- Messages
- 545
- Reaction score
- 735
- Points
- 93
அத்தியாயம் 12
தன் முன்னிருந்த காலி கோப்பையை வெறித்து அமர்ந்திருந்த சாராவின் மண்டையை வண்டாய் குடைந்து கொண்டிருந்தது நேற்றிரவு அலைபேசியில் கேட்டு விட்ட செய்திகள். உறங்காத விழிகள் வேறு அவ்வப்பொழுது எரிச்சலை கொடுத்துக் கொண்டிருக்க கண்களை இறுக மூடி அமர்ந்து விட்டாள் தலையை தாங்கியபடி. வலி என்பதை விட அதை யாரிடமும் பகிர இயலாத கையறுநிலை தான் ஆகப்பெரும் அவஸ்தையே!
நேற்றிரவு, "மஹிக்கா நிறைய தடவை எனக்கு ட்ரை பண்ணி இருக்காங்க உன்கிட்ட பேசணுமாம். நானும் மறந்திட்டே இருக்கேன். இப்பயாவது பேசிடு சாரா" என்ற அஸ்வின் தன்னுடைய அலைபேசியில் இருந்து மஹிமாவிற்கு அழைப்பு விடுத்து அவளின் கையில் திணித்து விட்டு நகர்ந்திருந்தான்.
நெற்றியை தட்டிக் கொண்ட சாராவிற்கு அப்பொழுது தான் நினைவு வந்தது சித்விக் மீதிருந்த ஆற்றாமையில் யாருடனுமே பேசாதிருந்தது. அழைப்பை ஏற்றவுடன், "ஹலோ மஹி" என்றவளின் குரலை கண்டு கொண்டவள் அரைமணி நேரம் பேசினாள் எதிரிலிருப்பவள் காது கிழியும் வரை.
"மேடத்துக்கு என்னை யார்னு தெரியுதா? ஞாபகம் இருக்கா? நம்பர் சேன்ஜ் பண்ணா இன்பார்ம் பண்ண மாட்டியா? திமிர் உடம்பெல்லாம்" என்றதில் தொடங்கிய பேச்சு வார்த்தையை முடிப்பதற்குள் சாராவிற்கு தான் மூச்சு முட்டியது. அவளை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து ஒரு வழியாக வெள்ளைப்புறாவை பறக்கவிட்டவள் அப்பொழுதே தன்னுடைய எண்களை பகிர்ந்திருந்தாள்.
பரஸ்பர நல விசாரிப்புகளில் தொடங்கி ஒரு வருட கதைகளை இரண்டு மணிநேரத்தில் சுருக்கமாக ஒலிபரப்பப்பட்டிருக்க இறுதியில் வந்து நின்றது சித்விக்கில் தான். சாரா, தவிர்க்க நினைத்தாலும் மஹிமா பேசினாள். பேசாதே என்று தடை போட இயலாது விருப்பமே இன்றி காதை அவளுக்கு கொடுத்திருந்தாள்.
"ஏய் சாரா, சித் அண்ணாவை உனக்கு ஞாபகம் இருக்கா? நம்ம சீனியர், நீ கூட அஸ்வின்காக சண்டை போட்டியே. பிருந்தாக்கும் அவங்களுக்கு என்கேஜ்மென்ட் சொன்னதும் நான் ரொம்ப ஹாப்பியா இருந்தேன் ஆனா அன்னைக்கு ஊர்க்கு போயிருந்தப்ப அவளை பார்த்தேன், அவங்க மேரேஜ் கேன்சல் ஆகிடுச்சு போல, அவ கேஸூவலா தான் இருந்தா ஆனா எனக்கு தான் கஷ்டமா போச்சு" என்று சாரா கேட்காமலே தகவலை கடத்தியவள் மேலும் அரைமணி நேரம் பேசியிருக்க அதெல்லாம் பேதையின் காதில் ஏறினால் தானே! 'திருமணம் நின்று விட்டதா? ஏன்? என்ன என்ன தான் செய்து கொண்டிருக்கிறான் இவன்' என்றதிலே இரவு முழுவதும் உழன்று கொண்டிருக்க அன்றைய உறக்கம் பறிப்போயிருந்தது பாவைக்கு.
