• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 12

Administrator
Staff member
Messages
575
Reaction score
832
Points
93
தேனும் இனிப்பும் 12:

அவனும் நானும்
நரம்பும் யாழும்…


பரமேஸ்வரி, “மஹி தாம்பூலத்தை எங்க வச்ச?” என்று கேட்க, “இங்க தான் அத்தை வச்சேன்” என்றவள் விழிகளால் அதை தேடி எடுத்து கொடுத்தாள்.

“மஹி சந்தனத்தை எங்க வச்ச?” என்று மற்றொரு குரல் கேட்க, “ரெட் கலர் பைல தான் வச்சேன்” என்றபடி நகர்ந்தாள் மஹிமா.

திலகவதி, “ஹேய் நீ எதுக்குடி இப்போ எவ கல்யாணத்துக்கோ மாடு மாதிரி வேலை செஞ்சிட்டு இருக்க?” என்று அதட்ட, “ம்மா…” என்று விழிகளை உருட்டி முறைத்தவள், “உன்கிட்ட எவ்ளோ டைம் சொல்றது. ஜானவியும் எனக்கு லாவண்யா மாதிரி தான்” என்று அழுத்தமாக கூறினாள்.

“சீ எம்மகளோட கண்டவளை கம்பேர் பண்ணாத” என்று திலகவதி முகத்தை சுழிக்க, “ம்மா திஸ் இஸ் யுவர் லிமிட்” என்று பல்லை கடித்து எச்சரிக்கை செய்தாள்.

“என்னடி லிமிட்டு. நான் உன் அம்மா அதை மறந்திட்டு பேசாத” என்று திலகவதி குரலை உயர்த்த, “கத்தாம பேசும்மா” என்று விழிகளை சுழலவிட்டவள், “அம்மான்றதால தான் அமைதியா பேசிட்டு இருக்கேன்”என்று நகர விழைந்தாள்.

“நில்லு டி. நல்லாதான இருந்த திடீர்னு உனக்கு புத்தி பிசகி போச்சா. நீ வாழ வேண்டிய வாழ்க்கைய அவளுக்கு விட்டு கொடுத்துட்டு அவ கல்யாணத்துக்கு நாயா பேயா வேலை செஞ்சிட்டு இருக்க” என்று ஆற்றாமையோடு கேட்க, “யாருக்கும் யாரும் விட்டு கொடுக்கலைம்மா. இது அவங்க வாழ்க்கை அவங்களுக்கு மட்டும் தான் சொந்தம்” என்றவள், “என்னைவிடு நான் போய் வேலைய பாக்குறேன்” என்று நகர்ந்தாள்.

“சை என்ன சொல்லி என் பொண்ணை இப்படி கெடுத்து வச்சாங்கன்னு தெரியலையே” என்று புலம்பியபடி வந்தவர், “ஏன் ண்ணி நீங்க கூட இந்த அநியாயத்தை கேட்க மாட்டீங்களா?” என்று பரமேஸ்வரியிடம் கேட்க, அவர் என்ன பதில் கூறுவார். கணவன் சம்மதித்த பிறகு அதுவும் நடந்த அனைத்தையும் அறிந்த பிறகும் அவரால் எப்படி ஜானுவை ஒதுக்க முடியும்.

இதனை கூறினால் திலகவதி தன்னை தான் பேசுவார் என்று உணர்ந்தவர், “உங்கண்ணன் முடிவு பண்ண பின்னாடி நான் எப்படி எதிர்த்து பேசுறது” என்று முடிக்க, “அதுவும் சரிதான் இத்தனை நாள் என் பேச்சை கேட்டுட்டு இருந்த என் அண்ணனே இப்போ கேக்கலை” என்றவாறு அறைக்குள் செல்ல, பரமேஸ்வரி அவரை கவலையுடன் பார்த்தார்.

பரமேஸ்வரிக்கும் மஹிமாவை மருமகளாக கொண்டு வர விருப்பம் தான் ஆனால் அவர்கள் இருவருக்கும் விருப்பம் இல்லாத போது என்ன செய்வது‌.

