• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 13

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 13

நான்கு வருடங்களுக்கு பிறகு,


இழப்பிற்கு பிறகு எதுவுமில்லை என்று எண்ணி விட்டால் நிச்சயம் உலகின் அநேகம் பேரின் கல்லறையில் புல் முளைத்திருக்கும். இழப்பிற்கு பிறகான எழுச்சி ஒன்றும் அத்தனை சுலபமானது அல்ல.. ஆனால் வீழ்ந்து கொண்டு மட்டுமே வாழ்க்கை கழிந்து விடுவதில்லையே! ஆறாத காயமே இவ்வுலகில் கிடையாது, காயம் ஆறும் அதனால் உருவாகி தழுவிக் கொண்ட தழும்புகள் மண்ணோடு மறையும் வரை நீங்குவதில்லை என்பதே ஏற்கவே முடியாத நிதர்சனமும் கூட...


அந்த பிரபல மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் அறையில் அமர்ந்திருந்த நவீனின் விழிகள் அலைபேசியில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. எழுந்து புடவையை சரி செய்து மருத்துவரின் பின்பே வந்த அக்ஸிதா, நவீன் அருகில் வர அரவத்தில் அவளை உணர்ந்தவன் மனைவி அமர்வதற்கு வசதியாய் அருகிலிருந்த நாற்காலியை மேஜையை விட்டு சற்று நகர்த்தி போட்டு எழுந்து நின்று அவளின் கைப்பிடித்து அமர வைக்க, கணவனை பார்த்து சோபையான புன்னகையை கொடுத்தாலும் விழிகள் மருத்துவரிடம் தான் நீடித்தது முகம் முழுவதும் வியாபித்திருந்த கிலியோடு.


நவீனும் பாவயை விடுத்து, "பேபி எப்படி இருக்கு டாக்டர்" என்று சற்று தயங்கிய குரலில் ஆரம்பிக்க கோப்புகளிலிருந்து தலையை நிமிர்த்திய அந்த முதிய மருத்துவரின் கரங்கள் கண்ணாடியை கழற்றி வைக்க, "யெஸ், பேபி சூப்பரா இருக்காங்க. பட் உங்க வொய்ப் ஏன் இவ்வளவு டென்ஷனா டயர்டா இருக்காங்க?" என்றபடி அக்ஸிதாவை பார்க்க நவீன் அவளை தீயாய் முறைத்திருந்தான். அவளோ அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்ற ரீதியில் அவனிடமிருந்து தப்பும் பொருட்டு விழிகளை மேல் கீழ் என்று எல்லா புறமும் அலைய விட்டுக் கொண்டிருந்தாள் அவனை நேர்க்கொண்டு பார்க்காது. அவளை புரிந்து கொண்ட நவீனும், 'உன்னைய அப்புறம் பார்த்துக்கிறேன் டி' என்பதாய் மீண்டும் மருத்துவரிடம் திரும்பினான்.


"அம்மாவும் குழந்தையும் நல்லா ஹெல்தியாவே இருக்காங்க. முன்னாடி கொடுத்த டேப்லெட் அன்ட் ஃபுட் சார்ட்டையே பாலோ பண்ணுங்க அதை பத்தி பிரச்சனை இல்லை தென் நீங்க?" என்று அக்ஸிதா புறம் திரும்பியவர், "ஏன் இப்படி? மனசை ரிலாக்ஸா ஹாப்பியா வைச்சுக்கம்மா. எதையும் மனசுல போட்டு குழப்பாதீங்க, அது கண்டிப்பா பேபியையும் அபெக்ட் பண்ணும். டெய்லி வாக்கிங் போங்க, யோகா, எக்ஸர்சைஸ் எல்லாம் செய்ங்க, அது உங்களை கன்ட்ரோல் பண்ண ஹெல்ப் பண்ணும். உங்க ப்ளட் ப்ரெஷரை பார்த்து எனக்கு தான் மயக்கம் வந்திடும் போல" என்று விளையாட்டாய் கூறி புன்னகைத்தவர், "நல்லா தூங்குங்க, அதுக்கும் சேர்த்தே டேப்லெட் கொடுத்திருக்கேன்" என்பதோடு அவர்களுக்கு கிளம்ப அனுமதியளித்தார். ஆம், அக்ஸிதா நன்றாக தூங்கி இரண்டு மூன்று நாட்களாகிறது. நடு இரவில் பேய் மாதிரி உலா வருபவளை தனியே விட மனமின்றி நவீனும் பேச்சுக் கொடுத்தப்படி அவளுடன் நின்று கொள்வான் பேதை மறுத்தாலும்.