ஏனோ இப்பொழுதெல்லாம் அவனருகாமைக்கு மனது வெகுவாகவே ஏங்கத் தொடங்கி இருந்தது. பிரிவு காதலை குறைக்கும் என்று யார் கூறியது?...முன்பை விட அவனின் மீது பெண்ணவளுக்கு காதல் எக்கசக்கமாக கூடி தான் போயிருந்தது. அதற்கு பயந்து தானே ஓடினாள், ஆனால் இறுதியில் முட்டி நிற்பது என்னவோ அவனை குறித்த எண்ணங்களில் தானே!.
உடையில் தொடங்கி அவன் வாங்கி கொடுத்த வாசனை திரவியம் முதற்கொண்டு பாவை மூட்டைக்கட்டி பரணில் ஏற்றி இருந்தாள் அந்தோ பரிதாபம் மனதில் தேங்கி நின்ற அவனின் நினைவுகளை தவிர! அது மட்டும் அவளால் முடியவே இல்லை. இதுவும் மாறும் என்று கடக்க நினைத்தவளுக்கு எதுவுமே மாறாது என்று உணர வெகு காலமெல்லாம் பிடிக்கவில்லை. 'அடேய் செத்த பின்பு தான் நரகமென்று யாரடா கூறியது? நான் இப்பொழுதே அப்படி தானே வாழ்கிறேன்' என்று பாவையின் மனது அலைப்புறாத நாளில்லை.
முகத்தில் அறையும் உண்மையை தோற்கடித்து விடும் எண்ணத்தில் அவள் செய்த முயற்சியின் பலனெல்லாம் சுழியம் மட்டுமே! அவனுடன் பழகியது நெடுங்காலமில்லை என்றாலும் ஏனோ அவளின் உடலின் ஒரு அங்கமாகவே மாறி இருந்தான். ஆம், ஏதோ உடலில் ஒரு உறுப்பு குறைந்தது போல் ஊனமாக தான் பேதை மனது உணர்ந்தது, ஆடவன் உடன் இல்லாததை. முன்பும் எப்பொழுதும் உடனிருப்பதில்லை என்றாலும் அவனுடைய பேச்சுக்களை கேட்காமல் உறக்கத்தை தழுவியதில்லை பெண்ணின் விழிகள். எத்தனை வேலைகள் இருந்தாலும் இரவில் கூட அழைத்து இரண்டொரு வார்த்தை பேசி விடுவான், ஏனென்றால் அவளை விட அவன் தான் பாவையை அணுஅணுவாக புரிந்து வைத்திருப்பது. ம்ம், அவளின் முக பாவனைகளை வைத்தே எண்ணவோட்டத்தை புரிந்து அதற்கேற்றாற் போல் நடந்து கொள்வான்.
"நீங்க ஏன் இப்படி பண்றீங்க? நான் கேட்கிறதுக்கு முன்னாடியே எல்லாமே நீங்களாவே செய்றீங்க, நான் உங்களுக்கு அடிக்ட் ஆகிட்டே வரேன், இன்பேக்ட் என்னோட பேச்சை விட உங்க பேச்சை தான் என்னோட மனசு கூட கேட்குது" என்று அவனிடம் சண்டையிட்ட காலத்தையெல்லாம் நினைக்கும் பொழுதுதே மனது முழுவதும் நெருப்பாய் தகிக்க தொடங்கி விடுகிறது நொடியில். அழுது மூச்சுக்காக ஏங்கி உறங்காமல் தவித்த நாட்களெல்லாம் அதிகம் இந்த ஒரு வருடத்தில், அழுத்தியது பெண்ணவளை சுமக்க முடியாத பாரமாய் ஆடவன் மீது கொண்ட காதல். ஆனாலும் ஏனோ ஒட்டிக் கொண்டிருந்த வறட்டு பிடிவாதம் அவனை நெருங்க விடாமல் தடுத்து விட்டது.