அதுவும் ஜானு விடயம் அறிந்த பிறகு அவரால் நிச்சயம் இந்த திருமணத்தை மறுக்க முடியவில்லை. அதனால் தான் மகனுக்காக கணவனிடம் அவரது முடிவை எதிர்த்து பேசினார்.

லாவண்யா இறந்த பிறகு சூன்யமாகிவிட்ட மகனின் வாழ்வை கண்டு எவ்வளவு வருந்தியிருப்பார். இப்போது மகனது வாழ்வில் வசந்தம் வர போகிறது. அதுவும் அவனாக தேடி கொண்ட முதன் முதலாக தங்களிடத்தில் கேட்ட ஒன்று அதனை மறுக்க எப்போதும் முடியாது.

இந்த அந்தஸ்து ஜாதி மதம் எல்லாம் முன்பு எப்படியோ இப்போது மகனது மகிழ்ச்சி தான் முக்கியமாகப்பட்டது. இவள் இல்லை என்றால் மகன் நிச்சயமாக இறுதிவரை தனியாக துன்பப்படுவான்.


ஆக அவளது பின்புலம் எதுவும் முக்கியமாகபடவில்லை. மகன் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போதும் என்று தாயுள்ளம் எண்ணியது. ஜானுவை இத்தனை வருடங்கள் பார்த்ததை வைத்து அவள் மீது நல்லெண்ணம் தான் இருந்தது.

தன் மகனோடு மகிழ்ச்சியாக இருந்தால் போதும் அது மஹிமாவாக இருந்தால் என்ன ஜானுவாக இருந்தால் என்ன என்ற முடிவிற்கு வந்திருந்தார்.

“ஷியாமா அந்த வெத்தலை பேக்கை எடுத்து வச்சிட்டியா?” என்ற மஹிமா அறைக்குள் நுழைய, இப்போது மீண்டும் திலகவதி பிடித்து கொண்டார்.

“ஏன்டி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு இதெல்லாம் செஞ்சா ஆகாதா?” என்று மகளை கடிய, “கல்யாணம் முடிஞ்ச பிறகு ரெஸ்ட் எடுத்துக்கிறேன்மா. நான் தான் மாமா கல்யாணத்தை முன்ன நின்னு நடத்துவேன்னு சொல்லி இருக்கேன். எல்லாத்தையும் நான் தான் பாக்கணும்” என்றவாறு தன்னுடைய தாவணியை சரி செய்தாள்.

“என்னவோ அவங்க சொன்ன கதைய நம்பி இப்படி ஏமாந்திட்டு இருக்க. எவளாவது இவ்வளோ வருஷம் காத்திருப்பாளா? அதுவும் புள்ளையும் இவனோடதாம் கேக்க நம்புற மாதிரியா இருக்கு” என்று திலகவதி அங்கலாய்க்க, ஷியாமளாவும் மஹிமாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்‌.

மஹிமா, “நம்பறது நம்பாததும் உன் இஷ்டம் அதுக்காக நாங்க எதுவும் பண்ண முடியாது. நீ போய் ஹால்ல உட்காரு எங்களை டிஸ்டர்ப் பண்ணாம” என்று கடிந்தாள்.

“எது நான் டிஸ்டர்ப் பண்றேனா? நாளை பின்ன அவ என் பேரப்பிள்ளைங்களை கொடுமை பண்ணும் போது தெரியும் உனக்கு நான் சொல்றது உண்மைன்னு” என்று முறைக்க, “ம்மா உன் கற்பனையை கொஞ்சம் மூட்டை கட்டி வை. நீ சொல்றதெல்லாம் எந்த காலத்திலயும் நடக்காது. ஜானுக்கா பசங்களை ரொம்ப நல்லா பாத்துப்பாங்க” என்று முறைத்தபடி கூறியவள்,

“இப்படியே பேசி கல்யாணத்துல எதாவது குட்டை குழப்பணும்னு நினைச்ச. கடைசி வரை நான் கல்யாணமே பண்ண மாட்டேன்” என்று வெளியேறினாள்.