தன் அருகில் வந்தவனை ஓரக்கண்களால் பார்த்தப்படி நடந்து வந்த அக்ஸிதா மெதுவாக அவனின் சட்டை நுனியை பிடித்து இழுத்து பார்க்க, 'என்னுடன் பேசாதே!' என்பது போல் பார்த்து அவளின் கையை தட்டி விட்டவன் மருந்தகம் நோக்கி முன்னேற அவளோ தோளை குலுக்கிக் கொண்டு நவீனை முறைப்பாய் பார்த்து அங்கிருந்த நாற்காலியில் ஆசுவாசமாய் அமர்ந்து விட்டாள். ஆம், காலை எழுந்ததில் இருந்து வயிற்றில் குழந்தையின் அசைவின்றி இருக்க பதறி போய் நவீனிடம் கூறியவளை அவன் கடித்து குதறியே மருத்துவமனை அழைத்து வந்தான். "நீ உன்னையே ரொம்ப ப்ரெஷர் பண்ணாத டி, இப்ப என்ன பங்ஷன் தான பண்ணிட்டு போகட்டும். அப்படியெல்லாம் என்னோட பர்மிஷன் இல்லாம உன்னை அழைச்சிட்டு போய்ட மாட்டாங்க. குழந்தைக்கு மட்டும் எதாவது ஆச்சுன்னா உன்னை கொன்னுட்டேன்" என்று வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து மருத்துவமனை வந்து சேரும் வரை புலம்பி முறைத்து என்று அவளை ஒரு வழியாக்கி இருந்தான். அவனுக்கும் பயம், மனது முழுவதும் குழந்தைக்கு எதுவுமாகி விடக் கூடாதென்ற கிலி வியாபித்திருக்க அதை சமாளிக்கும் வழியறியாது கொஞ்சமல்ல நிறையவே பேசிக் கொண்டிருந்தான். அத்தனை நிமிட பாரமிறங்கிய நிம்மதியில் அமர்ந்து விட்ட அக்ஸியின் பார்வை கணவனை நோக்கி அலைபாய்ந்தது லேசாக அரும்பிய புன்னகையுடன். அவனின் பார்வையும் அவ்வப்பொழுது தூரத்தில் அமர்ந்திருந்த மனைவியை தீண்டி மீண்டுக் கொண்டிருந்தது. அவளின் சிரிப்பை பார்த்து நவீனின் இதழ் வளைய லேசான முறைப்புடன், 'இவளுக்கு எல்லாமே விளையாட்டு தான், கொஞ்ச நேரத்தில மனுசனை பதற விட்டுட்டு சிரிப்பை பார்!' என்று பார்க்க அவளோ குறும்பாக கண் சிமிட்டினாள், 'என்ன?' என்பது போல் புருவமுயர்த்தி. "போடி" என்று அங்கிருந்தே இதழ்கள் உச்சரிக்க தலையை கோதியபடி முகத்தை, 'உன்னை பார்க்க மாட்டேன் போடி இம்சை' என்பது போல் திருப்பிக் கொண்டான்.