விழி மூடி அமர்ந்திருந்தவளை, "ஹாய்" என்று எதிரில் அமர்ந்திருந்தவன் குரல் கலைத்தது. விழிகளை மலர்த்தி பார்த்தவள் லேசாக புன்னகைக்க முயல அவனும் தேங்கிய புன்னகையுடன் கைக்குலுக்கி, "ஐயம் சஞ்ஜய்" என்று பெயரை கூறி அறிமுகம் செய்து கொண்டான்.
"என்ன சாப்பிடுறீங்க?" என்றவன் தனக்கு வேண்டியது கூறிவிட்டு பாவையை பார்க்க எதுவும் வேண்டாமென்று மறுத்து தலையாட்டினாள். பேசினான், பேசிக் கொண்டே இருந்தான். ஆனால் பாவைக்கு கேட்கும் ஆர்வமில்லாது போக வெளியில் வேடிக்கை பார்த்தாள்.
அரைமணி நேரம் கடந்திருக்க இதுவரை அவனுடைய சுயசரிதை மட்டுமே கூறியிருந்தான். 'டேய் யார்டா இவன்? யாராவது இவனது வாயை கொஞ்சம் அடைத்து விடுங்களேன்' என்ற மனநிலை பாவைக்கு. அவ்வபொழுது அவனது பேச்சால் சிரிப்பு எழுந்தாலும் அதை அடக்குவதற்குள் பெரும்பாடு பட்டு தான் போனாள்.
ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது, இவளே வாயை திறந்து, 'உன்னை எனக்கு பிடிக்கவில்லை, திருமணத்தை நிறுத்தி விடலாம்' என்று கூறினால் கூட எதிரிலிருப்பவனுக்கு அவ்வளவு சுலபத்தில் விட்டு விடும் எண்ணமில்லை.
அவனது பேச்சில் ஒரு தீவிரத்தை கண்டு கொண்டாலும் பாவை அமைதியாய் அமர்ந்திருந்தாள் அவ்வபொழுது சில பல தலையசைப்புகளுடன். இல்லையென்றால் இவளை கண்டு கொள்வானே!... கண்டு கொண்டாலும் அது அவனை பாதிக்காது என்பதையும் சற்று நேரத்தில் ஆடவன் உணர்த்தி இருந்தான்.
"ஒரு செஃல்பி எடுத்துக்கலாமா? ப்யூச்சர்ல்ல இது எல்லாம் ஸ்வீட் மெமரிஸா இருக்கும், நம்மோட பர்ஸ்ட் மீட்" என்றவன் அலைபேசியை தூக்கி எழுந்து கொள்ள பாவையின் கால்களும் வேறு வழியின்றி எழுந்து நின்று கொண்டது. அனுமதி கேட்கவில்லை அவனுடைய பேச்சுகள் செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயமாய் இருக்க, 'அடேய் அடங்குடா, பழைய சாரா வெளி வந்தா நீ தாங்க மாட்ட' என்று விழிகள் அபிநயம் படித்து எச்சரிக்கை விடுக்க அதை அப்படியே புரிந்து கொள்ள அவன் என்ன சித்விக்கா?
அவளருகில் நெருங்கி நின்றவன் சட்டென்று தோளில் கைப்போட, "எக்ஸ்கியூஸ்மீ" என்றவள் கோபத்தில் பல்லைக்கடித்தாள். அவனை ஓங்கி அடிக்கும் எண்ணத்தில் பாவை நின்றிருக்க அவனுடைய நல்ல நேரத்திற்கு, "சாரி" என்று முணுமுணுத்து விட்டு அலைபேசியில் கவனத்தை திருப்பி இருந்தான் அந்த நல்லவன். சுற்றி இருந்தவர்களின் பார்வை அவர்களை தொட்டு மீள அதையெல்லாம் அவன் கண்டு கொள்ளவில்லை ஆனால் பாவை ஏனோ அசௌகரியமாக உணர்ந்தாள்.