இங்கு மஹியின் கூற்றில் திலகவதி தான் ஆடி போய்விட்டார். மகளின் பிடிவாதம் அறிந்தவர் கப்சிப் என்றாகிவிட்டார்.

அனிதா இளையவர்களை கிளப்பி தன்னோடு இருத்தி கொள்ள மஹியும் ஷியமளாவும் பரமேஸ்வரிக்கு எல்லாவற்றையும் எடுத்து வைக்க உதவினர்.

இதோ ஜீவா மஹியிடம் பேசி ஒரு வாரம் கடந்திருந்தது. வெளியே அமர்ந்திருந்த குடும்பத்தினரை எதிர்ப்பார்த்து இருந்தவன் சிறிதும் அசராமல் எதிர் கொண்டான்.

அவர்கள் இருவரது வாழ்வில் நடந்தவற்றை கூற ஒரு களேபரமே உருவானது.

ஆனால் ஜீவா மிகவும் தெளிவாக பொறுமையாக கூறிவிட்டான் ஜானுவை தவிர வேறு யாருக்கும் வாழ்வில் இடமில்லை என்று.

அதுவும் அவன் குரலில் இருந்த உறுதி பெற்றவர்களுக்கு மறுக்க வாய்ப்பளிக்கவில்லை.

கண்ணாயிரம் கூட மகள் தீர்க்கமாக மறுத்ததால் வேறு வழியின்றி சம்மதித்து விட திலகவதி தான் ஒரு வாரமாக புலம்பி கொண்டும் மகளை திட்டி கொண்டும் திரிகிறார்.

பெரியவர்கள் கலந்து பேசி திருமணத்தை எளிமையாக குலதெய்வம் கோவிலில் வைத்து கொள்ள முடிவெடுத்தனர்.

அதற்கு ஜீவாவும் ஜானவியும் சம்மதித்தனர். அவர்களுக்குமே பெரிதாக அதுவும் இந்த வயதில் செய்ய விருப்பமில்லை.

பரமேஸ்வரி, “மஹி எல்லாத்தையும் எடுத்து வச்சாச்சு ஜீவா வந்தா கிளம்பிடலாம்” என்று கூற, “நான் போய் மாமாவ அழைச்சிட்டு வர்றேன்” என்று மஹி துள்ளலுடன் அறைக்கு சென்றாள்.

“மாமா ரெடியாகிட்டிங்களா?” என்றவாறு மஹி நுழைய, ஜீவா அமைதியாக லாவண்யாவின் புகைப்படத்தை பார்த்து நின்றிருந்தான்.

அதை கண்டதும் மஹிக்கும் அக்காவின் நினைவு தாக்க அமைதியாக அவனை அவதானித்தாள்.

நிமிடங்கள் கடந்தும் ஜீவா அசையாது நிற்க, “அக்கா இதை பார்த்து கண்டிப்பா சந்தோஷம் தான் படுவா மாமா” என்று அவனது கையை பிடிக்க, திரும்பி பார்த்தவன் மெதுவாக தலையசைத்தான்.

“டைம் ஆச்சு வாங்க போகலாம்.‌ உங்களுக்காக தான் எல்லாரும் வெய்ட்டிங்” என்று மஹி பேச்சை மாற்ற, அதை உணர்ந்தவன் அமைதியாக வெளியேறினான்.

தந்தையை கண்டதும் அதியும் அர்னவ்வும் ஓடி வந்து காலை கட்டி கொண்டனர்.

ஜீவா மென்னகையுடன் அவர்களை தூக்கி கொண்டு மகிழுந்தில் ஏறினான். இரண்டு வாகனமும் குலதெய்வம் கோவிலை நோக்கி சென்றது.