அக்ஸியும் அவனின் நடவடிக்கையில் உதித்த விரிவான புன்னகையுடனே வயிற்றில் கை வைத்து வருடியபடி வேடிக்கை பார்க்க துவங்க, மருந்தகம் கூட்டமாய் இருந்ததால் பத்து நிமிடங்களுக்கு பிறகே திரும்பி வந்த நவீன், "வா போகலாம்" என்று அவளை கைக்கொடுத்து தூக்கி விட முனைய கைக்காட்டி அவனை இரண்டெட்டு தூர நிறுத்தியவள் சிரமப்பட்டு கையூன்றி எழுந்து நின்றாள். 'க்கும்...பார்டா கோபத்தை, செய்றதையெல்லாம் இவ செய்திட்டு என் மேல கோபமாம்' என்று நினைத்தவன், "இம்சை" என்று வெளிப்படையாகவே முணுமுணுக்க காதில் வாங்கியவளின் முகம் மேலும் சிவந்து தான் போனது.



'ஓஹோ, அப்படியா...?" என்றவள் இடுப்பில் கையூன்றி முறைக்க,
"ப்ச்...உன்னோட பஞ்சாயத்தை கார்ல்ல போகும் போது வைச்சுக்கலாம். எனக்கு மீட்டிங் வேற இருக்கு" என்று கைக்கடிகாரத்தில் பார்வையை அலைய விட்டு அவளின் கைப்பிடித்து அழைத்துச் சென்றிருந்தான் மகிழுந்தை நோக்கி.

மகிழுந்தில் ஏறிய பிறகும் இருவருக்குள்ளும் எந்தவித பேச்சு வார்த்தையுமின்றி
மௌனத்திலே கரைய அதில் அக்ஸிதாவிற்கு தான் ஆயாசமாய் வந்தது. அவ்வப்பொழுது அவனையே பார்த்தப்படி பார்வையை அலைய விட்டவளை அதற்கு மேல் படுத்தாது, "என்னை நம்பலையா அக்ஸி நீ, அதான் நான் பார்த்துக்கிறேன் சொல்றேன்ல்ல, அப்புறம் என்ன?" என்றான் நவீன் ஆதங்கமாக.


"ப்ச்...உங்களை நம்பாம இல்ல மாம்ஸ், பட் ஏனோ கொஞ்சம் பயமா இருக்கு. அவ்வளவு தான்" என்று முகம் சுருக்கியவள் விழிகள் ஏனோ கலக்கத்தை சுமந்திருக்க அவளை உணர்ந்து சட்டென்று இடது கையை நீட்டியவன் பாவையை தன் புறமிறமிழுக்க வாகாக அவன் தோளில் தலை சாய்த்து கண்களை மூடியவளின் இதழை லேசான புன்னகை ஆக்கிரமித்திருந்தது. ஆடவனிடம் சாய்ந்த நொடி தேங்கி நின்ற கலக்கமெல்லாம் இருந்த இடம் தெரியாது மறைந்து போனது போல் ஒரு ஆசுவாசத்தை உணர மூச்சுக்களை வேகமாக உளளிழுத்து வெளிவிட்டு என்று தன்னை சமன் செய்தவள் விழிகள் கர்மசிரத்தையாக மகிழுந்தை இயக்கியவன் புறம் சென்று விட்டது. சமீப காலமாக அவளின் அதிகபட்ச நீட்சியாகி போயிருந்தான் ஆடவன், ஏன்? எப்படி என்ற வினாக்களுக்கு அப்பாற்பட்டு...உலகத்தில் சில விஷயங்களுக்கு வரையறைகளே கிடையாது.



அவர்களின் மோனநிலையை கலைக்கும்படி அபஸ்வரமாய் அலைபேசி ஒலிக்க நவீனை தடுத்து அக்ஸியே அவனின் அலைபேசியை இயக்கி ஸ்பீக்கரில் போட்டாள். வாணி தான் அழைத்திருந்தார். "எங்க இருக்கீங்க நவீன்? டாக்டரை பார்த்தாச்சா? அக்ஸி எப்படி இருக்கா?" என்று வரிசையாக கேள்விகளை அடுக்க, "ம்மா.." என்று நவீன் அதட்டிய பின்பே சுதாரித்த வாணி, "ப்ச்..போனை நீ அவக்கிட்ட கொடுடா" என்றார். அவர்களின் பேச்சில் சத்தமாக சிரித்து விட்ட அக்ஸிதா அலைபேசியை ஸ்பீக்கரில் இருந்து மாற்றி காதிற்கு கொடுத்து பேச ஆரம்பித்து விட்டாள். நவீனும் வாணியும் இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதுமே அப்படி தான் என்று அவளுக்கு தெரியுமே!....