முதலில் என்றால் அவளும் இதை எளிதாக கடந்திருப்பாள் ஆனால் இப்பொழுது முழுதாக சித்தின் சாராவாக இருக்கும் பொழுது அது ஒரு வித அசூசையை கொடுத்தது. ஆம், தன்னுடைய எண்ணங்களை கூட அவளுடைய மூளைக்கு கடத்தியிருந்தானே அவளின் காதலன்.
பாவைக்கு சட்டென்று எண்ணங்கள் சித்விக்கில் வியாபித்தது. "பப்ளிக் ப்ளேஸ்ல்ல கொஞ்சமாச்சும் டிசெண்டா நடந்துக்கணும், இங்க நம்ம மட்டுமில்ல நிறைய குழந்தைகளும் இருக்காங்க சாரா, யாருக்கும் நம்ம தப்பான உதாரணமாகிட கூடாது" என்றவனின் கைகளை அவளின் கைகள் பற்றி இருந்தாலும் உடல்களை உரசியதில்லை. அதற்கு அந்த நல்லவன் அனுமதியளித்தில்லை. நிறைய புகைப்படங்கள் அலைபேசியை நிறைத்திருந்தாலும் வெளி இடங்களில் எடுக்கும் பொழுது இருக்குமிடையில் ஒரு சிறு இடைவெளி இருக்கத்தான் செய்யும். மற்றவர்கள் அறியவில்லை என்றாலும் பாவை புரிந்து கொள்வாள்.
"நம்ம லவ்வை இப்படி தான் காட்டணும்னு இப்ப இருக்க ஜென்ரேஷன் நினைச்சுட்டு இருக்காங்க சாரா, அது ரொம்பவே தப்பு, நான் உன்னையும் உன்னோட காதலையும் ரொம்பவே மதிக்கிறேன். சோ நான் உனக்கு ரெக்ஸ்பெக்ட் கொடுக்கணும். எல்லா இடத்திலையும் உரசிக்கிட்டு கட்டிப்பிடிச்சுக்கிட்டு இருந்தா தான் நம்ம காதலிக்கிறோம்னு அர்த்தம் கிடையாது. நம்ம நடத்தை தான் எந்த இடத்திலையும் நமக்கான மரியாதை வாங்கி கொடுக்கும்" என்று அன்று அவன் பேசிய பொழுது, "ப்பா, முடியலை சித், காது ரொம்பவே வலிக்குது. பார்ங்க ப்ளட் வருதானு' என்று கிண்டலடித்திருந்தாலும் இப்பொழுது அந்த வார்த்தைகள் பெண்ணவளை தாக்குகிறது. ஆழமாக, அதாவது, "ஓஓ" என ஓங்கி கத்துமளவிற்கு.
அலைபேசியை தூக்கி பிடித்து புகைப்படம் பிடித்த சஞ்ஜய், "ப்ரோ" என்று தூரத்தில் சென்று கொண்டிருந்தவனை அழைக்க சாராவோ அவனது அலப்பறையில் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.
அவர்களை நோக்கி வந்தவன், "ஹாய் நீங்க?" என்று நெற்றியை சுருக்க, "ஞாபகம் இல்லையா? விஸ்வநாதன் பையன், எங்கண்ணாவோட ஆர்.எஸ் ஹாஸ்பிட்டலை நீங்க தான கட்டிக் கொடுத்தீங்க. எப்படி இருக்கீங்க? என்னோட ப்ரெண்ட் உங்க டிடெய்ல்ஸ் கேட்டான் பட் உங்களை மொபைல்ல பிடிக்கவே முடியலையே?" என்றவன் பேச்சகள் நீள அருகில் இருந்தவளால் தான் உடலின் நடுக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆம், உடல் மட்டுமல்ல உள்ளமுமே நடுங்கியது அந்த குரல் செவியை தீண்டிய நொடி. செவியை மட்டுமல்ல உடலின் ஒவ்வொரு அணுக்களையுமே தீண்டி அதிர செய்து கொண்டிருந்தது அவனின் குரல், மறக்க கூடிய குரலா அது?