“அண்ணி போதும் எதுக்கு இவ்ளோ மேக்கப்” என்று ஜானு சங்கடமாக மறுக்க, “ஹேய் ஒன்னுமே போடலைடி. இப்போதான் ஸ்டார்ட் பண்ணி இருக்கேன். உனக்குலாம் பியூட்டிசியனை கூப்பிட்டு இருக்கணும் அப்போ தெரியும்” என்று அங்கலாய்த்தாள்.

“ஆமா இன்னும் கொஞ்சம் போடுங்க. லைஃப்ல பர்ஸ்ட் டைம் கல்யாணம் பண்ண போற இது கூட போடலைன்னா எப்படி” என்று கனியும் சேர்ந்து கொள்ள, “அம்மா இந்த புடவைல ரொம்ப அழகா இருக்கம்மா” என்று ஜீவி பொழிந்தாள்‌.

மகளின் கூற்றில் மெதுவாக புன்னகைக்க, “பாத்தியா இவ்ளோ நேரம் உம்முனா மூஞ்சியாட்டம் இருந்திட்டு இப்போ மக சொன்னதும் சிரிக்கிறா” என்று அனிகா வம்பிழுத்தாள். டெல்லியில் இருந்த அவளது மொத்த பட்டாளமும் முதல் நாளே வந்து இறங்கி இருந்தது ஜானுவின் திருமணத்தில் நாங்கள் இல்லாமலா என்று.

ஜானு, “அண்ணி போதும் இதுக்கு மேல எதுவும் வேணாம். மேரேஜே சிம்பிளாதான் நடக்குது”என்று மறுக்க, “சரி இதோட அவ்ளோதான்” என்று முடித்தாள்.

“நேரமாகிடுச்சு கிளம்பலாமா? அவங்க கிளம்பிட்டாங்களாம்” என்றபடி வந்த நரேன் ஜானுவை திருமண கோலத்தில் கண்டுவிட்டு ஒரு கணம் நின்றுவிட்டான்.

சடுதியில் விழிகள் கலங்கிவிட்டது. அவளை திருமண கோலத்தில் பார்க்க எத்தனை வருடங்களாக தவமிருந்திருக்கிறான். அப்படி ஒரு நாள் வரவே வராதோ என்றெல்லாம் வருந்தியிருக்கிறானே.

உடன் பிறந்த சகோதரி இருந்தால் கூட இவ்வளவு பாசத்தை வைத்திருப்பேனா என்று பலமுறை எண்ணியிருக்கிறானே.

ஜானுவும் சகோதரைனை கண்டதும் எழுந்து நின்று புன்னகைத்தாள்.

இத்தனை வருடங்கள் இவளது புன்னகையில் இல்லாத ஒன்று இப்போது இருப்பதை அவன் உணர்ந்தான்.

“ஆரம்பிச்சிட்டாங்கப்பா இவங்க பாசமலர் படத்தை” என்று தீபா கிண்டலிக்க, நரேன் மனைவியை முறைத்தான். மற்றவர்கள் சிரித்துவிட்டனர்.

ஜானு, “அண்ணி” என்று லேசாக சிணுங்க, “என்ன அண்ணனும் தங்கச்சியும் இப்படியே பாத்திட்டே இருக்க போறீங்களா. டைம் ஆச்சு கிளம்பணும்” என்று அதட்டினாள்.

தீபாவின் அதட்டலில் வேலை சீக்கிரமா நடக்க அடுத்த ஐந்து நிமிடத்தில் எல்லோரும் வேனில் ஏறி இருந்தனர்.

கிட்டத்தட்ட இருபது பேர் இருப்பதால் வேன் தான் சரியாக இருக்கும் என்று நரேன் ஏற்பாடு செய்திருந்தான். டெல்லி ஆட்கள் தவிர சௌம்யா மட்டும் வந்திருந்தாள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்தில் ஜீவாவின் குல தெய்வம் கோவிலை அடைந்திருந்தனர். ஜீவாவின் குடும்பம் சற்று முன்னர் தான் வந்திருந்தனர்.