மருத்துவர் கூறியதை ஒப்புவித்தவள் மேலும் சில நிமிடம் பேசி விட்டே அழைப்பை துண்டித்து, "அத்தைக்கு இன்னைக்கு அசோசியேஷன் மீட்டிங் இருக்கு மாமா, சோ வீட்டுக்கு வர நேரமாகுமாம். என்னை டான்ஸ் ஸ்கூல்ல விட்டுட்டு நீங்க ஆபீஸ் போங்க" என்றவளுக்கு தலையசைத்தவன் மகிழுந்தை உணவகத்தின் முன் நிறுத்தியிருந்தான். அக்ஸிதாவிற்கு ஒன்பது மாதம் நெருங்கியிருக்க பாதுகாப்பை கருத்தில் கொண்டு வீட்டில் தனியாக இருக்க விடுவதில்லை. அவள் அலுவலகம் செல்லா விட்டால் வாணி அல்லது நவீன் யாராவது ஒருத்தர் தங்களுடனே வைத்துக் கொள்வார்கள்.


நவீன் உண்டு முடிக்க அக்ஸி அவனையே வேடிக்கை பார்த்தப்படி தனக்காக வரவழைக்கப்பட்ட காய்கறி சூப்பை முகத்தை அஷ்டகோணலாக வைத்தப்படி உள்ளிறக்கிக் கொண்டிருந்தாள். கர்ப்பமாக இருப்பதால் அவளை வெளியில் எங்குமே உண்பதற்கு நவீன் அனுமதியளிக்க மாட்டான். வீட்டில் வாணி தன் கையாலே செய்து தருவதை தவிர அவளுக்கு வேறெதுவும் உண்பதற்கு அனுமதி கிடையாது. "உனக்கு என்ன வேணுமோ சொல்லு நானே செஞ்சு தரேன்" என்று நிற்பவரின் முன்னால் அவளால் வாயை திறக்கவே முடியாது. நவீன் அதற்கு மேல் படுத்துவான் அவளை அதை செய்யாதே இதை செய்யாதே அப்படி படுக்க கூடாது இப்படி உட்காரக்கூடாது என்று. அவர்களின் கண்டிப்புக்கள் கூட ஒரு வகையில் சுகமாக தான் இருந்தது ஆனால் அவ்வப்பொழுது நவீனை சீண்டி வெறுப்பேற்றுவதற்காகவே எதையாவது செய்து நன்றாக வாங்கியும் கட்டிக் கொள்வாள் பெண். குழந்தையில் மட்டும் அவன் எந்தவித சமரசத்தையும் ஏற்றுக் கொள்ளவே மாட்டான்.