குனிந்து அமர்ந்திருந்தவள் தலை நிமிரவே இல்லை. தேங்கிய கண்ணீரை மறைக்க முடியவில்லை நிமிர்ந்தால் அதற்கு பதில் கூற வேண்டுமே! ஆனால் தூரத்திலே சித்விக் கண்டு கொண்டான் அவளை. ஆனால் ஆடவன் குரல் எப்பொழுதும் போல் வெகு நிதானமாக புன்னகையுடன் வெளி வர பாவைக்கு அதுவே அப்படியொரு கோபத்தை கொடுத்தது. தெரியும் நியாயமில்லை என்று ஆனால் ஏனோ தன்னை போல் அவன் ஏங்கி உருகி கரையவில்லை என்று எப்பொழுதும் போல் மனது அபத்தமாய் பிதற்றியது. அவனுடைய நிதான பேச்சுக்களும் மென்மையான அணுகுமுறைகளும் பாவையை அவன் புறம் நோக்கி இழுத்த காரணிகளாய் இருந்திட்டாலும் அவளுடைய விஷயங்களிலும் ஆடவன் நிதானங்கள் காட்டும் பொழுது பேதைக்கு அப்படியொரு ரணத்தை கொடுத்திருந்தது.
ஆடவன் விழிகள் வந்த பொழுது அவளை தழுவி மீண்டதோடு சரி அதற்கு பின் அவளின் புறம் திரும்பவே இல்லை. கோடிட்டு காட்டினான் அந்நியதன்மையை ஆடவன். முன்பை விட உள்ளம் தகிக்கத் துவங்க கண்ணீரை உள்ளிழுத்து அவனை பார்த்தாள் ஆனால் ஆடவன் தரிசனமே கொடுக்கவில்லை.
அருகிலிருந்த இருவருக்கும் சேர்த்து சஞ்ஜய் ஒருவனே பேசிட சாரவிற்கு அத்தனை எரிச்சலாக தோன்றியது. சித்விக் ஒற்றை வரி பதில்களோடு புன்னகை முகமாக அமர்ந்திருந்தான். ஆம், சஞ்ஜய் கைப்பிடித்து வலுக்கட்டாயமாக அமர வைத்திருந்தான்.
"ஹேய் சாரா, ஹி இஸ் மை ப்ரெண்ட்" என்று பெயருக்காக நெற்றியை சஞ்ஜய் சுருக்க, "சித்விக்" என்றான் ஆடவன் அவளை பார்த்து. அவளும் பார்த்தாள், 'ப்பா, கண்ணாலே எரிச்சிடுவா போலயே?' என்று பார்வையின் உஷ்ணத்தை கண்டு சித்விக் நினைக்க சஞ்ஜய் எதுவுமே உணராது வளவளத்துக் கொண்டிருந்தான்.
சித்விக் புறம் திரும்பியவன், "இவங்க என்னோட பியான்ஷி சாரா, நெக்ஸ்ட் மந்த் மேரேஜ். இன்விடேஷன் கொடுப்பேன் கண்டிப்பா நீங்க வந்திடணும்" என்று பரஸ்பர அறிமுகம் கொடுத்து சஞ்ஜய் பேச சாராவின் இதயம் நின்று துடித்தது. 'ச்சு...எப்பொழுதும் நின்று துடிப்பது எனக்கு மட்டும் தான் என்பது விதியோ? இவன் மட்டும் இயல்பாக இருக்கிறானே!' என்று மனது ஆதங்கம் கொண்டு பொங்கியது. ஆம், பிருந்தாவுடன் அவன் நிற்கும் பொழுதும் இப்படி தான் அதே போல் சஞ்ஜய்யுடன் அவள் இருக்கும் பொழுதும் கொதிப்பது என்னவோ பெண்ணவளுக்கு மட்டுமே. 'ஏன் என்னை போல் அவனுக்கு கோபம் எழவில்லை அல்லது சிறு வருத்தம் கூட இருப்பதாய் முகம் காட்டவில்லையே? ஒரு வேளை நான் மட்டும் தான் அவனை உருகி உருகி காதலித்தேனோ?' என்று எப்பொழுதும் போல் மூளை மடத்தனமாக எண்ணங்களை செலுத்திக் கொண்டிருத்தது.