தீபா ஜானு மற்றும் ஜீவியை அழைத்து செல்ல மற்றவர்கள் இறங்கி வந்தனர்.

அந்த தீர்த்தவாரி முத்து மாரியம்மன் கோவில் ஆட்களால் நிரம்பி வழிந்தது‌.

ஜீவாவின் குடும்பத்தினர் ஒரு புறம் அமர்ந்திருக்க மற்றொரு புறத்தை இவர்கள் ஆக்கிரமித்தனர்.

கூட்டத்தின் நடுவே அமர்ந்திருந்த ஜீவாவை கண்டு ஜானு புன்னகைக்க அவனும் அவளை பார்த்து மென்னகை புரிந்தான்.

ஜீவாவின் மடியில் அமர்ந்திருந்த அர்னவ்வை கண்டு, “வா…”என்று ஜானு இதழசைக்க, “ம்ஹூம்” என்று தந்தையுடன் ஒட்டி கொள்ள இருவருக்கும் புன்னகை ஜனித்தது.

மஹி, “அக்கா வாங்க உட்காருங்க’ என்று ஜானுவை அமர வைத்தாள்.

சிறிது நேரத்தில் பொண்ணும் மாப்பிள்ளையும் அழைக்கப்பட்டனர்.

ஜீவா அர்னவ்வை மடியிலும் அதிரனை வலது புறத்திலும் அமர வைக்க ஜானு ஜீவியை இடது புறம் அமர வைத்து கொண்டாள். நடக்க வேண்டிய சம்பிரதாயங்கள் முறைப்படி நடந்தது.

ஜானவிக்கு உடன் பிறந்தவனாய் நரேன் தான் எல்லாவற்றையும் எடுத்து செய்தான்.

திருமணம் எளிமையாக இருந்தாலும் செய்ய வேண்டிய சடங்குகள் முறைப்படி செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் பார்த்து பார்த்து செய்திருந்தனர்.

புரோகிதர் மந்திரத்தை கூறி மங்கல நாணை ஜீவாவின் கரத்தில் கொடுக்க அதனை பெற்று கொண்டவன் ஜானுவை ஒரு முறை பார்த்து அவளது கழுத்தில் மூன்று முடிச்சிட்டு மனைவியாக்கி கொண்டான்.

குனிந்து அவன் அணிவித்த மாங்கல்யத்தை பெற்று கொண்டவளுக்கு என்ன முயன்றும் இரு துளி நீர் கன்னம் தாண்டிவிட்டது.

எத்தனை வருட தவம் இந்த மாங்கல்யம் இவனுடன் நான் என்பது என்று நெஞ்சம் விம்மியது.

அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்த நரேனுக்கும் விழிகள் கலங்கியது. மூன்று பிள்ளைகளின் நடுவே அழகான குடும்பத்துடன் தங்கையை காண உள்ளம் நெகிழ்ந்தது.

கணவனை உணர்ந்த தீபா, “ஹ்ம்ம் போதும் நல்லது நடக்கும் போது கண்கலங்க கூடாது” என்று ஆறுதலாக பிடித்து கொண்டாள்.

ஜானு கலங்கிய விழிகளுடன் நிமிர்ந்து ஜீவாவை காண அவனும் அந்நேரம் அவளை தான் பார்த்திருந்தான்.

இந்த அழகிய காட்சியை தனது புகைப்பட கருவியில் அழகாய் சிறைப்பிடித்தான்
ஆதவன்.
புகைப்படம் அவ்வளவு அழகாய் நிறைவாய் வந்திருந்தது.

ஜானுவும் ஜீவாவும் புதியதொரு துவக்கத்தை நோக்கி ஒரு அடியை எடுத்து வைத்தனர்.



 
Well-known member
Messages
1,058
Reaction score
763
Points
113
Semmmmmmmaaaaa azhaghana ud ma, superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr 🥲🥲🥲🥲🥲
 
Top