உண்டு முடித்தவன் மனைவியை அழைத்துக் கொண்டு வாணியிடம் வந்து சேர்ந்தான். தற்பொழுது அவர்களின் வசிப்பிடம் ஹைதராபாத், அவ்வூர் வாணியின் பூர்வீகமும் கூட. அவர்கள் நின்று கொண்டிருப்பது வாணியின் நடனபயிற்சி பள்ளி முன் தான். வாணி சிறு வயதிலிருந்தே பரதம் கற்றுத் தேர்ந்தவர். ராகவனுடன் காதல் திருமணம் அடுத்து நவீனின் பிறப்பு, வளர்ப்பு என்று அவரின் நீட்சிக்கு தடை விதித்திருந்தது. அவருக்கும் அதில் பெரிதாக ஆட்சேபனை இல்லாது போக கணவனோடும் மகனோடும் இரசித்து லயித்து தான் வாழ்ந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்து விட்ட கணவனின் இழப்பு அவரை முழுமையாக விழுங்க முயல அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள பயன்படுத்திய ஆயுதம் தான் நடனம். அதை தேர்தெடுத்து வழி வகை செய்து கொடுத்தவனும் மகன் தான். நாம் மிகவும் நேசிப்பவர் இல்லா விட்டால் நாமும் ஒன்றுமில்லாமல் போக வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது தானே! மாற்றம் என்பதை தவிர எல்லாமுமே மாறும். யார் இருந்தாலும் இல்லையென்றாலும் பூமி சுழற்சி நிற்க போவதில்லை. உனக்கான இறுதி நேரம் வரும் வரை நீ இயங்கி தான் ஆக வேண்டும் என்பது இவ்வுலகின் நியதி!..சில செயல்களும் நிகழ்வுகளும் மனித கட்டுபாடுகளுக்கு அப்பாற்பட்டது.



தூரத்திலே அவர்களை கண்டு விட்ட வாணி சைகையிலே, 'வரேன்' என்பது போல் கைக்காட்டி தன் முன் நின்றிருந்த சிட்டுகளிடம் ஏதோ கூறி மேலும் விரிந்த புன்னகையுடன் மகனையும் மருமகளையும் நோக்கி வந்தார். ஏதோ அந்த புன்னகை ஒப்புக்கானதாய் நவீனுக்கு தெரியவில்லை. வழக்கத்தை விட அதிகமாகவே உற்சாகமாக தெரிந்த வாணியின் வதனத்திலே அவனது விழிகள் நீட்டிப்பு செய்தது. வெகுநாட்களுக்கு பிறகு உண்மையாக புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்.


வாணி மட்டும் இல்லையென்றால் யாஷிற்கு பிறகு நவீனின் அத்தியாயமும் முடிந்திட்ட ஒன்றாகவே மாறி போயிருக்கும். எத்தனை அழுகை, ஆர்பாட்டம் செய்து தவிப்புடன் மகனை இழுத்து கைகளில் பொத்தி வைத்து பாதுகாத்து மீட்டிருக்கிறார். குழந்தைகள் எனும் பொழுதும் தாயின் செயல்கள் எப்பொழுதும் அபரிமிதமானது தான்.


நவீனிற்காக எல்லாவற்றையும் விட்டு மொத்தமாகவே இடம் பெயர்ந்திருந்தனர் ராகவனும் வாணியும். அதிலும் வாணி, மகனை விட்டு அகலாது கண்களில் வைத்து பாதுகாத்து பலவித மருத்துவர்கள் பரிந்துரை பெயரில் ஆலோசனைகள் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்தார். மாதங்கள் அல்ல வருடங்களாகிற்று நவீன் ஓரளவு தெளிவதற்கே. ஆனால் ராகவனின் இறப்பிற்கு பிறகு முழுவதுமாக உடைந்திட்ட வாணியை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டான் நவீன். பெண்களுக்கு மட்டும் எத்தனை அடையாளம் இருந்தாலும் குடும்பம் பிள்ளைகள் என்று வந்து விட்டால் மற்றதெல்லாம் அமிழ்ந்து ஆழ்ந்து அழிந்தே போய் விடுகிறது. ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக தங்களின் அடையாளங்களை திருமணத்திற்கு பிறகும் இழுத்து பிடித்து தக்க வைத்துக் கொள்கின்றனர். அப்படி தான் அடியாழத்தில் சென்று விட்ட வாணியின் திறமை மீட்டெடுத்து அவருக்கென நடனப்பள்ளியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தான் மகன். ஓய்ந்து போய் அமர்ந்து விட்டவரை சுறுசுறுப்பாக சுழல செய்து விட்டிருந்தது நடனப்பள்ளி.