"கங்கிராட்ஸ் போத் ஆஃப் யூ, அன்ட் ஹாப்பி மேரிட் லைப்" என்று பொதுவாக வாழ்த்து கூறி சஞ்ஜய் கைப்பற்றி குலுக்கி பாவையின் கொதிநிலையை மேலும் உயர்த்தி சென்றிருந்தான் சித்விக். செல்லுபவனை இழுத்து பிடித்து நிற்க வைத்து கன்னம் கன்னமாய் அறையும் ஆத்திரம் எழும்ப நல்ல வேளை அருகிலிருந்தவன், "ஓகே சாரா, போன்ல மீதிய பேசிப்போம். இப்ப ஒரு அவசர வேலை" என்று கிளம்பி இருந்தான். இல்லையென்றால் சித்விக் பதிலாக அவனின் கன்னங்கள் பழுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே மேலிட்டிருந்தது.
வெகுநேரம் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை மணிமேகலை அழைப்பு கலைத்திருந்தது. அலைபேசியை உயர்த்தி பார்த்தவளுக்கு இப்பொழுது இருக்கும் மனநிலையில் யாருடனும் பேசுவது சரியாக தோன்றாது போக அழைப்பை துண்டித்து கிளம்பி இருந்தாள்.
தனது ஸ்கூட்டியை உயிர்பித்து பின்னால் எடுத்தவளின் விழிகள் வண்டியின் கண்ணாடியில் தெரிந்த காட்சியில் நிலைக்குத்தி நிற்க வேகமாக அந்த காரை நோக்கி செலுத்தியவள் அதன் முன் இடிப்பது போல் நிறுத்தி இருக்க அவனும் நொடியில் பிரேக்கை அழுத்தி இருந்தான்.
வண்டியை காரின் முன்பே ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவள் அதனருகில் நின்று கொள்ள நெற்றியை தேய்த்த சித்விக்கும் காரை விட்டு இறங்கி அவளை நோக்கி வந்திருந்தான்.
யோசிக்கவெல்லாம் இல்லை கொத்தாக சட்டையை இறுக்கி பிடித்து, "எங்க இப்ப சொல்லு, கங்கிராட்ஸ்ஸா...?" என்றவளின் விழிகள் மட்டுமில்ல வார்த்தைகளுமே அனலை தாங்கிக்கொண்டு வந்து விழுந்தது.
அருகிலிருந்த ஒரு சிலர் பாவையின் நடவடிக்கையை வேடிக்கை பார்க்க, "ச்சு...சாரா சட்டையிலிருந்து கைய எடு, எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க" என்றான் அமைதியான குரலில். அவளோ, 'விட முடியாது, என்னடா செய்யவ?' என்று பார்வை பார்த்து நிற்க, "சாரா" என்றான் அழுத்தமாக. அவள் தன்னுடைய கட்டுப்படாட்டையே மீறி இருக்க அவனுடைய பேச்சுக்களை எங்கனம் கேட்பது.
அவளது கையை தானே எடுத்து விட்டான். ஆம், அவனுடைய அழுத்தத்தில் அவளுடைய விரல்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை தான்.
