னை சமன் செய்து, "என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க திரிலோகேஷ்" என்றவளின் வார்த்தை அவனது செவியை அடைய திரும்பி அவளை வெறித்தான்.


"நான் எங்க இறங்கவே கூடாது யார்கிட்ட போகவே கூடாதுனு நினைக்கிறேனோ அங்க தான் கடவுள் என்னை மண்டியிட்டு பிச்சை கேட்க வச்சிட்டார்" என்றவளின் குரலில் அவ்வளவு வலி. இந்த வார்த்தைகளை அவனிடம் சேர்ப்பிப்பதற்குள் எத்தனை முறை மாண்டு மீண்டாள் என்பது அவள் மட்டுமே அறிந்த இரகசியம்.

அவன் விட்டுச் சென்று விட்டான் ஆனால் அவளால் இன்னும் விட முடியவில்லை. அழுத்துகிறது ஏதோ ஒன்று அவளை. அவனை தவிர யாரிடமும் செல்ல விருப்பமில்லை. காயப்படுத்தியவனிடமே யாசித்து நிற்கிறாள். கேட்பது பிடிக்கவில்லை தான் ஆனால் இந்துமதிக்காக நின்றாள் தன்மானத்தை விட்டு.



"மீனு பைத்தியம் மாதிரி பேசாத. ஆன்ட்டி மாப்பிள்ளை பார்க்கிறாங்க. உனக்கு ஏத்த மாதிரி நல்ல இடமா அமையும். கண்டிப்பா உன் ப்யூசர் நல்ல படியா அமையும். எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று அவளை சமாதானம் செய்திட விழைய,



"இப்பயும் என்னை ஏமாத்த போறீங்களா?" என்று கலக்கிய கண்களுடன் அவனை ஏறிட்டாள்.


"எனக்கு மேகா மட்டும் போதும், என் லைப்ல வந்தா கண்டிப்பா உனக்கு பிரச்சனை தான். ரெண்டு பேர்க்குமே நிம்மதியில்லாம போய்டும்" என்றான் பொறுமையாக.



"இப்ப மட்டும் நான் நிம்மதியா இருக்கேனா? எனக்கும் உங்க கூட வாழனும்னு ஆசை இல்லை. நீங்க எப்ப விட்டு போனீங்களோ அப்பவே முழுசா செத்துட்டேன். இப்ப எங்கம்மாவுக்காக இருக்கேன், அவங்க சாகும் போதாவது நிம்மதியா சாகட்டும். நான் கல்யாணம் பண்ணாமலே இருந்தா கண்டிப்பா அவங்க ரொம்ப உடைஞ்சிருவாங்க. என்னால வேற யாரையுமே கல்யாணம் பண்ண முடியாது" என்றவள் கண்ணீரை துடைத்து
படி இறங்கி சென்று விட்டாள்.


அவனுக்கும் அவளை தடுக்கும் எண்ணம் தோன்றாது போக செல்பவளின் முதுகை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Meenu meenu etha nagga ethir pathom lokesh no shock man nalla mudiva sollu meenu ne nalla irupa santhosama feel pannatha
 
Top