முதலில் வாணியுமே சற்று அசட்டையாக தான் அதை கையில் எடுத்துக் கொண்டார். பின்பு அதுவே அவரை முழுவதுமாக இழுத்து பிடித்து ஆக்கிரமித்து வைத்துக் கொண்டது. சிறிய அளவில் என்றாலும் அதை கவனமாக கையாள்வதில் வாணி முனைப்பாக இருந்து விட்டார். அக்ஸியும் நவீனை திருமணம் செய்யும் பொழுது கடைசி வருட பொறியியல் தேர்வை டீலிங்கில் விட்டிருக்க அவளையும் இழுத்து பிடித்து, மாற்றுச்சான்றிதழை வாங்கி ஹைதரபாத்திலிருக்கும் வேறு கல்லூரியில் படிப்பை முடிக்க வைத்து தற்பொழுது அவனது நண்பர் அலுவலகத்தில் அவருக்கு கீழ் பயிற்சியில் அமர்த்தியிருந்தான்.
அக்ஸிதா வேறு யாருமல்ல ராகவனின் உடன் பிறந்த தங்கையின் மகள். திருமணம் ஏதோவொரு கட்டாயத்தின் பொருட்டு நிகழ்ந்திட்டாலும் அவர்களின் தற்பொழுதைய உறவு அப்படியானதல்ல. அதிலும் ஏனோ அக்ஸியிற்கு நவீனை அத்தனை பிடித்து தான் போனது கணவன் என்பதை தாண்டி ஒரு தோழனாக அவளின் நலம் விரும்பியாக. அவளின் வீட்டில் தந்தையும் அண்ணனும் இணைந்து, "இனி எதுக்கு மாப்பிள்ளை படிப்பு, அதை வைச்சு என்ன பண்ண போறா அவ. நீங்க என்ன வேலைக்கா அனுப்ப போறீங்க?" என்று நவீனிடம் பேசியிருக்க, "படிப்பு வேலைக்கு போய் சம்பாதிக்கிறதுக்கு மட்டுமில்லை மாமா. யார் இல்லைனாலும் அவளால தனியா நிற்க முடியணும், அதுக்கான தைரியத்தை படிப்பை தவிர வேற யாராலையும் கொடுக்க முடியாது. அது அவளுக்கான அடையாளத்தை கொடுக்கும், நான் தானே படிக்க வைக்கிறேன். நீங்க எதுக்கு இவ்வளவு வருத்தப்படுறீங்க?" என்று கேட்டு அவர்களின் மூக்கை உடைத்து அவளையும் வெற்றிகரமாக படிப்பை முடிக்க வைத்திருந்தான். தன் மீதான நவீனின் அக்கறையிலும் ஆடவனின் செயலிலும் நெகிழ்ந்து தான் போனாள் அக்ஸிதா. அவளுமே 'இனி படிக்க வேண்டுமா?' என்ற சிந்தனையிலிருந்து வெளி வந்து பிரசவகால உடல் உபாதைகளை பொருட்படுத்தாது இழுத்து பிடித்து படிப்பை முடித்திருந்தாள். அதில் அதிக சிரத்தைகளை மேற்கொண்டது என்னவோ வாணியும் நவீனுமே.