பேசினாள், "நீ என்னை ஏமாத்திட்ட?" என்று குற்றம்சாட்டியவள் விழிகள் சிவந்து போக மூக்கும் அதோடு போட்டிப் போட்டுக்கொள்ள எல்லாவற்றையும் மீறி முகம் கன்றி போனது. இதற்கு தானே அவனின் முன் செல்ல பயந்தாள். ஆனால் நடந்து விட்டதே அவளையும் மீறி.
ஆடவன் அதிரவே இல்லை, "நான் எதுவுமே செய்யலை சாரா, நீ தான் என்னை அவாய்ட் பண்ண. உனக்கு எந்த இடத்திலையுமே நான் நம்பிக்கை கொடுக்கலைன்னு நினைக்கிறேன் அதான் நீ இப்படி நடந்துக்கிட்ட. என்னை நம்பி இருந்தா கண்டிப்பா என்கிட்ட பேசியிருப்ப, அட்லாட்ஸ் என்ன நடந்ததுன்னாவது கேட்டிருப்ப, நான் உனக்கு கொடுத்த மரியாதையை நீ எனக்கும் என்னோட காதலுக்கும் கொடுக்கலைன்னு தான் தோனுச்சு, நீ தான் என்னை விலக்கி நிறுத்தின, நானா பேச ட்ரை பண்ண போதும் இன்சல்ட் பண்ண. அதான் நீயா தேடி வரட்டும் விட்டுடேன் உன்னை தொந்தரவு பண்ணாம. ஆனா நீ வரவே இல்ல...ம்ம், ஓகே முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும், கண்டிப்பா இந்த மேரேஜ் லைப் உனக்கு பெஸ்ட்டா இருக்கணும்னு கடவுள்கிட்ட ப்ரே பண்ணிக்கிறேன். ஆல் தி பெஸ்ட் சாரா" என்று அவளின் தோள் தட்டியவன் காரை எடுத்துக் கொண்டு பறந்து விட்டிருந்தான்.
பாவை ஸ்தம்பித்த நிலை தான், 'ஆஹா, பண்றதையெல்லாம் இவன் பண்ணி விட்டு எல்லா பழியையும் என் தலை மீது தூக்கி வைத்து சுலபமாக விலகிக் கொண்டானே! அவன் மீது தவறில்லையா? அடேய்!' என்று ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவள் மீள்வதற்குள் அவன் தான் பறந்திருந்தானே!
வீட்டிற்கு சென்றவளுக்கு மனதே ஆறவில்லை. ஆடவன் வார்த்தைகள் காதிற்குள் ரீங்காரமிட, "அஸ், நான் திருச்சி போறேன்" என்றவள் நடுநிசியில் தம்பியின் அறைக்கதவை தட்டி இருந்தாள்.
"ஹேய் பைத்தியம், டைம் என்ன தெரியுமா? டிக்கெட் கூட புக் பண்ணலையே. அன்ரிசர்வ்ரேஷன் உனக்கு செட் ஆகாது. அம்மாவுக்கு தெரிஞ்சது நான் காலி" என்றவனை முறைத்தாள்.
"சரி நானே பார்த்துக்கிறேன், நீ வரத் தேவையில்ல" என்ற வார்த்தை தம்பியிடம் வேலை செய்திருந்தது. அன்றைய தினத்தின் கடைசி தொடர்வண்டியில் அவளை ஏற்றி விட்டு திரும்பி இருந்தான். ஆம், அவனுக்கு கல்லூரியில் ப்ராஜெக்ட் சென்று கொண்டிருக்க அசைய முடியாத நிலை.
"நாலு நாள் பொறுத்துக்கோ சாரா, நான் லீவ் எடுக்கிறேன் ரெண்டு பேரும் சேர்ந்தே போவோம்" என்ற அஸ்வின் பேச்சிற்கு காது கொடுக்காதவள், "நீ வீட்டில யாருக்கும் சொல்லாத நான் கிளம்புறதை, அப்பா ஜங்சன் வரக் கூடாது. வந்தா உன்னை கொன்னுட்டேன்" என்று ஏற்க்குறைய அந்த அப்பாவி ஜீவனை மிரட்டி வண்டி ஏறி இருந்தாள்.