வாணிக்கு முன்பே அக்ஸியும் நவீனும் அவரின் அறையில் அமர்ந்திருந்தனர். நேரத்தை பார்த்த நவீன், "டையமாகிடுச்சு, உனக்கு பசிக்குதா?" என்று அன்னை தயார் செய்து எடுத்து வந்திருந்த உணவை தட்டில் இட்டு கொடுத்தவன் அவள் எழ முனைவதை சைகையால் தடுத்து விட்டு கை கழுவ தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். அவனையே இமைக்காமல் பார்த்திருந்த அக்ஸியின் விழிகளில் மளமளவென நீர் பெருக துவங்கியிருந்தது தன்னை அறியாமலே!. நவீன் அவளுக்கொன்றும் புதியவன் அல்ல, இருவரும் ஒரே பள்ளியில் படித்திருந்தாலும் வயது வித்தியாசம் அதிகம். நவீனை அப்பொழுதெல்லாம் அவள் அதிசயமாய் தான் பார்ப்பாள், ஆமாம். ஒரு வித ஹீரோ தோரணையில் தான் வலம் வருவான், அவனை அணுகுவதற்கு நிறைய பேர் அக்ஸியை தான் தூதாய் உபயோகம் செய்வார்கள். அவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தகவலை அங்கேயே புதைத்து விடுவாள் பின்பு நவீனிடம் எடுத்து சென்று தர்ம அடிகளை பெற்றுக் கொள்வதற்கு அவளென்ன பைத்தியமா? அவனுக்கு கொடுக்கப்பட்ட நிறைய காதல் கடிதங்களை நண்பிகளோடு கூட்டு சேர்ந்து பிரித்து படித்து உருண்டு புரண்டு சிரித்த காலமெல்லாம் உண்டு. ஒரு கட்டத்தில் இரு குடும்பமும் லேசாக கசப்பில் விலகி நின்று விட பள்ளிக்கு பின்பு அக்ஸிதா அவனை பார்ப்பதற்கான சந்தர்ப்பமே அமைந்திடவில்லை. யாஷூடன் திருமணத்தின் பொழுது அவளை வீட்டில் விட்டு தாயும் தந்தையும் மூன்றாம் நபர் போல் வந்து சென்றிருந்தனர் அதிகம் எதிலுமே கலக்காமல். எப்பொழுதுமே அவனை இப்படி நிறுத்தி பார்த்தே கிடையாது. நவீனுமே அவளை விகல்பமாய் பார்த்தது கூட கிடையாது. ஒரு வருடத்திற்கு முன்பு கூட நீ நவீனின் மனைவியாக போகிறாய் என்றிருந்தால் கண்டிப்பா ஏதோ விஷேஷ ஜந்துவை பார்ப்பதை போலொரு பார்வையை பதிலாக கொடுத்திருப்பாள். எப்பொழுதும் வாழ்க்கை நம் எண்ணங்களுக்கு மட்டுமே கட்டுபட்டு நடப்பதில்லையே! ஏதேதோ எண்ணங்களில் உழன்றவளை மேலும் கண்ணீர் ஆக்கிரமிரக்க, "ப்ச்...அக்ஸி" என்ற நவீனின் அதட்டலான குரல் கலைத்தது.


"இப்போ என்ன டி பிரச்சனை" என்ற நவீன் அவளை ஆயாசமாய் பார்க்க சட்டென்று கண்ணீரை துடைத்தவள் அமர்ந்தவாக்கிலே நின்றிருந்தவனை இடிக்கும் வயிற்றை பொருட்படுத்தாது கட்டிப் பிடித்துக் கொண்டாள்.


ஒரு கையில் தட்டுடன் மறு கையில் குவளையில் தண்ணீருடன் நின்றிருந்தவன் பரிதாபமாய், "ஹேய் என்னடி பண்ற? அம்மா வந்திடப் போறாங்க" என்றபடி கழுத்தை வாயிலை நோக்கி திருப்ப, அவனின் பாவனையில் மலர்ந்து புன்னகைத்தவள் "ம்ம்...வரட்டும் வரட்டும், இந்த கையில அவங்களையும் வளைச்சு கட்டிப் பிடிச்சுப்பேன்" என்று கண் சிமிட்டி கைகளை விரித்து காட்ட "ப்பா...உனக்கிருக்க வாய் இருக்கே" என்று அங்கலாய்த்த நவீனுக்கும் அவளின் பேச்சால் பொங்கி வரும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.



தொடரும்....
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Naveen ku kalyanam agiduthu ah appo yashvi sethu poitala ah aathi ippo ava return aana naveen oda nilamai epudi irukum simply rombhavae thindattam
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Naveen kalyanam aduja eppo yash ini vara matala 🥺🥺nammaga identity ya Namma tha choose pannanum naveen crt tha solli irukan😍😍 yaru iruthalum illama ponalum nammaga Namma odanum super naveen aashi nalla poonu tha 💝💝💝
 
Top