அந்த அதிகாலை பனி விலகாத காலை பொழுதில் ஆட்டோவில் சென்று வீட்டு வாயிலில் இறங்கியவள், "இந்த ஏரியா தான ண்ணா?" என்று ஆட்டோக்காரரிடம் உறுதி பெற்று அவருக்கு பணத்தை கொடுத்தவள் மீண்டும் மொபைலில் வீட்டு எண்னை சரி பார்த்து அழைப்பு மணியை அழுத்தி இருந்தாள்.
'இந்த நேரத்தில யாரா இருக்கும்?' என்று கண்களை கசக்கிய அகிலா தூக்கித்தை கண்களை விட்டு விலக்கி கதவை திறந்து எதிரிலிருப்பவளை, 'இவள் யார்?' என்று பார்வை செலுத்த, "சித்விக் வீடா?" என்றாள் பெண் எடுத்தவுடனே அதிகாரமாக.
அவளை முறைத்தாலும், 'ஆமாம்' என்று அவரின் தலைய மேலும் கீழுமாக அசைய அவரை விலக்கி உள்ளே வந்து ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்து கொண்டவள், "உங்க பையனை வரச் சொல்லுங்க" என்றிருந்தாள் சட்டமாக.
"நீ யார்ம்மா?" என்று அகிலா வினவ அதற்குள் உறக்கம் கலைந்து வந்த மூர்த்தி மனைவியை கேள்வியாய் பார்க்க, 'தெரியலை' என்பது போல் உதட்டை பிதுக்கியவர், "அதை உங்க பையன் கிட்ட கேளுங்க, இப்ப நீங்க வர சொல்றீங்களா இல்ல நானே போய் எழுப்பட்டுமா?" என்றவள் எழுந்து கொள்ள,
"என் வீட்டுக்கு வந்து என்னையே மிரட்டுறா, எம்புள்ளை நடு ராத்தியில வந்து இப்ப தான் தூங்குறான் அதுக்குள்ள எழுப்ப சொல்லி அதிகாரம் செஞ்சிட்டு இருக்கா, ஆளை பார்" என்று முணுமுணுத்த அகிலா நகராதிருக்க சாராவின் கால்கள் நகர துவங்கியது அறையை நோக்கி.
சுதாரித்த மூர்த்தி, "அகிலா போய் சித்தை எழுப்பிட்டு வா" என்று குரல் கொடுக்க சாராவை முறைக்க முடியாமல் கணவரை முறைத்து மகன் அறைக்கதவை தட்டி இருந்தார்.
சென்னையிலிருந்து கிளம்பி நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்தவனுக்கு அநேகம் இது நடுநிசியாக தான் இருக்கும். கதவை திறந்தவன், "என்னம்மா வேணும்? நிம்மதியா தூங்க விட மாட்டிங்களா?" என்று சலிப்போடு கண்களை கசக்கினான் பாதியில் தூக்கம் பறிபோன அவஸ்தையில்.
"டேய் உன்னை தேடி ஒரு பொண்ணு வந்து நடு வீட்டில நின்னு அராஜகம் பண்ணிட்டு இருக்காடா" என்று அவர் முடிப்பதற்குள் தாயை விலக்கி ஹாலை நோக்கி வந்திருந்தான்.
'இவள் எதற்கு வந்தாள்?' என்று அவன் யோசிக்கும் முன் ஆடவனை நெருங்கியிருந்தவள் கை அவனது இரு கன்னங்களையுமே பதம் பார்த்திருந்தது நொடியில். அவன் மட்டுமல்ல அங்கிருந்த இருவருமே அவளின் நடவடிக்கையில் அதிர்ந்து நின்று விட அகிலா வாயில் கை வைத்து விட்டார் அதிர்ச்சியில்.
தொடரும்.